காலை 4 மணிக்கு பெங்களூருவின் ஒரு வீதியில் தங்குமிட விலாசம் தேடிக் கொண்டிருந்தேன். காலைப் பனியும் பயணக் களைப்பும் இப்படியொரு களியை எனக்குக் காட்டியது! காற்றினில் தெரிவதும் நம் குருவே!

கண்ணை மறைத்திடும் கார்முகில் கூட்டத்தில்
காலம் கழிந்திருந்தேன்! – ஒரு
காலையும் மாலையும் பாலகன் ஆசையைக்
கவ்விப் பிடித்திருந்தேன்,
எண்ண மனைத்திலும் ஏறிய மோகத்தில்
எம்பிக் குதித்திருந்தேன் – வந்த
ஏணியைத் தள்ளி யிகழ்ந்திட நாணின்றி
எப்படியோ திரிந்தேன்!
உண்மைப் பொருளை உணர மறுக்கின்ற
உச்சத்தில் நானிருந்தேன் – சிறு
ஊறுவந் தாலும் தடுக்குற்று பள்ளத்தில்
உச்சிவிட் டேவிழுந்தேன்
வண்ண மறிந்திடா வாழ்வினில் கண்முன்னே
வானவில் கொண்டுதந்தாய் – குருவே
வாடு மனத்தினில் தேடல் பயணங்கள்
வார்த்துக் களியைத்தந்தாய்!

நீயொரு சத்தியம் நீயொரு தத்துவம்
    நீயே இறைவடிவம் – உன்
நிழலும் ரகசியம் நீண்டிடும் சிந்தனை
    நீளம் பரமசுகம்
தீயொரு கண்ணெனக் கொண்ட தலைவன்
    திரட்டிய அன்புமுகம் – ஒரு
திவ்ய சுருதியில் நெஞ்சில் ஒலித்திடும்
    தீட்சண்ய தேவசுரம்
வாயொரு தீவினை நெஞ்சொரு தீவினை
    மாற்றி மாற்றித்தொடவே – ஒரு
வன்மையி லாத வலிக்கரம் சிக்குற்று
    வாட்டத் துழன்றிடவே
தாயொரு பக்கம் தளிரினைக் கவ்வித்
    தடங்கொண்டு சேர்ப்பதுபோல் – குருவே
தாவும் மனத்தினில் ஆவல் அறுத்துடன்
    தண்மைக் களியைத்தந்தாய்!

என்றனை ஓர்கணம் நான்விட்டு நீங்கி
    எடுக்கின்ற பார்வையிலும் – சிறு
ஏழையின் நெஞ்சம் படும்துயர் கண்டதும்
    ஏந்திடும் வேர்வையிலும்
குன்றினைப் போலக் குணமற்ற பேதங்கள்
    கூட வருவதிலும், – பல
குட்டிக் கரணங்கள் இட்டுத் தினமொரு
    குற்றம் இழைக்கையிலும்
நின்றன் அருட்பதம் தேடிப் பலபல
    நீசரைக் காண்கையிலும் – பின்னர்
நிம்மதி வேண்டி நிழலில் உறங்கிட
    நீவந்து தொட்டதிலும்
ஒன்றினைக் கண்டனன் யாவையும் உன்கரம்
    ஓட்டும் திரைகளென்றோ – குருவே
ஒற்றை மலர்க்கரம் பற்ற மனத்தினில்
    ஓங்குங் களியைத்தந்தாய்!

வேண்டுவ தின்நிழல் வேண்டுவ துன்குரல்
    வேண்டுவ துன்றன்மடி – பல
வேகத்திலும் வரும் சோகத்திலும் பட்டு
    வெந்தழி யாதமதி
ஆண்டகை யேயுன தன்பின் இருக்கையில்
    ஆசையற் றுய்திடுதல் – என
தாவி முழுதிலும் தேவி திருவுரு
    ஆழ்ந்து பதிந்திடுதல்
மாண்டு துடிக்க மரணமே சூழினும்
    மாறிடா வுன்நினைப்பு – என்
மனதுத் தடத்தினில் உனது பதமலர்
    மன்னும் திருச்சிரிப்பு
காண்டிப னுக்குக் கிடைத்ததைப் போலுன்றன்
    காந்த முழுவுருவை – குருவே
காட்டித் துயர்களை ஓட்டிக் கவிதையில்
    காலக் களியைத்தந்தாய்!!

விவேக்பாரதி
10.06.2018

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.