நிர்மலா ராகவன்

தூற்றுவார் தூற்றட்டும்

எல்லா அவயவங்களும் சரிவர இயங்கும் பலர் எதையோ இழந்தவர்கள்போல் இருக்கிறார்கள். ஆனால், உடற்குறையுடன் இருப்பவர்கள் அதையே எண்ணி வருந்திக்கொண்டிராது, தம்மால் இயன்ற ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதில் வெற்றியும் பெறுவது ஆச்சரியப்படத்தக்க சமாசாரமா, இல்லை, நமக்குத்தான் முறையாக வாழத் தெரியவில்லையா?

குறை யாரிடம்?

“சிலர் எதையும் எதிர்மறையாகவே எடுத்துக்கொள்கிறார்கள். அது அவர்களுடைய குறைபாடு!” இப்படிக் கூறியிருப்பவர் மார்லா ரன்யான் (MARLA RUNYAN) என்ற அமெரிக்க பெண்மணி.

பிறரைக் குறைகூற இவருக்கு என்ன தகுதி?

சட்டபூர்வமாக பார்வையற்றவர் மார்லா. 2,000-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தடகளப் பந்தயத்தில் பார்வை உள்ளவர்களுடன் கலந்துகொண்ட முதல் பெண்மணி. 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றவர். மாரதானில் பல முறை ஓடியுள்ள மார்லா கல்வித்தகுதியையும் விட்டுவைக்கவில்லை. முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறார்.

இவரைப்போல் மனோதிடம் படைத்தவர்கள் இன்னும் சிலர். இன்னொரு வெற்றியாளரைப் பார்ப்போம்.

நடக்க முடியாவிட்டால் என்ன!

கை, கால் இரண்டுமின்றிப் பிறந்தவர் நிக் (NICK VUJICIC). பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பிறரது கேலிக்கு ஆளானார். சிறுவர்கள் தம்மை ஒத்தவர்களையே விட்டுவைப்பதில்லையே! உடற்குறை இருந்தால் சும்மா இருப்பார்களா?

`பிறரிடம் என்ன குறை என்றே ஆராய்பவர்களின் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது!’ என்று அலட்சியம் செய்யும் அறிவு அப்போதே இருந்தது இவருக்கு. முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். மார்லாவைப்போலவே, `மனிதர்களின் மனதில்தான் குறையிருக்கிறது!,’ என்ற முடிவுக்கு வந்தார்.

`ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் முன்னேறலாமே! தன்னால் என்ன முடியும்?’ என்று யோசித்தார் நிக். அதன் விளைவாக, பத்தொன்பது வயதிலிருந்தே தன்முனைப்பைப்பற்றி மேடைகளில் முழங்கினார். `நீ ஒரு நாள் நன்றாகப் பேசப்போகிறாய்!’ என்று பள்ளிப்பருவத்தின்போது ஒருவர் தன் `கையை முறுக்கியதாக,’ தன்னையே கேலி செய்துகொள்ளவும் தவறவில்லை நிக். கேட்பவர்களுக்குத்தான் அதிர்ச்சி.

குறைகளுடன் தன்னை ஏற்றதால் நிக் புகழ் வாய்ந்தவராகத் திகழ்கிறார். ஈராண்டுகள் கழித்து, பட்டமும் பெற்றார்.

`நடக்க முடியாதது ஒரு பெரிய குறையா!’ என்று நினைக்கத் தூண்டும் பிறரைக் காண்போமா?

அண்மையில் கோலாலம்பூரில் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நடனமணிகள் சக்கர நாற்காலியின் உதவியோடு நகர்பவர்கள்.

`நடக்கவே முடியாதவர்கள் எப்படி ஆட முடியும்?’ என்கிறீர்களா?

கை அசைவாலேயே ராமாயணம், (தமிழில்) கீதோபதேசம் ஆகிய இரு காவியக் கதைகளையும் திறம்பட விளக்கினார்கள். சக்கர நாற்காலியையோ, கைத்தடியையோ சுழற்றியபடி மேடையை எளிதாகச் சுற்றிவந்தார்கள். காட்சி அமைப்புகள் பிரமாதமாக இருந்தன.

சிலிர்த்துப்போய் அரங்கத்தினர் அனைவரும் கைதட்ட, தில்லியில் முப்பது ஆண்டுகளாக இப்பயிற்சியை அளித்துவருபவர் கூறினார், “இவர்களில் யாருக்கும் நீங்கள் கைதட்டுவது கேட்காது. ஏனெனில் இவர்களுக்குக் காது கேட்காது!”

அதிர்ச்சியுடன் அரங்கமே மௌனமாகிவிட, சைகை மொழி தெரிந்த ஓரிருவர் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தியபடி வேகமாக ஆட்டி, தம் பாராட்டைத் தெரிவிக்க, மேடையிலிருந்தவர்களின் முகம் மலர்ந்தது. அவர்களும் அப்படியே செய்து, தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். (கைதட்டுவது, மகிழ்ச்சி இரண்டையும் தெரிவிக்க ஒரே சைகைதான்).

செவிப்புலன் இல்லாமல் தாளத்திற்கேற்ப நகர்வதும், மொழி புரியாவிட்டாலும் தக்கவாறு அவர்கள் ஆடுவதும் விந்தை. உலகிலேயே முதன்முறையாக இங்கு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி அது. கிருஷ்ணன், சீதை ஆகிய இரு பாத்திரங்களையும் ஏற்று, மெய்சிலிர்க்க வைத்தவர் இருபது வருடங்களாகப் பயின்றவராம். (சில “மாதங்களே நாட்டியம் பயின்ற மகளுக்குத் தனியாக ஆடச் சந்தர்ப்பம் வேண்டும் என்று ஆசிரியர்களை நிர்ப்பந்திக்கும் தாய்மார்களை நினைத்துக்கொண்டேன். பத்து ஆண்டுகளாவது பயிலவேண்டாமா!)

உடலில் குறைபாடுகள் இருந்தாலும், இவர்களிடம் மனோதிடம் இருந்தது. `எவ்வளவு பிரயாசைப்பட்டு உழைத்திருப்பார்கள்!’ என்ற பெருவியப்பு பார்த்தவர்களிடம் ஏற்பட்டது. `நாமும் இருக்கிறோமே, ஒன்றுமில்லாததற்கெல்லாம் துவண்டு போய்க்கொண்டு!’ என்று அன்று சிலருக்கு ஞானோதயம் வந்திருக்கலாம்.

காது கேட்காவிட்டால் என்ன! இசைத்திறன் போதாதா!

காது கேட்காத நிலையிலும் இசையில் நிலைத்திருந்தவர் ஜெர்மானியரான பீதோவன். (பிறந்த வருடம்: 1770). குடிகாரரான தந்தை இவரது முதல் குரு. சிறு பையனான மகனை பியானோ வாசிக்கும்படி பலவந்தப்படுத்தி, தவறிழைத்தால் கடுமையாகத் தண்டிப்பாராம்.

பன்னிரண்டு வயதிலேயே ஆர்கன் வாத்தியம் வாசித்தும், இசையமைத்தும் பொருளீட்டி, குடும்பத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு ஏற்பட்டது பீதோவனுக்கு.

`புதுமையான கண்டுபிடிப்பு!’ என்று இவரது சிம்பொனி இசையமைப்பு பாராட்டப்பட, பிறரும் அவ்வழியைப் பின்பற்ற ஆரம்பித்தனர். ஆனால், மேடையில் இவர் வாசித்தபின் ரசிகர்களின் கரகோஷம் செவியில் விழாததுதான் பரிதாபம்.

பழகத் தெரியாவிட்டால் என்ன! கணிதமே போதும்

மூன்று வயதுவரை பேச்சு வராமல், ஆடிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, பிறருடன் பழகத்தெரியாது ஒரு குழந்தை இருந்தால் `முட்டாள்!’ என்று பழிக்கத் தோன்றுகிறதா?

யோசிக்கவேண்டிய விஷயம்.

ஐன்ஸ்டீன் அப்படித்தான் இருந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், தனக்கு இயலாததைப்பற்றி எண்ணி வருந்தவில்லை அவர். கணிதம், பௌதிகம் இரண்டு மட்டும் அவர் உயிர்மூச்சாக இருந்தன. 1921-ல் நோபல் பரிசு பெற்றார்.

தன்னம்பிக்கை போதுமே!

நம் ஒவ்வொருக்குள்ளும் ஏதாவது திறமை ஒளிந்துதான் இருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது நம் கையில்தான் இருக்கிறது.

பிறரது எள்ளலை உண்மையென நம்பித் தளர்ந்துவிடக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் நம்மிடம் காணப்படும் திறமையால் எழும் பொறாமையை மறைத்து, கேலி பேசுவார்கள்.

என் பாதையை மறித்தவர்கள்

`இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்! இல்லை, புரட்சி!’

`நம்மால் முடியாததை இவள் சாதித்துவிடப் போகிறாளே!’ என்ற அச்சம் அந்த பயங்கொள்ளிகளுக்கு.

வேறு சிலர், நயமாகப் பேசியே நாம் முன்னேறுவதைத் தடுக்க முனைவார்கள். (`இந்தமாதிரி பிறரைத் தாக்கி எழுதினால், மாட்டிக்கொள்வாய்! ஜாக்கிரதை!’)

இப்படிப்பட்டவர்களின் மனம் புரிந்தால், நம்மை எவ்வழியிலாவது தாக்கும் சொற்களை அலட்சியம் செய்யலாம். அவர்களுடைய ஆத்திரம் அதிகரிக்கும். பிறரிடம் நம்மைப்பற்றித் தாறுமாறாகப் பேசுவார்கள். பிறர் பொறாமைப்பட நம்மிடம் விஷயம் இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

இவ்வளவு இடர்பாடுகளைத் தாண்டி தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனைகள் புரிய ஒருவருக்குப் பல ஆண்டுகள் ஆகலாம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் போதும். எவரும் பிரகாசிக்கலாம்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *