நிர்மலா ராகவன்

 

போட்டி மனப்பான்மை

உனையறிந்தால்12

கேள்வி: வாழ்வில் முன்னேற்றமடைய போட்டி மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம்தானே?
விளக்கம்: போட்டி மனப்பான்மை இயற்கையிலேயே எழும் ஒன்றுதான். ஆனால், தானே முதன்மையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டு, எப்போதும், எல்லோருடனும் போட்டி போடுவது நல்லதல்ல. அக்குணம் பகைமையைத்தான் வளர்க்கும்.

 

 

தாய் தன் தம்பியையோ, தங்கையையோ கவனிக்கும்போதும், கொஞ்சும்போதும், தன்னையும் கவனிக்கச் செய்ய ஏதாவது விஷமம் செய்வது சிறு குழந்தைகளின் இயல்பு. ஒன்றரை வயதுக் குழந்தை தன்னைவிடச் சிறிய சகோதரியின் கண்ணைக் குத்தப் பார்க்கும். போர்வையை விலக்கும். ஏதோ, அதற்குத் தெரிந்த வகையில், தன் மனப்புழுக்கத்தை வெளிக்காட்டும். அதற்காக தண்டிக்கப்பட்டால், பொறாமை மூளும்.

 
தாம் பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டும் பெற்றோர் குழந்தைகளிடையே ஒற்றுமையை வளர்க்கத் தவறிவிடுகிறார்கள்.

 
கதை 1: நான் படிக்கும்போது, எங்கள் பள்ளியில் நடந்த ஒரு விழாவுக்கு வந்திருந்தவளின் சொற்பிரயோகத்தைக் கண்டு நான் அதிர்ந்து போனேன். அழகாக, சிவப்பாக இருந்த தன் இரண்டாவது மகளை அத்தாய், `ராஜாத்தி!’ என்று வாய்க்கு வாய் அழைத்துக் கொஞ்சுவாள். அப்போது அதற்கு ஐந்து வயதிருக்கும். மூன்று வயது மூத்தவளையோ, `மூதேவி!’ என்று திட்டிக்கொண்டே இருந்தாள்.

 
இம்மாதிரி வளர்க்கப்பட்ட இரு குழந்தைகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்வோமா?
அதீத செல்லம் கொடுக்கப்படும் குழந்தை திமிராக, அல்லது சோம்பேறியாக வளரக்கூடும். எல்லாவித மனிதர்களையும் புரிந்துகொண்டு சமாளிக்கும் திறன் அதற்கு வராது — தன்னையே உயர்வு என்று எண்ணி வளர்ந்ததால்.

 
மட்டம் தட்டப்படும் குழந்தை தன்னம்பிக்கை குன்றித் தவிக்கும். என்னதான் பெரிய உத்தியோகத்திற்குப் போனாலும், நீடித்த நல்லுறவுகளைப் பெறமுடியாது தவித்துப்போகும்.

 
தான் ஏதோ வகையில் இழிந்தவள் என்று நம்பும் பெண் தங்கைக்கே விட்டுக்கொடுத்து விடுவாள். தோல்வியைக் கண்டு அஞ்சுவாள். அல்லது, தங்கையை மீற வேண்டும் என்ற வீம்புடன் மிகக் கடுமையாக உழைப்பாள் — அப்படியாவது அம்மாவின் அன்பைப் பெற முடியாதா என்ற ஏக்கத்தில்.

 
கதை 2: ஒரு மலையாளப் பெண் எழுத்தாளர் இப்படித்தான் தந்தையின் அன்பைப் பெற முடியாது, தான் எதிலாவது ஜெயிக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்ததாகப் படித்தேன். பெரும் புகழ் அவளைத் தேடி வந்தது.

 
இந்தக் கதையை நான் கூறியபோது, ஒரு மாணவன், “அப்போது அப்பா அவளிடம் அன்பாக இருந்தாரா?” என்று ஆவலுடன் விசாரித்தான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவனுடைய தந்தை மூத்தவனான இவனிடம் கடுமையாக நடந்து கொள்வார் என்று சொல்லியிருக்கிறான். இவனுடைய தம்பியைக் கண்டால் உயிரை விடுவாராம்.

 
“அந்த எழுத்தாளர், `அப்பாவுக்கு என்னைப் பிடித்தால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன!’ என்று அலட்சியமாக இருந்துவிட்டாளாம்!” என்று கதையை முடித்தேன்.

 
எல்லாக் குழந்தைகளிடமும் ஏதாவது திறமை இருக்காமல் போகாது. ஒரே தாயின் வயிற்றில் உதித்திருந்தாலும், எந்த இரு குழந்தைகளும் ஒரேபோல் இருப்பதில்லை. அவர்களை அப்படியேதான் ஏற்கவேண்டும். ஒப்பிடுதல் எதற்கு?

 
கதை 3: “எங்கம்மா என் அக்காளையே எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறாள்! என்னைக் கவனிப்பதே கிடையாது!” என்று என்னிடம் குறைப்பட்டாள் என் நெருங்கிய தோழி, தேவகி.
சற்று கோபத்துடன், “SHAME ON YOU!” என்று உரிமையுடன் திட்டினேன்.

 
அவளுடைய அக்காளின் மூளை வளர்ச்சி ஐந்து வயதிலேயே நின்றுவிட்டதென்று அப்பா, தன் பொறுப்பிலிருந்து விலகிக் கண்காணாமல் போய்விட்டார். அக்காளுக்கு தானே எதுவுமே பண்ணிக்கொள்ளத் தெரியாது. வயது முதிர்ந்த தாயின் பாரமும் வேதனையும் புரியாது, இருபத்தெட்டு வயதாகியும் தேவகி தன் தமக்கையுடன் போட்டி போடுவதும் மனித இயல்புதான்.

 
கதை 4: என் தோழி மேரியின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) மகன் ஜோசப்புக்குப் பிறவியிலேயே ஆடிசம் (AUTISM). சரியாக நடக்க முடியாது, பிறருடன் பழகத் தெரியாது. தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பான். ஆனால், அவன் நீரில் பாய்ந்தால், மீன் தோற்றுவிடும். குட்டிக்கரணம் அடித்தபடி நீஞ்சுவான். அவனுடைய உடல் வளர்ச்சிக்கென மாதம் ஒருமுறை அவனைக் கடலுக்கு அழைத்துப்போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் மேரி.

 
`நீருக்கடியில் உங்கள் மகன் ஏதேதோ வித்தைகள் செய்வது பார்ப்பவர்களுக்குப் பயமாக இருந்தாலும், அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்துகொள்ள மாட்டான்!’ என்று மருத்துவர்கள் அவளுக்குத் தைரியம் அளித்திருந்தார்கள்.
ஜோசப்புக்காக பெற்றோர் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பது கண்டு அவனுடைய அண்ணன் பொறாமைப்படவில்லை. அவனுடைய போட்டி மனப்பான்மை வேறு விதத்தில் செயல்பட்டது.

 
“என் மூத்த மகன் ஜோசப்புக்கு நேர் எதிரிடை! எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாக இருக்கிறான்!” என்று மேரி சற்றுப் பெருமையுடன் கூறியபோது, நான் விளக்கினேன்: “நீங்கள் கஷ்டப்படுவதைச் சகிக்காது, அவன் தன்னை வருத்திக்கொள்கிறான் — தன்னாலாவது பெற்றோர் சிறிது இன்பம் அடையட்டும், அவர்கள் தன்னையும் கவனிப்பார்களே என்று!”
மேரியின் வாய் பிளந்தது, திகைப்பால். சிறிது நேரத்திற்குப்பின், “ஜோசப் இப்படி இருப்பது அவன் தப்பில்லேயே!” என்றாள், குரல் கம்ம. “இனி நான் அவனைக் கவனித்துப் பார்க்கிறேன்!” என்றாள்.

 
“அவனுடன் கலந்து பேசுங்கள். அவன் மற்ற சிறுவர்களைப்போல் வளரட்டும். தம்பிக்கும் சேர்த்து அவன் சாதிக்க நினைப்பது நடக்கிற காரியமா!” என்றேன்.

 
கதை 5: தாயற்ற தம் இரு குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுவது அவசியம் என்று உணர்ந்தவர் அந்த தந்தை. வயது வித்தியாசம் அதிகம் இல்லாத நிலையில், குழந்தைத்தனமாக, தம்பி செய்த விஷமத்தை தந்தையிடம் சொன்னால், அவருக்குத் தன்னை அதிகம் பிடித்துப்போய்விடும் என்று கணக்குப்போட்டாள் சிறுமி. ஆனால் நடந்ததோ!
`ஏன் விஷமம் செய்தாய்?’ என்று மகனை அடித்தவர், `இன்னொருவரைப்பற்றிக் கோள் மூட்டுவாயா?’ என்று மகளையும் அதேபோல் அடித்தார்!

 
இப்போது அப்பா அவர்கள் அஞ்சும் நபராக, எதிரியாகிவிட(!), குழந்தைகள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்தது. போட்டி, பொறாமை அறவே இல்லை. ஒருவரின் வெற்றியில் இன்னொருவர் மகிழ்ந்தனர். இதைத்தானே அப்பாவும் விரும்பினார்!

 

 

குழந்தைகளுக்குள் எழும் போட்டி மனப்பான்மையும், பொறாமையும் பெற்றோர்களால்தான் அதிகரிக்கிறது.
தன் குழந்தை எதிலாவது வெற்றி பெற்றால் அளவுக்கு அதிகமாக குதூகலிக்கும் அன்னையும், அவன் ஏதாவது போட்டியில் வெற்றி பெறாவிட்டால் விம்மி விம்மி அழும் தாய்மார்களும் தம் நிறைவேறாத கனவுகளையும், ஆசைகளையும் தாம் பெற்ற குழந்தைகள்மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைக்கிறார்கள். இதைப் புரிந்து வைத்திருப்பதால், தோல்வி அடையும்போது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள்.

 
தொலைகாட்சியில் சிறுவர்களுக்கான போட்டிகளைப் பார்த்தால் ஒரு விஷயம் புலனாகும். சாமர்த்தியமாகப் பதிலளிக்கும் குழுவை பொறாமையுடன் வெறிக்கும் பிற அணிகள் தோல்வியைத்தான் கவ்வுகிறார்கள்.
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

 
`நம் பள்ளியின் பெருமை உங்கள் கையில்தான் இருக்கிறது! கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும்!’ என்று ஒரு பெரிய பாரத்தை அவர்கள் தலையில் சுமத்தியிருப்பார்கள் பள்ளியில்.

 
ஓரணிக்குள்ளேயே, `நான் மட்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். எல்லாரும் என்னையே பாராட்ட வேண்டும்,’ என்று ஒவ்வொருவரும் நினைத்து, தமக்குள்ளேயே போட்டி போட்டு நடந்தால், எந்தப் போட்டியிலும் வெற்றிபெற முடியாது. ஒரு குழுவுக்காக எல்லாரும் தம்மால் இயன்றவரை உழைக்க வேண்டுமேயன்றி, தம் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பெரிதாக நினைக்கக்கூடாது.

 
தொலைகாட்சியில், `ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற போட்டி நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். அமைதியாக, சிரித்த முகத்துடனேயே பங்கெடுத்துக்கொள்ளும் சிறுவர்கள்தாம் வெல்கிறார்கள். இவர்கள் நன்றாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற துணிவுடன் வருகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டில் ஏதாவது ஒன்று போட்டிகளில் கிடைக்கலாம் என்ற தெளிவு இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இவர்கள் தோல்வியுற்றால் வசை பாடமாட்டார்கள் என்பதும் இவர்களது தன்னம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். இவர்கள் ஒரு காலத்தில் தலைவர்களாகும் திறன் பெற்றிருப்பார்கள். வெல்லாவிட்டாலும், வெற்றி பெற்றவர்களை மனமார வாழ்த்தும் பெருந்தன்மை இவர்களைப் போன்றவர்களுக்கு உண்டு.

 
போட்டி மனப்பான்மை நமக்குள் மறைந்துகிடக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டும். மனிதத்தன்மையை வளர்க்கவேண்டும். இதை உணர்ந்தால், முன்னேறுவது உறுதி.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *