நிர்மலா ராகவன்

பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

உனையறிந்தால்121-1
கேள்வி: நான், என் கணவர் இருவரும் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். எங்கள் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டில் பணிப்பெண் இருக்கிறாள். குழந்தை முன்போல் சிரித்து விளையாடுவதில்லை. என்ன செய்வது?

விளக்கம்: `நம் குழந்தையை யார் பார்த்துக்கொண்டாலும் சரிதான், நமக்கு வேலை மிச்சம்!’ என்ற மனப்போக்கு பெற்றோருக்குக் கூடாது.

கதை 1: அய்னுல் ஒரு பணக்கார வீட்டுப் பணிப்பெண். அவளை நம்பி வீட்டு நிர்வாகத்தையும், குழந்தை ரஃபீடாவையும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, பெற்றோர் நிச்சிந்தையாக இருந்தது அய்னுலுக்குச் சௌகரியமாகப் போயிற்று.

அக்குடும்பத்தினர் கவனியாமல் இருந்ததால், வேலைக்காரப்பெண் தானே ஒரு பெரிய நிலைக்கு வந்துவிட்டதைப்போல நடக்கத் தொடங்கினாள்.

தினமும் வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்த பூங்காவில் குழந்தையை அவள் தூக்கி வருவாள். ஒரு மாலை நேரத்தில், அந்த ஒருவயதுக் குழந்தை தளர்நடையுடன் எதிரில் வந்துகொண்டிருந்த என்மேல் மோத, அதன் மர்ம பாகத்தில் அடிக்கத் தொடங்கினாள். நான் தடுத்தபோது, `உங்களுக்குத் தெரியாது. இவள் ரொம்ப நாட்டி!’ என்று பதில் வந்தது.

சிறு குழந்தைகள் யார் எது செய்தாலும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். பிறரிடம் சொல்லவும் தோன்றாது.

பெற்றோர் தன்னைவிட்டு, வேலைக்குப் போகும் ஒவ்வொரு காலையும் சிறுமி பயம் பெருக, கதறி அழுவாள். `என்னமோ, இவளை நாம் புறக்கணிப்பதுபோல்தான் நாடகமாடுகிறாள்!’ என்று தமக்குள் பேசிச் சிரித்தபடி வெளியே போய்விடுவார்கள்.

ரஃபீடாவுக்குப் பன்னிரண்டு வயதாகியது. வீட்டில் யாருமில்லாதபோது பணிப்பெண்ணின் வதை கடுமையாகிக்கொண்டே வந்தது. பிறர் இருக்கையில், தன் பொறுப்பிலிருந்த பெண்ணிடம் மிக இனிமையாகப் பேசுவாள்.

ஒரு நாள், `இன்னும் கொஞ்ச நேரம் விளையாடப்போகிறேன்!’ என்று வீடு திரும்ப மறுத்த பெண்ணை நையப்புடைத்து, வெறிபிடித்தவளாக அவள் முடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள் அந்த பணிப்பெண், அய்னுல்.

சற்று தொலைவில் அமர்ந்திருந்த நான், `அவளை விடு!’ என்று கத்தியதை அவள் லட்சியம் செய்யவேயில்லை.

இந்தக் கொடுமையைப் பார்த்தான் விளையாட வந்திருந்த ஒரு நான்கு வயதுப் பையன். தன்னையே அந்தச் சிறுமியின் இடத்தில் வைத்தவனாக அவன் பெரிதாக அழத் தொடங்க, என்னால் அதற்குமேலும் சும்மா இருக்க முடியவில்லை. அவர்களருகே போய், அய்னுலின் கையை இறுகப் பற்றி, மிரட்டினேன். ஒருவழியாக அவள் அடங்கினாள்.

சற்று பொறுத்து, அவர்கள் வீட்டு வாசலிலேயே அவள் தாயை அழைத்து, “அய்னுல் உங்கள் மகளை ரொம்பக் கொடுமை செய்கிறாள்!” என்று ரகசியக் குரலில் விவரிக்க, தாய்க்கு ஒரே அதிர்ச்சி.

அடுத்த முறை, ரஃபீடாவுடன் பெற்றோர் இருவரும் வந்திருந்தனர். “உங்கள் மெய்ட் எங்கே?” என்று யதார்த்தமாக விசாரித்தேன்.

“போய்விட்டாள்!” என்று தந்தை வெறுப்புடன் கூறினார். நான் விழித்ததைப் பார்த்து, “அவளைத் திருப்பி அனுப்பிவிட்டோம்!” என்றார். முகம் அவமானத்தில் இறுகியிருந்தது. `எப்படியோ மகள் வளர்ந்தால் சரி!’ என்ற நினைப்புடன், பணிப்பெண்ணை அவள் போக்கில் விட்டது யார் தப்பு என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட அவமானம் அது.

இப்படிப் பணிப்பெண்களால் வதைபடும் சிறுமிகள் அளவற்ற பயத்துக்கு ஆளாகிறார்கள். எதற்கும் சண்டை, இல்லாவிட்டால் ஓட்டம்.

தன்னைவிடச் சிறியவர்களுடன் விளையாடும்போது, ரஃபீடாவின் அதிகாரமான போக்கை பிற குழந்தைகளால் பொறுக்க முடியவில்லை. அதனால் யாரும் அவளுடன் விளையாட வராததால், தனித்துப் போனாள். பரமசாதுவாக, உடலைக் குறுக்கிக்கொண்டு, இன்னொரு பணிப்பெண்ணுடன் வர ஆரம்பித்தவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சிறுவயதிலேயே ஏதேதோ அனுபவித்ததால், பிறரை நம்பி, தொடர்பு கொள்வதே இவளைப்போன்ற குழந்தைகளுக்கு முடியாத காரியமாகிப் போகிறது.

`யார் எப்படிப் போனால் என்ன, நானும் என் குடும்பமும் நன்றாக இருந்தால் சரி!’ என்ற விட்டேற்றியான போக்கு பலருக்கும் இருப்பதால்தான் பல குடும்பங்களில் எல்லாவிதமான அநியாயங்களும் தொடர்ந்து நடக்கின்றன.

இதை உணர்ந்து, சிங்கப்பூரில் ஒரு தம்பதி தங்கள் வீட்டில் ரகசிய காமரா வைத்துக் கண்காணித்தார்கள். அவர்கள் குழந்தையை பணிப்பெண் துன்புறுத்துவது தெரியவர, சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தார்கள்.

கதை 2: என் மகளைச் சிறுவயதில் ஒரு பணிப்பெண்ணின் கண்காணிப்பில் விட்டுவிட்டு, வேலைக்குப் போவேன். நட்புடன் பழகும் பக்கத்து வீட்டுக்காரி, `நீ இல்லாதபோது, குழந்தை அழுதபடியே இருக்கிறது!’ என்றபோது, விழித்துக்கொண்டேன்.

எங்கள் வீட்டில் வேலைபார்த்த இன்னொரு மாது, என் பெண்களை உட்கார வைத்து, முகத்திற்கு பவுடர் போட்டு, கண்ணுக்கு மையிட்டு, பொட்டிட்டு என்று விரும்பிச் செய்வாள். அவர்களோ, அவள் அந்த அலங்காரப் பொருட்களை எடுத்தாலே வேறுபுறம் தலைதெறிக்க ஓடுவார்கள்.

என்னிடம் புகார் செய்தபோது, “வேண்டாம்னா விடுங்களேன்!” என்று நான் அலுத்துக்கொண்டேன். `நீங்க என்ன, பிள்ளைங்களை இப்படி வளக்கறீங்க!’ என்ற அவள் கண்டனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சிறு குழந்தைகளுக்குப் பிடித்தமானது விளையாட்டு ஒன்றுதான். நமக்குப் பிடிக்கிறதே என்று எதையாவது செய்யச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்துவானேன்! குழந்தைகளின் மகிழ்ச்சிதான் முக்கியம்.

ஏதாவது புதிய விளையாட்டுச் சாமானையோ, உடையையோ எடுத்துக்கொண்டு, தன்னைப் பார்த்துக்கொள்ளும் `அக்கா,’ அல்லது `ஆன்ட்டி’யிடம் மகிழ்ச்சியுடன் அதைக் காட்ட எடுத்து ஓடினால், அந்த பணிப்பெண் குழந்தையை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்கிறாள் என்று புரிந்துகொள்ளலாம்.

கதை 3: மரியா என்ற பணிப்பெண் அசோக் பிறந்ததிலிருந்து வீட்டோடு இருந்து கவனித்துக்கொள்கிறாள். `அக்கா’ என்று அவள்மேல் பாசமாக இருந்தான்.

அவள் பிற வேலையில் ஏதாவது தவறு செய்துவிட்டால், எஜமானி கடிந்துகொண்டபோது, நான்கு வயதான பிள்ளை, `அக்கா அசடா!’ என்று முதலில் அயர்ந்துபோனான். ஓரிரு வருடங்களில், தானும் அதிகாரமாக நடக்கத் தொடங்கினான்.

`நான் வளர்த்த பிள்ளை என்னையே மட்டமாக நினைக்கிறதே!’ என்று வேதனயாக இருந்தாலும், அவனுடைய சொற்கணையைத் தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை அவளுக்கு.

“`கத்தாமல் சொல்லேன்!’ என்று கெஞ்சுகிறேன். அசோக் கேட்பதில்லை!” என்று என்னிடம் அழமாட்டாக்குறையாகத் தெரிவித்தாள் மரியா.

இது எஜமானி செய்த தவறு. குழந்தையைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்பவளை மரியாதையாக நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்திருந்தாலும், அவளைத் தனியே அழைத்து கண்டித்திருக்கலாம். அதைவிட்டு, பிள்ளை எதிரிலேயே அவளைத் தரக்குறைவாக நடத்தியதால் அவனுக்கு அவளிடம் மரியாதை போயிற்று.

போதாத குறைக்கு, தாயிடமும் நெருக்கமான உறவு கிடையாது. ஏனெனில், அவனை வளர்ப்பதில் அவள் அதிக கவனம் செலுத்தவில்லையே!

இம்மாதிரி வளரும் பையன்கள் புத்திசாலிகளாக, ஆனால் கர்வமாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். சற்றுப் பெரியவர்களானதும், அம்மா, ஆசிரியை யாருக்கும் அடங்குவது கிடையாது. “BROUGHT UP BY SERVANTS,” என்று அவர்களைக் குறிப்பிடுவோம். அவர்களுக்கு வயதில் மூத்தவர்களை மதிக்கத் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

தன்னை வளர்த்தவர்களிடம் பாசமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், மரியாதையாகவாவது நடத்த வேண்டாமா!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *