Tag: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 177-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கொள்ளை அழகோடிருக்கும் இந்த வெள்ளைப் புறாக்களைப் புகைப்படமெடுத்து வந்திருக்கின்றார் திருமதி. கீதா மதிவாணன். பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நனிநன்றி!

    வாழ்வில் இணைபிரியாமல் ஒற்றுமையாய் வாழும் உன்னதக் கலையை இந்த ஐந்தறிவுயிர்களிடம் கற்றுப் பண்பட வேண்டியவனாயிருக்கின்றான் பண்பாட்டில் சிறந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் ஆறறிவு படைத்த மனிதன்!

    புறாக்கள்மீது புதுக்கவிதைகள் பாடக் காத்திருக்கும் புலவர்களை அன்பு பாராட்டி அழைக்கின்றேன். உங்கள் சிந்தனைகளை அழகாய்க் காற்றில் சிறகடிக்க விடுங்கள் கவிதைகளாய்!

    தன் முயற்சியில் சேகரித்த பொருள்களைக் கொண்டு கலைநயத்தோடு பறவைகள் கூடமைப்பதைப் போல மனிதனும் தன்னுழைப்பில் கிடைக்கும் நேரிய செல்வத்தில் சிறுகக் கட்டிப் பெருக வாழ்தல் சிறப்பு என்கிறார் திருமிகு. நாகினி.

    சிறுகூடும் கோபுரம்… 

    ஓரறிவு குறைவான பறவைகள்
    .. ஒழுங்குடன் அமைக்கின்ற சிறுகூடு
    பேரறிவு மிகுந்த மனிதரும்
    .. பெருமையாய்ப் பேசி வியந்திட
    பாரமென நினைக்காத முயற்சியில்
    .. பறந்து சேகரித்த பொருட்களால்
    தீரமாய் அலகினால் பின்னியே
    .. திகைக்க வைக்கும் கலைவீடு! 

    தனக்கென ஒருகூடு அமைப்பதில்
    .. தளராத பறவையின் உழைப்பினை
    வனப்பென நினைத்திட மறந்தவர்
    .. வழியினில் தடையென இருகைகள்
    கனமுடன் உணர வைக்கின்ற
    .. கணப்பொழுதும் நகர்வதில் கடினமாய்
    மனந்தனில் போராடும் மூடத்தன
    .. மயக்கங்கள் குழப்பிடும் தினந்தினம்! 

    ஏழ்மையில் இருந்தாலும் வசிக்க
    .. ஏற்புடைய மனையை உருவாக்க
    வாழ்வினில் அறநெறி தவறாமல்
    .. வளரும் நினைவினை முடக்காமல்
    தாழ்விலா உழைப்பினில் தெம்புடன்
    .. தரணியில் நடைபோடும் முயற்சியால்
    ஆழ்மனம் நினைத்தபடி சொந்தமாய்
    .. அமைக்கும் குடிசை கோபுரமே! 

     *****

    ”கூடுகட்டிக் குடியிருந்த மரம் புயற்காற்றில் போனதால் மீண்டுமொரு கூடமைக்கக் குச்சிகள் சுமக்கும் பறவைகள் யாம்” என்றுரைக்கும் பறவைகளைக் காண்கின்றோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    மறைந்தே…

    மனிதன் வெட்டத் தவறிவிட்ட
    மரம தொன்றில் கூடுகட்டி
    இனிதாய் நாங்கள் வாழ்ந்திருந்த
    இருப்பிடம் போனது புயற்காற்றில்,
    தனிமரம் விழுந்ததை விட்டுவிட்டுத்
    திரும்பவும் பறவையாம் கூடுகட்ட
    மனிதர் வராத இடம்தேடி
    மறைந்தே செல்கிறோம் குச்செடுத்தே…!

    *****
    அமைதியின் சின்னமாய் அகிலத்தோர் கொண்டாடும் அழகுப் புறாக்கள் கூடுகட்டச் செல்வதை வாழ்த்திப் பாடியிருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    அமைதிப் புறாக்கள்!

    மேதினியில் அமைதி நாட்டத்
    தூதுவரும்
    இரட்டைப் புறாக்கள்!
    புத்தர் அனுப்பிய
    வெள்ளைப் புறாக்கள்!
    காந்தியார் ஏவிய
    சாந்திப் புறாக்கள்!
    அன்னை தெரேசா அசுர உலகில்
    சேவை புரிய
    தேவைப் படும்!
    வாளும், வேலும் தீட்டி
    வாட்டப் போகும் வையம்
    கூட்டப் போகும்
    மைய மன்றத்துக்கு
    ஐக்கியம் வேண்டும் ஐக்கியம்!
    கூடு கட்டப் போகும்
    இரட்டைப் புறாக்களே!
    நாடுகள் யாவும்
    ஒன்று சேர்ந்து அமைதியில்
    நின்று நிலவ
    வென்று வருக! வென்று வருக!

    *****

    ”மனிதர் வாழும் பகுதிக்கு வந்துவிட்ட மணிப் புறாக்களே…கவனம்! உம்மைச் சமைத்துண்ணக் காத்திருக்கும் சமையல் சக்கரவர்த்திகளிடம் அகப்பட்டுக்கொண்டீர்களானால் உம்மைக் காக்க எந்த சிபிச் சக்கரவர்த்தியும் இங்கு வரமாட்டான்!” என்று எச்சரிக்கின்றார் திரு(மிகு?). வசந்திமணாளன்.

    மனிதர்கள் ஜாக்கிரதை!

    இரை தேடித்திரியும் பறவைகளே
    இரையாகிவிடாதீர்கள்
    இது மனிதர்கள் வாழும் பகுதி.

    ஆபத்தில் நீங்கள் அகப்பட்டால்
    வேடனிடமிருந்து காக்க
    சிபி சக்கரவர்த்தி வரமாட்டான்.
    தராசின் ஒருதட்டில்
    உங்களை வைத்து அதற்கு ஈடாக
    தன் தொடையின் தசையை அறிந்து
    மறுதட்டில் வைக்கமாட்டான்.

    இவன் சமையல் சக்கரவர்த்தி
    உங்களை கறிசமைத்து
    தன் சாப்பாட்டுத் தட்டில் வைத்துவிட்டு
    வேடனை வெறுங்கையுடன்
    விரட்டியடிப்பான்…
    ஆகவே மணிப்புறாக்களே…
    ஜாக்கிரதை
    இது மனிதர்கள் வாழும் பகுதி.

    *****

    தம் வாழ்வு குறித்து அக்கறையோடு அளவளாவும் புறாச் சேவலையும் பேட்டினையும் படம்பிடித்துக் காட்டி, அவற்றோடு பாரதிப்புலவனின் உளப்பாங்கையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.

    விட்டு விடுதலையோடிருப்போம்…

    சேவல்
    சுள்ளிபொறுக்கிச் சுதந்திரமாய்க் கூடுகட்டி
    கள்ளி உனை வைத்ததில் நான் காதலிக்க வேண்டுமடி.
    முட்டையிட்டுத்தா முழு நாளும் அடைகாப்பேன்.
    குஞ்சைப் பொரித்து விட்டே கூட்டை விட்டுச் செல்வேன்.
    முந்தவுணவு கொண்டுவருதலையே
    சிந்தனையில் வைப்பேன் தேவையற்ற வேலைகளில்
    உள்ளமிழக்கேன் உயிரெமது கூடென்றே
    விட்டு விடுதலையோடிருப்பேன்
    வீணாய் என் நல்வாழ்வு
    கெட்டு நடுத்தெருவில் கிடந்து தவிக்காமல்
    நம் வீடு நம் வாழ்வு நம் குஞ்சுகட் கென்று
    என்னைக் கொடுப்பேன்
    எதற்கெனக்கு வீண்வேலை.

    உண்மை விடுதலையெம் உள்ளத்திலுள்ளதடி
    கண்ணே நமக்கதற்கெம் காதலது போதுமடி.

    பேடு
    அன்பேயும் சொற்கள் ஆனந்த மூட்டுவன.
    என் வாழ்வில் உம் காதல் ஒன்றே பெரிதாகும்.
    சுதந்திரத்திற்கெம் சுகவாழ்வே முன்னோடி
    இதந்தரு மனையே சொர்க்கம்
    இனியெனைக் கவலை தீண்டா
    அன்பொடு வீட்டைக் காக்கும்
    ஆர்வத்திலுள்ளீர் நன்றி
    என்பொடென் யாக்கையாவும்
    இனியுங்கள் சொத்தேயாகும்.

    கவிக் கூற்று
    அன்றெமது பாரதிக்கிவ் வறிவு நிலைத்திருந்தால்
    என்றுமுள அக்கவிஞன் இன்று கிடைத்திருப்பானா?

    *****

    கவிஞர்களிடமிருந்து நல்ல சிந்தனைகளை வாங்கித் தந்திருக்கின்றன புறாக்கள். அவற்றை வாழ்த்துகின்றேன்! கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    மெச்சிட்டோம் உங்க புத்திய!!

    உச்சிக் கிளையிலே கூடு கட்ட
    குச்சி தேடிக் கொண்டு வந்தோம்
    பூச்சி அரிச்ச மரமின்னு சொல்லி
    வெச்சி இருந்த மரத்தை வெட்டிட்டான்
    கச்சிக் காரங்க குத்தகை எடுத்ததாம்
    பச்சிக எல்லாம் பிளாட்டாடா வாங்கும்?

    இயற்கை தந்த வரங்களாம் மரங்களையெல்லாம் மனிதர்கள் தம் சுயநலத்துக்காக ஒன்றுவிடாமல் அழித்துவிட்டால் பறவையினங்கள் கூடுகட்டி வாழ்வதெங்கே வையத்தீர்?! அவையென்ன பிளாட்டா வாங்கி வீடு கட்டும்?” எனும் ’நச்’ கருத்தை நகைச்சுவையோடு பதிவிட்டிருக்கும் திரு. நாராயண் சுவாமிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 17

    -மேகலா இராமமூர்த்தி

    நாம் ஓர் அவையில் பேச்சாளராகவோ பார்வையாளராகவோ இருக்கக்கூடிய சூழல் வரும்போது அங்குள்ளோரின் தகுதியறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய முறைகள் என்னென்ன என்பது குறித்து நாலடியார் நவிலும் நல்லுரைகள் சிலவற்றைக் காண்போம்.

    உண்மையான அறிவுடைய கூட்டத்தில் கலந்து அவர்களோடு நின்றொழுகுதலை விடுத்து, அவர்கள்முன் தம்முடைய அறியாமையைப் புலப்படுத்தும் கருத்தையே திரும்பத் திரும்பப் பன்னிப் பன்னிப் பேசும் மயக்கு அறிவை உடையார் எதிரில் உண்மை அறிஞர்கள் தம் ஞானப் பெருமையினைக் காட்டிக்கொள்ளாமல் தளர்த்திக்கொள்ளுதல் வேண்டும்.

    மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
    அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
    கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
    சொன்ஞானஞ் சோர விடல். 
    (நாலடி – 311)

    அறிவினாலே ஒளியுடையோர் முன்பு தாமும் அறிவொளியினர் ஆதல் வேண்டும். அறிவற்றவோர் முன்பு ஏதுமறியதவராய், சுண்ண வண்ணம் கொள்ள வேண்டும் என்பார் வள்ளுவப் பேராசான்.

    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல். (714)

    செய்யுட்களை அதன் பொருள்நுட்பம் உணர்ந்து இன்புறுதல் அறியாது, வெறுமனே மனப்பாடம் செய்து அருவருக்கத்தக்க உரைகளை மூடர்கள் சொல்லும்போது, என்றும் அழிவிலாச் சிறப்பினையுடைய மெய்ப் புலமைசால் பெரியோர்கள் அம் மூடர்களைப் பெற்றெடுத்த தாய்க்காக, அவள் வருந்துவளே, என்று மிக இரங்கி யாதுங் கூறாது பொறுமையுடையராக இருப்பர் என்கிறது நாலடி.

    பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
    மூடர் முனிதக்க சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
    சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
    ஈன்றாட் கிறப்பப் பரிந்து.  
    (நாலடி – 316)
     

    தன் மகனை ஈன்ற பொழுதைவிட அவனைக் கற்றோரும் மற்றோரும் சான்றோன் என்று புகழும்போதிலேயே பெரிதும் உவப்பாள் அவன் தாய். 

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    (69)
     

    ஆகவே அவைவல்லார் போற்றும் சொல்லாற்றலில்லா மூடர்கள் அவையில் யாதும் பேசித் தம்மை ஈன்றார்க்கு இழுக்குத் தேடலாகாது என்கிறது நாலடியார். 

    ஒருவன் ஒரு நூலைக் குறித்து அவையிலே விளக்கிப் பேசப்புகுமுன் பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரி(ளி)ந்து, அதன் விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக் காட்டவேண்டும். அவ்வாறு காட்டாதவனுடைய சொற்கள், பழித்தலில்லாத காட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால் தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடைய நாடனே! நூலிற்கு உரையாகுமா? என்று கேள்வி எழுப்புகின்றது நாலடியார்.

    பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
    கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
    நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
    உரையாமோ நூலிற்கு நன்கு?
    (நாலடி – 319)

    எனவே ஏதொன்றையும் நால்வகை உரைகளாலும் விளக்கிப் பேசுதலே சிறந்த உரையாகும் என்பது இப்பாடல்வழி நாம் பெறும் செய்தி.

    ஒரு நூற்பொருளைப் பொதுவாக உரைத்தல் பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும், காரணம் நிறுத்தல் நுட்பமெனவும், இவற்றால் ஒரு கருத்தைத் துணிதல் எச்சமெனவும் கருதப்படும்.

    கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் எத்தகு செறிந்த செய்திகளைத் தம் உரையில்காட்டி விளக்கிப் பேசினும் அவற்றின் அருமை உணராப் புல்லறிவினார் அதனைப் பயன்கொள்வதில்லை. அத்தகு புல்லறிவினாரின் இயல்பையும் நாலடியார் விரிவாய் விளக்குகின்றது நமக்கு.

    தோலைக் கவ்வித்தின்னும் புலைஞருடைய நாய்கள் பாலுணவின் சிறப்பை அறியாததுபோல, அழுக்காறு முதலிய மன மாசுகளில்லாதவர் அறநெறி அறிவுறுத்தும்போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங் கேட்கமாட்டார்.

    அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
    செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்
    கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
    செவ்விய கொளல்தேற்றா தாங்கு.
    (நாலடி – 322)

    புல்லறிவுடைய கீழோர் நல்லறிவுடைய சான்றோர் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு, அந்நல்லறிவினார்மாட்டு அஃது இல்லாதவர்க்கிருக்கும் அழுக்காறு(ம்) காரணம் என்பது இதன் குறிப்புப் பொருள்.

    இவ்வுலகில் உயிர்கள் வாழும் நாட்கள் சில; அச்சின்னாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை; இடையில் பலர்தூற்றும் பழிவேறு! இத்தகு நிலையற்ற, நிம்மதியற்ற வாழ்வில் பலரோடும் சேர்ந்து மகிழ்ந்தொழுகாது விலகி, எதிர்ப்பட்டவரோடெல்லாம் ஒருவன் கடும்பகை கொள்ளுதல் ஏன்? என்கிறது நாலடி.

    உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
    பலர்மன்னுந் தூற்றும் பழியால் – பலருள்ளும்
    கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
    தண்டித் தனிப்பகை கோள்.
    (நாலடி – 324)
     

    ஏதோ பன்னூறாண்டுகள் தான் நிலைத்து வாழ்ந்துவிடப்போவதுபோல் எல்லோரையும் வெறுப்பதும், எதிர்ப்படுவோரிடமெல்லாம் முரணுவதும் மனமுதிர்ச்சியற்ற புல்லறிவின்பாற்பட்ட செயல்களேயன்றி வேறில்லை.

    ”அல்லல்மிகு மானுட வாழ்க்கையை நடாத்துதற்கு வீணே பிறந்து, எல்லோரிடமும் கணக்கிலாப் பிணக்கினில் ஈடுபடாது, வாழ்வின் பயனடைய காழிப்பதிவாழ் ஆனேற்றுச் செல்வனைக் காண வாரீர்” என்று அப்பர் பெருமான் அடியவரை அழைப்பதை இங்கே நாம் பொருத்திப் பார்க்கலாம். 

    அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்
    எல்லையில் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்)மினோ!
    பல்லில்வெண் தலையினில் பலிக்கியங்கு பான்மையான்
    கொல்லையேறு அதேறுவான் கோலக்காழி சேர்மினே!

    புல்லறிவினாரின் இயல்புகளை மேலும் பட்டியலிடுகின்றது நாலடியார். அவர்கள் தாமும் இன்புறமாட்டார்; தக்கார்க்கும் நன்மை செய்யமாட்டார்; தம்முயிர்க்கு அரணாய் அமையும் அறவொழுக்கங்களையும் கைக்கொள்ளமாட்டார்; மதிமயங்கி முன்னர்ச் செய்த நல்வினைப் பயனால் கிடைத்த செல்வச் செழுமையில் அழுந்தி வீணே வாழ்நாளைப் போக்குவார் என்கிறது அது.

    தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்
    ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் – தாமயங்கி
    ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
    போக்குவார் புல்லறிவி னார்.  (நாலடி – 327)

    மாந்தர்க்குக் கிடைக்கும் செல்வத்தை அவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினைகளில் பயனென்றே நீதிநூல்கள் பேசுகின்றன. ஏன் சங்க நூலான நற்றிணையுங்கூட,

    ”…நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
    செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே…” என்றே செப்புகின்றது.

    அவ்வாறு முற்பிறவியில் செய்த நல்வினைகளின் காரணமாய்ச் செல்வத்தைப் பெற்றவன், அதனைத் தானும் துய்க்காது, தக்கார்க்கும் ஈயாது வாழும் அற்ப மனநிலையை இப்பிறவியில் எப்படிப் பெறுகின்றான் என்பது சிந்தனைக்குரிய விந்தையான ஒன்றே!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 176-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குடத்துநீரைக் கயிறுகட்டி இழுத்துச்செல்லும் சிறுவனைத் தன் காமிராவில் சுமந்துவந்திருக்கிறார் திரு. முத்துக்குமார். இப்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்!

    நீருக்காக நெடுந்தூரம் பயணித்துத் திரும்பியிருக்கும் இந்தப் பிஞ்சின் அவலம் நம் நெஞ்சைப் பிசைகின்றது. இந்தப் படத்துக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிவாணர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

    *****

    மரத்தைவெட்டி மழையை நிறுத்திய நம் பிழையால் நீருக்குப் போராடுகின்றான் இந்தச் சிறுவன் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாறுவானா மனிதன்…

    மரத்தை வெட்டி யழித்துவிட்டே
    மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
    தரத்தில் மனிதன் கீழிறங்கி
    தனது குடும்ப நினைவின்றி
    நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
    நிலைத்தே விட்ட நிலையினிலே,
    சிரமப் பட்டே நீர்கொணரும்
    சின்னப் பிள்ளையை நினைவீரே…!

    *****

    சிரமப்பட்டு நீர் கொணர்ந்த பிள்ளையைக் கண்டு  அவனை சுமந்துபெற்ற அன்னையின் நீர்க்குடம் குளிர்ந்தது; அவள் கண்களில் நீர் முத்துத் துளிர்த்தது என்று உருக்கமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. கா. முருகேசன்.

    நீர்க்குடம்!

    அதில் நான் என்னைக் காண்கிறேன்
    அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்!

    ஆனால் ஒரு உண்மை…..
    அது கடைகளுக்கு அல்ல என்பதில்; அது வீட்டிற்கானது!

    வேலைக்குச் சென்று வீடு திரும்பி;
    மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து;
    அதிலும் குடிக்க நேரமில்லாது;
    உலை வைத்து சோறுண்டு;
    கிடக்கும் போது எடுக்கின்ற தாகத்திற்காகத்தான் இத்தனை ஓட்டம்!

    இதன் வலியை அவர்கள் மட்டுமே உணர்வார்கள் !

    சிறுவயதில் பனையோலையிலும், தென்னையோலையிலும் விளையாடியதின் – புத்திக்கூர்மை!
    மண்ணில் கொஞ்சம்;
    ததும்பி ததும்பி கால்களில் கொஞ்சம்;
    வீடு வந்து சேர்ந்ததும் இரு துளி நீர்;
    குடத்தில் அல்ல!
    என்னைக் கண்ட அம்மாவின் கண்ணில் !
    ஒரு குவளை நீர் தொண்டைக்குழியில் சென்றதும்,
    பூரித்து போனாள் என் அன்னை!
    உன்னை சுமந்த நீர்க் குடம் குளிர்ந்தாயிற்று! எனக்கு இது போதும்!

    இதுதான் இக்காலத்தின் நிதர்சனம்!

    *****

    ’குழந்தைகள் தொழில்செயும் அவலநிலை அழிய, அரசின் பார்வை ஏழைகள்மீது படவேணும்; ஏழைக்குழந்தைகளும் கல்விகற்று வாழ்வில் உயரவேணும்’ எனும் சமூகநலச் சிந்தனையைத் தன் கவிதையில் விதைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குழந்தைத் தொழில்..!

    எண்ணம் பலவும் எழுச்சி பெறும்
    திண்ணம் கொண்ட திறமை வரும்
    போற்ற வேண்டிய பிள்ளைப் பருவம்
    ஆற்றவும் உளது அரிய கடமைகள்
    சிறார் என்னும் சிந்தனை வந்தால்
    பொறாமை உண்டு பொதுவாக நம்மிடம்
    சிரித்து மகிழும் சிறிய வயதில்
    வரித்த சிந்தனை விரியும் பெருகி
    பள்ளி சென்று படிக்கும் பருவம்
    துள்ளும் வயதில் தளும்பும் இன்பம்
    புத்தகம் சுமக்கும் புதிய சூழலில்
    எத்துணை துன்பம் இந்த வயதில்
    பாரினில் ஏழை படிக்க வழியிலை
    யாரிடம் சொல்லி எங்கே போவது
    குழந்தைத் தொழிலது குற்ற மெனவும்
    அழகாய் உணர்ந்து அறிய வேணும்
    சட்டம் என்ன செய்யும் மகனே
    விட்டு வைத்து வேடிக்கை காட்டுது
    எச்சிலை பொறுக்க இளைய வயதில்
    இச்சை வந்திட இனியும் வேண்டா
    அரசின் பார்வை அவர்கள் மீதே
    அரணாய் வந்து அணைக்க வேணும்
    கொஞ்சம் இல்லை முற்றும்
    அஞ்சும் தொழிலிது அறவே அழிகவே

    *****

    சிறுவனின் பரிதாப நிலைக்காகத் ’தாயினும் சாலப்பரிந்து’ பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    கனவுகள்!

    ஜீன்ஸ் பேன்டும்
    ஜிகினா சட்டையுமே
    அவனது கனவு!
    குடிகாரத் தந்தையால்
    எந்தப் பயனுமில்லை.
    அனுதினமும்
    வருமானத்தைச் செலவு செய்து
    அவமானத்தைச் சம்பாதித்தான்.
    குடியால் அவன் வயிறுதான்
    தினமும் எரிந்தது.
    அடுப்பு என்றோதான்
    புகைந்தது!

    அன்றொருநாள்
    அவன் குடித்த சாராயம்
    அவனையே குடித்தது.
    குடும்பமே கதறித் துடித்தது.
    ஐயகோ…!
    அப்பாவின் வேட்டியே
    அம்மாவின் புடவை ஆனது!
    அம்மாவின் புடவையோ
    அக்காவின் தாவணி ஆனது!
    தனது ஜீன்ஸ் கனவை உதறினான்
    குடும்பப் பொறுப்பை
    உடுத்திக் கொண்டான்.
    இதோ பிறர்வீட்டில்
    தண்ணீர் ஊற்றி
    தன்வீட்டு வறுமையைக் கழுவுகிறான்.
    ஆம் அப்பன் தண்ணியடித்துக்
    குடும்பத்தைக் கெடுத்தான்
    மகனோ தண்ணீர் பிடித்துக்
    குடும்பத்தை காக்கின்றான்.
    தண்ணீர் அடித்து
    ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்
    உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்.
    போதையால் அழிந்த
    குடும்பத்தைச் சுமந்து
    புதிய பாதையை நோக்கிப்
    பயணம் செய்கிறான்.

    ”தந்தையின் குடிப்பழக்கத்தால் கெட்ட குடியைத் தன் உழைப்பால் சுமந்து புதிய பாதையில் பயணிக்கும் சிறுவன் இவன்! தண்ணீர் அடித்து ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்; உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்” என்று கல்லும் கசியும் சொல்லெடுத்துச் சிறுவனுக்குப் பா(ராட்டு)மாலை தொடுத்திருக்கும் திருமிகு. வசந்தி மணாளனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிப்பதில் மகிழ்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டு!

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 177

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 16

    -மேகலா இராமமூர்த்தி

    மனித மாண்புகளில் தலையாய ஒன்று மானம். ’தன்னிலையில் தாழாமையும் தாழ்ந்தபின் உயிர் வாழாமையும் மானம் எனப்படும்’ என்று அதற்கு இலக்கணம் வகுத்தனர் தமிழர். மானத்தின் சிறப்பை,

    “இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழுது ஏத்தும் உலகு” என்று போற்றுகின்றார் வள்ளுவர். அஃதொப்ப, நூல்களில் சிறந்த நாலடியும் மானத்தின் மாண்பைப் பரக்கப் பேசுகின்றது. 

    மறுமைக்குத் தீவினையையும் இம்மைக்குப் பெரும்பழியையும் உருவாக்கும் செயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யார்; ஏனெனில், இறத்தல் என்பது ஒருநாள் துன்பந்தான்; ஆனால் பழியும் பாவமும் ஒருவனிடம் சேர்ந்தாலோ  வாழ்நாள் முழுவதுமே அவை மாற்றுதற்கு அரியவை என்பது கருதியே.

    பாவமும் ஏனைப் பழியும் படவருவ
    சாயினும் சான்றவர் செய்கலார் – சாதல்
    ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
    அருநவை ஆற்றுதல் இன்று.  (நாலடி – 295)
     

    குன்றின் அனையாரும் குன்றிப்போவதற்குக் குன்றி (குன்றிமணி) அளவிலான தரந்தாழ்ந்த செயல்களே போதுமானவை. எனவே அவற்றைத் தவிர்த்தல் அவசியம்.

    நற்குடியில் பிறந்த மக்கள் தம் வாழ்வில் இன்மைவந்து அதன் காரணமாய் இன்னல் வந்துற்றபோதும் தம் குணம் மாறுபடாது வாழவே விரும்புவர். அப்படிப்பட்டவர்கள் வறுமை காரணமாக, வேறுவழியின்றி, செல்வர்களிடம் பொருள்வேண்டி நிற்கும் நிலையில், அச்செல்வர்கள், “இவர்கள் மிகவும் நல்லவர்கள், கனிவுடையவர்கள், ஆயினும் வறுமையுற்றிருக்கிறார்கள்” என்று இந்நன்மக்களின் உயர்பண்புகளை இகழ்ச்சிக்குள்ளாக்கி ஏளனப் பார்வை பார்க்கும்போது, கொல்லனின் உலையில் ஊதும் தீயைப் போல இச்சான்றோர் மனம் உள்ளுக்குள் வேதனையில் கனலும் என்கிறது நாலடியார்.

    நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
    செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
    உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ
    தலையாய சான்றோர் மனம்.  (நாலடி – 298)
     

    எனவே பணம் படைத்தவர்கள், தம்மிடம் பொருள்வேண்டி வரும் நன்மக்களிடம் அவர்கள் மனம் வருந்தும்படியான புன்மொழிகளைப் பேசாதிருப்பது நன்று. செருக்கின்றி அடக்கத்தோடு நடந்துகொள்ளுதல் எல்லார்க்குமே நன்மை பயக்கும்; எனினும் அது செல்வரிடம் அமைந்தால் அவர்க்கு மேலும் ஒரு செல்வமாய்ச் சிறப்புறும் என்றாரே நாயனார் அதனை அவர்கள் ஓர்ந்துபார்க்க வேண்டும். 

    ”எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து.”

    இனி, புலியின் குணத்தோடு பெரியோரின் குணத்தை ஒப்பிட்டுப் பேசும் நாலடியார்ப் பாடலொன்றைப் பார்ப்போம்.

    மதம் பொருந்திய யானையை அதன் வலிமை ஒழித்து வீழ்த்திய காட்டிலுறையும் புலியானது, தனக்கு இடப்பக்கம் வீழ்ந்த அந்த யானையை, தான் பசி மிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும் உண்ணாது உயிரைவிடும். அதுபோல், தன்மானமும் நற்குணமும் நிரம்பிய பெரியோர் செல்வந்திகழ் சொர்க்கமே கையகம் வருவதாயினும் அது தமது மானம்கெட வருவதாயின் அதனை ஒருசிறிதும் விரும்பார்.

    கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
    இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் – இடமுடைய
    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் மழுங்க வரின்.  (நாலடி – 300)
     

    வறுமையிலும் புரவலரிடம் இரந்துநிற்கும் சிறுமைக்குக் கூசும் மேன்மக்களின் சால்பை வள்ளுவரும், 

    ”இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு” எனப் பகர்வதை நாம் மேற்கண்ட நாலடியோடு ஒப்பவைத்து எண்ணலாம்.

    புலி குறித்த செய்திகள் சில நம் சிந்தனைக்கு… 

    காட்டுவிலங்குகளில் புலியின் வீரத்தைப் பற்றியும் அதன் உணவுப்பழக்கத்தைப் பற்றியும் நம் தமிழ் இலக்கியங்கள் பலவிடங்களில் பேசுகின்றன. அவற்றில், ”புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்பதும், ”புலியானது தான் வீழ்த்திய இரை தனக்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனை உண்ணாது” என்பதும் குறிப்பிடத்தக்கவை. புலி மாமிசங்களையே விரும்பி உண்ணும் ’மாமிசபட்சிணி’ (Carnivore) என்பதால் அது புல்லைத் தின்னாது என்பது ஏற்புடைத்தே. ஆயினும் அடுத்ததாகச் சொல்லப்படும் இடப்பக்கம் வீழ் இரையை அஃது உண்ணாது என்பதை மெய்ப்பிப்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆகவே, இது புலியைச் சிறப்பிப்பதற்காகச் சுட்டப்படும் உயர்வுநவிற்சி மொழியாகக்கூட இருக்கலாம். அல்லது ”இடம் வீழ்ந்த/ இடம்பட வீழ்ந்த” என்ற தொடர்களுக்கு இடப்பக்கம் அல்லாத வேறுபொருள் இருக்கிறதா என்று ஆராய்தலும் புதிய உண்மைகளைக் கண்டறிய உதவலாம். 

    புலி இடம்பட வீழ்ந்த இரையை உண்ணாது என்றியம்பும் சங்கப் பாடல்கள் சில: 

    …இடம் படின்
    வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
    தாழ்வு இல் உள்ளம்…. (அகம் – 29) 

    …கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்றவண் உண்ணா தாகி வழிநாள்
    பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்
    திருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் புலி…  (புறம் – 190)
     

    ’கொடிது கொடிது வறுமை கொடிது’ என்பது மூத்தோர்மொழி. வறுமையால் வாழ்க்கை வெறுமையாகி, பிறரிடம் இரந்துநிற்கும் அவலம் வார்த்தைகளில் வடிக்கவொண்ணாதது. எனினும் வறுமையைச் சாக்காக வைத்து முறையற்ற வழிகளில் முயன்று வயிற்றை நிரப்புவதும் சரியாகாது. இக்கருத்தைப் பேசுகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். 

    இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
    பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
    விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
    அழித்துப் பிறக்கும் பிறப்பு. (நாலடி – 302)

    இழிக்கத்தக்க மானக்குறைவான செயல்களைச் செய்து ஒருவன் வயிறார உண்ணுவதைவிட, உலகம் பழிக்கத்தக்க அச்செயல்களைச் செய்யாமல் வறுமையாற் பசியோடிருத்தல் தவறாகுமோ? ஆகாது!ஏனென்றால், அழிக்கப்பட்டு ஒருவன் பிறக்கும் இப்பிறப்பு, இமைத்துப் பின் கண்திறக்கும் நொடிப்பொழுதே அன்றோ?

    இதே கருத்தையே நம் குறளாசானும் வேறு சொற்களில்,

    ”ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை” என்று எச்சரித்திருப்பதை எண்ணுக.

    உலகில் எல்லாருமே தீயவர்கள் அல்லர். இரவலரிடம் இன்சொல் இயம்பி, ஈதல் செய்யும் நல்லவர்களுக்கும் நானிலத்தில் பஞ்சமில்லை. அவ்வாறு தமக்கென்று ஒளியாத உறுதியான மெய்யன்பினையுடைய கண்போன்ற அன்பர்களிடத்தும்கூட இரவாது வாழ்வதே நல்வாழ்க்கையாகும். இரத்தலாகிய செயலை நினைக்கும்பொழுதே உள்ளம் கரைந்து அழிகின்றதே… அப்படியாயின், பிறரிடம் ஒன்று ஏற்குங்காலத்தில் அங்ஙனம் ஏற்பவரது மனந்தான் எப்படி நைந்துபோகும் என்று கவல்கின்றது பின்வரும் பாடல்.

    கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
    உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ
    கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.  (நாலடி – 305)
     

    அன்போடு ஈவோரிடமும் இரப்பது துன்பமானது என்பதே இதன்வாயிலாய் நாம் உணரும் உண்மை. 

    இதே கொள்கையுடைய நம் தெய்வப்புலவரும், 

    ”கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்” என்று இரத்தலின் இ(ளி)ழிவை எடுத்தோதுகின்றார்.
     

    பிறரிடம் சென்று ஒன்றை ஈயென இரந்துபெறும் இழிநிலை எத்துணை வருந்தத்தக்கது என்று கண்டோம். அவ்வாறு இரப்போர்க்கு ஈயாதிருப்பதும், அவர்கள் உளம் புண்படும்படி ஏளனச்சொல் உதிர்ப்பதும் அதினும் வருந்தத்தக்கதாகும். ஆகலின், செல்வமுடையோர் நல்மனமுடையோராயும் இருந்து ஈகை செய்தால் நிலைத்த புகழை இந்நிலவுலகில் பெறலாம்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    Share
  • படக்கவிதைப் போட்டி 175-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒய்யாரமாய்ச் சாய்ந்து படுத்திருக்கும் இந்த அய்யாவைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. சாந்தி வீஜே. வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இந்த மனிதரின் கிடந்த திருக்கோலத்தைக் காண்கையில் சங்க இலக்கிய நூலான ‘முல்லைப்பாட்டில்’ தலைவன் பாசறையில் ஒரு கையைப் பள்ளியில் ஊன்றி, மறு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தபடி, சிந்தித்திருக்கும் நிகழ்வே என் சிந்தையில் எழுகின்றது.

    ”…ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
    முடியொடு கடகம் சேர்த்தி நெடிதுநினைந்து…” என்ற முல்லைப்பாட்டின் அடிகளுக்கு நல்ல ’மாடலாக’க் காட்சியளிக்கிறார் இவர்! 

    இனி, கவிஞர்களின் முறை! தம் சிந்தனைக் குதிரையில் பயணித்துத் திரட்டும் கருத்து முத்துக்களை இங்கே கவிதைகளாய்க் கொட்டிச் செல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ”பழுதாகி நொண்டியாய்ப் போன வண்டியைப்போல் பயனற்ற உடலோடு படுத்துக்கிடக்கின்றார் இந்த மனிதர்” என்று தன் கவிதையில் அவலச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

    கழித்த பொருள்!

    இழுக்க முடியாதபடிப்
    பழுதான சக்கரங்களால்
    நொண்டியாகிப்போன வண்டிக்குப் பாரமாய்,
    ஓரஞ்சேர்ந்து,
    இடம்பெயராதபடி,
    பயனற்ற கை கால்களோடு
    படுத்துக்கிடக்கிறது உடல்.

    *****

    ”சொந்தமாக வண்டியோட்டி வாழும் வாழ்க்கையிலே, அயலவரை அண்டிப்பிழைக்கும் அவலமில்லை” என்று சுயதொழிலின் மேன்மையை நயமாய்ச் செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அமைதியான…

    வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
    வண்டிக் காரர் வாழ்க்கையிலே
    அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
    அலைந்து பெற்ற கடனுமில்லை,
    பண்டிகை மற்றும் பிறநாளும்
    பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
    உண்டே உழைத்துபின் உறங்குவதால்
    உளதே வாழ்வில் அமைதியொன்றே…!

    *****

    ”சந்துமுனையில் காத்திருப்பார்; அழைத்தவுடன் சட்டென்று வந்திடுவார்” என்று வண்டிக்காரரின் நல்லியல்புகளைத் தன் சொல்மாலையில் அழகாய்த் தொகுத்தளித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வண்டிக்காரன்

    எந்தி ரமாக உழைத்துவிட்டு
    ……….இயல்பாய்ச் சிரிக்கும் இம்மனிதர்.!
    சந்தி ரய்யா நாயுடுவாம்
    ……….சகல கலா வல்லவராம்.!
    சந்து முனையில் காத்திருப்பார்
    ……….சட்டென்று வருவார் அழைத்தவுடன்.!
    எந்த வேலை என்றில்லை
    ……….எல்லாமும் செய்ய இசைவார்.!

    பொருட்கள் ஏதும் கொண்டுசெலல்
    ……….பொறுமை யாய் வண்டியோட்டல்.!
    விருப்ப முடனே செயல்படுதல்
    ……….வினை ஏதும் செய்யமாட்டார்.!
    விரும்பி எதையும் கொடுத்தபோது
    ……….வேண்டா மென்று சொல்லமாட்டார்.!
    பொருத்த மான வாடகையைப்
    ……….புரிந்து கொண்டு பணம்கேட்பார்.!

    *****

    சிந்தனைச் செறிவுள்ள கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் வந்தனங்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது இனி…

    சந்திரய்யா நாயுடு எந்திரய்யா சீக்கிரம்!

    ”காலங் காத்தால நல்ல போணியாகப் போகுது
    காலநீட்டிப் படுக்காமக் கடமைக்கு நீ புறப்படு!
    வண்டியில படுத்திருந்தா வருமானம் கெடைக்குமா?
    உண்டுப்பிட்டு உறங்கிப்புட்டா உழைப்பு வந்து சேருமா?
    சந்திரய்யா நாயுடு….

    பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போலவே
    வேர்க்கடலை யாவாரி விழுந்து கெடக்க முடியுமா?
    நித்திரையே நினைவாக நீட்டிக் காலை வச்சுக்கிட்டு
    புத்தரைப் போல் நாம் படுத்தா பொழைப்பு வந்து தேறுமா?
    இத்தரையில் காசில்லாம எதுவுமில்லை நாயுடு
    எத்தனையோ பொழைப்பிருக்கு எந்திரிச்சிப் போயிடு.
    சந்திரய்யா நாயுடு….”
    என்று வாழ்வில் உழைத்துப் பிழைக்கவேண்டியதன் அவசியத்தை நகைச்சுவையோடு, இரசிக்கும்படியாக, நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 15

    -மேகலா இராமமூர்த்தி

    மனிதர்கள் தம் வாழ்வைச் சிறப்பாக நடத்தப் பொருளிருக்க வேண்டும்; அதேவேளை அவர்கள் நடத்தும் வாழ்க்கையிலும் பொருளிருக்க வேண்டும். பிறந்தோம்; இருந்தோம்; செத்தோம் என்று வாழ்வதில் பொருளில்லை. எனவே செல்வத்தைத் தேடித் தொகுப்பவர்கள் அதனால் தாமும் பயன்கொள்ளவேண்டும்; அப்பொருளால் மற்றையோர்க்கும் பயன்நல்க வேண்டும். ஆனால் அத்தகு நல்ல மனம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எச்சில் கையால் காகம் ஓட்டாத கருமிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைக் கருமிகள் என்று சொல்வதைக் காட்டிலும் நன்மையே செய்யா விடக்கிருமிகள் என்று சொல்வது பொருந்தும். அத்தகைய ஈயாதாரின் இழிகுணத்தைப் பேசுகின்றது பின்வரும் நாலடியார்.

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான் 
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து

    அருளும் அவனை நகும்.   (நாலடி – 273)

    தான் துய்த்துச் செலவழிக்காமலும்,  துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும் செல்வத்தை வீணாய்த் தொகுத்துவைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானின் அறியாமை கண்டு அவன் அவ்வாறு தொகுத்து வைத்த பொருளும் நகையாடும்; அவன் அப் பிறவியில் தொகுக்காத அருளும் நகையாடும்.

    ”உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
    ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்பதை அறியாத மன்பதையோர் சிலர் பொருளிருந்தும் பொருளற்ற வாழ்வு வாழ்ந்து மாய்கின்றனர்.

    பிறர்க்கொன்று உதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்; ஏனென்றால், பொருளை வீணே தொகுத்துவைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகோரால் பழிக்கப் படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்; வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கும் பொருட்டுக் குழி தோண்டுதலில் இருந்தும் தப்பினர்; தம்முடைய கைகள் நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலில் இருந்தும் தப்பினர்; இன்னும் இவ்வாறு அவர்கள் தப்பிக்கொண்ட வகைகள் பலவாகும்.

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் 
    இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல. (நாலடி – 277)

    ஆகலின் ஈயாமையாற் பயனில்லாமையோடு இன்னலும் பல இருப்பதனால், செல்வத்தின் இன்னலை எய்தாத வறியவர் ஈயாத செல்வந்தரினும் பலவகையில் நிம்மதியானவர் ஆகின்றார் என்று நகைச்சுவையாகக் கூறி நமக்கு ஈதலின் அவசியத்தைத் தெருட்டுகின்றது நாலடியார்.

    பொருளைத் திரட்டுவதில் துன்பம், திரட்டிய நற்பொருளைப் பாதுகாத்தலும் பெருந்துன்பம்; அங்ஙனம் பாதுகாத்த பொருள் தன் அளவிற் குறைந்துபோகுமாயின் அதுவும் துன்பம்; இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்துபோகுமானால் அது பின்னும் துன்பம்; ஆக, துய்க்காது சேமித்துவைக்கும் பொருள் துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமாய்த் தாயகமாய் அமைந்துவிடுவதைச் சுட்டுகின்றது நாலடியார்.

    ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.  (நாலடி – 280)

    எனவே துன்பங்களுக்கெல்லாம் மூலமாய்த் திகழும் ஒண்பொருளை நன்முறையில், காலத்தில், பயன்படுத்தி வாழ்தலே அறிவுடைமை.

    ”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றுதானே குறளாசானும் சாற்றியுள்ளார்.   அதனைப் போற்றி வாழ்தலே சிறப்பு!

    பொருளுடையார் செய்யவேண்டியனவற்றையும் அவ்வாறு செய்யாமல் பொருளைப் பதுக்குவதால் ஏற்படும் இன்னல்களையும் கன்னல் தமிழில் கவின்பெற விளக்கிய நாலடியார், பொருளின்மையின் இழிவினையும், பொருளிலார் அடையும் சிறுமையையும் தெளிவாய் நமக்கு விளக்கிச் செல்கின்றது.

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
    செத்த பிணத்திற் கடை.   (நாலடி – 281)

    துவர் ஊட்டிய ஆடையை இடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில் வாழ்ந்தாலும் (பத்தானும் எட்டானும்) பொருளுடைமை பலரிடத்திலும் பெருமையடையும்; ஏற்ற உயர்குடிக்கண்ணே பிறந்தாலும் பொருளில்லாதார் செத்த பிணத்தினுங் கடைப்பட்டவராவர் என்பது இதன் பொருள்.

    உண்மைதானே? ஒருவன் பணக்காரனாக இருந்துவிட்டால் போதும்; அதுவே அவனுக்குச் சகல மரியாதைகளையும் மக்களிடம் பெற்றுத்தந்து விடுகின்றது. அவன் பின்புலம் குறித்தோ, அவன் செல்வம் தேடிய முறை குறித்தோ யாரும் இங்கே கவலுவதில்லை. அதுவே ஒருவன் நற்குடியில் பிறந்திருந்தாலுங்கூட வறிஞனாக இருந்தால் அவனை அவன் நெருங்கிய உறவினரேகூட மதிப்பதில்லை.

    ”பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்” என்று இதனைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டார் தெய்வப்புலவர்.

    வறுமையாளனின் தன்மையை நம் நெஞ்சுருகும் வகையில் இயம்புகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    நீரினும் நுண்ணிது நெய்யென்பார் நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்- தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
    புகற்கரிய பூழை நுழைந்து.  (நாலடி – 282)

    நெய்யானது நீரைக் காட்டிலும் நுட்பமானது என்று அறிந்தோர் கூறுவர்; நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமானது என்பதை அனைவரும் அறிவர். ஆராய்ந்தால் வறுமையாகிய துன்பமுடையோன் அப் புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும் நுழைந்து புகுந்துவிடுவான் என்கிறது நாலடி.

    பசிப்பிணியும் ஏழைமையும் ஒருவனை பூழையிலும் நுழைந்து இரக்கும் அளவுக்கு நிலையில் இறக்கிவிடுகின்றன என்பதை அறியும்போது நம் மனம் வேதனையில் ஆழ்கின்றது.

    பத்து வகையான நற்குணங்களும் பசிவந்திடப் பறந்துபோகும் என்ற ஔவையின் மூதுரையை இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

    மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தளன்மை – தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந்திட பறந்து போகும். (மூதுரை)

    பசிப்பிணி எனும் பாவியின் இயல்பை மணிமேகலைக் காப்பியமும் அணிபெற எடுத்துரைக்கின்றது. அப்பாடல்…

    பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
    நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
    பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
    பசிப்பிணி எனும் பாவி” (மணிமேகலை)

    ஆதலால், நிலவுலகில் வாழ்வோர் தம் நிலையில் தாழாமல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாயின் பொருளைத் திரட்டவேண்டும்; திரட்டிய பொருளை நன்முறையில் துய்த்தும் பிறர்க்கீந்தும் மகிழவேண்டும். அத்தகு வாழ்வே பொருளுள்ள நல்வாழ்வாகும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (176)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முத்துக்குமார் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 174-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    முகம் முழுவதையும் முக்காடிட்டு மறைத்து விழிவழியே கவிபாடும் காரிகையின் நிழற்படத்தை எடுத்து வந்திருப்பவர் PicturesQueLFS. இதனை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    துணியிட்டு முகத்தை மறைத்தாலும் கள்ளமற்ற மணிவிழிகள் அகத்தின் அழகைத் தெற்றெனக் காட்டுகின்றனவே!  

    இப்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுத கவிஞர்களை அழைக்கின்றேன்!

    *****

    ”ஆயிழையே! வாய்வழியே சொல்லவேண்டிய மொழிகளையெல்லாம் உன் எழில் விழிகளே அழகாய்ச் சொல்லிவிடுவதால் அதற்குப் போடவேண்டாம் திரை” என்று நிழற்படப் பெண்ணிடம் நளினமாய் உரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    விழியே…

    முகத்தை மூடிக் கொண்டாலும்
    மொழிகள் பலவும் பேசுகின்ற
    வகையில் உள்ளன உன்கண்கள்
    வாயின் வேலையைத் தான்செய்தே,
    நகையில் உடையில் வந்திடாத
    நல்ல வுந்தன் அழகினையே
    மிகையாய்ப் பார்வை தருவதாலே
    மூட வேண்டாம் கண்களையே…!

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இக்கவிதை மட்டுமே வந்திருப்பதால் போட்டி ஏதுமின்றி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகின்றார் திரு. செண்பக ஜெகதீசன். விடாமுயற்சியோடு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் அவரின் ஆர்வத்தையும் அயரா உழைப்பையும் பெரிதும் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (175)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி வீஜே எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 14

    -மேகலா இராமமூர்த்தி

    வாழ்விலே நாம் வறுமை என்று கருதுவது பொருளின்மையை. ஆனால் அறிவில் குறைவுபட்டுப் போதலே உண்மையான வறுமை என்கிறது நாலடியார். ஏனெனில் ஒருவன் தன் அறிவின் திறங்கொண்டு எதனையும் சாதிக்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பேதையோ கைப்பொருளையும் தொலைத்துவிட்டுக் கலங்கிநிற்பான்.

    இளமைக் காலத்தில் தன் தந்தை ‘படி’ என்று இடித்துக் கூற, அதனை ஒரு நற்சொல் என்று ஏற்காமல் இகழ்ந்து கல்லாது விட்டவன், பின்பொருகால், எழுத்தெழுதிய கடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப் படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத் தனக்கு அது இயலாமையால் நாணத்தாற் சினந்து கூவி அவமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான் என்று கல்லாப் பேதையின் நிலையினை விளக்குகின்றது நாலடி.

    கல்லென்று தந்தை கழற அதனையோர்
    சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் – மெல்ல
    எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
    வழுக்கோலைக் கொண்டு விடும். 
    (நாலடி – 253)

    அறிவின்மை பலர் முன்னிலையில் மானக் குறைவைத் தருமாகையால் மாந்தர் கல்வியறிவு பெறுதல் வேண்டற்பாலது.

    பொதுவாகக் கற்றுத்தெளிந்த நாவன்மையினையுடைய அறிஞர்கள் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டுவிடக்கூடுமோ என்று அஞ்சி மிகுதியாகப் பேசமாட்டார்கள். ஆனால், கற்றறிவில்லா ஏனையோர் சொற்குற்றம் பொருட்குற்றம் நேர்வதற்கு அஞ்சாமல் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பர். இஃது, பனைமரத்தில் நீர்வற்றிய உலர்ந்த ஓலை எப்போதும் கலகலவென்று ஓசையிட்டபடியிருக்க நீர்ப்பசையோடு கூடிய பச்சை ஓலையோ எவ்வித ஆரவார ஒலியும் எழுப்பாமலிருக்கும் நிலையை ஒத்தது.

    கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
    பச்சோலைக் கில்லை யொலி. 
    (நாலடி – 256)

    ”நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்” என்று மக்கள் சொல்வதும் இதனையே.

    சொல்லின் தொகையறிந்த தூய அறிஞர்கள், கற்றோர் அவையில் பேசப்புகுமுன், அவையின் தன்மையறிந்து, ஆராய்ந்து சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று வள்ளுவர் கூறியிருப்பது ஈண்டு சிந்திக்கற்பாலது. 

    அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    (குறள் – 711)
     

    தரமறிந்து பயன்கொள்ளும் வகையறியாத இழிகுணங்கொண்ட பேதையர், தேன்சொரிந்து இனிது மணந்தாலும் மலரை உண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையே விரும்பும் ஈயைப்போல், தகுதியுடையார் வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்த அறிவுரைகளின் பயனை நுகரமாட்டார்கள் என்கிறது நாலடியார்.

    பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் இழிந்தவை
    தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.  
    (நாலடி – 259)

    என்ன செய்வது…? அவரவர் தரத்திற்கும் அறிவுக்கும் ஏற்பவே இரசனையும் சுவையும் அமைகின்றது. அத்தகையோரை மாற்றுதல் மிகக் கடினம்!

    மனிதவாழ்வில் நாம் கண்கூடாகப் பார்க்கின்ற இன்னோர் அதிசயம் கீழோரிடம் செல்வம் நிறைந்திருப்பதும், மேலோர் வறுமையில் வாடுதலும்.

    இத்தகைய கீழோரிடம் இருக்கும் செல்வம் சா(ய்)க்கடையில் கொட்டிக்கிடக்கும் மூவா மருந்தாகிய அமிழ்தத்தைப் போலப் பிறருக்குப் பயன்தரா ஒன்றாகவே இருக்கும். அந்தப் பயனில் செல்வத்தை யாரும் நயக்கவும் மாட்டார்கள்.

    பலவாக நிறைந்த அலைகளையுடைய கடற்கரையில் தாம் தங்கியிருந்தாலும், வலிதின் நீருறுதலுடைய உவர்ப்பில்லாத கிணற்றைத் தேடிச்சென்றுதான் மக்கள் நீர் பருகுவர்; அதுபோல் கீழ்மக்கள் அருகிலேயே மிகுந்த செல்வத்தோடு இருப்பினும் தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவு சென்றும் உதவுவார் கண்ணதேயாகும் என்பது பின்வரும் நாலடியார் நவிலும் நற்கருத்து.

    மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
    வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்
    செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
    நல்குவார் கட்டே நசை.    
    (நாலடி – 263)
     

    இதே கருத்தைக் கழைதின் யானையார் எனும் புலவர் பெருந்தகையும் புறப்பாட்டொன்றில் சிறப்பாய் விளக்கியிருப்பதை இங்கே எண்ணி மகிழலாம்.

    ”…தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணா ராகுப நீர்வேட் டோரே
    ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
    சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
    உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்…”
      (புறம் – 204)

    ”கடல் நாற்புறமுஞ் சூழ்ந்து பொருந்தியிருக்கும் இவ்வுலகத்தில் நல்வினை என்பது தனி நிலைமையுடையதாயிருக்கின்றது. ஏனெனில், நல்லனவற்றை உணர்ந்தொழுகும் உயர்ந்தோர் வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங் கத்தரியும் போன்ற கீழோர், பட்டும் உயர்ந்த ஆடைகளும் உடுத்துக்கொண்டு வளமாக வாழ்கின்றனர்” என்று நுண்ணறிவும் நூலறிவும் உடைய நாலடியின் ஆசிரியர்களே வியக்கின்றனர்.

    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
    உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
    வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
    பட்டும் துகிலும் உடுத்து.  
    (நாலடி -264)

    இதே ஐயம் நம் ஐயன் திருவள்ளுவருக்கும் எழுந்ததால்தான்,

    ”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்” என்று குறளெழுதினார்.

    இதுபோல் விடைதெரியா வேறுபல் வினாக்களுக்கு ’வினைப்பயன்’ எனும் நம்பிக்கையே நம் மக்களுக்கு ஆறுதலளிக்க வருகின்றது.

    உண்மையான கல்வியாளர் யார்? உண்மையான செல்வந்தர் யார்? என்பதற்கு மனங்கொளத்தக்க விளக்கங்களைத் தருகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். அதனைக் காண்போம்!

    இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் அவர் ஓதாதவரேயாவர் (கல்லாதவர்), இயற்கையறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடொப்ப விளங்குவர் (கற்றவர்). வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருந்து பிறரை ஒன்று இரவாதவர் செல்வரேயாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்று உதவாரென்றால் வறுமையாளரேயாவர்.

    ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
    ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாக
    நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
    நல்கூர்ந்தார் ஈயா ரெனின். 
    (நாலடி – 270)

    செல்வம் என்பது என்ன? ”அது சிந்தையின் நிறைவு” என்றார் குமரகுருபரர். அந்த நிறைவும், பிறருக்கு உதவும் உதார குணமும் இல்லாதவர்கள் மனவறுமை கொண்ட ஏழையரே என்று கொள்வதில் பிழையொன்றுமில்லை!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
    3. புறநானூறு மூலமும் உரையும் – ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 173-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்த இந்த நிழற்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    அளவில் பெரியது ஆற்றலில் சிறந்தது யானை. அற்றை நாளைய அரசர் தம் படைகளிலேயே பெருமைக்குரியதாய்க் கருதியது யானைப் படையையே. நினைவாற்றல், புத்திக்கூர்மை, குடும்பப்பிணைப்பு என்று எத்தனையோ நற்குணங்கள் யானையிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்வதற்கு இருக்க, அவனோ மதம் பிடிப்பது ஒன்றையே அவற்றிடமிருந்து விருப்பமாய்க் கற்க முனைகின்றான்; அம்மட்டோ? காடுகளில் இச்சையோடு திரிந்துகொண்டிருக்கும் அவற்றைப் பிடித்துப் பிச்சையெடுக்க விடுகின்றான். வேதனை!

    இனி, யானை குறித்த தம் கருத்துக்களைக் கவியருவியாய்ப் பெருகவிட நம் அருமைக் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். அவர்களை வரவேற்போம்!

    *****

    உருவில் பெருத்த உயரிய விலங்காம் யானை, பதமாய் மாந்தருடன் பழகினும் மதங்கொண்டால் பாகனையே அதஞ் செய்துவிடும்! மாவிலங்கதற்கு விலங்குபூட்டிப் பிச்சையெடுக்க வைத்தல் மாபெருங்குற்றம் என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    யானையோர் அதிசயம்.!

    உருவில் பெருத்த உயரிய விலங்கு
    இருபுறம் கட்டிய இரும்புச் சங்கிலி.!
    பிணைக்கப் பட்டது பிழைசெய் ததாலா.?
    இணையாய் வந்த இருவரும் யாரோ.?
    மாவிலங் கதனை மாதங்க மென்பார்
    கோவில் வாசலில் கண்டும் தொழுவார்.!
    அகல வாயினால் அனைத்தும் உண்ணச்
    சகலமும் வயிற்றில் செரிக்கும் அதிசயம்.!
    பிளிறும் சத்தமோ பெரிதாய்க் கேட்கும்
    களிற்றின் சினமோ காட்டையே அழிக்கும்.!
    தன்கைப் பிறரின் தலையிலே வைத்து
    தன்னல மின்றித் தரும்நல் லாசியை.!
    விலங்கென் றாலும் விதிவி லக்காய்
    நலம் செய்யும் நல்ல பிராணியே.!
    பதமாய் மனிதருடன் பழகும் ஆனால்
    மதம் கொண்டால் முதல்பலி பாகனாம்.!
    மண்ணில் பிறந்த மாவிலங்(கு) யானை
    கண்ணுக் கின்னும் காட்சிப் பொருளே.!
    அச்சம் உண்டு அருகில் செல்லவும்
    பிச்சை எடுக்கப் பழக்கியது குற்றமே.!

    *****

    ”காட்டுவிலங்கினைக் கட்டுப்படுத்தி மக்களிடம் காட்டிப் பிழைத்தது போதுமையா! அதனைப் பிச்சையெடுக்க வைத்து அதன் பிறப்பைக் கொச்சைப்படுத்தாதீர்!” என்று வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வேண்டாமே…

    காட்டில் பெரிய விலங்கதனைக்
    கட்டுப் படுத்தி சாதுவாக்கி,
    நாட்டில் நல்ல வேலைசெய்ய
    நன்றாய்ப் பழக்கி நலம்பெற்றும்,
    கோட்டை விட்டு விடுகின்றீர்
    குணமது கெட்ட மானிடரே,
    காட்டிப் பிழைத்தது போதுமய்யா
    கையால் பிச்சை வேண்டாமே…!

    *****

    மரக்கிளை ஒடித்துண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்த நான் இன்று கிளையிழந்து வாடுகின்றேன். பாசம் எனும் பெயரில் பாசாங்குக் காட்டி வீழ்த்தும் வஞ்சக நெஞ்சினரே! நகர்வலத்தில் எங்களை வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு எங்கள் விழியோர ஈரம் புரியுமா? என்று வெதும்பும் யானையைத் தன் கவிதைப் பாத்திரமாய் உலவவிட்டிருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    யானை அழிவின் காட்சி!

    வனத் தாயின் கருவறையிலோ சுதந்திரமாக …..
    வாழ்விழந்து நிற்கிறேன் பரதேசியாக …………
    மரக்கிளை ஒடித்த கரங்களில்………..
    என் கிளை(உறவு)யிழந்த சோர்வு…..
    சுதந்திர காற்றில் மகிழ்வாக காட்டின் வாசம்
    சங்கிலியின் பிணைப்பிலோ கைதியின் வாசம்
    குழி தோண்டி குழிதோண்டியே
    குறுக்கு வழியில் கைது செய்வீர்!
    பாசமெனும் பெயரிலே பாசாங்கு செய்குவீர் !
    நேசம் காட்டி வீழ்த்தும் கலையினை
    நேற்று இன்றா கற்றுள்ளீர் !
    ‘களிறு’ என்ற கர்வம் அகற்ற
    ‘பிடி’ யின் உறவில் பிணைந்திடாமல் இருக்க
    மலை போன்ற உருவத்தினை
    மண்டியிட வைத்தீர் !
    அடிமை செய்யும் தொழிலை
    கற்றுத் தெளிந்த மானிடமே !
    பொய்வித்தை காட்டி விந்தை புரியும் ஆறறிவாளனே !
    எம்அறிவு குறைபாடு உமக்கு ஆதாயமானது
    எங்குக் கற்றீர் போலி வித்தை காட்ட

    கலையெனும் பெயரில் ஒப்பனை செய்தீர் !
    கண்ணுறக்கம் தொலைக்க நிம்மதி கெடுத்தீர்
    விலங்கு என்ற ஏளனமா
    மடிந்து போகாமலும் உயிர் வாழ விடாமலும் துயரம் தந்து
    மதம் பிடித்ததாய் புகார் சொல்வீர் !
    மதம் பிடித்த மானிடமே …..

    எம் இன அழிவில்
    உங்கள் சுயநலச் சாயம் தெரிகிறதே ….
    எமை விலை பேசும் மானிடமே !
    நகர்வலத்தில் வீதியுலா வருகையிலே
    வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு
    என் கண்ணின் ஈரம் புரிகிறதா
    யானை அழிவின் காட்சி தெரிகிறதா…………..

    *****

    யானையின் அவல வாழ்வியலை உருக்கமாய்த் தம் கவிதையில் தீட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    யானை – சிறுவர் பாடல்

    வேலை செஞ்சு களைச்சிப்போயி வேழமொண்ணு வருகுது
    காலைச்சுற்றிக் கட்டிப்போட்ட கஸ்டத்தோட வருகுது.
    ஆளுக்கொரு பக்கம் நிண்ணு அங்குசத்தால் குத்தியும்
    அதையும் தாங்கித் துன்பத்தோடு அமைதி காத்து வருகுது.

    மாகரத்த யானை தன்றன் வலியறிந்தும் குறுக்கிடும்
    சூகரத்தைப் போகவிட்டுத் தூரமாக விலகிடும்
    பாகர்செய்யும் துன்பந்தன்னைப் பலமிருந்தும் பொறுத்திடும்
    வேகமுற்று மூர்க்கம்கொண்டால் மட்டுமே அதஞ்செய்யும்

    பூதலத்தில் பொறுமை காக்கும் புனிதர்கூட அற்பரின்
    பொய்புரட்டை வஞ்சச்சூதை புன்மையைப் பொறுப்பதும்
    ஆதரித்து அன்பு செய்து அவரை ஏற்றுக் கொள்வதும்
    ஆனை காட்டும் நற்குணத்திற் கீடு என்பர் மாந்தரே.

    பூதலத்தில் அற்பரின் பொய்புரட்டைப் பொறுத்துக்கொள்ளும் புனிதர்போல, மாகரத்த யானையும் பாகர்செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்கின்றது என்று வேழத்தின் உயர்குணத்தைத் தக்கவகையில் விதந்தோதுகின்ற இக்கவிதையின் ஆசிரியர் திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (174)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 13

    -மேகலா இராமமூர்த்தி 

    நல்ல நட்பினால் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். அதேவேளை கூடாநட்பினால் அவன் அடையும் இன்னல்களோ அதனினும் ஏராளம். ஒருவனை நல்லவனாக்கி வாழ்வில் உயர்த்துவதிலும் தீயவனாக்கி அவன் வாழ்வையே சீரழிப்பதிலும் நண்பர்களுக்கு இணை யாருளர்?

    ”Keep company with the wise and you will become wise. If you make friends with stupid people, you will be ruined” என்று விவிலியம் சொல்லும் வேதவாக்கை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

    ”நுட்ப உணர்வுடையாரோடு கலந்து பழகி இன்புறுதல் விண்ணுலக இன்பமே போலும் விரும்பப்படும் மேன்மையினையுடையது; நுண்ணிய நூலுணர்வும் இல்லாதவராகிய பயனிலாரொடு கேண்மை கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்” என்பது நட்பு குறித்த நாலடியாரின் பார்வை. 

    நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
    விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் – நுண்ணூல்
    உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
    புணர்தல் நிரயத்து ளொன்று. 
    (நாலடி – 233)
     

    இப்பாடலில் நுண்ணுணர்வென்று முதலடியிலும் நுண்ணூல் உணர்வென்று இரண்டாம் அடியிலும் நாலடியார் கூறியிருப்பது இருவகைப்பட்ட பண்பினரைச் சுட்டுவதாகும். இவர்களை வேறு வார்த்தைகளில் விளிப்பதாயின் நுண்ணறிவினார், நூலறிவினார் எனலாம். நுண்ணறிவும் நூலறிவும் மிக்காரை நண்பராக்கிக் கொள்க என்பதே இந்நாலடியார்ப் பாடல் நமக்குணர்த்தும் செய்தியாகும்.

    ஒரே குளத்து நீரில் தோன்றி ஒன்றாகவே வளர்ந்தாலும் மணம் வீசும் குவளை மலரின் இயல்பை ஆம்பல் ஒருநாளும் ஒத்திருப்பதில்லை. அஃதொப்ப, பெருந்தன்மையும் நற்பண்புகளும் வாய்ந்தோரின் நட்பைப் பெற்றாலும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் மாறுபட்டே இருக்கும்.

    நாம் தலைகீழாய் நின்றாலும் நாய்வாலை நிமிர்த்த முடியுமோ?  அதுபோன்றதுதான் கூடாநட்பினரைத் திருத்த முயலுதலும்! ஆகலின், அவர்களோடு நேயங்கொள்ளாமலிருத்தலே நன்று என்று நவிலும் நாலடியாரின் புத்திமதி மதித்துப் போற்றத்தக்க ஒன்றாகும். 

    ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
    கருமங்கள் வேறு படும்.  
    (நாலடி – 236)
     

    புல்லறிவினாரின் நட்பு எத்தகையது என்பதை எளிய சான்றுகளுடன் நம் மனங்கொளத்தக்க வகையில் விளக்குகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்!

    ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
    வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
    நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
    புல்லறிவி னாரொடு நட்பு.  
    (நாலடி – 239)

    தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே! இனியதறியும் பேரறிஞரது நட்பினின்றும் நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பானது, பசுவினிடத்தில் உண்டாகும் நெய்யைப் பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவிட்டு வேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்ற தன்மையதாகும். குணத்திலும் மணத்திலும் பசுவின் நெய்யை எவ்விதத்திலும் ஒவ்வாத வேப்பெண்ணையை விரும்புவது போன்றது நல்லறிவினாரை நீக்கிப் புல்லறிவினாரோடு பொருந்துவது என்று நமக்கு அறிவு கொளுத்துகின்றது நாலடி.

    எடுத்த முயற்சிகளில் வெற்றிபெற ஒருவனுக்கு அடிப்படைத் தேவையாயிருப்பது அறிவுடைமை. 

    அதனாலல்லவோ,

    ”அறிவுடையார் எல்லாம் உடையார்  அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்”
    என்று எடுத்தோதினார் பொய்யில் புலவர்.
     

    ”புத்தியே சகல சக்தியும்” என்றது தீஞ்சுவைத் தமிழ்ப் பனுவலான மனோன்மணீயம். 

    எத்தகு சூழ்நிலையிலும் தம் அறிவு திரியாதிருக்கும் அறிவுடையாரின் மாண்பினைப் பேசும் நாலடியார்ப் பாடலொன்று! 

    வேம்பின் இலைக்குள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் மாறுபடாது; அதுபோல், தமக்கு நேர்ந்த நட்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந்தீயதாய் மாறும் வகை அரிதே. 

    வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
    தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
    இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
    மனந்தீதாம் பக்கம் அரிது.  
    (நாலடி – 244)
     

    அறிவுடையார் மாட்டு அறிவென்னும் அரண் இருக்கையில் முரண்கொண்டோரின் தீநட்பும் அவரைக் கெடுக்க இயலாமல் ஒடுங்கிப்போகும் என்பது நாலடி ஆசிரியர்களின் துணிபு. 

    நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூருணர்வுடையாரை நட்புச் செய்தால் இன்பம் நம்மைப் பொருந்தும்; நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவில்லாதாரை நட்புச் செய்யாமற் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற் பிரிந்திருக்கும். 

    உணர உணரும் உணர்வுடை யாரைப்
    புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
    தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
    பிரியப் பிரியுமாம் நோய்.  
    (நாலடி – 247)
     

    ”குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்துங் கொளல்” என்று கூர்மதியாளாரைப் போற்றிய குறளாசானும்,

    ”பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்” என்றும்  பகடியாய்ச் சாற்றியிருப்பதை ஈண்டு நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

    ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புலவர் பூங்குன்றனாரின்  பொன்மொழி. அதனையே சற்று விரிவாக விளக்கி வழிமொழிகின்றனர் நாலடியின் ஆசிரியர்களும்! 

    நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்.  
    (நாலடி – 248)
     

    நன்னிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வானும், தனது முந்தைய நிலையையுங் குலையச்செய்து தன்னைக் கீழ்நிலைக்கண் தாழ்த்திக்கொள்வானும், தான் முன்னிறுத்திக்கொண்ட சிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்திக் கொள்வானும், தன்னை அனைவரினும் தலைமையுடையோனாகச் செய்து கொள்வானும் தானேயாவன்.

    ”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்” என்று இதே கருத்தை நறுக்கென்று சொன்னது முப்பால். சொல்லுதற்கு என்ன இருக்கின்றது இதற்கும் அப்பால்?

    ஆதலால், நம் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நாமே காரணம் என்பதையுணர்ந்து அறிவுடையோராய் நடந்துகொண்டால் வாழ்வில்வரும் சோதனைகளைத் துணிச்சலோடு எதிர்கொண்டு சாதனை படைக்கலாம். 

    உலக வாழ்வில் பொருள்வரவுக்கு வகைசெய்யும் தொழில் முயற்சியில் ஈடுபட்டு, அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந் துய்த்து, மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கு அறமுஞ் செய்து, இம்மூன்றும் பிறவியிற் கடைசிவரையிற் தடையின்றி ஒரே தன்மையாய் நிறைவேறுமாயின், அப்பேறு, தன் பட்டினத்தை மீண்டு(ம்) வந்தடைந்த வாணிகக் கப்பலை ஒக்கும் என்று அறிஞர் கூறுவர். 

    கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
    தருமமுந் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
    முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.   
    (நாலடி – 250)

    தளராத முயற்சியில் ஈடுபட்டுப் பொருளீட்டி, உலகியல் இன்பங்களைத் துய்த்து, மறுமையின்பத்துக்கு வழிகோலும் அறச்செயல்களையும் செய்து வாழ்தலே அறிவுடைமையாகும் என்பதே இப்பாடல்வழி நாலடியார் நமக்குக் காட்டும் வாழ்வியல் நெறியாகும்.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

    Share
  • படக்கவிதைப் போட்டி 172-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    பச்சைப்பசும் வயல்வெளியின் நடுவே தென்படும் இந்த மண் பாதையைக் கண்டவுடன் இது மன்பதைக்கு நல்லதா தீயதா என்றொரு பதைபதைப்பு நம்முள் தோன்றத் தொடங்கிவிடுகின்றது!  எட்டுவழிச் சாலைத் திட்டம் ஏற்படுத்திய உளவியல் தாக்கமிது!

    இந்தக் காட்சிக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக்  கவிவலாரைக் கனிவோடு அழைக்கின்றேன்.

    *****

    பச்சைவயல் பக்கத்திலே வரப்போகும் அகலப் பாதை, தமக்கு அகலாத் துன்பத்தைத் தந்திடுமோ என்று அஞ்சும் விவசாயிகளின் உள்ளக் குமுறலைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாதிப்பு…

    பச்சை வயல்கள் நடுவினிலே
    பாதை போட்டான் விவசாயி,
    நிச்சயம் உதவும் தனக்கென்றும்
    நன்றாய்த் தொழிலை மேம்படுத்த,
    அச்சம் வந்ததே இப்போது
    அகலப் படுத்தும் பாதையிலே
    நிச்சயம் வந்திடும் பாதிப்பு
    நம்பி யிருக்கும் பாமரர்க்கே…!

    *****

    சிந்தனைக்கு விருந்தான கவிதையைப் படைத்தளித்திருக்கும் கவிஞர் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டு!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    வினை விதைப்பார்…விளை நிலமழிப்பார்…!

    விளைநி லமெலாம் விலைநிலங்கள்
    ………………..விளைந்த தெல்லாம் கட்டிடங்கள்..!
    வளைத்துப் போட்டார் வயலனைத்தும்
    ………………..வகையாய் விற்று நிலமழித்தார்..!
    இளைத்து விட்ட பசுமைவயல்
    ………………..இதன் நடுவே நெடுஞ்சாலை..!
    களைத்து விட்டான் விவசாயி
    ………………..கத்திக் கத்தி ஓய்ந்துவிட்டான்..!

    சாலை போடச் சதித்திட்டம்
    ………………..ஜாலம் செய்த மாயவலை..!
    ஆலைக் கழிவைக் கொட்டுவார்கள்
    ……………….. அதன் பிறகு பழிசொல்வார்..!
    வேலை இல்லை நிரந்தரமாய்
    ……………….. விதியும் இல்லை வழிசொல்ல..!
    மேலை நாட்டுக் கலாசாரம்
    ………………..மேன்மை அடைய வைக்காது..!

    விளை நிலங்களையெல்லாம் விலை நிலங்களாக்கிவிட்டோம்; காட்டு வளத்தையும் கழனி வளத்தையும் அழித்து நாட்டுநலத்துக்குத் திட்டம் வகுக்கின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தேனும் அகலப்பாதை அமைப்பதென்பது பேதைமையே என்று இக்கவிதையில் உரைக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி, தன்னுடைய இன்னொரு கவிதையில் சாலை விரிவாக்கத்தால் மண்ணின் இயற்கை அழகு மடியும்; மாசு எங்கும் படியும் என்ற தன் நியாயமான வருத்தத்தையும் பதிவுசெய்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share