பட்டினத்தடிகளின் பாடல்கள் – 22ம் பகுதி
தஞ்சை வெ. கோபாலன்
கன்னிவனநாதா கன்னிவனநாதா
கெட்டநாள் கெட்டாலும் கிருபை இனிப் பாரேனோ
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ
நற்பருவமாக்கும் அந்த நாளெனக்குக் கிட்டாதோ
எப்பருவமுங் கழன்ற ஏகாந்தம் கிட்டாதோ
வாக்கிறந்து நின்ற மவுனமது கிட்டாதோ
தாக்கிறந்து நிற்கும் அந்தத் தற்கத்தி கிட்டாதோ
வெந்துயரைத் தீர்கும் அந்த வெட்டவெளி கிட்டாதோ
சிந்தையைத் தீர்க்கும் அந்தத் தேறலது கிட்டாதோ
அனாடியார்க் கடிமை கொளக் கிட்டாதோ
ஊனமற என்னை உணர்ந்து வித்தல் கிட்டாதோ
என்னென்று சொல்லுவண்டா என்குருவே கேளடா
பின்னை யெனக்கு நீ அல்லாற் பிரிதிலையே. 1.
மதுரையம்பதி வாழ் சோமசுந்தர சிவமே! நினது திருவருளைப் பெறாமல் நாட்கள் வீணாகிப் போனாலும், இனியாவது நின்றன் கருணையினைப் பெறாமல் இருப்பேனோ? அருள் கிடைக்காமல் நான் அவதியுற்றாலும் இனியொருநாள் நற்கதியை அடையாமல் போவேனோ? நற்பேறு பெருகின்ற நல்ல காலம் எனக்குக் கிட்டாதோ, அதனால் விளைகின்ற நன்மைகளை நான் அடையும் நாள் வந்து சேராதோ. சதாகாலமும் பேசிக் கொண்டிருக்கும் நிலைமை மாறி உன்னில் மனம் வைத்து வாய் மெளனம் கிட்டாதோ, மேலும் ஜீவராசிகளோடு கூடியிருக்கும் நிலை மாறி சுத்த சிவத்தில் லயிக்கும் ஏகாந்தம் கிட்டாதோ. பிறவியினால் பெற்ற துன்பங்கள் நீங்கி பரவெளியின் அமைதியில் நான் நிலைக்கும் நாள் வாராதோ, எண்ணங்களை அடக்கி ஒருமுகப்படுத்தி உன்னில் ஒன்றும் அந்தத் தேன்சுவையும் கிட்டாதோ. மெய்யடியார் கூட்டத்தில் நான் தொண்டுபுரியும் காலமும் வாராதோ, குற்றமே குணமாக்கொண்ட எனக்கு நின் திருவருளை ஓதுவித்தல் கூடாதோ. சற்குருநாதா, என் குருமணியே! என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். நின்னையன்றி என்னை ஆதரிப்பார் இல்லையே.
கன்னிவனநாதா கன்னிவனநாதா
அன்ன விசாரம் அது அற்ற இடம் கிட்டாதோ
சொன்ன விசாரம் தொலைந்த இடம் கிட்டாதோ
உலக விசாரம் ஒழிந்தவிடம் கிட்டாதோ
மலக்குழுவின் மின்னார் வசியாதும் கிட்டாதோ
ஒப்புவமை அற்றோடொழிந்த இடம் கிட்டாதோ
செப்புதற்கும் எட்டாத் தெளிவிடமும் கிட்டாதோ
வாக்கு நனாதீத வகோசரத்திற் செல்ல எனைத்
தாக்கு மருட் குருவே நிந்தாளிணைக்கே யான்போற்றி. 2.
கன்னிவனத்து நாதனே, சிவபெருமானே! சோற்றுக் கவலையே பெருங்கவலை, அந்தக் கவலை இல்லாத இடம் எனக்குக் கிடைக்காதா, தங்கம் தங்கம் என்று பொன்னின் நினைவாக இருக்கும் நினைவு அகன்று அது போன இடம் தெரியாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பூலோக வாழ்க்கையின் நிறை குறைகளில் ஈடுபட்ட இவ்வுலக விசாரம் தொலைந்து போன இடம் எனக்குக் கிடைக்காதா. இழிநிலையாம் மகளிரொடு கூடிவாழும் வாழ்க்கை நிலை இல்லாத வெற்றிடம் எனக்குக் கிடைக்காதா. பிறரது சுகவாழ்க்கை, நல்வாழ்க்கை இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இரங்குகின்ற நிலை மாறி சமமான பார்வை எனக்குக் கிடைக்காதா. சொற்களால் வியந்து போற்ற முடியாத வெற்றிடமும் கிட்டாதோ. வாக்கு, மனம் இவற்றுக்கு அப்பாற்பட்ட இடத்துக்கு எனை செலுத்துவீர் ஐயனே! நினது திருத்தாள் இணையடி போற்றுகின்றேன்.
(முதல்வன் முறையீடு நிறைவு பெற்றது)