கணியன்பாலன்

 

ஆ.சோழவேந்தர்கள்

முதலில் சேரவேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப் பட்டு அதன்பின் அவர்களின் சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. சேர வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகள், பதிற்றுப்பத்துப்பதிகத்தில் உள்ள சேர வேந்தர்களின் மொத்த ஆட்சி ஆண்டுகளைக் கொண்டும், தூமகேது தோன்றியதைக்கொண்டும், புகளூர்க் கல்வெட்டு, அந்துவன் கல்வெட்டு, சம்பைக்கல்வெட்டு, கொல்லிப்பொறைக் கல்வெட்டு, பிட்டந்தைமகள்கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளைக் கொண்டும், மாக்கோதை, குட்டு வன் கோதை போன்றோரின் நாணயங்களைக் கொண்டும் ஓரளவு முறையான வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆதலால் சேர வேந்தர்களுக்கான ஆட்சி ஆண்டுகள் பிற சமகாலச் சோழ, பாண்டிய வேந்தர் களின் ஆட்சியாண்டுகளை நிர்ணயிக்கப் பெருமளவு பயன் பட்டன எனலாம்.

மௌரியப் படையெடுப்பு கி.மு. 297வாக்கில் தீவிரப்படுத்தப் படுகிறது. கி.மு. 295வாக்கில் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி சோழன் இளஞ்சேட்சென்னி தலைமையில் வலுப்படுத்தப் படுகிறது. அதற்குச்சுமார் 10 ஆண்டுகளுக்குமுன் சோழன் இளஞ்சேட் சென்னி வேந்தன் ஆகிறான் எனவும், அதற்கு முன் அவனது தந்தை பெரும்பூட்சென்னி வேந்தனாக சுமார் 30 வருடங்கள் இருந்தான் எனவும்கொண்டு அவனது ஆட்சிக் காலம் என்பது ஏறக்குறைய கி.மு.335-305 வரை எனக்கணிக்கப்பட்டது. இளஞ்சேட்சென்னி செருப்பாழிப் போருக்குப் (கி.மு.288) பின், சிறிதுகாலத்தில் இறந்துவிடுகிறான் என்பதால் இளஞ்சேட் சென்னியின் ஆட்சிக்காலம் என்பது கிட்டத்தட்ட கி.மு. 305-285 வரை எனக் கணிக்கப்பட்டது.

கி.மு. 285 வாக்கில் அவனது மகன் முதல் கரிகாலன் பெரும்போராட்டத்துக்குப்பின் முதல் வெண்ணிப்பறந்தலைப்போரை நடத்தி புகாரின் அரசன் ஆகிறான். இலக்கியக் கணிப்புப்படி, அவன் முதல், இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போர்களையும், இறுதியாக வாகைப் பறந்தலைப் போரையும் நடத்தி சுமார் 35 ஆண்டுகள் வேந்தனாக இருந்து கி.மு. 250வாக்கில் இறக்கிறான். அவனது இரண்டாம் வெண்ணிப் பறந்தலைப்போர் கி.மு. 275 வாக்கில் சேரலாதன் இமயவரம்பனோடு நடக்கிறது. அவனது வாகைப் பறந்தலைப்போர் பிந்துசாரன் இறந்தபின் கி.மு. 270 வாக்கில் நடைபெறுகிறது. ஆதிமந்தி அவனது மகள் ஆவாள். அவள் வளர்ந்து அவனது கணவன் ஆட்டனத்தியை மணந்த பின்னும் சிலகாலம், முதல் கரிகாலன் அரசாண்டு வந்துள்ளான் என்பது பரணரின் பாடல் மூலம் தெரிகிறது(அ-376). அவன் புகாரின் அரசன் ஆன போது(கி.மு. 285) இளவயது இளைஞனாக இருந்தான். ஆகவே அவன் அதன்பின் 35 ஆண்டுகள் ஆண்டான் எனக்கொண்டு அவனது ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 285-250 எனக்கணிக்கப்பட்டது. இவனது சமகாலத்தில் இமயவரம்பனும், பல்யானைச்செல்கெழு குட்டுவனும், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் சேர வேந்தர்களாக இருந்தனர் என்பதால் அவர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.

முதல் கரிகாலனது மகன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி 4ஆம், 5ஆம் காலகட்டங்களில் வேந்தனாக இருந்து, சுமார் 40 ஆண்டுகாலம் ஆண்டு, கி.மு. 210வாக்கில் இறக்கிறான். இவனது சமகால சேர வேந்தர்கள் சேரன் செங்குட்டு வனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். பெருங்குன்றூர் கிழார் கி.மு. 184வரை வாழ்ந்த சேரன் இளஞ்சேரல் இரும்பொறை குறித்த 9ஆம் பதிற்றுப் பத்தைப்பாடியவர். அவராலும் 5ஆம் பதிற்றுப்பத்தைப்பாடிய பரணராலும் இவன் பாடப்பட்டவன் என்பதால் இவன் நீண்டகாலம் ஆண்டவன் என ஆகிறது. சேரன் செங்குட்டுவனின் நேரிவாயில் போருக்குப்(கி.மு. 225) பின்னர் சிலவருடங்கள் கழித்துத்தான் இவனுக்கு இரண்டாம் கரிகாலன் பிறக்கிறான். ஆதலால் நேரிவாயில் போருக்குப்பின் இவனது ஆட்சிக்காலம் சுமார் 15 ஆண்டு கள் இருந்துள்ளது எனக்கொண்டு இவனது வேந்தர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட கி.மு. 250-210 எனக் கணிக்கப்பட்டது.

சேரன் செங்குட்டுவன் கி.மு. 225வாக்கில் நேரிவாயிலில் போர் நடத்தி சோழன் கிள்ளிவளவனை உறையூர் அரசனாக ஆக்குவதோடு, உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்குப்பின் கிள்ளிவளவன் சோழவேந்தனாக ஆவதற்கும் ஏற்பாடு செய்கிறான். அப்பொழுது உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிக்கு மகன் இல்லை. அதன் காரணமாக கி.மு. 210வாக்கில் கிள்ளிவளவன் புகாரில் சோழவேந்தனாக ஆகிறான். இவன் 6ஆம் காலகட்டம் ஆவான். கி.மு. 199வாக்கில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் புகாரை இழந்த அவன் அதனை மீட்டு, கோசர்களோடும் அதன்பின் பாண்டியன் பழையன் மாறனோடும் போரிட்டு மதுரையைக் கைப்பற்றுகிறான்(கி.மு. 193). அதன்பின் ஓரிரு வருடங்களில், அதாவது கி.மு. 190வாக்கில் இறந்துவிடுகிறான். அவன் கிட்டத்தட்ட கி.மு. 210-190வரை 20 ஆண்டுகள் வேந்தனாக இருந்துள்ளான்.

அதன்பின் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனான ஏழாம்காலகட்ட இரண்டாம் கரிகாலன் புகாரின் அரசனாக ஆகிறான். கி.மு. 188வாக்கில் நடந்த மூன்றாம் வெண்ணிப் பறந்தலைப் போரின் மூலம் இவன் சோழ வேந்தனாக ஆகிறான். இவன் தொண்டைமான் இளந்திரையன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்றவர்களின் சமகாலத்தவன். இவனது காலத்துக்கு முன்னரே கடையேழு வள்ளல்களும் இறந்து விடுகின்றனர். அவர்களைப்பாடிய பெருஞ்சித்தரனாரும் அவர்களுக்குப்பின் வந்த குமணனும் இவன் காலத்தவர்களாக இருந்துள்ளனர். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையிலும், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப்படையிலும் பாடியுள்ளனர். இவன் பெருவேந்தனாக இருந்து காவிரியில் கல்லணை கட்டியவன். கி.மு. 180 வாக்கில் இவன் வடதிசை படையெடுத்து தக்காணப்பகுதியை தமிழரசுகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். அது சாதவாகன அரசன் சதகர்ணி, கலிங்கமன்னன் காரவேலன் ஆகியவர்களின் தொடக்க ஆண்டுகள் ஆகும். ஔவையார் தனது 90ஆம் வயதில் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சேரன் மாரிவெண்கோ ஆகிய மூவரையும் கி.மு. 165வாக்கில் வாழ்த்திப்பாடியுள்ளார். ஔவையார் பாடியதற்குச் சில வருடங்களுக்கு முன்பே, அதாவது கி.மு. 170 வாக்கில் இரண்டாம் கரிகாலன் இறந்துவிடுகிறான்.  ஆதலால் அவனது ஆட்சி ஆண்டுகள் கிட்டத்தட்ட கி.மு. 190-170 எனக்கொண்டு, கி.மு. 170 வாக்கில் எட்டாம் காலகட்டச் சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி சோழ வேந்தன் ஆனான் எனலாம்.

இந்த இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி கி.மு. 168வாக்கில் மலையமானின் உதவியோடு யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைத் தோற்கடிக் கிறான். ஔவையார் கி.மு. 165வாக்கில் இவன் வேந்தனாக இருந்தபோதுதான் இவனையும் உக்கிரப்பெருவழுதியையும் மாரிவெண்கோவையும் வாழ்த்திப் பாடி யுள்ளார். இவன் கணைக்கால் இரும்பொறையைக் கைதுசெய்து சிறையில் அடைத்த ஆண்டு என்பது சுமார் கி.மு. 150 ஆகும். இவனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் கோக்கோதை மார்பன் சேரவேந்தனாக இருந்துள்ளான். பொறையர்குலச் சேரர் களின் இறுதி ஆண்டான கி.மு. 150க்குப்பின் 5 ஆண்டுகள் இவன் ஆண்டதாகக் கொண்டால், மொத்தம் 25 ஆண்டுகள் ஆண்ட இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி யின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 170-145 ஆகும்.

அதன்பின் 9ஆம் காலகட்ட குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் வேந்தன் ஆகி சுமார் 25 ஆண்டுகள் ஆள்கிறான். அவன் சிறுகுடிகிழான் பண்ணன் என்கிற 8ஆம் காலகட்டப் பாண்டியர் தலைவனைப் பாடியுள்ளான். இவன் கி.மு. 135வாக்கில் கரூரை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றிக் கொள்கிறான். சேரன் மாக்கோதை அதேஆண்டில் அதாவது கி.மு. 135வாக்கில் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தச் சோழனோடு சமாதானம் செய்துகொண்டான். குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை,

பெரும்புலவர் கோவூர்கிழார் அவர்களையும் சேர்த்து ஒன்பது புலவர்கள் பாடியுள்ளனர். இவனுக்குப்பின் வந்த பெருந்திருமாவளவன் என்பவன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியின் சமகாலத்தவன் ஆவான். வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(கி.மு.120-100) ஆகும். ஆதலால் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்குப் (கி.மு.170-145) பின்பும் பெருந்திருமாவளவனுக்கு(கி.மு.120) முன்பும் ஆண்ட குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் வேந்தர் ஆட்சியாண்டுகள் என்பது கிட்டத்தட்ட கி.மு. 145-கி.மு.120 ஆகும். அதன்பின் ஆட்சிக்கு வந்த குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை 9ஆம் காலகட்ட உறையூர் மருத்துவர் தாமோதரனாரும், 10ஆம் காலகட்டக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனாரும் பாடியுள்ளனர். அதுபோக இந்தப்பெருந்திருமாவளவனும், வெள்ளியம்பலத்துத்  துஞ்சிய பெருவழுதியும் ஒன்றாக இருந்தபொழுது 8ஆம் காலகட்டக் காவிரிப் பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் பாடியுள்ளார். ஆதலால் இவன் சுமார் 20 ஆண்டுகள்(கி.மு.120-100) வேந்தனாக இருந்தான் எனலாம்.

இறுதியாக 10ஆம் காலகட்டச் சோழன் நலங்கிள்ளி, சுமார் கி.மு. 85-கி.மு.80 வாக்கில் மகத அரசை ஆண்ட சுங்கவம்சத்தின் உச்சயினி மீது படையெடுத்து வெற்றி கொள்கிறான். முத்தொள்ளாயிரம் நூல் இவனது உச்சயினி படையெடுப்பு குறித்துப் பேசுகிறது. டி.டி. கோசாம்பி அவர்கள் தனது பண்டைய இந்தியா என்கிற நூலில் தந்த தகவல் இந்தப் படையெடுப்பை நடத்தியவன் சோழன் நலங்கிள்ளி தான் என்பதை உறுதி செய்கிறது. இவன் சேரன் குட்டுவன் கோதையின் சம காலத்தவன். இவன் கி.மு. 100வாக்கில் தனது ஆட்சியைத் தொடங்கி சுமார் 25 ஆண்டுகள் ஆண்டான் என்பதால் இவனது ஆட்சியாண்டுகளை கி.மு.100-கி.மு.75 எனலாம். இவனுக்குப்பின் இவனது மகன் இளஞ்சேட்சென்னி, நலங்கிள்ளி சேட்சென்னி எனப்பெயர்கொண்டு சுமார் கி.மு.50வரை ஆள்கிறான். அவனது வேந்தர் ஆட்சியாண்டுகள் கிட்டத்தட்ட கி.மு.75-கி.மு.50 ஆகும். அவனே கடைசிக்காலச் சங்ககாலச்சோழ வேந்தன் ஆவான்.

மௌரியப்பேரரசு கி.மு. 297இல் தமிழகத்தின் மீதான படையெடுப்பைத் தீவிரப்படுத்தி கி.மு. 295வாக்கில் பாழிநகரைக் கைப்பற்றியது. அதனால் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை வலுப்படுத்தி மௌரியப்படையை கி.மு. 288வாக்கில் தமிழகத்திலிருந்து துரத்தியடிக்கிறான். இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 305-கி.மு.285 ஆகும். இவை மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்களின் மூலமும் மௌரியப் பேரரசின் வரலாற்றிலிருந்தும் இன்னபிற பல்வேறுதரவுகளின் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்றே கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில் சுங்கவம்சத்தின் இறுதிக்காலத்தில் தெற்கேயிருந்து படையெடுத்த சோழன் நலங்கிள்ளி கி.மு.85-கி.மு.80 வாக்கில் உச்சயினியைத் தாக்கி வெற்றி கொண்டான். முத்தொள்ளாயிரம் நூலும், டி.டி. கோசாம்பியின் கூற்றுக்களும் இன்னபிற தரவுகளும் இதனை உறுதி செய்கின்றன. இவனது வேந்தர் ஆட்சிக்காலம் சுமார் கி.மு. 100-கி.மு. 75 வரையாகும். இவனுக்கு முன்னும், இவனுக்குச் சமகாலத்திலும் ஆண்ட சேர, பாண்டிய வேந்தர்கள் வெளியிட்ட நாணயங்களின் காலங்களும் இவனது ஆட்சிக்காலத்தை உறுதி செய்கின்றன. இவனுக்குப்பின் இவனது மகன் நலங்கிள்ளி சேட்சென்னி கி.மு. 75-50 வரை வேந்தனாக ஆண்டுள்ளான்.

ஆகவே இரண்டாம் காலகட்டச் சோழன் செருப்பாழிஎறிந்த இளஞ்சேட் சென்னியின் ஆட்சி கி.மு. 305வாக்கில் தொடங்குகிறது. 10ஆம் காலகட்ட சோழன் நலங்கிள்ளியின் ஆட்சி கி.மு. 75வாக்கில் முடிகிறது. இந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய, உலக வரலாற்று காலங்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தின் மீது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கி.மு. 305க்கு முன் முதல் சோழ வேந்தன் பெரும்பூட் சென்னியும்(கி.மு.335-305), கி.மு.75க்குப்பின் இறுதி வேந்தன்  நலங்கிள்ளி சேட்சென்னியும்(கி.மு.75-50) ஆண்டுள்ளனர். இந்த இரு சோழ வேந்தர்களையும் சேர்த்து மொத்தம் உள்ள 11 சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை நிர்ணயிப் பதில் பல்வேறு கல்வெட்டுகள், நாணயங்கள், வரலாற்றுக்குறிப்புகள் முதலியன கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே தனிப்பட்ட சோழ வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளில் ஒரு சில ஆண்டுகள் முன்பின் வேறுபாடுகள் இருந்தாலும், முதல் வேந்தனான பெரும்பூட் சென்னி முதல் இறுதி வேந்தனான நலங்கிள்ளி சேட்சென்னி வரையான 11 சோழ வேந்தர்களின் வேந்தர் ஆட்சி ஆண்டுகள் என்பது சுமார் கி.மு.335-கி.மு.50 வரையான 285 ஆண்டுகள் என்பது இந்திய, உலக வரலாற்றுச் சான்றாதாரங்களைக் கொண்ட ஒரு உறுதியான காலவரையறையை உடையவை எனலாம்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *