நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது சரியா?
அண்ணாகண்ணன்
‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ பாடலை அண்மையில் கேட்டேன். 1991ஆம் ஆண்டு வெளியான சிகரம் திரைப்படத்தில், வைரமுத்து எழுதிய பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசையமைத்துப் பாடியுள்ளார். மிக இனிய இசையும் குரலும் நல்ல பல வரிகளும் கொண்ட பாடல். மென்மையாக வருடி, உள்ளத்தை லேசாக்கக் கூடியது.
வாராயோ வெண்ணிலாவே, நிலாவே வா, நிலா நிலா ஓடி வா என நிலவை அழைத்த கவிஞர்களின் வரிசையில் வைரமுத்து இணைந்தார். வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா என்றும் இவரே கேட்டார். வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் நிலவுடன் காதலையும் கலந்து பாடி ஈர்த்துள்ளார். இதில் இடம்பெற்ற ‘நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை!’ என்ற வரியை முதலில் கேட்ட போது, ஏதோ அரிய தத்துவம் போல் மயக்கியது. பிறகு தான் இது அறிவியலுக்குப் புறம்பானது என்பது புலப்பட்டது.
இருவர் படத்தில் ‘பூ கொடியின் புன்னகை’ என்ற பாடலிலும் ‘நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை’ என எழுதியுள்ளார். அடிப்படை இல்லாத இப்படி ஒரு பார்வையை வைரமுத்து எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை.
சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில், குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறத்தை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நம் கண்களுக்கு நீல நிறமாகத் தெரிகிறது. சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிறமாக வானம் தெரிவதற்கு ஒளிச்சிதறலே காரணம். இந்த நிறங்கள் மாறக் கூடியவை. இந்த நிறங்களுக்கு அப்பால் எல்லையற்ற வெளியும் எண்ணற்ற கோள்களும் கற்பனைக்கு எட்டாத சக்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில், நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை என்பது அறியாமையின் வெளிப்பாடு.
ஒன்றுமற்ற ஒரு வெற்றிடத்திலிருந்துதான் இவ்வளவு பெரிய பிரபஞ்சம் தோன்றியிருக்கிறது. எனவே வானம் என்பதே ஏதுமில்லாதது எனக் கூற இயலாது. மேலும், இந்த வெற்றிடத் தத்துவத்திற்கும் நீலத்தைப் பிரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
‘வானம் எனக்கொரு போதிமரம்’ என எழுதிய வைரமுத்து, நீலத்தைத் தான் வானம் என்று கருதி எழுதினாரா? வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனுசனை இன்னும் பார்க்கலையே என எழுதிய வைரமுத்து, வானத்தை இன்னும் சரியாகப் பார்க்கவில்லையா?
