பறந்து போ – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
பறந்து போ படத்தைப் பார்த்த போது, கவலையாக இருந்தது. இது குழந்தைகளுக்கான படம் என முன்வைக்கும்போது சற்றே அச்சமாகவும் இருந்தது. படத்தின் அதீதமான காட்சிகள் பலவும் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இவை தவறானவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், சரிதான் எனக் குழந்தைகளே நினைக்கும் அளவுக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் நாயகனாக வரும் சிறுவன் அன்பு (மிதுல் ரயான்), அப்பாவிடம் கோபித்துக்கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது சென்று விடுகிறான். அப்பா மிர்ச்சி சிவா, அவனைப் பல இடங்களில் தேடுகிறார். இதற்காகவே ஒரு பாடல் வைத்திருக்கிறார், இயக்குநர் ராம். வேர் இஸ் அன்பு? அன்பைக் காணவில்லை. காணோம் காணோம் கா கா காணோம். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? கிட்னாப்பர் கிட்ட மாட்டிக்கிட்டானா? டைம் மிஷின் ஏறித் தொலைஞ்சு போனானா? ஹைட் அண்ட் சீக்கே ஆட்றானா? என மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். காத்தோடு காத்தா கரைஞ்சு போனானா? என ஒரு குழந்தையைச் சொல்வது, மிகவும் அதிகப்படி. மதன் கார்க்கி இப்படி எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை.
சிறுவன் தொலைவதும் அப்பா தேடுவதும் கண்டுபிடிப்பதும் ஏதோ நகைச்சுவை போல் வருகிறது. இதைப் பார்க்கும் சிறுவர்களுள் யாரேனும் இப்படி வேண்டுமென்றே தொலைந்தால் என்னாவது? இப்படிப் பெற்றோரிடம் சொல்லாமல், எங்காவது செல்வதும் பெற்றோரைத் தேட வைப்பதும் சரி எனப் பிள்ளைகள் நினைத்தால், எத்தகைய ஆபத்துகள், சிக்கல்கள் எழும் என இயக்குநர் யோசிக்கவே இல்லையா?
அடுத்து, கிரஷ். பள்ளித் தோழியை அப்பா பார்த்தால், இவர் தான் உன் கிரஷ்ஷா? எனச் சிறுவன் அன்பு கேட்கிறான். தன் பள்ளித் தோழியைப் பார்க்கப் போகும்போது, நான் என் கிரஷ் வீட்டுக்குப் போகிறேன் என்கிறான். ஸ்லீப் ஓவர் எனச் சிறுவனும் சிறுமியும் சேர்ந்து படுத்துத் தூங்குகிறார்கள். பிறகு, அப்பா வேண்டும் என்கிறான் எனச் சொல்லி, சிறுவனைச் சிறுமியின் அம்மா தூக்கிக்கொண்டு வந்து, சிவா அறையில் படுக்க வைக்கிறார்.
சிறுவர்கள் இயல்பாக நண்பர்களாக இருக்கலாம். இதில் கிரஷ் என்ற வார்த்தை எதற்கு? பூ கொடுப்பதும் ஓரக் கண்ணால் பார்த்துச் சிரிப்பதும் ஒன்றாகப் படுப்பதும் அவர்களுக்குத் தேவையற்ற கற்பனைகளைக் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. பத்து வயதுச் சிறுவர்களுக்கு இவையெல்லாம் தேவையா? பல திரைப்படங்களும் திரைப்பாடல்களும் பள்ளிப் பருவக் காதலைக் காட்டுவதால் அது இயல்பு என்ற எண்ணம் எழக் கூடாது. பல நிலைகளில் சமூக அடுக்குகள் கொண்ட தமிழ்ச் சமூகம், இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டது. இந்தப் பின்னணியில் உன் கிரஷ், என் கிரஷ் எனச் சிறுவர்கள் பேசுவது நல்லதில்லை. நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தும் வாய்ப்பும் இந்தப் புதிய பண்பாட்டுக்கு உண்டு.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சிறுவனை வீட்டில் பூட்டிவிட்டுச் செல்கிறார்கள். சிறுவன் அன்பு, பீட்சா, பர்கர் எனக் கேட்டும் ஆர்டர் செய்தும் சாப்பிடுகிறான். வேவ்போர்டு விளையாடுகிறான். வீட்டில் நெட்பிளிக்ஸ் பார்க்கிறான். வீடியோ கேம் விளையாடுகிறான். கொரிய இசைக்குழுவான பிடிஎஸ் இசைக்கும் பாடல்களைப் பார்க்கிறான். இந்தப் பெருநகர வழக்கங்களைக் காட்டுவதால், சிறுநகரத்திலும் கிராமத்திலும் இருந்து இதைப் பார்க்கும் சிறுவர்கள், தாங்களும் இவ்வாறு பீட்சா, பர்கர் சாப்பிட வேண்டும் எனக் கேட்கக்கூடும். பெருநகரத்திலேயே எல்லோர் வீடுகளிலும் இப்படி எந்த நேரமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு, புதிய இயல்பாகச் சிறுவர்கள் அடம் பிடித்துக் கேட்கலாம்.
படம் முழுவதும் ஒரு பொறுப்பின்மை விரவி இருக்கிறது. சிறுவன் அன்பு எண்ணெய் டின்னை உடைத்து, தரை முழுவதும் எண்ணெய் பரவியுள்ள நிலையிலும் அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்பது போல் கேம் விளையாடுகிறான். அப்பாவே கண்டுபிடித்துத் துடைக்கிறார். தான் எண்ணெய் கொட்டியதால் மற்றவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே, அவர்களை எச்சரிக்க வேண்டுமே என்று கூட அன்புக்குத் தோன்றவில்லை. படம் நெடுகிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் சிவா, பெரும்பாலும் தலைக்கவசம் அணியவில்லை. கடன் கொடுத்தவருக்கு உரிய பதில் சொல்லவில்லை. கடன் கொடுத்தவர் துரத்தும்போது சாலையோரப் பாப்கார்ன் கடையில் இடித்துப் பாப்கார்ன் சிதறுகிறது. அவருக்கு இவர்கள் எந்த இழப்பீடும் தரவில்லை.
சிறுவன் அன்பு அடம் பிடிப்பதுடன் திமிராகவும் நடந்துகொள்கிறான். அப்பாவை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறான். உடனே இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். 25 கி.மீ. தள்ளிக் கடை இருந்தாலும் உடனே பர்கர் சாப்பிட வேண்டும் என்கிறான். சாலையில் வேவ்போர்டு விளையாடுகிறான். மலை சூழ்ந்த இடத்துக்கு வீட்டை மாற்று என்கிறான். பெற்றோர் எதற்கும் கோபப்படாமல், ஐயம் ப்ரவ்டு ஆப் யூ என்கிறார்கள். அதிகம் செல்லம் கொடுக்கும் இந்தக் காலத்துப் பெற்றோர்களை இதில் காண முடிகிறது. ஆயினும் பிள்ளைகள் நினைத்ததை எல்லாம் உடனே செய்ய வேண்டும் என நினைக்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்கள் கேட்டதை எல்லாம் உடனே நிறைவேற்ற வேண்டும் என நினைக்கக் கூடாது.
படம், இந்த வகையில் சமநிலையில் இல்லை.
கிறித்துவப் பெண், இந்துவைக் காதலித்துத் திருமணம் செய்வதும் இந்த இந்து அப்பாவும் மகனும் முஸ்லிம் வீட்டுக்குப் போய்த் தங்குவதும் இயல்பாக உள்ளன. இதிலும் கிறித்துவப் பெண், தம் கணவரைத் தம் வீட்டார் சொல்வது போல் சாத்தானே என அழைப்பது இயல்பாக இல்லை.
படத்தில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. நல்ல விஷயத்துக்கு அடம் பிடியுங்கள். நீங்கள் அடம் பிடித்தால், உங்கள் அப்பாவின் புகைப் பழக்கத்தை விடச் செய்யலாம் என வழிகாட்டியது நன்று. சிறுவன் அன்பு துணிச்சலாக நீச்சல் அடிப்பதும் டிராக்டரை நிறுத்தி லிப்ட் கேட்பதும் புதிய நண்பர்களைப் பெறுவதும் புதிய விளையாட்டுகளைக் கற்பதும் சிறப்பாகக் காட்டப்பட்டு உள்ளன.
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையில், 11 பாடல்கள், படத்தில் இடம் பெற்றுள்ளன. பாடலுக்குத் தேர்ந்தெடுத்த சூழ்நிலைகளும் அதற்கு எழுதிய வரிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பின்னணி இசையிலும் சூழலுக்கு ஏற்ற மனநிலைக்குப் படம் பார்ப்பவர்களைக் கொண்டு வருவதிலும் இசையமப்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
மாணவர்களிடம் திரைப்படம் செலுத்தக்கூடிய தாக்கம் மிகப் பெரியது. மாணவர்கள் படம் பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை எடுத்துக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டம், இயக்குநருக்குத் தேவை.
ஊர் சுற்றுங்கள், உலகம் சுற்றுங்கள், புதிய இடங்களுக்குச் செல்லுங்கள், புதியவர்களைச் சந்தியுங்கள் என்பதே இயக்குநர் ராம் சொல்ல வந்த செய்தி. அவரது அனுபவத்திற்கு அவர் இன்னமும் சிறப்பாகப் பாத்திரங்களைப் படைத்திருக்கலாம். படத்தை எடுத்திருக்கலாம்.
பறந்து போ – இன்னும் பறக்க வேண்டும்.
