சு.ரவி

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : சு. ரவி

அவன்வே தங்கள் மீட்டுக் கொடுக்க ஆழ்கடல் தோன்றிய ஒருமத்ஸ்யம்
அவனே பாற்கடல் கடையும் நேரம் வடவரை தாங்கிய ஒருகூர்மம்!
அவனே ஏனம், எனவடி வங்கள் பலவாய் எடுத்துத் தோன்றிடினும்
அவதா ரத்தின் பரிணா மத்தில் அற்புத வடிவம் நரசிம்மம்

 
விரிவெளி எங்கும் வியனுல கெங்கும் விரவிப்பரவிய தொருவடிவம்!
எரியழல், நீர்,நிலம்,காற்றென எங்கும் எல்லாப் பொருளிலும் அது உறையும்!
சிறிதொரு துகளிலும், அணுவிலும் அணுவின் கருவிலும் கூட அது நிறையும்!
இரணியன் பிள்ளை சொல்லிய சொல்லைச் சத்தியமாக்கும் நரசிம்மம்!

 
யுகங்கள், கணங்கள் ஒடுங்கும் கலங்கும் உள்ளே சீயம் கர்ஜிக்கும்
அகமும், புறமும், அவனே என்னும் அடியார் அன்பில் அதுசிக்கும்!
நகங்கள் படாமல், பக்தனை நாவால் நக்கிக் கொடுக்கும் நரசிம்மம்!
அழகிய சிங்கம் துளஸி தரிக்கும், அபயமளிக்கும், துயர்நீக்கும்

 
அழகிய வடிவினள் திருமக ளைத்தன் மடியிலிருத்தும், மகிழ்விக்கும்
கழலிணை பணிவோர், அறவழி மறவோர், அடியவர் வாழ்வின் கலிதீர்க்கும்
பழவினை யெல்லாம் பானகமாக்கித் தாகம் தணிக்கும் நரசிம்மம்!

போக்கும், வரவும் புரியும் வரையில் புதிராய்த்தோன்றும் இவ்வாழ்வும்!
யாக்கைக் குள்ளே யார்? இது செல்லும் யாத்திரை எங்கே போய்ச்சேரும்?
கேட்கும் மனமே! கேள்விகள் எல்லாம் விடைபெறும் ஒருநாள்! அதுமட்டும்
வாக்கில் பிறக்கும் கவிதைக் குள்ளே வார்த்தை பிளக்கும் நரசிம்மம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *