Tag: நிர்மலா ராகவன்

  • நாற்று

    — நிர்மலா ராகவன்.

    நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம். ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு.

    `மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி இருக்கு. இதைப் படிச்சுப் பாரு!’ என்று ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு அப்பால் சென்றார்.
    பல பெண்களின் பேட்டியுடன் வந்திருந்ததை ஒரு கதையாக நினைத்துப் படித்தாள்.

    “தே! நீ என்னா சொல்றே? இப்ப தலையைத் தலையை ஆட்டிட்டு, யார் பிள்ளையோ என் வயத்திலே வளர்றதைப் பாக்கிறப்போ, ஒன்னால அதை ஏத்துக்க முடியுமா?”

    ஆட்டோ ஓட்டிப் போனபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக்கீழ் சுவாதீனம் அற்றுப்போய், காலமெல்லாம் மனைவியின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுகூட ராசப்பா அவ்வளவு குழம்பவில்லை. எதுவும் சொல்லத் தெரியாது, அவளையே பார்த்தான். அவனைக் கணவனாக வரித்த கொடுமை, இப்போது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. எந்த இளம்பெண் எப்போது நிர்க்கதியாக நிற்பாள் என்று காத்திருந்தவர்போல, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறாரே இந்த மனிதர்! இப்படியெல்லாம்கூடவா பணம் சம்பாதிப்பார்கள்!

    “ஒங்களுக்கென்ன! ஒங்க பேரைச் சொல்ல லட்டுமாதிரி பிள்ளை இருக்கு. எத்தனை பேருக்குக்கி டைக்கும் இந்தப்பாக்கியம்!” என்று நைச்சியமாக ஆரம்பித்த தரகர் பூபதி, “சில பேருக்கு, கல்யாணமாகி பத்து, பதினஞ்சு வருஷமானாலும் பிள்ளை பாக்கியமே இல்லை, பாவம்!” என்று பொய்யாகப் பரிதாபப்பட்டார். பின், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்ல!” என்று கொக்கி போட்டார். அவர் மேலும் சொன்னதைக் கேட்டு, நாகம்மாதான் வெகுவாக அதிர்ந்து போனாள்.

    யாருடைய கர்ப்பப்பையிலோ வளரவேண்டிய கருவை அவளுடைய வயிற்றில் விதைப்பார்களாம். அதை முழுமையாக வளரவிட்டு, பெற்றெடுத்து, அதற்கு உயிர் கொடுத்தவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமாம்!

    “சும்மா இல்ல. மாசாமாசம் ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. பிள்ளை பிறந்ததும், சுளையா இன்னொரு அம்பதாயிரம்!” நைச்சியமாகச் சொன்னார் பூபதி. பணத்தாசைக்கு மசியாதவர் யார் என்று எண்ணித்தான் அவர் அந்த இடத்துக்கு வந்திருந்தார்.

    ஆனால் நாகம்மா வேறு ஒன்றை யோசித்தாள்: `என் வயத்தை வாடகைக்குக் கேக்கறாங்க!’ உடலை விற்றுப் பிழைப்பதுபோல் ஆகிவிடாது?

    இவளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து என்று பூபதி மேலும் தூபம் போட்டார். “இதெல்லாம் முப்பது, நாப்பது வருஷமா அமெரிக்காவில இருக்கிற நடைமுறைதான். இல்லாதவங்களுக்கு இருக்கிறவங்க குடுக்கிற தானம்! அதோட.., நீங்க ஒண்ணும் சும்மா குடுக்கப்போறதில்ல!”

    தன்னை எதற்குக் குறிவைத்தார் இந்த மனிதர்? வெளிப்படையாகவே கேட்டாள் நாகம்மா.

    “அது வந்தும்மா..,” சற்று யோசனையில் ஆழ்ந்தார். “பிறக்கப்போற குழந்தைக்கு நீங்க அம்மா இல்லியா? கண்ட கழிசடை எல்லாம் அம்மா ஆகிட முடியுமா? அதான், ஒங்களைமாதிரி.. நல்ல விதமா குடும்பம் நடத்தி, ஒரு பிள்ளையாவது பெத்துக்கிட்டவங்களாப் பாக்கறோம். வயசு.. ஒரு இருபத்தஞ்சிலேருந்து முப்பதுக்குள்ளே இருந்தா, பிரசவத்திலும் குளறுபடி இருக்காது”.

    இன்னொரு உயிரா! வீட்டிலிருக்கிற மூன்று பேருக்கே அவள் கூலிவேலை செய்து கொண்டு வருகிற சொற்ப வருவாயில் அரை வயிறுகூட நிரம்புவதில்லை.

    அவளது மன ஒட்டத்தைப் புரிந்துகொண்டவராக, “பேசினதைத் தவிர, ஒங்களுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவு, பால், பழம், உடை எல்லாத்துக்கும் தனியா குடுப்பாங்க. நீங்க வேலைக்குப் போக வேணாம்,” என்று மேலும் ஆசை காட்டினார்.

    நாகம்மாவுக்கு ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அழுகைதான் வந்தது. அதைப் பார்க்கப் பொறாதவனாய், முதன்முறையாக ராசப்பா பேசினான்: “யோசிச்சுச் சொல்றோங்க ஐயா!”

    “ஒங்க இஷ்டம்!” என்றபடி எழுந்தார் பூபதி. வாசலுக்கு வந்தவர், தன்னையும் அறியாது மூக்கைப் பிடித்துக்கொண்டார். ஆறெனப் பெருகி ஓடும் சாக்கடை. அதையே நீச்சல் குளமாகப் பாவித்து, மனமகிழ்ந்து, எம்பி எம்பிக் குதித்துக்கொண்டிருந்த பன்றிகள்.

    `எப்படித்தான் இந்த நாத்தத்திலே சாப்பிட்டு, தூங்கி, குடும்பம் நடத்தறாங்களோ!’ அருவருப்புடன் உதட்டைச் சுழித்துக்கொண்டார். `இந்த லட்சணத்தில, சுலபமா சம்பாதிக்க வழி காட்டினா, அதுக்கு ஆயிரம் யோசனை!’ இயலாமையில் ஆத்திரம் பிறந்தது அவருக்கு.

    மீண்டும் ஏதோ நினைத்துக்கொண்டவராய், குடிசையினுள் நுழைந்து, சாணி போட்டு மெழுகியிருந்த தரையில் அமர்ந்தார். “முக்கியமான ஒண்ணைச் சொல்ல மறந்துட்டேனே! இதில தில்லுமுல்லு ஏதுமில்ல. ரெண்டு தரப்புக்கும் வக்கீல் வெச்சு ஒப்பந்தம் எழுதுவாங்க டாக்டரம்மா. ஒங்களுக்கும், பிள்ளையை வாங்கப்போறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருக்கக்கூடாது!” என்று அழுத்திச் சொன்னார். இந்த ஏற்பாட்டால் தனது பொருளாதாரம் கணிசமாக உயரப்போவதை கற்பனை செய்து மகிழ்ந்தார்.

    ராசப்பாவுக்கும் ஆசை பிறந்தது. கைநிறையப் பணம் கிடைத்தால், தான் இப்படி படுக்கையே கதி என்று இருக்க வேண்டாம். ஒன்றுக்குப் போக, குளிக்க என்று எந்த ஒன்றுக்கும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை நாட்கள்தான் முகம் சுளிக்காமல் செய்வாள் நாகம்மா!

    “இன்னும் என்ன யோசனை, நாகு! ஐயா சொல்றதுபோல, இது ஒரு வியாபாரம்னு நெனச்சுக்கயேன்,” என்றான்.

    அடைத்த குரலில் நாகம்மா பூபதியைக் கேட்டாள்: “அந்தப் பிள்ளை எப்படி..?”

    அவர் நெற்றியில் அடித்துக்கொண்டார். “முக்கியமானதைச் சொல்லாம விட்டுட்டேன், பாருங்க! என்று பெரிதும் நொந்துகொண்டவராக, “இது மத்த பிள்ளைங்களைப்போல இல்ல. அம்மா ஒடம்புக்கு வெளியே உருவாகுது. அப்பாவோட உயிரணு, அம்மாகிட்டேயிருந்து சினைமுட்டை ரெண்டையும் டாக்டரே ஒண்ணா சேர்த்து..,” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், இந்தப் பாமரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் எதற்கு என்று நிச்சயித்தவராக, “மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்குங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயத்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்த அம்மா வயத்தில கரு தங்கறதில்லே!”

    “நாத்து நடறமாதிரி!” என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின்மேல் இரக்கம் சுரந்தது. தான் அவளைவிட ஒரு விதத்தில் மேலானவள்!
    அச்சமயம் பார்த்து, சிறுவன் வேலு தூக்கத்திலிருந்து எழுந்தான். நேராக நடந்து வந்து, தாயின் மடியில் அமர்ந்துகொண்டு, “பசிக்குதும்மா,” என்று முனகினான். இன்னும் கொஞ்ச காலத்துக்காகவாவது அவள் குடும்பத்தினர் வயிறாரச் சாப்பிடுவது அவள் கையில்தான் இருக்கிறது. அதைப்போய் தடுப்பானேன்!

    பெருமூச்சுடன் அவனை அணைத்து, “ஒனக்குத் தம்பிப்பாப்பா பொறக்கப்போறாண்டா!” என்றாள்.

    மாதங்கள் உருண்டன.

    தாயின் பருத்திருந்த வயிற்றைத் தொட்டுப்பார்த்தான் வேலு. கரு உருண்டு, இன்னொரு கோடிக்குச் சென்றது. நாகம்மா கனிவுடன் வயிற்றைத் தடவினாள். சுகமான சுமை. யாருடைய உயிராக இருந்தால் என்ன! இப்போதெல்லாம் இந்தப் பிள்ளைக்காகவே அவள் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள்! இந்தக் குழந்தைக்கு செடிகளைப் பிடிக்கும், இசையில் ஆர்வம் என்று தன் மனதில் எழும் நெகிழ்ச்சியால் புரிந்து போகிறது அவளுக்கு. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலேயே நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கிறாள். குழந்தை அதிர்ந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன், சினிமாப் பாடல்களைத் தவிர்க்கிறாள். மலேசிய வானொலியில் கேட்டிருந்த பழம்பாடல்களையும், பக்திப் பாடல்களையும் வாய் ஓயாது முணுமுணுக்கிறது. ஸ்ருதி, ஸ்வரம் போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் கிடையாது. ஏதோ, தனக்குத் தெரிந்தவரை கள்ளக்குரலில் கீச்சுமூச்சென்று பாடுகிறாள். அவள் வயிற்றுக் கருவும் அதில் திளைத்து ஆனந்தப்படுவதாகத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

    வேலுவை உண்டாகி இருந்தபோது இப்படி ஆழ்ந்து யோசித்ததாக நினைவில்லை. எதுவுமே கைநழுவிப் போய்விடும் என்ற நிலை வரும்போதுதான் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ என்று யோசிக்க, கலக்கம் பெருகியது. தன்னுடலின் ஒரு பாகமாக பத்து மாதங்கள் இருக்கப்போகும் பிள்ளை. அது ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, தலைமயிர் சுருட்டையா, அடர்த்தியா என்றெல்லாம்கூட அவள் பார்க்கக்கூடாதாம் நாகம்மாவுக்கு அழுகை வந்தது. “அம்மா!” என்று விம்மினாள்.

    “அம்மான்னு இப்போ கத்தக்கூடாது. அப்புறம், குழந்தை ஒன்னை விட்டுவர மனசில்லாம தவிக்கும்!” பிரசவ வலி எடுத்திருந்தவளைத் தாதி மிரட்டுகிறாள்.

    “குழந்தைக்கும் தன்னை விட்டுத் தனியாகப் பிரிய மனம் வராதா?’ லேசான திருப்தி நாகம்மாவுக்குள். உடனே, தன் மனம் போன போக்கிற்காகத் தன்மேலேயே கோபம் எழுகிறது. `இது என்கூட இருக்கப்போவது இன்னும் சில நாட்களே!’ என்று தான் உருகியதோடு போகட்டும். அருமையாக வளர்த்த இக்கருவும் துயரப்பட வேண்டாம். வலி தாளாது, கண்களை இறுக மூடி, வாயை மட்டும் கோணுகிறாள்.
    திடீரென ஒரு நிம்மதி, உடல் லேசாகியதுபோல். தொடர்ந்து, பூனைக்குட்டி கத்துவதுபோல ஓர் ஒலி!

    குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோதே அச்சமும் அலைக்கழைத்தது. அவசரமாகக் கண்ணைத் திறந்தாள். சமநிலைக்கு வந்திருந்த வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவினாள். பக்கவாட்டில் கண் போயிற்று. வெறுமை — அவள் வயிற்றிலும், பக்கத்திலும். நாகம்மா விம்ம ஆரம்பித்தாள்.

    “இப்போ எதுக்கு அழுவறே? மொதல்லேயே எல்லாம் கேட்டுட்டுத்தானே ஒத்துக்கிட்டே? பேசாம தூங்குவியா!” பச்சைப்பிள்ளைக்காரி கண்கலங்கி, அவள் உடம்பு கெட்டுவைத்தால், தனக்கு வேலை அதிகமாகுமே என்ற எரிச்சல் தாதிக்கு. கண்ணை மூடிக்கொண்டாள் நாகம்மா. குழந்தையின் ஈனஸ்வரமான அழுகைக் குரல் இன்னிசையாக அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

    “என்ன ராசப்பா? சக்கர நாற்காலி வாங்கிட்டாப்பல இருக்கு! சாப்பாட்டுக் கடை வெச்சிருக்கியா? நடக்கட்டும், நடக்கட்டும்,” ஆரவாரமாகப் பேசியபடி வந்தார் தரகர் பூபதி. “ஒன் பெண்டாட்டி எங்கே? கூப்பிடு!”

    வெந்த இட்லிகளைத் தட்டில் கொட்டிக்கொண்டிருந்த நாகம்மா அவர் குரலைக் கேட்டதும் பாய்ந்து வெளியே வந்தாள். “பிள்ளை எப்படிங்க ஐயா இருக்கு?”

    “அதுக்கென்ன! பெரிய இடத்துப் பிள்ளை! அதைப் பெத்தவங்க ஒங்களை தெய்வமாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்று அளந்தார். குரலைக் கனைத்துக்கொண்டு, “அதே மாதிரி இன்னொரு கேசில்ல! இதை நீங்க ஒத்துக்கிட்டா, பெரிய ஹோட்டலே வெச்சுடலாம்,” என்று ஆரம்பித்தார்.

    ராசப்பாவின் முகத்தில் லேசான ஆசை படர்ந்தது. விளங்காத பயலென்று தன்னை இப்போது பழிப்பவர்கள் தான் ஹோட்டல் முதலாளியானால் எப்படி மரியாதை செய்வார்கள் என்று கற்பனை பாய, உடல் நிமிர்ந்தது. சற்றே கெஞ்சலான பார்வையை மனைவியின்மேல் ஓடவிட்டான்.

    யாரும் சற்றும் எதிர்பாராவண்ணம், நாகம்மா தரகர்மேல் பாய்ந்தாள். “ஒங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு, சாமி. இந்த எடத்தைவிட்டுப் போயிடுங்க. என்னோட வயத்திலே சுமந்து, சுமந்து யாருக்கோ தூக்கிக் குடுக்க என்னால முடியாது. `தம்பிப் பாப்பா எங்கம்மா?’ன்னு எம்பிள்ளை கேக்கறப்போ எல்லாம் நான் துடிக்கிற துடிப்பு ஒங்களைமாதிரி ஆம்பளைங்களுக்கு எங்க புரியப்போகுது!” என்று நேரிடைத் தாக்குதலில் இறங்கினாள்.

    “நாகு!” தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாளே என்ற பதைப்புடன் அவளை அடக்க முயன்ற கணவனின் குரல் அவள் காதில் விழவில்லை. தன்பாட்டில் பேசிக்கொண்டே போனாள்.

    “அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!” என்று விம்மியவள், “ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோடக் கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத்தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தைக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

    அவளுடைய ஆத்மாவின் ஓலத்தைப் புரிந்துகொள்ள முடியாது, “ஏதோ குழப்பத்திலே இருக்கீங்கபோல! நான் போயிட்டு, அப்புறமா வரேன்,” என்று எழுந்தார் தரகர்.

    “வராதீங்க. போங்க! பிள்ளை பெத்ததும், மாரிலே பால் கட்டிக்கிட்டு நான் துடிச்ச துடிப்பு ஒங்களுக்குப் புரியுமா?” வெறிபிடித்தவளாகக் கத்தினாள் நாகம்மா. “எங்களுக்கு இனிமே சோத்துக்குப் பஞ்சம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சாகிறவரைக்கும், `என் வயத்திலே சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ! அதைப் பாக்கக்கூட முடியலியே!’ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தால அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது. உணர்ச்சிங்ககூட இருக்காதா?” வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.

    `படிச்சுட்டியா? சென்னைக்குப் போக ரெண்டு டிக்கெட் புக் பண்ணடடுமா, டியர்?’ மனைவியின் முகம் தெளிந்திருக்கிறதே என்ற உவகையுடன் கேட்டார் செல்வந்தர்.

    ‘நாடு விட்டு நாடு போய், வாடகைத் தாயெல்லாம் வேணாங்க. நம்ப மகிழ்ச்சிக்காக இன்னொரு பொண்ணை அழவிடறது நியாயமில்லே. இங்கேயே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்!’

    (மலேசிய சுதந்திர தின சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது, 2005)

    Share
  • உன்னையறிந்தால் …….. (50)

    நிர்மலா ராகவன்

    வெற்றி பெறும் வழிகள்

    உனையறிந்தால்

    கேள்வி: வாழ்வில் வெற்றி பெறத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஏன் சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது?

    விளக்கம்: ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யவேண்டாமா!

    வெற்றிக்கு வேண்டிய குணாதிசயங்கள்

    முதல் வெற்றிதான் மிகக் கடினமானது; அதற்குப்பின் எதில் வேண்டுமானாலும் வெற்றி பெறுவது எளிது என்று சொல்வதுண்டு. ஏனெனில், ஒரு காரியத்தில் வெற்றி பெற அறிவு இருந்தாலும், அது மட்டும் போதாது. குறித்த காலத்துக்குள் செய்து முடிப்பது, பிறருடன் இனிமையாகப் பழகத் தெரிந்து வைத்திருப்பது போன்ற வேறு பல குணங்களும் அவசியம். இவை இயற்கையாக அமையாவிட்டாலும் பழகிக்கொள்ளலாம்.

    புகழ்ச்சியால் மண்டைக்கனமா?

    அன்பு காட்டுகிறோம் என்றெண்ணி, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் சிறுவயதினரை வெகுவாகப் புகழ்வதுகூட அவர்களது வளர்ச்சிக்குத் தடைதான்.

    கதை: எங்கள் இடைநிலைப்பள்ளியில் ஒரு வகுப்பின் கடைசிப்பிரிவில் இருந்த பதின்ம வயது மாணவ மாணவியர் எல்லாப் பாடங்களிலும் பின்தங்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் முகம் வசீகரமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை பென்சில் சீவ வைத்திருந்த சிறிய கருவியின் பின்னாலிருந்த கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர் பெண்கள்! பையன்களோ, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து அவ்வப்போது தலை சீவிக்கொண்டிருந்தார்கள்!
    இவர்களை ‘அழகு’ என்று பெற்றோரும், உறவினரும் சிறுவயது முதல் கொண்டாடி இருக்கவேண்டும். இவர்களுக்கு வெற்றி தோல்வியைப்பற்றிய சிந்தனை கிடையாது. தம் அழகிலேயே நிறைவடைந்துவிட்டார்கள், பாவம்!

    அடுக்கடுக்காக வெற்றி பெற பாராட்டையும், வாய்ப்புகழ்ச்சியையும் ஏற்கத் தெரியவேண்டும். இல்லாவிடில், முதல் வெற்றியுடன் நின்றுவிடும்.

    கதை: ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், விமரிசகர் என்ற முறையில். குழுவில் சிறப்பாக நடனமாடிய ஒரு பதின்ம வயதுப் பையனை தனியே அழைத்துப் பாராட்டினேன். அவனுக்குப் பெருமை தாங்கவில்லை. மறுநாள் அதே நிகழ்ச்சியில் அந்தப் பையன் ஆடியது ஏமாற்றத்தைத்தான் விளைவித்தது. ஏனென்றால், இவனுக்குப் பாராட்டை நல்ல விதமாக ஏற்றுக்கொள்ளத் தெரியவில்லை. தான் பெரிய மேதாவி என்று உடனே தலைக்கனம் வந்துவிட்டது. அசிரத்தையாக ஏதேதோ ஆடிவிட்டான். நானும் ஒரு பாடம் கற்றேன்: புகழ்ச்சியில் கஞ்சத்தனம் காட்டப் பழகினேன்.

    இசைக்கலைஞர்கள் கர்வத்துடன் பாடினால், ராகம், ஸ்வரம் ஆகியவைகளுக்கு உயிர் கொடுக்கும் இசைத்தேவதைகளுக்கு அங்கங்களில் குறைபாடு உண்டாகிவிடுமாம். திருவிளையாடல் படத்தில் பாலையா ஏற்று நடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரம் நினைவுக்கு வருகிறதா? எந்தக் கலையானால் என்ன! ஒருவர் புகழ்ந்தவுடனே கலைஞருக்கு ஏற்படும் கர்வமும், திமிரான போக்கும் அவருடன், பிறரையும் பாதிக்கும்.

    `ஒருவர் புகழ்ந்தால், மகிழ்ச்சியாக இருக்கிறதே! அது எப்படித் தவறாகும்?’ என்கிறீர்களா? மகிழ்ச்சி வேறு, பெருமையால் எழும் கர்வம் வேறு. தான் மிகவும் சிறந்திருக்கிறோம் என்று பிறரை ஓயாது மட்டம் தட்டிக்கொண்டிருப்பவன் விரைவில் வீழ்வான். அவனுடைய திறமையை வியந்து அவனை முதலில் நெருங்கியவர்கள்கூட அஞ்சி விலகுவார்கள். ஒரே துறையில் இருப்பவர்களைப்பற்றி தரக்குறைவாக கருத்துகள் தெரிவிப்பது எப்போதுமே அபாயகரமானது.

    வெற்றிக்கு முட்டுக்கட்டை

    வெற்றி பெற்றவனிடம் பலரும் நெருங்குவார்கள். வேறென்ன, ஆதாயம் தேடித்தான்! தன் நலன் நாடும் நண்பர்கள் என்று இவர்களை நெருங்கவிட்டால், அவர்கள் சூடு காய்ந்து, இவனையே எரித்துவிடும் அபாயமும் உண்டு. (பிரபலமான நடிகர்கள் இப்படி ஏமாந்துபோய், மிகுந்த வருத்தத்துடன் பிறரை எச்சரித்திருக்கிறார்களே) நண்பர்களாகப் பழகுபவர்களே இப்படி என்றால், வெளிப்படையாகவே தம் பகைமையைச் சொல்லாலும், செயலாலும் காட்டிக் கொள்பவர்களைப்பற்றிக் கூற என்ன இருக்கிறது!

    இதனால்தானோ என்னவோ, வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள் பலர். சராசரியாக இருந்தால்தான் பலரும் நட்புடன் பழகுவார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு. ஆனாலும், எதிலும் வெற்றி அடைய முடியவில்லையே என்ற ஆதங்கம் இல்லாமல் போகாது. அதைத் தணித்துக்கொள்ள தம்மைப்போல் இல்லாது, துணிச்சலாக நடந்து வெற்றி பெற்றவரைப் பழிப்பதில் ஒரு குரூர திருப்தி அடைகிறார்கள். இவர்களுக்கெல்லாம் அஞ்சுவது மடமை. சவாலுக்கு அஞ்சினால் புதிய அனுபவங்கள் கிட்டுமா?

    பாதுகாப்பான நிலையிலிருந்து வெளியே வர தயக்கம், புதிய சூழ்நிலைகளில் என்னவெல்லாம் அனுபவிக்க நேரிடுமோ என்ற அச்சம் போன்றவைகளால் ஆட்டுவிக்கப்பட்டால், வெற்றி எப்படிக் கிட்டும்?

    BRAIN STORMING

    எந்தத் துறையில் வெற்றி பெறும் சாத்தியக்கூறு இருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, நம் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களும் ஆலோசனை வழங்குவார்கள். முடிவெடுத்துவிட்டால், துணிந்து இறங்க வேண்டும். முதல் நாள் இரவே அடுத்த நாள் நாம் செய்யப்போகும் காரியங்களைப்பற்றி திட்டமிடுவது நல்லது. உறக்கத்தில் நல்ல எண்ணங்கள் நம் திட்டத்துடன் சேர்ந்து பலப்படுத்தும்.

    உடனுக்குடன் வெற்றியா?

    எடுத்த எடுப்பில் பெரிய வெற்றிகளுக்கு ஆசைப்படுவது பேராசை. அப்படியே அமைந்தாலும், அது நிலைப்பது கடினம்.

    “எழுத்தாளர்களுக்கு வெற்றி கிடைக்க மிகவும் தாமதமாகும் — நாற்பது ஆண்டுகள்கூட ஆகின்றன!” என்று குஷ்வந்த் சிங் கூறுவார்.

    வெற்றி என்பது உடனுக்குடன் கிடைக்காது. இது புரிந்து, பல தோல்விகளைப் பொருட்படுத்தாமல் செய்யும் காரியத்தில் ஆரம்பத்திலிருந்த அதே ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் நாம் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறோம். அடிமேல் அடி வைத்து, நிதானமாக, ஆனால் இலக்கினைத் தவறவிடாது செல்வோமானால் வெற்றி உறுதி.

    முற்றும்

    Share
  • சுதந்திரம்

    நிர்மலா ராகவன்

    “மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!”

    கணவன் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால்.  `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!”என்றாள், தழுதழுத்த குரலில்.

    பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, உடன் நடக்கும் பிள்ளையை நினைக்கும்போதே சொல்லவொணாவருத்தம் எழுந்தது அத்தாய்க்குள். அவள் அருகில் இல்லாவிட்டால், எட்டு மாதக் குழந்தைபோல் தவழுவான்.

    ஏதோ நினைப்பில் அவள் முகம் மலர்ந்தது. “அவன் நீஞ்சறப்போ நீங்க பாக்கணுமே!  தண்ணிக்குள்ளே போய் குட்டிக்கரணம் போட்டு..! என்று ஆரம்பித்தவள்,கொஞ்ச நேரம் அந்த இன்ப நினைவில் ஒன்றிப்போனாள். “அவன் தலையை மறுபடியும் மேலே பாக்கறபோதுதான் எனக்கு மூச்சு வரும்!”

    “அதான் டாக்டர் சொல்லியிருக்காரில்ல? உயிருக்கு ஆபத்து வர்றமாதிரி எதுவும் செய்திட மாட்டான்னு!”

    “இருந்தாலும், எனக்குப் பயம்தான்! ” என்று ஒப்புக்கொண்டாள் அந்த பேதைத்தாய். “நீங்கதான் எங்ககூட வரவே மாட்டேங்கிறீங்களே!”

    “எனக்கு இந்த `தண்ணி` எல்லாம் பிடிக்காது!” சிரித்தார். “அதோட, அளவுக்கு அதிகமா க்ளோரின் போட்டிருப்பாங்க. கிருமிங்க சாகுதோ, என்னவோ, எனக்குமுடி கொட்டிடும்”.

    சாவித்திரிக்குத தெரியும் அவர் மறுப்பின் காரணம்.

    தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது தான் அனுபவிக்கும் சுகத்தை வெளிக்காட்ட வேறு வழி தெரியாது, மாதவன் அர்த்தமற்ற பிதற்றல்களை இரைந்துகத்தும்போது, அங்கிருக்கும் அனைவரும் வேடிக்கை பார்ப்பதும், அருவருப்புடன் ஒதுங்குவதும் அந்தப் பெரிய மனிதருக்கு தலைகுனிவு.

    எவ்வளவோ ஆசையாகப் பெற்ற மகன்!

    மூன்று மாதத்தில் தன் முகம் பார்த்து இவன் சிரிக்கவில்லை, எட்டு மாதத்தில் உட்காரவில்லையே என்றெல்லாம் சாவித்திக்கு  சந்தேகம் எழ, `எல்லாக்குழந்தையின் சுபாவமும் ஒரே மாதிரி இருக்குமா?` என்று சமாதானம் செய்தார் கணவர்.

    மூன்று வயதானபின், `பசித்தாலும் சொல்லத் தெரியவில்லை, நெருப்பு சுடும் என்றாலும் புரியவில்லை,` என்ற நிலை வர, அதற்கு மேலும் தவிர்க்கமுடியாது,  மருத்துவர்களை நாடிப் போனார்கள்.

    மாதவனுக்கு எட்டு வயதானபோது, `இவன் என்றுமே சிறு பிள்ளையாகத்தான் இருப்பான்!` என்று திட்டவட்டமாகப் புரிந்து போனது சாவித்திரிக்கு. நீரில்அமிழ்பவன், தத்தளிப்பை விடுத்து, தன் முடிவை ஏற்கச் சித்தமாவதுபோல் அமைதியானாள். எந்த தேவைக்கும் தன்னை எதிர்பார்க்கும் இந்த மகன் என்றுமேதனக்கு கைப்பிள்ளைதான் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.

    `ஆடிசம் குணமாக இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கல. அவனால் இயன்றவரை, எல்லாவற்றையும் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!` என்று டாக்டர்கள்தெரிவித்தபோது, மாதவன் பியானோ கற்க ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டாள்.

    `விரல்களில் வலுவே இல்லையே!` என்று அவள் உதட்டைப் பிதுக்க, பரிதவிப்புடன், டாக்டரிடம் ஆலோசனை கேட்டாள் சாவித்திரி.

    `உங்கள் மகனுடைய நல்ல காலம்தான் இப்படி பணத்தட்டுப்பாடு இல்லாத குடும்பத்தில் பிறந்திருக்கிறான். நீந்தவும் கற்றுக் கொடுக்கலாமே!`

    `எப்படி டாக்டர்? இவனுக்கோ பிடித்துக்கொள்ளாமல் நிற்கவே முடியவில்லை..!` தாய் பயந்தாள்.

    `தண்ணியில எடை குறைஞ்சமாதிரி இருக்குமில்லியா? அதனால, கால், கையெல்லாம் சீரா இணைஞ்சு, ஒடம்பும் சமநிலைக்கு வரும். நாளடைவிலேஇருதயமும் பலமாகிடும்`.

    நீச்சல் குளம் காலியாக இருந்தது. அனேகமாக, காலை எட்டு மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள்.  பூமத்திய ரேகைக்கு ஏழு டிகிரி வடக்கிலிருந்த மலேசியநாட்டில், நாள் முழுவதும் வெயில் கடுமையாகத் தாக்கும். எப்போது மழை பொழியும் என்றும் சொல்ல இயலாது.

    வெளிர்நிற சருமம் கொண்டவர்கள் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் — ஒரே மணி நேரம் — காய்ந்தால்கூட, சருமப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்றுஆங்கில தினசரிகளில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள்.

    மேல்நாடுகளில் வசித்தவர்கள் டிசம்பர் மாதத்து குளிரைத் தாங்கமுடியாது, இங்கு வந்து, கடற்கரைப் பகுதிகளில், அல்லது நீச்சல் குளங்களுக்கருகே நாற்காலிகளில் அமர்ந்திருப்பது  சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. கூடியவரை ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு, காலையும்தலைக்குமேல் தூக்கி, இண்டு, இடுக்கு எல்லாம் ஒரே சீராக பழுப்பு நிறமாக வேண்டும் என்ற அவாவுடன் அவர்கள் இருந்தார்கள், `கான்சர் போன்ற வியாதிஎல்லாம் பிறருக்குத்தான் வரும்,` என்ற மெத்தனத்துடன். மாதவனுக்கோ சூரியன் அளிக்கும் அந்த விட்டமின் D வேண்டியிருந்தது.

    வழக்கம்போல், “ஒழுங்கா அந்தப் பக்கம் போயிட்டு வரணும், என்ன?” என்று உபதேசித்தாள் சாவித்திரி, மகனுக்கு அந்த அறிவுரை விளங்காது என்றுதெரிந்திருந்தும்.

    அவனோ, இரு மீட்டருக்குமேல் இருந்த குளத்தின் அடிப்பாகத்திற்கே சென்றான். மேலெழுகையில், அனுமார்போல் கன்னம் உப்பியிருந்தது.

    “மாதவன்!” சாவித்திரியின் கண்டனக்குரல் தாமதமாகத்தான் வந்தது.

    தலையை மேலே சாய்த்து, வாய் நிறைய இருந்த நீரை உமிழ்ந்தான். அந்த எச்சில் நீர் அருகே நின்றிருந்த ஒருவரின்மேல் அருவியாக ஊற்றியது.

    பதைப்புடன் அவரை நோக்கியவள், “என் மகன்.. அவனுக்கு மூளை சரியில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவமானத்தில் இறுகிய முகத்துடன்வேண்டினாள்.

    “இதற்கு மன்னிப்பு எதற்கு? இன்னொரு முழுக்கு போட்டால் போகிறது!” என்று பெருந்தன்மையுடன் கூறியவரை நன்றியுடன் நோக்கினாள்.

    அவருக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். சற்றே நரைத்திருந்தாலும், அடர்ந்த முடி நெற்றியெல்லாம் படர்ந்திருந்தது.

    “உன் பேரு என்னப்பா?”

    தலையும், பார்வையும் இலக்கில்லாது, எங்கோ பதிந்திருக்க, இயந்திர கதியில் பதிலளித்தான் மாதவன்.

    “அங்கிள் முகத்தைப் பார்த்துச் சொல்லு, மாதவன்!” என்று திருத்தினாள் தாய்.

    அவன் அவர்புறம் திரும்பியபோது, மரியாதையாக, “என் பெயர் சேது!” என்று தெரிவித்தார், முறுவலுடன்.

    “சேது!” என்று திரும்பச் சொன்ன மகனை மீண்டும் கண்டித்தாள் தாய்: “அங்கிள் சேது!”

    “மீன் குட்டி மாதிரி தண்ணிக்குள்ளே என்னென்னமோ வித்தைகள் செய்யறானே!” சேதுவின் வியப்பு உண்மையாக இருந்தது.

    பெருமையுடன் புன்னகைத்தாள் சாவித்திரி மாதவனைப் பாராட்டி, இதுவரை எவரும், எதுவும் சொன்னதாக நினைவில்லை அவளுக்கு.

    “ஒவ்வொரு நாளும் இங்க கூட்டிட்டு வர்றப்போ, பயமா இருக்கு எனக்கு. அவனோ, எப்பப் பார்த்தாலும், `ஸ்விம்மிங் போகலாம்மா, ப்ளீஸ்!` என்கிறான்!”

    “எதுக்குப் பயப்படறீங்க? சொல்லப்போனா, மாதவனைப் பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு”.

    சாவித்திரி வியப்புடன் அவரை நோக்கினாள்.

    “நாப்பது வயசுக்குமேலதான் நீச்சல் பழகினேனா! இப்போ.. ஒழுங்கா.. இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம்தான் போகத் தெரியும். மீதி எல்லாம் பயம்!”

    அவர்கள் இருவரும் மனம் விட்டுச் சிரிக்கையில், காரணம் புரியாமலேயே தானும் சேர்ந்து சிரித்தான் மாதவன்.

    பூரிப்புடன் அவனது கன்னத்தைத் தடவினாள் தாய். இப்போது அக்கன்னம் முன்போல வழவழப்பாக இல்லை என்பதை உணரும்போதே, ஒரே சமயத்தில்பெருமிதமும், கவலையும் முளைத்தன.

    ஒளிவுமறைவில்லாது பேசும் இவரிடம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கையுடன், “ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?” என்றாள்,கெஞ்சலாக.

    பதிலாக, அவர் மிக லேசாக தலையை ஒருமுறை மேலும், கீழும் ஆட்டி, அவளுடைய கண்களையே உற்றுப் பார்க்க, சாவித்திரி தன் மனதைத் திறந்துகொட்டினாள் — தன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட மகனுக்குப் பல் விளக்க ஒவ்வொரு நாளும் தான் படும் பாடு (`அவனை நாற்காலியில உட்காரவைங்களேன்!`), யாராவது பேசும்போது அதை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, தவறாக அதை வெளியிட்டு மகன் தலைகுனிவை ஏற்படுத்துவது;அப்படித்தான் ஒருநாள், ஒரு பெண்மணி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவளுடைய மார்பகத்தைச் சுட்டி, `குண்டு!` என்று அறிவித்தது, அப்போதுவந்தவள் அடைந்த அதிர்ச்சி, கோபம் — இப்படியாக, தன்னை எப்போதோ பாதித்து இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். ஒருவரிடம் மனந்திறந்துபேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

    உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த சேது, “தான் ஆண் என்பது மாதவனுக்குத் தொ¢யுமா?” என்று வினவினார்.

    சாவித்திரி தலையசைத்தாள்.

    “பொதுவா, ஒரு பையனுக்கு நாலு வயசாறப்போ, `அம்மாவோட ஒடம்பு என்னோடதுமாதிரிஇல்லையே!` அப்படின்னு வியப்பா இருக்கும். `அம்மாஎன்கூடவே இருக்கணும்` என்கிறமாதிரி ஒரு கவர்ச்சி ஏற்படும்”.

    பிறகு, தான் படித்திருக்கும் பெருமையை இவளிடம் காட்டிக் கொள்கிறோமே என்று வெட்கியவராக, “ஆசிரியப் பயிற்சி எடுக்கும்போது, மனோதத்துவத்திலபடிச்சது,” என்று சமாளித்தார். “மாதவனுக்கு ஒடம்புதான் வளர்ந்திருக்கு. ஆனா, மனசு இன்னும் சின்னப்  பிள்ளையாத்தானே இருக்கு?” என்று நியாயம்கற்பித்தார்.

    “மத்தவங்களுக்கு இது புரியுதா? எங்களைத் தப்பா நினைக்கிறாங்க!” சாவித்திரியின் முகத்தில் ஆழ்ந்த வருத்தம்.

    “கெடக்கிறாங்க. நாம்ப எல்லாரையும், எப்பவும் திருப்திப்படுத்திக்கிட்டு இருக்க முடியாது!” கையை ஒருமுறை அலட்சியமாக வீசினார் சேது.

    சிறிது நேரம் யோசித்துவிட்டு, ” நீங்க அவன்கிட்ட,  `நீ அப்பா மாதிரி. அப்பாவும் ஒன்னைமாதிரி பையனாக இருந்தவர்தான். ஆனா, அம்மா ஒரு பெண்` –இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!”

    “அவனுக்குப் புரியுமா?” சாவித்திரியின் நியாயமான சந்தேகம்.

    “எந்த ஒண்ணையும் செய்கையால புரிய வைக்க முடியாதா, என்ன! அவசியமானா, ஒங்க ஜாக்கெட்டுமேல அவன் கையை வைங்க!” கூறப்பட்டதுநுண்ணியமானதாக இருந்தாலும், கூறிய விதத்தால் ஆபாசமாக ஒலிக்கவில்லை.

    “எந்த ஒண்ணும் நமக்குப் புரிஞ்சு போயிடறப்போ,  அதில வேண்டாத ஆர்வம் இருக்கிறதில்ல,” என்று அழுத்தமாக மேலும் சொன்னார்.

    சாவித்திரியின் நன்றி உணர்வையும் மீறி, பெருமூச்சு வந்தது. “நான் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” சொல்லும்போதே  சுயபச்சாதாபம்கிளர்ந்தது.

    சேது மென்மையாகப் புன்னகைத்தார். “எல்லாமே தெரிஞ்சவங்களா இருந்தா, நாம்ப ஏம்மா இன்னும் இந்த  ஒலகத்தில இருக்கோம்? சாமியா இல்லஆகியிருக்கணும்?”

    கருணையும், அமைதியும் ததும்பும் அவரது கண்களைச் சந்தித்தபோது குழப்பமோ, குற்ற உணர்வோ இல்லை அவளிடம்.

    நாளடைவில், சேது நீச்சல் குளத்தில் இருந்தால், தொலை தூரத்திலிருந்தே அவரைக் கண்டுவிட்டு, “அங்கிள் சேது!” என்று ஆனந்தப்படும் மாதவனுக்காக,அவன் கேட்பதற்கு முன்னாலேயே சாவித்திரி` தயாராவது பழக்கமாயிற்று. அவளுடைய புதிய ஆர்வம் கணவருடைய கண்களுக்குத் தப்பவில்லை. “எப்படாநீச்சல் குளத்துக்குப் போகலாம்னு, இவனைவிட நீதான் அதிகம் துடிக்கிறமாதிரி இல்ல இருக்கு!” என்று கேலி செய்தார்.

    அவள் எதுவும் சொல்லுமுன், “அங்கிள் சேது!” என்றான் மாதவன், அசந்தர்ப்பமாக.

    தம்புராவின் தந்தி அறுந்ததுபோல, இசைவு மறைந்த சூழ்நிலை எழுந்தது அங்கு.

    சட்டென முகத்தில் மாறுதல் தெரிய, “யாரது?” என்ற கேள்வி பிறந்தது.

    கூடியவரை இயல்பாக இருக்க முயன்று, “எப்பவாவது அங்கே பார்ப்போம். மாதவன்கிட்டே அன்பாப் பேசுவார்,” என்றாள்.

    “என்ன உத்தியோகம்?” மிரட்டலாக வந்தது அடுத்த கேள்வி.

    சாவித்திரியின் ஸ்ருதி இறங்கியது. “ஸ்கூல் டீச்சர்னு சொன்ன ஞாபகம்!”

    கை, கால், முதுகு எல்லாம் தெரிய, மானம் காக்கும் அத்தியாவசியமான உறுப்புகள் மட்டும் மறைக்கப்பட்டால் போதும் என்னும் நோக்கத்துடன்தைக்கப்பட்டிருந்த உடையில் மனைவி நீச்சல் குளத்தில் இருக்க, அவளருகே ஓரிரு சாண் அகல உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு ஆண்மகன்!

    எப்படிப் பேசினால் பெண்களைக் கவரலாம் என்பதைக் கலையாகக் கற்றிருப்பவன் அவன் என்பதில் அவருக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

    பெற்ற குழந்தையைப் புகழ்ந்து பேசினால், அவள் எவ்வளவு கடின நெஞ்சுடையவளாக இருந்தாலும் இளகிவிடுவாளே! அப்படி இருக்கையில், மகனைநினைக்கையில், வேதனை மட்டுமே அனுபவித்திருக்கும் சாவித்திரி எம்மாத்திரம்!

    மாதவனிடம் அன்பாகப் பேசுவானாமே!

    தான் பெற்ற மகனுடன் கழிக்க சிறிது அவகாசத்தை ஒதுக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறாளோ!

    இப்போது தாய், தந்தை இருவருமே தொடர, நீச்சலுக்குப் போனான் மாதவன். அவனுடைய கபடில்லா மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட முடியவில்லைசாவித்திரியால்.

    கணவருக்கு அப்படியொன்றும் மகன்மீது புதிதாகக் கரிசனம் பிறந்துவிடவில்லை, தன்னைக் கண்காணிக்கவே உடன் வருகிறார் என்று புரிய, வேதனையாகஇருந்தது.  மரியாதை கருதி, சேதுவை கணவருக்கு அறிமுகப்படுத்தினாள், வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.

    தனது சொந்த கம்பெனியில் வந்து குவியும் பணத்தை கணவர் பிரகடனப்படுத்திக்கொண்டபோது, சேதுவுடன் அவளும் கூசிப்போனாள்.

    `நான் யார் தெரியுமா? நீ மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் ஈட்டிவிடுகிறேன்! என்னிடமா மோதுகிறாய்?` என்று மறைமுகமாகஎச்சரிக்கை விடுத்தது தெளிவாகத் தெரிந்தது.

    சில வாரங்கள் கழிந்தன.

    இனிமேலும் தான் மனைவிகூட வருவது அனாவசியம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

    கணவர் தன் முழு கவனத்தையும் பழையபடி வேலை மற்றும் `பார்` நண்பர்களிடம் திருப்ப, சாவித்திரியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

    இப்போது மட்டும் என்ன, அவளிடம் புது நம்பிக்கையா?

    மகனுடைய வளர்ச்சியில், மகிழ்வில் அக்கறையைவிட மனைவியைக் கண்காணிக்க வேண்டியதுதானே அவசியமாகப் போய்விட்டது அவருக்கு!

    “அங்கிள் சேது!” என்று மாதவன் ஆர்ப்பரித்தபோது, தலைநிமிர்ந்த சாவித்திரியின்  கண்கள் சேதுவின் தீர்க்கமான நயனங்களில் பதிந்தன.

    அதில் அவள் கண்டது இரக்கமா, வேதனையா? அதை அலசும் மனநிலையில் இருக்கவில்லை அவள்.

    வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டபோது, ஆத்திரம் பொங்கியது, இலக்கில்லாமல்.

    ஆண்-பெண் நட்பு எவ்வளவுதான் மதிப்புக்குட்பட்டதாக இருந்தாலும், அதைக் கேவலமானதாகக் கருதுபவர்கள் இருக்கும்வரையில், எவருக்குமே பூரணசுதந்திரம் இல்லை.

    நம் சமூகம் ஏன் இப்படி தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறது?

    குளத்தின் அடியில் போய், வாய் நிறையத் தண்ணீருடன் மூச்சுத் திணற, தலையை வெளியே நீட்டிய மகனுடைய முதுகில் ஓங்கி ஓர் அறை விட்டாள்சாவித்திரி.

    அதைக் காணாதமாதிரி, வேறு பக்கம் போனார் சேது.

    Share
  • உன்னையறிந்தால் …….. (49)

    நிர்மலா ராகவன்

    நிறைய நண்பர்களா!

    உனையறிந்தால்
    கேள்வி: ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பது நல்லதுதானே?

    விளக்கம்: எண்ணிக்கையைவிட, அந்த நண்பர்கள் எவ்வளவு தூரம் நமக்கு ஏற்றவர்கள் என்பதுதான் முக்கியம்.

    நாம் பலருக்கும் உதவி புரிந்துகொண்டே இருந்தால், நிறைய நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால், எல்லாரும் நமக்கு நன்மைதான் புரிவார்களா? யோசிப்போம்.

    நண்பர்களுக்குள் நேர்மையும், நம்பிக்கையும் அவசியம். எதிரே இருப்பவர் தன்னைப்பற்றி என்ன நினைத்துவிடுவாரோ என்ற கலக்கம் இல்லாது, மனதின் ஆழத்திலிருப்பதை ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தால், அவர் நல்ல நண்பர். அவர் நம் வெற்றியில் பெருமை கொண்டு, தாமே எதையோ சாதித்துவிட்டதைப் போன்று மகிழ்பவர். நாம் மனதைவிட்டு ஏதாவது சொல்லும்போது அநாவசியமாக இடைமறிக்காது, கவனமாகக் கேட்பவர். நம்மிடம் இருக்கும் பலவீனங்களைப் பெரிதுபடுத்தாது, அவைகளுடன் நம்மை ஏற்பவர்.

    நம்மிடத்தில் இருக்கும் குணங்களே இன்னொருவருக்கும் இருப்பதைக் கண்டபின் ஏற்படுவதே உண்மையான நட்பு. இரு தரப்பினரும் ஒரே துறையைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

    பலரும் தாம் கவனிக்கப்பட ஒரு நல்ல வாய்ப்பு நட்பின்மூலம்தான் என்று கருதும் காரியவாதிகளாக இருக்கிறார்கள்.

    ஒருவர் பணமோ, புகழோ அடைந்துவிட்டால் அவரைப் புகழ்ந்து பேசியும், பரிசுப்பொருட்கள் அளித்தும், அடிக்கடி தொடர்புகொண்டும் அவர்களை நெருங்கிக் கொள்வார்கள். அதன்பின், `இன்னார் என்னுடைய நண்பர்!’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் பெருமையாகப் பேசுபவார்கள்.
    போனால் போகிறது என்று இதையெல்லாம் அலட்சியம் செய்துவிடலாம். ஆனால், கொஞ்சம் விட்டுக்கொடுத்தால், அவர்கள் விருப்பத்திற்கேற்றபடி நம்மை வளைக்க முயலுவார்கள். சுருங்கச் சொன்னால், இத்தகையவர் முதலில் நம் பின்னாலேயே வந்து, பின்னர் அவர்களை நாம் பின்தொடர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

    மனிதன் ஒரு தீவில்லை!’ (MAN IS NOT AN ISLAND) என்று சொல்வதுண்டு. குழந்தைப்பருவத்திலிருந்தே நண்பர்களை நாடும் குணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால், நமக்கு உண்மையானவர்களை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றுதான் புரிவதில்லை.

    ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், `இன்றும் என் சிநேகிதன் என்னுடன் சிநேகமாக இருப்பானோ, என்னவோ!’ (Will he ‘friend’ me today?) என்று பள்ளிக்கூடத்திற்குப் புறப்படுமுன் தாயிடம் சொல்லிக் கவலைப்படுவர்! தமக்குத் தெரிந்த வகையில், மிட்டாய், ரப்பர், சிறிய விளையாட்டுச் சாமான்கள் என்று பரிசுகள் கொடுத்து, பிறரைத் தம் வசப்படுத்த முயற்சிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் முக்கியம். இருந்தாலும், உடன் படிப்பவர்களைக் கண்டு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதை அவர்களால் தவிர்க்க இயலாது.

    கதை: முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த கண்ணனிடம் அவனுடன் படிக்கும் மாணவிகள் பாடங்களில் சந்தேகம் கேட்டு வருவது வழக்கம். அவன் அவர்களை இழிவாக நடத்தவில்லை என்பது காரணமாக இருந்திருக்கலாம்.

    அவனுடைய நண்பர்களுக்கோ அவன் பலருக்கும் பிடித்தவனாக ஆகிவிட்டானே என்ற வயிற்றெரிச்சல். அதை வேறு விதமாகக் காட்டிக்கொண்டார்கள். `உனக்கு GIRL FRIEND இருக்கிறாள், டோய்!’ என்று கேலி செய்ய, அவமானம் தாங்காது, கண்ணனுக்கு ஒரே அழுகை! அந்த வயதில் இது பெருமைக்குரிய சமாசாரம் இல்லை.

    சிறு பெண்களும் இப்படித்தான். மலேசியாவில் காலை ஏழரை மணிக்கே பள்ளிக்கூடம் ஆரம்பமாகிவிடும் என்ற நிலையில், எல்லாப் பெண்களுக்குமே அவர்கள் விருப்பை அலட்சியம் செய்து, தலைமயிரைக் குட்டையாகத்தான் வெட்டி வைத்திருப்பார்கள் தாய்மார்கள்.

    இப்பெண்கள் நீண்ட பின்னலைக் கொண்ட ஒரு சிறுமியிடம், `உனக்குத் தலையில் பேன் இருப்பதால்தான் முடி இப்படி வளருகிறது!’ என்று கேலி செய்வதன்மூலம் அந்த வருத்தத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

    `என் ஃப்ரெண்ட்ஸ் கேலி செய்கிறார்கள்!’ என்று எதற்காவது ஒரு குழந்தை தாயிடம் முறையிடும்போது, `இவர்கள் உன் நண்பர்களே இல்லை!’ என்று அடித்துச் சொல்லலாம். அச்சமயத்தில் குழந்தையிடம் இருக்கும் சிறப்பை விளக்குவது அவனுக்குத் தெம்பை ஊட்டுவது.
    எந்த எதிர்பார்ப்பும் இல்லாது பழகுவதும், உதவி செய்வதும்தான் உண்மையான நட்பு.

    கதை: என் மகன் அகால மரணம் அடைந்ததும், என் மனக்குமுறல்களை அனுதினமும் கேட்க என்னுடன் பணிபுரிந்த ஒரு சீன மாது நேரம் ஒதுக்கினாள். பேசும்போது நான் அழுதால் அவளுக்கும் கண்ணீர் வந்தது. நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டவளிடம் எனக்கு ஆழமான நட்பு ஏற்பட்டது.

    இப்படி சில மாதங்கள் கழிந்தபின், என்னை அவளுடைய மதத்திற்கு மாற்ற பெரும் முயற்சி எடுத்துக்கொண்டாள். `என் மதம் மாறினால், என் மகன் திரும்பக் கிடைத்துவிடுவானா?’ என்று நான் மறுத்துவிட, அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்குப்பின் நான் பேச முயன்றால், சிடுசிடுப்பாள். என் மனம் அமைதியடைய அவள் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால், அந்த நட்பிற்கு இப்படி ஒரு விலை நிர்ணயிக்க வேண்டுமா?

    அதன்பின் அவள் மாற்றலாகிப் போய்விட்டாள். என்றாவது சந்தித்துக்கொண்டபோது, பழைய நெருக்கமோ, அந்த நட்பில் விளைந்த மகிழ்வோ இருக்கவில்லை என்பது வருத்தமான சமாசாரம். அவளைப் பொறுத்தவரையில், நான் அவளுக்குத் தோல்வியைத் தந்தவள்.

    உண்மையான நண்பர்கள் நிழலைப்போல நம்மைத் தொடர வேண்டுவதில்லை. என்றாவது சந்தித்துக்கொண்டாலும், முகமன் இல்லாமல் உரையாடலை ஆரம்பிக்க முடியும். நாம் சொல்லவந்ததைப் புரிந்துகொள்வார் நண்பர். அவ்வப்போது ஏற்படும் மௌனத்திலும் ஓர் அலாதி அமைதி நிலவும்.

    நல்ல நண்பன் நம்மிடம் மறைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர வேண்டாமா! அதைவிட்டு, `நான் உன் நண்பன் என்றால், நான் சொல்வதை நீ அப்படியே ஏற்காமல் மறுத்துப் பேசுவாயா?’ என்று ஆரம்பித்தால், BLACKMAIL செய்கிறார் என்று அர்த்தம். இந்த வசனத்தால்தான் பல இளவயதினர் மது அருந்துதல், போதைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

    வேறு சிலர், `இவன் நல்லவன்தான். சரியான சகவாசம் இல்லாததால் கெட்டுப்போய்விட்டான். நான் திருத்தி விடுவேன்!’ என்று நம்புகிறார்கள். பிறகென்ன! பன்றியுடன் கன்றும் கெட்ட கதைதான். நம்மால் பிறரை நல்வழிப்படுத்துவதைவிட, அவர்களால் நாம் கெடுவது எளிது. எல்லாரும் மகாத்மா ஆகிவிட முடியாது. இதற்குத்தான், `துஷ்டரைக் கண்டால் தூர விலகு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    பொதுவாக, மனிதன் மாறுதலை விரும்புவதில்லை. (THE ONLY ONE WHO LIKES A CHANGE IS A WET BABY!). ஏனெனில், புதிய இடத்தில் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களோ என்ற கலக்கம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு — அது பள்ளியோ, அலுவலகமோ — மாறிப்போகும் நிலை வரும்போது, நம்மை அதிகமாக வெளிக்காட்டாது இருப்பது அவசியம். முதல் சில நாட்கள் குறைந்த அளவில் பேசுவது நல்லது. பிறர் நம்மை எடைபோடக் காத்திருப்பார்கள். அப்போது நம்மை வீழ்த்திவிடுவது எளிது. வலுவில் வந்து நட்பு கொள்பவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

    உடன் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல. புதிதாக ஒரு அலுவலகத்தில் பதவியேற்ற மேலதிகாரிகூடத் தன் கீழ் உத்தியோகம் பார்க்கும் ஒருவருடன் மிகுந்த தோழமையுடன் பழக முயற்சிப்பார். அதற்கும் ஏதாவது உட்காரணம் இருக்கும். அந்த அலுவலகத்தில் இருக்கும் பிறரைப்பற்றி அறிய இதைவிட எளிய சந்தர்ப்பம் கிடைக்குமா, என்ன! ஆனால், சற்று காலை ஊன்றிக்கொண்டதும், நண்பராக இருந்தவர் மாறிப்போவார். அதிகாரத்தைச் செலுத்தி, நம் மனதை நோகடிப்பார்.

    மேலே கூறி இருப்பதெல்லாம் கணவன் மனைவியருக்கும் பொருந்தும். ஒருவர் கை மட்டுமே ஓங்கி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தம்பதியருக்குள் தோழமையும், அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் எப்படிக் கிடைக்கும்? (ஆனால், எல்லா ரகசியங்களையும் பகிர்ந்துகொள்வதால் பல தம்பதியருக்குள் விரிசல் விழுந்திருக்கிறது. பத்திரம்!)

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் ……… (48)

    நிர்மலா ராகவன்

    பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

    உனையறிந்தால்121-1
    கேள்வி: நான், என் கணவர் இருவரும் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். எங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் பணிப்பெண் இருக்கிறாள். குழந்தை முன்போல் சிரித்து விளையாடுவதில்லை. என்ன செய்வது?

    விளக்கம்: `நம் குழந்தையை யார் பார்த்துக்கொண்டாலும் சரிதான், நமக்கு வேலை மிச்சம்!’ என்ற மனப்போக்கு பெற்றோருக்குக் கூடாது.

    கதை 1: அய்னுல் ஒரு பணக்கார வீட்டுப் பணிப்பெண். அவளை நம்பி வீட்டு நிர்வாகத்தையும், குழந்தை ரஃபீடாவையும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, பெற்றோர் நிச்சிந்தையாக இருந்தது அய்னுலுக்குச் சௌகரியமாகப் போயிற்று.

    அக்குடும்பத்தினர் கவனியாமல் இருந்ததால், வேலைக்காரப்பெண் தானே ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதைப்போல நடக்கத் தொடங்கினாள்.

    தினமும் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த பூங்காவில் குழந்தையை அவள் தூக்கி வருவாள். ஒரு மாலை நேரத்தில், அந்த ஒருவயதுக் குழந்தை தளர்நடையுடன் எதிரில் வந்துகொண்டிருந்த என்மேல் மோத, அதன் மர்ம பாகத்தில் அடிக்கத் தொடங்கினாள். நான் தடுத்தபோது, `உங்களுக்குத் தெரியாது. இவள் ரொம்ப நாட்டி!’ என்று பதில் வந்தது.

    சிறு குழந்தைகள் யார் எது செய்தாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். பிறரிடம் சொல்லவும் தோன்றாது.

    பெற்றோர் தன்னைவிட்டு, வேலைக்குப் போகும் ஒவ்வொரு காலையும் சிறுமி பயம் பெருக, கதறி அழுவாள். `என்னமோ, இவளை நாம் புறக்கணிப்பதுபோல்தான் நாடகமாடுகிறாள்!’ என்று தமக்குள் பேசிச் சிரித்தபடி வெளியே போய்விடுவார்கள்.

    ரஃபீடாவுக்குப் பன்னிரண்டு வயதாகியது. வீட்டில் யாருமில்லாதபோது பணிப்பெண்ணின் வதை கடுமையாகிக்கொண்டே வந்தது. பிறர் இருக்கையில், தன் பொறுப்பிலிருந்த பெண்ணிடம் மிக இனிமையாகப் பேசுவாள்.

    ஒரு நாள், `இன்னும் கொஞ்ச நேரம் விளையாடப்போகிறேன்!’ என்று வீடு திரும்ப மறுத்த பெண்ணை நையப்புடைத்து, வெறிபிடித்தவளாக அவள் முடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள் அந்த பணிப்பெண், அய்னுல்.

    சற்று தொலைவில் அமர்ந்திருந்த நான், `அவளை விடு!’ என்று கத்தியதை அவள் லட்சியம் செய்யவேயில்லை.

    இந்தக் கொடுமையைப் பார்த்தான் விளையாட வந்திருந்த ஒரு நான்கு வயதுப் பையன். தன்னையே அந்தச் சிறுமியின் இடத்தில் வைத்தவனாக அவன் பெரிதாக அழத் தொடங்க, என்னால் அதற்குமேலும் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களருகே போய், அய்னுலின் கையை இறுகப் பற்றி, மிரட்டினேன். ஒருவழியாக அவள் அடங்கினாள்.

    சற்று பொறுத்து, அவர்கள் வீட்டு வாசலிலேயே அவள் தாயை அழைத்து, “அய்னுல் உங்கள் மகளை ரொம்பக் கொடுமை செய்கிறாள்!” என்று ரகசியக் குரலில் விவரிக்க, தாய்க்கு ஒரே அதிர்ச்சி.

    அடுத்த முறை, ரஃபீடாவுடன் பெற்றோர் இருவரும் வந்திருந்தனர். “உங்கள் மெய்ட் எங்கே?” என்று யதார்த்தமாக விசாரித்தேன்.

    “போய்விட்டாள்!” என்று தந்தை வெறுப்புடன் கூறினார். நான் விழித்ததைப் பார்த்து, “அவளைத் திருப்பி அனுப்பிவிட்டோம்!” என்றார். முகம் அவமானத்தில் இறுகியிருந்தது. `எப்படியோ மகள் வளர்ந்தால் சரி!’ என்ற நினைப்புடன், பணிப்பெண்ணை அவள் போக்கில் விட்டது யார் தப்பு என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட அவமானம் அது.

    இப்படிப் பணிப்பெண்களால் வதைபடும் சிறுமிகள் அளவற்ற பயத்துக்கு ஆளாகிறார்கள். எதற்கும் சண்டை, இல்லாவிட்டால் ஓட்டம்.

    தன்னைவிடச் சிறியவர்களுடன் விளையாடும்போது, ரஃபீடாவின் அதிகாரமான போக்கை பிற குழந்தைகளால் பொறுக்க முடியவில்லை. அதனால் யாரும் அவளுடன் விளையாட வராததால், தனித்துப் போனாள். பரமசாதுவாக, உடலைக் குறுக்கிக்கொண்டு, இன்னொரு பணிப்பெண்ணுடன் வர ஆரம்பித்தவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சிறுவயதிலேயே ஏதேதோ அனுபவித்ததால், பிறரை நம்பி, தொடர்பு கொள்வதே இவளைப்போன்ற குழந்தைகளுக்கு முடியாத காரியமாகிப் போகிறது.

    `யார் எப்படிப் போனால் என்ன, நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் சரி!’ என்ற விட்டேற்றியான போக்கு பலருக்கும் இருப்பதால்தான் பல குடும்பங்களில் எல்லாவிதமான அநியாயங்களும் தொடர்ந்து நடக்கின்றன.

    இதை உணர்ந்து, சிங்கப்பூரில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் ரகசிய காமரா வைத்துக் கண்காணித்தார்கள். அவர்கள் குழந்தையை பணிப்பெண் துன்புறுத்துவது தெரியவர, சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தார்கள்.

    கதை 2: என் மகளைச் சிறுவயதில் ஒரு பணிப்பெண்ணின் கண்காணிப்பில் விட்டுவிட்டு, வேலைக்குப் போவேன். நட்புடன் பழகும் பக்கத்து வீட்டுக்காரி, `நீ இல்லாதபோது, குழந்தை அழுதபடியே இருக்கிறது!’ என்றபோது, விழித்துக்கொண்டேன்.

    எங்கள் வீட்டில் வேலைபார்த்த இன்னொரு மாது, என் பெண்களை உட்கார வைத்து, முகத்திற்கு பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, பொட்டிட்டு என்று விரும்பிச் செய்வாள். அவர்களோ, அவள் அந்த அலங்காரப் பொருட்களை எடுத்தாலே வேறுபுறம் தலைதெறிக்க ஓடுவார்கள்.

    என்னிடம் புகார் செய்தபோது, “வேண்டாம்னா விடுங்களேன்!” என்று நான் அலுத்துக்கொண்டேன். `நீங்க என்ன, பிள்ளைங்களை இப்படி வளக்கறீங்க!’ என்ற அவள் கண்டனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சிறு குழந்தைகளுக்குப் பிடித்தமானது விளையாட்டு ஒன்றுதான். நமக்குப் பிடிக்கிறதே என்று எதையாவது செய்யச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்துவானேன்! குழந்தைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம்.

    ஏதாவது புதிய விளையாட்டுச் சாமானையோ, உடையையோ எடுத்துக்கொண்டு, தன்னைப் பார்த்துக்கொள்ளும் `அக்கா,’ அல்லது `ஆன்ட்டி’யிடம் மகிழ்ச்சியுடன் அதைக் காட்ட எடுத்து ஓடினால், அந்த பணிப்பெண் குழந்தையை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்கிறாள் என்று புரிந்துகொள்ளலாம்.

    கதை 3: மரியா என்ற பணிப்பெண் அசோக் பிறந்ததிலிருந்து வீட்டோடு இருந்து கவனித்துக்கொள்கிறாள். `அக்கா’ என்று அவள்மேல் பாசமாக இருந்தான்.

    அவள் பிற வேலையில் ஏதாவது தவறு செய்துவிட்டால், எஜமானி கடிந்துகொண்டபோது, நான்கு வயதான பிள்ளை, `அக்கா அசடா!’ என்று முதலில் அயர்ந்துபோனான். ஓரிரு வருடங்களில், தானும் அதிகாரமாக நடக்கத் தொடங்கினான்.

    `நான் வளர்த்த பிள்ளை என்னையே மட்டமாக நினைக்கிறதே!’ என்று வேதனயாக இருந்தாலும், அவனுடைய சொற்கணையைத் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு.

    “`கத்தாமல் சொல்லேன்!’ என்று கெஞ்சுகிறேன். அசோக் கேட்பதில்லை!” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் மரியா.

    இது எஜமானி செய்த தவறு. குழந்தையைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்பவளை மரியாதையாக நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்திருந்தாலும், அவளைத் தனியே அழைத்து கண்டித்திருக்கலாம். அதைவிட்டு, பிள்ளை எதிரிலேயே அவளைத் தரக்குறைவாக நடத்தியதால் அவனுக்கு அவளிடம் மரியாதை போயிற்று.

    போதாத குறைக்கு, தாயிடமும் நெருக்கமான உறவு கிடையாது. ஏனெனில், அவனை வளர்ப்பதில் அவள் அதிக கவனம் செலுத்தவில்லையே!

    இம்மாதிரி வளரும் பையன்கள் புத்திசாலிகளாக, ஆனால் கர்வமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். சற்றுப் பெரியவர்களானதும், அம்மா, ஆசிரியை யாருக்கும் அடங்குவது கிடையாது. “BROUGHT UP BY SERVANTS,” என்று அவர்களைக் குறிப்பிடுவோம். அவர்களுக்கு வயதில் மூத்தவர்களை மதிக்கத் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

    தன்னை வளர்த்தவர்களிடம் பாசமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், மரியாதையாகவாவது நடத்த வேண்டாமா!

    தொடருவோம்

    Share
  • கனவு நனவானபோது

    — நிர்மலா ராகவன்.

    தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி.

    புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை நாட வேண்டி இருந்ததில்லையாம். அப்போது இருந்த ஆண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்களோ, என்னவோ!

    ஆனால், `பெண்’ என்றாலே ஒரு மாற்றுக் குறைவாக எடைபோடும் அப்பாவின் மெத்தனத்தை, ஆணான தான் எது சொன்னாலும், செய்தாலும் அதை எல்லாப் பெண்களும் ஏற்க வேண்டும் என்று, ஒரு வரையறையே இல்லாது, உணர்ச்சிப்பூர்வமாக மனைவி மக்களைக் கொடுமைப்படுத்தியதை அவளால் ஏற்கத்தான் முடியவில்லை. அடித்தால்தான் வதையா!

    அதற்காக ஒரேயடியாக வெறுப்பை வளர்த்துக்கொண்டு, `கல்யாணமே வேண்டாம்’ என்று பிடிவாதம் பிடிக்கத் தோன்றவில்லை அவளுக்கு. தமிழ்த் திரைப்படங்களும், `கோடிக்கணக்கில் விற்கிறதே, இந்த ஆங்கில நவீனங்களில் அப்படி என்னதான் இருக்கிறது!’ என்று படித்ததும் அவள் மனதில் கட்டுக்கடங்காத இளமைக் கனவுகளை வளர்த்திருந்தன.

    அவளை மணப்பவன் அவள் கிழித்த கோட்டைத் தாண்டாத `பத்தினி விரதனாக’ இருக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். தான் அவனுக்குப் பணிவதற்குப் பதிலாக, தனது ஆற்றலைப் பார்த்து அவன் அடங்கி ஒடுங்க வேண்டும். அப்போதுதான் அவனால் தன்னைக் கீழே தள்ள முடியாது. `நீ படிக்காத முட்டாள்! ஒனக்கு என்ன தெரியும்? சும்மா இரு!’ என்று அப்பா சமயம் கிடைத்தபோதெல்லாம் மட்டம் தட்டுவதைப்போல் அவளுக்கும் நேர்ந்துவிடக்கூடாது.

    சினிமா நடிகர்களை மனதால் வரித்து, அவர்களைப்பற்றிப் பேசிச் சிரித்த, தன் வயதுப் பெண்களின் போக்கு அவளுக்கு எரிச்சலைத்தான் உண்டுபண்ணியது. இம்மாதிரியான அர்த்தமற்ற கனவுகள் கண்டு, அதிலேயே நிறைவு பெற்று, பின் உப்புசப்பற்ற மணவாழ்க்கையில் அமுங்கிவிடுவது மடத்தனம். முன்னெச்சரிக்கையுடன், மனதில் ஒரு ஆடவனை உருவாக்கிக் கொண்டாள். அவன் முகம்? அது அவ்வளவு முக்கியமாகப் படவில்லை. அனுதினமும் அவனுக்குள் சில குணங்களைச் செலுத்தினாள். அவன் பிறரது மதிப்பைப் பெற்றவனாக இருப்பான். இன்னொருவரைச் செயலாலோ, வார்த்தையாலோ காயப்படுத்துவதைவிட தானே துன்புறுவது மேல் என்று நினைக்கும் கண்ணியவானாக இருப்பான்.

    சற்று யோசித்து, விளையாட்டு வீரன் வேண்டாம், என்றைக்காவது ஒரு நாள் அவனுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் போட்டி மனப்பான்மை, எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி, மேலே கிளம்பிவிடும் என்று நிச்சயித்தாள். இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில், கலாரசனை உள்ளவன்தான் உணர்ச்சி மிக்கவனாக இருப்பான், வலுவான தேகம் கொண்டவனைவிட இவனை வீழ்த்துவது எளிது என்று தோன்றியது. இரண்டு, மூன்று வருடங்கள் இதே ரீதியில் முகமற்ற தன் வருங்காலக் கணவனுடன் சிறிது சிறிதாகப் பரிச்சயம் செய்து கொண்டவளுக்கு, அதன்பின் அவனை நினைக்கும்போதே உள்ளுக்குள் ஏதோ கிளர்ந்தெழுந்தது.

    வீட்டில் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பா தேடிவரும் எவனையாவது மணக்க நேரிடுமோ என்ற அச்சம் பிறந்தது. அப்பா கொண்டு வரும் மாப்பிள்ளையும் அவரைப்போல்தானே இருப்பான்! `எதற்கோ பயந்து, எதிலோ மாட்டிக் கொண்டாற்போல்’ என்பார்களே! அப்படி நடக்க விடக்கூடாது. கல்யாணம் என்ற பிரச்சினையைத் தள்ளிப்போட அதற்கு ஒரே வழிதான் தென்பட்டது. பட்டப்படிப்பு முடியும் தறுவாயில்தான் அது நிகழ்ந்தது.

    `இதே கல்லூரியில் இருந்திருக்கிறார்! அது எப்படி இத்தனை நாளாகக் கவனிக்காமல் போனேன்!’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். அங்கு விரிவுரையாளராக இருந்த சம்பத்தைப் பொறுத்தவரை, `தானுண்டு, தன் வேலையுண்டு’ என்றிருந்தான். அங்கேயே ஹாஸ்டலில் தங்கியிருந்து, வேலை முடிந்ததும் டென்னிஸ் விளையாடி, இரவுப் பொழுதில் புத்தகங்களைப் படிப்பதில் கழித்தான். அவனைத் தற்செயலாகப் பார்த்த வைதேகிக்குப் பொறி தட்டியது. அவள் மனதுள் பல காலமாகப் பதிந்திருந்த உருவம் முழுமை பெற்றது. அடுத்த வேலை, எதிரிலிருந்தவனைப் பக்கத்தில் நிலைநிறுத்திக் கொள்வதுதான்.

    அவனை முதன்முதலில் கண்டபோது, இதுவரை அவளை ஆட்டுவித்த வீறாப்பு, ஆண்களை மட்டம் தட்டவேண்டும் என்ற வெறி எல்லாமே மறைய, மனம் பரபரத்தது. இவ்வளவு பண்பான, புத்திசாலியான ஒருவனுடன் காலமெல்லாம் இணைந்து, அவன் மிருதுவாகப் பேசுவதை, தன்னைக் கனிவுடன் பார்ப்பதை, அனுபவிப்பதைவிட வேறென்ன இன்பம் இருக்க முடியும் என்று தோன்றிப்போயிற்று. தன்னையும் அறியாமல், அவனுக்கு வலை விரித்தாள் வைதேகி. முதலில் வகுப்புக்கு வெளியே சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள். அவன் கேளாமலேயே, சிறுகச் சிறுக, தன்னைப்பற்றி, தன் குடும்பத்தின் அவலத்தைப்பற்றி, சொன்னாள்.

    `என்னிடம் ஏன் இந்தப் பெண் இப்படி மனந்திறந்து பேசுகிறாள்?’ என்று குழம்பினாலும், சம்பத் நெகிழ்ந்து போனான். ஓர் அழகான, புத்திசாலிப் பெண் தன் ஆதரவை நாடுகிறாள், தன்னை மதிப்பும் மெச்சுதலுமாகப் பார்க்கிறாள் என்றால், எந்த ஆடவனுக்குத்தான் உச்சி குளிர்ந்துபோகாது? தன்னை வெகுவாகப் பாதித்தவற்றை வைதேகி சொல்லச் சொல்ல, அவளுக்கு ஆறுதலாக ஏதாவது கூற எண்ணியவனாய் தன்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்துக் கொண்டவனின் உடலிலும் உள்ளத்திலும் ஏதேதோ மாறுதல்கள். `இவள் பட்ட பாடெல்லாம் போதும். இனியாவது நான் இவளைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தபோது, சம்பத் திடுக்கிட்டான்.

    தன் கீழ் பயிலும் மாணவியை மணப்பதா! பெயர் கெட்டுப் போகாது? அச்சத்தை மீறியது ஆண்மை. அவளைத் தூரத்தில் பார்த்தபோதே ஒரு படபடப்பு, அவள் குரலைக் கேட்கவும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பார்க்காதபோதோ எதையோ இழந்துவிட்டதைப் போன்ற ஏக்கம். `இதற்கு எப்படி ஒரு முடிவு கட்டுவது?’ என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அவளைப்பற்றியே நினைத்துப் பார்க்கக்கூடாது என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான். ஆனால், வேறு எந்த விஷயத்துக்குமே அவன் மனதில் இடமிருக்கவில்லை. அந்தந்த வேளைக்குப் போதை மருந்தை நாடி, அது கிட்டாவிட்டால் அல்லலுறும் மூளை, காதல் வசப்பட்டிருந்த சம்பத்தையும் அதேபோல் ஆட்டுவித்தது. படுத்தால், தூக்கம் `வரமாட்டேன்,’ என்று விலகிச் செல்ல, எண்ணப் பெருக்குக்கு ஈடு கொடுக்க முடியாது தவித்தான். காதல் நோயை வெல்ல ஒரு வழிதான் புலப்பட்டது.

    கணவனின் அன்பில் திளைக்கும்போது, `மணவாழ்க்கை’ என்பது இவ்வளவு குதூகலமாக இருக்குமா, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டும் ஏன் இப்படி அமையவில்லை என்ற குற்ற உணர்ச்சிகூட உண்டாகியது வைதேகிக்கு. அம்மா அழகியோ, அதிகம் படித்தவளோ இல்லை. அதுவே அப்பாவுக்குக் குறையாக இருந்திருக்கலாம். `என் மனைவியைவிட நான் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்க வேண்டும்!’ என்றுதான் எந்த ஆணும் ஆசைப்படுகிறான். ஆனால், அவளைவிடச் சிறப்பாக இருக்கும் இன்னொரு பெண்ணையும், அவள் கணவனையும் பார்த்தால் பொறாமை வருகிறது என்றெல்லாம் யோசித்தாள். `பாவம், அப்பா!’ என்று பரிதாபப்பட்டாள்.

    பழையதாகப்போன விளையாட்டுச் சாமானை தூரப் போட்டுவிட்டு, பெருமைப் பட்டுக்கொள்ளக்கூடிய புதியதொன்றில் மகிழ்ச்சி காணும் சிறுவனின் மனப்பக்குவத்துடன்தான் அப்பாவும் அழகும் இளமையுமான இன்னொருத்தியுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். `அப்பாவைப்போல என் சம்பத்தும் ஏமாற விடமாட்டேன்! அவர் என்னால் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். நான் நிறையப் படித்தால்தான் அது முடியும்!’ `கல்வி ரீதியிலாவது இருவரும் சமமாக இருக்கிறோமே!’ என்ற சம்பத்தின் நிம்மதி பொய்த்தது, வைதேகிக்கு முனைவர் படிப்புக்கான அழைப்பு வழங்கப்பட்டபோது.

    இப்போதைக்கு, பெரிய இடத்துப் பெண் என்ற கர்வம் இல்லாமல் பணிவாக இருக்கிறாள். மேற்படிப்பு அவளை மாற்றிவிட்டால்? பயம் பிடித்துக்கொண்டது அவனை. “எதுக்கும்மா இன்னும் படிப்பு? அதான் ரெண்டு பேருமே கைநிறைய சம்பாதிக்கிறோமே?” என்று நைச்சியமாகப் பேசி, அவள் மனதைக் கலைக்கப் பார்த்தான். அவன் மனநிலையை உணராது, தான் எடுத்த முடிவிலேயே உறுதியாக இருந்தாள் வைதேகி.

    டாக்டர் வைதேகி!

    இப்போது, அவள் செய்வது எல்லாம் தவறாக, தன்னை மட்டம் தட்டுவதற்காகச் செய்வது போல் தோன்றியது. படுக்கையில் சுகித்தபின்னர்கூட மனம் மகிழ்வால் நிறையவிலை. “என்னைவிட ஒனக்கு `இந்த’ விஷயத்திலே பலம் அதிகம்! அதான் பெருமை ஒனக்கு!” என்று குற்றம் சாட்டினான். இவளை எந்த விதத்திலும் மீற முடியாது போலிருக்கிறதே என்ற ஆயாசம் பிறந்தது. காதல் களியாட்டத்தின் இறுதியில் ஆணின் உணர்ச்சிப் பெருக்கு ஒரேயொரு பேரலையாக எழுந்து அடங்கும் என்றால், பெண்ணின் உடற்கூற்றின்படி சிறு சிறு அலைகள் அடுக்கடுக்காக எழும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. எதிராளியின் தன்மை புரியாததால் பலவீனம் உண்டாயிற்று.

    இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாத வைதேகி சிரிப்பாள். “படுக்கை என்ன, குஸ்தி மேடையா? இல்லே, நம்ப ரெண்டு பேருக்கும் ஏதாவது போட்டியா, யார் ஜெயிச்சது, யார் தோத்ததுன்னு கணக்குப்போட!” இப்படி அன்பும் பொறுமையும் ஓர் உருவாய் அவள் நடந்துகொள்ளும் போதெல்லாம் தன்மீதே வெறுப்பு எழும் சம்பத்துக்கு. இருப்பினும், வைதேகி ஒவ்வொரு அடியாக மேலே எடுத்து வைக்க வைக்க, அவனுடைய சுயமதிப்பு குறைந்துகொண்டே வந்தது. “நானும் ஒன்னைப்போல வசதியான குடும்பத்திலே பிறந்திருந்தா, எவ்வளவோ முன்னுக்கு வந்திருப்பேன்!” என்று அரற்றினான், ஒரு நாள்.

    ஆரம்பப் பள்ளி — அதுவும் எவ்வித வசதியும் இல்லாத தமிழ்ப்பள்ளி — ஆசிரியரின் ஆறு பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தது அவனது துர்ப்பாக்கியம். `மகனும் தன்னைப்போல் வறுமைக்கோட்டின்கீழ் அவதிப்படக் கூடாதே!’ என்ற நல்லெண்ணத்துடன், அவன் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும், ரோத்தானால் (மெல்லிய பிரம்பு) விளாசும் அப்பாவுக்குப் பயந்தே படித்தான். வகுப்பில் முதலாவதாக வந்தாலும், `நீயெல்லாம் முதலா! அப்போ மத்தவங்க எவ்வளவு முட்டாளா இருக்கணும்!’ என்று ஏளனம் செய்தால், அது ஊக்குவிப்பதற்குச் சமம் என்று அவர் போட்ட கணக்கு தப்பாகியது. எதற்கும் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு, அதை மறைத்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டவனாக வளர்ந்தான்.

    வைதேகி, `பக்கபலமா இருக்க வேண்டிய நீங்களே தடை போடறதையும் ஒரு சவால்னு எடுத்துக்கலே நான்?’ என்று சொல்ல வந்ததை அடக்கிக்கொண்டாள். இந்தச் சில வருடங்களில் அவளுக்கு ஒன்று புரிந்திருந்தது. தான் எதையாவது சொல்லப்போக, கோபம் அல்லது வருத்தம்தான் மிகும் கணவனுக்கு. கோபமாக இருந்தால், அவளிடம் மேலும் தப்பு கண்டுபிடிப்பான். இல்லை, மனம் வருந்தி, மன்னிப்பு கேட்பான், `நான் ஒனக்கு ஏத்தவனே இல்லே!’ என்று. அதன்பிறகு, கொஞ்சல், பரிசுகள் என்று தொடரும். வைதேகிக்கு அலுப்பாக இருந்தது. மனைவி என்பவள் ஒருவனைவிட மேலான நிலையிலிருந்தாலும் கஷ்டம், அவனைவிடத் தாழ்ந்திருந்தாலும் கஷ்டம். அவளுக்கு எப்போதாவது தான் கற்பனையில் உறவாடிவந்த முகமற்ற மனிதனின் நினைவு எழும். அப்போது திட்டம் தீட்டியிருந்தமாதிரி, தனது உயர்வை ஒவ்வொரு வார்த்தையிலும் செய்கையிலும் பறைசாற்றிக் கொள்ளலாம்தான். ஆனால், ஒருவர்க்கொருவர் அடிமையாக இருப்பதில், அல்லது இன்னொருவரை வீழ்த்துவதால், உறவு எப்படி பலப்படும்?

    சஞ்சலப்பட்டுக்கொண்டு இருந்த மனம் நிம்மதிக்காகப் புத்தகங்களை நாடியது. ஆனால், அதிலும் மனம் நிலைக்கவில்லை. “எப்பவும் புத்தகத்தை வெச்சுக்கிட்டு ஒக்காந்திருந்தா ஆச்சா?” அவள் செய்வது எல்லாமே தவறு என்ற முடிவுக்கு வந்தவன்போல், சம்பத் இரைந்தான். “என் சட்டையெல்லாம் இஸ்திரி பண்ணிவைக்கச் சொல்லி இருந்தேனே!” அவன் கட்டளையை நிறைவேற்றவேபோல் உள்ளே விரைந்த வைதேகிக்கு ஒன்று புரிந்தது. அப்பாவுக்கு அம்மா அடங்கிப்போனபோது, என்னமோ பெண் குலத்துக்கே அவமானம் ஏற்பட்டுவிட்டது என்று குமுறினோமே! அப்படி நடந்துகொண்டது அம்மாவின் விவேகம். குடும்பம் போர்க்களமானால், அதனால் குழந்தைகள் மனதில் வடு உண்டாகும் என்றுதான் எல்லா இன்னல்களையும் பொறுத்துப் போயிருக்கிறாள்! அப்பாவோ, அவளது அமைதியான, எதிர்ப்புக் காட்டாத போக்கைத் தனது வெற்றி என்று இறுமாந்து, எல்லை மீறியிருக்கிறார்!

    துணிகளை ஒரு பெரிய பையில் நிரப்பிக்கொண்டு வந்து, தன்னிடம் நீட்டிய மனைவியைப் புரியாது பார்த்தான் சம்பத். “என்ன? ஒன்னை இஸ்திரி பண்ணச் சொன்னேன்!” பிசிரின்றி ஒலித்தது அவள் குரல்: “ஒங்களுக்கு வேலைக்காரி வேணுமானா, அதுக்கேத்த மாதிரி பெண்டாட்டி கட்டியிருக்கணும். பெரிய படிப்பு படிச்சு, கைநிறைய காசு சம்பாதிச்சு, அதை ஒங்க கையில குடுத்தப்புறமும் அவளை எப்படி இன்னும் கொஞ்சம் கீழே தள்ளலாம்னு யோசிக்காதீங்க!” படபடவெனப் பொரிந்துவிட்டு, அப்பால் நகர்ந்தவள் திரும்பினாள். “ஒங்க துணியை லாண்டரியிலதான் போடுவீங்களோ, இல்லே, நீங்களே இஸ்திரி போட்டுப்பீங்களோ, அது ஒங்க பாடு!”

    சம்பத் பின்வாங்கினான், அகன்ற விழிகளுடன். கணவர் பயந்துவிட்டார், இனி தன்னை மிரட்ட யோசிப்பார் என்று புரிந்தது வைதேகிக்கு. ஆனால், அந்த எதிர்பார்ப்பில் மகிழ்வு என்னவோ இல்லை.

    (`நான் பெண்தான்’ என்ற எனது தொகுப்பு நூல், சிறுகதைகள்.காம்)

    Share
  • உன்னையறிந்தால் …… (47)

    நிர்மலா ராகவன்

    அச்சம்-தன்னம்பிக்கை-வெற்றி

    உனையறிந்தால்121
    கேள்வி: நாம் சொல்வதை ஏற்கமுடியாது, சிலருக்குக் கோபம் வருவது ஏன்?

    விளக்கம்: பிறரது கூற்றை ஏற்க முடியாவிட்டால், இவர்களுக்குத் தம் மேலேயே சந்தேகமும், அதனால் அச்சமும் எழுகின்றன. தன்னம்பிக்கை குறைய, கோபம் வருகிறது. கோபம் அச்சத்தின் வெளிப்பாடுதானே!

    வெற்றி பெற்றால் தன்னம்பிக்கை வளர்கிறது. ஆனால், வெற்றி அடைய தேவையானது தன்னம்பிக்கை. சற்று முரணாக இல்லை?

    ஒவ்வொருவருக்கும் சொல்வதும், செய்வதும்தான் சரி என்ற எண்ணம் உண்டு. தம்மைப்போலவே தான் சந்தித்துப் பேசும் அனைவரும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. நாம் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகத்தான் செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தன்னம்பிக்கையைத் தகர்க்கப் போதுமானது.

    தன்னம்பிக்கை என்றால் அகம்பாவம் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை மிகுந்த பெண் `கர்வி’ என்று பழிக்கப்படுகிறாள். இதனாலேயே பல பெண்களும் பயந்து, நிம்மதியாக வாழ எண்ணி, தம் தனித்துவத்தை இழந்து, பெரும்பான்மையானவர்களைச் சார்ந்து நடக்கத் தலைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், சராசரியாகத்தான் இருக்க முடியும்.
    `என்னால் முடியாது!’ என்று பயந்து, ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவர் பலரும். `உன்னால் இதெல்லாம் முடியாது!’ என்று பிறரும் சேர்ந்து தூபம் போடுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி, நல்லபடியாக அதை முடித்துவிட்டால் பெருமையும், மகிழ்வும் கலந்த உணர்வு தோன்றுகிறதே, அது தன்னம்பிக்கை. கர்வமில்லை.

    ஒருவரின் பயமே அவர்கள் சுயநம்பிக்கை அடைய தடையாக இருக்கிறது. அத்துடன், பிறரின் (வேண்டாத) குறுக்கீடுகள் வேறு.

    `உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொள். பிறரைப்போலவே நடக்காதே!’ (BRUCE LEE).
    `செய்துதான் பார்ப்போமே!’ என்று துணிந்து இறங்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, மனம் தளராது தொடர்ந்து செய்ய வேண்டும். தவறாகப்போன முடிவுகளைக் கண்டு அஞ்சிய விஞ்ஞானிகள் எவருமில்லை. வெற்றி நிச்சயமில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், வருடக்கணக்காக அவர்கள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால்தான் இன்று நாம் பல மின்சாதனங்களை அனுபவிக்கிறோம். எதையும் சவாலாக எண்ணி, அதை எதிர்கொள்ளும் மனோதிடம் அவர்களுக்கு இருந்தது.

    `பிறர் என்ன நினைப்பார்கள்?’ என்ற பெருங்கவலைதான் பலரையும் அவர்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி, முன்னேறவிடாது தடுக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கும் அதே கவலை இருக்காதா!

    பிறரிடம் என்ன குறை காணலாம் என்றே பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை அலட்சியம் செய்வது நல்லது. ‘போகிறார்கள், அவர்களுக்கும்தான் வாயில் போட்டு மெல்ல அவல் வேண்டாமா!’ என்று பெருந்தன்மையாக விட்டுவிடலாமே!

    `நான் குண்டாக இருக்கிறேன்!’

    `நான் பயந்தாங்கொள்ளி!’

    `என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை!’ என்று சிலர் மூக்கால் அழுவார்கள்.

    ஊக்குவிப்பு என்பது ஒருவருக்குள்ளேயே தோன்றினால்தான் நிலைக்கும். எது செய்யவும் பயந்து, காலத்தை வீணடித்துவிட்டு, சுயவெறுப்பு கொள்வது எதற்கு? பயம், கையாலாகாத்தனம், அதனால் விளையும் பொறாமை போன்ற குணங்கள்தாம் பிறரைப்பற்றித் தாறுமாறாகப் பேச வழிவகுக்கின்றன.

    வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் பயமும், கவலைகளும் இருக்காதா, என்ன! ஆனால், அவர்கள் தம்மிடம் இல்லாததையே நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதில்லை.

    நமக்கு வாய்த்த உடல், மனம் இரண்டையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நமக்கே நம்மை பிடிக்காவிட்டால், வேறு யாருக்குத்தான் பிடிக்கப்போகிறது? (ஆனால், இதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகமே நம்மைச் சுற்றித்தான் இயங்குகிறது என்பதைப்போல் சுயநலம் பெருகிவிடக்கூடும்).

    எல்லோரிடமும் ஏதாவது திறமை இருக்கும். அதைப் பயன்படுத்தித் திருப்தி அடையும் மனம் வேண்டும்.

    `எனக்குப் பிடிக்கிறது. நான் செய்கிறேன். இக்காரியத்தைச் செய்யும்போதே நிறைவாக இருக்கிறது. வெற்றி, தோல்வியைப்பற்றியோ, பிறர் சொல்வதைப்பற்றியோ கவலையில்லை!’ என்று தன்னம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்தான் வெற்றி அடைகிறார்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …… (46)

    நிர்மலா ராகவன்

     

    போட்டி மனப்பான்மை

    உனையறிந்தால்12

    கேள்வி: வாழ்வில் முன்னேற்றமடைய போட்டி மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம்தானே?
    விளக்கம்: போட்டி மனப்பான்மை இயற்கையிலேயே எழும் ஒன்றுதான். ஆனால், தானே முதன்மையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டு, எப்போதும், எல்லோருடனும் போட்டி போடுவது நல்லதல்ல. அக்குணம் பகைமையைத்தான் வளர்க்கும்.

     

     

    தாய் தன் தம்பியையோ, தங்கையையோ கவனிக்கும்போதும், கொஞ்சும்போதும், தன்னையும் கவனிக்கச் செய்ய ஏதாவது விஷமம் செய்வது சிறு குழந்தைகளின் இயல்பு. ஒன்றரை வயதுக் குழந்தை தன்னைவிடச் சிறிய சகோதரியின் கண்ணைக் குத்தப் பார்க்கும். போர்வையை விலக்கும். ஏதோ, அதற்குத் தெரிந்த வகையில், தன் மனப்புழுக்கத்தை வெளிக்காட்டும். அதற்காக தண்டிக்கப்பட்டால், பொறாமை மூளும்.

     
    தாம் பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் பெற்றோர் குழந்தைகளிடையே ஒற்றுமையை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள்.

     
    கதை 1: நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்திருந்தவளின் சொற்பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அழகாக, சிவப்பாக இருந்த தன் இரண்டாவது மகளை அத்தாய், `ராஜாத்தி!’ என்று வாய்க்கு வாய் அழைத்துக் கொஞ்சுவாள். அப்போது அதற்கு ஐந்து வயதிருக்கும். மூன்று வயது மூத்தவளையோ, `மூதேவி!’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள்.

     
    இம்மாதிரி வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்வோமா?
    அதீத செல்லம் கொடுக்கப்படும் குழந்தை திமிராக, அல்லது சோம்பேறியாக வளரக்கூடும். எல்லாவித மனிதர்களையும் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறன் அதற்கு வராது — தன்னையே உயர்வு என்று எண்ணி வளர்ந்ததால்.

     
    மட்டம் தட்டப்படும் குழந்தை தன்னம்பிக்கை குன்றித் தவிக்கும். என்னதான் பெரிய உத்தியோகத்திற்குப் போனாலும், நீடித்த நல்லுறவுகளைப் பெறமுடியாது தவித்துப்போகும்.

     
    தான் ஏதோ வகையில் இழிந்தவள் என்று நம்பும் பெண் தங்கைக்கே விட்டுக்கொடுத்து விடுவாள். தோல்வியைக் கண்டு அஞ்சுவாள். அல்லது, தங்கையை மீற வேண்டும் என்ற வீம்புடன் மிகக் கடுமையாக உழைப்பாள் — அப்படியாவது அம்மாவின் அன்பைப் பெற முடியாதா என்ற ஏக்கத்தில்.

     
    கதை 2: ஒரு மலையாளப் பெண் எழுத்தாளர் இப்படித்தான் தந்தையின் அன்பைப் பெற முடியாது, தான் எதிலாவது ஜெயிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்ததாகப் படித்தேன். பெரும் புகழ் அவளைத் தேடி வந்தது.

     
    இந்தக் கதையை நான் கூறியபோது, ஒரு மாணவன், “அப்போது அப்பா அவளிடம் அன்பாக இருந்தாரா?” என்று ஆவலுடன் விசாரித்தான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய தந்தை மூத்தவனான இவனிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று சொல்லியிருக்கிறான். இவனுடைய தம்பியைக் கண்டால் உயிரை விடுவாராம்.

     
    “அந்த எழுத்தாளர், `அப்பாவுக்கு என்னைப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன!’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாளாம்!” என்று கதையை முடித்தேன்.

     
    எல்லாக் குழந்தைகளிடமும் ஏதாவது திறமை இருக்காமல் போகாது. ஒரே தாயின் வயிற்றில் உதித்திருந்தாலும், எந்த இரு குழந்தைகளும் ஒரேபோல் இருப்பதில்லை. அவர்களை அப்படியேதான் ஏற்கவேண்டும். ஒப்பிடுதல் எதற்கு?

     
    கதை 3: “எங்கம்மா என் அக்காளையே எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைக் கவனிப்பதே கிடையாது!” என்று என்னிடம் குறைப்பட்டாள் என் நெருங்கிய தோழி, தேவகி.
    சற்று கோபத்துடன், “SHAME ON YOU!” என்று உரிமையுடன் திட்டினேன்.

     
    அவளுடைய அக்காளின் மூளை வளர்ச்சி ஐந்து வயதிலேயே நின்றுவிட்டதென்று அப்பா, தன் பொறுப்பிலிருந்து விலகிக் கண்காணாமல் போய்விட்டார். அக்காளுக்கு தானே எதுவுமே பண்ணிக்கொள்ளத் தெரியாது. வயது முதிர்ந்த தாயின் பாரமும் வேதனையும் புரியாது, இருபத்தெட்டு வயதாகியும் தேவகி தன் தமக்கையுடன் போட்டி போடுவதும் மனித இயல்புதான்.

     
    கதை 4: என் தோழி மேரியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) மகன் ஜோசப்புக்குப் பிறவியிலேயே ஆடிசம் (AUTISM). சரியாக நடக்க முடியாது, பிறருடன் பழகத் தெரியாது. தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பான். ஆனால், அவன் நீரில் பாய்ந்தால், மீன் தோற்றுவிடும். குட்டிக்கரணம் அடித்தபடி நீஞ்சுவான். அவனுடைய உடல் வளர்ச்சிக்கென மாதம் ஒருமுறை அவனைக் கடலுக்கு அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் மேரி.

     
    `நீருக்கடியில் உங்கள் மகன் ஏதேதோ வித்தைகள் செய்வது பார்ப்பவர்களுக்குப் பயமாக இருந்தாலும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டான்!’ என்று மருத்துவர்கள் அவளுக்குத் தைரியம் அளித்திருந்தார்கள்.
    ஜோசப்புக்காக பெற்றோர் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது கண்டு அவனுடைய அண்ணன் பொறாமைப்படவில்லை. அவனுடைய போட்டி மனப்பான்மை வேறு விதத்தில் செயல்பட்டது.

     
    “என் மூத்த மகன் ஜோசப்புக்கு நேர் எதிரிடை! எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக இருக்கிறான்!” என்று மேரி சற்றுப் பெருமையுடன் கூறியபோது, நான் விளக்கினேன்: “நீங்கள் கஷ்டப்படுவதைச் சகிக்காது, அவன் தன்னை வருத்திக்கொள்கிறான் — தன்னாலாவது பெற்றோர் சிறிது இன்பம் அடையட்டும், அவர்கள் தன்னையும் கவனிப்பார்களே என்று!”
    மேரியின் வாய் பிளந்தது, திகைப்பால். சிறிது நேரத்திற்குப்பின், “ஜோசப் இப்படி இருப்பது அவன் தப்பில்லேயே!” என்றாள், குரல் கம்ம. “இனி நான் அவனைக் கவனித்துப் பார்க்கிறேன்!” என்றாள்.

     
    “அவனுடன் கலந்து பேசுங்கள். அவன் மற்ற சிறுவர்களைப்போல் வளரட்டும். தம்பிக்கும் சேர்த்து அவன் சாதிக்க நினைப்பது நடக்கிற காரியமா!” என்றேன்.

     
    கதை 5: தாயற்ற தம் இரு குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுவது அவசியம் என்று உணர்ந்தவர் அந்த தந்தை. வயது வித்தியாசம் அதிகம் இல்லாத நிலையில், குழந்தைத்தனமாக, தம்பி செய்த விஷமத்தை தந்தையிடம் சொன்னால், அவருக்குத் தன்னை அதிகம் பிடித்துப்போய்விடும் என்று கணக்குப்போட்டாள் சிறுமி. ஆனால் நடந்ததோ!
    `ஏன் விஷமம் செய்தாய்?’ என்று மகனை அடித்தவர், `இன்னொருவரைப்பற்றிக் கோள் மூட்டுவாயா?’ என்று மகளையும் அதேபோல் அடித்தார்!

     
    இப்போது அப்பா அவர்கள் அஞ்சும் நபராக, எதிரியாகிவிட(!), குழந்தைகள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்தது. போட்டி, பொறாமை அறவே இல்லை. ஒருவரின் வெற்றியில் இன்னொருவர் மகிழ்ந்தனர். இதைத்தானே அப்பாவும் விரும்பினார்!

     

     

    குழந்தைகளுக்குள் எழும் போட்டி மனப்பான்மையும், பொறாமையும் பெற்றோர்களால்தான் அதிகரிக்கிறது.
    தன் குழந்தை எதிலாவது வெற்றி பெற்றால் அளவுக்கு அதிகமாக குதூகலிக்கும் அன்னையும், அவன் ஏதாவது போட்டியில் வெற்றி பெறாவிட்டால் விம்மி விம்மி அழும் தாய்மார்களும் தம் நிறைவேறாத கனவுகளையும், ஆசைகளையும் தாம் பெற்ற குழந்தைகள்மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இதைப் புரிந்து வைத்திருப்பதால், தோல்வி அடையும்போது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.

     
    தொலைகாட்சியில் சிறுவர்களுக்கான போட்டிகளைப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகும். சாமர்த்தியமாகப் பதிலளிக்கும் குழுவை பொறாமையுடன் வெறிக்கும் பிற அணிகள் தோல்வியைத்தான் கவ்வுகிறார்கள்.
    இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

     
    `நம் பள்ளியின் பெருமை உங்கள் கையில்தான் இருக்கிறது! கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும்!’ என்று ஒரு பெரிய பாரத்தை அவர்கள் தலையில் சுமத்தியிருப்பார்கள் பள்ளியில்.

     
    ஓரணிக்குள்ளேயே, `நான் மட்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எல்லாரும் என்னையே பாராட்ட வேண்டும்,’ என்று ஒவ்வொருவரும் நினைத்து, தமக்குள்ளேயே போட்டி போட்டு நடந்தால், எந்தப் போட்டியிலும் வெற்றிபெற முடியாது. ஒரு குழுவுக்காக எல்லாரும் தம்மால் இயன்றவரை உழைக்க வேண்டுமேயன்றி, தம் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பெரிதாக நினைக்கக்கூடாது.

     
    தொலைகாட்சியில், `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற போட்டி நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். அமைதியாக, சிரித்த முகத்துடனேயே பங்கெடுத்துக்கொள்ளும் சிறுவர்கள்தாம் வெல்கிறார்கள். இவர்கள் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற துணிவுடன் வருகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டில் ஏதாவது ஒன்று போட்டிகளில் கிடைக்கலாம் என்ற தெளிவு இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்கள் தோல்வியுற்றால் வசை பாடமாட்டார்கள் என்பதும் இவர்களது தன்னம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். இவர்கள் ஒரு காலத்தில் தலைவர்களாகும் திறன் பெற்றிருப்பார்கள். வெல்லாவிட்டாலும், வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தும் பெருந்தன்மை இவர்களைப் போன்றவர்களுக்கு உண்டு.

     
    போட்டி மனப்பான்மை நமக்குள் மறைந்துகிடக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டும். மனிதத்தன்மையை வளர்க்கவேண்டும். இதை உணர்ந்தால், முன்னேறுவது உறுதி.

    தொடருவோம்

    Share
  • காந்தியும் தாத்தாவும்

    — நிர்மலா ராகவன்.

    “முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!”

    தொட்டியிலிருந்த தண்ணியை மொண்டு குளித்துவிட்டு, இடுப்பில் துவாலையுடன் கண்ணாடிக்கு முன்னால் நின்று தன் உடல் வனப்பை ரசித்துக்கொண்டிருந்த காந்திக்கு தாத்தாவின் குரல் கேட்டது. தினமும் கேட்டதுதான். முகத்தைச் சுளித்தான்.

    ஐந்து வயதாக இருந்தபோது, சஞ்சிக்கூலியான (JANJI – மலாய் மொழியில், சத்தியம். அதுவே, `காண்ட்ராக்ட்’ என்பதன் தமிழ்ச்சொல்லாக சஞ்சியென மறுவிற்று). தன் தந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டு `ஊரிலிருந்து’ அன்றைய மலாயாவுக்கு வந்த தாத்தா, தோட்டப்புற தமிழ்ப்பள்ளியில் `அஞ்சு கிளாஸ்’வரை படித்தவர். இளவட்டங்களைப்போல மலாய் மொழி கலக்காமல், சுத்தமான தமிழ் பேசுவார்.

    `ஒங்கப்பன் ஒழுங்கில்ல. அதான் ஒங்கம்மா பெத்துப் போட்டுட்டுப் போனதும், ஒன்னய நானே வெச்சுக்கிட்டேன்!’ என்று அடிக்கடி சொல்வார். இதையெல்லாம்கூட `வயசான தோஷம்’ என்று அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவர் சொன்னதில் காந்தியால் தாங்கமுடியாதது, `நீயும் காந்திமாதிரி இருக்கணும்டா. பொய்யே பேசக்கூடாது’ என்பதுதான்.

    பெயர் வைத்துவிட்டால் மட்டும் ஆயிற்றா? மேல்நாட்டில் படித்துப் பட்டம் பெற்ற காந்தி எங்கே, இந்தக் கேடுகெட்ட குப்பத்தில் வாழும் தான் எங்கே! `உயர உயரப் பறந்தாலும்’ என்று ஏதோ சொல்வாரே, தாத்தா! அந்தக் கதையாகத்தானே இருக்கிறது!

    வலுக்கட்டாயமாக அந்த காந்தியை ஒதுக்கிவிட்டு, தன் முகபிம்பத்தில் கவனத்தைச் செலுத்தினான். ஓரிரு பருக்கள் இருந்த கன்னத்தில் எச்சிலைத் தடவினான்.

    “காந்தி, டேய்!” தாத்தாவின் குரல் வாசலிலிருந்து கேட்டது.

    அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், கண்ணாடியின் பின்னால் கைவிட்டுப் பார்த்துவிட்டு, திருப்தியுடன் தலையை ஆட்டிக்கொண்டான் காந்தி. `ரெண்டாயிரம் கொடுப்பாங்களாமே! கொஞ்சம் சேர்ந்ததும், மொதல் வேலையா தாத்தாவை ஊருக்கு அனுப்பி வைக்கணும். பளனி, மதுரை எல்லாம் போய், சந்தோசமா சாமி தரிசனம் பண்ணிட்டு நிதானமாத் திரும்பி வாங்கன்னு!’ அந்த நினைப்பிலேயே சுதந்திரம் வந்துவிட்டதுபோன்ற நிறைவு ஏற்பட்டது. `கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!’ என்று தானே எழுந்ததது பாட்டு.

    தாத்தாவின் நினைவு தொடர்ந்தது. `கல்யாணம் கட்ட ஒருவாட்டி ஊருக்குப் போனேன். கப்பல்லே. அதோட சரி. வர்ற பத்தாவது மாசம் திரும்பிப் போலாம்னு இருக்கேன்!’ வருடம் தவறாமல் இதையே நம்பிக்கையோடு சொல்வார். `பத்தாவது மாசம்’ வந்துவிட்டால், `நாலாவது மாசம்’ என்று அதை மாற்றிக்கொள்வார், அலுக்காமல். ஆனால், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஓட்டுப் போடப்போகும் முதல் ஆள் அவராகத்தான் இருப்பார்.

    புரியாது, அவன் ஒருமுறை கேட்டேவிட்டான். `ஊரு, ஊருங்கறீங்க! இங்க யாரு பதவிக்கு வந்தா என்ன, வராட்டி என்ன? எதுக்கு இப்படி ஓட்டுப்போடணும்னு ஓடறீங்க?’

    வெகுண்டெழுந்தார் தாத்தா. `என்னடா அப்படிக் கேட்டுப்பிட்டே? நாம்ப இருக்கிற எடத்துக்கு உண்மையா இருக்க வேணாம்? இந்த மண்ணிலதான் பிள்ளைகுட்டி பெத்து, நாயா ஒளைச்சு அவங்களைக் காப்பாத்தி, இந்த வீட்டைக் கட்டிப்போட்டு..!’

    “டேய் காந்தி!” குரல் சற்று அருகிலிருந்து மீண்டும் கேட்க, “என்ன தாத்தா?” என்று சலிப்புடன் குரல் கொடுத்தபடி, ஆறங்குலச் சீப்பை கையில் எடுத்துக்கொண்டான் காந்தி. பதினேழு நிமிடங்கள். தினசரிக் கணக்கு. அவனுடைய ஒவ்வொரு வயதுக்கும் ஒரு நிமிடம். தலை வாரி முடிய இன்னும் நான்கு நிமிடங்கள்.

    “எனக்கு இந்த நேசனைக் கொஞ்சம் படிச்சுச் சொல்லுடா. கண்ணே தெரிய மாட்டுது!”

    காந்தி பல்லைக் கடித்துக்கொண்டான். மலாய் பள்ளிக்கூடத்தில் படித்த தன்னை டியூஷன் வகுப்புக்கு அனுப்பியாவது தமிழ் கற்றுக்கொள்ள வைத்தது இதற்குத்தானா என்ற எரிச்சல் பிறந்தது. தமிழ் கற்ற நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்தியிருந்தால், பாசாகித் தொலைத்திருக்கலாம்.

    `இன்னொரு வருசம் படியேண்டா!’ என்று தாத்தா வற்புறுத்தியபோது மறுத்துவிட்டான். அக்கம்பக்கத்தில் யார் எட்டாவதைத் தாண்டி இருக்கிறார்கள்?

    “காந்தி..!”

    `அன்னாடம் பேப்பர் படிக்காட்டி என்ன! தினமும் சண்டை, கொலை, கற்பழிப்பு, அவ்ளோதான்! போரிங்! பரிச்சை எளுதக்கூட நான் இவ்வளவு படிச்சதில்ல!’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். இதையெல்லாம் தாத்தாவிடம் சொல்லித் தப்பிக்க முடியாது. அவர் பேசப் பிடித்துக்கொண்டால் அவ்வளவுதான்.

    சில சமயம், அரைகுறை ஆடைகளில் கவர்ச்சிகரமாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நடிகைகளைப் பார்த்துவிட்டு, `சினிமா பக்கம் படிக்கட்டுமா, தாத்தா?’ என்று இவனே துணிந்து கேட்டாலும்,`இப்பல்லாம் என்னடா சினிமா? அந்தக் காலத்தில பாகவதர் பாடுவாரு, பாரு!’ என்றபடி, `கிஸ்னா, முகுந்தா,’ என்று பாடவும் ஆரம்பித்துவிடுவார். ஒரு வரி பாடுவதற்குள் இருமல் ஆரம்பித்துவிடும். பாட்டை நிறுத்திவிட்டுப் பேச்சைத் தொடர்வார்: `காந்தி! ஒன்கிட்டே சொல்லி இருக்கேனோ? நான் ஒன் வயசா இருக்கிறப்போ பாட்டு படிச்சபடி, மேடை நாடகத்திலே எல்லாம் நடிச்சிருக்கேன்!’

    `ஒன் வயசா’ என்று அவர் ஆரம்பிக்கும்போதே, அடுத்து வரும் வார்த்தைகளை அவன் ஒலியில்லாமல், கூடவே உச்சரிப்பான். அந்த அளவுக்கு அவ்வார்த்தைகள் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. முகத்தில் அலட்சியச் சிரிப்பு தெளிவாகத் தெரியும். நடிகர் என்றால் பணக்காரராக இருக்க வேண்டாமோ?

    தெருமுனையில் அழுகைச்சத்தம்.

    எந்த ஒழுங்குமுறையும் இல்லாது, அவரவர் அவசரத்துக்குக் கட்டிக்கொண்டிருந்த குடியிருப்பு ஆதலால், `குடிசை’ என்றும் சொல்ல முடியாமல், `வீடு’ என்றும் மனதாரச் சொல்ல முடியாது, நவக்கிரகங்கள்போல் வெவ்வேறு திசையை நோக்கியிருந்தன அந்த புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த உறைவிடங்கள்.

    ஓரத்திலிருந்த சில வீடுகளை முதல்நாள்தான் டிராக்டர் வைத்து இடித்துத் தள்ளியிருந்தார்கள். எப்போதும் காணப்படும் ஆளுயர குப்பைமேடு, பலகைகளும், உலோகத் தகடுகளும் சேர, மேலும் உயர்ந்து இருந்தது. தெருநாய்கள் ஆரவாரமாக விளையாடிக்கொண்டும், சண்டை பிடித்துக்கொண்டும் இருந்தன.

    வீட்டை இழந்து, தமது சொற்ப உடைமைகளுடன் பெண்கள் அழுதபடி நிற்க, அவர்களைப் பார்த்து சிறுகுழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர். ஆண்கள் கண்ணில் நிராசை — இந்தமாதிரி சுதந்திரமான இடத்தில் இனிமேல் தங்கமுடியுமா என்ற விரக்தியில்.

    `நானும் இப்படி ஒண்ணுமில்லாம நிக்கற நெலமை வரக்கூடாது!’

    “காந்தி! இன்னுமா தலைசீவி முடியல? முடி எல்லாம் கொட்டிடப்போகுதுடா!” பலமுறை கேட்டிருந்த தாத்தாவின் நகைச்சுவையை ரசிக்க முடியாது, தரையில் கிடந்த பாய்மேல் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ஜீன்சையும், டி.ஷர்ட்டையும் அணிந்துகொண்டான்.

    தீபாவளியை முன்னிட்டு, கோலாலம்பூர் `செமுவா ஹௌஸ்’ (SEMUA HOUSE — எல்லோருடைய வீடு) கட்டிடத்தின் பக்கத்தில் பிரத்தியேகமாகக் கடைகள் போடப்பட்டபோது, வெளியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சட்டை எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அதன் இரு பக்கங்களிலும் குறுந்தாடியுடன் ஒசாமா பின் லாடன் — ஈராக் போர் மூள காரணமாக இருந்தவர். நமட்டுச் சிரிப்புடன் பலரும் நகர, `இதைப் போட்டா, நம்பளையும் பாப்பாங்கல்ல!’ என்ற நப்பாசையுடன் அவன் வாங்கியது.

    “டேய்! கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்ல?”

    “நான் வெளியே போகணும்!” என்று முணுமுணுப்பாகப் பதிலளித்தவன், ஒரே பாய்ச்சலில் வெளியே நடந்தான். அவசரத்தில், தாழ்வான கூரையின் அலுமினியத் தகடு நெற்றியில் இடித்தது.

    அதனால் உண்டான வலியும், `பாத்துப் போயேண்டா!’ என்ற தாத்தாவின் கரிசனம் ஏற்படுத்திய ஆத்திரமும் அவன் பைக்கை உதைத்த விதத்தில் தெரிந்தது. அதற்கு அவன் அவசரம் புரியவில்லை. நிறைய உதை வாங்கியது.

    `இது வேற! சனியனை `ஸம்பால’ (SAMPAH – குப்பை, மலாயில்) கடாசிட்டு, சீக்கிரம் புதுசு ஒண்ணு வாங்கணும். பளபளான்னு இருக்கும்!’ என்று சொல்லிக்கொண்டவனுக்கு, செல்வநாதனைப்போல் தானும் கார் வாங்கும் நாள் தூரத்தில் இல்லை என்ற எண்ணமே சற்று ஆறுதலைக் கொடுத்தது.

    செல்வநாதன் — பதினான்கு வயதில், சிகரெட்டுப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்த குரு. `இதுக்கெல்லாம் பணமில்லியே!’ என்று இவன் தயங்கியபோது, `ஸ்கூலுக்குப் போக பஸ் எதுக்குடா ஒனக்கு? நடந்து போவியா! அந்தக் காசை நல்லா, ஜாலியா செலவழிக்கலாமில்ல?’ என்று ஞானம் வழங்கியவன். அவன் இன்று புதிய ப்ரோட்டான் வீரா காடி வைத்திருக்கிறான். கழுத்தில் கெட்டியான தங்கச் சங்கிலி. எட்டு பவுன் இருக்கும். ஒரு காதில் ரஜினி வளையம்.

    “இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா காந்தி இந்த நாத்தம் பிடிச்ச கம்பதிலேயே (KAMPUNG — கிராமம்) இருப்பே? வீட்டுக்கு ஜன்னலுமில்ல, காத்துமில்ல. என்னிக்காவது ஒரு நாள் எல்லாத்தையும் இடிச்சுட்டுப் போயிடுவாங்க!” என்று செல்வநாதன் சில மாதங்களுக்குமுன், தற்செயலாகச் சந்திப்பதுபோல் சந்தித்து, ஆரம்பித்தபோது, “பதிலுக்கு அவங்க அபார்ட்மெண்ட் தர மாட்டாங்க?” என்று அப்பாவித்தனமாக வினவினான் காந்தி.

    “பெரிய அபார்ட்மெண்ட்!” நண்பன் பழிப்புக் காட்டினான். “பத்தடுக்கு மாடி, தெரியுமா? புறாக்கூண்டு மாதிரி, ஒவ்வொண்ணிலேயும் நாலு வீடுங்க. ஒரே ரூம்புதான். லிஃப்ட் எப்பவுமே ரோஸா (ROSAK — பழுது) ஆகிடும். இப்ப மாதிரி, தண்ணிக்காசு, விளக்குக்காசு குடுக்காம இருக்கமுடியுமா? நீ லோரி கிளீனரா வாங்கற சம்பளம் அதுக்கே சரியாப் போயிடும்!”

    `இவனுக்குத்தான் எவ்வளவு சமாசாரங்கள் தெரிந்திருக்கிறது!’ என்ற பிரமிப்பையும் மீறி, தாத்தாவைபோல் லோரி டிரைவராக ஆனாலும், தன் தரித்திரம் தொலையாது என்ற உண்மை புரிய, காந்தியின் முகம் தொங்கிப்போயிற்று.

    அதை எதிர்பார்த்திருந்த நண்பன் வேப்பிலை அடித்தான். “நீ வர்றியா, சொல்லு. எங்க பெரிய மண்டகிட்ட கூட்டிட்டுப்போறேன். பியாசாவா (BIASA –வழக்கமாக), அவர் யாரையும் கண்டுக்க மாட்டாரு. ஆனா, `இப்பிடி, நம்ப பையன் ஒருத்தன் கஸ்டத்தில இருக்கான். நல்ல பையன், மண்ட. சொன்ன பேச்சு கேப்பான்’னு நான் எடுத்துச் சொன்னதுமே, `பாவம், கூட்டிட்டு வாடா. நம்பளோட சேத்துக்கலாம்’னு சொல்லிட்டாரு!”

    “தமிழாளா?”

    “அட,நீ ஒத்தன்! தமிழவங்க `விதி, விதி’ ன்னு பொலம்பிக்கிட்டு, கஸ்டத்திலேயே காலத்தைக் கடத்திடுவாங்க. இவரு சீனரு!”

    யோசித்தபடியே வீடு திரும்பிய காந்தி, செல்வநாதன் குறுகிய காலத்திலேயே பெரிய பணக்காரன் ஆனதுபற்றி தாத்தாவிடம் வியப்புடன் தெரிவித்தான்.

    “எனக்கென்னமோ, அவன் குறுக்கு வழியில போறான்னுதான் படுது!” என்ற தாத்தா, “எப்பவும் நம்பளைவிடக் கீள இருக்கிறவங்களைத்தான் பாக்கணும். அப்பத்தான் அந்த பத்துமலை முருகன் நம்பளை எவ்வளவு நல்லா வெச்சிருக்காருன்னு வெளங்கும்,” என்று தத்துவம் பேசினார்.

    குண்டும் குழியுமாகப் பெயர்ந்த மண்தரையில் சிமெண்டு பூசி, சுவர் என்ற பெயரில் மரப்பலகைகள் வைத்த இடத்தில் காலம் தள்ளிவிட்டு, தான் ஏதோ பெரிய அதிர்ஷ்டசாலி என்பதுபோல் தாத்தா பேசியபோது, காந்திக்கு எரிச்சல்தான் எழுந்தது.

    அவர்கள் வீட்டு வாசலில் நின்று பார்த்தால், உலகத்திலேயே உயரமான இரட்டைக் கோபுரங்கள் தெரியும். இன்னொரு பக்கம் செல்வம் கொழிக்கும் மலைநாட்டின் மிகப் பெரிய பேரங்காடியான `மெகா மால்’. இவையெல்லாம் எப்படி தாத்தா கண்ணில் மட்டும் படாமல் போயின?

    `தாத்தா கனவிலேயே சந்தோசமாயிடறவரு!’ என்று முகத்தைச் சுழித்துக்கொண்டான். தானும் அவரைமாதிரி ஆகிவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டது அப்போதுதான்.

    நடுராத்திரி. ஏதோ ரகளை. வழக்கமாக, அக்கபக்கத்தில் எவனாவது குடிகாரன் மனைவியை அடிப்பதுபோல் இல்லாமல், வித்தியாசமாக இருந்தது. காந்தி எழுந்து வந்தான்.

    வீட்டுக்குள் போலீஸ்காரர்கள்! ஒருவர் கையில் அவன் கண்ணாடிக்குப்பின் ஒளித்து வைத்திருந்த பார்சல்!

    “யாரிது?” காந்தியைக் காட்டிக் கேட்டார் ஒருவர்.

    “என் பேரப்பிள்ளைதாங்க. சின்னப்பையன்! அவனுக்கு ஒண்ணும் தெரியாதுங்க”.

    “இதில நிறைய டாடா (DADAH — போதைப்பொருள்) வெச்சிருக்கீங்க. எங்கேயிருந்து வந்திச்சு?”

    “எனக்குத் தெரியாதுங்க, பாஸ். இல்லாட்டி, `யாராவது சாமான் ஏதாச்சும் ஒங்ககிட்ட குடுத்தாங்களா?’ன்னு நீங்க கேட்டப்போ, நானே இதைக் காட்டி இருப்பேங்களா?” தாத்தா கூறிக்கொண்டிருந்தார். “என் கூட்டாளியோட மகன் — அசலூர்க்காரன் — `கிளப்புக்குப் போறேன், மாமா. நாளைக்கு வெள்ளனே வந்து இதை எடுத்துக்கிட்டுப் போறேன்! அப்படின்னான். இதுக்குள்ளே என்ன இருக்குன்னு அவனும் சொல்லல. நானும் கேக்கல”.

    “ரெண்டு கிலோ இருக்கும்! என்னமோ கதை அளக்கறீங்களே!”

    “நம்பிக்கைத் துரோகம் செய்துட்டானுங்க, பாவி!” தாத்தாவின் குரலில் அழுகை. காந்தி இருந்த பக்கம் அவர் திரும்பவே இல்லை.

    “தாத்தா..!” தயக்கத்துடன் அழைத்தான் பேரன். இப்படியெல்லாம் ஆகும் என்று செல்வநாதன் ஏன் எச்சரிக்கவில்லை? இப்போது என்ன செய்வது?

    gandhi-t-shirt_1975029iகண்டிப்பான குரலில், “ராங்கி பண்ணாதே, காந்தி. பெரியவங்க பேசறப்போ, குறுக்கே பேசக் கூடாதுன்னு ஒனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்?” என்றார் தாத்தா, அவன் பக்கம் திரும்பாமலேயே. அதிகாரிகளிடம், “என் பேரப்பிள்ளைங்க!” மீண்டும் சொன்னார். “பேருதான் காந்தி. வெளங்காத பய. படிப்பும் ஏறல,” என்றுவிட்டு, “நான் வெள்ளக்காரன் காலத்திலேயே அஞ்சு கிளாஸ் படிச்சவன்!” என்றும் தப்பாமல் சொன்னார்.

    தாத்தாவின் தற்பெருமையைக்காதில் வாங்காது, “வயசான காலத்திலே நீங்க இப்படி ஒரு காரியம் செய்திருக்க வேண்டாம். ஒரு கிலோ டாடா வெச்சிருந்தாலே மரண தண்டனை. தெரியுமில்ல?” என்று மேலும் அதட்டினார் அதிகாரி.

    மரண தண்டனையா! அதிர்ந்தான் காந்தி.

    தாத்தா தொணதொணப்புதான். எப்படியும் சில வருடங்களில் சாகப்போகிறவரும்கூட. ஆனால், `தவறு’ என்று தெரிந்தே, பேராசை பிடித்துத் தான் செய்த காரியத்துக்காக சட்டம் அவரைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தால், தான் என்ன மனிதனோடு சேர்த்தி?

    `காந்தி பொய்யே சொல்ல மாட்டாராம். அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன். நீயும் அவர்மாதிரி..!’

    தாத்தா மட்டும் இப்போது பொய் சொல்லலாமோ என்று குழந்தைத்தனமான கோபம்தான் முதலில் எழுந்தது காந்திக்கு.

    சட்டென விளங்கியது அவனுக்கு. தன்னைக் காப்பாற்ற, மரண தண்டனைக்கும் துணிந்துவிட்டார்!

    தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வர அதிக நேரம் பிடிக்கவில்லை காந்திக்கு.

    “ஸார்! தாத்தாவுக்கும், இந்தப் பார்சலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல,” என்று திடமாக ஆரம்பித்தான்.

    ஆழ்ந்த வருத்தத்தையும் மீறி, தாத்தாவின் முகத்தில் சிறு நகையின் ரேகை படர்ந்தது. பேரனுக்குக் காரணப்பெயரைத்தான் வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தின் வெளிப்பாடு அது.

    _________________________________________________________________________

    மறுபகிர்வு:
    2004 -ல் தமிழ் நேசன் பவுன் பரிசுப்போட்டியில் பரிசு பெற்ற கதை.

    Share
  • காதலியின் சிரிப்பிலே …

    — நிர்மலா ராகவன்

    ‘ஏண்டா, நீ ஆம்பளைதானா?’

    பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோதெல்லாம் அதைச் சிறிதும் பொருட்படுத்தாத எனக்கு அன்றிரவுதான் அச்சந்தேகம் பயங்கரமாக முளைத்தது.

    ஹாலில் எனக்குப் பக்கத்தில் தரையில் படுத்திருந்த என் மாமா எப்போது அவ்வளவு நெருங்கி வந்தாரோ, தெரியவில்லை. அவருடைய கை என் உடல்மேல் படர்ந்து, போகக்கூடாத இடத்தில் எல்லாம் சஞ்சரித்தபோது விழிப்பு வந்தது.

    “ஐயோ!”

    அந்த அலறல் என்னிடமிருந்தில்லை. நான்தான் என்ன நடக்கிறதென்றே புரியாது, உடல் முழுவதும் விறைத்துக்கொள்ள, மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தேனே!

    மாமா சட்டென்று விலகி, மூக்கை உறிஞ்சினார். நான் இன்னும் உறைந்திருந்தேன். அப்பாதான் விரைந்தெழுந்து விளக்கைப் போட்டார். அடுத்து, ஆம்புலன்சை போன் போட்டு வரவழைத்தது, தாத்தாவை இருதய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றது எல்லாம் தெய்வத்தின் குறிக்கீட்டால்தான்.

    “தாத்தாவோட நானும் போறேன்!” என்று நான் வீட்டிலிருந்து தப்பிக்கப் பார்த்தேன்.

    “என் செல்லம்!” அம்மா நெட்டி முறித்தார்கள். “என் கண்ணுக்குத்தான் தாத்தாமேல எவ்வளவு பாசம்!”

    என் நான்கு அண்ணன்களைப்போல் நானும் கல்யாணம், படிப்பு என்று எதையாவது சாக்கு வைத்து, வீட்டைவிட்டுப் போய்விடப் போகிறோனோ என்று அம்மாவுக்குப் பயம். அதனால் அளவுக்கு மீறிய கொஞ்சலில் என்னைக் கட்டிப் போட்டிருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அம்மா அடிக்கடி என் கன்னத்தைத் தடவுவதும், தினமும் காலையில் என் தலைக்கு எண்ணெய் வைப்பதும் எனக்கு வேண்டித்தான் இருந்தது. அதனால்தானோ என்னவோ, பெண்களைப் பார்த்தால் மரியாதையுடன் ஒதுங்கத் தோன்றியது. அவர்களை வம்புக்கு இழுக்கும் என் வயதொத்தவர்களைப் பிடிக்காமல்போய், தனித்தே இருந்தேன்.

    ஆம்புலன்ஸ் விரைந்துகொண்டிருந்தது. என் எண்ணமோ ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தது.
    ‘ஆண்’ என்றால், இயற்கையிலேயே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கிளர்ச்சி தோன்றவேண்டுமோ, மீசை முளைத்தவுடன்? என்னிடம் தப்பை வைத்துக்கொண்டு, மற்ற பையன்கள்தாம் ‘ரௌடிகள்’ என்று மனதிற்குள் வைதேனே!

    இன்று எப்படியோ மாமாவிடமிருந்து தப்பித்தாயிற்று. வேறு யாராவது இப்படி நடந்துகொள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? நாளை மாமாவே…! நினைக்கவே பயமாக இருந்தது. இனி நானும் பிற ஆண்களைப்போல நடந்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். சினிமா கதாநாயகனைப்போல், எதிர்ப்படும் இளம்பெண்களை எல்லாம் காதலிக்க ஆரம்பிக்க வேண்டும். குறைந்த பட்சம், அவர்கள் என்னைக் கவனிக்கவாவது வைக்கவேண்டும்.

    “என்னடா முழிச்சிட்டிருக்கே? ஆஸ்பத்திரி வந்தாச்சு. இறங்கு!”

    அப்பாவின் குரலைக் கேட்ட செல்வம் படிகளைச் சட்டைசெய்யாது, எம்பிக் குதித்தான். புதியதாக வீரம் பிறந்துவிட்டதில் பெருமை பீறிட்டது.

    “தாத்தாவுக்குத் துணையா நான் இங்கேயே தங்கறேம்பா!” என்று செல்வம் கேட்டுக்கொண்டபோது, ஆபீசுக்குப் போகவேண்டியிருந்த அப்பா மறுத்துப் பேசவில்லை.

    நாள் பூராவும் கண்ணை மூடியபடி தாத்தா படுத்திருக்க, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் செல்வம்.
    ‘இந்த இடத்தில்தான் நோயாளிகளின் உறவுக்காரப் பெண்களும், நர்சுகளுமாக எத்தனை இளம்பெண்கள்!’ என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவர்கள் எல்லாருமே அவனைவிட வயதில் மூத்தவர்கள் என்பதை அவன் நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை.

    சுடுநீர்ப் போத்தலைக் கையில் பிடித்தபடி நடந்து வந்த அப்பெண் கண்ணில் பட்டாள். எவ்வளவு அழகு! தமிழ்ப்பெண்ணாகவேறு இருக்கிறாள். துணிந்து இவன் புன்னகைக்க, பதிலுக்கு அவளும் சிறுநகை புரிந்தாள்.

    “எங்க தாத்தாவுக்கு ஆபரேஷன். நான்தான் பாத்துக்கறேன்!” என்று பெருமையுடன் தெரிவித்தான்.

    அவனை மதித்து அவள் உரையாடியபோது, வயதிலும், அனுபவத்திலும் பல வருடங்கள் கூடிவிட்டதுபோல இருந்தது செல்வத்துக்கு.

    “சரிங்க, அக்கா!” என்று அவளுக்குப் பிரியாவிடை கொடுத்தான்.

    அடுத்த முறை அவளைத் தேடி பக்கத்திலிருந்த பெண்கள் பகுதிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். அப்போது ஒரு நர்ஸ் அந்தப் பக்கம் வர, “இப்படி ஓயாம நடக்கறீங்களே, சீமா! கால் வலிக்கலே?” என்று கரிசனப்பட்டான். ஆடையில் குத்தப்பட்டிருந்த பெயர் அட்டையிலிருந்து தன் பெயரைத் தெரிந்துகொண்டு, உரிமையுடன் அழைத்த அவனது துணிச்சலைப் பாராட்டுவதுபோல அவள் சிரித்தாள்.

    “பழகிப்போச்சு!” அவள் அவனைக் கடந்து சென்றுவிட்டபோதும், ஏதோ இன்பக் கிறக்கத்தில் அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் செல்வம்.

    ‘டேய்! தான் எங்க தாத்தாவோட ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தபோது நீங்க என்னைப் பாத்திருக்கணும். சும்மா, ‘காதல் மன்னன்’னு பட்டமே குடுத்திருப்பீங்க!’ என்று நண்பர்களிடம் வீறாப்பு காட்டுவதாகக் கற்பனை செய்துகொண்டான். ‘வீரம்’ வளர்ந்தது.

    “அக்கா!” அவன் இருமுறை கூப்பிட்டபிறகுதான் அவள் அவனைக் கவனித்தாள்.

    தன் கையிலிருந்ததை நீட்டினான் அவளிடம். “ஒங்களுக்கும் பாட்டு பிடிக்கும்னீங்களே! ஒரு புது ஏ. ஆர். ரஹ்மான் கேசட் வாங்கினேன். கேட்டுப் பாருங்க!” ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட என்று அப்பா கொடுத்துவிட்டுப்போன பணத்தில் அவளை நெருங்கவென்றே அவன் அதை வாங்கிவந்தான் என்பதை அவள் அறியவா போகிறாள்!

    “தாங்க்ஸ்!” அவள் அதை வாங்கி, அருகிலிருந்த டிரான்சிஸ்டரின்மேல் வைத்தாள். பின், அவன் அங்கிருப்பதையே மறந்தவளாய், தன் தாயைக் கவனிக்கத் தொடங்க, ‘முதல் நாளுக்கு இது போதும்’ என்ற திருப்தியுடன் வெளியேறினான் செல்வம்.

    அன்றிரவு ஒன்பது மணிக்குள் மருந்துகளின் உபயத்தால் தாத்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பொழுதுபோகாது, தூங்கவும் பிடிக்காது, அவரிருந்த தனியறையைவிட்டு வெளியே வந்தான் செல்வம். வெளியில் ஒரு பொது ஹால். அதில் டி.வி. ஓடிக்கொண்டிருந்தது — ஓசை எழுப்பாமல்! எதிரிலிருந்த சோபாக்களில் சிலர் — நோயாளிகளின் மனைவிமார்களும், உடல்நிலை சற்றே தேறியவர்களும். ஓரிருவர் உட்கார்ந்த நிலையிலேயே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனாகும் எண்ணமே கசப்பை விளைவிக்க, செல்வம் வராந்தாவில் நடந்தான்.

    வழியில், ஒரு கௌண்டருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தாதியர் ஏதோ குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர். மேலே நடந்தான் — எதிரே சுவர் மறைக்கும்வரை. வலது கோடியில் இருந்த பெண்கள் வார்டு அவனை ‘வா, வா’ என்று அழைத்தது. அவன் வருகையை எதிர்பார்த்திருந்ததுபோல, கதவும் திறந்தே கிடக்க, மேலே யோசிக்காமல், உள்ளே நுழைந்தான்.

    இவன் மனத்தைக் கவர்ந்த பெண் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். நேரே அவளருகே சென்று, “பாட்டைக் கேட்டீங்களா?” என்று கேட்டான். பேச்சை ஆரம்பிக்க ஒரு வழி கண்டுபிடித்த தனது புத்திசாலித்தனத்தைப் பாராட்டிக்கொண்டபோதே, அரைப்பரீட்சையில் மலாய் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலேயும் பெயில் ஆனதும், அப்பா, “புத்தி இல்ல?” என்று கேட்டபடி, பிரம்பால் அடித்ததும் நினைவில் எழுந்தன. ‘அப்பா கிடக்கிறார்!’ என்று அதை ஒதுக்கினான்.

    “இன்னும் இல்லை,” என்றவள் முகத்தில் சிறு புன்னகை. “என்ன படிக்கிறீங்க?” மரியாதையை உத்தேசித்துக் கேட்டமாதிரி இருந்தது. ஆனால் செல்வத்துக்கோ உற்சாகம் தாங்கவில்லை. ‘இவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறது! எவ்வளவு அக்கறையாக விசாரிக்கிறாள்!’

    “எஸ்பிஎம் எழுதியிருக்கேன்!”

    “ஓ! ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கீங்களா?”

    தான் நினைத்தும் பார்க்க விரும்பாத ஒன்றை அவள் ஞாபகப்படுத்தவும், அவன் உள்ளுக்குள் சுருங்கிப்போனான்.
    சீக்கிரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “ட்ரையல் பரீட்சையில எட்டுப் பாடங்களிலே நான் ‘ஏ’ வாங்கினேன். விளையாட்டிலும் நிறையப் பரிசு கிடைச்சிச்சா! மிகச் சிறந்த மாணவன்’னு பரிசு குடுத்தாங்க!” என்று அளந்தான். காதல் முளைக்கும்போதே அலட்டலும் வந்துவிடாதா!

    ‘இவ்வளவு குண்டாக இருப்பவன் எல்லாம் விளையாடிக் கிழித்தான்!’ என்றெல்லாம் அவள் அவநம்பிக்கைப்பட்டதாகத் தெரியவில்லை.

    ‘என்ன பாவம் செய்தோமோ இப்படி ஒரு வியாதி வர!’ என்று பலவாறாக ஓயாது புலம்பிக்கொண்டிருக்கும் நோயாளிகளிடையே அவனுடைய சிறுபிள்ளைத்தனமான பேச்சு வித்தியாசமானதாக, வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கவேண்டும். அதிகம் பேசாது, அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டாள். சுமார் ஒரு மணி நேரம் அவள் பக்கத்திலேயே நின்றபடி, தன் பிரதாபங்களை அளந்தான் செல்வம். நடுவே, தன் மனதை உறுத்திக்கொண்டிருந்ததையும் கேட்டேவிட்டான்: “ஒங்களுக்கு ‘பாய் ஃப்ரெண்ட்’ இருக்கா, அக்கா?”
    அவள் சிரித்த முகத்துடன், ‘இல்லை’ என்று தலையாட்டியதும், அவனுக்குச் சொர்க்கமே தெரிந்தாற்போல் இருந்தது.

    உபசாரமாக, “நான் நம்பமாட்டேம்பா! அக்கா இவ்வளவு அழகா இருக்கீங்க!” என்று சீண்ட, அவள் மீண்டும் சிரித்தாள்.

    “ஒங்க பேரு என்னக்கா?”

    “செல்வராணி!”

    “நெசமாவா? நான் செல்வம். நம்ப பெயர் பொருத்தத்தைப் பாத்தீங்களா?”

    அவனுடன் அவளும் சேர்ந்து சிரித்தபோதுதான் அவனுக்கு மகிழ்ச்சி கலந்த அந்தக் குழப்பம் எழுந்தது: ‘இவளுக்கு நம்பமேல ஒரு ‘இது’ வந்திருச்சோ?’

    அவளுடன் கைகோர்த்து பொது இடங்களுக்குப்போவதாகவும், அவனுடைய அதிர்ஷ்டத்தைப் பார்த்துப் பயல்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படுவதாகவும் கற்பனை செய்துபார்த்தான். தாத்தாவின்மேல் நன்றி சுரந்தது. அவரால்தானே தனக்கு இவ்வளவு அயனான சந்தர்ப்பம்! ‘தாத்தாவுக்கு விரைவில் குணமாகவிடக்கூடாது, சாமி!’ என்று பிரார்த்தித்தான்.

    மறுநாள் காலை எழுந்திருக்கும்போதே மனம் உல்லாசமாக இருந்தது. செல்வராணியின் சிரிப்புதான் எவ்வளவு அழகு! அவளை நினைக்கும்போதே மனம் பரபரத்தது. அவளை அப்போதே பார்க்கவேண்டும்போல இருந்தது. ‘வேண்டாம். பகலில் டாக்டர்கள் நடமாட்டம் அதிகம்,’ வேண்டாவெறுப்புடன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

    தாத்தா ஒருமுறை கண்விழித்து, “ஒனக்கு ஏண்டா இந்த வயசிலே கஷ்டம்? வீட்டுக்குப் போ!” என்று முனக, “நல்லா… ஒங்களை விட்டுட்டுப் போவேனே!” என்று கூறி அவரை அதிசயிக்க வைத்தான்.

    ‘பையன் ரொம்பப் பொறுப்பு!’ நிறைந்த மனத்துடன் தாத்தா கண்ணை மூடிக்கொண்டார்.

    ஆஸ்பத்திரியை நினைக்கும்போதே செல்வராணிதான் தெரிந்தாள். அவளோ, இல்லை தானோ, என்றாவது வீட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற நிதரிசனமே அதிர்ச்சியை அளித்தது. அதற்குள் அவளும் தன்னை எண்ணி ஏங்கும்படி செய்துவிட வேண்டும். அதற்கென்ன, அவனைவிட வயதில் சற்றே மூத்தவள்தான். ஆனால், உடல் ஆகிருதியில் அவன்தானே பெரியவன்? அது போதாதா, என்று என்னென்னவோ நினைத்தே பொழுதைக் கழித்தான்.

    மாலைப் பொழுது… நோயாளிகளைக் காண வந்த உறவினர்களும், நண்பர்களுமாக மூன்றாவது மாடியிலிருந்த வார்டு கலகலத்துக்கொண்டு இருந்தது. இதுதான் தக்க சமயமென செல்வம் பெண்கள் வார்டுக்குள் நுழைந்தான். கண்கள் காதலியைத் தேடின.

    “ஆன்ட்டி! அக்கா எங்கே?”

    விரக்தியுடன் காணப்பட்ட முதியவள், “இல்லே!” என்றாள் பதிலாக.

    “கேண்டீனுக்குப் போயிருக்காங்களா?” என்றான் விடாப்பிடியாக.

    “வீட்டுக்கு!”

    அவனுடன் பேசுவதையே தவிர்க்க விரும்புபவள்போல் நடந்துகொண்டவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாது, சற்று விழித்துவிட்டு, ஏமாற்றத்துடன் வெளியே நடந்தான்.

    எட்டு மணிக்கு வார்டே காலியானது. நப்பாசையுடன் மீண்டும் சென்று, “ஆன்ட்டி! அக்கா..,” என்று அவன் இழுக்க, “அக்காவோட என்ன பேசணும் ஒனக்கு?” என்று மிரட்டலாகக் கேள்வி வந்தது.

    முதலில் அதிர்ந்தவன், விரைவில் சமாளித்துக்கொண்டான். காதல் என்றால் லேசா? அதற்கு எவ்வளவு துணிச்சலும், சாமர்த்தியமும் வேண்டும்!

    “அக்காகிட்ட என்னோட கேசட் ஒண்ணு குடுத்தேன்..”

    “அக்கா கேட்டாங்களா?” முகத்தில் அடிக்காத குறை.

    ‘உடம்பு முடியாம இருக்கறப்போவே கிழவி இந்தப்போடு போடுதே! ஐயோ!’ என்று மிரண்டவன், தோள்பட்டை முன்னால் சரிய, அங்கிருந்து வெளியேறினான்.

    மறுநாள் காலை அப்பா வந்தார். முகத்தில் கடுமை.

    “புறப்படுடா!” என்று இரைந்தார்.

    அந்த வீட்டுக்கா! அவனுக்கு உதறல் எடுத்தது. மாமாவின் கை தன்மேல் படர்வதைப்போல் பிரமை எழ, சிலிர்த்துக்கொண்டான்.

    “தாத்தாவைப் பாத்துக்கிட்டு, இங்கேயே இருக்கேனேப்பா!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான்.

    “போதும், நீ பாத்துக்குட்ட லட்சணம்! பொம்பளைங்க படுத்திருக்கிற இடத்திலே ஒனக்கென்னடா வேலை?”

    அப்பா உறுமினார். “மானம் போகுது எனக்கு! ஒங்கம்மா காதில விழுந்தா, உசிரையே விட்டுடுவா!”

    தாத்தா ஈனஸ்வரத்தில் குறுக்கிட்டார்: “எத்தனை நேரம்தான் என் மூஞ்சியையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பான்? காலார நடந்து போயிருக்கான், பாவம்!”

    “நீங்க வேற! டாக்டர் என்னைக் கூப்பிட்டுச் சொல்றார், ‘ஒங்க பையன்மேல ஒரே புகார்! நர்சுகளை வம்புக்கு இழுக்கிறானாம், பெண்கள் வார்டுக்குள்ளே போய், ராத்திரி ஒரு பொண்ணோட ஒரே அரட்டை. எல்லாரோட தூக்கமும் கெட்டுப்போச்சாம்!’ அப்படின்னு. இவனுக்குப் பயந்து, அந்தப் பொண்ணோட அம்மா அதை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம். வெட்கக்கேடு!”

    தலை குனிந்தபடி, அவர் பின்னால் நடந்தான் செல்வம். புதிய கேசட் போனது போனதுதான் என்ற துக்கம் ஒருபுறம் எழ, அதைப் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டு, தன் நினைவாகவே செல்வராணி இருப்பதைப்போல் ஓர் ஆனந்தமான உணர்வு துக்கத்தை மீறி எழுந்தது. அது அவனுக்குள் ஒரு புது தெம்பை ஊட்டியது.
    அவன் வருகையை எதிர்பார்த்தவர்போல், வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் மாமா.

    “வாடா! எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியா?” கேலியாகப் பேசுவதுபோல், அவனது இடுப்பை அவர் கையால் வளைத்தார். விலகிப்போன இரை தானே வலியவந்து மாட்டிக்கொண்ட சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

    ‘என்னையும் ஒரு பெண் மதித்துப் பேசி இருக்கிறாள்!’ என்ற நினைவே அபார தைரியத்தைக் கொடுக்க, முரட்டுத்தனமாக அவர் கையை விலக்கினான் செல்வம். முறைத்தபடி, “ஒங்க கை ஒங்ககிட்டேயே இருக்கட்டும். என்மேல பட்டா, அப்புறம் அது ஒங்க ஒடம்பில இருக்காது!” என்று பல்லைக் கடித்தபடி, அடிக்குரலில் மிரட்டினான்.

    அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட வேகத்தில் தெரிந்தது.

    நிமிர்ந்த தலையுடன் வீட்டினுள் நுழைந்தான் செல்வம்.

    “கண்ணு! ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே! மொதல்லே குளி, போ!” அம்மாவின் வரவேற்பு.

    செல்வத்துக்கு எங்கிருந்தோ கோபம் வந்தது. “நான் ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்ல. ஒவ்வொண்ணையும் மத்தவங்க சொல்லிக் குடுத்திட்டு இருக்க வேணாம்!” என்று இரைந்தான்.

    ‘இந்தப் பயலுக்கு என்ன ஆயிடுச்சு!’ என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள் பெற்றவள்.

    Share
  • உன்னையறிந்தால் …… (45)

    நிர்மலா ராகவன்

    தற்காலத்தில் பண்டையகாலக் கருத்துகள்

    உனையறிந்தால்12

    கேள்வி: எக்காலத்திலோ தக்கதென சான்றோர் சொல்லிவிட்டுப்போன கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவைதானா?

    விளக்கம்:

    பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். காலம் அதேபோல் இன்றும் இல்லையே!

    முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. முன்னேற்றம் என்பதன் பொருளே மனிதனுக்கு மனிதன் மாறுபடும் — பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது இப்படி.

    `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் இவர்கள். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.

    வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, `ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர்.

    சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது?

    கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது.

    அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், `அப்பா!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று.

    தாயோ, `பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். `அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, `பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது.

    தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைத்துச் செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் இல்லற வாழ்வையே நரகமாக்கியது.

    `நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த மனிதர். இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை!

    கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள்.

    எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் வாசகர்கள் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் கதாநாயகனை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு?

    பெண்களுக்கு மொழிவன்மை ஆண்களைவிட அதிகம் என்கிறது உளவியல். ஆண்குழந்தைகளோ, கைகளால் செய்வது எதையும் பெண்களைவிடச் சிறப்பாகச் செய்வார்கள். இது புரியாது, பொறாமையாலோ, இல்லை, `எங்கே நம்மை மிஞ்சிவிடுவாளோ!’ என்ற பயத்தாலோ எதிர்க்கும் ஆண்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும்.

    நான் எழுத ஆரம்பித்தபோது, கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, `எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று என் கணவரின் ஒப்புதலைக் கேட்டேன். `கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், `இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போக, பலர் என் கணவரை விசாரித்தார்களாம், `அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று!
    இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை!

    ஒருமுறை, `திருக்குறளில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள்.

    பேசி முடித்ததும், ஒருவர் எழுந்து, `திருவள்ளுவர் பெண்களின் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று விண்ணப்பித்தார்.

    `அந்தக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம். வெளியுலகைப்பற்றி அதிகம் தெரியாமலிருந்திருக்கலாம். இப்போதும் அப்படியா?’ என்று நான் பதிலளித்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக பெண்கள் தலைக்குமேல் கையை உயர்த்தித் தட்டி, தம் ஆதரவைத் தெரிவித்தார்கள்!

    நல்ல வேளை, `பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது.

    உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிப்பது கல்விதான். களவாடவோ, அழிக்கவோ முடியாதது.

    ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா?
    அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா!

    `கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா?
    `எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி?
    `அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, `கணவர் திட்டினால்?’ என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா?

    ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் சில பழமொழிகளினால் பலம். நமது துன்பங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்?

    ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம்.

    `குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, `பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை.

    கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்களும், படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்களும் மட்டும்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைக்குப்பின் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது?)

    மலேசியாவில் மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் பிரதானமாக விளங்குகின்றனர்.
    `சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?!’

    இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு, நிலைமையை விளக்கினாள்: “சீனப்பெண்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள்,` நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் மது, மாது, மாஜோங் (சூதாட்டம்) என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை!’ என்று”.

    என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதை உறுதிப்படுத்தினாள்: “எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்குப் பதினஞ்சு வயசானபோது, `நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா எங்கேயோ போய்விட்டாள்”.

    மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களில் பலர் தம் சம்பாத்தியம் முழுவதையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். (விவாகரத்து கோருவதில் இந்தியப்பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்குமுன் என் வேண்டுகோளுக்கு இணங்கி, எனக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம்).

    `நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.

    எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். முடியாவிட்டால் விலகி, அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், `விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே!

    நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம் திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …… (44)

    நிர்மலா ராகவன்

    வருங்கால மனைவி

    உனையறிந்தால்1
    கேள்வி: நான் இருபது வயது மாணவன். என் நண்பர்கள் பதினேழு வயதிலேயே girl friends தேடிக்கொண்டார்கள். ஆனால் அப்போது ஏற்பட்ட காதல் எதுவும் நிலைக்கவில்லை. அதிகப் பிரச்னையற்ற இல்லற வாழ்வு அமைய எத்தகைய பெண்ணை மணக்க வேண்டும்?

    பதில்: பலே! உனக்கு வயதுக்கு மீறிய அறிவும், நிதானமும் இருக்கிறதே!

    பெற்றோரின் குறுக்கீடு அதிகம் இல்லாவிட்டால், தனக்குப் பொருத்தமான பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ஓர் இளைஞனுடையதாகிறது. முதலிலேயே சிறிது பழகுவதால், ஒருவருக்கு மற்றவரது குணாதிசயங்கள் புரிய வாய்ப்புண்டு. ஆனால், காதலிக்கும் காலத்தில் மிக ஜாக்கிரதையாக, தமக்கு இல்லாத நல்ல குணங்களைக்கூடக் காட்டி மயக்கும் ஒருவர் (ஆணோ, பெண்ணோ), கல்யாணத்துக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறார். அப்போதுதான் ஏமாற்றம், கோபம் எல்லாம் எழுகின்றன.

    பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் காதல் கொள்வது, அப்படிப் பார்த்த பெண்ணைத் துரத்தி அடிப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது. புதினங்களில் படித்திருப்பீர்கள். ஒரு பெண் வாசகசாலையிலிருந்து கட்டுப்புத்தகங்களை எடுத்து வருகிறாள். அப்போது தற்செயலாக அவள்மேல் மோதி, மன்னிப்பு கேட்கிறான் — வேறு யார்? — கதாநாயகன்தான்! குனிந்து, அவளுடைய புத்தகங்களைத் திரட்டியும் கொடுக்கிறான். இது போதாதா, இருவருக்குமிடையே காதல் மலர! (எதிரில் வந்து மோதுபவர்கள்மேல் எல்லாம் காதல் வருமா? யோசிக்க வேண்டிய விஷயம்). இதெல்லாம் எப்படி நிலைக்கும்?

    எனக்குத் தோன்றும் சில பொது விதிகளை அலசலாமா? சில இளைஞர்களுக்கு நான் அறிவுரை(?) கூற, அவர்களால் திருமண வாழ்க்கையைத் தாக்குப்பிடிக்க முடிகிறது.

    1. புகழ்ச்சி

    ஏதாவது ஆதாயம் இருந்தால்தான் புகழ்வது என்றாகிவிட்டதே இன்றைய உலகம்!

    ஆணோ, பெண்ணோ, அதிகம் புகழ்கிறவரை நம்பி, தன் வாழ்க்கையை ஒப்படைத்துவிடக் கூடாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலை வாரிவிடக்கூடும்.

    `நீ எவ்வளவு அழகா, கம்பீரமா இருக்கே! வயதுக்கு மீறிய அறிவு உனக்கு!’ என்று பேசி, அனுபவம் இல்லாதவர்களை மயக்குவது எளிது. இப்படிப் பேசுகிறவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    2. வயது

    அதிக வயது வித்தியாசம் நல்லதல்ல. ஏனெனில், கணவர் மனைவியை ஒரு குழந்தைபோல் பாவித்து, அருமையாக நடத்துவார். இதைப் பெண்கள் விரும்ப மாட்டார்கள். (சமவயதினராக இருந்தாலும், பெண்கள் சீக்கிரம் வயதானவர்கள்போல் தோற்றம் அளிப்பார்களே!)

    3. பொருளாதாரம்

    பெரியவர்கள் நிச்சயித்த திருமணம் என்றால் குடும்ப அந்தஸ்து ஏறக்குறைய சமமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். (தமிழ்ப் படங்களில்தான் வேலைக்காரன்மேல் காதல் கொள்வதெல்லாம் நடக்கும். அபூர்வமாக, குடும்ப நிலை சரியாக இல்லாத பெண்களும் இப்படி நடந்துகொள்வதுண்டு).

    பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு முதலில் காதலன் செய்வதெல்லாம் உகந்ததாகப்பட்டாலும், நாளடைவில், இரு குடும்பங்களுக்குமிடையே இருக்கும் வித்தியாசம் பெரிதாகப்படும். ஏமாற்றம் விளைவது இப்படித்தான்.

    வசதி குறைந்த குடும்பத்திலிருந்து வந்த பெண்ணோ மலைத்துப்போவாள். ஆடம்பரமான வாழ்க்கை நடத்தும் புக்ககத்தினரின் ஏளனத்துக்கு ஆளாகக்கூடும். இல்லையேல், காணாததைக் கண்டதுபோல், செலவழிப்பாள். சம்பாதித்துப்போடும் கணவன்பாடுதான் கஷ்டம். தட்டிக் கேட்டால், குடும்ப அமைதி கெடும் என்று பெருமூச்சுடன் விட்டுக்கொடுத்துப் போகும் கணவன்மார்களை நான் அறிவேன்.

    4. கல்வித் தகுதி

    ஆணுக்கும், வருங்கால மனைவிக்கும் கல்வியிலும் ஏறக்குறைய சமநிலை இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக அமர்ந்து, எல்லா விவகாரங்களையும் அலசமுடியும். ஒருவரது நண்பர்களுடைய உரையாடலில் மற்றவர் கலந்துகொள்ள முடியும். எத்தனை நாட்கள்தான் காதல் வாசகங்களையே நம்பியிருக்க முடியும்!

    5. உத்தியோகம்

    கணவனுடைய உத்தியோகத்தைப்பற்றி மனைவிக்கு ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரே உத்தியோகத்தில் இருப்பவர்களானால், பேசுவதற்கு, கலந்தாலோசிப்பதற்கு, நிறைய சமாசாரங்கள் இருக்கும். ஆனால், போட்டி எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    கதை: கணவன், மனைவி இருவருமே பிரபலமான பின்னணிப் பாடகர்கள். `உங்களுக்குள் போட்டி, பொறாமை வருகிறதா?’ என்று நான் அந்த இளைஞரைக் கேட்டேன்.

    `இப்போது இருவருக்குமே நிறைய வாய்ப்புகள் வருவதால், போட்டி இல்லை!’ என்று பதிலளித்தார்.

    அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டால், மனைவியின் முன்னேற்றம் எரிச்சலைத் தரும் என்றாரோ?

    6. தோழமையை வளர்ப்பது

    கணவன், மனைவி இருவருமே தத்தம் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டால், தோழமையும், நெருக்கமும் வளரும். ஆனால், அதை `பலகீனம்’ என்று தவறாக எண்ணி, அதிகாரம் செலுத்த முயலும் துணையிடம் கண்டிப்பாக இருக்க வேண்டுவது அவசியம்.

    7. வெளியழகு எதற்கு?

    அழகை மட்டும் கண்டு மோகித்து மணந்துவிட்டு, `இவளுக்குப் பிறருடன் பழகவே தெரியவில்லை. முட்டாள்!’ என்று, காலங்கடந்து பழிப்பானேன்! அதோடு, அழகு என்ன, நிலைக்கக்கூடியதா?

    கதை: ஒரு விருந்தில் புதிதாகத் திருமணமான அந்த தம்பதியரைச் சந்தித்தேன். `எங்களுடையது காதல் திருமணம்!’ என்று பெருமையாகக் கூறிய அத்தமிழர் மிக அழகாக இருந்தார். அவருடைய மனைவி ஒரு சீனப்பெண். ஒரே பார்வையில், `குண்டு!’ என்றுதான் தோன்றும். களையான முகம் என்றுகூட வர்ணிக்கத் தோன்றாது. வயதுக்கு மீறிய முதிர்ச்சி முகத்தில்.

    சாதாரணமாக, காதல் திருமணம் என்றால் அழகுதான் முதலிடம் வகிக்கும் என்று நினைத்தவர்களுக்கு இந்தத் தொடர்பு அதிசயமாக இருந்தது. எல்லாரும் கலந்து பேசியபோது அந்தப் பெண்ணும் அவ்வப்போது கலந்துகொண்டாள்.
    எங்கள் முடிவு: இவள் மிக நல்ல அம்மாவாக இருப்பாள்!

    எப்படி அந்த முடிவுக்கு வந்தோம் என்றெல்லாம் அலசத் தோன்றவில்லை. அந்த இளைஞருடைய தாய் அன்பானவளாக, பரிவானவளாக, பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பவளாக இருக்கவேண்டும். தன் தாயைப் போலிருந்த ஒருத்தியை விரும்பி மணந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை நிச்சயம் இன்பகரமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.

    8. ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்

    சிறு சிறு விஷயங்களுக்காக அதிக உணர்ச்சிவசப்பட்டு, மகிழ்ச்சி, கோபம், ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துபவர் ஆணோ, பெண்ணோ, அவரை மணந்தால், வாழ்க்கை SEE-SAW போலிருக்கும். அமைதி, நிதானம் இதெல்லாம் இவர்களுக்குப் பிடிபடாதவை. என்றுமே சிறுபிள்ளைத்தனம் மாறாது இருப்பவர்கள்.

    பதின்ம வயதுப் பையன்கள் தங்களுக்குப் பிடித்த ஆசிரியைகள்மேல் பித்தாக இருப்பார்கள். தன் காதலியாகவே ஆசிரியையை மதித்து, வீட்டில் அவளைப்பற்றி ஓயாமல் பேசுவார்கள். ஒரே நாளில் பல முறை வணக்கம் தெரிவிப்பார்கள்! `எனக்கு ஒரு மனைவி வந்தால், அவள் இந்த ஆசிரியைமாதிரியே இருக்கவேண்டும்!’ என்று கனவு காண்பார்களாம். ஒருவர் என்னிடம் பகிந்துகொண்டது இத்தகவல்.

    ஆனால், ஓர் ஆசிரியையின் அறிவு முதிர்ச்சி, மனப்பக்குவம் எத்தனை இளம்பெண்களுக்கு இருக்கும்?

    9. நடிகைமாதிரி

    வேறு சிலர், எப்போதும் புடவை உடுத்து, ஒற்றைப் பின்னலும், தலைநிறையப் பூவுமாக திரைப்படங்களில் தாம் கண்ட நடிகைபோல் வருங்கால மனைவி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். என்னைக் கேட்டால், இதுவும் ஒருவிதக் கட்டுப்படுத்துதல்தான்.

    அவர்கள் விருப்பப்படி ஒரு பெண் மனைவியாக வாய்த்து, அவள் தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டால், அன்பு குன்றிவிடுமா? சண்டை ஆரம்பிக்குமோ?

    10. எதிர்பார்ப்பு

    பெற்றோருக்கு ஒரே பிள்ளையானால், `என் பெற்றோர் என்னுடன்தான் இருப்பார்கள்!’ என்று முதலிலேயே கண்டிப்பாகச் சொல்லிவிடுவது நலம்.

    `இன்னும் பத்து வருடங்கள் கழித்தும், இவளுடன் (இவருடன்) சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்!’ என்று தோன்றினால், துணிந்து மணம் புரியலாம். இருப்பினும், காலப்போக்கில் குணம் மாறலாம். யாரும் என்றும் ஒரேமாதிரி இருப்பதில்லை.
    இப்படியெல்லாம் பொறுக்க ஆரம்பித்தால், அறுபது வயதுவரை பிரம்மச்சாரியாகவே காலம் கடத்த வேண்டியதுதான் என்பவர்களுக்கு:

    மணக்குமுன் விழிப்பாக இரு. மணந்தபின், அரைக்கண்ணை மூடிக்கொள்! (BENJAMIN FRANKLIN)

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் ……… (43)

    நிர்மலா ராகவன்

    தாம்பத்தியத்தில் தலைவலி

    உனையறிந்தால்
    கேள்வி: எங்களுக்குக் கல்யாணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. என் கணவர் என்னுடன் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறார். தினமுமே எங்களுக்குள் சண்டை வருகிறது. இதை எப்படித் தடுப்பது?

    விளக்கம்: என்னதான் வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், நம் விருப்பத்திற்கேற்ப ஒருவரை மாற்ற முடியாது. நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வதுதான் முடிந்த காரியம். பெரிய மனதிருந்தால், மற்றவரது குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். (நம்மை ஒத்தவர்களிடம் பேசிச் சிரிக்கலாம்).

    கணவன்-மனைவியருக்குள் ஏன் சண்டை பூசல் வருகிறது?

    1 ஒருவர் பேசும்போது, மற்றொருவர் தன்பாட்டில் ஏதாவது செய்துகொண்டிருப்பது. உதாரணமாக, கணவரோ அல்லது மனைவியோ தொலைகாட்சியில் கவனத்தைப் பதித்தபடி, மற்றவர் பேசும்போது அசுவாரசியமாக `உம்’ கொட்டியபடி இருத்தல். பத்திரிகையைப் படிப்பதில் ஆழ்ந்திருத்தல், கைத்தொலைபேசியில் வேறு யாருடனோ உரையாடுவது இதெல்லாம்கூட தொடர்பைத் தகர்க்கும். `தன்னைக் கவனிக்கிறாரா (கவனிக்கிறாளா), பார்!’ என்ற ஆத்திரத்தை விளைவிக்கும். இப்படி எதிலாவது ஈடுபட்டிருந்தாலும், அதைத் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டுக் கவனிப்பது நம்முடன் பேசுபவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

    ஒருவர் முக்கியமான விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும்போது, இடைமறித்து ஏதாவது பேசுவது, `நீ எப்பவுமே இப்படித்தான்!’ என்ற வகையில் அலட்சியப்படுத்துவது — இதெல்லாமே சண்டைக்குக் காரணமாக அமையும். தலையை லேசாக அசைத்து, ஒருவர் கூறுவதை நாம் சரியாகப் புரிந்துகொண்டோமா என்று அவர் கூறியதில் சந்தேகம் கேட்பது உசிதம்.

    நாம் கவனிக்கிறோம் என்பதை உடல் மொழியால் காட்டுவது: தலையைச் சற்றே குனிந்து, காதை ஒருவர் பக்கம் திருப்பிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானால், அவருக்கு நம்மிடம் மேலும் பேச உற்சாகமாக இருக்கும்.

    2.  நம் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு, பிற வேலைகளைச் செய்வதே தலையாய கடமையாக எண்ணிச் செய்வதுதான் நல்ல பெண்ணுக்கு அழகு என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (அல்லது, வளர்க்கப்பட்டிருக்கிறோம்). அப்படி நடந்தால், நாளடைவில் எரிச்சல்தான் உண்டாகும். அந்த ஆத்திரம் வேறு பக்கம் திரும்பும்.

    கதை: நான் வீட்டிலும், வெளியிலும் வேலை பார்த்த காலத்தில், சனிக்கிழமையானால் காரணமின்றி குழந்தைகளிடம் எரிந்து விழுவேன். அவர்கள் சிரித்தபடி, `நாங்கள் இன்று சமைக்கிறோம். நீ எழுதும்மா!’ என்பார்கள். அவர்களுக்குச் சமைக்கத் தெரியாது என்பது வேறு விஷயம். அதன்பின், ஒவ்வொரு சனியும் எங்கள் வீட்டில் நூடுல்ஸ்தான்! மேக்கியையும், மசாலாவையும் சேர்த்துப்போட்டு, நீரில் கொதிக்கவைத்தால், ஆயிற்று சமையல்! நானும் உற்சாகமாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க ஆரம்பித்தேன்.

    நீதி: உங்களுக்கு எழுதவோ, படிக்கவோ பிடிக்குமானால், அதை அடியோடு விடத் தேவையில்லை. வாரம் சில தினங்களாவது சற்று நேரத்தை ஏதாவது ஒரு பொழுதுபோக்கிற்காக ஒதுக்கலாமே! பெரிய தியாகிபோல் உங்களை எண்ணிக்கொள்ளாது, உங்கள் குடும்பத்தினருடன் கலந்து பேசினால் புரிந்துகொள்ள மாட்டார்களா, என்ன!

    3. பரஸ்பர நம்பிக்கை

    `நான் ஏதாவது நடிகையின் அழகைப் புகழ்ந்தால்கூட என் மனைவிக்குக் கோபம் வருகிறது!’ என்றார் என்னுடன் வேலை பார்த்த நண்பர். என்னிடம் கேட்டார், `அவளுக்குக் கண் அழகா இருக்கும். ரொம்ப குறைச்சலா டிரெஸ் போட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவாளே! அவ பேர் என்ன?’

    நான் சிரித்தபடி பதில் சொன்னேன். (நீங்களும் ஊகித்திருப்பீர்கள்).

    இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது! எங்கோ இருக்கும் அந்த நடிகை இவரை ஒரு கூட்டத்தில் இனம் கண்டுகொள்ளப்போகிறாளா, என்ன!

    கதை: `நமக்குத் திருமணமாவதற்குமுன் நான் பல பெண்களுடன் பழகியிருக்கிறேன்!’ என்று ஒருவர் தான் காதலித்து மணந்த மனைவியிடம் வெள்ளைமனத்துடன் கூறினாராம் — காதலிக்கும் இருவருக்குள் எவ்வித ரகசியமும் இருக்கக்கூடாது என்று நினைத்ததால். அதுதான் அவர் செயுத தவறு. அவள் அவரை அதன்பின் நம்பவே மறுத்துவிட்டாள். அனுதினமும் மனைவி ஏவிய சொல்லம்புகளைப் பொறுக்காது, விவாகரத்து பெற்றுவிட்டதாக என்னிடம் வலிய வந்து கூறினார். `நான் அவளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆனால், என் மணவாழ்க்கை ஏன் பொய்த்தது?’ என்றவரிடம் அனுதாபம்தான் காட்டமுடிந்தது என்னால்.

    தனது, அல்லது வாழ்க்கைத்துணையின், கடந்த காலத்தையே ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிகழ்காலம் நரகமாகிவிடாதா! அதேபோல், வருங்காலக் கனவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதும் நிகழ்காலத்தைப் பாதிப்பதுதான்.

    4. நம்மையே நாம் ஏற்காதபோது, நம் உணர்ச்சிகளை மதிக்காதபோது, மகிழ்ச்சி இராது.

    `எப்போதும் என்ன யோசிப்பீர்கள்?’ என்று நான் சிலரைக் கேட்டேன்.

    ஒரு பெண்மணியின் பதில்: `தெரிந்தவர்கள் யாராவது என்னைப் பார்த்துச் சிரிக்காவிட்டால், மனமுடைந்து போய்விடுவேன்! நாம் என்ன தப்பு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வி நாளெல்லாம் மண்டையைக் குடையும்.

    தன்னைப்பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்களோ என்ற கவலையிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு என்றுமே நிம்மதி கிடையாது. ஏனெனில், எல்லாருமே அவர்களைப்பற்றி ஒரேவிதமான எண்ணத்தைக் கொண்டிருக்க மாட்டார்களே!

    தீர்வு: `நான் இப்படி நடப்பதுதான் எனக்கு ஏற்றதாக, நிம்மதியை அளிப்பதாக இருக்கிறது. மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகட்டும்,’ என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    வேறு சிலர் துக்கம், இழப்பு, தனிமை முதலியவற்றில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அதனால் தாம் பாதிக்கப்பட்டதாகக் காட்டிக்கொள்வது இழுக்கு என்று நினைப்பார்கள்.

    கதை: ஒரு கூட்டுக்குடும்பத்தில் பத்து வயதான சிறுவன் இறந்து ஒரு மாதத்திற்குள் தீபாவளி கொண்டாட்டம் தடபுடல் பட்டது. `அவன் விதி அவ்வளவுதான்!’ என்று விட்டேற்றியாகப் பேசினார்கள். அக்குடும்பத்தில், பெற்ற தாய் உள்பட, யாருக்குமே சிறிதளவுகூட துக்கம் இருந்திருக்காதா? ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்?

    எங்கள் உறவினர் ஒருவருக்கு நான்கைந்து குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள் இறந்தனவாம். ஆனால், தாயார் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாது, தன் கடமைகளைச் செய்துவந்தாள். வீட்டிற்கு மூத்த மருமகள் என்ற முறையில், அதுதான் அவளிடம் எதிர்பார்க்கப்பட்டது.

    இம்மாதிரி தமது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, உள்ளுக்குள்ளேயே மறுகுபவர்கள் ஆத்திரம், குற்ற உணர்வு, அவமானம் என்று தமக்கே புரியாத பல்விதமானவைகளுக்கு ஆளாகிறார்கள். பிறரிடம் ஓயாது குற்றம் காண்பது, பழிகூறுவது, காரணமில்லாது கோபப்படுவது, அல்லது உள்ளுக்குள்ளேயே ஒடுங்கிவிடுவது — இதெல்லாம் வேண்டாத விளைவுகள். இம்மாதிரி தருணங்களில், துணைவர் (துணைவி) தன்னையும் பார்த்துக்கொள்ள வேண்டுவது அவர் கடமை என்று எண்ணுவார்கள். நடக்கிற காரியமா!

    அப்படி ஒருவர் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால், கூட இருப்பவருக்கும் நிம்மதி போய்விடும். பித்துப் பிடித்துவிடுவது போலிருக்கும். `இது அவர் வந்த வழி!’ என்று தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

    4. மணமானவர்கள் மனத்தாங்கல் இல்லாது நட்புடன் பழக, வீட்டு வேலைகளையும், செலவுகளையும் பகிர்வது நல்லதொரு வழி. இருவருமே உத்தியோகம் பார்க்கும் நிலையில் மட்டுமல்ல; நாள்பூராவும் வீட்டிலேயே அலுத்துச் சலித்து வேலை பார்க்கும் மனைவிக்கு சிறிது உதவி செய்தால் அவளுடைய நன்றியையும் அன்பையும் பெறலாம்.

    5 `கல்யாணம்தான் ஆகிவிட்டதே! இனி என்ன!’ என்று தம்பதிகள் அலட்சியமாக இருந்தால் உறவு எப்படி பலப்படும்? வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குங்கள் — இருவரும் எங்காவது தனியாக ஊர்சுற்ற. முதல் நாளும், மறுநாளும் சண்டை போடலாம்!

    தாம்பத்திய உறவுகளில் இருக்கும் எல்லா சிக்கல்களையும் தீர்க்க முடியாது. அப்படி ஒரு நிலை இருந்தால், அவைகளைப்பற்றி எந்நேரமும் நினைத்தோ, பிறரிடம் பேசிப் பேசியோ ஆறுதல் தேட நினைக்காது, வேறு ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவதுதான் நிம்மதிக்கான வழி.

    Share
  • உன்னையறிந்தால் ….. (42)

    நிர்மலா ராகவன்

    வளர்ப்பு முறையில் வித்தியாசம்

    உனையறிந்தால்

    கேள்வி: இரு தலைமுறைகளுக்குமுன் சிறு குழந்தைகளுக்கு மூத்தவர்கள் விளையாட்டு காட்டி வளர்த்தார்கள். இப்போது வளர்க்கும் முறைதான் குழந்தைகள் வளர்வதில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?

    விளக்கம்: ஒரு சிறு குழந்தைக்கு ஆகாரம் தூக்கத்திற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது. தானும் ஒரு உயிர் என்று பிறர் புரியவைத்தல் குழந்தைக்கு பாதுகாப்பும், களிப்பும் ஒருங்கே ஊட்டக்கூடியது.

    `குழந்தைக்குத்தான் பேசத் தெரியாதே!’ என்று மௌனமாகவே அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, அதனுடைய கண்ணைப் பார்த்துப் பேசுதல் நல்லது. ஏதாவது கதைதான் பேசவேண்டும் என்பதல்ல. வாயால் விதவிதமான ஒலிகள் எழுப்பினால்கூடப் போதும். நம் முகத்தில் இருக்கும் அன்பும் சிரிப்பும் குழந்தையையும் தொத்திக்கொள்ளும்.

    மாறாக, அழவைப்பதையும், அச்சத்தை விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும். நமக்கு வேடிக்கையாக இருப்பது மற்றவருக்கு ஒவ்வாததாக இருந்தால், அதில் என்ன வேடிக்கை? அன்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரிகிறது. பிறருக்கோ, குழந்தை ஒரு விளையாட்டுப் பொருள். அவ்வளவுதான்.

    குழந்தையை மகிழ்விப்பது எளிது. ஏனோ இது பலருக்கும் புரிவதில்லை. `உன் மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டு!’ என்பதுபோல், “என்ன பண்றே? சமத்தா தூங்கினியா?” என்றால்கூடச் சிரிக்கும்.

    இரண்டு நாய்கள் ஒன்றையொன்று துரத்துவதைப் பார்த்தால், நமக்கே பயமாக இருக்கும். ஆனால், அதை மறைத்து, `ஒண்ணுமில்லே. ஓடிப் பிடிச்சு விளையாடறது!’ என்று சொன்னால், பயமின்றி, பெரிய சிரிப்புடன் குழந்தை அந்த `விளையாட்டை’ ரசிக்கும்.

    இதுதான் அளவுகோல். குழந்தை சிரித்தால் நாம் செய்வது அதற்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

    பிறந்ததிலிருந்தே குழந்தையின் பெயரை நீட்டி முழக்கி அழைத்தால், அடுத்தமுறை, தன்னைத்தான் விளிக்கிறார்கள் என்று புரிந்து, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டுவதில்லை. நீங்கள் சமையலறையில் வேலையாக இருக்கும்போதோ, அல்லது கணினி வேலையைப் பார்க்கும்போதோ குழந்தையை அருகிலேயே படுக்க வைத்து, அவ்வப்போது அதன் பெயரைக் கூப்பிட்டுப் பாருங்கள். உற்சாகமாகக் காலை உதைக்கும். தன்னுடன் யாரோ உறவாடுகிறார்கள் என்ற உணர்வில் தனிமையாக உணராது. (இம்மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தைக்கு, சில வருடங்களுக்குப்பின், பள்ளி ஆசிரியைக்கே கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கணினி அறிவு வளர்ந்திருப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

    கதை: என் மகன், சசி, உட்கார ஆரம்பித்ததும், நான் சமைக்கும்போது அவனுக்கு ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தைக் கொடுத்துவிடுவேன். தரையில் மோதி, அது எழுப்பும் ஒலிதான் அவனுக்கு விளையாட்டு, மகிழ்ச்சி. அம்மா கண்ணெதிரிலேயே இருக்கிறாள் என்ற நிறைவும் பாதுகாப்பாக உணரச் செய்திருந்தது.

    நான்கு வயதில் அவன் நீரில் மூழ்கி இறந்ததும், அப்போது எங்களை வீட்டுக்கு வருகை புரிந்திருந்த என் தாயார், `இவ்வளவு பெரிய பாத்திரம் எப்படி நசுங்கியது?!’ என்று நம்பமுடியாது கேட்டபோது, நானும், மகளும் சேர்ந்து புன்னகைத்தோம், ஒரு சந்தோஷகரமான நினைவில். `அது சசியோட விளையாட்டுச் சாமான்!’ என்றேன். ஓருயிர் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால், உயிரற்ற பொருட்கள் என்னவானால் என்ன!

    தலை நிற்க ஆரம்பித்ததும், சுமார் மூன்று மாதங்களான குழந்தைக்கு, `சாஞ்சாடம்மா சாஞ்சாடு,’ என்று ஆட்டுவார்களே பாட்டிமார்கள்? இது வெறும் விளையாட்டில்லை. குழந்தைகளின் முதுகெலும்பு பலப்பட வைக்கும் தேகப்பயிற்சி. நாம் தொடுதலும், தான் ஆடுவதும் குழந்தையை மகிழ்விப்பது. அதைக் காட்ட ஒரேயடியாகக் குதிக்கும்.

    இதேபோல் இன்னொன்று, `தென்ன மரத்திலே ஏறாதே!’ முதலில் கூறியது பக்கவாட்டில் ஆடுகிறதென்றால், இது நம் கணுக்காலில் உட்காரவோ, நிற்கவோ வைத்திருக்கும் குழந்தையை மேலும் கீழுமாக குழந்தையைத் தூக்கிப்போடுவது.
    இந்தப் பாட்டெல்லாம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், முதல் இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டே சமாளிக்கலாம். மேலும் கீழுமாக இருக்கும் தொனிதானே குழந்தைகளுக்கு வேண்டும்!

    இம்மாதிரியான அங்க அசைவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்கள் கலகலவென்று சிரித்தால், அது தன்வசம் இழக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இப்படி நிகழ்காலத்திலேயே இருப்பது குழந்தைகளுக்கே கைவந்த விஷயம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

    ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தது, பிடிக்காதது வேறுபடும். பெண்குழந்தைகள் ரொம்ப அருமையாக வளர்க்கப்படும்போது, மேற்கூறிய விளையாட்டுகளால் பயந்து அழும்.

    நம் அனுபவங்களில் சிலவற்றையும் குழந்தையுடன் பகிரலாம். ஸ்விட்ச்சைப் போட்டால் மின்சார விளக்கு எரியும். இது நமக்குத் தெரியும். எட்டு மாதக் குழந்தையின் பிஞ்சு விரலை ஒரு ஸ்விட்ச்சின்மேல் வைத்து, நம் விரலால் அதை அமுக்கிவிட்டு, `ஹை! லைட் எரியறதுடா!’ என்று ஒரேயடியாக ஆச்சரியப்படுங்கள். குழந்தைக்கு எதையோ சாதித்துவிட்டதில் பெருமை தாங்காது. மகிழ்ந்து சிரிப்பான். அதுவே தினமும் அவன் காத்திருந்து செய்யும் வேலையாகப்போகும்.

    நடக்கத் தெரிந்த குழந்தையானால், தான் பக்கத்தில் இருப்பதையே பொருட்படுத்தாது, நாம் வேலையில் மும்முரமாக இருக்கும்போதுதான் படுத்தும். அதாவது, நம் கவனத்தை ஈர்க்க ஏதாவது குளறுபடி செய்யும். திட்டி என்ன பயன்! `என்னையும் கொஞ்சம் கவனியேன்!’ என்ற அதன் சொல்லத் தெரியாத வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாதது நம் தப்புதானே?

    முன்பு, ஒவ்வொரு கூட்டுக்குடும்பத்திலும் பொழுதுபோவது குழந்தைக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. யார் மடியிலாவது உட்கார்ந்திருக்கும். எவராவது தூக்கிக்கொண்டு விளையாட்டுக் காட்டுவர். குழந்தையும் கலகலப்பாகப் பேசக் கற்கும்.

    இப்போதோ, டிவி-தான் உற்ற தோழன். கொஞ்சம் வளர்ந்ததும், கணினி. தனியாக அறையில் அமர்ந்து, தன்பாட்டில் ஏதோ செய்துகொண்டிருக்கும் சிறுவன்! யாரைக் குற்றம் சொல்வது?

    தொடருவோம்.

    Share
  • உன்னையறிந்தால் ….. (41)

    நிர்மலா ராகவன்

    நீங்கள் ஒரு ஹெலிகாப்டரா?

    உனையறிந்தால்11
    கேள்வி: இடைநிலைப்பள்ளி மாணவனான நான் எது செய்தாலும், அதில் ஏதாவது தப்பு கண்டுபிடித்து, கண்டனம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள் என் தாய். அவர்கள் சொல்லும் வழியைத்தான் கடைப்பிடிக்க வேண்டுமாம். எனக்குப் பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது. எங்கள் இருவரில் யாரிடம் கோளாறு?

    பதில்: நிச்சயம் உன்மேல் ஒரு தவறுமில்லை.

    ஹெலிகாப்டர் எப்படி ஒரே இடத்தில் சுற்றுமோ அதுபோல தம் குழந்தையை ஓயாது கண்காணிக்கும் உங்கள் தாய் போன்ற பெற்றோரை ஹெலிகாப்டர் பெற்றோர் என்று வர்ணிக்கிறார்கள்.

    `பிறர் என்ன சொல்லி விடுவார்களோ!’ என்றஞ்சி, மிகுதியாக கவனம் செலுத்தி, மகன் எது செய்யும்போதும் கூடவே இருப்பார்கள் சில பெற்றோர். `அப்போதுதானே அவனைப் பிறர் மெச்சுவார்கள்!’ என்று அவர்கள் எண்ணியதற்கு நேர்மாறாகத்தான் நடக்கும்.

    நாளடைவில், எதற்கும் அம்மாவின் கையை எதிர்பார்க்கும் நிலை வரும் பையனுக்கு. சுதந்தரமாக எதையும் செய்துகொள்ள சோம்பல், ஒரு கையாலாகாத்தனம். பிற்காலத்தில் தாங்கள் எதிர்கொள்ள நேரிடும் இழப்பு, தோல்வி, ஏமாற்றம் முதலியவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்தைப் பலர் இப்படித்தான் — பெற்றோரின் மிகையான அக்கறை, பாதுகாத்தல், கண்காணிப்பு முதலியவற்றால் –இழந்துவிடுகிறார்கள். .

    பெற்றோர், அல்லது ஒரு சிறுவனைப் பார்த்துக்கொள்ளும் தாத்தா-பாட்டி, வெவ்வேறு காரணங்களால் இப்படி ஆகிவிடுகிறார்கள்.

    1.நிறையப் படித்திருக்காதவர்களாக இருந்தால், தாம் அடையமுடியாத வெற்றிகளைத் தம் பிள்ளைகளாவது அடையவேண்டும் என்ற வெறியே இவர்கள் போக்கை நிர்ணயிக்கிறது.

    2.பிறர் குழந்தைகள் எதையும் செவ்வனே செய்து முடிப்பதைக் கண்டு, தாம் பெற்றவை அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இன்னொரு காரணம். எங்காவது தொய்வு ஏற்பட்டு, தோல்வி அடைய நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அவர்களது கலக்கம் பிள்ளைகளையும் தொத்திக்கொள்கிறது என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.
    3.தனது பிள்ளை செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தப்பு கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவருக்குத் தாழ்மை உணர்ச்சி மிகுந்திருக்கும். `என்னைப்போல்தானே என் மகனும் இருப்பான்!’ என்று அர்த்தமற்ற கவலை சூழ, அவன் அப்படி ஆகாதிருக்க பெருமுயற்சி எடுத்துக்கொள்வதாக எண்ணி, குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். உண்மையில், அவனை அவன் போக்கில் விட்டால் இன்னும் வேகமாக முன்னேறுவானே!

    4.பிள்ளைக்கு எத்தனை வயதானாலும், அவனைச் சின்னக் குழந்தையாகவே பாவித்து, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வது அன்பு மிகுதியால் அல்ல. எங்கே மகன் பெரியவன் ஆனதும் தன்னை நிராதரவாகவிட்டுப் போய்விடுவானோ என்ற இனம்புரியாத பயம். அல்லது, `குழந்தைதானே!’ என்ற சப்பைக்கட்டு, எந்த வயதிலும்.

    கதை: அந்த எட்டு வயதுப் பையனுக்கு ஒவ்வொரு வேளையும், அம்மா அல்லது பாட்டி சோற்றைப் பிசைந்து வாயில் ஊட்டுவார்கள். யாராவது கேட்டால், `அவன் ரொம்ப நிதானமாகச் சாப்பிடுவான். கீழே ஒரேயடியாக இறைப்பான்!’ என்று காரணம் சொல்வார்கள்.

    பல சிறுவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். சாப்பிட்டு முடித்ததும், அந்த இடத்தை அவர்களையே சுத்தம் செய்யச்சொன்னால், சில ஆண்டுகளில் கீழே சிந்தாது சாப்பிடப் பழகுவார்கள்.

    எந்த வயதிலும், சிறுவன் தானே ஒரு காரியத்தை ஏதோ தனக்குத் தெரிந்த விதத்தில் செய்துவிட்டு, அது சரியாக இல்லாதுபோனால், அதை எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று சொல்லிக் கொடுக்கலாம். தோல்வி அடைந்தாலும், அதிலிருந்து கற்கலாம் என்ற அறிவைப் புகட்ட வேண்டுவது பெற்றோரின் கடமை. அதைவிட்டு, செய்வதற்கு முன்னரே எதற்குக் கண்டனம்?

    இபம்மாதிரியான சிறுவர்கள் திருமணமான பின்னரும் மனைவி தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இவர்களும் ஹெலிகாப்டராகி விடுகிறார்கள்.

    `உடம்புக்கு ஏதாவது வந்தால், என் கணவர் குழந்தையாகி விடுவார்!’ என்று பெண்கள் பெருமையாகப் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் பெருமையாகத் தோன்றுவது நாளடைவில், எரிச்சலைத்தான் உண்டுபண்ணும்.

    சிறு வயதில் (ஹெலிகாப்டர்) பெற்றோர் சொல்வதை அப்படியே கடைப்பிடித்து நடந்துவிட்டு, பின் அதே அதிகாரத்தை கொண்டவனுக்கு அளிக்கிறார்கள் பெண்கள்.

    இம்மாதிரியான பெண்கள் தம்மை அப்படி வளர்த்த பெற்றோரை வெறுப்பதாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். `உன்மீது உன் தாய் அவ்வளவு பாசமாக இருந்தார்களே! நீ இப்படி அவர்களை ஓயாமல் பழிப்பது நன்றாக இல்லை!’ என்று நான் நாற்பதுக்கு மேற்பட்ட ஒருத்தியைக் கண்டித்தபோது, அவளுக்கு அழுகை வந்துவிட்டது. `என் நிலையிலுள்ள எல்லாருமே இப்படித்தான், தெரியமா?’ என்று பதிலளித்தாள், வீம்புடன்.

    ஓயாது தொணதொணத்தாலும், பெற்றோருக்கு தம் பெண்ணின் நலனில் இருந்த அக்கறை அவளை அதிகம் புரிந்துகொள்ளாத கணவனுக்கும் இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயம்.

    `முட்டாள்!’ என்று பிறர் எதிரிலேயே மனைவியை எதற்கெடுத்தாலும் பழிப்பார் அந்தப் `பெரிய’ மனிதர். மனைவி எது செய்தாலும், அவர் சொன்னபடிதான் இருக்கவேண்டும். அவளும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டாள். எப்போதும் கணவரது சுகத்தையே அவள் நாடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில், தன் ஆற்றலை அவள் முழுமையாக வெளிக்கொணர முடியாது தடுத்துவிட்டார். தன்னை மிஞ்சிவிடுவாளோ என்ற அச்சமாகக்கூட இருக்கலாம்.

    திருமணமான புதிதில் இம்மாதிரி ஒரேயடியாக விட்டுக்கொடுத்த பெண்கள், சில வருடங்களுக்குப்பின் வெறுமையாக உணர்கிறார்கள். மனம் சஞ்சலமடைய, உடல் உபாதைகளும் எழுகின்றன.

    தம்பதியர் இருவரில் யாராவது ஒருவரோ, அல்லது இருவருமேயோ விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால், சண்டை வராமலிருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி இருக்குமா?

    ஓர் ஆங்கிலேயத் தம்பதி வீட்டுக்குப் போயிருந்தேன். `எனக்கு ஒரு டம்ப்ளர் கொண்டு வா,’ என்று கணவர் ஏவ, பத்து வருட காலம் அவருடன் இணைந்திருந்த மனைவி, `தானே போய் எடுத்துக்கொள்!’ என்று அயராமல் பதிலளித்தாள். எனக்கோ ஒரே திகைப்பு. இளவரசி டயானா தன் திருமணத்தின்போது, OBEY (கீழ்ப்படிகிறேன்) என்ற வார்த்தையை நீக்கச் சொன்னதுதான் நினைவு வந்தது.

    இப்போதெல்லாம் இளம்பெண்கள், இல்வாழ்வில் தோழமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நட்பில் ஒருவரையொருவர் தட்டிக் கேட்கலாம், திருத்தலாம். புரிந்துணர்வு இருக்கும். இருவருக்குமிடையே ஒரு நல்ல இடைவெளி அமையும். தாம் விரும்பியதை விரும்பியபடி செய்துவிட்டு, அதை ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வர்.
    இதை விட்டு, ஓயாமல் மற்றவர் செய்வதைக் கண்காணிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டு, அதிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறுவதுபோல் இருக்குமே! இம்மாதிரியான அம்மா-பிள்ளை, அல்லது கணவன்-மனைவி உறவால் யாருக்கு இன்பம்?

    தொடருவோம்.

    Share