Advertisements
இலக்கியம்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 200-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

200ஆவது வாரமாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படக்கவிதைப் போட்டிக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், போட்டிக்கு வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துவரும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும், இப்போட்டியைத் தொடர்ந்து வல்லமை மின்னிதழில் இடம்பெறச் செய்துவரும் ஆசிரியப் பெருமக்களுக்கும், அனைத்திற்கும் மேலாய் இப்போட்டிக்கு வரும் கவிதைகளை வாசித்தும் நேசித்தும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்ற வல்லமை வாசகர்களுக்கும் என் நனிநன்றி!

ஒன்றையொன்று அணைந்துகிடக்கும் அழகிய நாய்க்குட்டிகளைத் தன் புகைப்படக் கருவியில் அள்ளியெடுத்து வந்திருக்கின்றார் புகைப்படக்கலை வல்லுநர் திருமதி. சாந்தி மாரியப்பன். அவருக்கு என் நன்றி!

நன்றி எனும் குணத்துக்குச் சொத்தாக இருப்பதனால்தான் நாய்களை வீட்டுக்கேற்ற காவலனாகவும், உற்ற தோழனாகவும் மனிதர்கள் அன்றுதொட்டு இன்றுவரை பயன்படுத்தி வருகின்றனர்.

“நட்புக்கு நன்றிமிகு நாயனையாரைத் தேர்; உணவளிக்கும் பாகனையே கொல்லும் யானையனையாரைத் தவிர்” என்று அறிவுறுத்துகின்றது நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி.

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(நாலடி – 213)

மனங்கவர் நாய்க்குட்டிகள் குறித்துக் கவிவடிக்கச் செந்நாப் புலவர்கள் சிலர் சீரிய கற்பனைகளுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

*****

”உணவோடு தாய் வரும்வரை ஓய்வெடுப்போம் தரையினிலே என்று அன்னையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாய்க்குட்டிகள் இவை” என்று நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நன்றியால் நல்லுணவு…

தயக்கம் வேண்டாம் தம்பிகளே
தாயவள் கொணர்வாள் நமக்குணவு,
பயமெதும் வேண்டாம் பிள்ளைகளே
படுத்தி டுங்கள் தரையினிலே,
வயிறு பசித்தால் மனிதர்தான்
வழிமுறை யெல்லாம் மறந்திடுவார்,
உயிராய் மதிக்கும் நன்றிகாட்டி
உணவுடன் வருவாள் நம்தாயே…!

*****

”தாயாரைக் காணாமல் தவித்திருக்கும் எம்மீது தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரமோ, குறிவைத்துச் சுடுகின்ற குறவனின் துப்பாக்கி குண்டோ, பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகனின் கயிறோ படாதிருக்கவேண்டுமே” என்று பதைபதைக்கும் நாய்க்குட்டிகளைக் காண்கிறோம் திரு. யாழ் பாஸ்கரனின் கவிதையில்.

தாயாரைக் காணவில்லை

தாயாரைக் காணவில்லை
தந்தையார் யார் என்று தெரியவில்லை
வாயாரச் சொல்லியழ வழியுமில்லை
நாயாகப் பிறந்துவிட்டோம் நடுத்தெருவில் கிடக்கின்றோம்

ஓயாமல் தேடி அலைந்து திரிந்து விட்டோம்
ஒரு வழியும் பிறக்கவில்லை
ஒருவரையும் காணத்தான் முடியவில்லை
ஓரமாய்ப் படுத்து விட்டோம்

பசியடங்கா எங்கள் பாழ்(ல்) வயிற்றுப்
பசியாற்ற எங்காவது கால் வயிற்றுக் கஞ்சி தேடி
திசை தெரியாமல் திரியும் எம் அன்னை
திரும்பி வருவாளோ மாட்டாளோ யார் அறிவார்?

தறிகெட்டு ஓடித்திரியும் வண்டியின் சக்கரத்திலோ
குறிவைத்துச் சுடுகின்ற குறவன் துப்பாக்கி குண்டிலோ
பொறிவைத்துப் பிடிக்கும் ஊர்ச்சேவகன் கயிற்றிலோ
வெறி விலங்கு கடியிலோ சிக்காமல் சீக்கிரம் வந்திட வேணும் சாமி

மண்ணில் மானிடராய்ப் பிறந்திருந்தால்
மடியிலிட்டுத் தாலாட்ட உற்றார் உறவினர்கள் உண்டு
மண்தரையில் கிடக்கின்ற எங்களை
மனமிறங்கி மனைக்கு அழைக்க யாருண்டு

நாயாக நாங்கள் இருந்தாலும் நட்புடனே நல்லோர் சொன்ன
நல்வழியில் தான் சென்றிடுவோம் – நாளும் வாலாட்டி
நன்றியுடன் தான் காலடியில் காத்துக்கிடப்போம்
நல்லோரே நாங்களும் வாழ நல்வழிகாட்டி நலங்காப்பீர்!

இவரே (திரு. யாழ் பாஸ்கரன்), தன்னுடைய மற்றொரு பாடலில், ”இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்; இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்; தரையில் கிடக்கின்ற எங்களுக்கும் தன்னம்பிக்கை உண்டு; தலைநிமிர்வோம் நாளை” என்று
நாய்க்குட்டிகளை நம்பிக்கையின் நாயகர்களாக்கியிருக்கக் காண்கிறோம்.

செம்பவளக் கண்ணுகளா! செல்லமணிக் குட்டிகளா!
செம்மண் சாலையிலே சேர்த்தணைத்து விளையாடும் நீங்களெல்லாம்
செம்பருதிச் சுடர்க் கதிரின் புது ஒளியோ
செழுமை மிகு நிலமகளின் உயிர்த்துடிப்போ

மந்தை மண்ணினிலே கிடக்கும் நமக்கு
தந்தை தாய் அருகில் இல்லை அதனாலே
சந்தையில் விலை கூவி விற்றிடுவார் எனச்
சிந்தையிலே என்ன எண்ணிலாச் சிந்தனையோ

ஒருதாய்ப்பிள்ளைகள் நாம் எல்லோரும்
ஒற்றுமையின் பலத்தாலே கட்டுண்டோம்
ஒரு சிறு பொழுது விலகிப் பிரிந்தாலும் அஃது
ஒரு பெரும் துயர் அதைத் தாங்கமாட்டோம்

எல்லோருக்கும் எங்களைப் பிடிக்கும்
என்றாலும் சில கற்கள் எம்மை வந்து அடிக்கும்
எங்களுக்கும் வாழ்வு உண்டு நாளை
எல்லோருக்கும் அது ஒரு நல்வேளை

தூக்கிப்போடு துன்பத்தைத் துள்ளி ஆடு இன்பத்தில்
இரவும் பகலும் இணைந்தே ஒரு நாளாகும்
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்வாகும்
இதை உணர்ந்தால் எல்லாம் சிறப்பாகும்

தரையில் கிடக்கின்ற எங்களுக்கும்
தன்னம்பிக்கை கொஞ்சம் உண்டு
தலைநிமிர்வோம் தடை தாண்டி
தலைமையேற்போம் தகுதிகளோடே

*****

”நன்றியின் மறுபெயர் நாய் என்று பேசும் இதே மாந்தக்கூட்டம் மறுநாளே நன்றிகெட்ட நாயென நம்பேர் சொல்லி ஏசும். பசித்திருக்கப் பழகிடுவீர் பிள்ளைகளே! பிறர் துயர்கண்டு அசையாத நெஞ்சங்களுக்கு இங்கே பஞ்சமில்லை” என்று உலகறியாத் தன் குட்டிகளுக்கு வஞ்சக உலகை அடையாளம் காட்டும் தா(நா)யைப் படைத்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

நாய் தன் குட்டிகளிடம்…

ஒருநாள் நன்றியின் மறுபெயர் நாயென்கும்.. அதுவே
மறுநாள் நன்றி கெட்ட நாயேயென்கும்..
சிறிதளவு உணவளித்துக் காவலுக்கு நில்லென்கும்..!!

நாப் பிறழ்ந்து பேசும்.. இந்த
நா அடக்கம் அற்ற
நா உள்ள மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

வாலாட்டும் குணத்தாலே.. நமைத்
தாலாட்டும் இவ்வுலகு என்
றெல்லாம் நீவிர் எண்ணிவிடாதீர்.. (ஒருநாள்)

பொல்லாத உலகிது.. பல கற்றும்
கல்லாத நிலையில் உழன்று
அல்லாதன செயும் மாந்தக் கூட்டம்.. (ஒருநாள்)

இறைபடைப்பின் உயிர்களெல்லாம்.. இத்
தரையில் தனித்துவாழ நமக்குமட்டும்
நிறைவிலா அடிமை வாழ்க்கை.. (ஒருநாள்)

பசித்திருக்கப் பழகிடுவீர்.. உமது
கசிந்துருகும் மொழிக்கெல்லாம்
அசையாத இதயங்கள் இங்கு ஏராளம்.. (ஒருநாள்)

*****

நாய்க்குட்டிகளை வைத்தொரு வாழ்வியல் ஆய்வையே நிகழ்த்தியிருக்கின்றார்கள் நம் வித்தகக் கவிகள்! பாராட்டுவோம் அவர்களை!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

எழுதுங்கள் புதிய பாடல்

கற்றுக்கொள்ளுங்கள் எங்களிடம்
கட்டியணைத்து உறவாட
அண்ணன் தம்பி ஆனாலும்
அடித்துக் கொள்ளாமல்
பார்த்த உணவைக் கூடிப்
பகிர்ந்து உண்ணுவோம்
மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
மண் தெருவில் ஓடினாலும்
ஏளனம் செய்யோம் ஒருபோதும்
எதிர்ப்படும் எம் நண்பர்களை
இருந்தால் குதியாட்டம்
இல்லாவிட்டால் குடியாட்டம்
வெந்ததைத் தின்று
விதிவந்தால் மாளும் கூட்டத்தில்
அத்தனைக்கும் ஆசை
அளவுகடந்த பொறாமை
அடுத்தவனை அழிக்க
அனுதினமும் ஒருதிட்டம்
குற்றவாளிகளின் கூட்டம்
குறைவில்லாமல் பெருகுவதால்
காவல் துறைக்கு எப்போதும்
கடமை செய்ய உதவுகிறோம்
வெடிகுண்டைத் தேட
வேகமாய் அழைப்பார் எம்மை
நாலடியார் காலத்தில்
நல்ல நண்பனுக்கு உவமையாய்
எம்மைச் சொன்ன நீர் இன்று
எல்லாவற்றுக்கும் யாம் தான்
என எழுதுங்கள் புதிய பாடல்
உங்களோடு உங்களாய்
உங்கள் வீட்டில் நாங்கள்
சரிசமமாய்ப் பழகி
சங்கடங்கள் தீர்க்கின்றோம்
பிறக்காத பிள்ளையாய்…
பேசாத தோழனாய்…
உறவுக்காரனைப் போல்
உரிமையாய் வாழ்கின்றோம்!

”வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகும் இந்த மானுடக்கூட்டம் அடுத்தவனை அழிப்பதிலேயே ஆயுளைக் கழிப்பதால் காவல்துறையின் சேவை நாட்டுக்குத் தேவையாயிருக்கின்றது. காவல்துறை தன் கடமையைச் செவ்வனே செய்ய நாங்கள் துணைநிற்கின்றோம் சேவகராய். நாட்டுக்கு மட்டுமா…? வீட்டுக்கும் காவல் நிற்கின்றோம் பிறக்காத பிள்ளைகளாய்!” என்று நாய்களின் சமூகத் தொண்டை அவற்றின் வாயாலேயே தன் பாட்டில் விண்டுரைக்க வைத்திருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்றறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

  1. Avatar

    என் கவிதையை சிறந்த கவிதையாக தேர்வு செய்து ஊக்குவித்தமைக்கு வல்லமை ஆசிரியர் குழுவுக்கும், நடுவர் மேகலா இராம மூர்த்தி அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

  2. Avatar

    Dear author,What a imagination.Excellent Kavithai. Super Vasasree.Le your Awards multiply.

    Regards.

    Jessyflora

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க