குறளின் கதிர்களாய்…(241)
-செண்பக ஜெகதீசன்
ஓன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோ ராறு.
-திருக்குறள் -932(சூது)
புதுக் கவிதையில்…
வெற்றி வரவாய்
ஒன்றினைப் பெற்று,
தோல்வியில்
நூறு மடங்கு இழக்கும்
சூதாடுபவர்க்கு,
அப்பொருளால் வாழ்வில்
அறமும் இன்பமும் பெற்று
வாழ்வதாகிய நல்வழி
என்றுமே இல்லை…!
குறும்பாவில்…
வென்று ஒன்று பெற்று, தோல்வியில்
நூறிழக்கும் சூதாடுபவர்க்கு என்றுமுண்டோ
நன்மைபெற்று வாழும் வழி…!
மரபுக் கவிதையில்…
வரவாய் வெற்றியில் ஒன்றுபெற்று,
வந்திடும் தொடர்ந்த தோல்வியது
தருமே யிழப்பாய் நூறாகத்
தீயதாம் சூதினை ஆடுபவர்க்கே,
தரமிலாச் செயலிதால் வருகின்ற
தனமது யென்றும் இவர்தமக்குத்
தருவதே யில்லை வாழ்வினிலே
தீதே யில்லா நல்வழியே…!
லிமரைக்கூ..
வரவொன்று, தோல்வியில் நூறு
இழப்புதரும் சூதாட்டம் ஆடுவோர்க்கு உண்டோ
நலவாழ்வுக்கு நல்லவழி வேறு…!
கிராமிய பாணியில்…
ஆடாதே ஆடதே சூதாட்டம் ஆடாதே
எப்பவுமே ஆடாதே,
வாழ்க்கயில கேடுதரும் சூதாட்டம் ஆடாதே..
ஒருமடங்கு செயிச்சா சூதாட்டத்
தோல்வியில நூறுமடங்காப் போயிடுமே..
இதால சூதாடுறவனுக்கு
நல்ல வாழ்க்கைக்கே
வழியில்லாமப் போயிடுமே..
அதால,
ஆடாதே ஆடதே சூதாட்டம் ஆடாதே
எப்பவுமே ஆடாதே,
வாழ்க்கயில கேடுதரும் சூதாட்டம் ஆடாதே…!