-மேகலா இராமமூர்த்தி

மனிதர்கள் தம் வாழ்வைச் சிறப்பாக நடத்தப் பொருளிருக்க வேண்டும்; அதேவேளை அவர்கள் நடத்தும் வாழ்க்கையிலும் பொருளிருக்க வேண்டும். பிறந்தோம்; இருந்தோம்; செத்தோம் என்று வாழ்வதில் பொருளில்லை. எனவே செல்வத்தைத் தேடித் தொகுப்பவர்கள் அதனால் தாமும் பயன்கொள்ளவேண்டும்; அப்பொருளால் மற்றையோர்க்கும் பயன்நல்க வேண்டும். ஆனால் அத்தகு நல்ல மனம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எச்சில் கையால் காகம் ஓட்டாத கருமிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களைக் கருமிகள் என்று சொல்வதைக் காட்டிலும் நன்மையே செய்யா விடக்கிருமிகள் என்று சொல்வது பொருந்தும். அத்தகைய ஈயாதாரின் இழிகுணத்தைப் பேசுகின்றது பின்வரும் நாலடியார்.

துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான் 
வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து

அருளும் அவனை நகும்.   (நாலடி – 273)

தான் துய்த்துச் செலவழிக்காமலும்,  துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும் செல்வத்தை வீணாய்த் தொகுத்துவைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானின் அறியாமை கண்டு அவன் அவ்வாறு தொகுத்து வைத்த பொருளும் நகையாடும்; அவன் அப் பிறவியில் தொகுக்காத அருளும் நகையாடும்.

”உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்பதை அறியாத மன்பதையோர் சிலர் பொருளிருந்தும் பொருளற்ற வாழ்வு வாழ்ந்து மாய்கின்றனர்.

பிறர்க்கொன்று உதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்; ஏனென்றால், பொருளை வீணே தொகுத்துவைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகோரால் பழிக்கப் படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்; வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்; அதனைப் புதைத்து வைக்கும் பொருட்டுக் குழி தோண்டுதலில் இருந்தும் தப்பினர்; தம்முடைய கைகள் நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலில் இருந்தும் தப்பினர்; இன்னும் இவ்வாறு அவர்கள் தப்பிக்கொண்ட வகைகள் பலவாகும்.

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் 
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல. (நாலடி – 277)

ஆகலின் ஈயாமையாற் பயனில்லாமையோடு இன்னலும் பல இருப்பதனால், செல்வத்தின் இன்னலை எய்தாத வறியவர் ஈயாத செல்வந்தரினும் பலவகையில் நிம்மதியானவர் ஆகின்றார் என்று நகைச்சுவையாகக் கூறி நமக்கு ஈதலின் அவசியத்தைத் தெருட்டுகின்றது நாலடியார்.

பொருளைத் திரட்டுவதில் துன்பம், திரட்டிய நற்பொருளைப் பாதுகாத்தலும் பெருந்துன்பம்; அங்ஙனம் பாதுகாத்த பொருள் தன் அளவிற் குறைந்துபோகுமாயின் அதுவும் துன்பம்; இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்துபோகுமானால் அது பின்னும் துன்பம்; ஆக, துய்க்காது சேமித்துவைக்கும் பொருள் துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமாய்த் தாயகமாய் அமைந்துவிடுவதைச் சுட்டுகின்றது நாலடியார்.

ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள்.  (நாலடி – 280)

எனவே துன்பங்களுக்கெல்லாம் மூலமாய்த் திகழும் ஒண்பொருளை நன்முறையில், காலத்தில், பயன்படுத்தி வாழ்தலே அறிவுடைமை.

”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” என்றுதானே குறளாசானும் சாற்றியுள்ளார்.   அதனைப் போற்றி வாழ்தலே சிறப்பு!

பொருளுடையார் செய்யவேண்டியனவற்றையும் அவ்வாறு செய்யாமல் பொருளைப் பதுக்குவதால் ஏற்படும் இன்னல்களையும் கன்னல் தமிழில் கவின்பெற விளக்கிய நாலடியார், பொருளின்மையின் இழிவினையும், பொருளிலார் அடையும் சிறுமையையும் தெளிவாய் நமக்கு விளக்கிச் செல்கின்றது.

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை.   (நாலடி – 281)

துவர் ஊட்டிய ஆடையை இடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில் வாழ்ந்தாலும் (பத்தானும் எட்டானும்) பொருளுடைமை பலரிடத்திலும் பெருமையடையும்; ஏற்ற உயர்குடிக்கண்ணே பிறந்தாலும் பொருளில்லாதார் செத்த பிணத்தினுங் கடைப்பட்டவராவர் என்பது இதன் பொருள்.

உண்மைதானே? ஒருவன் பணக்காரனாக இருந்துவிட்டால் போதும்; அதுவே அவனுக்குச் சகல மரியாதைகளையும் மக்களிடம் பெற்றுத்தந்து விடுகின்றது. அவன் பின்புலம் குறித்தோ, அவன் செல்வம் தேடிய முறை குறித்தோ யாரும் இங்கே கவலுவதில்லை. அதுவே ஒருவன் நற்குடியில் பிறந்திருந்தாலுங்கூட வறிஞனாக இருந்தால் அவனை அவன் நெருங்கிய உறவினரேகூட மதிப்பதில்லை.

”பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்” என்று இதனைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டார் தெய்வப்புலவர்.

வறுமையாளனின் தன்மையை நம் நெஞ்சுருகும் வகையில் இயம்புகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

நீரினும் நுண்ணிது நெய்யென்பார் நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம்- தேரின்
நிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து.  (நாலடி – 282)

நெய்யானது நீரைக் காட்டிலும் நுட்பமானது என்று அறிந்தோர் கூறுவர்; நெய்யைக் காட்டிலும் புகை நுட்பமானது என்பதை அனைவரும் அறிவர். ஆராய்ந்தால் வறுமையாகிய துன்பமுடையோன் அப் புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும் நுழைந்து புகுந்துவிடுவான் என்கிறது நாலடி.

பசிப்பிணியும் ஏழைமையும் ஒருவனை பூழையிலும் நுழைந்து இரக்கும் அளவுக்கு நிலையில் இறக்கிவிடுகின்றன என்பதை அறியும்போது நம் மனம் வேதனையில் ஆழ்கின்றது.

பத்து வகையான நற்குணங்களும் பசிவந்திடப் பறந்துபோகும் என்ற ஔவையின் மூதுரையை இங்கே நாம் இணைத்துப் பார்க்கலாம்.

மானம் குலம் கல்வி வன்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தளன்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும். (மூதுரை)

பசிப்பிணி எனும் பாவியின் இயல்பை மணிமேகலைக் காப்பியமும் அணிபெற எடுத்துரைக்கின்றது. அப்பாடல்…

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி எனும் பாவி” (மணிமேகலை)

ஆதலால், நிலவுலகில் வாழ்வோர் தம் நிலையில் தாழாமல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாயின் பொருளைத் திரட்டவேண்டும்; திரட்டிய பொருளை நன்முறையில் துய்த்தும் பிறர்க்கீந்தும் மகிழவேண்டும். அத்தகு வாழ்வே பொருளுள்ள நல்வாழ்வாகும்.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *