நிர்மலா ராகவன்

வளர்ப்பு முறையில் வித்தியாசம்

உனையறிந்தால்

கேள்வி: இரு தலைமுறைகளுக்குமுன் சிறு குழந்தைகளுக்கு மூத்தவர்கள் விளையாட்டு காட்டி வளர்த்தார்கள். இப்போது வளர்க்கும் முறைதான் குழந்தைகள் வளர்வதில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?

விளக்கம்: ஒரு சிறு குழந்தைக்கு ஆகாரம் தூக்கத்திற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது. தானும் ஒரு உயிர் என்று பிறர் புரியவைத்தல் குழந்தைக்கு பாதுகாப்பும், களிப்பும் ஒருங்கே ஊட்டக்கூடியது.

`குழந்தைக்குத்தான் பேசத் தெரியாதே!’ என்று மௌனமாகவே அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, அதனுடைய கண்ணைப் பார்த்துப் பேசுதல் நல்லது. ஏதாவது கதைதான் பேசவேண்டும் என்பதல்ல. வாயால் விதவிதமான ஒலிகள் எழுப்பினால்கூடப் போதும். நம் முகத்தில் இருக்கும் அன்பும் சிரிப்பும் குழந்தையையும் தொத்திக்கொள்ளும்.

மாறாக, அழவைப்பதையும், அச்சத்தை விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும். நமக்கு வேடிக்கையாக இருப்பது மற்றவருக்கு ஒவ்வாததாக இருந்தால், அதில் என்ன வேடிக்கை? அன்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரிகிறது. பிறருக்கோ, குழந்தை ஒரு விளையாட்டுப் பொருள். அவ்வளவுதான்.

குழந்தையை மகிழ்விப்பது எளிது. ஏனோ இது பலருக்கும் புரிவதில்லை. `உன் மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டு!’ என்பதுபோல், “என்ன பண்றே? சமத்தா தூங்கினியா?” என்றால்கூடச் சிரிக்கும்.

இரண்டு நாய்கள் ஒன்றையொன்று துரத்துவதைப் பார்த்தால், நமக்கே பயமாக இருக்கும். ஆனால், அதை மறைத்து, `ஒண்ணுமில்லே. ஓடிப் பிடிச்சு விளையாடறது!’ என்று சொன்னால், பயமின்றி, பெரிய சிரிப்புடன் குழந்தை அந்த `விளையாட்டை’ ரசிக்கும்.

இதுதான் அளவுகோல். குழந்தை சிரித்தால் நாம் செய்வது அதற்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

பிறந்ததிலிருந்தே குழந்தையின் பெயரை நீட்டி முழக்கி அழைத்தால், அடுத்தமுறை, தன்னைத்தான் விளிக்கிறார்கள் என்று புரிந்து, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டுவதில்லை. நீங்கள் சமையலறையில் வேலையாக இருக்கும்போதோ, அல்லது கணினி வேலையைப் பார்க்கும்போதோ குழந்தையை அருகிலேயே படுக்க வைத்து, அவ்வப்போது அதன் பெயரைக் கூப்பிட்டுப் பாருங்கள். உற்சாகமாகக் காலை உதைக்கும். தன்னுடன் யாரோ உறவாடுகிறார்கள் என்ற உணர்வில் தனிமையாக உணராது. (இம்மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தைக்கு, சில வருடங்களுக்குப்பின், பள்ளி ஆசிரியைக்கே கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கணினி அறிவு வளர்ந்திருப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

கதை: என் மகன், சசி, உட்கார ஆரம்பித்ததும், நான் சமைக்கும்போது அவனுக்கு ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தைக் கொடுத்துவிடுவேன். தரையில் மோதி, அது எழுப்பும் ஒலிதான் அவனுக்கு விளையாட்டு, மகிழ்ச்சி. அம்மா கண்ணெதிரிலேயே இருக்கிறாள் என்ற நிறைவும் பாதுகாப்பாக உணரச் செய்திருந்தது.

நான்கு வயதில் அவன் நீரில் மூழ்கி இறந்ததும், அப்போது எங்களை வீட்டுக்கு வருகை புரிந்திருந்த என் தாயார், `இவ்வளவு பெரிய பாத்திரம் எப்படி நசுங்கியது?!’ என்று நம்பமுடியாது கேட்டபோது, நானும், மகளும் சேர்ந்து புன்னகைத்தோம், ஒரு சந்தோஷகரமான நினைவில். `அது சசியோட விளையாட்டுச் சாமான்!’ என்றேன். ஓருயிர் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால், உயிரற்ற பொருட்கள் என்னவானால் என்ன!

தலை நிற்க ஆரம்பித்ததும், சுமார் மூன்று மாதங்களான குழந்தைக்கு, `சாஞ்சாடம்மா சாஞ்சாடு,’ என்று ஆட்டுவார்களே பாட்டிமார்கள்? இது வெறும் விளையாட்டில்லை. குழந்தைகளின் முதுகெலும்பு பலப்பட வைக்கும் தேகப்பயிற்சி. நாம் தொடுதலும், தான் ஆடுவதும் குழந்தையை மகிழ்விப்பது. அதைக் காட்ட ஒரேயடியாகக் குதிக்கும்.

இதேபோல் இன்னொன்று, `தென்ன மரத்திலே ஏறாதே!’ முதலில் கூறியது பக்கவாட்டில் ஆடுகிறதென்றால், இது நம் கணுக்காலில் உட்காரவோ, நிற்கவோ வைத்திருக்கும் குழந்தையை மேலும் கீழுமாக குழந்தையைத் தூக்கிப்போடுவது.
இந்தப் பாட்டெல்லாம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், முதல் இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டே சமாளிக்கலாம். மேலும் கீழுமாக இருக்கும் தொனிதானே குழந்தைகளுக்கு வேண்டும்!

இம்மாதிரியான அங்க அசைவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்கள் கலகலவென்று சிரித்தால், அது தன்வசம் இழக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இப்படி நிகழ்காலத்திலேயே இருப்பது குழந்தைகளுக்கே கைவந்த விஷயம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தது, பிடிக்காதது வேறுபடும். பெண்குழந்தைகள் ரொம்ப அருமையாக வளர்க்கப்படும்போது, மேற்கூறிய விளையாட்டுகளால் பயந்து அழும்.

நம் அனுபவங்களில் சிலவற்றையும் குழந்தையுடன் பகிரலாம். ஸ்விட்ச்சைப் போட்டால் மின்சார விளக்கு எரியும். இது நமக்குத் தெரியும். எட்டு மாதக் குழந்தையின் பிஞ்சு விரலை ஒரு ஸ்விட்ச்சின்மேல் வைத்து, நம் விரலால் அதை அமுக்கிவிட்டு, `ஹை! லைட் எரியறதுடா!’ என்று ஒரேயடியாக ஆச்சரியப்படுங்கள். குழந்தைக்கு எதையோ சாதித்துவிட்டதில் பெருமை தாங்காது. மகிழ்ந்து சிரிப்பான். அதுவே தினமும் அவன் காத்திருந்து செய்யும் வேலையாகப்போகும்.

நடக்கத் தெரிந்த குழந்தையானால், தான் பக்கத்தில் இருப்பதையே பொருட்படுத்தாது, நாம் வேலையில் மும்முரமாக இருக்கும்போதுதான் படுத்தும். அதாவது, நம் கவனத்தை ஈர்க்க ஏதாவது குளறுபடி செய்யும். திட்டி என்ன பயன்! `என்னையும் கொஞ்சம் கவனியேன்!’ என்ற அதன் சொல்லத் தெரியாத வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாதது நம் தப்புதானே?

முன்பு, ஒவ்வொரு கூட்டுக்குடும்பத்திலும் பொழுதுபோவது குழந்தைக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. யார் மடியிலாவது உட்கார்ந்திருக்கும். எவராவது தூக்கிக்கொண்டு விளையாட்டுக் காட்டுவர். குழந்தையும் கலகலப்பாகப் பேசக் கற்கும்.

இப்போதோ, டிவி-தான் உற்ற தோழன். கொஞ்சம் வளர்ந்ததும், கணினி. தனியாக அறையில் அமர்ந்து, தன்பாட்டில் ஏதோ செய்துகொண்டிருக்கும் சிறுவன்! யாரைக் குற்றம் சொல்வது?

தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *