குறவன் பாட்டு-21
ஆலமரமும் வண்ணத்துப் பூச்சிகளும்
பனைமரம் போலப் பருத்துத் திரண்ட,
பற்பல நூறு விழுதுகள் மண்ணில்,
பலநூ றாண்டுக ளாகத் தொடர்ந்து,
பதியம் ஆகிச் செழித்த ஆலம்! 170
ஆயிரம் கால் மண்டபம் போல்,
அகன்று நின்ற ஆலமரம், தொழும்
ஆலயத்தின் கோபுரம் போல் உயர்ந்து,
அரியவகைப் பறவைகளின் சரணாலயம் ஆகும்! 171
தூண் போன்ற விழுதுகள் இடையே,
தூரிகை போன்ற மெல்லிய விழுதுகள்,
துதிக்கை மண்தொட நடக்கும் பிடியாய்,
தரையைத் தொட்டும் தொடாமல் நின்றன! 172
மேனிலைக் கிளைகளில் அமர்ந்த மந்திகள்,
தேயிலை பறிக்கும் பெண்கள் போல,
ஈரிலைக் கொத்தாய்ப் பறித்துப் பறித்து,
ஆலிலைக் கொத்தைக் கீழே அனுப்பின! 173
பச்சைச் சிறகை விரித்துச் சுற்றும்,
பட்டாம் பூச்சிகள் போலக் காற்றில்,
படபட வென்று பறந்த இலைகள்,
பூக்களைப் போல மண்ணில் விழுந்தன! 174
உச்சிக் கிளைகளில் கூடுகள் அமைத்தால்,
உக்கிரக் கதிரவன் சுடுவா னென்று,
அடிமரக் கிளைகளில் கூடுகள் கட்டி,
குளுகுளு வென்று பறவைகள் வாழ்ந்தன! 175
தனிமரம் ஒன்று தோப்பென் றாகி,
பலகரம் ஊன்றி மண்ணில் நின்று,
அடிமரம் உயிரைத் துறந்த பின்னும்,
புதுமரம் போலப் பசுமை பேணும்! 176
கரியமில வாயுவைக் களிப்புடன் ஏற்று,
உயிரமுத வாயுவை உலகுக்கு ஈந்து,
கருணையுடன் வாழும் கானகம் கொண்ட,
தருக்களின் தலைவன் ஆலமரம் ஆகும்! 177
தனிமரம் தோப்பென்றாகி
தருக்களின் தலைவன் ஆனது..
நன்று…!
விலங்குகள், பறவைகள், மரங்கள் என இயற்கை அன்னையின் அனைத்துக் குழந்தைகளின் செயல்பாடுகளையும் அழகிய கவிதைச் சரங்களாய்த் தொடுத்து அளித்துள்ள விதம் அற்புதம் கவிஞரே! பாராட்டுக்கள்!!
கரியமில வாயுவைக் களிப்புடன் ஏற்று,
உயிரமுத வாயுவை உலகுக்கு ஈந்து…….
அறிவியலையும் புகுத்திவிட்டீர்களே!!!! மிக்க நன்று.
“உயிரமுதவாயு” …மிக நல்ல பதம், ஆலமரத்தை நேரே பார்ப்பது போன்ற உங்கள் விவரிப்பு அருமை சச்சிதானந்தம்.
கண்ணை விட்டு மறைந்துப்போன ஆலமரத்தை கண் முன் காட்டிய கவிதை.அதில் கொஞ்சம் விஞ்ஞானமும் சேர்ந்து வந்தது அருமை.
தொடர்ந்து குறவன் பாட்டு கவிதைகளைப் படித்துப் பின்னோட்டம் மூலம் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நண்பர்கள் திரு.செண்பக ஜெகதீசன், திரு.தனுசு, திருமதி.தேமொழி, மற்றும் திருமதி. மேகலா இராமமூர்த்தி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
என்ன அற்புதமான கற்பனை!!. என்ன அருமையான உவமைகள்!!!.. ஒரு ஆலமரம், தன்னுள் ஒரு கானகத்தையே அடக்கியிருப்பது போன்ற விவரிப்பு மிக அருமை!!.. மிக்க நன்றி சகோதரரே!!!
@@ பார்வதி இராமச்சந்திரன்,
தங்களது பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரி. என் மனமார்ந்த நன்றிகள்!