பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

முத்துக்குமார் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (176)

 1. மாறுவானா மனிதன்…

  மரத்தை வெட்டி யழித்துவிட்டே
  மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
  தரத்தில் மனிதன் கீழிறங்கி
  தனது குடும்ப நினைவின்றி
  நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
  நிலைத்தே விட்ட நிலையினிலே,
  சிரமப் பட்டே நீர்கொணரும்
  சின்னப் பிள்ளையை நினைவீரே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. நீர்க்குடம்!

  அதில் நான் என்னைக் காண்கிறேன்
  அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்!

  ஆனால் ஒரு உண்மை…..
  அது கடைகளுக்கு அல்ல என்பதில்; அது வீட்டிற்கானது!

  வேலைக்குச் சென்று வீடு திரும்பி;
  மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து;
  அதிலும் குடிக்க நேரமில்லாது;
  உலை வைத்து சோறுண்டு;
  கிடக்கும் போது எடுக்கின்ற தாகத்திற்காகத்தான் இத்தனை ஓட்டம்!

  இதன் வலியை அவர்கள் மட்டுமே உணர்வார்கள் !

  சிறுவயதில் பனையோலையிலும், தென்னையோலையிலும் விளையாடியதின் – புத்திக்கூர்மை!
  மண்ணில் கொஞ்சம்;
  ததும்பி ததும்பி கால்களில் கொஞ்சம்;
  வீடு வந்து சேர்ந்ததும் இரு துளி நீர்;
  குடத்தில் அல்ல!
  என்னைக் கண்ட அம்மாவின் கண்ணில் !
  ஒரு குவளை நீர் தொண்டைக்குழியில் சென்றதும்,
  பூரித்து போனால் என் அன்னை!
  உன்னை சுமந்த நீர்க் குடம் குளிர்ந்தாயிற்று! எனக்கு இது போதும்!

  இதுதான் இக்காலத்தின் நிதர்சனம்!

 3. குழந்தைத் தொழில்..!
  ================

  எண்ணம் பலவும் எழுச்சி பெறும்
  திண்ணம் கொண்ட திறமை வரும்
  போற்ற வேண்டிய பிள்ளைப் பருவம்
  ஆற்றவும் உளது அரிய கடமைகள்
  சிறார் என்னும் சிந்தனை வந்தால்
  வறாது போகும் வற்றாக் கண்ணீர்
  சிரித்து மகிழும் சிறிய வயதில்
  வரித்த சிந்தனை விரியும் பெருகி
  பள்ளி சென்று படிக்கும் பருவம்
  துள்ளும் வயதில் தளும்பும் இன்பம்
  புத்தகம் சுமக்கும் புதிய சூழலில்
  எத்துணை துன்பம் இந்த வயதில்
  பாரினில் ஏழை படிக்க வழியிலை
  யாரிடம் சொல்லி எங்கே போவது
  குழந்தைத் தொழிலது குற்ற மெனவும்
  அழகாய் உணர்ந்து அறிய வேணும்
  சட்டம் என்ன செய்யும் மகனே
  விட்டு வைத்து வேடிக்கை காட்டுது
  எச்சிலை பொறுக்க இளைய வயதில்
  இச்சை வந்திட இனியும் வேண்டா
  அரசின் பார்வை அவர்கள் மீதே
  அரணாய் வந்து அணைக்க வேணும்
  கொஞ்சம் இல்லை முற்றும்
  அஞ்சும் தொழிலிது அறவே அழிகவே

  =================
  நேரிசை ஆசிரியப்பா

 4. கனவுகள்
  ஜீன்ஸ் பேன்டும்
  ஜிகினா சட்டையுமே
  அவனது கனவு.
  குடிகார தந்தையால்
  எந்த பயனுமில்லை.
  அனுதினமும்
  வருமானத்தை செலவு செய்து
  அவமானத்தை சம்பாதித்தான்.
  குடியால் அவன் வயிறுதான்
  தினமும் எரிந்தது.
  அடுப்பு என்றோதான்
  புகைந்தது.
  அன்றொருநாள்
  அவன் குடித்த சாராயம்
  அவனையே குடித்தது.
  குடும்பமே கதறி துடித்தது.
  ஐயகோ
  அப்பாவின் வேட்டியே
  அம்மாவின் புடவை ஆனது
  அம்மாவின் புடவையோ
  அக்காவின் தாவனி ஆனது.
  தனது ஜீன்ஸ் கனவை உதறினான்
  குடும்பப் பொறுப்பை
  உடுத்திக் கொண்டான்.
  இதோ பிறர்வீட்டில்
  தண்ணீர் ஊற்றி
  தன்வீட்டு வறுமையை கழுவுகிறான்.
  ஆம் அப்பன் தண்ணியடித்து
  குடும்பத்தை கெடுத்தான்
  மகனோ தண்ணீர் பிடித்து
  குடும்பத்தை காக்கின்றான்.
  தண்ணீர் அடித்து
  ஊர்மக்ககளை குடிக்க வைக்கிறான்
  உடன்பிறப்பை படிக்க வைக்கிறான்.
  போதையால் அழிந்த
  குடும்பத்தைச் சுமந்து
  புதிய பாதையை நோக்கி
  பயணம் செய்கிறான்.
  -வசந்திமணாளன்.

 5. பிழைத் திருத்தம்::
  “வறாது போகும் வற்றாக் கண்ணீர்”

  என்பதற்குப் பதிலாக

  பொறாமை உண்டு பொதுவாக நம்மிடம்

  என்று மாற்றிப் படிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *