Tag: வித்தக இளங்கவி விவேக்பாரதி
-

கவிஞன் கிரேஸி மோகன்
-விவேக்பாரதிகண்ணனையே எண்ணியவன் காலமெலாம் கண்ணன்வாய்வெண்ணெயென நல்விகடம் வீசியவன் – பண்ணமையும்பாட்டும் கவிதைகளும் பண்ணியவன்! நம்கிரேஸிநாட்டில் பிறந்ததிந்த நாள்!நாளொன்று வீழ நமதில்லம் தேடிவரும்காலன்ன மோகன் கவிதைகள் – மாலனைக்கோட்டோவி யம்செய்யும் கேசவ் படங்கட்குப்பாட்டோவி யம்செய்வான் பார்த்து!பார்த்தால் எளியன் பழகப் புதுக்குழந்தை,சேர்ந்தால் அனுபவங்கள் செல்வங்கள் – வார்த்தையில்பன்வைத்துப் பேசும் படவசன கர்த்தாவைப்பண்வைத்து நெஞ்சே பணி!பணிவான நெஞ்சும் பகவானின் நாமம்அணியான நெற்றி அழகும் – துணிவானஹாசியமும் நட்பின்மேல் ஆதரவும் சேர்த்தால்கிரேஸியென மாறும் கிளர்ந்து!கிளர்ச்சி பெருகும் கிரேஸி வசனம்வளர்ச்சி தருமே வழியில் – தளர்ச்சியேஇல்லாமல் வேடம் எடுத்துநமை ஆட்டிடும்வில்லாளி வீரன் வியப்பு!வியப்பிவன் ஏற்கும் விசித்திர ரூபம்நயமுடை ஓவியன் நாட்டில் – பயன்செய்நடிகன் கவிஞன் நவயெழுத் தாளன்அடியன் திருமால் அடி!அடித்தாலும் நம்மோகன் ஹாசியத்தால் நம்மைக்கடித்தாலும் எல்லாம் கவினே – வெடிக்காதபட்டாசு விற்றுப் பழக்கமில் லாதவன்தட்டாத கையில்லை சான்று!சான்றோர் புகழும் சமர்த்தன் வயதிலெனைப்போன்றோர் விரும்பும் புதுமையன் – ஆன்றபடிப்புக்குச் சொந்தம் பலர்போற்றும் நல்லநடிப்புக்குச் சொந்தம் நரன்!நரனென்னைக் காத்திடுக நாரணா என்றேசுரம்நூறு சொல்வான் தினமும் – கரமென்னஎந்திரமா மந்திரமா ஏடு நிறைக்கின்றதந்திரம்யார் தந்த தமிழ்தமிழில் நம்மோகன் தந்த தனைத்தும்அமிழ்தம் இழைத்த அணிகள் – தமிழைச்சுவைஞர்கள் கோடி சுவைக்கக் கொடுத்தகவிஞன் கிரேஸிமோ கன்!!16.10.2019 -

அருணகிரியும் ஆனைமுகனும்
-விவேக்பாரதி
காலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்கள் எனக்குள் ஒரு சிந்தனையைக் கிளப்பியது. செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் வண்ணத் தமிழ் படைத்தவர் அருணகிரிநாதர். அவர் அருளியிருக்கும் திருப்புகழ் முருக வழிபாட்டைக் கடைபிடிப்பாருக்கு உயரிய செல்வம். தமிழ்க் கவிதை உலகுக்குப் பெரும் பேறு. திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மேலிருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக் குதித்தவரை முருகன் தடுத்தாட் கொண்டு மந்திர உபதேசம் வழங்கி, தவத்தில் இருக்கச் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்ற முருகனின் மந்திர உபதேசம் கேட்டுச் சும்மா தியானத்தின் அமர்ந்த அருணகிரிக்கு வஜ்ஜிர தேகமும், ஞான விளக்கமும் கிடைத்தது. பின்னர் முருகப் பெருமானே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழ் என்னும் புதுவித வண்ணப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடுவாராயினார். இது அருணகிரி வரலாறு. அருணகிரிநாதரின் அதீத பக்தி, அபாரமான கவித்துவம். அதனை அவரது பாடல்களில் அநாயசமாக கவனிக்க முடியும். முருகனின் அறுபடை வீடுகளில் தொடங்கி அருணகிரிநாதர் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று முருகனைப் பாடிப் பரந்தார்.
முருகன் அடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத் தரு’ என்கிற பாடலே திருப்புகழில் முதல் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னம் விநாயகரை அவர் பாடிய சில பாடல்களை முன்வரிசையில் வைத்துப் பதிப்புகள் வெளியாகின்றன. எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகனைப் பாடுதல் நம் தமிழ்க் காவிய மரபு. அதன் அடிப்படையில் உரையாசிரியர்கள் திருப்புகழை அவ்வாறு தொகுத்திருக்கலாம். அருணகிரிநாதர் பாடிய ஏணைய செய்யுட்களான கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியனவும் முதல் பாடலில் விநாயகரைப் போற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.
அருணகிரிநாதர் உறவு சொல்லிப் பாடுவதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக முருகனை நாராயணனாகிய திருமாலின் மருகனே என்று அழைப்பதிலும், சிவசக்தி மைந்தன் என்று புகழ்வதிலும், விநாயானின் தம்பி என்று பெருமை கூறுவதிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். இது அவரது எல்லாப் பாடல்களிலும் வெளிப்படை. குறிப்பாக விநாயகப் பெருமானை அருணகிரிநாதர் எந்த இடத்தில் வைத்து வழிபட்டிருக்கிறார் என்பது கந்தர் அலங்காரத்தில் அவர் சொல்லும் பாடலில் விளங்கும்.அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.தம்முடைய டைரிக் குறிப்பு போல அருணகிரிநாதர் எழுதியிருக்கும் இந்தப் பாடலில், விநாயகன் தம்பி முருகனைத் தாம் கண்டதாகப் பாடுகிறார். அதாவது வருவார்களுக்கு முக்தியைத் தர வல்ல அருணை என்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்துக்குப் பக்கத்தில், அந்த வாயிலுக்கு அருகில் தெற்குப் பக்கமாக அமர்ந்திருக்கிறான் விநாயகப் பெருமான். அவனைத் தரிசிக்க வருபவர்கள் தலையில் குட்டு இட்டு, உக்கி போட்டு வழிபட்டு, மேலும் படையலாக வழங்கும் சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்கும் விநாயகன் என்னும் யானைக்கு இளைய யானையான முருகன். அவனைக் கண்டேன் என்று அருணகிரி வாக்குமூலம் தருகிறார்.
வயலூர் திருக்கோவிலைப் பாட வந்த அருணகிரிநாதர் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைப் பாடும் அழகைப் பாருங்கள்…
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப …… னிருதோளும்செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனவெ னக்கருள்கை …… மறவேனேஇக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழிவெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய …… பெருமாளே.இது நாம் அனைவரும் அறிந்த பாடலே. அருணகிரிநாதர் இதிலே வழங்கும் பட்டியல், விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாம் ஒருதரம் நினைக்க வேண்டியது. கரும்பு, அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டின் எச்சில் எனப்படும் தேன், அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளறிப்பழம், இடித்த மாவு வகைகள், கிழங்கு வகைகள், சிறந்த உணவுகள், கடலை ஆகிய பட்சணங்களைப் பிரசாதமாக தருவதாக அருணகிரி பாடுகிறார்.
மற்றோரிடத்தில், தம்பி முருகப் பெருமானின் காதல் நாடகத்துக்கு அண்ணன் விநாயகன் துணை புரிந்த கதையையும் கைத்தல நிறைகனி பாடலில் விளக்குகிறார். முருகனைப் பாடுதலையே தம்முடைய மறுபிறப்பின் பயனாகக் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாதர் விநாயகனைப் பாடியிருக்கும் பாங்கு நம்முடன் மிக நெருக்கமானவரை வாஞ்சையுடன் வாழ்த்துவது போல தொணிப்பது ஆனந்தம். நாமும் ஒருகணம் அருணகிரிநாதர் பாடிய விநாயகனைக் காதாரக் கேட்டால் சுகம். கலைவாணி தந்த வரமாக அதற்குத்தான் டி.எம்.எஸ், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பாடிய பாடல்கள் யூடியூபில் கிடைக்கின்றனவே!
பக்கரைவி சித்ரமணி பாடல் – https://www.youtube.com/watch?v=U9CM142K1YA
கைத்தல நிறைகனி பாடல் – https://www.youtube.com/watch?v=2laPCCsVY_Y
-

அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019
-விவேக்பாரதி
நமக்கு அவள் அணைப்பு போதும்! அவளுக்கு என்ன வெண்டும்? நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே! அட! யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயராத அளவு நெஞ்சத்தில் நிற்கிறது…
என்னையே தனக்காகக் கேட்பவள் – அவள்
என்னுளே தானாகிப் பூப்பவள்
மின்னலே சிரிப்பாகக் கொண்டவள் – எனை
மீட்டவே விரல்கொண்டு வந்தவள்!
முன்னமே நிற்கின்ற மாயையள் – ஒரு
முறுவலில் சாய்க்கின்ற பூவிதழ்
அன்னையாய் அன்பளாய் வருபவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!சிம்மத்தின் மேல்வீற்றிருப்பவள் – பிள்ளைச்
சிணுங்கலை அறிகின்ற காதினள்
சும்மா இருக்காமல் ஓரமாய் – நின்று
சுருக்கென்று கிள்ளிச் சிரிப்பவள்!
நம்மையே அவள்தான் படைத்தவள் – எனில்
நம்முள்ளும் அவள்தான் இருப்பவள்!
அம்மாடி எத்தனைப் புதிரவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!கிண்ணத்தில் தேன்கொண்டு வருபவள் – பழம்
கிள்ளிநம் வாயிலே தருபவள்
கன்னத்தில் முத்தம் இழைப்பவள் – அடர்
காட்டினில் தனியாய் வசிப்பவள்!
அன்னத்தில் அமுதாய் இருப்பவள் – மக்கள்
அகத்தினில் அன்பாகி வளர்பவள்
அன்னவள் எப்போதும் எளியவள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!பூச்சூட்டிப் பார்க்கச் சிரிப்பவள் – பகை
பொய்சூடும் நெஞ்சை எரிப்பவள்
காய்ச்சலைத் தந்தே ரசிப்பவள் – அதைக்
கவிதையாய் மாற்றிக் கொடுப்பவள்
பாய்ச்சலில் வரியற்ற புலியவள் – கொஞ்சம்
பச்சிளம் பிள்ளைபோல் வாழ்பவள்!
ஆய்ச்சியர் பால்போல் குணத்தினள் – அவள்
ஆதிதுர்க்கை எனும் பெயரினள்பெயர்சொல்லிக் கூப்பிட வருபவள் – குணம்
பெயராத வண்ணமே தருபவள்
மயல்வந்து சாய்க்கின்ற வேளையில் – சூலம்
மழுவேந்திக் காத்திடும் தைரியள்
புயல்வந்து நின்றதாய்த் தெரிபவள் – சிறு
பூவுக்குள் தேன்போல் இனிப்பவள்
அயலென்ப தில்லாத அசலிவள் – எங்கள்
அம்மை துர்க்கை எனும் பெயரினள்!!03.10.2019
-

அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019
-விவேக்பாரதி
என்ன வேண்டும்? நமக்கு என்னதான் வேண்டும்? தினந்தோறும் பூசைகள் திசை எட்டும் பாட்டுகள். யாவும் எதற்காக? மனதே கேள்வி கேட்டு மனதே பதில் சொல்கிறதாம்… எல்லாம் அவள் அணைப்புக்குத்தானே! அதைத்தான் ஊர் நம்புமா?அணைப்பொன்று போதும் அம்மா! – உன்அணைப்பொன்று போதும் அம்மா!என்நினைப்பெல்லாம் தூளாக நெஞ்செங்கும் நீயாககணப்போதும் மறவாத காருண்யம் நான்காண!புதுப்பாதை நான்போட்டு நடக்கின்ற போதில்புயலாக அதைவந்து கலைப்பவளே!விதிப்பாதை எனக்காக நீபோட்டு வைத்துவிளையாடிப் பாரென்று அழைப்பவளே!எதைக்கேட்டு எதைப்பார்த்து என்னோடு சேர்ந்தாய்எனக்கொன்றும் தெரியாதடி! அடஇதுக்கென்ன தயக்கம்?என் இதயத்தின் ஓரம்இதமாக பதில் சொல்லடி!சிவத்தோடு நீயாடும் நடுஜாம நேரம்விசுக்கென்று பாட்டோடு எழுப்பிடுவாய்!கவலைகள் எனைச்சூழ்ந்து களியாட்டும் போடும்கண்ணென்னும் தீயாலே அழித்திடுவாய்!அடுத்தென்ன எனக்கென்று தெரியாத நேரம்அடியாகி நிற்பவளே! உயிர்கொடுத்தேனும் உன்பாதம் தொடவேங்கும் நெஞ்சைக்குறிபார்த்துச் சிரிப்பவளே!காதோடு மணியோசை புதுச்சந்தம் போடகவிபாட எனைக்கூட்டிக் கேட்பவளேபாதாதி கேசத்தை நான்பாடும் போதில்பக்கத்தில் நின்றென்னை ரசிப்பவளேநீதந்த பாட்டுக்கள் நீதந்த ராகம்நிஜம் என்று ஊர் நம்புமா? – அடிநீயே உன் பாட்டுக்கு ரசிகைபோல் ஆடும்நிலைதந்த சந்தேகமா?-02.10.2019 -

குட்டி ரெட்ட ஜடை – நவராத்திரி பாடல்கள்
-விவேக்பாரதி
அவளுக்குத்தான் எத்தனை உருவம். எத்தனை வடிவம். எதுதான் அவள் வயது? முதுக்கிழவியாய்த் தெரியும் அவளே மறுகணத்தில் முறுவலிக்கும் குழந்தையாகிறாள்! ஆ! அந்தக் குழந்தைதான் எத்தனை அழகு…
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!குட்டி ரெட்டஜட கட்டிக்கிட்டு ! ஒரு
கோலச் சிங்காரியும் வந்தாளாம் – ஒரு
பொட்டுன்னு நெத்தியில் வட்டத்த வெச்சவ
போட்டி நிலாவுக்கு என்றாளாம்சின்னப் பதத்துல வண்ணச் சலங்க
சினுங்க சினுங்க நடந்தாளாம் – ஒரு
மின்னலப் பிடிச்சு பாலில் கொழச்சு
மேனியில் பூசித் திரிஞ்சாளாம்!ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்தத்தித் தத்தி வெளையாடுறப்ப முத்து
தரையில் விழுந்ததாம் நட்சத்திரம் – மொகம்
பொத்திப் பொத்திவெச்சு போக்குகாட்டி அவ
பொக்குன்னு சிரிக்கும் விசித்திரம்!கலுக்கு கலுக்குன்னு சிரிச்சுத் தொலைக்குற
காளி தேவியிங்க வந்தாளாம் – அண்டம்
குலுக்கிப் பிடிக்கிற கோவக்காரி! ஒரு
குட்டிப் பெண்ணுருவில் வந்தாளாம்!ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்அள்ளி அணைச்சிட கையொசத்தி! நம்ம
ஆட்டிப் படைக்குற ராசாத்தி – அந்தக்
கள்ளி ஒறவுல சிக்கிக்கிட்டா! இனி
காலத்துக்கும் அவ அரசாட்சிதத்துபித் துன்னவ பேசிடுவா! அதில்
தத்துவம் இருக்கும் கேட்டுக்கணும் – கொஞ்சம்
கத்தி அழுது முரண்பிடிப்பா! அதில்
காரணம் இருக்கும் தாங்கிக்கணும்!ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செஞ்சு
ஏட்டிக்குப் போட்டி படுத்திடுவா – அதில்
ஒன்னொன்னும் ஒருரகம் ஒன்னுக்கும் ஒருகத
ஓயாம பேசிச் சலிச்சிடுவா!அட்டக் கருப்பியாம் பார்வைக்குத்தான்! அதில்
அத்தனை அத்தனை வண்ணமடி – வந்து
ஒட்டிக்கிட்டதொரு நாழிகைதான் இன்னும்
ஓடுது ஓடுது எண்ணமடி!!ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!!-விவேக்பாரதி
01.10.2019அருமையான படங்களைக் கொடுத்த இன்ஸ்டாகிராம் ரமேஸ் ஹரிகிருஷ்ணசாமி க்கும் பாடிக்கொடுத்த நித்யா அக்காவுக்கும் நன்றி…
-

பராசக்தி சக்தி – நவராத்திரி பாடல்கள்
-விவேக்பாரதிஇரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சரிக்கிறது! சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சின் ஏழ்மை நீங்கவா போகிறது???பராசக்தி சக்திசக்தி பராசக்தி என்றுசொல்லிப்பார்த்திருக்கும் ஏழை நெஞ்சமே! – உள்ளில்வராசக்தி வந்துநின்று தராசக்தி பொழிவதைமறப்பதென்ன ஏழை நெஞ்சமே! – இருள்பராவிடும் அகத்தில்நல்ல பகலவன் உதிப்பகண்டுபடபடக்கும் ஏழை நெஞ்சமே! – கள்விராவுகின்ற கவிதைசொல்லி வீரையெங்கள் இரவைமெல்லவிழுங்குகிறாள் ஏழை நெஞ்சமே!கற்கள்தம்மை மலர்களாக்கிக் காலடியில் தூவினாலும்கண்பனிக்கப் பார்த்திருப்பவள் – வெறும்சொற்களில் பிதற்றுமெங்கள் சோர்வெலாம் அகற்றியுள்ளில்சூரியன் சிரிக்கச் செய்பவள்! – சின்னப்புற்களுக்கும் ஆண்மைதந்து புட்களுக்கும் வானம்தந்துபுதிர்கள்கோடி செய்து வைப்பவள் – நெஞ்சக்கற்பகத்து நிழலில்நம்மைக் காலம்தோறும் வாழவைக்கும்காளியென்று கூவு நெஞ்சமே!அரக்கியென்றும் தோற்றம்கொண்டு அகல்சிமிட்டல் குணமும் கொண்டுஅந்தரத்தில் வாழும் தெய்வதம் – நாம்ஆற்றுகின்ற காரியங்கள் அத்தனைக்கும் சாட்சியாகிஆட்சிசெய்யும் சக்தி மந்திரம்! – நல்லநெருப்பவிழ்ந்து கூந்தலாகி நேரிழையில் ஓடுகின்றநேர்த்தியந்த காளி ரூபமாம் – அதைநெக்குருகக் கண்டுகண்டு சொக்கிசொக்கி யேவியந்துநெஞ்சிலேந்த நாளும் இன்பமாம்!கனகனகன கனகனவென திருநகையினில் ஒலிவரவவள்காற்றிலே சிரிக்கும் காளியாம் – மனம்காமமென்னும் ஏமந்தன்னில் கண்மயங்கி நிற்கும்போதுகாட்சிதந்து மீட்கும் நீலியாம் – தினம்நினைவலைகளில் கனவிருள்களில் புதுப்புதுசுரம் படிப்பவருடன்நிழலினுருவில் ஆடும் ஜோதியாம் – உயிர்நீவிவிட்டு மடியமர்த்தித் தழுவிடாமல் நாடகங்கள்நீட்டுகின்ற மாயக் காரியாம்!மாயம்காட்டும் காளியுருவை மனதுமொத்தம் வைத்தால்சாயம்நீங்கும் மறுகணத்தில் சந்நிதிமுன் தோன்றும்நேயமேறும் நெஞ்சினுக்குள் நினைவழிந்து போகும் – நாம்காயம்மட்டும் இல்லையென்னும் கதைவிளங்கும் கண்டீர்சித்தசுத்தி நேருமதில் நித்தபக்தி ஊறும்கத்திக்கத்தி யேதிரிந்த காட்டுநெஞ்சம் ஓயும்சத்தியங்கள் தோன்றுமங்கு தத்துவங்கள் தோன்றும் -பராசக்திசக்தி சக்திசக்தி சக்தியென்றால் போதும்…-30.09.2019 -

பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்
-விவேக்பாரதி
ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்…பழகிப் போன குரலில் உள்ளேபாடல் கேட்கிறது! – ஆபாரதி பாடுகிறாள் – மனம்மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்கமெல்லிசை மீட்டுகிறாள்! – அடடாமேனியை மீட்டுகிறாள்!வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகைவீணை கையளென – அவள்விரலில் தந்துபிகள்! – ஒருபள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்பரவிடும் பாடல்களில் – உள்ளேபலவித சங்கதிகள்நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்நேர்வது தெரிகிறது – அவளின்நேர்முகம் தெரிகிறது! – உயிர்தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்தர்மம் தெரிகிறது – அறுபடும்கர்மம் புரிகிறதுகல்விக் கதிபதி காக்கும் குணநிதிகவிதைப் பிரியையவள் – வாசக்கருமைக் குழலியவள்! – எழும்சொல்வித்துக்குள் ககனம் நிரப்பிசொலிக்கும் மாயையவள்! – நேரில்தோன்றும் சாயையவள்!ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்ஓயா விளையாட்டு! – சற்றுஓய்ந்தால் தலையாட்டு – என்றேதருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத்தாயின் ஒருபாட்டு – காற்றில்தரைவரும் தாலாட்டு!!-29.09.2019 -

ஆத்தாடி ஆத்தா – நவராத்திரி பாடல்கள்
–விவேக்பாரதி
நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019 ஆம் ஆண்டின் முதல் பாடல்…
ஆத்தாடி நம்மவூரு ஆத்தா! என்ன
ஆளில்லா நேரத்துல பார்த்தா! ஒரு
அன்பால பாடச்சொல்லி கேட்டா! அதுல
அடிக்கு அடி மடியில் தாளம் போட்டா!ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!
காத்தாடி வுட்டுக்கிட்டா காலமெல்லாம் சிரிச்சிக்கிட்டா
கண்ணசரும் நேரத்துல நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா
பார்த்துத் தேணருறெண்டா பக்கம் பக்கமா பதறுறெண்டா!
பாட்டுக்குள்ள ஒளிஞ்சு சிரிக்கும் பராசத்திய தேடுறெண்டா!முழுசா அவனெனப்பு முதுகுதண்டுல குறுகுறுப்பு
மொத்தமா ராத்திரியில பத்துதரம் கண்விழிப்பு
அழகா நின்னவடா! அசடுபோல சிரிச்சவடா!
அடிக்கடி சிரிப்புச் சத்தம்! மொகத்த மட்டும் காணலடா!ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!
தோளுல ஊஞ்சகட்டி தூளியாட்டி சிரிச்சவடா
தொட்டுத்தொட்டு அகல்வெளக்க பத்திரமா பார்த்தவடா!
காளி மாரியின்னு பாட்டுப்பாட குதிச்சவடா
கண்ணுல சிக்காதத்தான் தேடவுட்டு ஒளிஞ்சவடா!உள்பக்கம் திரும்பிக்கிட ஒருபயலும் நெனப்பதில்ல
ஒடனே நெனச்சாலும் திரும்பிப் பார்க்க தெரியவில்ல
துள்ளுற காட்டெலிய தூக்கியொரு வளையில்வெச்சா
தூணுக்குப் பின்னால அவ உடுக்குசத்தம் ஒலிக்குமடா!ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!!
28.09.2019
-

தேவ நடனம்
விவேக்பாரதி
காலபைரவர் மீது எழுதப்பட்டிருக்கும் “யம் யம் யம் யக்ஷரூபம்” என்கிற அஷ்டகத்தைக் கீரவாணி இசையில் கேட்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் கோவை ஈஷா மையம் சென்று திரும்புகையில் நான் எழுதிய தேவ நடனம்…
விண்ணெங்கும் ஆன ரூபம் விரிகிற சடையும்
வீரியங் கொண்ட நிலையும்
பண்ணெங்கும் கானம் பாடும் பரவச மடையும்
பார்வையில் காலம் அழியும்
மண்ணெங்கும் ஜீவன் வாழும் மனதினில் நிகழும்
மாதவள் பாக மிணையும்
கண்ணெங்கும் ஜோதி தோன்றும் கலியுக மழியும்
காளனின் தேவ நடனம்! (1)தம்தம்தம் தாள மாயம் தரையினில் நடனம்
தண்டையின் ஓசை பெருகும்
சிம்மங்கள் காளை யோடு சிவசிவ வெனவே
சிந்தனை பொங்க மருகும்
துன்பங்கள் தீயி னாலே பனியென உருகும்
துக்கமே யின்றி அமையும்
இன்பத்தில் போது தீரும் இனிதென நிகழும்
ஈசனின் தேவ நடனம்! (2)பூதங்கள் கூடி ஆடும் புதிதென வுலகம்
புத்தி தடுமாறி காணும்
வேதங்கள் தேவை யாகும் சுருதிக ளருளும்
வேகமாய் வானும் மாறும்
நாதங்கள் யாவு மாடும் நடுநிசி இரவில்
நர்த்தனம் காண லாகும்
காதல்கொள் தேவி யோடு கவிமகன் வரையும்
காட்சியே தேவ நடனம்! (3)பூநெஞ்சம் தீப மாகும் புரிகிற தருணம்
பூரணம் வந்து நிறையும்
தீநஞ்சம் யாவும் மாளும் திசைகளு மதிரும்
திவ்ய லீலைகள் நிகழும்
கானென்றும் தேக மாகும் கடைவரு மிருளில்
காணலாம் யாவும் புரியும்
மானொன்றும் மீதி தோன்றும் மலைமக ளுடனும்
மன்னனின் தேவ நடனம்! (4)காலங்கள் சாட்சி யாகும் கருணையின் வடிவம்
காருண்யன் செய்யும் நடனம்
ஓலங்கள் தீர லாகும் ஒருவொரு கணமும்
ஓமெனும் ஓசை பரவும்
ஞாலங்கள் கூட ஆடும் நடுநிசி இரவில்
நாயகன் ஆடும் நடனம்
மூலங்கொள் மூச்சு தோறும் நிகழ்கிற நடனம்
முக்கணன் தேவ நடனம்!! (5)-15.04.2019
-
நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்
-விவேக்பாரதி
ராஜா வேசம் – சரசுராம்

சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.
மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.
பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.
ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.
பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.
புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-
வானுக்கு மேல்
-விவேக்பாரதி
வானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். “பாரதி யார்?” நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை…
வானுக்கு மேல்வந்து பாருங்களேன்! இங்கு
வண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை
நானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை
நாடில்லை கோடில்லை நாடகம் இல்லை!காலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்
காற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்
மேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்
மென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்!அமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்
ஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்
சுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்
சுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்!யாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்
யவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்
பாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்
பார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்வானத்தை நமக்காக தேவன் படைத்தான்
வானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்
ஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்
நம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்!மேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்
மெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்
காலுண்டு காலில்லை நாமே பறப்போம்
ககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்!இந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்!!
-11.04.2019
-
நூல்நோக்கம்
-விவேக்பாரதி
சித்தார்த்தனாகும் புத்தன்கள் – கவிஞர் சிபு

போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி பக்கத்திற்குப் பக்கம் வலுக்கிறது. இடையிலோ, தொடக்கத்திலேயோ, நிறைவிலோ நம்மை ஒருகணம் புத்தக வரிகளை மறந்து அகவரிக்குள் பயணப்பட வைக்கும் கவிதைகள். நான்கே நான்கு கதாப்பாத்திரங்களைக் குழந்தை விளையாடும் பொம்மை ராஜாங்கத்தைப் போல மாற்றிமாற்றி நண்பனாய், சேவகனாய், அரசனாய், அடிமையாய், கேள்வியாய், விடையாய் போட்டு உருட்டி எடுத்து நம்மையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே போகிறது இந்தப் புத்தகத்தின் மூலம் தான் பிறந்தாகச் சொல்லிக் கொள்ளும் “சிபு” என்கிற குழந்தை.
ஆரம்பத்திலேயே நம் அகத்தை வென்று விடுகிறார் சிபு,
“இந்தப் புத்தகத்தில் புத்தர் உட்பட மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” மற்றும் “கற்பனைகளைத் தவிற மற்ற எதுவும் கற்பனைகள் அல்ல”
இந்த வரிகளே நம்மை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தூண்டுகிறது.
எடுத்த எடுப்பில் எடுப்பான அணிந்துரை வழங்கியிருக்கிறார் கார்த்திக் இமயவரம்பன் அவர்கள். கவிஞர் சிபுவிடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும் அவர் சிபுவைக் குறித்து அளவிட்டுச் சொல்லியிருப்பவை யாவும் புத்தகத்தில் மறைமுகமாக அவர் முகம் பார்க்கத் தோதாக அமைகின்றன. வைரவரி வானரசன் அவர்களது நயவுரை நயம் மிகுந்த உரை. தன்னுடைய உரையாகக் கவிஞர் தான் சொல்லியிருப்பதையும் சொல்லவிருப்பதையும் காட்டுகிறார். இவையெல்லாம் எல்லாப் புத்தகத்திலும் இயல்புதான் என்றாலும் எல்லாப் புத்தகத்தை விட இதனை மாறுதலாகச் செய்ய வேண்டுமென்ற எத்தணம் வெற்றியைத்தான் சேர்த்திருக்கிறது. எதார்த்தமே இந்தக் கவிஞரின் உயிர்நாதமாக விளங்குகிறது என்பது மிகவும் பாராட்டவும் வரவேற்கவும் தக்கது. பொதுவாகவே “கவிதை விற்பனைப் பொருளன்று” இது அனைவரும் அறிந்த வாசகம். மேலும் கவிஞர்கள் விற்பனை உத்திகளில் விலைபோவதில்லை. ஆனாலும் விற்பனை உத்திகளைக் கவிஞர்கள், சிபு போல வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் எங்கும் நிறுவத் தயாராக உள்ளேன். அகம் சார்ந்த ஒரு பயணத்தை இந்தச் சமுதயத்திற்குத் தர நினைக்கும் சிபு, அதனை இந்தக் கால நவீன இலக்கிய வடிவத்திலும், அதிகப் படியான கவிதை உள்ளீட்டு ஜாலங்கள் இல்லாத நிலையிலும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது.
கவிதைக்குள், கதைக்குள், சரி கவிதைக் கதைக்குள் நுழைந்தால் முதலில் நாம் சந்திப்பது ஒரு செய்தியாளனை,
“செய்தியாளன்
ஆவதற்கு முதற்தகுதி
பிணங்களைக் கண்டு
அழக்கூடாது…எரியும் உடலை
எக்காரணம் கொண்டும்
அணைக்கக் கூடாது…”இவை சிபுவின் எதார்த்த அளவீட்டின் உச்சம் என்று கொள்ளலாம். படிப்படியாக செய்தியாளன் ஞானத்தையும் புத்தனையும் சித்தார்த்தனையும் போதி மரத்தையும் சந்திக்கிறான். அவற்றிடம் வழக்கமாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கொள்கிறான். திறனாய்வு அல்லது விமர்சனம் என்று இதனை நகர்த்திக் கொண்டு போவதற்கு முன்னம் ரசித்த பகுதிகளை வாசக ரசிகனாகச் சொல்லிவிடுவது என்று எனக்குத் தோணுகிறது. அதன்படி பார்த்தோமானால் சித்தார்த்தனாகும் புத்தன்கள் மொத்தமும் எதார்த்தத்தின் சிகரம். இந்த எதார்த்தத்தையும் கற்பனைக் கதையையும் வடதுருவ தென்துருவமாகக் கண்டுவந்த நம் சமுதாயத்திற்கு இவை இரண்டும் பக்கத்து வீட்டு அங்காளி பங்காளிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார் கவிஞர். என்னைப் பொறுத்தமட்டில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
“எனக்குத் தெரியும்
அந்தப் பூக்காரிக்குக்
கணவன் இல்லை…
எதற்கவளுக்கு
இத்துணைப் பெரிய பொட்டு?
பூக்கள் விற்கவா?”இந்த வரிகள் நம்மை அந்தப் பூக்காரி அருகில் அமர வைக்காமல் செல்லா. சமுதாயம் சில நிலைகளில் சில வேஷங்களைச் சீருடையாக நம்பி ஏற்கின்றது. விபூதி பட்டை அடித்த முதல் பெஞ்ச் மாணவன், சிடுமூஞ்சி பேருந்து நடத்துநர் என்பது போல..
செய்தியாளன் ஞானம் என்கிற பொருளை, ஆளை, சக்தியை என்னவோ ஒன்றைத் தன் கண்களால் காண்கிறான். தன் பழக்க தோஷத்தில் அதற்கு முன்னமும் பேனாவை நீட்டிக் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்., அவன்,
“நீதான் புத்தனுக்குக் கிடைத்தாயா?” என்று கேட்க,
“நான் கிடைத்ததால்தான்
அவன் புத்தன்,
இல்லையேலவன்
சிறுவன் சித்தார்த்தன்”என்று ஏளனமாக ஞானம் பதில் சொல்கிறது. இவ்விடம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் வியப்பொன்றும் இல்லை. பொதுவாக நாம் பொருட்களின் மீதும் தகுதிகளின் மீதும் பற்று கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றால் கர்வமும் கொள்கிறோம். நம் மனம் அதனால் ஆனந்தமும் திருப்தியும் அடைகிறது, இஃதொரு பக்கம் இருக்க, பொருட்களோ, தகுதிகளோ நம்மை என்ன நினைக்கும்? புத்தனை நான் அடைந்ததால் தான் அவன் புத்தன் ஆனான், இல்லையேல் அவன் சித்தார்த்தனாகவே இருந்திருப்பான் என்று ஞானம் சொல்வதாக இங்குக் காட்டப்பட்டிருக்கும் நிலை, நம் வாழ்வில் எதுவும் நிலையானது இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.
நான் முன்னம் குழம்பினேன், அல்லது குழப்பினேன் என்று வைத்துக்கொள்வோம். எது ஞானம்? சக்தியா? தகுதியா? ஆற்றலா? அடிப்படையா? ஆளா? பொருளா? மாயையா? குணமா? எத்தனை கேள்விகள்! இதற்கு விடையைக் குழப்பி விட்ட சிபுவிடமே கேட்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.
“உன்னைக் கிழித்து
உன்னையே தைக்க,
உன் கையிலுள்ள
கத்திரிக்கோலும், ஊசி நூலும்
தான் ஞானம்”உலகியல் என்பது நம் யாவருக்கும் அனுக்கமான ஒரு புள்ளி தான். அது நம்மால் கற்பனை செய்யப் படவேண்டியது அன்று. கண்ணால் கண்டுகொள்ளத் தக்கது. அப்படிப்பட்ட உலகியல் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கின்றது. தற்போதைய சமுதாயத்தின் இருள் பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கவிஞரின் சொற்களில் அம்பலமாகின்றன.
“போதிமரமெங்கே?
யார் வீட்டுக் கொட்டகையில்
கரையான் அரித்துக் கிடக்கிறது?”“இராஜகுமாரனுக்கு
மட்டும் தான்
உன் ஞானக் கீற்றில்
கூரை போடுவாயா?சொல்
முதலில் நீ
எந்தக் காக்கையின்
மலக்குடலிலிருந்து
சுகப்பிரசவமாய்க்
கபிலவஸ்துவில்
விழுந்து முளைத்தாய்
நினைவிருக்கிறதா?”போன்றவை அந்த உலகியலின் எடுத்துக்காட்டுகள். கவிஞர் தத்துவம், அறிவியல், காதல், விரக்தி என்று எல்லா துறைகளையும் வம்புக்கிழுத்தபடியே இருக்கிறார். இவர் கதையில் போதிமரமே பாவம் மரம் வெட்டிப் பிழைக்கக் கையில் கோடரியோடு அலைகின்றது.
சிபுவின் எள்ளல் முழுக்கமுழுக்க சமுதாய நலத்தின் விழைவாக ஒலிக்கின்றது.
“வேண்டுமென்றால்
அரசு போதி மரங்களுக்கு
மேற்கூரை போடுங்கள்,ஒருவேளை
ஏழைச் சித்தார்த்தன்கள்
தியானிக்க வரலாம்!”இதைவிடச் சிறந்த துள்ளலும் எள்ளலும் கிடைக்குமா? வானம்பாடி காலத்துக் கவிஞர் தான் இங்கு வந்தாரோ என்றெண்ண வைக்கும் அற்புதமான வீச்சு.
“கிட்டுவதை எல்லாம்
புனிதமாகக்
கருதுங்கள், உங்களை
விட்டுச் சென்ற
அத்தனையும்
போதிமரம் தான்..”.“பசியின்மையில்
சிந்திய சோற்றுப் பருக்கை
பசியில் போதிமரம்!குளிருக்கு இதம்,
கருகும் விறகு
போதிமரம்..
விழுந்து
எழுந்திரு,
தாயின் அதட்டல்
போதிமரம்..
பிரம்பை நேசி,
பள்ளியே போதிமரம்.
துரோகம் சுவை,
தந்தவன் போதிமரம்,
நெரிசல்தான் மன்னித்துவிடு
மிதித்தவன் போதிமரம்,இறங்கித் தேடு
உன் இன்னொரு பையை,
பயணம் போதிமரம்..போதிமரங்கள், வெறும்
நிழலை மட்டும் தருவதில்லை,சொட்டும் சூட்டையும்
சுறுக்கென்ற பாடத்தையும்
தரும்..”கவிஞர் வரையறைகள் செய்வதில் வாழ்க்கையைக் கழிக்கிறார் போலும். கண் பார்க்கும் அனைத்தையும் வரையறுக்கிறார்.
“பூமியின் மேல்பக்கம்
தோண்டப்பட்ட
நுணுக்கமான
ஆழம்தாம், நம்வானம்..”ஒருநாள் என் பராசக்தி அந்தாதியில் எழுதினேன்,
“அறிந்தவை யாவும் அரியதென் றேதான் அளத்திடுவார்!
அறிந்தவை ஏதும் அவறறி வில்லை அறிந்தவர்கள்
அறிந்தவை தம்மை அனுபவிப் பாரன்றி ஆள்நிறைந்தே
அறிந்தவை தோறும் அலட்டுகி லாரென தம்பிகையே! (50)”இதனை மிகவும் எளிமையாக்கித் தர இயலும் என்றால் அது கவிஞர் சிபுவால் நிகழ்ந்திருக்கிறது.
“ஆழத்தில் இறங்கியவர்கள்
ஆசிரமத்துக்குத்
திரும்பியதில்லை,
அவர்கள் ஆழமாகவே
ஆகிவிடுகிறார்கள்..”அடுத்தென்ன சித்தார்த்தனைத் தேடுகிறான் செய்தியாளன். அவனைத் தேடும் தருவாயில் இவன் உதிர்த்துக்கொண்டே செல்லும் புலம்பல்களை உங்களுக்குச் சொல்லி வீணாக்க விரும்பவில்லை என்று கடந்தாலும்,
“இப்போது
எந்தக் குப்பைத் தொட்டிக்குள்
தொப்புள்கொடியில்
எறும்பு மொய்க்கத்
தியானம் செய்கிறாய்?”என்ற இந்த வரிகள் என்னை கடக்க முடியாமல் நிறுத்துகின்றன. இளவரசன் சித்தார்த்தனை மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு இந்தக் கேள்விகள் எத்தனை சித்தார்த்தன்கள் உலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயணித்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இதோ அதையும் கவிஞரே சொல்கிறார்,
“இன்று
எத்தனையோ
சித்தார்த்தன்கள்
இருக்கிறார்கள்,
ஒரு புத்தன்கூட
வெளிச்சத்திற்கு
வருவதில்லை.”விட்டால் இப்படி வரிக்குவரி ரசனைக் குவியல்களைக் காட்டி நீங்கள் ரசிக்கவே வைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேகமான இடங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை. மேற்படி சித்தார்த்தனாகும் புத்தன்கள் நூல் இந்தக் காலத்து நவீன கவிதை வடிவத்தில் எழுதப் பட்டிருப்பதும், கவித்துவ உள்ளீடுகள் என்று வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இருப்பதும் நான் முன்னமே சொன்னதைப் போல மிகவும் மெச்சி வியக்கத்தக்கது.

இலக்கண மரபைக் கழற்றிய ஒரு மனநிலையில் பயணிக்கும் உரைவீச்சுக் கவிதைகளுக்கும் இலக்கணம் என்பது கட்டாயமாகிறது. உரைவீச்சுக் கவிதைகளும் எழுதப்படுகிற மொழி தமிழ் என்பதனால் தமிழ் மொழிக்கே உரிய சில அடிப்படை இலக்கணங்களை இன்றைய நவீன கவிஞர்கள் தங்கள் மனத்துக்குள் ஆழப் பதித்தாக வேண்டும். காட்டாற்று வெள்ளமும் கண்களுக்கு அச்சம் கொடுத்தால் பயனில்லை தானே. அந்த வகையில் புத்தகம் முழுக்க கவிச்சுவையைப் போலவே எதார்த்தமாக நிரம்பிக் கிடக்கின்றன ஒற்றுப் பிழைகளும், புணர்ச்சிப் பிழைகளும். தற்போது கவிதை எழுதும் நவீன கவிஞர்களிடம் நான் கண்டு மிகவும் நொந்து போகும் இன்னொரு சகிக்கமுடியாத பிழை, ஒருமைப் பன்மை மயக்கம். “கனவுகள் வந்தது, காட்சி விரிந்தன” என்றெல்லாம் மாற்றிமாற்றி எழுதும் பாங்கு மிகவும் சகஜமாகிப் போய்விட்டது இந்த முகநூல் சூழ் உலகில். எனது இந்த வருத்தத்தை இவ்விடம் சொல்லக் காரணம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் புத்தகமும் தன் பங்கிற்கு ஒருமைப் பன்மையில் பெரிய மயக்கத்தைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.
கதைநோக்கமோ கற்பனை ஆற்றலோ எவ்விதச் சலனமும் இல்லாமல் இனியதொரு பிரவாகமாகத்தான் நடந்து நிறைகிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அதிகப்படியான எதார்த்தம் ரொம்பவே திகட்டச் செய்கின்றது. ஒருநாள்தான் வாழ்வு என்று தெரிந்திருந்தாலும் மலரை நாம் ரசிப்பதை நிறுத்துவதில்லை. கடந்தது மறையும் என்று தெரிந்திருந்தாலும் நாம் மணங்களை வெறுப்பதில்லை. நாளையே நிச்சயம் இல்லை என்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்றாலும் அதற்காக நாளையைத் திட்டமிடாமல் நகர்வதில்லை. உலகியலின் எதார்த்தங்கள் என்பன எப்போதும் எல்லாராலும் உணர்ந்து அறியப்படுவன தாம். அவற்றை உணர்த்தும் முகத்தான் இந்த நூல் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் எனக்கிது அதிகப்படியான பயத்தையும் தயக்கத்தையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். இந்தப் பயம் எனக்குப் புதியதல்ல, பட்டிணத்தாரின் பாடல்களைப் படித்தபோது எப்படியெல்லாம் நடுங்கினேனோ அவற்றைச் சித்தார்த்தனாகும் புத்தன்களும் எனக்குள் செய்கிறது என்பது, பல நூற்றாண்டுகள் தொடாமல் இருந்த பட்டிணத்தாரின் உணர்வுக் கடத்தலை இந்த வருடம் வெளியான ஒரு நூல் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே எதார்த்தங்களின் பட்டியலால் இலேசான பயமும் என்னைப் பீடிக்கிறது.
ஆகமொத்தம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் உலகம் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம். கற்பனை, எதார்த்தம் இரண்டையும் எப்படியெல்லாம் இணைத்து, ஞான மார்க்கத்தில் கொண்டுசெல்ல முடியும் என்று ஏழெட்டு மாதங்கள் ரூம் போட்டு யோசித்திருக்கும் கவிஞர் சிபு வின் முயற்சி வானத்துக் கீழே வாழ்ந்து, வாசிக்கத் தெரிந்த அத்தனை உயிர்களுக்கும் ஒரு வரம்.
_______________________________________
புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-
உள்ளம் என்பதோர் பூனை
-விவேக்பாரதி
உள்ள மென்பதோர் பூனையடா – அது
உரசித் திரிவதே வேலையடா
உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ
உணருவார் அதிகம் இல்லையடா!நாம் வளர்க்கிறோம் என்பதையே – பல
நாள் மறந்திடும் பிறவியடா!
ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை
அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்)சொகுசுக் காகவே வாழுமடா! – அது
சுவையி லாததைச் சாடுமடா!
நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய்
நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்)அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் – நீ
ஆவ தில்லையெனத் தள்ளுவதும்
நந்தம் கைகளில் இல்லை! யாவையும்
நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்)காலி டுக்கிலே சுற்றுவதும் – ஒரு
கதையி லாமலே கத்துவதும்
வாலை ஆட்டியே பற்றுவ தும்நம்
வாழ்க்கை நாடகத் தங்கமடா! (உள்ளம்)காலம் என்கிற வீட்டினிலே – சதி
காரப் பூனையும் குடித்தனமாம்!
ஓலம் இட்டாலும் ஓய்வெ டுத்தாலும்
உள்ளம் இல்லாமல் வெற்றிடமாம்!அடப்போடா!
உள்ளம் என்பதோர் பூனையடா!!-19.02.2019
-
காலை நடை
-விவேக்பாரதி
நடக்க நடக்க நீண்டிடும் சாலை
நடுவில் எத்தனை நிறுத்தங்கள்!
நாடிய சிலவும் வேண்டிய சிலவும்
நகர்ந்து போகும் வழக்கங்கள்!
வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை
வேகக் காற்றும் இடையிடையே
மெலிந்த தென்றல் சோலைக் காட்சி
மெதுவாய்ப் படரும் வழிவழியே!பூவின் வாசம் ஓரிடத் தில்நான்
புயல்வ சத்தில் ஓரிடத்தில்
புன்னகை மட்டும் மாறா மல்நான்
புரியும் நடைதான் யாரிடத்தில்?
தாவும் குரங்காய் மனமும் செல்லத்
தண்ணீர் தேடும் நிமிடங்கள்
தடித்துப் புடைக்க உண்டக ளைப்பில்
தடுமா றுகிற பயணங்கள்!முதுகு வளைய மூட்டை தூக்கி
முறுவ லிப்பதும் நானேதான்
முடியா தெனவென் மனத்துச் சுமையால்
முனகி நிற்பதும் நானேதான்
அதுவாய் வந்தோர் தனிவே தாளம்
அழுத்திக் கட்டிப் பிடிக்கிறது
ஆயிரம் கதைகள் கேட்டுக் கேட்டே
அழுகைக் கவிதை கொடுக்கிறது!!11.02.2019
-
பம்பரச் சாட்டை
-விவேக்பாரதி
ஆடு கின்றதோர் பம்பரம் நாமெலாம்
ஆட்டு விப்பவன் யாரெனக் கூறடா
பாடு பட்டவர் பாட்டினில் வாழ்ந்தவன்,
பாரின் சுற்றினில் பற்றிடா துள்ளவன்,
நாடு மத்தனை ஆசையும் எண்ணமும்
நண்ணி டாத்தொலை வெட்டியி ருப்பவன்,
காடு மேடுகள் சுற்றுமெய்ஞ் ஞானியர்
காணும் சக்தியாங் கைதொழ வேண்டிடும்,கோவில் எங்கிலும் உள்ளுறை தெய்வதம்,
கொள்கை கொண்டுவாழ் போகியர் நெஞ்சினில்
ஆவ லாகவும் வாழ்ந்திடும் உத்தமன்,
ஆண்டி யாயொரு கானிடை தங்குவார்
நாவில் ஞானமாய் நின்றிடும் உள்ளொளி,
நாட்டில் அற்புதம் தோன்றிடப் பாடிடும்
பாவ லர்க்கெலாம் பாதரும் சற்குரு,
பார்க்கும் வையமி யக்கிடும் ஆற்றலான்,கிள்ளை நாரைகி ளர்ந்திடுங் கான்குயில்
கீழ்வி ழும்மழைக் காடிடும் மஞ்ஞைகள்
புள்ளி னந்தரும் ஓசையில் பச்சையாய்ப்
புன்செய் தந்திடும் நாற்றினில் ஆற்றினில்
கள்ள ருந்திடும் வண்டினப் போதையில்
காற்றில் சேர்ந்திடுஞ் சாகர வாடையில்
உள்ளி ருந்துல காட்டிடும் நாயகன்
உண்மை யானவன் பொய்ம்மையும் தேர்ந்தவன்!நம்பு வார்தம தன்பினில் ரூபமாய்
நாடு முற்றிலும் காத்திட வேலியில்
கம்பும் கையுமாய் நிற்குநம் வீரரின்
கண்ணில் வீரமாய் இல்லறஞ் சேர்த்திடும்
தெம்பு மிக்கபெண் டிர்மிசை பெண்மையாய்
சின்ன பாலகர் புன்னகை அம்சமாய்
நம்பி டாதவர் வாக்கினில் பொய்ம்மையாய்
நாலு திக்கிலும் நின்றுநி றைந்தவன்பேர்கள் மாறலாம் பெற்றிடும் சேதியால்
பெருமை மாறலாம் ஆயினும் நாமெலாம்
ஓரி றைவனின் சாட்டையில் சுற்றிடும்
ஓய்வி லாததோர் பம்பரம்! நாமிடும்
காரி யங்களும் ஆட்டமும் ஓய்ந்திடும்
கணம்நெ ருங்கிடில் ஞானமெ னும்புதுத்
தேரி லேறிநம் கண்முனம் தோன்றுவான்
தெய்வ மென்றறி தேர்ச்சிகொள் நெஞ்சமே!!-20.01.2019
