அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 201

  1. பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்டப் பாவை..
    ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
    -ஆ. செந்தில் குமார்.

    பின்புலத்தில் இருக்கின்ற மஞ்சள் வண்ணப் பூவொன்று..
    தன் நிறத்தால் அஞ்சணம் தீட்டிய அழகுப் பனித்துளிகள்..
    தேன் துளிபோல் உருமாறி கண்களுக்கு விருந்தான நிகழ்வு..
    வானத்து விண்மீன்கள் தரையிரங்கிப் படைத்த பொற்குமிழ்களாய்..!!

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்டப்..
    பாவையாக மஞ்சள் மலர்..!!

    வெளியுலகைக் காணுதற்கு மலர்ச்சியுடன்
    வர ஆயத்தமாகும் கருக்குழந்தை..!!

    தலைகீழாய்த் தொங்கியது மலைத்தொடர்..
    தனைத்தாங்கும் இத்தரணியைக் காண..!!

    பரப்பு இழுவிசையால் கட்டுண்ட..
    பனித்துளிகளின் படை அணிவரிசை..!!

    ஆதவனெனும் ஓவியன் ஒளித்தூரிகையால்..
    ஆக்கிய அற்புத வண்ணச் சித்திரம்..!!

    அகந்தையெனும் கரிய மாயத்திரையுள்ளே..
    அறிவாய் ஒளியாய் விளங்கும் மறைபொருள்..!!

  2. கடவுள் காட்டிய காட்சி
    __________________________
    சோர்ந்துவிடாதே மனிதா
    சோகப்படாதே சோம்பலில்லாமல்
    தேட விழைந்தால் காணலாம்
    தேடிய பொருளைக் கண்ணெதிரே
    உன்னால் முடியாதது என
    உலகில் எப்போதும் இல்லை ஒன்று.
    மனம் இருந்தால்
    மார்க்கம் உண்டு
    தினமும் அறிவுரை கூறி
    திருத்த முயன்ற ஞானி
    புரிந்துகொள்ளாமல் மனிதர்கள்
    புத்திகெட்டு அலைவதைக்கண்டு
    வருத்தமுற்று கடவுளிடம்
    வழிகாட்ட வேண்டியதால்
    புதுவிதமாய் மனிதனுக்கு
    புத்திபுகட்ட கடவுள்
    காட்டிய எடுத்துக்காட்டே
    காட்சியாய்க் கண்ணெதிரே
    வண்ண வண்ண மலர்கள் இங்கே
    வரிசையாய் உள்ள துளிகளுக்குள்ளே
    திரும்பிப் பார்த்தால் தெரியும் அதன்
    தெளிவான முழு உருவம் அதுபோல்
    முயற்சித்துப் பார் ஒளிந்துள்ள
    முன்னேற்றப்பாதை தெரியும்
    கடவுள் சொன்ன வார்த்தைகளைக்
    காதால் கேட்டு முயற்சித்தால்
    வாழ்க்கை வளமாகும்
    வசந்தங்கள் வாடிக்கையாகும்.

  3. பாடம் புகட்டிய பனித்துளிகள்
    ———————————————-

    உதிக்கும் சூரியன், உலா வரும் நிலா
    உதிரும் இலைகள், மலரும் பூக்கள்
    கூவும் குயில்கள் என
    இயற்கையின் அழகு
    அரங்கேறும் தினந்தோறும்
    திரவியம் தேடி
    தினம் ஓடும் மனிதா
    இதை என்றேனும் கண்டு ரசித்ததுண்டோ
    தாயின் மடியில்
    உறங்கும் சுகம் தேடி
    பூமித்தாயின் மடியில் படர்ந்தாயோ
    நடுங்கும் குளிரில் அவளை காத்திட
    வெண்போர்வையாய் விழுந்தாயோ
    காலை கதிரவன் கைகளாய்
    கதிர்கள் வந்து உன்னை எழுப்பிட
    எழ மறுத்து அழுதாயோ
    பனி உருகி நீராய் கரைந்தாயோ
    நித்தம் நிகழும் நிகழ்வுகளை
    தெள்ளத்தெளிவாய் கண்டிட
    இயற்கை தந்த மூக்குக்கண்ணாடியோ
    இந்த பனி துளிகள்
    பனியில் நனைந்து
    பகலவன் கண்டு
    மலர்ந்த மார்கழி பூவை
    பனித்துளிக்குள்
    படம் பிடித்து வைத்தாயோ
    ஓடும் மனிதா
    ஒரு நிமிடம் நின்று இந்த
    ஒளிபடத்தை கண்டிடு
    என்னுள் ஒளிந்திருக்கும்
    ஓராயிரம் அழகுகளை கண்டு ரசித்திடு

  4. நிரந்தரமா…

    தற்காலிகத் தஞ்சமாய்க்
    கிளையில் தொங்கும்
    நீர்த்துளிகள்..

    கிடைத்த தருணத்தை
    விடாத
    மஞ்சள் மலர்கள்,
    முகம் பார்க்கின்றன
    நீர்த்துளி கண்ணாடியில்-
    தற்காலிக இலவசங்களால்
    தடம்மாறும் மனிதன்போல்..

    சுடு கதிர்கள் காட்டிச்
    சூரியன் வருகிறான்,
    கதை முடிக்க..

    நிரந்தரத்தின் முன்
    தற்காலிகங்கள்
    நிலைகெட்டுப் போவதுதான்
    இயற்கையோ…!

    செண்பக ஜெகதீசன்…

  5. முத்து முத்து பனித்துளியில்
    முகம் காட்டி சிரிக்கும் மலர் இதழ்களை
    முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
    நித்தம் நித்தம் தவிக்கிறது

    மென் காலை புலர் பெழுது
    பென் மஞ்சள் மலர் கொய்து
    மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
    கண்ணாடி சித்திரச் சேலையோ இது

    கண்கள் மயங்கும் காட்சிப்பிழை தான்
    காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்
    காற்று நுழைந்தால் கலைந்து விடும்
    கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

    சின்ன சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
    சித்திர தூரிகை கொண்டு வரைந்த
    சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
    சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

    விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
    விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
    விடியலின் விடுகதை அழகை
    விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ
    யாழ். நிலா. பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.