Tag: சு. ரவி

  • கோதண்ட ராமன்

    சு. ரவி

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க). Scroll down

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம் ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா! தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    AE2C233C-25F8-44A9-8C36-E29CBAB64993

     

    சு.ரவி

     

    Share
  • வைகாசி விசாகம் – மகாபெரியவர் அவதார தினம்

    சு. ரவி

    2

    1ஆதிசங்கரரின் மறுஅவதாரம், அன்னை காமாக்ஷியே குரு உருவில் புரிந்த அனுக்ரஹம், நமது காஞ்சி மாநகரின் பாக்கியம் என்று பலகோடி மாந்தர் மதித்துப் பணியும் ஸ்ரீமஹாஸ்வாமிகளுடைய பாதகமலங்களுக்கு நமஸ்காரங்கள்.

    “ஜகத்குரு” என்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குரு” என்று விளக்கமளித்த எளிமை.

    பீடமேறிய தனது ஆரம்பநாட்களில் ஒருபயணத்தின் போது, ஆற்றங்கரையில், பொய்பேசிய தன் 6 வயதுத் தம்பியைத் திருத்தும் முகமாக, சத்தியத்தின் உயர்வு பற்றி எந்த வேதமும், உபநிஷ்த்துக்களும், புராணங்களும் சொல்லியதை விட அற்புதமாகவும், எளிமையாகவும் விளக்கிய 8 வயது குடியானவச் சிறுமியைத் தனது குருமார்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட நேர்மை;

    ஆன்மபரிசுத்தி எனும் அக்னியில் புடம்போட்டு ஞானக் கனலாகவும், கருணைப் புனலாகவும் விளங்கிய மேன்மை;

    இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

    பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தமது திருவடி தோயத் தோய நடந்து விஜயம் செய்து இந்துமதத்தின்3 உயிர்மூச்சை, உள்ளுறை ஒளியை அணையாது காத்துக் கொடுத்த மஹான், தமது விஜயங்களின் போது “மேனா” வின் பின் நடந்து செல்லும் காட்சி

    ஐந்து சுடர்களுக்கு நடுவே ஒருகால் ஊன்றித் தவம் செய்யும் அன்னை காமாக்ஷியும், காமகோடி பீடத்தை அலங்கரிக்கும் காஞ்சிமாமுனிவரும் வேறு வேறல்ல என உணர்த்தும் தவக்கோலம். தற்செயலாக ஒரு அடியவருக்குக் கிடைத்த தரிசனம் இது.

    கருணையே வடிவான அன்னையும், கண்டித்து வழிநடத்தும் தந்தையும், தானே முன்னுதாரணமாய் நடந்து காட்டி உபதேசிக்கும் குருவும் ஒரு வடிவாய் வந்துதித்த பேரருளாளரின் ஆழ்ந்த தியானக் கோலம். ஸ்ரீ மஹாஸ்வாமிகள் வாழ்க்கையில் நடந்த பலசம்பவங்கள் ஒரு குரு எப்படி இருப்பார் என்பதை நமக்கு உணர்த்த வல்லவை.

    நான் கேட்டறிந்த ஒரு நிகழ்ச்சி.

    திண்டிவனத்துக்கு அருகே ஒரு சிறு கிராமம். அங்கு ஸ்வாமிகள் செல்லும் போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது. சிலநாட்களாகப் பெய்து வந்த கடும் மழை காரணமாக, வீடு, வாசல், பொருட் சேதமடைந்து துயருற்ற ஏழைக் குடியானவ ஜனங்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்கக் கூட்டமாக வந்திருந்தனர்.ஸ்வாமிகள் அம் மக்களுக்கு மடத்தின் சார்பாக உதவும் நோக்குடன் உடனிருந்த மடத்து நிர்வாகியிடம் அவர்களுக்கு வேட்டி, துண்டு, சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யக் கூறினார்.

    4

    5

    6முகாம் வந்த இடத்தின் மடத்தின் கைவசம் ஸ்டாக் இல்லாததால் திண்டிவனம் சென்றுதான் வாங்கி வரவேண்டும். பெய்து கொண்டிருந்த மழைகாரணமாகப் போதுமான துணிமணிகள் வாங்கிவரத் தாமதமாகிவிட்டது. பின்னர் அவற்றைக் குடியானவர்களுக்கு ஸ்வாமிகள் தமது திருக்கரங்களால் வழங்கி முடிக்கும்போது மாலைப்பொழுது சாய்ந்து இரவு ஆகிவிட்டது. மனநிறைவோடு எழுந்த ஸ்வாமிகளிடம் நிர்வாகி,

    ” ஆனால் பெரியவாளுக்கு சந்திரமௌளீஸ்வரர் பூஜைக்குத்தான் நேரமாயிடுத்து” என்றார்.

    அவரை ஏறிட்டு நோக்கிய ஸ்வாமிகளோ “சந்திரமௌளீஸ்வரர் பூஜை முடிஞ்சாச்சு” எனச் சொல்லிவிட்டு உள்ளேசென்றார்.

    நம்மைக் கரையேற்றுவதற்காகத் தாம் தவவாழ்வு வாழ்ந்த மஹான் கரைஏறிவரும் காட்சியும், உண்மையான சந்திரமௌளீஸ்வரர் பூஜை எது என உணர்த்தியவர் பூஜை செய்யும் கோலமும், யோகிராஜராக, ருத்ராக்ஷ கிரீடத்துடன் நிற்கின்ற தரிசனமும்..

    கோட்டோவியங்களாக…

    ஒரு கருத்தை விளக்கி உபதேசிப்பதில் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தனித்து ப்ரகாசித்தார்.நான் படித்த இரண்டு உதாரணங்கள்:7

    1. அம்பாளுடைய லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ‘அபர்ணா’ என்றொரு நாமம்.
    வழக்கமாக இந்த நாமத்திற்கு ‘ கடும்தவம் செய்கையில் இலைகளைக் கூடச் சாப்பிடாமல் தவமிருப்பவள்’ என்றுபொருள் கொள்வர்.
    ஸ்ரீ மஹாஸ்வாமிகளோ, ” தவம் செய்கையில் இலைகளற்ற கொடிபோல் காட்சி தருபவள்” என்று அற்புத விளக்கம் அளித்தார்.

    2. ஸ்ரீ ராமானுஜர் வரலாற்றில், சைவம் தழுவிய சோழமன்னனின் கட்டளைக்காக, ஸ்ரீ. ராமானுஜருக்குப் பதிலாக மன்னனைச் சந்தித்த அவரது சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வார் பற்றிய நிகழ்ச்சி. மன்னன் “சிவாத் பரதரம் நாஸ்தி ( சிவத்திற்கு மேல் ஏதுமில்லை)” என்றெழுதிய ஓலையில் பரம வைணவரான அவரைக் கையெழுத்திடுமாறு பணிக்க, அவர் அவ்வோலையில் ” அஸ்தி த்ரோணம் அதஃபரம்” என்றெழுதி கையொப்பம் இட்டார். “சிவம்” என்பது சிவனைக் குறிப்பதல்லாமல் ‘ஆழாக்கு போல ஒரு முகக்கும் அளவையும் குறிக்கும். ஸ்ரீ கூரத்தார் அதை சிலேடையாக்கி அதை விட ‘த்ரோணம்’ என்ற முகக்கும் கருவி பெரியது எனப் பொருள்படும் வாக்கியத்தை எழுதினார் என்பர்.

    9

    8ஸ்ரீமஹாஸ்வாமிகள் ” சோழமன்னன் எந்த நோக்கத்தோடு சிவனுக்கு மேல் ஒன்றுமில்லை என கூரத்தாழ்வானை ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்தினானோ- ஆனால் மஹா ஞானியும், பண்டிதனும், பாகவதனும் ஆன கூரத்தாழவான் வேடிக்கைக்காகக்கூட சிவ தூஷணை தவனிக்கப்பதில் அளித்திருக்க மாட்டார். எனவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
    சிவலிங்கத்தை அலங்கரிக்கும் போது, அதன் உச்சியில் விலவ இலைகளிச் சூடுவர். ஆம், “த்ரோணம்” என்றால் வில்வம் என்றும் பொருள்படும்.

    ” சிவனுக்கு மேலே ஒன்றுமில்லை” என்பதற்குப் பரம பாகவதனான கூரத்தாழ்வார் ” அதற்கு மேலே வில்வம் இருக்கிறது” என்று பொருள்படத்தான் மாற்றுரைதிருப்பார்” என்று விளக்கி உள்ளார்.

    மஹான்கள் பார்வையே தனி.

    அவர்கள் பூஜை செய்யும் போது அந்த அந்த மந்திரங்களின் அதிதேவதைகள் நேர்வந்து அவற்றை ஏற்கும்.

    ” பவ சங்கர தேசிக மேசரணம்! “

    Share
  • வெண்பாவும், ஓவியமும்!

     

    சு. ரவி
    நீலவண்ணக் கண்ணன் நிலாவண்ணன் ஆக இங்கே
    கோலவண்ணம் காட்டிக் குலாவுகின்றான்- பாலமுதம்
    நனைத்த நதிக்கரையில் ராதையிவள் காதல்
    நனைத்த நிலவாயினாள்

     

    s.Ravi

     

     

    Share
  • நரசிம்மம்

     

    சு.ரவி

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : சு. ரவி

    அவன்வே தங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்
    அவனே பாற்கடல் கடையும் நேரம் வடவரை தாங்கிய ஒருகூர்மம்!
    அவனே ஏனம், எனவடி வங்கள் பலவாய் எடுத்துத் தோன்றிடினும்
    அவதா ரத்தின் பரிணா மத்தில் அற்புத வடிவம் நரசிம்மம்

     
    விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!
    எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!
    சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்!
    இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச் சத்தியமாக்கும் நரசிம்மம்!

     
    யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே சீயம் கர்ஜிக்கும்
    அகமும், புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்!
    நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!
    அழகிய சிங்கம் துளஸி தரிக்கும், அபயமளிக்கும், துயர்நீக்கும்

     
    அழகிய வடிவினள் திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்
    கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்
    பழவினை யெல்லாம் பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

    போக்கும், வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!
    யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?
    கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்
    வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

     

     

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்

    சு. ரவி 

     

    god-ayyappa-wallpapers-3

    1-b

    படத்திற்கு நன்றி:

    http://www.penmai.com/forums/temples-gods-goddess/49621-a.html

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்- எருமேலி கிராத சாஸ்தா

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    ஐயனை மகரவிளக்கு ஜோதியாகக் காணப் பயணப்படும் பெருவழியின் நுழைவாயில் தலம் எருமேலி. இங்கு  வாவரைத் தொழுது, மேளதாள முழக்கங்களோடு ‘திந்தக்கத் தோம்’ என்ற ஜதியோடு அடியவர் நடனமாடி வர, கிராத (வேடன்) சாஸ்தாவாக அருள்பாலிக்கும் ஐயன் மீது எழுந்த திருப்புகழ். (நண்பர் வி.கே.நாராயணன் இதனைக் கல்யாணிராகத்தில் பாடுவார்)

    படிக்க, ரசிக்க..       

                               ஐயப்பன் திருப்புகழ்

    தனனதன  தனனதன தனதான  தானதன

     தனனதன  தனனதன தனதான  தானதன    

    தனனதன  தனனதன தனதான  தானதன         தனதான

    இரவுபகல் பகலிரவு எனமாறி மாறிஇரு

      பொழுதுசுழ லமிழுவதை உணராது போகநிலை

      புலனவிழ உடலமிக வயதாகி ரோகமுற             உழல்வேனை

    இருளனைய மறலியென துயிர்சோர மேவுகையில்

      அபயமென மரணபய மணுகாம லேநினது

      சரணமலர் நிழலருள புலிவாஹ னாவருகை        தரவேணும்!

    அரவு,மதி, பெருகுநதி முடிசூடி ஆடுமிறை

       அமுதநதி அனையஎழில் உருவான மோஹினியை

       அணையசுரர் உளமகிழ அவதார மானதிரு         மணிமார்பா!

    அரசரொடு பொருதவர்தம் குலகால னாகி,அரி

       சிலைவளைய கருவமழி படவாடி நாணிவரு

       பரசுமுனி அருளும்வளர் மலையாள தேசமதில் உறைவோனே!

    விரதநெறி பரவியிரு வினைதீர நாடியுனை

       அணுகுமுன தடியவரின் இடர்தீர மாமலையில்

       கருணைபொழி முகிலெனநி லாவுமழ கா,இளைய      சிவபாலா!

    விழியசைவில் நில(வு)இரவி புவிகோள்கள் மீன்களிவை

        உலவிவர், ஒளியுமிழ, விதிவேத மாக, மலர்

        நறையவிழ, நதிபெருக, நவகோடி நாதமெழ         அருள்வோனே!

    அரசு,மரு தகில்,கதலி  கமுகால் பலாவளர

       அரவமொடு புலிகரடி மதயானை தாமுலவும்

       அடவிபடர் பெருவழியின் நுழைவாயி லானதலம்;    ஜதிகூறும்

    அதிருமிடி எனமுழவின் ஒலிசேர, வாவரடி

       தொழுதடியர் நடனமுடன் வரவேகி ராதனென

       எழில்மலியு மினியபுரி எருமேலி மேவிவளர்         பெருமாளே!

    Share
  • அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஓவியம்

    சு.ரவி

    அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியம்… பார்க்க, ரசிக்க

    AKILANDESWARI FINISHED 2

    Share
  • மஹாகவிக்கு ஒரு விண்ணப்பம்

     

    சு.ரவி

    எனக்கொரு கனவு இருக்கிறது…….

    அன்பே மதமாய், அறமே அரசாய்,ts
    அறிவே ஒளியாய், இசையே மொழியாய்,
    உலகே உறவாய், பொறையே குணமாய்,
    மானுட வாழ்வை மாற்றி அமைக்க
    (எனக்கொரு)

    இனங்கள், குலங்கள், நிறங்கள் கடந்து
    மனங்கள் இணைந்து, மகிழ்ந்து கலந்து,
    கவலைகள் இன்றிக் குவலயமே ஒரு
    குடும்ப மாகக் குதூ கலித்திட
    (எனக்கொரு)

    நாடுகள் என்ற கோடுக ளின்றி
    காடுகள், மலைகள், கழனிகள், நதிகள்,
    அலைகடல் எல்லாம் எவர்க்கும் உரித்தென
    உலகம் அனைத்தையும் ஒன்றாய் இணைத்திட
    (எனக்கொரு)

    முன்னால் ஓநாய்ப் பார்வைகளும்,
    பின்னால் பசியும், பெருமூச்சும்,
    ஒருபுறம் செல்வப் பெருமிதமும்,
    மறுபுறம் மிடிமைப் படுகுழியும்-இம்
    முரண்பாடுகளை மோதித் தகர்க்க
    ( எனக்கொரு)

    கவிதைக் கனலே! இரவும் பகலும்
    சுதந்திரக் கனவைச் சுமந்தவனே! என்
    கனவுக ளெல்லாம் கரைசேர்ந்திட நீ
    கரம் கொடுப்பாய் ஒரு வரம் கொடுப்பாய் என
    (எனக்கொரு)

    Share
  • ஐயப்பன் திருப்புகழ் – 4

    சு. ரவி

    வணக்கம், வாழியநலம்,

     

    அந்த ஒரு வருடம். விரதமிருந்த கார்த்திகை மாதத்தில் ஒருமாலைப்போதில், விரதநெறிகளுக்குப் பொருந்தாத நினைவுகளில் மனம் அலைபாய்ந்த நேரம்! எனையாளும் சபரிகிரீசனைத் தொழுது எழுந்த திருப்புகழ்…

    படிக்க, (பாடிப் பார்க்க) ரசிக்க

    ராகம்: பைரவி  ( பாடலும் By RAVI)

    ஐயப்பன் திருப்புகழ் – 4

    தனத்தனந்தன  தனதன தனதன

    தனத்தனந்தன  தனதன தனதன

    தனத்தனந்தன  தனதன தனதன  தனதான

    மனத்துறங்கிய  நினைவுகள் அலையென

    கதித்தெழுந்திட உறுதியும்   அனலினில்

    உருக்குலைந்திடு  மெழுகென உருகிட                                     மதன்வீசும்

    மலர்ச்சரம்பல மறுபடி  மறுபடி

    துளைத்தநெஞ்சொடு துயர்தரு விளைவுகள்

    சுமக்கவென்றெனை  நிலைகெட விடுவது                 முறையாமோ?

    நினைப்பணிந்துநின் அழகிய பதமலர்

    அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

    இருத்தி,என்பவ  வினையற  கதிபெற                                     அருள்தாராய்!

    நிருத்தனம்பயில்  இறையவர் அருளிய

    வரத்தையங்கவர் சிரமிசை முயலுமொர்

    அரக்கனும்பட நிலவென  உருவொடு                           வருமாயன்

    வனப்புபொங்கிய வதனமும் அதிலிரு

    நிறைத்த அஞ்சனம்  எழுதிய விழிகளும்

    நினைப்பழுந்திட அரனுறு மயலினில்                                    உருவாகி

    வனத்தடங்களை  வருடிய  படிதவழ்

    அலைக்கரங்களொ டுலவிடு நதிநுரை

    கொழித்தபம்பையின்  எழுகரை  மிசைவளர்          மணிமார்பா!!

    தனத்தனந்தன  தனதன தனவென

    இடக்கை,திண்டிமம் ஒலிதர அழுதையில்

    அரக்கிதுஞ்சிட அழகிய  நடமிடு                                                சபரீசா!!

    தரித்தசந்தன மணமுற  இருசெவி

    தமிழ்ப்பெருங்கவி  பருகிட சபரியில்

    தவப்பிழம்பென வளரொளி யுடனமர்                       பெருமாளே!

    (அடைக்கலம்புகும் அடியவர் நடுவினில்

    இருத்தி,என்பவ  வினையற கதிபெற அருள்தாராய்!)

    Share
  • குருவாயூரப்பன்

    சு. ரவி

    மோஹினித்தாயாக வந்த குருவாயூரப்பன் ஓவியம் – பார்க்க, ரசிக்க…

    Guruvayurappan 1

    Share
  • தத்தாத்​ரேயர்

    சு. ரவி

    தத்தாத்ரேயர் ஓவியம் – பார்க்க, ரசிக்க…

    Datthathreya 31 08 09 2

    Share
  • ஐயப்பன் திருப்புகழ்

    சு.ரவி    

    வணக்கம், வாழியநலம்!

    ஆரியங்காவு அய்யனுக்கும், குளத்துப்புழை பாலனுக்கும் உருவான திருப்புகழ்ப் பாடல்கள்..

    படிக்க, ரசிக்க…

    ஐயப்பன் திருப்புகழ் 2

    ராகம்: சக்கரவாகம்

    தானதந்தானத்  தனதான

    தானதந்தானத்  தனதான

     

    ஊழெனும் பாதைத் தடமீது

    ஊனுடம் பாசைத் தொடராலே

    கூழ்பெறும் பாடுற்(று) அலைமோதிக்

    கூனியிங் கேவற் படுவேனோ!

    தாழ்வெலாம் போகத் தளிர்போலுன்

    தாளையன் பாகத் தருவாயே!

    ஆழ்நெடுங் கானத் துறைவோனே

    ஆரியங்  காவிற் பெருமாளே!

    (தாளையன் பாகத் தருவாயே!)

     

    ஐயப்பன் திருப்புகழ் 3

    ராகம்: ரேவதி

     

    தனத்தத் தனதான  தனதான

    தனத்தத் தனதான  தனதான

    அறத்துட்  சிலபோதும் முனையாதே

    அவத்துட் படுவேனை அளியேனை

    புறத்துத் தடுமாற விடுவாயோ?

    புயற்கர்ப்ப மெனநீல மழைமேக

    நிறத்துத் திருமாலை விடையோனும்

    நினைக்கச் சிசுவான மணிமார்பா!!

    குறத்திக் கிணையோனின் இளையோனே!

    குளத்துப் புழைமேவு பெருமாளே!

    (புறத்துத் தடுமாற விடுவாயோ)

     

    வழிநடை தொடரும்..

    Share
  • ஐயப்பன் திருப்புகழ் – 1

    சு.ரவி

     

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    வணக்கம், வாழியநலம்,

    மயிலையில் பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய என் அப்பா, தனது மாலைநேரங்களில் ராஜாஜி சீவல்ஸ்டோர்ஸில் வாங்கிய ரெண்டணா சந்தனத்தைப் பூசிக்கொண்டு வீட்டின் மொட்டைமாடியில் ஈஸிசேரில் படுத்திருக்க, நான் கால்பிடித்துவிடுவேன். அந்த சுகத்தில் 4கட்டை ஸ்ருதியில் அவர் பாடும் திருப்புகழ்ப் பாடல்கள் தான் எனக்கு அருணகிரியாரை அறிமுகப்படுத்தின.
    ” கைத்தல் நிறைகனி, உம்பர் தரு தேனு, சந்ததம் பந்தத் தொடராலே, திருமகளுலாவும், அதலசேடனாராட,
    ஏதுபுத்தி ஐயா…” என தினம் ஒரு நாலைந்தாவது வரும்..

    பின்னர் என் பத்தாம் வகுபு நாட்களில், TMS பாடி,நடித்த ‘அருணகிரிநாதர்’ படத்தின் “முத்தைத்தரு, பக்கரை விசித்ரமணி, தண்டையணி வெண்டையும்” ஆகிய பாடல்கள்
    ஒருமுறை கேட்டமாத்திரத்தில் என் உள்ளம் புகுநது, அப்பாவைத்திருந்த திருப்புகழ்ப் புத்தகத்தை அட்டையொடு அட்டை படிக்கவைத்தன. எததனை சந்தங்கள்.. எத்தனை தாளங்கள்.. என்ன எளிமை.. அன்றே நான் அருணகிரியின் சந்தத் தமிழுக்கு அடிமையானேன்..

    பின்னர் அருணகிரியாரின் தடங்களை ஒட்டி காமாக்ஷி தாஸர் என்பவர் அன்னை காமாக்ஷி மீது எழுதிய திருப்புகழ், திருவகுப்புகள் போன்ற நூல்களையும் படித்து பிரமித்தேன் ( இந்த நூல்கள இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை)

    பித்துக்குளி முருகதாஸ் அவர்தம் குளுகுளு குரலிலும், வள்ளிமலையில் வள்ளிமலைஸ்வாமிகள் வகுத்துக் கொடுத்தமுறைப்படி திருப்புகழ்ப் பாடல்கள் இசைக்கப்படுவதையும், அதனையொட்டி திரு ராகவன் அவர்களின் இசையிலும் கேட்கும் பேறு பெற்றேன்.

    எனை இவ்வாறு முற்றிலும் ஆட்கொண்ட சத்குருநாதர் அருணகிரிநாதரின் சந்தத் தமிழே குருவாக, என் சபரிமலை யாத்திரைகளின் போது ஐயப்பன் மீது இயற்றிய ஐயப்பன் திருப்புகழ்ப் பாடல்களை இத்தளத்தில் பகிர்கிறேன்.
    இந்தத் திருப்புகழ்ப் பாடல்களை ஏற்ற ராகங்களில் இசையமைத்துப் பாடி மெருகேற்றிய என் சக ஐயப்ப நண்பர் திரு.V.K. நாராயணன் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

    இந்தத் திருப்புகழ், நாமகிரிப்பேட்டையார் சிந்துபைரவியில் வாசித்த சந்தத் திருப்புகழைக் கேட்டபாதிப்பில் சிந்துபைரவியில் உருவானது. பின்னர் நண்பர் நாராயணன் இதனை ராகமாலிகையாக முறையே ” செஞ்சுருட்டி,மோஹனம்,புன்னாகவராளி,சங்கராபரணம், மாண்ட், முகாரி, சிந்துபைரவி, மத்யமாவதி ” ஆகிய ராகங்களில் செதுக்கிக் கொடுத்தார்.

    (பாடிப்) பார்க்க, ரசிக்க…..

    இணைப்பாக நெய்ப்பிரியன் -அக்ரிலிக் ஓவியம்- பார்க்க, ரசிக்க…

    ஐயப்பன்

    ஐயப்பன் திருப்புகழ்

    தனன தானன தந்தன தானன
    தனன தானன தந்தன தானன
    தனன தானன தந்தன தானன தனதான

    கனக மேனியி னின்னொளி மேவிட
    இலகு மோர்நகை சிந்தியு லாவிட
    அளக பாரம சைந்திட வேல்விழி மயல்வீச
    கவினு லாவிய பெண்மையெ லாமொரு
    கவிதை யாகிம யங்கிய தோவென
    வடிவு மேவிவி ளங்கிய மோஹினி மனமாற

    பனிநி லாவொடு கங்கைகு லாவிய
    சடையு ளானர வங்களு லாவரும்
    அழகு மேனிய னன்றொரு தாருக வனமீது
    பதித ரானவர் தம்குல மாதரின்
    மனமெ லாமழி யும்படி தேசுறு
    வடிவி னான் சிவ சங்கர தேவனும் உறவாட

    வனமு லாவிய பம்பையி லேசிறு
    மதலை யாகிவ ளர்ந்தவ னேகொடு
    மஹிஷி மாளச ரந்தனை ஏவிய சபரீசா!
    வரையி லாதுவ ளர்ந்திடு தீவினை
    அதனி லேஉழ லும்படி மாயையில்\
    அறிவி லாதும யங்கிட வேஎனை விடுவாயோ!

    எனது நானெனும் எண்ணமெ லாமற
    இடைய றாதும னந்தனி லேபத
    சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!
    சபரி மாமலை தங்கிய மோஹன
    வரிக ளோடிய வன்புலி வாஹன
    ஹரிஹரா பதி னெண்படி மேவிய பெருமாளே!

    (பத சரண மேநிலை நின்றிட நீதிரு அருள்தாராய்!)

    Share
  • பகவான் பாபா அவதார தினம் – நவ.23

    சு.ரவி

    Parthi Nayakan 5 Jul 09 2

    Sathya Sai Feb 09

     

     

     

     

     

    வணக்கம், வாழியநலம்

    தன்னை ஏற்க மறுப்பவர் உள்ளத்திலும் கூட எப்போது உட்புகுந்தார் என்று உணர ஏலாது, ஒரு ஊதுவத்தியின் புகை இல்லம் முழுவதும் வியாபிப்பது போல அவர் தம் வாழ்விலும் புகுந்து நிறைந்து பகவான் ஆக்ரமிக்கிறார் என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

    பேரான்மா ஒன்றின் சங்கல்ப பலத்தால் மட்டுமே மானுடரால் செயற்கரிய மாபெரும் செயல்கள் நிறைவேறும் என்று பாபா பலமுறை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு, புனே நகர்ப்புறதே ஹட்ஷி என்ற திருத்தலத்தில் பாண்டுரஙன் மற்றும் ஷீரடி பாபா ஆலயங்களைக் குடமுழுக்காட்டித் திறந்து வைத்து பாபா 2 தினங்கள் உரையாற்றினார்.

    அவ்விரு தினங்களில் அக் குக் கிராமத்தில் கூடிய பக்த்ர்கள் எண்ணிக்கை 75000த்துக்கும் மேலே. ஒரே மாத அவகாசத்தில், அந்த புறநகர் கிராமத்தில் போக்குவரத்து சாலை வசதி, கார் பார்க்கிங் வசதி, அத்தனை ஜனங்களுக்கும் டாய்லெட் மற்றும் சுகாதார வசதி, மருத்துவ வசதி, காலை முதல் இரவு வரை வயிறார சாபுதானா கிச்சடி (ஒவ்வொருவருக்கும் க(த)ட்டுப்பாடில்லாமல் 4-5 தேங்காய் பர்பிகள் உட்பட)..

    நேரில் பார்த்தவர்களுக்குத்தான், இவ்வனைத்தும் பகவான் பாபா ஒருவரின் சங்கல்ப பலத்தால் மட்டுமே சாத்தியம் என உணர முடியும்.

    பகவான் பாபாவின் சுந்தரம் பஜனைகளில் உள்ளம் ஒன்றித்திளைத்த தினங்களும், புட்டபர்த்தியில் அதிகாலை நகரசங்கீர்த்தனமும், பாபா தரிசனமும் நெஞ்சில் நிழலாட, பகவானின் பாதகமலங்களை நினைந்து அவர்தம் திரு உருவக் கோட்டோவியங்களை சமர்ப்பிகிறேன்!

    Share
  • ஐயப்பன் வரவுப் பாடல்

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    ஐயப்பன் பூஜை,பஜனைகளில் விநாயகர் முதல் பலதெய்வங்களின் மீது  இசைப்பாடல்கள் பாடியபின் ஐயப்பனை அழைக்கும் வரவுப் பாடல் பாடுவது மரபு. அம்மரபையொட்டி, எங்கள் குழுவினர் ஒரு வரவுப் பாடலை எழுதுமாறு பணித்தனர்.

    பாடலின் தொகையறா இவ்வாறு ஆரம்பித்தது:

    “புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்

    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல

    நிறப்பட்டுடுத்தி…”

    தொகையறா தொடரவில்லை..ஒரு வருடம் ஓடிவிட்டது..

    அடுத்த வருடம், ஒரு அன்பர் வீட்டின் ஐயப்பபூஜை முடிந்து இரவு பத்துமணிக்கு ( ஸ்கூட்டரில்) வீடுதிரும்பும்போது அடையாறு இசைக்கலூரியிலிருந்து இந்திராநகர் செல்வதற்குள் புயல்வேகத்தில் பறப்பட்டெழுந்தனன் புலிவாஹனன்..

    பாடல் இதோ…

    MOHINI BeLuur

    ராகம்: சிவரஞ்சனி

    தொகையறா

    புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
    நிறப்பட் டுடுத்திக் கரத்திற் சரத்தைத்

    தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

    பல்லவி

    வருக வருக மணிகண்டனே1-அருள்

    தருக தருக சிவமைந்தனே!

    இருகரம் குவித்தோம்- முனையுமனம்

    உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

     

    சரணம்

    அண்டமும் ககன மண்டலங்களுடன்

    எண்திசைகளும் குலுங்க

    சண்ட வெங்கலியும் துண்டுதுண்டுபட

    சங்கதுந்துபிகள் முழங்க

    செண்டை,பஞ்சமுகம்,திண்டிமப்,பறை

    ம்ருதங்கம் ஆர்த்தொலி வழங்க

    தண்டையுணட கழல் தஞ்சம் தஞ்சமெனத்

    தொண்டரண்டிவந் திறைஞ்ச                    (வருக)

     

    வலியகடுத்தையும், சிறியகடுத்தையும்

    வலமிட மாகவர

    புலியும்,சிறுத்தையும், தமதுகுலத்தொடு

    புதர்களினூடு வர

    நிலவை இழுத்திட  கரிகள் உயர்த்திய

    நீண்டதுதிக்கையுடன்

    உலவிவரப் பல மிருகமெழுப்பிய

    உறுமல் ஒலித்துவர                              (வருக)

     

    கணபதி யுடனர வரசனும், முருகனும்

    களிநடனம் புரிய,

    கணபண உரகமொ டழகிய பிறைபுனை

    விரிசடை இறைமகிழ,

    மணமலர் தவழ்குழல் அழ்கிய வடிவினள்

    இதழகளில் நகைமலர,

    கணகணகணவெனக் கடலென அணிவரும்

    கணவொலி கூடிவர                                   (வருக)

     

    அழுதையின் அதிபதி, கரிமலை பகவதி

    ஆடி ஆடுவருக!

    மழுமுனி அருளிய மலைவளர் பதியினை

    ஆளும் ராஜன் வருக்!

    சுழுமுனை வழிவிசை யுடனெழு சுடரென

    ஜோதிரூபன் வருக!

    புழுமுதல் சுரர்வரை உலவிட உயிர்தரும்

    பூதநாதன் வருக!

     

    புரவியேறி வருக!- பூதப்

    படைகள்சூழ வருக!-தங்கச்

    சுரிகை தாங்கி வருக்!- தீபச்

    சுடரில் ஆடி வருக!

     

    வருக வருக மணிகண்டனே -அருள்
    தருக தருக சிவமைந்தனே!
    இருகரம் குவித்தோம்- முனையுமனம்
    உருகி இங்கழைத்தோம்!                               (வருக)

    புறப்பட்டெழுந்தனன்  புலிவாஹனன் -உடன்
    புறம்பட்டழிந்தன பொய்ம்மை தீமை-நீல
    நிறப்பட்டுடுத்திக் கரத்திற்சரத்தைத்
    தொடுத்துப் பிடித்துப் புயத்தைச் சிலிர்த்துப்    (புறப்பட்)

     

    நடைவழி தொடரும்…

    Share