தற்கால மக்களிடையே நிலவும் சாதி சமயச் சிந்தனை

0

-பேரா.பீ. பெரியசாமி

முன்னுரை

மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்வதற்குத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட அமைப்புதான் மதம்.  தன்னை மீறிய ஒரு சக்தி இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்று ஆதி மனிதன் கருதினான்.  இதற்குக் கடவுள் என்று பெயரிட்டான்.  நாளடைவில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று பெயரிட்டான். கடவுளரின் செயல்பாடுகளை வரையறுத்து மதத்தைத் தோற்றுவித்ததான்.  அந்த மதம் சமயம் என்னும் வடிவில் இந்த பூமிப்பந்தை ஆக்கிரமித்த நிகழ்வை உலக வரலாறு வெவ்வேறு கோணங்களில் சித்தரிப்பதன் மூலம் பெற்றது.  அதன் பின்பு சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சீக்கியம் என்று பல பிரிவுகள் தோன்றின.  மேலை நாட்டு வரவுகளான இஸ்லாமும், கிறித்துவமும் உலகின் பல பிரிவுகளாகத் தோன்றின. இந்தியாவிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தின.  அரசுகளை அரியாசனத்தில் அமர்த்துவதும், அகற்றுவதுமான விந்தைகள் புரியும் ஆற்றலை அவைகள் பெற்றன.  நாடாள்பவன் மன்னனாக இருந்தாலும் அவனையும் சேர்த்தாள்கின்ற சக்தியாக மதங்கள் பவனி வந்தன.

சாதி மற்றும் சமயம்

மனிதனை மனிதநேயத்துடன் வாழத் துணைசெய்வது சமயமாகும். சமயங்களனைத்தும் அன்பையும், பொறுமையையும், மன்னிக்கும் மனப்பான்மையையுமே வலியுறுத்துகின்றன. இறைவன் ஒருவனே என்பது அனைத்துச் சமயங்களுக்கும் அடிப்படையான கொள்கையாகும் எனினும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்பப் பல சமயங்கள் தோன்றின.  சமண மதம், புத்த மதம், இந்து மதம், இசுலாம் மதம், கிறித்துவ மதம், சீக்கிய மதம் என அவை பலவகைப்பட்டன. வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் தியாக உணர்வை வளர்ப்பதுமே அவற்றின் உள்ளீடாக விளங்கியது. புத்த சமயம் விளக்கும் இரக்கவுணர்வும் வாழ்விற்கான நன்னெறிகளே. இந்து சமயம் கூறும் அன்புணர்வும், கிறித்துவ சமயம் வலியுறுத்தும் மன்னிக்கும் மனப்பான்மையும், இசுலாம் சமயம் எடுத்துரைக்கும் சகோதரத்துவமும், சமயங்களுடன் சடங்குகள் இணைந்த போதே புதிய சிக்கல்கள் தோன்றின.

சமயச் சடங்குகளே சமயம் எனும் அளவிற்கு அவை வளர்த்தபோது சமுதாயச் சிக்கல் உருவாகின. சடங்குகளுக்கு எதிராகத் தோன்றிய சமயங்கள் சடங்குகளாலேயே மறைக்கப்பட்டன. பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு என அனைத்து நிலைகளிலும் அவற்றின் செல்வாக்கு மிகுந்தது.  சமயத்தைப் பற்றி அம்பேத்கர்,

பிறப்பு முதல் இறப்பு வரை மத ஆசாரங்களே மனிதனின் வாழ்க்கையில் ஊடுருவி நிற்கின்றன. மத சம்பந்தமில்லாதது என்று கூறுவதற்கு வாழ்க்கையில் எதுவுமே இல்லை” (பெ. தங்கராசு, அண்ணல் அம்பேத்காரின் அரும்பணி ஓர் ஆய்வு, ப – 147.)

என்கிறார்.  எனினும் ஒருவர் பின்பற்றும் சமயச் சடங்குகளைப் பிறரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியபோது முரண்பாடுகள் தோன்றின. பிற சமயத்தைப் பின்பற்றுபவர்களை எதிரிகளாக சமயப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பான்மை வளர்ந்தது.  இதனால் சமயப் பூசல்களும் சண்டைகளும் உருவாகின. இச்சிக்கல்கள் மனித உணர்ச்சியுடன் தொடர்புடையவையாகவே காணப்படுகின்றன. சமயத்தின் பெயரால் பல சிக்கல்களும் போரட்டங்களும் தோன்றிய போது பெரியார்,

இன்று மதமானது ஒருவரையொருவர்      ஏய்க்கவே பயன்படுத்தப் பெறுகின்றதே அல்லாமல் தொல்லையில்லாதிருக்க, நிம்மதியான வாழ்வு வாழ உதவுவதாக இல்லை போலி வாழ்க்கைக் காரருக்குத் திரையாகவே மதமும், பக்தியும் உதவுகின்றன” (டாக்டா; ந. சுப்புரெட்டியார், தந்தை பெரியார் சிந்தனைகள், ப – 40.)

என்று கடிந்து கூறுகிறார்.  மதம் மனித வாழ்க்கையில் ஆழ வேரூன்றி விட்டது.  மதங்களின் தோற்றத்திற்குக் காரணமாய் இருந்தவை அச்சமும் நம்பிக்கையின்மையுமேயாகும். இவற்றின் காரணமாகவே வழிபாடுகள் தோன்றின. தொடக்ககால மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அச்சத்தின் காரணமாகவும் இயற்கையை வழிபடத் தொடங்கினான்.  நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐந்தும் மனிதனுக்கு வியப்பினையும் ஆர்வத்தினையும் தூண்டியமையால் வழிபாடு அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இயற்கை வழிபாடே மனிதனின் முதல் இறை வழிபாடாக இருந்துள்ளது.

அச்சமும் பதற்றம் கலந்த எதிர்பார்ப்பும் மதத் தோற்றத்திற்குக் காரணம்(க.ப. அறவாணன், தமிழர் தம் இலக்கியம், பண்பாடு, அறிவியல், கல்வி, ப – 40.) என்கிறார் கார்ல் மார்க்சு.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஆரியம், சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பரவியிருந்தன.  சங்க காலத்தில் சமயத்தின் பெயரால் பூசல்கள் சிக்கல்களும் காணப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை.  தொல்காப்பியர் தமிழர் சமயமாகக் குறிப்பிடும் போது,

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புணல் உலகமும்
வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல், பொருள், நூ – 5.) 

என்று முதற் பொருளான நிலத்தின் அடிப்படையில் தெய்வத்தையும் வாழ்க்கையையும் குறிப்பிட்டுள்ளார்.  எனவே, தமிழரின் தொடக்க கால வழிபாடாக, இறை வழிபாடு, முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு போன்றவைச் சிறப்பிடம் பெறுகின்றன.

கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமும் சமய ஒற்றுமையையே வலியுறுத்துகின்றது.  இளங்கோ அடிகள் சைவ சமயத்தவர் என்று கூறப்பட்ட போதிலும் சைவ, வைணவ சமயக் கருத்துகள் சிலம்பில் மிகுந்து காணப்படுகின்றன.  கோவலன் அருக சமயத்தவன்; மாதவியும் மணிமேகலையும் பௌத்தத் துறவிகள்.சேரன் செங்குட்டுவன் சிவபக்தன்.  ஆய்ச்சியர் குரவை வைணவ  வழிபாட்டையும், குன்றக் குரவை முருக வழிபாட்டையும் எடுத்துரைக்கின்றன. சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து நோக்கும்போது அதில் சமயப் பூசல்கள் சிறப்பிடம் பெறவில்லையென்பதும் சமய ஒற்றுமையை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதும் புலனாகின்றது. எனவே, குறிப்பிட்ட காலம்வரை வெளிவந்த இலக்கியங்கள் அனைத்தும் சமயக் காப்பியம் என்று கருதப்படுகின்ற மணிமேகலை கூட பௌத்த சமயக் கருத்துக்களை விட அறநெறிக் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. சமூகப் புரட்சியைக் காண வேண்டும் எனும் விழைவு மணிமேகலையில் மிகுந்து உள்ளது.  மதுவொழிப்பு, சிறையொழிப்பு, பரத்தையர் ஒழிப்பு, மக்களின் பசிப்பிணி நீக்குதல் போன்றவையே மணிமேகலையில் பெரும்பாலும் வலியுறுத்தப் படுகின்றன.  சைவமும் வைணவமும் மத ஒற்றுமையையே வலியுறுத்துகின்றன.

இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்த கிறித்துவ சமயமும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு எனும் வேதங்களைக் கொண்டு மக்களுக்கு நன்னெறிகளைப் புகட்டியது கிறித்துவ மதத்தை அருட்கொடையாக மக்களுக்குக் கொடுத்த இயேசுபிரானும் தாம் மரிக்கும் முன்பு சீடர்களை நோக்கி மன அமைதியே ஆண்டவனை அடையும் வழி என்று கூறுகிறார். இங்ஙனமே இசுலாம் மதமும் தனது முதன்மை நோக்கமாக அமைதியையும் கீழ்ப்படிதலையும் வலியுறுத்துகின்றது.  உலகில் தோன்றிய  சமயங்களுள் தொன்மை வாய்ந்த மதமாகக் கருதப்படும் சமண மதமும் புத்த மதமும் கூட அன்பையும் சகிப்பு தன்மையையுமே வலியுறுத்துகின்றன. தோன்றிய எல்லாச் சமயங்களும் அன்பையும் அமைதியையுமே வலியுறுத்தியுள்ளன. சமூகத்தில் இதன் விளைவுகளோ முரண்பட்டவையாகக் காணப்படுகின்றன.  மதக் கலவரங்களும் இன மோதல்களும் சமயம் இன்றுவரை மக்களைச் சரியாகச் சென்று அடையவில்லை என்பதை உணர்த்துகின்றன.  தனி மனித வாழ்விலும் சமூக வாழ்விலும் சமயம் இன்றியமையாத ஒன்றாக விளங்கி வருகிறது.

சமயத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்கப் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்றவைத் தோன்றின. மிகச் சிறந்த ஞானியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இராமலிங்க அடிகளார் கூட சமயம் என்பது ஆன்ம நேய ஒருமைப்பாடே என்று கூறுகிறார். 

எல்லா உயிர்களையும் இறைவனுடைய பிள்ளைகளாகவே கருதும் சர்வ சகோதர தத்துவமே ஆன்மநேய ஒழுக்கம்” (இராமலிங்க அடிகளார், வள்ளலாரின் வாயமுதம் – சன்னதி மாத இதழ், ப – 66.)

என்று இராமலிங்கர் எடுத்துரைக்கிறார். மதம் என்பது ஒழுக்க முறைகளையும் சமூக ஒற்றுமையையும் நிலைநிறுத்தவே தோன்றியது. இலக்கியங்கள் பெரும்பாலானவற்றுள் மதத்தின் செல்வாக்கு மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.  சாதியும் மதமும் சமூகத்தில் தவிர்க்க இயலா நிலையை அடைந்திருக்கிறமையை அறிய முடிகின்றது.

சாதி, சமயத் தோற்றத்திற்கானக் காரணங்கள்

சமூகச் சூழல்களே சாதியும் சமயமும் தோன்றக் காரணமாயின.  தொடக்க கால மக்களின் வாழ்க்கையில் எந்தவிதப் பிரிவுகளும் காணப்படவில்லை. வேளாண்மையும் பொருட்களின் உற்பத்தியும் தொழில்களின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தின. இதன் காரணமாக மக்கள் நான்கு வருணத்தவராகப் பிரிக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். இவற்றுள் வழிபாட்டு உரிமை அந்தணனைச் சென்றடைந்தது, நிர்வாகம் அரசனுக்கும், வணிகம் வணிகனுக்கும், உடல் உழைப்பு வேளாளருக்கும் விதிக்கப்பட்டது.  இதனை மேன்மேலும் உறுதிப்படுத்த யாகங்களும் மந்திரங்களும் துணை புரிந்தன.  இதன்  காரணமாகத் சாதிய அடிப்படையிலான சமுதாயம் உருவாகியது.  சாதிப் பிரிவுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்தன.  நில உடைமையும் நிலப் பிரபுத்துவமும் இதனை மேலும் வளர்த்தன.  சாதிப் பிரிவினையை நிலைநிறுத்த குலத்தொழில் முறை வலியுறுத்தப்பட்டது.  சாதி வரையறையினைப் பற்றி அம்பேத்கார் குறிப்பிடும் போது,

சாதி என்பது ஒரு பொதுப்பெயர் கொண்ட குடும்பங்களின் திரட்சியையோ அல்லது அவ்வாறான குடும்பங்களை உள்ளடக்கும் குழுக்களையோ குறிக்கும் இப்பொதுப் பெயரானது ஒரு குறிப்பிட்ட அலுவலைக் குறிப்பதாகவோ ஒரு குறிப்பிட்ட அலுவலலோடு தொடர்புடையதாகவே இருக்கும்.” (அரங்க மு. முருகையன், தமிழர் பண்பாட்டில் சாதியம், ப – 138.)

என்று கூறுகிறார்.  உடல் உழைப்பில் ஈடுபட்டவன் தாழ்ந்தவனாகக் கருதப்பட்டான். பொருளாதார நிலையிலும் அவனது வாழ்க்கை துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டது. செல்வந்தர்களும் செல்வாக்குப் பெற்றவர்களும் உயர்சாதியினராகப் போற்றப்பட்டனர். குறிப்பிட்ட தொழிலைச் செய்தவன் குறிப்பிட்ட சாதிக்கு உரியவனாகக் கருதப்பட்டான்.

இது மக்களின் மீது வலிந்து திணிக்கப்பட்டதாக உருமாறியது. இவர்கள் கல்வியிலிருந்து வாழ்க்கை உயர் நிலைகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டனர்.  தீண்டத் தகாதோராக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.  சாதி பற்றிய ஏ. உல்குரொபர் கருத்தினை அரங்க முருகையன் எடுத்துரைக்கும்போது,

ஒரு வகுப்பாருக்கும் இன்னொரு வகுப்பாருக்கும் இடையே காணப்படும் சமூக மரியாதையை ஒப்பிடும்போது தோன்றும் உயர்வு, தாழ்வு நிலையே சாதி.”(மேற்படி,ப – 141.)

என்கிறார். மேலும், ஒரு சாதியானது மற்றொரு சாதியினைச் சடங்குகளின் பெயராலும் கடவுளின் பெயராலும் அடக்கி ஒடுக்கும் நிலையும் உருவாகியது. சாதிப் பிரிவினைகள் பரம்பொருளால் உருவாக்கப்பட்டது என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டமையால் மக்கள் அதனை எதிர்க்கத் தயங்கினர். சாதிப் பிரிவினைகளும் அவற்றால் ஏற்பட்ட சடங்குகளும் மதமாற்றங்கள் உருவாகக் காரணமாயின.

இங்ஙனம் தோன்றிய பல்வேறு சமயங்களும் தமக்கென சில வரையறைகளை வைத்துக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்த முயன்றன.  எனினும் மக்களின் தவறான அணுகுமுறையால் சமுதாயத்தில் மதப் போராட்டங்களே மிகுந்தன. இவற்றை நீக்க காலந்தோறும் பல சமயத் தலைவர்கள் தோன்றிச் சமய ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றனர். சாதியையும் மதத்தையும் சரியான முறையில் அணுகும்படி வலியுறுத்தினர். மனிதநேயம் மதங்களில் முதல் நோக்கம்  என்று எடுத்துரைத்தனர்.  ஒரு சாராரின் மதப்பற்றும் உணர்வும் இன்னொரு மதத்தவரைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று உரைத்தனர்.  மதம் எது என்பதை டி.ஆர்.பரமேசுவரன் விளக்கும்போது,

மதம் பிரதானமாக இரண்டு அம்சங்களைக் கொண்டது; ஒன்று இயற்கையைப் புரிந்துக் கொள்வதற்கான முயற்சிகளில் உருவான நம்பிக்கைகள்; இரண்டு இயற்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட சடங்குகள்.” (பி.ஆர். பரமேஸ்வரன், இந்திய சமுதாயத்தில் சாதி, மதம், ர்க்கம், ப – 48.)

என்று கூறுகிறார். எனினும், ஒரு சிலரின் தவறான செயல்பாடுகள் மதங்களின் கொள்கைகளைப் பெருமளவு பாதித்தன. மக்களை ஒன்றுபடுத்தும் வலிமைவாய்ந்த சாதனம் மதம் என்பது மாறி, மதவெறியே மதத்தின் கோட்பாடாகியது. இதனால் மதக் கலவரங்களும் போர்களும் மூண்டன.

முடிவுரை

சாதி என்பது செய்கின்ற தொழிலால் ஏற்பட்ட ஒன்று. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் சமய மாற்றத்திற்குக் காரணமாகின. சாதிப் பிரிவுகள் சமுதாய வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தின. மரபுப் பிடிக்குள் ஆட்பட்ட முதிய சமுதாயம் சாதீயப் பிரிவுகள் நிலைபெறத் துணைபுரிந்தன. சாதிப் பிரிவுகளே தீண்டாமைக்கு வழிவகுத்தன. மதக் கோட்பாடுகள் மக்களிடையே பிரிவினையை வளர்த்து வருகின்றன.  மனிதநேய உணர்வுகள், ஒவ்வொரு மனிதனுக்கும் வறுமை, உயர்வு, தாழ்வு, அன்பு, பண்பு, அடிமை உணர்வு ஆகிய நிலைகளில் திகழ்கின்றது. தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே மனிதநேயம் என்பதையும், சாதி, இன ஒடுக்குதல்கள் ஒழிந்து, சமுதாயத்தில் சமத்துவம் நிலவுவதே மத நல்லிணக்கம் என்பதையும் நாம் அனைவரும் உணர வேண்டும்.

*****

கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தத்திரவாடி, விளாப்பாக்கம் – 632501
வேலூர் மாவட்டம்.

                                                                                 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.