குறளின் கதிர்களாய்…(108)
—செண்பக ஜெகதீசன்.
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
-திருக்குறள் -882(உட்பகை)
புதுக் கவிதையில்…
வெட்டும் வாள்போல்
வெளிப்படையான பகைக்குக்கூட
பயப்பட வேண்டாம்,
வஞ்சம் மறைத்து
உறவினர்போல் ஒட்டிக்கொள்ளும்
பகைவர் தொடர்பு மட்டும்
வேண்டவே வேண்டாம்…!
குறும்பாவில்…
வாள்போல் வெளிப்படைப் பகையைவிடப்
பெரிதும் அஞ்சி ஒதுங்கத்தக்கது,
வஞ்சமுடன் உறவினர்போல் வரும்பகையே…!
மரபுக் கவிதையில்…
வெட்டும் வாளின் தன்மையது
வெளிப்படை யாகத் தெரிவதுபோல்
கிட்டே நேரில் வரும்பகைவர்
கண்டே அஞ்சிடத் தேவையில்லை,
ஒட்டும் உறவென வந்துநமை
ஒழிக்கும் வஞ்சம் கொண்டவராம்
கெட்ட பகைவர்க் கஞ்சிடுவாய்,
கூட்டது அவருடன் வேண்டாமே…!
லிமரைக்கூ…
வாளென வரும்பகைவர்க்கு அஞ்சாதே,
அஞ்சிடு வஞ்சமுடன் வருவோர்க்கு,
உறவாய் அவரைநம்பிக் கொஞ்சாதே…!
கிராமிய பாணியில்…
அஞ்சாத அஞ்சாத
ஆளப்பாத்து அஞ்சாத,
ஆளவெட்டும் வாளப்போல
வெளிப்படயாப் பககாட்டும்
ஆளப்பாத்து அஞ்சாத..
ஆனா நீயும்,
அஞ்சிடுவரய் அஞ்சிடுவாய்
அவுனப்பாத்து அஞ்சிடுவாய்,
ஒறவுபோல நடிச்சிக்கிட்டு
ஒழிச்சிக்கெட்டப் பாக்கவுன
வஞ்சகன எதிராளிய
ஒருநாளும் நம்பிடாத,
ஒண்ணாச்சேந்து போயிராத…!
-செண்பக ஜெகதீசன்…