ஆறாம் அறிவு தேடுபவன்!

0

-ராஜகவி ராகில்

ஓ ……மனமே
தியானக் கயிற்றால் கட்டிப்போட்டாலும்
பாய்கிறாய்
பிய்த்துக் கொண்டு
நினைவுக் கையால் இறுக்கிப் பிடித்தாலும்
வழுக்கி வழுக்கி விழுகிறாய்
வரால் மீனாட்டம்!

இந்தக் கூடைக்குள் நிறைகின்றன
குப்பைகள்
அழுக்குகள்
முயன்று முயன்று தோற்றுப் போகிறேன்
ஒரு வெள்ளைச் சீலை
குழந்தைச் சிரிப்பாய் வைக்க
பொய்ப் புதருக்குள்
வாழ்கிறாய்
பாம்பாக!

புகழெனும் விசக் குளத்தில்
பாவத் தாமரையாக மலர்ந்து
சிரிக்கிறாய் நீ
வணக்கமென்ற ஆணியறைந்து
கொழுவினால்
விழுகிறாய்
கழன்று கழன்று
காமநாகம் கழுத்தில் சூடியபடி
ஆட்டிவைக்கிறாய் உயிர்
சந்தேகப் பிசாசு
காதலித்துக் கைப்பிடித்து
எனக்குள் உருவெடுக்கிறாய் பேயாய்!

நீ
நிரந்தரமான நோய்
ஒழுக்க வீதியில் நடந்தபோதும்
கால்களில் தைக்கிறாய்
முள்ளாய் நின்று
ஐம்புலத் தூண்களில்
என்னை நான் நிறுத்தினாலும்
சாய்க்கிறாய் சூறாவளியாக வந்து
ஒரு ஞானியாகும் என் ஆசையில் வைக்கிறாய்
பெருந்தீ!

ஒரு முனிவன் அன்றி
வேறு யாருமில்லை வீரன் என
அறிய வைத்தாய் நீ
எனது நான்
மரணிக்க வேண்டுமெனில்
நீ ஆகவேண்டும் என் அடிமையாய்
இழிவினை செய்விக்கிறாய்
நீ
எஜமானாக இருந்துகொண்டு
உன்னை
ஒளியாக்க விரும்புகிறேன்
நீ ஒளிக்கிறாய் என்னை இருளாக்கி!

ஓ ….மனமே
என் சாத்தான் நீயேதான்
என் மனமெனும் அரசனே
உன்னை வெல்லுதல்தான்
இந்தச் சிப்பாய் இலக்கு
நீ என்னைப் பிரகசமாக்கினால்
நம்புவேன்
நீதான் எனது ஆறாம் அறிவென்று!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *