நிர்மலா ராகவன்

அச்சம்-தன்னம்பிக்கை-வெற்றி

உனையறிந்தால்121
கேள்வி: நாம் சொல்வதை ஏற்கமுடியாது, சிலருக்குக் கோபம் வருவது ஏன்?

விளக்கம்: பிறரது கூற்றை ஏற்க முடியாவிட்டால், இவர்களுக்குத் தம் மேலேயே சந்தேகமும், அதனால் அச்சமும் எழுகின்றன. தன்னம்பிக்கை குறைய, கோபம் வருகிறது. கோபம் அச்சத்தின் வெளிப்பாடுதானே!

வெற்றி பெற்றால் தன்னம்பிக்கை வளர்கிறது. ஆனால், வெற்றி அடைய தேவையானது தன்னம்பிக்கை. சற்று முரணாக இல்லை?

ஒவ்வொருவருக்கும் சொல்வதும், செய்வதும்தான் சரி என்ற எண்ணம் உண்டு. தம்மைப்போலவே தான் சந்தித்துப் பேசும் அனைவரும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. நாம் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பாகத்தான் செயலாற்ற வேண்டும் என்ற அடிப்படை எண்ணமே தன்னம்பிக்கையைத் தகர்க்கப் போதுமானது.

தன்னம்பிக்கை என்றால் அகம்பாவம் என்று பலரும் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தன்னம்பிக்கை மிகுந்த பெண் `கர்வி’ என்று பழிக்கப்படுகிறாள். இதனாலேயே பல பெண்களும் பயந்து, நிம்மதியாக வாழ எண்ணி, தம் தனித்துவத்தை இழந்து, பெரும்பான்மையானவர்களைச் சார்ந்து நடக்கத் தலைப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், சராசரியாகத்தான் இருக்க முடியும்.
`என்னால் முடியாது!’ என்று பயந்து, ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவர் பலரும். `உன்னால் இதெல்லாம் முடியாது!’ என்று பிறரும் சேர்ந்து தூபம் போடுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி, நல்லபடியாக அதை முடித்துவிட்டால் பெருமையும், மகிழ்வும் கலந்த உணர்வு தோன்றுகிறதே, அது தன்னம்பிக்கை. கர்வமில்லை.

ஒருவரின் பயமே அவர்கள் சுயநம்பிக்கை அடைய தடையாக இருக்கிறது. அத்துடன், பிறரின் (வேண்டாத) குறுக்கீடுகள் வேறு.

`உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொள். பிறரைப்போலவே நடக்காதே!’ (BRUCE LEE).
`செய்துதான் பார்ப்போமே!’ என்று துணிந்து இறங்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, மனம் தளராது தொடர்ந்து செய்ய வேண்டும். தவறாகப்போன முடிவுகளைக் கண்டு அஞ்சிய விஞ்ஞானிகள் எவருமில்லை. வெற்றி நிச்சயமில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், வருடக்கணக்காக அவர்கள் தொடர்ந்து செய்த ஆராய்ச்சிகளால்தான் இன்று நாம் பல மின்சாதனங்களை அனுபவிக்கிறோம். எதையும் சவாலாக எண்ணி, அதை எதிர்கொள்ளும் மனோதிடம் அவர்களுக்கு இருந்தது.

`பிறர் என்ன நினைப்பார்கள்?’ என்ற பெருங்கவலைதான் பலரையும் அவர்களது முழுத்திறமையையும் வெளிக்காட்டி, முன்னேறவிடாது தடுக்கிறது. ஆனால், மற்றவர்களுக்கும் அதே கவலை இருக்காதா!

பிறரிடம் என்ன குறை காணலாம் என்றே பார்த்துக்கொண்டிருக்கும் சிலரை அலட்சியம் செய்வது நல்லது. ‘போகிறார்கள், அவர்களுக்கும்தான் வாயில் போட்டு மெல்ல அவல் வேண்டாமா!’ என்று பெருந்தன்மையாக விட்டுவிடலாமே!

`நான் குண்டாக இருக்கிறேன்!’

`நான் பயந்தாங்கொள்ளி!’

`என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை!’ என்று சிலர் மூக்கால் அழுவார்கள்.

ஊக்குவிப்பு என்பது ஒருவருக்குள்ளேயே தோன்றினால்தான் நிலைக்கும். எது செய்யவும் பயந்து, காலத்தை வீணடித்துவிட்டு, சுயவெறுப்பு கொள்வது எதற்கு? பயம், கையாலாகாத்தனம், அதனால் விளையும் பொறாமை போன்ற குணங்கள்தாம் பிறரைப்பற்றித் தாறுமாறாகப் பேச வழிவகுக்கின்றன.

வெற்றி பெறுகிறவர்களுக்கு மட்டும் பயமும், கவலைகளும் இருக்காதா, என்ன! ஆனால், அவர்கள் தம்மிடம் இல்லாததையே நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதில்லை.

நமக்கு வாய்த்த உடல், மனம் இரண்டையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். நமக்கே நம்மை பிடிக்காவிட்டால், வேறு யாருக்குத்தான் பிடிக்கப்போகிறது? (ஆனால், இதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகமே நம்மைச் சுற்றித்தான் இயங்குகிறது என்பதைப்போல் சுயநலம் பெருகிவிடக்கூடும்).

எல்லோரிடமும் ஏதாவது திறமை இருக்கும். அதைப் பயன்படுத்தித் திருப்தி அடையும் மனம் வேண்டும்.

`எனக்குப் பிடிக்கிறது. நான் செய்கிறேன். இக்காரியத்தைச் செய்யும்போதே நிறைவாக இருக்கிறது. வெற்றி, தோல்வியைப்பற்றியோ, பிறர் சொல்வதைப்பற்றியோ கவலையில்லை!’ என்று தன்னம்பிக்கையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்தான் வெற்றி அடைகிறார்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.