-செண்பக ஜெகதீசன்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.  
(திருக்குறள்- 550: செங்கோன்மை)

புதுக் கவிதையில்…

வயலில் பயிர் வளர,
வளரவிடாது அழித்திடல் வேண்டும்
இடையில் வளரும் களையை…

இதுபோன்றதுதான்
குற்றம்மிகு கொடியவரை
அரசு
தண்டித்து அழிப்பதும்!

குறும்பாவில்…

கொடியவரைத் தண்டித்து
வயலில் களைபோல் அழிப்பது
அரசின் கடமை!

மரபுக் கவிதையில்…

வயலில் வளரும் பயிரோடு
வீணாய் வளரும் களையதையே
தயவு கொஞ்சமும் காட்டாமல்
தனியே பிடுங்கி அழித்திடுதல்,
பயனது ஏது மில்லாத
பாவச் செயலுக் கஞ்சாத
பயமிகு கொலைஞரை ஒறுத்தழிக்கும்
பணிசெயும் அரசுக் கொப்பாமே!

லிமரைக்கூ…

கொடியவரை ஒறுத்தரசு பறித்திடும் உயிர்!
களையை அழித்தால்தான்
செழிப்பாய் வளரும்பார் வயலிலே பயிர்!

கிராமிய பாணியில்…

வெள்ளாம வெள்ளாம
வெவரமான வெள்ளாம…

வயலுலதான் பயிர்வளரும்
கூடவேதான் களவளரும்…

களபறிச்சி ஒதுக்குனாத்தான்
பயிர்வளரும் பலன்குடுக்கும்,
கொறயில்லாம பலன்குடுக்கும்!

இதுபோலத்தான்,
அரசாங்கமும் செய்யவேணும்!
அடக்கிடணும் அடக்கிடணும்
கொடுமகள அடக்கிடணும்!
அழிச்சிடணும் அழிச்சிடணும்
கொடியவர அழிச்சிடணும்!

இதுவுந்தான்,
வெள்ளாம வெள்ளாம
வெவரமான வெள்ளாம!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *