பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி – 177

  1. சிறுகூடும் கோபுரம்… 

    ஓரறிவு குறைவான பறவைகள்
    .. ஒழுங்குடன் அமைக்கின்ற சிறுகூடு
    பேரறிவு மிகுந்த மனிதரும்
    .. பெருமையாய் பேசி வியந்திட
    பாரமென நினைக்காத முயற்சியில்
    .. பறந்து சேகரித்த பொருட்களால்
    தீரமாய் அலகினால் பின்னியே
    .. திகைக்க வைக்கும் கலைவீடு! 

    தனக்கென ஒருகூடு அமைப்பதில்
    .. தளராத பறவையின் உழைப்பினை
    வனப்பென நினைத்திட மறந்தவர்
    .. வழியினில் தடையென இருகைகள்
    கனமுடன் உணர வைக்கின்ற
    .. கணப்பொழுதும் நகர்வதில் கடினமாய்
    மனந்தனில் போராடும் மூடத்தன
    .. மயக்கங்கள் குழப்பிடும் தினந்தினம்! 

    ஏழ்மையில் இருந்தாலும் வசிக்க
    .. ஏற்புடைய மனையை உருவாக்க
    வாழ்வினில் அறநெறி தவறாமல்
    .. வளரும் நினைவினை முடக்காமல்
    தாழ்விலா உழைப்பினில் தெம்புடன்
    .. தரணியில் நடைபோடும் முயற்சியால்
    ஆழ்மனம் நினைத்தபடி சொந்தமாய்
    .. அமைக்கும் குடிசை கோபுரமே! 

     … நாகினி

  2. மறைந்தே…

    மனிதன் வெட்டத் தவறிவிட்ட
    மரம தொன்றில் கூடுகட்டி
    இனிதாய் நாங்கள் வாழ்ந்திருந்த
    இருப்பிடம் போனது புயற்காற்றில்,
    தனிமரம் விழுந்ததை விட்டுவிட்டு
    திரும்பவும் பறவையாம் கூடுகட்ட
    மனிதர் வராத இடம்தேடி
    மறைந்தே செல்கிறோம் குச்செடுத்தே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. அமைதிப் புறாக்கள்.

    சி. ஜெயபாரதன், கனடா

    மேதினியில் அமைதி நாட்டத்
    தூதுவரும்
    இரட்டைப் புறாக்கள் !
    புத்தர் அனுப்பிய
    வெள்ளைப் புறாக்கள் !
    காந்தியார் ஏவிய
    சாந்திப் புறாக்கள் !
    அன்னை தெரேசா அசுர உலகில்
    சேவை புரிய
    தேவைப் படும் !
    வாளும், வேலும் தீட்டி
    வாட்டப் போகும் வையம்
    கூட்டப் போகும்
    மைய மன்றத்துக்கு
    ஐக்கியம் வேண்டும் ஐக்கியம் !
    கூடு கட்டப் போகும்
    இரட்டைப் புறாக்களே !
    நாடுகள் யாவும்
    ஒன்று சேர்ந்து அமைதியில்
    நின்று நிலவ
    வென்று வருக ! வென்று வருக !

    ++++++++++++++++++

  4. மனிதர்கள் ஜாக்கிரதை
    ***************************
    இரை தேடித்திரியும் பறவைகளே
    இரையாகிவிடாதீர்கள்
    இது மனிதர்கள் வாழும் பகுதி.

    ஆபத்தில் நீங்கள் அகப்பட்டால்
    வேடனிடமிருந்து காக்க
    சிபி சக்கரவர்த்தி வரமாட்டான்.
    தராசின் ஒருதட்டில்
    உங்களை வைத்து அதற்கு ஈடாக
    தன் தொடையின் தசையை அறிந்து
    மறுதட்டில் வைக்கமாட்டான்.

    இவன் சமையல் சக்கரவர்த்தி
    உங்களை கறிசமைத்து
    தன் சாப்பாட்டுத் தட்டில் வைத்துவிட்டு
    வேடனை வெறுங்கையுடன்
    விரட்டியடிப்பான்…
    ஆகவே மணிப்புறாக்களே…
    ஜாக்கிரதை
    இது மனிதர்கள் வாழும் பகுதி.
    -வசந்திமணாளன்.

  5. மெச்சிட்டோம் உங்க புத்திய
    =============================
    உச்சிக் கிளையிலே கூடு கட்ட
    குச்சி தேடிக் கொண்டு வந்தோம்
    பூச்சி அரிச்ச மரமின்னு சொல்லி
    வெச்சி இருந்த மரத்தை வெட்டிட்டான்
    கச்சிக் காரங்க குத்தகை எடுத்ததாம்
    பச்சிக எல்லாம் பிளாட்டாடா வாங்கும் ?

    ++++++++++++++++++++++++++++++++++++++++

    – நாராயண் சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ், யுஎஸ்ஏ

  6. இது போட்டிக்காகவன்று.

    விட்டு விடுதலையோடிருப்போம்…

    சேவல்
    சுள்ளிபொறுக்கிச் சுதந்திரமாய்க் கூடுகட்டி
    கள்ளி உனை வைத்ததில் நான் காதலிக்க வேண்டுமடி.
    முட்டையிட்டுத்தா முழு நாழும் அடைகாப்பேன்.
    குஞ்சைப் பொரித்து விட்டே கூட்டை விட்டுச் செல்வேன்.
    முந்தவுணவு கொண்டுவருதலையே
    சிந்தனையில் வைப்பேன் தேவையற்ற வேலைகளில்
    உள்ளமிழக்கேன் உயிரெமது கூடென்றே
    விட்டு விடுதலையோடிருப்பேன்
    வீணாய் என் நல்வாழ்வு
    கெட்டு நடுத்தெருவில் கிடந்து தவிக்காமல்
    நம் வீடு நம் வாழ்வு நம் குஞ்சுகட் கென்று
    என்னைக் கொடுப்பேன்
    எதற்கெனக்கு வீண்வேலை.

    உண்மை விடுதலையெம் உள்ளத்திலுள்ளதடி
    கண்ணே நமக்கதற்கெம் காதலது போதுமடி.

    பேடு
    அன்பேயும் சொற்கள் ஆனந்த மூட்டுவன.
    என் வாழ்வில் உம் காதல் ஒன்றே பெரிதாகும்.
    சுதந்திரத்திற்கெம் சுகவாழ்வே முன்னோடி
    இதந்தரு மனையே சொர்க்கம்
    இனியெனைக் கவலை தீண்டா
    அன்பொடு வீட்டைக் காக்கும்
    ஆர்வத்திலுள்ளீர் நன்றி
    என்பொடென் யாக்கையாவும்
    இனியுங்கள் சொத்தேயாகும்.

    கவிக் கூற்று
    அன்றெமது பாரதிக்கிவ் வறிவு நிலைத்திருந்தால்
    என்றுமுள அக்கவிஞன் இன்று கிடைத்திருப்பானா?

  7. பொறுப்பாளருக்கு
    ‘முழு நாளும்‘ என்று வரவேண்டும். தற்செயலாகத் தவறு நேர்ந்த விட்டது. முடிந்தால் திருத்தி விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.