-விவேக்பாரதி

உள்ள மென்பதோர் பூனையடா – அது
உரசித் திரிவதே வேலையடா
உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ
உணருவார் அதிகம் இல்லையடா!

நாம் வளர்க்கிறோம் என்பதையே – பல
நாள் மறந்திடும் பிறவியடா!
ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை
அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்)

சொகுசுக் காகவே வாழுமடா! – அது
சுவையி லாததைச் சாடுமடா!
நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய்
நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்)

அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் – நீ
ஆவ தில்லையெனத் தள்ளுவதும்
நந்தம் கைகளில் இல்லை! யாவையும்
நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்)

காலி டுக்கிலே சுற்றுவதும் – ஒரு
கதையி லாமலே கத்துவதும்
வாலை ஆட்டியே பற்றுவ தும்நம்
வாழ்க்கை நாடகத் தங்கமடா! (உள்ளம்)

காலம் என்கிற வீட்டினிலே – சதி
காரப் பூனையும் குடித்தனமாம்!
ஓலம் இட்டாலும் ஓய்வெ டுத்தாலும்
உள்ளம் இல்லாமல் வெற்றிடமாம்!

அடப்போடா!
உள்ளம் என்பதோர் பூனையடா!!

-19.02.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.