மஹாகவிக்கு ஒரு விண்ணப்பம்
சு.ரவி
எனக்கொரு கனவு இருக்கிறது…….
அன்பே மதமாய், அறமே அரசாய்,
அறிவே ஒளியாய், இசையே மொழியாய்,
உலகே உறவாய், பொறையே குணமாய்,
மானுட வாழ்வை மாற்றி அமைக்க
(எனக்கொரு)
இனங்கள், குலங்கள், நிறங்கள் கடந்து
மனங்கள் இணைந்து, மகிழ்ந்து கலந்து,
கவலைகள் இன்றிக் குவலயமே ஒரு
குடும்ப மாகக் குதூ கலித்திட
(எனக்கொரு)
நாடுகள் என்ற கோடுக ளின்றி
காடுகள், மலைகள், கழனிகள், நதிகள்,
அலைகடல் எல்லாம் எவர்க்கும் உரித்தென
உலகம் அனைத்தையும் ஒன்றாய் இணைத்திட
(எனக்கொரு)
முன்னால் ஓநாய்ப் பார்வைகளும்,
பின்னால் பசியும், பெருமூச்சும்,
ஒருபுறம் செல்வப் பெருமிதமும்,
மறுபுறம் மிடிமைப் படுகுழியும்-இம்
முரண்பாடுகளை மோதித் தகர்க்க
( எனக்கொரு)
கவிதைக் கனலே! இரவும் பகலும்
சுதந்திரக் கனவைச் சுமந்தவனே! என்
கனவுக ளெல்லாம் கரைசேர்ந்திட நீ
கரம் கொடுப்பாய் ஒரு வரம் கொடுப்பாய் என
(எனக்கொரு)
அன்பையே மதமாகக் கொண்ட நல்ல வாழ்க்கை நெறியை வலியுறுத்தும் தங்கள் (கவிதைக்)கனவு மெய்ப்பட வேண்டும்! வாழ்த்துக்கள்!