-விவேக்பாரதி

ஆடு கின்றதோர் பம்பரம் நாமெலாம்
ஆட்டு விப்பவன் யாரெனக் கூறடா
பாடு பட்டவர் பாட்டினில் வாழ்ந்தவன்,
பாரின் சுற்றினில் பற்றிடா துள்ளவன்,
நாடு மத்தனை ஆசையும் எண்ணமும்
நண்ணி டாத்தொலை வெட்டியி ருப்பவன்,
காடு மேடுகள் சுற்றுமெய்ஞ் ஞானியர்
காணும் சக்தியாங் கைதொழ வேண்டிடும்,

கோவில் எங்கிலும் உள்ளுறை தெய்வதம்,
கொள்கை கொண்டுவாழ் போகியர் நெஞ்சினில்
ஆவ லாகவும் வாழ்ந்திடும் உத்தமன்,
ஆண்டி யாயொரு கானிடை தங்குவார்
நாவில் ஞானமாய் நின்றிடும் உள்ளொளி,
நாட்டில் அற்புதம் தோன்றிடப் பாடிடும்
பாவ லர்க்கெலாம் பாதரும் சற்குரு,
பார்க்கும் வையமி யக்கிடும் ஆற்றலான்,

கிள்ளை நாரைகி ளர்ந்திடுங் கான்குயில்
கீழ்வி ழும்மழைக் காடிடும் மஞ்ஞைகள்
புள்ளி னந்தரும் ஓசையில் பச்சையாய்ப்
புன்செய் தந்திடும் நாற்றினில் ஆற்றினில்
கள்ள ருந்திடும் வண்டினப் போதையில்
காற்றில் சேர்ந்திடுஞ் சாகர வாடையில்
உள்ளி ருந்துல காட்டிடும் நாயகன்
உண்மை யானவன் பொய்ம்மையும் தேர்ந்தவன்!

நம்பு வார்தம தன்பினில் ரூபமாய்
நாடு முற்றிலும் காத்திட வேலியில்
கம்பும் கையுமாய் நிற்குநம் வீரரின்
கண்ணில் வீரமாய் இல்லறஞ் சேர்த்திடும்
தெம்பு மிக்கபெண் டிர்மிசை பெண்மையாய்
சின்ன பாலகர் புன்னகை அம்சமாய்
நம்பி டாதவர் வாக்கினில் பொய்ம்மையாய்
நாலு திக்கிலும் நின்றுநி றைந்தவன்

பேர்கள் மாறலாம் பெற்றிடும் சேதியால்
பெருமை மாறலாம் ஆயினும் நாமெலாம்
ஓரி றைவனின் சாட்டையில் சுற்றிடும்
ஓய்வி லாததோர் பம்பரம்! நாமிடும்
காரி யங்களும் ஆட்டமும் ஓய்ந்திடும்
கணம்நெ ருங்கிடில் ஞானமெ னும்புதுத்
தேரி லேறிநம் கண்முனம் தோன்றுவான்
தெய்வ மென்றறி தேர்ச்சிகொள் நெஞ்சமே!!

-20.01.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *