பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சாந்தி வீஜே எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (175)

 1. சந்திரய்யா நாயுடு எந்திரய்யா சீக்கிரம்

  காலங் காத்தாலநல்ல போணியாகப் போகுது
  காலநீட்டிப் படுக்காமக் கடமைக்கு நீ புறப்படு.
  வண்டியில படுத்திருந்தா வருமானம் கெடைக்குமா
  உண்டுப்பிட்டு உறங்கிப்புட்டா உழைப்பு வந்து சேருமா
  சந்திரய்யா நாயுடு….

  பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் போலவே
  வேர்க்கடலை யாவாரி விழுந்து கெடக்க முடியுமா?
  நித்திரையே நினைவாக நீட்டிக் காலை வச்சுக்கிட்டு
  புத்தரைப் போல் நாம் படுத்தா பொழைப்பு வந்து தேறுமா
  இத்தரையில் காசில்லாம எதுவுமில்லை நாயுடு
  எத்தனையோ பொழைப்பிருக்கு எந்திரிச்சிப் போயிடு.
  சந்திரய்யா நாயுடு….

 2. கழித்த பொருள்.

  இழுக்க முடியாதபடி
  பழுதான சக்கரங்களால்
  நொண்டியாகிப்போன வண்டிக்குப் பாரமாய்,
  ஓரஞ்சேர்ந்து,
  இடம்பெயராதபடி,
  பயனற்ற கை கால்களோடு
  படுத்துக்கிடக்கிறது உடல்.

  அ. இராஜகோபாலன்.

 3. அமைதியான…

  வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
  வண்டிக் காரர் வாழ்க்கையிலே
  அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
  அலைந்து பெற்ற கடனுமில்லை,
  பண்டிகை மற்றும் பிறநாளும்
  பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
  உண்டே உழைத்துபின் உறங்குவதால்
  உளதே வாழ்வில் அமைதியொன்றே…!

  செண்பக ஜெகதீசன்…

 4. வண்டிக்காரன்
  =============

  எந்தி ரமாக உழைத்துவிட்டு
  ……….இயல்பாய்ச் சிரிக்கும் இம்மனிதர.!
  சந்தி ரய்யா நாயுடுவாம்
  ……….சகல கலா வல்லவராம்.!
  சந்து முனையில் காத்திருப்பார்
  ……….சட்டென்று வருவார் அழைத்தவுடன்.!
  எந்த வேலை என்றில்லை
  ……….எல்லாமும் செய்ய இசைவார்.!

  பொருட்கள் ஏதும் கொண்டுசெலல்
  ……….பொறுமை யாய் வண்டியோட்டல்.!
  விருப்ப முடனே செயல்படுதல்
  ……….வினை ஏதும் செய்யமாட்டார்.!
  விரும்பி எதையும் கொடுத்தபோது
  ……….வேண்டா மென்று சொல்லமாட்டார்.!
  பொருத்த மான வாடகையைப்
  ……….புரிந்து கொண்டு பணம்கேட்பார்.!

  =======================

  அறுசீர் ஆசிரிய விருத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *