நிர்மலா ராகவன்

வெற்றி பெறும் வழிகள்

உனையறிந்தால்

கேள்வி: வாழ்வில் வெற்றி பெறத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். ஏன் சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது?

விளக்கம்: ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்கு வேண்டிய முயற்சிகளையும் செய்யவேண்டாமா!

வெற்றிக்கு வேண்டிய குணாதிசயங்கள்

முதல் வெற்றிதான் மிகக் கடினமானது; அதற்குப்பின் எதில் வேண்டுமானாலும் வெற்றி பெறுவது எளிது என்று சொல்வதுண்டு. ஏனெனில், ஒரு காரியத்தில் வெற்றி பெற அறிவு இருந்தாலும், அது மட்டும் போதாது. குறித்த காலத்துக்குள் செய்து முடிப்பது, பிறருடன் இனிமையாகப் பழகத் தெரிந்து வைத்திருப்பது போன்ற வேறு பல குணங்களும் அவசியம். இவை இயற்கையாக அமையாவிட்டாலும் பழகிக்கொள்ளலாம்.

புகழ்ச்சியால் மண்டைக்கனமா?

அன்பு காட்டுகிறோம் என்றெண்ணி, பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் சிறுவயதினரை வெகுவாகப் புகழ்வதுகூட அவர்களது வளர்ச்சிக்குத் தடைதான்.

கதை: எங்கள் இடைநிலைப்பள்ளியில் ஒரு வகுப்பின் கடைசிப்பிரிவில் இருந்த பதின்ம வயது மாணவ மாணவியர் எல்லாப் பாடங்களிலும் பின்தங்கி இருந்தார்கள். ஆனால் அவர்கள் முகம் வசீகரமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை பென்சில் சீவ வைத்திருந்த சிறிய கருவியின் பின்னாலிருந்த கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர் பெண்கள்! பையன்களோ, பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து அவ்வப்போது தலை சீவிக்கொண்டிருந்தார்கள்!
இவர்களை ‘அழகு’ என்று பெற்றோரும், உறவினரும் சிறுவயது முதல் கொண்டாடி இருக்கவேண்டும். இவர்களுக்கு வெற்றி தோல்வியைப்பற்றிய சிந்தனை கிடையாது. தம் அழகிலேயே நிறைவடைந்துவிட்டார்கள், பாவம்!

அடுக்கடுக்காக வெற்றி பெற பாராட்டையும், வாய்ப்புகழ்ச்சியையும் ஏற்கத் தெரியவேண்டும். இல்லாவிடில், முதல் வெற்றியுடன் நின்றுவிடும்.

கதை: ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், விமரிசகர் என்ற முறையில். குழுவில் சிறப்பாக நடனமாடிய ஒரு பதின்ம வயதுப் பையனை தனியே அழைத்துப் பாராட்டினேன். அவனுக்குப் பெருமை தாங்கவில்லை. மறுநாள் அதே நிகழ்ச்சியில் அந்தப் பையன் ஆடியது ஏமாற்றத்தைத்தான் விளைவித்தது. ஏனென்றால், இவனுக்குப் பாராட்டை நல்ல விதமாக ஏற்றுக்கொள்ளத் தெரியவில்லை. தான் பெரிய மேதாவி என்று உடனே தலைக்கனம் வந்துவிட்டது. அசிரத்தையாக ஏதேதோ ஆடிவிட்டான். நானும் ஒரு பாடம் கற்றேன்: புகழ்ச்சியில் கஞ்சத்தனம் காட்டப் பழகினேன்.

இசைக்கலைஞர்கள் கர்வத்துடன் பாடினால், ராகம், ஸ்வரம் ஆகியவைகளுக்கு உயிர் கொடுக்கும் இசைத்தேவதைகளுக்கு அங்கங்களில் குறைபாடு உண்டாகிவிடுமாம். திருவிளையாடல் படத்தில் பாலையா ஏற்று நடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரம் நினைவுக்கு வருகிறதா? எந்தக் கலையானால் என்ன! ஒருவர் புகழ்ந்தவுடனே கலைஞருக்கு ஏற்படும் கர்வமும், திமிரான போக்கும் அவருடன், பிறரையும் பாதிக்கும்.

`ஒருவர் புகழ்ந்தால், மகிழ்ச்சியாக இருக்கிறதே! அது எப்படித் தவறாகும்?’ என்கிறீர்களா? மகிழ்ச்சி வேறு, பெருமையால் எழும் கர்வம் வேறு. தான் மிகவும் சிறந்திருக்கிறோம் என்று பிறரை ஓயாது மட்டம் தட்டிக்கொண்டிருப்பவன் விரைவில் வீழ்வான். அவனுடைய திறமையை வியந்து அவனை முதலில் நெருங்கியவர்கள்கூட அஞ்சி விலகுவார்கள். ஒரே துறையில் இருப்பவர்களைப்பற்றி தரக்குறைவாக கருத்துகள் தெரிவிப்பது எப்போதுமே அபாயகரமானது.

வெற்றிக்கு முட்டுக்கட்டை

வெற்றி பெற்றவனிடம் பலரும் நெருங்குவார்கள். வேறென்ன, ஆதாயம் தேடித்தான்! தன் நலன் நாடும் நண்பர்கள் என்று இவர்களை நெருங்கவிட்டால், அவர்கள் சூடு காய்ந்து, இவனையே எரித்துவிடும் அபாயமும் உண்டு. (பிரபலமான நடிகர்கள் இப்படி ஏமாந்துபோய், மிகுந்த வருத்தத்துடன் பிறரை எச்சரித்திருக்கிறார்களே) நண்பர்களாகப் பழகுபவர்களே இப்படி என்றால், வெளிப்படையாகவே தம் பகைமையைச் சொல்லாலும், செயலாலும் காட்டிக் கொள்பவர்களைப்பற்றிக் கூற என்ன இருக்கிறது!

இதனால்தானோ என்னவோ, வெற்றியைக் கண்டு அஞ்சுகிறார்கள் பலர். சராசரியாக இருந்தால்தான் பலரும் நட்புடன் பழகுவார்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு. ஆனாலும், எதிலும் வெற்றி அடைய முடியவில்லையே என்ற ஆதங்கம் இல்லாமல் போகாது. அதைத் தணித்துக்கொள்ள தம்மைப்போல் இல்லாது, துணிச்சலாக நடந்து வெற்றி பெற்றவரைப் பழிப்பதில் ஒரு குரூர திருப்தி அடைகிறார்கள். இவர்களுக்கெல்லாம் அஞ்சுவது மடமை. சவாலுக்கு அஞ்சினால் புதிய அனுபவங்கள் கிட்டுமா?

பாதுகாப்பான நிலையிலிருந்து வெளியே வர தயக்கம், புதிய சூழ்நிலைகளில் என்னவெல்லாம் அனுபவிக்க நேரிடுமோ என்ற அச்சம் போன்றவைகளால் ஆட்டுவிக்கப்பட்டால், வெற்றி எப்படிக் கிட்டும்?

BRAIN STORMING

எந்தத் துறையில் வெற்றி பெறும் சாத்தியக்கூறு இருக்கிறது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, நம் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களும் ஆலோசனை வழங்குவார்கள். முடிவெடுத்துவிட்டால், துணிந்து இறங்க வேண்டும். முதல் நாள் இரவே அடுத்த நாள் நாம் செய்யப்போகும் காரியங்களைப்பற்றி திட்டமிடுவது நல்லது. உறக்கத்தில் நல்ல எண்ணங்கள் நம் திட்டத்துடன் சேர்ந்து பலப்படுத்தும்.

உடனுக்குடன் வெற்றியா?

எடுத்த எடுப்பில் பெரிய வெற்றிகளுக்கு ஆசைப்படுவது பேராசை. அப்படியே அமைந்தாலும், அது நிலைப்பது கடினம்.

“எழுத்தாளர்களுக்கு வெற்றி கிடைக்க மிகவும் தாமதமாகும் — நாற்பது ஆண்டுகள்கூட ஆகின்றன!” என்று குஷ்வந்த் சிங் கூறுவார்.

வெற்றி என்பது உடனுக்குடன் கிடைக்காது. இது புரிந்து, பல தோல்விகளைப் பொருட்படுத்தாமல் செய்யும் காரியத்தில் ஆரம்பத்திலிருந்த அதே ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் நாம் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறோம். அடிமேல் அடி வைத்து, நிதானமாக, ஆனால் இலக்கினைத் தவறவிடாது செல்வோமானால் வெற்றி உறுதி.

முற்றும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *