Tag: எஸ்.வி. வேணுகோபாலன்

  • அன்பின் பதாகைகள்……

    எஸ் வி வேணுகோபாலன்

    images (1)

    கொஞ்சம் நுங்கு
    ஒரு தேக்கரண்டி கடல்
    ஒரு விரற்கடை வானம்
    ஒரே ஒரு கிள்ளு மலை
    இரண்டே இரண்டு பூக்கள்
    போதும் என்றது இயற்கை…
    பறவைகள் தயாரித்து அருளின
    குழந்தைமையை உலகுக்கு

    உப்பும் மிளகுப்பொடியும்
    மேசையில் காத்திருக்க
    முள்ளுக் கரண்டிகளோடு
    தயாராகிறது பெரியவர்கள் சமூகம்
    மின் சூடேற்றியில்
    வெப்பமூட்டி பரிமாறப்பட இருக்கும்
    குறும்புத்தனங்களைக்
    கொத்திப் புரட்டி மென்று தின்ன!

    முன்னாள் குழந்தைகளுக்கும்
    வருங்காலக் குழந்தைகளுக்கும் இடையே
    போராடிக் கொண்டிருக்கின்றனர்
    இந்நாள் குழந்தைகள்

    கல்லடி படும் சிறகுகளோடும்
    பிய்த்தெடுக்கப் படும் தோகையோடும்
    உலுக்கி எடுக்கப்படும் பிடரி முடிகளோடும்
    புறக்கணிக்கப்படும் கொஞ்சு மொழியோடும்
    நம்மைக் கடந்து போகின்றனர்
    குழந்தைகள்

    மதிப்பெண் காயங்களில் அன்பு பூசவும்
    வகுப்பறை வன்முறையின் சூட்டைத் தணிக்கவும்
    கவனிக்கப்பட ஏங்கும் விழிகளில் முத்தமிடவும்
    அத்துமீறல்களில் கலங்கிய உள்ளங்களைத் தேற்றவும்
    மெல்லிதயங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்
    குழந்தைகள்….

    கொண்டாட்டங்களில் இன்னும்
    நம்பிக்கையோடு உலவும் அவர்களது உலகில்
    பறக்கவிடுவோம் அன்பின் பதாகைகளை….

    நன்றி ; தமிழ் இந்து

    Share
  • அதிர்ச்சியூட்டும் தீர்ப்பும் திடுக்கிட வைக்கும் கருத்துக்களும்

    எஸ் வி வேணுகோபாலன்

    ஒரே மாதத்தில் இரண்டு வழக்குகளில் எதிரெதிர் தீர்ப்புகளை வழங்கியுள்ளது தில்லி உயர்நீதி மன்றம். இரண்டுமே மேல் முறையீட்டு வழக்குகள். இரண்டுமே பாலியல் வன்முறை தொடர்பானவை. ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண், மூன்று வயது சிறுமி. மற்றொன்றில், 65 வயது பெண்மணி. இரண்டிலுமே விசாரணை நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்து அதற்கு நேர்மாறாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் இவை. ஒன்றில் குற்றவாளியை விடுவித்திருந்தது விசாரணை நீதிமன்றம். அவனைத் தண்டித்திருக்கிறது உயர் நீதி மன்றம். மற்றதில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளியை இப்போது குற்றச் சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டு விட்டது உயர்நீதி மன்றம்.

    மூன்று வயது குழந்தை விஷயத்தில் விசாரணை நீதிமன்றம் அந்தச் சிறுமியை குறுக்கு விசாரணை செய்வதில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அவளால் கோவையாக பதில் சொல்ல முடியவில்லை என்பதை வைத்துத் தீர்மானித்த விதத்தையும் உயர்நீதி மன்றம் கடுமையாகச் சாடி இருக்கிறது. தற்போது 5 வயதாகி, இன்னமும் தனக்கு நேர்ந்த குரூர பாலியல் தாக்குதலுக்குப் பின்னான அறுவை சிகிச்சைகள் மேலும் தொடர வேண்டிய நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையை உயர்நீதி மன்றம் நேரில் வரக் கூட தேவையில்லை என்று நியாயமாகச் சொல்லியிருக்கிறது. கணவனால் புறக்கணிக்கப் பட்ட 25 வயது பெண்ணின் மகளுக்குத் தான் இந்த பாலியல் கொடுமை நேர்ந்திருக்கிறது. அன்றாடம் ரூ 200 ஈட்டி எப்படியாவது குழந்தையை வளர்த்தெடுக்கக் கடுமையாக உழைக்கும் அந்த இளம் தாய்க்கு இப்போது கிடைத்திருக்கும் நீதி ஆறுதல் வழங்கி இருக்கிறது.

    தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கயவனை இந்தக் குழந்தை அடையாளம் காட்டியது, காட்டுப் புதரிலிருந்து அவன் துணிமணிகளை அடையாள படுத்தியது எல்லாம் நடந்தும், விசாரணை நீதிமன்றம், “நீ பொய்தானே சொல்கிறாய்?” என்ற குறுக்கு விசாரணை கேள்வியை அனுமதித்திருக்கிறது. அப்போது தாய், சான்றாதாரங்களைப் பாருங்களேன் என்று சொன்னபோது, நீ குறுக்கே பேசாதே என்று அவரை எச்சரித்திருக்கிறது. இதை மேல்முறையீட்டுக்கு எடுத்துக் கொண்ட தில்லி உயர்நீதி மன்றம் குற்றவாளியை இப்போது தண்டித்திருக்கிறது. விசாரணை நீதிமன்றத்தின் தலையில் குட்டியிருக்கிறது.

    ஆனால், இதே உயர்நீதி மன்றத்தில் அக்டோபர் 31ம் தேதி வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

    65 வயது பெண்மணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் அவரைக் கொலை செய்ததான வழக்கில், குற்றவாளி அச்சே லால் என்பவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உயர்நீதி மன்றம் புரட்டிப் போட்டு விட்டது.

    2010ம் ஆண்டு தனது இல்லத்தில் இறந்து கிடந்த இந்தப் பெண்மணியை நேரடியாகப் பார்த்த ஒரு சாட்சி காவல்துறைக்கு தகவல் கொடுத்தபோது வீட்டினுள் இருந்த குற்றவாளி அச்சே லால் பிடிபட்டான். பிரேத பரிசோதனையில் அந்தப் பெண்மணி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் பட்டிருந்தது தெரியவந்தது. இந்த அடிப்படையில் இரண்டு குற்றங்களுக்குமான தண்டனையை விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்தது.

    அச்சே லால் தரப்பில் மேல்முறையீடு செய்து வாதாடியவர்கள் முன்வைத்த வாதங்கள் மிகவும் வீச்சாக இருந்ததாகச் சொன்ன உயர்நீதி மன்ற நீதிபதிகள் பிரதீப் நந்திரஜோக் மற்றும் முக்தா குப்தா இருவரும் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பவை மிகவும் அதிர்ச்சி தரத் தக்கவை.

    ‘இறந்த பெண்மணியின் பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், மூர்க்கமான முறையில் பாலுறவு நடந்ததை உறுதி செய்தாலும், அந்தப் பெண் அதை எதிர்த்துப் போராடியதற்கான சான்றாக வேறு எந்தக் காயங்களும் அவர் உடலில் காணப்படவில்லை. மறைந்த பெண்மணி, மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றுவிட்ட வயதைக் கடந்துவிட்டவர். எனவே, அவர் இந்தச் செய்கையை எதிர்த்ததாகச் சொன்னாலும் அதைப் பாலியல் வல்லுறவு (‘ரேப்’) என்று கருத முடியாது. அதனால் அச்சே லால் பாலியல் பலாத்காரம் செய்ததான குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

    பாலுறவு நிகழ்கையில் அச்சே லால் மட்டுமின்றி, அந்தப் பெண்மணியும் மது அருந்தி இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் மூர்க்கமான பாலுறவில் அச்சே லால் ஈடுபட்டதன் காரணமாக, அந்தப் பெண்மணி உட்கொண்டிருந்த உணவு (புரைக்கேறி) மூச்சுக் குழலில் அடைப்பு ஏற்படுத்தியதன் காரணமாக அவர் மரணமடைந்திருக்கலாம் என்று மருத்துவ பரிசோதனை அறிக்கை சொல்கிறது. என்றாலும், தனது பாலியல் செய்கையால் மரணம் நேரக்கூடும் என்ற உடலியல் அறிவு அச்சே லாலுக்கு இருந்திருக்கவில்லை. கொலை செய்வது அவரது நோக்கமும் இல்லை. எனவே கொலைக் குற்றச் சாட்டையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.’

    உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றம் வழங்கி இருந்த நியாயமான தீர்ப்பை இப்படி மாற்றி இருப்பது மிகப் பெரிய நெருடுதலை ஏற்படுத்துகிறது.

    மறைந்த பெண்மணி, அண்டை அயலில் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்தவர். கீழ்த்தட்டு மக்களது வாழ்க்கை முறை, நடத்தை குறித்து மேல்தட்டு சிந்தனைகள் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திக்கும். பெரிய அநியாயம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை, அவள் முடிவை அவளே தேடிக் கொண்டாள் என்பது மாதிரியான சிந்தனையைத் தான் இந்தத் தீர்ப்பின் வாசகங்கள் பிரதிபலிக்கிறதோ என்று அச்சம் ஏற்படுகிறது.

    பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து பாலியல் பலாத்காரத்தை முடிவு செய்யக் கூடாது என்பது ஏற்கெனவே திருத்தம் செய்யப்பட விஷயம். மீண்டும் அதன்மீது சார்ந்து பார்க்கப்படுவது துரதிருஷ்டமானது. மாதவிடாய் சுழற்சி முற்றுப் பெற்றது (மெனோபாஸ்) என்கிற அம்சம் எதற்காக பேசப்படுகிறது என்பது கேள்வியை எழுப்புகிறது. அப்படியானால், பூப்பெய்தாத பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் செய்தவர்கள் தாங்களும் குற்றவாளிகள் அல்ல என்று வாதாட இடம் கொடுப்பதாகாதா அந்த விவாதம்?

    தனது தரப்பில் நடந்து என்ன என்று பேச முடியாமல் மரித்துப் போய்விட்ட அந்தப் பெண்மணிக்கு இறப்பின் பிறகும் நிகழும் அவமதிப்பு ஆகிவிடாதா இந்தக் கண்ணோட்டம்?

    குற்றமற்றவர் எவரையும் விடுவிப்பதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால் குற்றம் செய்தவர் அந்த இடத்திலேயே பிடிபட்டபின்னும், அவர் இழைத்த கொடுமைகள் உறுதி செய்யப்பட பின்னும், அவர் செய்தவை குற்றங்களாகாது என்று சொல்லப்பட்டிருக்கும் தீர்ப்பு ஏராளமான கேள்விகளையும், கவலையையும் எழுப்புகிறது.

    பெண் குழந்தைகளது பாதுகாப்பு சம காலத்தில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து நிற்கும் நிலையில், இந்த வழக்கைத் தனிப்பட்ட ஒன்றாகப் பார்க்க முடியாது. இதன் முடிவிலிருந்து சமூகத்திற்கு என்ன செய்தி சென்று சேர்க்கிறது என்பது மிகவும் முக்கியமானது. பள்ளிகளில், பொதுவிடத்தில் பெண் குழந்தைகள் குறித்த பதட்டம் கூடியுள்ள காலம் இது. வீடுகளில் வயதான பெண்மணிகள் தனியே காலம் கழிக்க நேரும் காலமும் இது. குற்றங்களைக் குறைக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எத்தனை முக்கியமோ, அதே அளவு முக்கியம், குற்றம் இழைத்தவருக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்வது.

    அந்த நோக்கில் சிந்திக்கையில், இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பெண்ணுடல் குறித்த பார்வை சமூகத்தில் என்னவாயிருக்கிறது என்பதை வலிக்க வலிக்க மீண்டும் அறியவைக்கிறது.

    ****************
    நன்றி: தீக்கதிர்: 07 11 2014

    Share
  • எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைந்தார்

    எஸ் வி வேணுகோபாலன்.

     

    ராஜம் கிருஷ்ணன் அவர்கள் முகத்தைக் கடைசியாகப் பார்க்கச் சென்றேன்…

    rajam_krishnan_photo_bbc_courtesy

    மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

    மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில்தான் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது பிரிவு நிகழ்ந்தபோது, மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் மிகவும் நொறுங்கிப் போயிருக்கிறார். அத்தனை நெகிழ்ச்சியான அன்பு வளையத்திற்குள் தமது இறுதிக் காலத்தை நிறைவு செய்து மறைந்திருக்கிறார் ராஜம்.

    நேற்று இரவு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, எட்டு மணிக்குப் போய்ச் சேர்ந்தபோது, அற்புத மனுஷி அவர்களது முகத்தைக் கடைசியாகப் பார்க்க இயலும் என்ற நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்துவிட்டிருந்தது.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா தெ முத்து அவர்கள் நேற்று பிற்பகல் சொல்லியிருந்தார், புற நோயாளிகள் பிரிவில் தலைமை மருத்துவர் மல்லிகேசன் அவர்களைச் சந்தித்தால், ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய உதவுவார் என்று. புறப்படுமுன் தீக்கதிர் தோழர் கவாஸ்கர் அவர்களிடம் கேட்டபோது, ஜி பிளாக் செல்லவும் என்று அவரும் அலைபேசியில் வழிகாட்டி இருந்தார்.

    நான் சென்ற சமயம், புறநோயாளிகள் பகுதியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு இருந்தன. நேரம் கடந்துவிட்டிருந்தது. ஜி பிளாக்கின் மையப் பகுதியில் எனக்கு உடனே சென்று கேட்க தோன்றிய இடம், செவிலியர் அறை. அங்கேதான் அந்த நேயமிக்க செவிலியர் ஜெயஸ்ரீ அவர்களைச் சந்தித்தேன். மிகச் சுருக்கமாக எனது வேண்டுகோளை நான்கு சொற்களில் தெரிவித்தேன். ஹாலில் அமர்ந்திருங்கள், சார் கிட்ட பேசிவிட்டு சொல்றோம் என்றார்.

    நான் வந்து உட்கார்ந்த அடுத்த நிமிடத்தில் அவர் என்னை நோக்கி நடந்துவந்தபோது நான் அந்த நொடியின் நூற்றில் ஒரு பங்கு அளவிற்குள் குழப்பத்தில் தவித்தேன். ஆனால், அவர், “வாங்க போய்ப் பார்க்கலாம், சார் பர்மிஷன் கொடுத்திட்டாங்க” என்றார்.

    அந்தப் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒரு திருப்பத்திற்குப் பிறகு சிறிய நடை நடந்தால் மார்ச்சுவரி பகுதி வருகிறது. அந்த கால, இட இடைவெளிக்குள் எனக்குத் தெரிந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களது ஆளுமை குறித்து அவரோடு பகிர்ந்து கொண்டே நடந்தேன். நாளை அல்லது மறுநாள் வந்தாலும் வேறு யாரும் பார்க்க முடியுமா என்று கேட்டேன்…உறவினர், தெரிந்தவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் காலை ஒன்பது மணிக்குமேல் மாலை 5 அல்லது 6 மணிக்குமுன் வந்தால் நிச்சயம் மல்லிகேசன் சாரை சந்தித்தாலே போதும், உடனே அனுமதி கிடைத்துவிடும். சென்று பார்க்கலாம் என்றார் ஜெயஸ்ரீ. இன்னும் மூன்று மாதங்கள் வரை உடலை ஆராய்ச்சிக்குக் கொடுக்குமுன் பார்க்கலாம் என்றும் சொன்னார்.

    ‘மேஸ்திரி கிட்ட சொல்லி இருக்கோம், அவர்தான் வந்து காண்பிக்கவேண்டும், கொஞ்சம் உள்ளே காத்திருங்கள்’ என்று வேறோர் அறையைத் திறந்து உட்காரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களுக்குள் திருப்பால் வந்துவிட்டார்.

    பிறகு குளிர்பதனம் செய்யப்பட்டிருந்த அறைக்குள், பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த உடல்கள் இருந்த ஓர் இழுவறைக்குள் புத்தம்புதிதாகச் சூட்டப்பட்டிருந்த பெரிய மலர்மாலையை அணிந்தவண்ணம் ராஜம் கிருஷ்ணன் உடலைப் பார்த்தேன்…மிகப் பெரும் வரலாறு ஒன்றை அந்தச் சிறு பெட்டி தன்னுள் எப்படி வாங்கி வைத்திருக்கிறது என்று ஒரு கணம் பார்க்கையில் சற்று மனம் நெகிழ்ந்துபோனேன்.

    உப்பளம் தொழிலாளர் கதையை எழுதிய எழுத்தாளர், பாரதியை அப்படியே உள்வாங்கிக் கொண்டாடிய பெண்மணி, விவசாயிகள் எழுச்சியை, சாதாரண மக்கள் வாழ்க்கையை வாசக பெருந்திரளுக்குப் படைத்த மகத்தான எளிய மனுஷி உறக்கத்தில் இருப்பதுபோல் ஒரு பட்டுச் சொப்புக் குழந்தை போல் தெரிந்தார் அந்த இழுவறையில். நான் தலையசைத்ததும் அந்த இழுவறை மூடப்பட்டது. ஒரு சிறிய தீப்பெட்டியை மூடியதும், அப்பாவி போல தீக்குச்சிகள் உள்ளே மறைந்துவிடுவது மாதிரி அந்தப் பேருடல் அந்த அறைக்குள் ஒளிந்து கொண்டு கண்ணகன்றது.

    தாளமாட்டாத உணர்வுகளின் விளிம்பில், திருப்பால் அவர்களது கைகளில் என் கண்களைப் பொத்திக் கொண்டு கொஞ்சம் மீள நினைத்தேன். இரு கரம் கூப்பி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்…இந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என்றேன். ஒரு குழந்தையைப் போலத்தான் எல்லோரையும் பார்த்துக் கொள்கிறோம் சார் என்றார் ஜெயஸ்ரீ.

    மருத்துவர் எஸ் மல்லிகேசன் அவர்கள் எப்படி நேரப்படி உணவு, மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்து கொண்டே இருப்பார், முக்கிய தினங்களில் தமது இல்லத்திலிருந்து உணவு எடுத்துக் கொண்டுவந்து ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு உண்ணக் கொடுப்பார், முந்தைய இரவு இப்படி நேரும் என்று எதிர்பாராது கலங்கிப் போனார் என்பதை அறிந்து மேலும் நெகிழ்ந்தேன்….

    ராஜம் கிருஷ்ணன் மிக உயர்ந்த மனிதர் என்றேன்….” நான் அந்த அம்மாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறேன் சார்” என்றார் திருப்பால்.

    தனது எழுத்துக்களைக் கூட நாட்டுடைமை ஆக்கிவிடவேண்டும் என்று எப்போதோ வேண்டுகோள் வைத்தவர் என்றேன்…

    “ஆமாம் சார், ஒரு பேப்பர் பேனா போதும் அவங்களுக்கு, எழுதிக் கொண்டே இருப்பாங்க எதையோ” என்றார் திருப்பால். பாட்டி, பாட்டி என்று கொண்டாடி இருக்கின்றனர் ஊழியர்கள் அவரை. மிகச் சாதாரண உழைப்பாளி மக்களுக்காத் தான் எழுதினர் அவர் என்றேன் நான். இன்னும் யாராவது வருவாங்களா சார் என்று திருப்பால் கேட்டார். வாய்ப்பில்லை என்றேன். நாளைக்குக் கூட வரலாம் சார். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் வரை பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

    இருவருக்கும் மீண்டும் வணக்கமும், நன்றியும் தெரிவித்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினேன். எனக்கு முன்பாக இரவு நீண்டிருந்தது நடைபாதையில். ஆனாலும், மருத்துவமனையின் அறைகளில் இருந்து வெளிச்சம் சிந்திக் கொண்டுதான் இருந்தது….மருத்துவமனை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்த ஓர் இளம்பெண் எதிரே டார்ச் விளக்கு ஒன்றை ஏந்தியபடி கடந்து சென்றார் என்னை.

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/10/141021_rajamkrishnan

    Share
  • தமிழ்த் திரை இசை: சுவையடர்ந்த பெருங்காடு

    எஸ் வி வேணுகோபாலன்.

    Sound Record

    திரைப்படப் பாடலிலேயே முழு கதையைச் சொல்வது இங்கே தான் இருக்கிறது…என்று ஒரு முறை கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அவர் உலகப் படங்களோடு தமிழ்ப் படங்களை மட்டும் ஒப்பிட்டாரா, பொதுவாக இந்திய மொழிப் படங்களைப் பற்றிய கருத்தா அது என்று தெரியவில்லை. அடுத்தது, திரைப்படங்களில் பாடலுக்கு என்ன தேவை என்பது. அப்படியானால் பாடல் என்ற ஒன்று எப்படி உள்ளே புகுந்தது என்பது மூன்றாவது கேள்வி. திரைப்படப் பாடலைச் சுற்றி இன்னும் இப்படி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது எப்படி என்பது நான்காவது அம்சம்.

    பாடல்கள் நமது பிறப்பிலிருந்து நம்மைத் தொடர்கின்றன. சொல்லப் போனால் தாயின் கருவறையில் இருக்கும்போதிலிருந்தே! பிறகு அவை இறுதி வரை தொடர்கின்றன என்பது முக்கியமானது. களிப்புற்று வாழும் ஒரு மன நிலை பாடல்களில் சிறக்கிறது. இந்தக் களிப்பு ஆனந்தக் களிப்பாகவும் இருக்கலாம். துயரத்தின் பெருக்காகவும் இருக்கலாம். இன்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, துன்பத்தின் பிரதிபலிப்பாகவும் கூட இசை மனிதர்களது உள்ளத்திலிருந்து புறப்படுகிறது. இது பண்பாட்டின் அசைவன்றி வேறென்ன ?

    மன்னன் பரிசு கொடுப்பான் என்றெண்ணி அவனை இந்திரன், சந்திரன் என்று பாடுகிற புலவர்கள், அந்த மடையன் யாதொன்றும் வழங்காது வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும் போது அவனை வசைபாடியும் கவிதை பாடிவிட்டுத் தான் அடுத்த வேலைக்குப் போயிருக்கின்றனர்.

    ‘அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியைக் காணட்டும்,’ என்பது கவியரசு கண்ணதாசனின் மிகவும் பிரபலமான கவிதை….உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து அவர் எழுதியது அது. பெரிய மனிதனாக வளர்ந்து அடையப் போகும் துன்பங்கள் இன்னதின்னதென்று வரிசையாகச் சொல்லிச் சென்று, அதனால் அவன் இப்போதாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என்று முடித்திருந்தார் அவர். ஆனால் சில நாட்கள் கழித்து ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தை மரித்துப் போனபோது அவர் மிகவும் அதிர்ந்து போய்விட்டார்…..’அறம் பாடி விட்டேனோ, அறியேன் யான், சிறுகுருவி, திறம் பாட மாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று மீண்டும் ஒரு கவிதை எழுதினார்.

    கவிதையும், பாடலும், பழமொழிகளும் இசையோடு இசைந்த – இயைந்த வாழ்க்கையாக நமது பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்புகள் திரைப்படங்களிலும் வெளிப்படுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பேசும் படம் வரத் தொடங்கிய காலத்தில் பாடல்களும் சேர்ந்தே வரத் தொடங்கிவிட்டன. பாடல்களுக்கிடையில் கொஞ்சம் வசனம் என்று சொல்லும் அளவுக்கு மிக அதிகமாகப் பாடல்கள் இடம் பெற்ற படங்களும், பாடலே இல்லாத படம் என்ற அறிவிப்போடு வந்த மிகச் சில படங்களுமாக திரைப்பட வரலாறு இருக்கிறது. இன்னார் பாடல் எழுதியது, இவர் இசையமைத்தது, இவர்கள் பாடியது என்று சொல்லத் தக்க அளவில் விளம்பரப் படுத்தப் பட்டு வெற்றியடைந்த படங்கள் பலவுண்டு. பாடல்கள் திரைபப்டத்தின் முக்கிய அங்கமாகி நிலைத்துவிட்டன என்று தான் தோன்றுகிறது.

    ஒரு படத்திற்கான திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டு, யார் யார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தேர்வும் முடிவானபிறகு பெரும்பாலும் முதல் கட்ட வேலையாக நடைபெறுவது பாடல் பதிவு தான். கடந்த பல ஆண்டுகளாக, இசை வெளியீடு என்பது தான் ஒரு திரைப்படம் குறித்த முதல் பேச்சாக ரசிகர் மத்தியில் வந்து இறங்குகிறது. அதற்குமுன்பாகவே, பாடல் ஒலிப்பதிவுடன் தொடக்கம் என்ற விளம்பரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு படத்தின் பாடல்கள் ‘ஹிட்’ ஆவது திரைப்பட வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகப் பார்க்கப் படுகிறது. படம் வெளியாகும்போது திருட்டு சி டி வெளியாவது எத்தனை வேதனையோடு பார்க்கப் படுகிறதோ, அதே போல் பாடல் வெளியீடு நடக்குமுன், இணையதளத்தில் பாடல்கள் வெளியாவதும் அதிர்ச்சி அளித்துவிடுகிறது. மிக அண்மையில் கூட இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பாடல்கள் வகிக்கும் இடம் மிக மிக நுட்பமானதாகிறது.

    tmsஒரு படத்திற்கு மொத்தம் எத்தனை பாடல்கள் தேவைப்படுகின்றன என்பதை இயக்குனர் கலந்தாலோசித்து பாடல்களுக்கான ‘சிச்சுவேஷன்’ எத்தனை என்று முடிவெடுக்கிறார். பிறகு மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ இசை அமைப்பாளரின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. (நீங்கள் மெட்டுக்குப் பாட்டு எழுதுகிறீர்களா, பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி கேட்டபோது, கவிஞர் வாலி சொன்னார், நான் துட்டுக்குத் தான் பாட்டு எழுதுகிறேன் !). இயக்குனர் கூறும் சிச்சுவேஷனை மனத்தில் நிறுத்தி இசையமைப்பாளர் தத்தகாரத்தில் (தான தன தந்தன தானா தானே தானா…என்பது மாதிரி) ஒவ்வொரு பாடலுக்கும் மெட்டு போட்டு முடித்ததும், கவிஞர் நுழைகிறார்.

    கால ஓட்டத்தின் வேகத்தோடு ஒத்திசைவான சொற்களும், கற்பனையும், இசை இன்பமும் சேரும் போது அந்தப் பாடல் புகழ் பெறுகிறது. நிலைத்து விடுகிறது. இதற்கான உழைப்பு, நேரம், அர்ப்பணிப்பு, அனுபவம், ஆற்றல், வாய்ப்புகள் இவை எல்லாம் சிறப்பாக அமையும்போது பிறக்கும் பாடல்கள் என்றென்றும் பேசப்படுகின்றன…பாடப் படுகின்றன.

    டைட்டில் போடும்போதே இசை துள்ளும் பாடல் ஒன்று சுழலத் தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் ஒவ்வொரு தேவையின் அடிப்படையில் இடம் பெறுகின்றன. கோப்பையில் ஊற்றும் தண்ணீர் வழிந்து ஓடுவது போல, தேவைக்கு அதிகமாகவும் சில நேரம் ததும்புகின்றன. உணர்ச்சிப் பாடல்கள், காதல் கீதங்கள், உருக்கமான வரிகள், சிந்தனை தூண்டும் உருவகங்கள் என பாடல்கள் பலவிதமாகப் புனையப்படுகின்றன.

    தொடக்க காலத்தில் மரபு இலக்கணத்திற்குட்பட்ட செய்யுளாக, கவிதைகளாக இசைக்கப்பட்ட பாடல்கள் காலப் போக்கில் வெவ்வேறு திசைவழி புறப்பட்டுப் பாய்ந்து செல்லத் தொடங்கிவிட்டன. பல்லவி, சரணங்கள் என்று படியமைக்கப்படும் இந்தப் பாடல்கள் சுத்த கர்நாடக ராக வடிவில் இசைப்பதும் உண்டு, அல்லது மெல்லிசை என்று சொல்லப்படும் வகையில் சற்றே தளர்த்திய இலக்கணங்களோடு பாடல்கள் தயாராவதுமுண்டு. வெவ்வேறு வகைப் பண்களின் வடிவிலும் திரை இசைப் பாடல்கள் எழுதி இசையமைக்கப் பட்டிருக்கின்றன.

    எத்தனை ஆயிரம் பாடல்கள்…எத்தனை எத்தனை இனிய குரல்கள்…என்னென்ன புதுப்புது சங்கதிகள்…..எவ்வளவு விதவிதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள்….தமிழ்த் திரைப் பட வரலாற்றில் பாடல்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.

    அழகியல் பாடல்கள்:
    இயற்கை வருணனை, அழகின் ஆராதனை மட்டுமல்ல, பக்தி வெளிப்பாட்டிலும், உறவுகள் ரசனையிலும் கூட அருமையான அழகியல் கவிதைகள் மின்னுவதைப் பல பாடல்களில் பார்க்க முடியும். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் ), இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்), கல்லிலே கலை வண்ணம் கண்டான் (குமுதம்), மதுரையில் பறந்த மீன் கொடியை (பூவா தலையா), அன்பு நடமாடும் கலைக்கூடமே (அவன் தான் மனிதன்), உலகம் பிறந்தது எனக்காக (பாசம்)….என்று போகிறது இந்தப் பட்டியல்.

    காதல் பாடல்களில் அழகின் ரசனையை வெளிப்படுத்தும் அருமையான வரிகளை பல கவிஞர்கள் படைத்திருக்கின்றனர். நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (நேற்று இன்று நாளை- புலமைப் பித்தன் ) என்ற பாடலில், சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து என்று தொடங்கும் முதல் சரணத்திலிருந்து, வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து என்று வரும் கடைசி சரணம் வரை சிறப்பான வருணனைகள். இந்திரா படத்தில் இடம் பெற்ற நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே என்ற பாடல் (வைரமுத்து) உள்பட வித்தியாசமான வகையில் எழுதப் பட்ட பல பாடல்கள் உண்டு.

    தத்துவப் பாடல்கள்:
    வாழ்வே மாயம் என்று எழுதினால் தான் தத்துவப் பாடல் என்ற சாதாரண புரிதல் பெரும்பான்மை ரசிகர்களிடம் நிலவுகிறது. வாழ்வியலைக் குறித்த பல்வேறு பார்வைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவம் என்பது புரியாதவர்கள், எதுவும் நிலைக்காது என்று எழுதிவிட்டால் அதுதான் தத்துவம் என்றும் அதுவே உலக வாழ்வின் ரகசியம் என்றும் எடுத்துக் கொள்கின்றனர். கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் என்றால், கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் (வானம்பாடி), ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன் தான் மனிதன்), ஆறு மனமே ஆறு (ஆண்டவன் கட்டளை), இரண்டு மனம் வேண்டும் (வசந்த மாளிகை), இது மாலை நேரத்து மயக்கம் (தரிசனம்), நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் (நெஞ்சில் ஓர் ஆலயம்)….என்று ஒரு நீள் வரிசை உண்டு. இப்படியே வாலி (கரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி, உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா – சிம்லா ஸ்பெஷல், ஒன்ன நெனச்சு பாட்டு படிச்சேன் – அபூர்வ சகோதரர்கள்), புலமைப்பித்தன் (நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில்), என பலரது பாடல்களைக் கூற முடியும்.

    வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் பாடல்கள், மாற்றத்தைச் சொல்லும் பாடல்கள் ஆகியவை வந்தாலும் அவற்றை தத்துவப் பாடல்களாகக் கருதாத போக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பல பிரபல பாடல்கள் தத்துவப் பாடல்கள் தானே….சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, திருடாதே பாப்பா திருடாதே போன்றவை இதில் அடங்கும். மகாகவியின் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே கவிதை, பாரதி திரைப்படத்தில் ஹரீஷ் ராகவேந்தர் குரலில் மிகவும் அருமையாக ஒலிக்கிறது. மாயாவாத சிந்தனைக்கு எதிரான கவிதை அது.

    உருக்கமான பாடல்கள்:
    காலம் கடந்து நிற்கும் பல திரைப்பாடல்கள் இந்தப் பட்டியலில் தான் அதிகம் உண்டு. காதல் தோல்வி, நண்பனின் துரோகம், பிரிவாற்றாமை, ஏமாற்றம் போன்ற பல நிலைமைக்கு ஏற்றபடி எழுதப்படும் பாடல்கள் கேட்பவரை உருக வைக்கின்றன. இசையின் நெகிழ்ச்சியான தன்மையும், பாடல் வரிகளின் பொருத்தமான வரிகளும் உள்ளத்தை உருக வைத்துவிடுகின்றன.

    ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள் ) பாடல் டி எம் சவுந்திரராஜன் குரலின் வசீகர உருக்கத்தோடு, அதன் தொடக்க ராக ஆலாபனையிலிருந்து படிப்படியாக உருக்கத்தின் உயர் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட்டு நிறைவடைகிறது. பால் போலவே, வான் மீதிலே என்ற தொகையறாவில் தொடங்கும் (உயர்ந்த மனிதன் – வாலி) எழுதியிருக்கும் நாளை இந்த வேளை பார்த்து…என்ற பாடல் பி சுசீலா குரலில் கேட்பவரை உலுக்கி எடுக்கும். கண்ணதாசனின் கடைசி திரைப்பாடல் என்று சொல்லப்படும் கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு), வாடாத ரோசாப்பு (கிராமத்து அத்தியாயம்), உனக்கென இருப்பேன்…(காதல்), உருகுதே மருகுதே (வெயில்) (பாடல்கள் இரண்டுமே நா முத்துக்குமார் ), போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா -வைரமுத்து), என அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணர்வுகளின் உருக்கத்தைக் கொட்டி கொடுக்கும் பாடல்கள் பலவும் உண்டு.

    டி எம் சவுந்திரராஜன் (கற்பனைக்கு மேனி தந்து, ஏட்டில் எழுதி வைத்தேன்), பி பி ஸ்ரீநிவாஸ் (மௌனமே பார்வையால், மயக்கமா கலக்கமா, யார் சிரித்தால் என்ன…), எஸ் பி பாலசுப்பிரமணியம் (மஞ்சம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா, உச்சி வகிந்தெடுத்து, காதல் ரோஜாவே ), வாணி ஜெயராம் (மணமகளே உன் மணவறை கோலம்), சித்ரா (நானொரு சிந்து, கண்ணாளனே), ஹரிஹரன் (விடுகதையா, உயிரே, கல்லை மட்டும் கண்டால்), ஷங்கர மகாதேவன் (சந்தன தென்றலை ), சொர்ணலதா (போறாளே பொன்னுத்தாயி, நீ எங்கே )….என அந்த நாளைய பாடகர்களிலிருந்து இந்த காலத்தின் பாடகர்கள் வரை நெகிழ்ச்சியுறும் பாடல்களை இசைக்கவே செய்திருக்கின்றனர்.

    உனது மலர் கொடியிலே, எனது மலர் மடியிலே (பாத காணிக்கை) என்று, பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி இருவரின் குரல்கள் பெண் மனத்தின் பாடுகளை எடுத்து வைக்கும் பாடல் ஒலித்தால் யார்தான் உருக மாட்டார்! காதோடு தான் நான் பாடுவேன் என்ற (வெள்ளிவிழா) பாடல் எல் ஆர் ஈஸ்வரியின் முத்திரை பாடல் அல்லவா…

    வஞ்சிக்கோட்டை வாலிபன்ஆட வைக்கிற பாடல்கள்:
    பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் (கண்ணன் என் காதலன்) பாடல்களுக்கு தமிழில் பஞ்சமில்லை. தாளக்கட்டு தொடங்கும்போதே தலையை ஆட்டவும், மடியில் உள்ளங்கையைப் புரட்டிப் போடவும், உடலே குலுங்கிக் குலுங்கி எழுந்து நின்று ஆடவும் வைக்கும் பாடல்கள் எண்ணிக்கைக்குள் அடங்குமா!

    இன்று வந்த இந்த மயக்கம் (காசேதான் கடவுளடா) பாடலின் இசை தொடங்கும்போதே அது நடனப் பாட்டு என்று தெரிந்துவிடாதா…யாரடி நீ மோகினி (உத்தம புத்திரன்), கண்ணும் கண்ணும் கலந்து (வஞ்சிக்கோட்டை வாலிபன்), ஆடாத மனமும் உண்டோ (மன்னாதி மன்னன்), ஓம் நமசிவாயா (சலங்கை ஒலி ), வெள்ளிச் சலங்கைகள் (காதல் ஓவியம்), மனம் விரும்புதே உன்னை (நேருக்கு நேர்), கண்ணாளனே (பம்பாய்)… என்று எத்தனை எத்தனை கவிஞர்களின் படைப்பில், இசை அமைப்பாளர்களின் உழைப்பில், பாடகர்களின் குரல் நர்த்தனத்தில் எத்தனை எத்தனை அற்புதப் பாடல்கள்.

    நகைச்சுவை பாடல்கள்:
    நையாண்டி, கேலி, எள்ளல், நகைச்சுவைக்கும் தமிழ்த் திரை கொண்டாட்டமான பாடல்களை வழங்கியிருக்கிறது. கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு அள்ள அள்ளக் குறையாத இன்பங்களை விளைவிக்கும் நகைச்சுவை ரசனைப் பாடல்களை நமக்குத் தந்து சென்றிருக்கின்றனர்.

    காதல்வயப் பட்ட பெண்ணைப் பார்த்த மோகத்தில் அவளைக் கண்ணே, தங்கமே, தேனே ….என்றெல்லாம் வருணித்து அவள் அதைக் கண்டுகொண்டும் அறியாதவள் மாதிரி வம்புக்கிழுக்கவும் சமாளிப்பது மாதிரி பாடிச் செல்லும் ‘கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா (அம்பிகாபதி) பாடல், ஆஹா ஆஹா இன்றும் என்றும் என்றென்றும் துள்ளாட்டம் போட்டுக் கேட்க வைப்பது ஆயிற்றே. ஒவ்வொன்றாய்த் தப்பி வரும் என் எஸ் கே, கடைசியில் டி ஏ மதுரத்திடம் சிக்கிக் கொள்ளும் இடம் சிருங்கார நகைச்சுவை:

    மொகரையைப் பாரு
    ஐயய்யோ மொகரையைப் பாரா? மொகரையைப் பாரு, ஆஹா மொகரையைப் பாரு, ஓஹோ மொகரையைப் பாரு, மொக மொகமொ மொகரைய சரி போ சரி
    இந்தாங்கையா, இனிமே ஒண்ணும் மாத்த முடியாது. சத்தியமா சொல்லுங்க, இப்போ தேனேன்னு என்னத் தானே சொன்னீங்க?
    ஹங் ஹஹ ஒன்ன இல்லம்மா, எனக்கு ஒடம்பு சரியில்லே, வைத்தியர் ஒரு பஸ்பம் கொடுத்திருக்காரு, அதைக் கொழச்சு சாப்பிடருதுக்குத் தேன் வேணும்
    அது சரி, எதிரிலிருந்தும் தொடப் பயந்தேனேன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமாம்?
    எதிரிலே இருக்கு தொட முடியல்லே.
    என்னது?
    இங்கே இல்லே, தோட்டத்துலே ஒரு மரத்திலே, உச்சியிலே இருக்கு தேன் கூடு , அது தொடப்போனா அடிக்குமோ, இல்லே கொட்டுமோ அப்படீன்னு பயமாயிருக்கு.
    ஹஹங் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்னா மூளை என்னா மூளை

    சந்திரபாபு பட்டியலில், பொறந்தாலும் ஆம்பளையா தொடங்கி எத்தனை எத்தனை பாடல்கள்! நாகேஷ் குரலுக்கான நகைச்சுவை பாடல் பட்டியலும் குபு குபு நான் எஞ்சின் (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என்று விரிவது. விஸ்வநாதன் வேலை வேண்டும் (காதலிக்க நேரமில்லை), அடுத்தாத்து அம்புஜத்த (எதிர் நீச்சல்), என்று எப்போதும் கேட்டு ரசிக்க பாடல்கள் உண்டு.

    சகோதரத்துவ பாடல்கள்:
    எந்த மதம் சார்ந்த அன்பருக்கும் எந்த மதம் என்ற பாகுபாடு தோன்றாத வண்ணம் எத்தனை எத்தனை மதுர கீதங்களைத் தமிழ் திரை இசை அளித்திருக்கிறது! எல்லோரும் கொண்டாடுவோம் (பாவ மன்னிப்பு), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே (மூன்று தெய்வங்கள்) என விரிகிற வானவில் அது. கடவுளைக் கேள்வி கேட்கும் பாடல்கள் அதிகம் தோன்றவில்லை என்றாலும், இயற்கையைப் பாடும் பல பாடல்களின் எதிரொலியில் சில அறிவார்ந்த கேள்விகளை எழுப்பவே செய்திருக்கின்றன.

    musicசமூகத் திருவிழாக்கள் ஒவ்வொன்றுக்கும் பாடல் உண்டு. தை பொங்கலு பொங்கலு (மகாநதி), உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி (கல்யாணப் பரிசு) என்கிற வரிசையிலும் ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினத்துக்கும் ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல் என்றொரு சாதி என்ற பாடல் உண்டு. லாட்டரி பற்றியும் விட்டு வைக்காத தமிழ்த் திரைப் பாடல்கள், சைக்கிள் ஓட்டவும், கார் கற்கவும், ஓட்டப் பந்தயத்துக்கும், கபடி கபடி விளையாட்டுக்கும்…. எல்லாவற்றுக்கும் பாடல்களைத் தந்திருக்கிறது.
    எந்த மன நிலையிலும் கேட்க:
    கதையோட்டத்தினோடு எழுதப்படும் பாடல்கள் அந்தந்தச் சூழலில் இசைக்கும் ராகம், எந்த மன நிலையிலும் கேட்கவும் அல்லது அந்தந்த மன நிலைக்கு ஏற்பவும் அமைகின்றன. இப்படியோர் தாலாட்டு பாடவா (அவர்கள்) என்று கேட்கும் தமிழ்த் திரைப்பாடல் உலகம், மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் (கண் சிவந்தால் மண் சிவக்கும்) என்று புரட்சி பேசவும் செய்கிறது. கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்) என மென்காதலை இயம்புகிறது. சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா (டவுன்பஸ்) என்று தாபத்தோடு கேட்கிறது. கண்ணிலே இருப்பதென்ன (அம்பிகாபதி) என வித்தியாசமான குரலில் கொஞ்சிப் பேசுகிறது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வரும் யாரையும் ஏமாற்றாத ரசனைகளின் காட்டாறு அது. சிலிர்க்க வைக்கும் மலையருவி அது. கலைகளின் விரிந்த வானம் அது. சுவையடர்ந்த பெருங்காடு அது.

    நன்றி:தீக்கதிர் தீபாவளி மலர்: 2014

    Share
  • உலகக் கை கழுவும் நாள் சிந்தனைகள்……

    உலகக் கை கை கழுவுதல் நாள்: அக்டோபர் 15

     

     

    கழுவுதலும் நழுவுதலும்

    எஸ் வி வேணுகோபாலன்

    GHD10.0_1280
    நாளிதழ் ஒன்றில், அக்டோபர் 15, உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப் படுகிறது என்று வாசித்ததும் எனக்கு பல்வேறு விஷயங்கள் ஒரு சேர ஒரே நேரத்தில் நினைவுக்குத் தட்டுப்பட்டன. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக கை, கால்கள், முகம் எல்லாம் கழுவிக் கொண்டபிறகு தான் அடுத்த வேலை பார்ப்பது, உணவு உட்கொள்ளுமுன் கைகளைக் கழுவுவது போன்றவை பண்பாட்டின் கூறுகள். வேலைகளின் தன்மை, வாழ்க்கை முறை, நாகரீக அடையாளமாகத் தவறாகப் பழகிக் கொண்டது அல்லது பழக்கத்தைக் கை விட்டது போன்ற பல காரணங்களால் இவை மாறிவிட்டன. நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இப்போது, உலக அளவில் ஒரு கூட்டம் போட்டு, ‘யெப்பா, திருந்துங்கடா சாமிகளா, கும்பலோட காணாம போயிரப் போறோம்… கைகளைக் கழுவிட்டு சாப்பிட போங்கடா என் ராசா…” என்று அறைகூவல் விட வேண்டி வந்திருக்கிறது.

    போகட்டும், என் பயம் அது மட்டுமல்ல….கை கழுவுதல் என்றால் நாம் புரிந்து வைத்திருப்பதே வேறு ஆயிற்றே…பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பட்டிக்காடு பிடிக்காமல் கோபித்துக் கொண்டு பட்டணம் போய்விட்ட மனைவியைத் திருப்பி அழைத்து வர முயற்சி எடுத்து தோற்றுப் போய் வீடு திரும்பி இருப்பார். அப்பத்தாள் கேட்பாள், மூக்கையா, போன காரியம் என்ன ஆச்சு என்று. நம்ம நடிகர் திலகம் பதில் சொல்ல மாட்டார். அந்த நாட்களில் சிம்பாலிக் ஷாட் என்று சொல்லப்படும் காட்சி ரீதியாக உணர வைக்கும் உத்தி மிகவும் பிரசித்தம். சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் கைகளைக் கழுவிக் கொள்வார். பின்னணியில் எம் எஸ் வி கொடுக்கிற இசை அதிர்ச்சியும், கிழவியின் முக பாவமும் ரசிகர்களையும் சேர்த்து அழ வைத்துவிடும்.

    INDA2009-00384

    இப்படி கை கழுவும் வருத்தமும், பொறுப்பிலிருந்து நழுவும் கை கழுவுதலும்தான் எனக்கு இப்போது உள்ளே புகுந்து வாட்டி எடுத்துக் கொண்டிருப்பது. இந்தப் பட்டியல் உண்மையில் மிகப் பெரியது.

    நவீன தாராளமய கொள்கை வந்தவுடன், வர்த்தகம் தொடர்பான கவலைகள், மேற்பார்வை, கேள்விக்கு உட்படுத்துதல் இவையெல்லாம் அரசாங்கத்தின் வேலையே இல்லை என்று ஆட்சியாளர்கள் கை கழுவத் துடித்தனர். அப்புறம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் பலவும் கை கழுவி விடப்பட்டன. அவ்வளவு ஏன், கல்வி, சுகாதாரம் எதுவுமே என் பொறுப்பில்லை என்று அரசாங்கங்கள் இப்போதும் கை கழுவித் தான் நாடாளுமன்றத்திலேயே பேசுகின்றன.

    அடுத்த கட்சியின் ஊழல்களை நீட்டி முழக்குகிற கட்சிகள் பலவும் தாங்கள் அதிலிருந்து விடுபட்டு ஊழலைக் கை கழுவ மறுக்கின்றன. ஜனநாயகத்திற்கான குரலை ஓயாது பேசும் அவர்கள், தங்களுக்கென்று வரும்போது அந்த சிந்தனையைக் கை கழுவி விட்டுப் பேசுகின்றனர்.

    சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடி வருகிறது எதனால்? சாலை விதிகளைக் கூசாமல் கை கழுவும் மனிதர்களால்தான்! தாங்கள் பார்க்கும் வேலையில் கவனத்தை, முன்னெச்சரிக்கையை, பாதுகாப்பைக் கை கழுவும் ஒவ்வொருவரும் தவிர்க்கக் கூடிய இழப்புகளுக்குப் பொறுப்பாகின்றனர்.

    பள்ளிக்கூடங்களில், வீடுகளில் தங்களது பொறுப்பைக் கை கழுவும் யாரும் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பறிக கொடுப்பதாகவே கருத முடியும். மாணவர்கள், இளைஞர்கள் திசை தவறிப் போவதும், மனம் நொறுங்கிப் போவதும் கணக்கிட முடியாத சோகக் கதைகளை உருவாக்குகின்றன. குடும்பங்களின் ஒத்திசைவு கூட, இருவரில் ஒருவர் தமது வேலைப் பங்கீட்டைக் கை கழுவும் போது எத்தனையோ சிக்கல்கள் தோன்றுகின்றன.

    நியாயம், நீதி, நேர்மை கை கழுவப்படும் சமூகத்தில் எல்லா அறங்களும் தலை குனிந்து நடக்கின்றன. இயற்கை வளங்களைக் கை கழுவி விலை பேசும் உலுத்தர்கள் தேச பக்தி பற்றி பாடம் நடத்தும் அராஜகம் சகிக்க முடியாதது.

    வாசிப்பைக் கை கழுவுவோர், புதிய வாழ்வியல் அனுபவங்களை மறுத்துககொள்வதாகவே தோன்றுகிறது. சக மனிதர்களிடம் பேசாது சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருப்பதான பாவனையில் சந்திப்புகளின் தருணங்களைக் கை கழுவுவோர் எத்தனையோ இன்பங்களை நழுவ விடவே செய்கின்றனர்.

    தண்ணீர் என்பதே ஓர் அரிய பொருளாக மாற்றப் பட்டுவரும் உலகில், கை கழுவதைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை விலை குறைத்து விற்பதாலேயே யாரும் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத் தான் நடக்கும் என சொல்லிக் கொண்டிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.

    உலகக் கை கழுவும் நாள் இருக்கட்டும், கொஞ்சம் ஏமாந்தால் உலகையே கை கழுவி விட்டுப் போக ஏகாதிபத்திய சிந்தனையோட்டம் துடிப்பதையும் மறந்துவிடக் கூடாது. உலக அளவில் ஏற்றத் தாழ்வுகளையும், நாடுகளிடையே பரஸ்பரம் மோதல்களையும் தூண்டிவிட்டு அமைதியைக் குலைத்து வருவது அவர்களது பங்களிப்புதான்.

    கை கழுவுதல் என்பது தூய்மை குறித்தது. புறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர், அகத் தூய்மை குறித்தும் அறிவுறுத்தி இருக்கிறார். சாதிய, மதவாத அழுக்குகளும், சுயநலமும் மண்டிக் கிடக்கும் உள்ளங்களைக் கழுவும் நாள் எப்போது ?

    *********************
    நன்றி: தீக்கதிர் (அக்டோபர் 15, 2014)

    Share
  • அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கட்டும்

    — எஸ். வி. வேணுகோபாலன்.
    tiny tots

    வையம்பட்டி முத்துசாமி என்னும் ஓர் அற்புதக் கவிஞரின்,
    ‘பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
    பத்து மாதமா போராட்டம்,  இதுவும்
    பொண்ணாப் பொறந்தா கொன்னுப்புடுவேன்னு
    புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’

    எனும்  பாடல் நெஞ்சைப் பிழிந்தெடுக்கும். அந்தப் பாடலின் இறுதியில் வருவதுபோலவே, இன்றும் ‘பொண்ணாப் பிறந்தா’, அரளியை அரைப்பதும், உமியை நுணுக்குவதும், கண்களை மூடிக் கொண்டு பெற்ற குழந்தைக்கே அதைப் பாலாகக் கொடுப்பதும் நடக்கத்தான் செய்கிறது.

    மிகவும் படித்த உயர் நடுத்தர வர்க்க ஆண்களிடையேகூட இன்றும் பலர், பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கிக் கொண்டாட விரும்புவதில்லை. பிரசவ காலத்து உடல் நிலை, உளவியல் தன்மை எதையும் பற்றிக் கவலையின்றி அப்போதும் பெண் பிள்ளை பெற்றவளைக் கரித்துக் கொட்டும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்டால், ‘ஆமாம் பெயர் வைக்கிறாங்க..’ என்று அலுத்துக் கொள்வோரும் உண்டு.

    நவீன கண்டுபிடிப்புக் கருவியை வைத்து பழமையான கண்ணோட்டத்தோடு பெண் சிசுவை பிறக்க விடாது செய்வதும் இன்றைக்கும் தொடரவே செய்கிறது. தப்பித் தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து, மறைய வேண்டியிருக்கிறது. உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள்….என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே   மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்றுதான் வளர்கிறாள்.

    இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! நாகரிக உலகத்திற்கு இப்படி ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டி இருப்பது அதன் பெருமையா, பெருந்தன்மையா, துயரமான உண்மை நிலவரங்களுடைய அபாய அறிவிப்பின் வசீகர வடிவமா தெரியாது.
    ‘தினங்களைக் கொண்டாடுவதை விட்டுக்
    குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?’
    என குழந்தைகள் தினம் குறித்த சாட்டையடி கவிதை வழங்கினார் அப்துல் ரகுமான். இப்போது அதைவிடவும் கவன ஈர்ப்பான தினமாக மலர்கிறது உலக பெண் குழந்தை தினம்.

    பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அக்கறையில் ஐக்கிய நாடுகள் அவை 2011ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012 முதலாவது சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப் பட்டது. இதோ இந்த ஆண்டின் பெண் குழந்தைகள் தினம் உதிக்கிறது. 18 வயது நிறைவதற்குமுன் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படும் பெண் குழந்தைகள் குறித்து – ஆமாம் அவர்கள் குழந்தைகள்தான்! – மிகப் பெரிய கவலையை உலகம் கவனிக்க வேண்டி இருக்கிறது. உலக நாடுகளில் இதிலும் நமது நாட்டுக்கு முதலிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சதவீதக் கணக்கு குறைந்து வருகிறது என்றாலும், நிம்மதி பெருமூச்சு விடும் அளவு குறையவில்லை. வல்லரசு பற்றி பிளந்து கட்டும் மேதாவிகளுக்கு இந்த மாதிரி செய்திகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

    ஐந்து வயதில் மணமுடிக்கப்பட்டு ஆறரை வயதிற்குள் கணவனை இழந்து பிறகு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து(!) மறைந்த ஒரு மூதாட்டி எங்கள் குடும்பத்திலேயே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வாழ்க்கைப்பட்ட இடம் (ஊர்) சுமங்கலி, ஆனாலும் நான் அமங்கலி’ என்று பட்டம்மாள் என்ற பட்டா சித்தி சொல்லிக் கொண்டிருந்ததை இன்றும் என் தந்தை வேதனையோடு நினைவுகூர்வதுண்டு.

    பால்ய விவாகம் நடத்த உகந்த தினமாகக் கருதப்படும் நாள்தான் அட்சய திருதியை. அதைத்தான் இப்போது தங்கம் வாங்கும் திருவிழா நாளாக உருமாற்றி விட்டனர் தாராளமய காலத்தில் எல்லாவற்றையும் விற்கத் தெரிந்திருப்பவர்கள். அட்சய திருதியை தினத்தன்று குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போய்க் குரல் கொடுத்து நிறுத்த முயன்ற பல பெண்கள், சமூகப் போராளிகள் கடுமையாகத் தாக்கப்படும் நிகழ்வுகளை ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பதில்லை.  அதற்கெல்லாம் யார் டி ஆர் பி ரேட்டிங் போடுவார்கள் என்பதாக இருக்கக் கூடும்.

    இளவயது திருமணம் மோசமானது. பக்குவமான உடலும், உளவியலும் அமையுமுன் மணவாழ்க்கைக்கு விரட்டப்படுவது கொடுமை. அதைவிடவும் கொடிய விஷயம், பெண் குழந்தைகளை வெறி பிடித்த  ஆண்கள் தங்களது காம இச்சைக்கு உட்படுத்தும் அராஜகம். கடந்த வாரம் கூட பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் பாலியல் வக்கிரம் புரிந்த மனிதனைப் பற்றிய செய்தி வந்திருந்தது. வீட்டுக்குள்ளேயே, சுற்றுப் புறத்திற்குள்ளேயே, நெருங்கிய உறவினரிடையே,  ஏன், பெற்ற தகப்பனிடமிருந்துகூட இத்தகைய அச்சுறுத்தலை பெண் குழந்தைகள் பலரும் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளுக்குப் பொறுப்பையும், பழியையும் அவர்களது உடையணியும் முறை, நவீன பாணி பழகும் தன்மை என்று எதன்மீதாவது போட்டுவிட்டு யாரும் தப்பிக்க முடியாத புகார்கள் கணக்கற்றவை.

    சக மனிதரிடம் மோசமாக நடப்பதற்கு முதற்காரணத்தை பாதிக்கப்பட்டவரிடம் தேடுவதை விடுத்து, அந்தச் செயலைச் செய்தவரிடமிருந்து எப்போது நாம் தேடத் தொடங்கப் போகிறோம்? நினைத்த நாடுகள் மீதெல்லாம் குண்டுபோட்டுத் தாக்கிவிட்டு அவற்றின் நடத்தை பற்றிப் பேசும் வல்லரசு நாடுகளின் ஆதிக்க மன நிலைதானே பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளும் ஆண்கள் மனத்திலும், சமூக பொது புத்தியிலும் நிறைந்திருக்கிறது?

    கேளிக்கையின் சாலை வழியெங்கும் பெண்களை எப்படியும் பார்க்க, ரசிக்க, மலினப்படுத்த உள்நெஞ்சில் பொங்கி வழியும் ஆர்வத்தை, உயிரியல் வேட்கையை விடாது தூண்டிக் கொண்டிருக்கிறது நவீன சந்தை பொருளாதாரம். அதன்வழி சிந்தனையைப் போக்குபவர்களுக்கு பெண்கள் உடலியல் ரீதியாக எப்போதும் தங்களுக்கானவர்கள் என்ற வெறி மிகுந்து விடுகிறது. பெண்களுக்கும் அவஸ்தைகள் உண்டு, வலியும் வேதனையும் மிகுந்த நாட்கள் உண்டு, சோர்வாகக்  கடக்க நேரும் பருவமொன்று உண்டு என்பதெல்லாம் சராசரி ஆண்மனத்தில் பதிவாவதில்லை. மண வாழ்க்கையிலும், பொதுவெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விதைகள் அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஊன்றப் படுகின்றன.

    உலகப் பெண் குழந்தை தினம் இவற்றுக்கு நேரெதிராக ஆரோக்கியமான பார்வையை முன்வைக்கத் துடிக்கிறது. இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடக் கேட்கிறது. சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலை பழகிக் கொள்ள அறைகூவல் விடுக்கிறது.  பெண்மையை புனிதப் படுத்துவதாகச் சொல்லி கீழ்மைப் படுத்திய காலங்களுக்கு விடை கொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.

    *****************
    நன்றி: தமிழ் இந்து (அக்டோர் 12, 2014)

    Share
  • “மழைப்பாறை” நாவலை முன்வைத்து

    எஸ்.வி.வேணுகோபாலன்

    வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை உறையச் செய்துவிடும். சில திரைப்படங்கள் உங்களை நாட்கணக்கில் தூங்கவிடாது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து விடுபட எத்தனையோ அடுத்தடுத்த நிகழ்வுகள், வேறு வேறு கேளிக்கைகள், புதிய நூல் அனுபவங்கள் என்று தப்பி வெளியேறிவிட முடியும். காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக உதறித் தள்ள முடியாத அடையாளங்களோடு பிறந்து வாழ நேர்கிற மனிதர்கள் அவற்றிலிருந்து எப்படி விடுபட?

    unnamedமற்ற நூல்களைப்போல் அத்தனை இலகுவாய்க் கடந்துவிடாத பக்கங்களை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. நூலின் கட்டமைப்பு முக்கிய காரணம். அதைவிட முக்கியமான அம்சம், நான் அதிகம் அறிந்திராத இனக்குழுவைச் சார்ந்த மக்களது வாழ்க்கைதான் கதைக்களம். ‘சலவான்‘ நாவலால் அறியப்பட்டிருக்கும் பாண்டியக்கண்ணனின் இரண்டாவது நாவலான “மழைப்பாறை” பல கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

    குறவர் என்றால் பொதுவான புரிதல் நரிக்குறவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 28 வகைக் குறவர்கள் உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தங்களது வாழிடத்தையும், தங்களது வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்த குறவர்கள் வனப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்குப் பெயர்ந்து பல்வேறு தொழில்களால் தங்களது பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்க, அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரை அடையாளம், தீண்டாமை, சாதிய இழிவு உள்ளிட்டவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளின் ஓர் ஆவேசத் தீற்றலாக வந்திருக்கிறது  “மழைப்பாறை” என்று கொள்ள முடி யும்.

    நாவல் முன்னும் பின்னுமாக காலக் கணக்கைப் புரட்டிப் போட்டபடி கதையை மொழிகிறது. ஆய்வாளர் இளைஞர் சிவகுமார் இந்த நாவலில் காலம் கலைத்துப் போடப்பட்டிருக்கிறது என்று நேர்த்தியாக வருணித்திருந்தார். கந்தன் பள்ளிக் கூடம் செல்லும் சிறுவனாகக் காலையில் கண் விழிக்கும் இடத்தில் தொடங்குகிறது கதை. இடையே கந்தன் நிகழ்காலத்தில் நடுத்தர வயதினராகப் பேசப்படுபவராகவும் இருக்கிறார். கதை கந்தனுக்கு முந்தைய தலைமுறையோடும், கந்தனோடும், கந்தனுக்குப் பல தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கையின் சாட்சியமான நாட்டார் தெய்வத்தோடும் ஒரு சேர நடை நடந்து காட்டுகிறது. இன வரைவியலின் உட்கூறுகள் போலும், ஓர் இனக்குழுவின் பண்பாட்டுச் சுவடு களாலும் எழுப்பப்படும் இந்தக் கதை, வரலாற்றில் பதிவாகாமலே போய்விட்ட தீனக் கதறல்கள், ஆதிக்கத்தின் வன்ம சேட்டைகள் உள்ளிட்டவற்றை மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரிலிருந்தும், அணையாத நெருப்புக் கங்குகளிலிருந்தும் தேடி எடுத்து முன்வைக்கிறது.

    கதை என்று தொடர்ச்சியாக எதையும் தொடங்கி வைத்து, வளரக் காட்டி, முடித்து வைக்கும் வகைப்பட்ட நாவல் இல்லை “மழைப்பாறை. ” ‘எங்களது வாழ்க்கை இன்னது’ என்று கைப்பற்றி இழுத்து இதயத் துடிப்பை நேரடியாக உணரவைப்பது போல் சொல்லும் வகையிலானது.

    படிக்கும் ஆர்வமும், துடிப்பும், திறமையுமுள்ள கந்தனை அவனது வறிய குடும்பச் சூழலும், கீழ்மைப்படுத்தப்பட்டிருக்கும் சமூகப் பின்புலமும் அங்கீகரமற்றவனாக நிறுத்துவதோடு, மிக இயல்பான ஒன்றாக அவன் மோசமாக நடத்தப்படுவதில் வெளிப்படுகிறது. தேர்வு எழுதப் போகும் அவன், விடைத்தாள் வாங்கக் காசில்லாமல், கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையிலிருக்கும் தாயை நாடி ஓடுவதையும், சுத்தம் செய்த கைகளாலேயே காசையும், சோறையும் பெற்றுக் கொள்ளவேண்டிய அவளது அவலத்தையும் நாவல் முன்னிறுத்துகிறது. இத்தனைப் பாடுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் நுழையும் அவனிடம் தேர்வு எழுதும் தகுதியை எதிர்பாராத ஆசிரியர் உலகம் பள்ளியில் அவனையே கழிப்பறை சுத்தம் செய்ய வைப்பதை மிக தன்னியல்பாக நிகழ்த்துகிறது.

    ஒரு சூழ்நிலையில் ஊரைவிட்டு வெளியேறி திருட்டு ரயிலேறிச் செல்லும் போதும், டிக்கெட் பரிசோதகருக்குத் தப்பி ஓடி ஒளிய கந்தனுக்குக் கழிப்பறைதான் கிடைக்கிறது. இடையே எங்கோ இறங்கி வயிற்றுப்பசிக்குச் சோறு கேட்கும் இடத்தில், யாரோ செய்த களவுக்கு இவனைப் பிடித்துப் போகும் காவல்துறை இவன் சாதிப் பெயரைக் கேட்டதுமே முடிவுக்கு வந்துவிடுகிறது இவன்தான் திருடன் என்று.

    இயற்கையின் இயல்பான மலர்தலாக நிகழும் பூப்பெய்தும் பருவம், குறவர் இனப் பெண்களின் வாழ்வில் தீயின் தீண்டுதலாக நிகழ்தலின் காலத்தை நாவல் வெவ்வேறு பெண்களின் கதை வழியாக ஆதிக்க சாதி வாலிபர்களின் காம வெறியை அவர்கள் எதிர்கொண்டதை பதைபதைக்கப் பேசுகிறது. ஊருக்குப் புறத்தே குடிலில் இராப்பொழுதில் சடங்கு சம்பிரதாயமாகத் தங்கவைக்கப் படுகையில் வல்லுறவுக்கு ஆட்படும் பெண், சீமெண்ணெய் விளக்கு தவறி விழுந்து குடிசை பற்றி எரிந்த விபத்தில் சிக்கியதாக அடுத்த நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரித்துப் போகும் கடந்த காலத்தின் கதையை, நிகழ்காலத்திலும் மருத்துவமனையில் பார்க்கிறார் கந்தன்.

    கந்தன் தனது உயிராகக் கருதியிருந்த அக்கா லட்சுமியின் திருமணம், நூறு கிலோ இறைச்சி கொண்ட ஆண் பன்றியை (சலவான்) ஆயுதமின்றி விரட்டிப் பிடித்துக் கொன்று தூக்கி வந்து முறைப்படி தகுதி நிரூபிக்கும் முத்துப் பாண்டியுடன் நிகழ்கிறது. அந்தப் போராட்டம் அத்தனை நேரடி விவரிப்பாக அமைகிறது. சடங்குகள், சம்பிரதாயங் கள் குறித்த விவரிப்புகள் ஒரு புறம் முழுமையாக இடம் பெறும் நாவலில், அவற்றிலிருந்து மாறுபட்டு நடக்க முயற்சி மேற்கொள்ளும் கந்தனையும் காட்டுகிறது. குறிப்பாக தமது மகள் பூப்பெய்தும் பொழுதில் பாரம்பரிய சடங்குகளைச் செய்யாது பார்த்துக் கொள்கிறார் அவர்.

    கந்தன் குடும்பத்தோடு குலதெய்வ பூஜைக்குப் புறப்படும் பயணத்தினூடே அவரது இளமைக் காலக் காதலும், சாகசமும், அதன் சோக முடிவும் சாதிய பொருளடக்கத்தோடு வந்து போகிறது. ஆனாலும் தமக்கு மேல் கட்டுமானத்தில் இருக்கும் சாதிப் பெண்ணோடு ஒரு சூழலின் நிமித்தம் நடைபெறும் திரு மணத்தின் பதற்றக் காட்சிகளும் பின்னோக்கி அழைத்துச் சென்று சொல்லப்படுகின்றன.

    சாதி கடந்து நீதியோடு நடந்து கொள்ளும் மனிதர்களும், அப்படியான நேரங்களும் – காவல் நிலையத்திலும் கூட, நாவலில் இடம் பெறவே செய்கின் றன. ஆனால் சாதியின் முடிச்சு எத்தனை இறுக்கமானது என்பது கந்தனை அவன் திறமை பாராட்டப்பட்டபோதும் ஊர் நாடகக் குழுவில் நடிக்க விடாது சாதுரி யமாக கழித்துக்கட்டும் விதத்தில் உரத்துச் சொல்லப்படுகிறது.

    சந்தனம் – கூடம்மாள் தம்பதியினரே கந்தன் குடும்பத்தின் பல தலைமுறைக்கு முந்தைய சாதியக் கொடுமையால் பழி வாங்கப்பட்ட அடையாளம். ஆடையுருவி அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் கூடம்மாளின் வெஞ்சினம் கண்ணகி கதைபோலவே ஊரைத் தண்டிக்கிறது. வல்லுறவுக்கு அலைந்த ஆதிக்க சாதியினரை அவர்களது காமத்தின் எதிர்முனையிலிருந்து விரட்டி விரட்டித் திண்டாட வைத்துத் திணறடிக்கிறது. ஓய்ந்துபோய் மண்டியிட்டுப் புலம்பி மன்றாடி மன்னிப்பு கேட்கும் ஜமீன் சார்ந்த மக்களைக் கொண்டே தனக்கு சிலை வடிக்க வைத்து மறைந்து போகிறாள் கூடம்மாள்.

    அந்தக் கோயிலில் வந்து நின்று கந்தன் குடும்பம் கும்பிடுமிடத்தில் நாவல் முற்றுப் பெறுகிறது. கூடம்மாளை தண்டித்துத் தீர்ப்புச் சொல்லும் பாலியல் வக்கிரமான ஜமீன் பாத்திரமும் கூட, அவளது சினத்தால் அலைந்தழியும் ஊராரின் வெறிக்குத் தப்ப முடியாத இடத்தைப் பேசுகையில் அவர் அலியாக மாறினார் என்ற விவரிப்பு கேள்விக்குள்ளாகிறது. சொந்த வாழ்வனுபவத்தை முடிந்தவரை பதிவு செய்யும் வேட்கை ஆசிரியருக்கு இருந்திருக்கலாமோ என்று சில இடங்களில் தோன்றியது. காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதப்படும் ஒரு நாவலை மிக எளிதாக நகர்த்தி வாசிக்க முடியாதது போலவே, அது ஏற்படுத்தும் மன அதிர்வு களைக் கடப்பதும் எளிதானதன்று. அடுத்த நாவலுக்கான முயற்சியில் இறங்கும் நம்பிக்கை பாண்டியக் கண்ணனுக்கு அதுவே ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.

    ************

    நன்றி: இலக்கிய சோலை: தீக்கதிர் (செப் 22, 2014)

    காயங்களை யார் அறிவார்?

    குறப்புத்தி’ என்கிறீர்கள். ‘குறப்பய மாதிரி முழிக்கிறான்’ என குழந்தையைக் கொஞ்சுகிறீர்கள். ‘குறவன் புத்தி சும்மா இருக்குமா?’ என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறிவீர்களா?” – 
    தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம்.
    பாரதி தம்பி எழுதிய கட்டுரையிலிருந்து –

    நன்றி: ஆனந்த விகடன் (17 11 2010)

    Share
  • காலங்களைக் கடந்து ஒலிக்கும் குரல்………….

    எஸ் வி வேணுகோபாலன்

    bhara

    ‘எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி…’ என்று கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களது குரலில் ஓர் அழகு இசைப் பாடலை எண்பதுகளில்தான் முதன்முதல் கேட்டு கிறுகிறுத்துப் போனேன். பாரதி குறித்து யார் எழுதினாலும், பேசினாலும், பகிர்ந்து கொண்டாலும் எப்போதும் மெய் சிலிர்க்கும்வண்ணம் அவரில் தோய்ந்து இன்புறும் கணக்கற்ற இதயங்களில் இதை வாசிக்கும் உங்களுடையதும் ஒன்றாக இருக்கக் கூடும்.

    தேடல் மிகுந்த இளமையின் வேகம், சமூகத்தில் ஏதோ ஒழுங்கு தவறி இருக்கிறது என்பதான அவஸ்தை, எதையும் அர்ப்பணித்தாவது சக மனிதர்களது விடுதலைக்கு உழைக்கத் தயாரான நெஞ்சுரம், அறிவுக்கும் அனுபவத்துக்கும் எளிமைக்குமன்றி அதிகாரத்திற்குத் தலை வணங்காத தீச்சுடர் துணிச்சல்….இந்த வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினால் நமக்கு கிடைக்கும் ஓவியத்தில் பாரதியை தரிசிக்க முடியும். இல்லை, இல்லை, இவற்றுக்கும் அப்பால் விரிந்த சித்திரம் அவரது.

    அடிமை தேசத்தில், பெரிய தொழில் நுட்பம் வளர்ந்திராத ஒரு காலத்தில், இந்து சனாதன பிராம்மண குடும்பத்தில் பிறந்த ஒருவர் சீர்திருத்தவாதியாக மலர்வதும், போராளியாக உருவெடுப்பதும், மறுமலர்ச்சிக் கவியாகத் திகழ்வதும் காலத்தின் கொடை ! சிந்தனை வீச்சும், சொல்லின் தேர்ச்சியும், மொழி வளமும் கால காலத்திற்குமான அமுதமாகச் சுவைக்கும்வண்ணம் அவரது படைப்பாற்றல் மிளிர்ந்தது. ஏழ்மையின் மடியில் விளைந்த கனிகள் அவரது கவிதைகள். ஆனால் கம்பீரம் குலையாத முகம் இருக்கிறது அவற்றுக்கு. காலனிய அரசின் ஏவல் படைகளால் துரத்தப்பட்ட வாழ்க்கை அவரது. ஆனால் தீர்மானமான குரல் ஒலித்தது அவரது எழுத்துக்களில்.

    அழகியலை விட்டுவிடாத அரசியலை முழங்கின அவரது தேசிய கவிதைகள். பிற்போக்குத் தனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத ஜய பேரிகை கொட்டியது அவரது சமூகப் பார்வை. அனுபவத்தின் வடுவும், அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் தீக்காயமும் மட்டுமல்ல, குழந்தைகளைக் கொண்டாடும் துள்ளாட்டமும், இயற்கையைக் காதலிக்கும் கொண்டாட்டமும் கொஞ்சுகின்றன அவரது கவிதையுலகில்! பாரதி மிக மிக அரிய – வித்தியாசமான – காலத்தே வந்து வாய்த்த வரவு தமிழ் இலக்கியத்திற்கு.

    ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்…’ என்று ஓர் அட்டவணை இருந்தது பாரதியின் அன்றாட வாழ்வுக்கு. இதில், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பது இன்றைக்கும் பொருந்தத் தக்க பிரகடனம். அதுவும் இளைஞர்களுக்கு !

    நம்பிக்கை அற்ற பெருவெளியில் மனிதர்கள் சோர்வுறுகின்றனர். தாக்குதல் அதிகரிக்கும்போது நம்பிக்கையைக் கை நழுவ விடுகின்றனர் மக்கள். எதிர்ப்புணர்ச்சி குறைவான உயிர்கள் எளிதில் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன அல்லது ஆதிக்கத்தின் வன்மைத்தின்முன் சரண் அடைந்து தவிக்கின்றன. இந்திய இராணுவத்தில் இருந்தாலும், மக்களுக்கான அரசியலைக் கை விட முடியாது என்று குரல் கொடுத்த மேஜர் ஜெய்பால் சிங் “நாடு அழைத்தது” என்று பின்னர் தமது சுய சரிதைக்குத் தலைப்பிட்டார்.

    நாடு அழைக்கும் இப்படியான குரலைக் கேட்கும் தகுதியும், உள்ளுணர்வும், ஆர்வமும் மிக்கவர்கள் அந்தக் குரலின்வழி அடியெடுத்து வைக்கின்றனர். தங்களது அனைத்தையும் அந்தக் குரலுக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். அந்தச் செம்மாந்த உணர்வில் அடுத்தடுத்து கடமைகளை முன்னெடுப்பதில் நம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றனர். மகாகவி பாரதியின் செயல்பாடு, படைப்பூக்கம், சமூக வெளிப்பாடு இவற்றின் பின்புலத்தில் அவருக்கும் அப்படியான குரலுக்குச் செவிமடுக்கும் தன்மை இருந்ததை உணரமுடியும்.

    பாரதியின் அரசியல் குரல், தேசத்தின் விடுதலைக்கானது. சமூகக் குரல், பெண்ணடிமை-தீண்டாமை-தனியுடைமைக்கு எதிரானது. எல்லா அறங்களையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் அவரது கவிதைகள் அவரது தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகின்றன. அவரது கட்டுரைகள், கேலி சித்திரங்கள் அனைத்திலும் அவரது நோக்கம் வெளிப்படையாக இருந்தது. தேர்ச்சியான பத்திரிகையாளர் அவர். பள்ளி ஆசிரியராகவும் சில காலம் மதுரையில் பணியாற்றியவர்!

    நமது இன்றைய சமூகம் தாராளமய தத்துவத்தின் ஆட்சிக்குள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மாற்றத்திற்கான சாத்தியங்களை அவரது படைப்புலகம் அள்ளி அள்ளி வழங்கிச் சென்றிருக்கிறது. மக்களுக்கு எதிரான விஷயங்களின்மீது ஆவேசமும், கோபமும் எழும் கவியாக மட்டும் பாடிவிட்டுச் சென்றுவிடவில்லை பாரதி. அதிலிருந்து மீளும் திசை வழி குறித்தும். அவரது தீப்பொறிகள் பறக்கவே செய்கின்றன அவரது தொகுப்பு நெடுக பார்த்துச் செல்ல முடியும்.

    பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது என்றும், அவரை மோதி மிதிக்கவும், முகத்தில் உமிழ்ந்துவிடவும் குழந்தைகளுக்குக் கற்பித்த முதல் ஆசான் பாரதி. ஒடுங்கிப் போகாது எதிர்த்து நிற்கவேண்டும் எனும் வாழ்க்கைப் பாடம் அது. அச்சம் தவிர் என்பது அவரது முதலாவது ஆத்திச் சூடி.

    விளையாட்டுக்கள் மறுக்கப்படும், மறக்கப்படும் இளமைப் பருவமாக இன்று சமூகம் குழந்தைமையைத் தொலைக்கச் சொல்கிறது. படிப்பு போட்டிப் பந்தயமாக மாற்றப் பட்டிருக்கிறது. பணத்தின்வழி சிந்தனை செலுத்தப் படுகிறது. அது எல்லா அன்பையும், அறத்தையும், உறவுகளையும் அறுத்துப் போடுகிறது. ஆனால், குழந்தைகளுக்கான பாரதியின் கவிதை மொழி இன்றைக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டியது. அதுதான் அவர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவ இன்பங்களை மீட்டுத் தரவல்லது.

    சின்னஞ்சிறு குருவி போலே – நீ
    திரிந்து பறந்து வா பாப்பா
    வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
    மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

    என்பது இயற்கையை நேசிக்கவும், இயற்கையோடு இயைந்து வாழவும் போதிக்கிறது அல்லவா! காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கப் படுத்தப் போராட வேண்டாமா நாம்?

    தாய்மொழி வழிக் கல்வி அறவே கீழ்மைப் படுத்தப்படும் இந்த நேரத்தில், வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்ற அவரது அசாத்திய கோபம் நமது கடமையை எத்தனை நேர்த்தியாக நினைவூட்டுகிறது !

    சாதியத்திற்கு எதிரான போர்க்குரலை அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். ‘எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றம் என்றும் கொள்ளலாமோ, சாதிப் பிரிவினைகள் வேண்டாம் அன்பு தன்னில் தழைக்கும் இவ்வையம்’ என்பது எத்தனை அழுத்தம் திருத்தமான பிரகடனம்! மத வேறுபாடுகளை மீறிய நல்லிணக்க சமுதாயம் அவரது வேட்கை. அவரது வாழ்க்கை நடைமுறையாகவும் இருந்தது.

    பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை, குழந்தைகளைக் கூட பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தும் வக்கிரங்கள் கவலை தரத் தக்க அளவில் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்ற அவரது குரலை, அவர் வாழ்ந்த நூற்றாண்டின் சமூக தளத்தில் வைத்துக் கேட்கும்போது சமூகம் கற்க வேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனை! ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற அவரது தெளிவு, இன்றைக்கும் ஏற்க மறுக்கும் ஆணாதிக்க உள்ளங்களுக்கு எதிரான சவுக்கு சொடுக்குதல் என்றே பார்க்கவேண்டும். பலியாகும் பக்கமே பழியும் போடத் துடிக்கும் பொது புத்திக்கு எதிரான கலகக் குரல்களை பாரதியின் சமூக விமர்சனத்தில் கேட்க முடியும்.

    தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாள் முழுக்க உட்கார்ந்து காதலைப் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம், தங்கள் பகுதியில் காதல் என்றால், கௌரவக் கொலை செய்யவும் துணிகிறது.

    நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
    நாட்டி னர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
    ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
    ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
    பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
    பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
    மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
    முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே

    என்ற அவரது வெஞ்சினச் சொற்களில் இந்த அவலங்களுக்கு பதிலும் கிடைக்கும். அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் தூண்டுதலையும் பெற முடியும்.

    ‘மண்ணில் இன்பங்களைப் பெற வேண்டி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ’ என்ற ஒற்றை வரி, நிதி மூலதனத்தின்முன் தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கத் தயாராகும் ஆட்சியாளர்கள் குறித்த கேள்விகளை நமக்குள் எழுப்புகிறதுதானே ? ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் சாவதோ’ என்ற சாட்டை வரி இன்று எழுதப்பட்டது போல ஒலிக்கவில்லையா? ‘நல்ல விலை கொண்டு நாயை விற்போர் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ’ என்ற அவரது கனல் வாக்கியம் நாட்டு நடப்பின் கார விமர்சனம் அல்லவா?

    மாயா வாதம், அத்வைதம் என்று மனித வாழ்க்கையில் படும் இன்னல்களையும், சுரண்டலையும் நியாயப்படுத்திய தத்துவக் கூட்டிலிருந்து பிறந்து வந்து அதற்கு எதிராக சிந்தித்த மகாகவி அவர். இயற்கையை ஒவ்வொன்றாய்த் துணைக்கு அழைத்து, ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ, கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ’ என்று அவர் எழுப்பிய கேள்வி பிரபஞ்சம் குறித்த விழிப்புணர்வோடு எழுதப் பட்டது.

    குயில் பாட்டு உழைப்பின் மேன்மையை, இயற்கையின் அழகியலை, வாழ்க்கையின் உன்னதங்களைக் கொண்டாடும் படைப்பு. அவரது சுயசரிதை ஒரு நீள்கவிதை – ஏராளமான செய்திகளையும், விவாதங்களையும் கொண்டிருப்பது. கண்ணன் பாட்டு கவிதை இன்பம் ஊட்டுவது.

    பாரதியின் படைப்புலகம் ஒரு பல்கலைக் கழகம் போன்றது. அதன் துறைகள் பரந்து விரிந்தவை. நிகழ்த்துக் கலை போல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன அவரது ஆழ்ந்த பொருளடக்கம் கொண்டிருக்கும் சமூக சிந்தனைகள்.

    அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் தூண்டுவது. நம்பிக்கைச் சுடரை அடைகாத்து வைத்திருப்பது.

    பாரதி டிசம்பர் 11, 1882ல் பிறந்தார் என்றோ, செப்டம்பர் 11, 1921ல் மறைந்தார் என்றோ குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வது வரலாற்றுச் செய்திக்கு மட்டுமே. அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர். என்றென்றும் வழங்கிக் கொண்டிருப்பவர். எங்கெங்கும் கொண்டாடப்படுபவர். எல்லோருக்கும் சொந்தமாகிவிட்டவர்.

    **********

    நன்றி : இளைஞர் முழக்கம்

    Share
  • நான்தான் அடுத்த கணவன்…என்ன தலைப்பு அய்யா !

    எஸ் வி வேணுகோபாலன்

    அன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

    வழக்கம்போல் காலச்சுவடு வேண்டாம் என்றுதான் இந்த மாதமும் சொன்னேன். கோடம்பாக்கம் ரயில் நிலைய புத்தகக் கடை அன்பர் வெங்கடேசன், “ஆனால், இந்த மாதம் நீங்க வாங்கத்தான் செய்வீங்க” என்றார். ஏனோ தெரியவில்லை, பல மாதங்களாயிற்று காலச்சுவடு வாங்கி வாசித்து. ஏற்கெனவே வாங்கிக் கொண்டிருக்கும் இதழ்களையே முழுதாய் வாசிக்க முடிவதில்லை.

    அவரது தூண்டில், என்னை இன்று வந்த ஆகஸ்ட் மாத இதழைக் கையிலெடுத்து பிரிக்கவைத்தது….முதல் பக்கத்தில், பொருள் அடக்கத்தில், பக்கம் 45 என்று போட்டு சிறுகதை: அ. முத்துலிங்கம் – நான்தான் அடுத்த கணவன் என்று போட்டிருந்தது. வளர்ப்பானேன், புத்தகம் என் பைக்குள் வந்து உட்கார்ந்துவிட்டது.

    தீராநதி அட்டையில் ராமானுஜன் பட விமர்சனம் என்று போட்டிருக்கவே, முதலில் அதையே வாசித்தேன். அதற்கும் நான் மவுண்ட் ஸ்டேஷன் இறங்கி, ஓர் அன்பரது மாமனார் மறைவுச் செய்தி வந்திருக்கவே அங்கே சென்று அஞ்சலி தெரிவித்துவிட்டு, அதே மவுண்ட் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து அமர்ந்ததும்தான் வாசிக்க வேண்டியிருந்தது. அற்புதமான விமர்சனத்திற்காக தீராநதி அலுவலகத்திற்கு ஃபோன் செய்து என்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு வெளி ரங்கராஜன் அவர்கள் நம்பர் கிடைத்தது…பின் அவரோடு பேசக் கிடைத்த ஆனந்த அனுபவம் தனி விவரிப்புக்குட்பட வேண்டியது. இருக்கட்டும்.

    பிறகு உங்களை எடுத்துக் கொண்டேன் அ மு. அந்தத் தலைப்பே என்னை என்னவோ செய்தது. ஒரு சிறந்த கவிதை என்றால் படித்தவுடன் அடிவயிற்றை ஞம ஞம என்று ஏதோ செய்ய வேண்டும் என்பார் எழுத்தாளர் சுஜாதா. உங்களது தலைப்பே என்னை என்னவோ செய்து கொண்டிருந்தது. நான் தான் அடுத்த கணவன், ஆத்தாடி என்ன தலைப்பு. என்ன மலைப்பு!

    45ம் பக்கத்தில் உங்கள் கதை என்று போட்டபின் எனது கைவிரல்கள் ஒரே கொத்தில் அந்த 45ஐ பிடித்து எடுத்துவிட்டன. இதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. 44ம் பக்கத்தில் எனக்கு நோபல் பரிசுக்குப் பரிந்துரைப்பதாக செய்தி இருந்தால் கூட எனக்கு அதில் அத்தனை சுவாரசியம் இருக்க முடியாது. ஓவர் டு அ மு தான் எனது நாட்டமாக இருக்கும்.

    பத்மபிரியா என்ற பெயரே ஆளை உண்டு இல்லை என்று செய்துவிடத் தக்க காந்தப் பெயர். அந்தப் பெயரில் ஒரு கன்னிகை வசீகரமாக வேறு இருந்தால், இலங்கையிலிருந்து கனடா நோக்கிச் செல்லும் அகதிக்கு சென்னையில் இப்படியான ஒரு வாழ்க்கை திசை அமையும்போது ஏற்படும் உளவியல் சித்திரவதைகள் வேறு எப்படித் தான் இருக்கும்? ஆனால், பத்ம பிரியாவுக்கு அபி என்கிற சினிமாக்காரன் தான் முதலாவது காதலனாக இருக்கிறான். அகதி இரண்டாம் இடத்தில். கனடா, நயாகரா நீர்வீழ்ச்சி, உலகப் பயணம் எல்லாம் அவளுக்கும் பிடித்திருக்கிறது, ஆனால், அபி அவளை திரை நட்சத்திரமாக ஜொலிக்க வைப்பவனாயிற்றே… அது நடந்துவிடுகிறது. கதாநாயகி ஆகிற விஷயமல்ல, அபி அவளைக் கடத்திப் போய்த் திருமணம் செய்வது. அவளும் உடன்பட்டுத்தான்!

    அகதிக்கு இப்போது கனடா செல்வதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை. அட்லாண்டிக் சமுத்திரம் கடந்துபோயும், பத்மபிரியா மறப்பதில்லை என்று எழுதுகிறீர்கள் அமு! அடடா..ஆஹா..
    இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா
    இந்து மகா சமுத்திரத்த இங்கிருந்தே தாண்டிடுவேன்

    என்ற புதையல் படத்தின் ஜே பி சந்திரபாபு பாடல் நினைவுக்கு வந்தது. கண்ணில் காதலியர் கடைப்பார்வை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற கவிதை வரிகளும்!

    அகதி விரும்பியபடியே அபி – பத்மபிரியா திருமணம் விவாகரத்தில் முடிகிறது.. நம்மாள் உடனே ஆசைக் கோட்டைகளோடு சென்னை வந்து இறங்குகிறார்…இந்த முறை விதி வேறுமுறையில் விளையாடுகிறது…அங்கிருந்து கதை பற்றுகிறது…கள்ள பாஸ்போர்ட், சிறை, வழக்கு, ஏமாற்றம், துரோகம்…!

    திஹார் ஜெயிலில் வாசம் செய்ய நேருகிறது அகதிக்கு! கண்ணீரோடு சென்னையிலிருந்து பத்மபிரியா தில்லி வரவும் செய்கிறாள். அங்கே நடப்பதென்ன! கொடுமை….

    அதற்குப் பிறகு காதுக்கு வரும் செய்தி, பத்மபிரியாவுக்கு கல்யாணம் ஆகிவிடுகிறது. இரண்டாம் முறை! ஜாமீன் ஆசை காட்டிப் பணத்தை ஆட்டையப் போட்ட அதே வக்கீல்தான் இப்போது அவளது புருஷன். சிறையிலிருந்து வெளிவரும் அகதிக்கு வாழ்க்கை அனுபவம் கனடா திரும்ப அறிவுறுத்துகிறது…ஆனால் பத்மபிரியாவின் முத்து முத்தான கையெழுத்தில் வந்திருக்கும் கடிதம்தான் கதையின் முதல் வரியாகக் கதையாக மலர்கிறது.

    இன்னும் என்ன காதல் நினைவு என்று கடிந்து பேசுகிறார் அவனது பாஸ்! அவரிடம் பகிரும் கதைதான் இப்படி விரிந்து செல்கிறது. இல்ல அவள் அழைக்கிறாள்…அந்த லாயரை அவள் விலக்கி வைத்துவிட்டாள்…காதலுற அழைக்கிறாள்…அவளது அடுத்த கணவன் இந்த அகதிதான் என்ற முடிவோடு!

    கதை நெடுக உங்களது தேர்ந்த சொல்லாட்சி சிறப்பாக இருக்கிறது…

    கோடம்பாக்கம் வெங்கடேசனுக்குக் கடன் பட்டிருக்கிறேன்…
    ஆமாம் 45 ரூபாய்க் கடனுக்குத் தான் தீராநதியும், காலச் சுவடும் வாங்கிவிட்டு, ரயிலேறி சென்றுவிட்டேன் – காலையில் நேரம் இல்லை என்று!

    அன்புடன்

    எஸ் வி வேணுகோபாலன்

    Share
  • நேயத்தைக் கொண்டாட வைக்கும் நூல் வாசிப்பு

    புத்தகமும் மனிதநேயமும்

    எஸ் வி வேணுகோபாலன்

    வாசிப்பு என்பதே நேயத்தின் ஒரு வெளிப்பாடுதான். மகாகவி பாரதியின் கவிதை வரிகளில், “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வருகிறது. என்ன கருவி அது? காசியில் இருப்பவர் பேசும் மொழி காஞ்சியில் இருப்பவர்க்கு எப்படி விளங்கும்…ஒன்று இவர் அந்த மொழியைக் கற்றிருக்கவேண்டும். அல்லது அவர் தமிழில் பேச வேண்டும். அல்லது பொதுவான மொழியொன்றில் பரஸ்பரம் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சொல்வதை இவர் கேட்பதற்கோர் இதயம் வேண்டும். அந்த உள்ளம் – அந்த மனம்தான் பாரதி சொல்லும் கருவி.

    கதையோ, கவிதையோ, சிறுகதையோ, நாவலோ – ஒரு புத்தகம் நமக்குள் எத்தனையோ வித சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் குறித்து யோசிக்க வைக்கிறது. சிந்தி மொழி கவிஞர் மோதிலால் ஜத்வானி எழுதி இருக்கும் செலவழித்த புன்னகைகள் என்ற கவிதை, “மளிகைக் கடைக்காரனிடம் சிறிது புன்னகை செய்கிறேன்/ பொருள்களைத் தராசில் வைத்து நிறுத்தும்போது/ என் பக்கம் சிறிய சாய்வு செய்யக் கூடாதா என்று! எனது அன்றாடத் தேவைகளின் விலை/ கூடிக் கொண்டே செல்கிறது, காய்கறிக்கடைக்காரனிடமும் புன்னகை செய்கிறேன்/ என்னுடையதைப் போன்ற குறைந்த தேவைக்கு/ அவன் அதிகவிலை வைத்துவிடக் கூடாதே என்று/ இப்படி கடைத் தெரு முழுக்க செலவாகிறது என் புன்னகை/ வீடு திரும்புகிறேன்/ மனைவி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க/ புன்னகை கைவசம் இல்லை” என்று முடிகிறது.

    டாக்டர் பி எம் ஹெக்டே அவர்களின் “உள்ளங்கையில் உடல் நலம்” (விகடன் பிரசுரம்)நூலின் முதல் கட்டுரை சிரிப்பு மருத்துவம் பற்றிப் பேசுகிறது. சிரிப்பைப் பற்றிய கலைவாணரின் பாடலில், ‘வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு’ என்று வருகிறது. ஹெக்டே அவர்கள், நாய் போன்ற சில விலங்குகள் சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் முகம் நீண்டிருப்பதால் நமக்கு அது தென்படுவதில்லை என்று சொல்கிறார். நாமோ சிரிக்கத் தெரிந்தும் சிரிக்க மறுக்கிறோம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று நமது மோவாயைத் தொட்டுப் புகைப்படக் கலைஞர் என்ன கெஞ்சினாலும் நாம் இறுக்கமாகவே நிற்பதை புகைப்பட ஆல்பங்கள் நிரூபிக்கும். இலேசாகும் மனத்தால் வஞ்சனையின்றி சிரிக்க முடியும். அதற்கும் புத்தகம் மிகப் பெரிய வாசல் திறந்து கொடுக்கிறது. வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த வாசிப்பு. நாம் ஏன் அதை மறுத்துக் கொள்ள வேண்டும்?

    அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொண்ணூறுகளுக்குப் பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உலகமயம் நமது போக்கில் எத்தனையோ மாற்றங்களைத் திணித்துவிட்டது. கூடி வாழ்ந்த ஜனத் திரளை ஒற்றை ஒற்றை மனிதர்களாகப் பிரிக்கும் வேலையில் உலகமயம் வெற்றி பெற்று வருகிறது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார் பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக். நேயத்திற்கு எதிரான கோட்பாடு இந்த உலகமயம்.

    “இந்தத் தெருவில் குரைப்பதற்கு நாய் கூட இல்லை…”என்று தொடங்கும் த.வாசுதேவன் என்பவரின் வீடு என்கிற கவிதை (தீராநதி: மார்ச் 2012),

    வீடுகளின் குழந்தைகள்
    ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்
    பெரியவர்கள்
    முதியோர் இல்லங்களில்
    இறப்பதற்குக் காத்திருக்கின்றனர்
    ……………
    ………..

    தங்கத்தை பேங்க் லாக்கரில் வைத்திருப்பதால்
    திருடர்களும் வர மாட்டார்கள்
    மிச்சமிருக்கும் உணவை
    வைப்பதற்கு ஃபிரிட்ஜ் இருப்பதால்
    பிச்சைக்காரன் கூட இங்கு வரமாட்டான்
    ……..
    ……..
    நாங்கள் அனேகமாக அலுவலகத்தில்தான் இருக்கிறோம்
    வாடிக்கையாளரும் எஜமானனும்
    வெளிநாட்டில் இருக்கிறார்கள்
    …….
    ……
    வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது
    மனசும்தான்
    இந்த வீட்டில்
    டிவி மட்டுமே பேசவும் பாடவும் செய்யும்
    இந்த வீட்டில் தான்
    கதவுகளை நன்கு சாத்தியபடி
    நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”

    என்கிறது. மறைந்த மார்க்சிய தத்துவார்த்த மேதை பி ராமமூர்த்தி அவர்களது ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ (அண்ணா அவர்களது ஆரிய மாயை நூலுக்கு எதிர்வினையாக ஆரிய மாயையா, திராவிட மாயையா என்ற தலைப்பில் பி ஆர் எழுதிய நூல் அது) என்ற புத்தகத்தில், புராதன பொதுவுடைமை காலத்தில் மக்களது கீதங்களாகப் பிறந்த ரிக் வேதத்தில், ‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து’ என்று வரும் பாடலின் பொருள், நாம் கூட்டாக வாழ்வோம், கூட்டாக விளையாடுவோம், கூட்டாக அனைத்து இன்பங்களும் அடைவோம் என்பதாக வருவதை பி ஆர் விளக்கினார்.

    ‘உன்னைப் பற்றி மட்டுமே யோசி, உனக்குள் ஒடுங்கிக் கொள், உன்னைப் பற்றிமட்டுமே கவலை கொள்’ என்கிறது உலகமயம். சேர்ந்து வாழும் மனிதகுல பண்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது உலகமயம். அதைத் தகர்த்து எறிந்து மனித குல இருப்பிற்கும், மற்றவர்களுக்கு உதவுவதற்கும் சிந்திக்க வைக்கும் வேலையை ஒரு புத்தகம் சிறப்பாகச் செய்யமுடியும்.

    அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
    அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
    மானிட சமுத்திரம் நானென்று கூவு

    என்ற பாவேந்தர் வரிகள் இதைத் தான் செய்கின்றன. ஒரு நல்ல புத்தகம் உள்ளத்தைத் தீண்டி இம்மாதிரியான சிந்தனைகளைத் தூண்ட முடிகிறது. நேயத்தை ஊட்டமுடிகிறது.

    எல்லாவற்றையும் பண்டமாக, பணமாக, லாபத்தின் கூறாகப் பார்க்கப் பழக்கும் தாராளமய காலத்தில் நாம் அனைத்து உறவுகளையும் ஈவிரக்கமின்றி மிதித்து நடக்கிறோம். குழந்தைகளை வாட்டி எடுக்கிறோம். வயது மூத்தவர்களைப் புறக்கணிக்கிறோம். முதுமை அடையும் நிராகரிப்பின் கசப்பைப் பேசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று, “எண்ணைக்கு என் மனைவி/என்னைவிட்டுப் போனாளோ/ அண்ணைக்கே என் படுக்கை/ திண்ணைக்கு வந்திருச்சு/ நாய் தின்னும் சொத்தில் நாலஞ்சு கவளத்த/ எனக்கும் போட்டுவப்பான் இரக்கமுள்ள எம்புள்ள..” என்கிறது.

    குழந்தைகள், முதியவர்கள், பெண்களையும் சமூகம் மிக மோசமாக நடத்துகிறது. ஒடுக்கப்பட்டோரை மிகவும் கீழ்மைப்படுத்தி வதைக்கிறது. ஆதிக்க உளவியல் இருக்கும் இடத்தில் அன்பு மறுக்கப்பட்டுவிடுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கிராமங்கள் மூன்று சூறையாடப்பட்ட சாதிய தாக்குதல்களை விவாதிக்கும் யாரும், அதற்கு ஒரு மாதமுன்பே தொடர் நிகழ்வுகளின் தாக்கத்தில் இமையம் அவர்கள் எழுதிய ‘பெத்தவன்’ (உயிர்மை:ஜூன் 2012; பின்னர் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருப்பது) கதையைப் பேசாது தவிர்க்க முடியாது.

    உரத்த சத்தம் எழுப்புவதாலேயே ஒன்றின் நியாயம் தீர்மானிக்கப்பட்டுவிட முடியாது என்று சொல்லும் குட் பை மிஸ்டர் சிப்ஸ் கதையை, பேரா ச மாடசாமி அவர்களது மொழியில் “போயிட்டு வாங்க சார்” (பாரதி புத்தகாலயம்) நூலகா வாசிக்கிறோம். ஆசிரியர்கள் மாணவர் உறவின் மேன்மையைக் கொண்டாட்டமாகப் பேசும் இந்த நூலை ஆசிரியர்கள் வாங்கிப் படிப்பது அவசியமாகிறது.

    இலங்கை எழுத்தாளர் அ முத்துலிங்கம் (கனடா) எழுதியிருக்கும் ‘புவி ஈர்ப்புக் கட்டணம்’ சிறுகதை, இயற்கையின் வரங்களுக்கும் கட்டணம் போட்டுச் சுரண்டும் எதிர்கால அரசியலைப் பகடி செய்து எழுதப்பட்டதாகும். சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை, குழந்தையின் சிகிச்சைக்காக மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வரும் ஏழைத் தாய் எதுவும் புரியாமல் குழந்தையோடு வெளியேறியபிறகு, அடடா அது ஒரு தீவிர நோய் ஆயிற்றே எங்கே அவர்கள் என்று அலைமோதும் மருத்துவரையும் பேசுகிறது.

    வகுப்பறை குறித்துக் கேள்வி எழுப்பும் ஆயிஷாவும், குழந்தை-பெற்றோர் உணர்வுகள் குறித்தப் பேசும் ரோஜாவும் (இரா நடராசன் நூல்கள்:பாரதி புத்தகாலயம்) கல்வி குறித்து நிறைய சிந்தனைகளை எழுப்புகின்றன. வர்த்தகமாகும் கல்வி பற்றியும், மருத்துவம் பற்றியும் பேசும் நூல்கள் சம கால அராஜக வாழ்வுச் சூழலுக்கு எதிரான கலகத்தை விதைக்கின்றன.

    காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகளில் நிறையும் இரத்தம், வெட்டப்பட்ட உறுப்புகள், உயிரிழக்கும் மனிதர்களைப் பார்த்தாவது போர்களை நிறுத்துவீர்களா என்று ஒபாமாவை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை ஒன்றை அங்கே பணியாற்றும் மருத்துவர் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து:ஜூலை 25). சம காலத்தில் வேட்டையாடப்படும் உணர்வுகளை, உளவியலை, வாழ்க்கையை மீட்டெடுக்க புத்தகங்கள் ஏராளமான சாத்தியங்களை முன்வைக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரலை நூல்கள் எழுப்பமுடியும்.

    வாசிப்பு பகிர்தலைக் கற்பிக்கிறது; மனித வாழ்வை மேன்மைப் படுத்துகிறது; நேயம் கொண்டாடும் நெஞ்சத்தை வழங்குகிறது.

    (ஓசூர் புத்தக் கண்காட்சியில் ஜூலை 25 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து)

    நன்றி: தீக்கதிர் – இலக்கிய சோலை (ஜூலை 28, 2014)

    Share
  • காலம் கடந்த அங்கீகாரம் பெற்ற மேதையின் நெகிழ்வூட்டும் கதை

    ராமானுஜன் திரைப்படம்

    எஸ் வி வேணுகோபாலன்

     Ramanujam-Movie-Stills-4

    குடும்பத்துடன் ‘கோயிலுக்குக்’ கிளம்பினோம்
    மகள் ‘ராமானுஜன்’ பார்க்கவேண்டும்
    என்று சொன்னாள்
    அறிவே தெய்வம்
    – நெல்லை ஓவியர் வள்ளிநாயகம்
    அவர்களது குறுஞ்செய்தி

    மனப்பாடமாகச் சில செய்திகளைப் பட்டியல்போட்டு வாசித்து உருவேற்றி வைத்துக் கொண்டு கேட்கிற இடங்களில் அதை அப்படியே ஒப்பித்துக் காட்டி அதையே பொது அறிவு என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது, ராமானுஜன் திரைப்படம். ஒரு மாமேதையைக் குறித்து நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து வைத்துக் கொண்டு, அவரது புகைப்படத்தைக் கடந்து வேறொன்றும் பேச முடியாது இருப்பதை உணர்த்திய ஞான ராஜசேகரனுக்கு நன்றி.

    download

    அறிவுப் பசியோடு அலையும் மாணவர்களை ஒரு சமூகம் எப்படி அலைக்கழித்து, புறக்கணித்து, கொண்டாட்டங்களின்போது மட்டும் தேடித் திண்டாடுகிறது என்பதை மற்றுமொருமுறை எண்ணிப் பார்க்கவைத்து விட்டார் கணித மேதை ராமானுஜன். ஒரு கையடக்க பிரதியாக அவரது வாழ்க்கையை ஒரு மூன்று மணி நேர திரைப்படமாக நமக்கு வழங்கி இருக்கும் இயக்குனர் ஞான ராஜசேகரன் மற்றும் இந்தத் திரைப்படத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து நெகிழ்த்தியிருக்கும் ஒட்டு மொத்த நடிகர்கள், திரைக்குப் பின்னால் உழைத்திருக்கும் அசாத்திய கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

    இந்து சனாதன ஏழை பிராம்மண குடும்பத்தில் பிறந்த ராமானுஜன் கணித உலகத்தில் மட்டுமே வாழத் தகுதியுள்ளவராகவும், சராசரி மனித வாழ்வுக்குள் பொருந்த இயலாது தவிப்பவராகவும் வாழ்ந்து மறைந்த கதை மட்டுமல்ல ராமானுஜன் வரலாறு. வேறு எத்தனையோ முக்கியமான விவாத உட்பொருள்களும் உள்ளடக்கிய சரிதை அது. காட்சி மொழிக்குள் அதனை தனக்கு சாத்தியமான வகையில் பரந்த பார்வைக்கு எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

    தொடக்கக் காட்சியிலேயே பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று எப்படி சொல்லலாம் என்று கணக்கு வாத்தியாரை வகுப்பறையில் மடக்கிக் கேட்கிறான் சிறுவன் ராமானுஜன். அறிவின் துணிவு அங்கே அடையாளப் படுத்தப் படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குலைக்கும் புறச் சூழல் அமைந்துவிட, ஏக்கங்களோடு ஒரு வெளிச்சமற்ற பாதையில் திணறி நடக்கும் ஒரு மேதையை மீதிப் படம் காட்சிப் படுத்துகிறது.

    கட்டுக் குடுமி, நெற்றியில் நாமம், மேலை நாட்டிலும் நழுவிவிடாத பூஜை புனஸ்காரம், நாமகிரி தாயார் கனவில் எழுந்தருளி புதிரான கணக்குகளுக்கு விடையளிக்கிறாள் என்ற பரவசம், சாஸ்திர ஜோதிட கணிப்புகளில் ஆழும் மனம்…..என்ற வம்சாவழி நம்பிக்கைகளின் தொகுப்பாகத் தென்படும் ராமானுஜன் தனது கணித மேதைமையின் வெளிப்பாடுகளுக்காக இந்த ஆச்சார அணுகுமுறைகளின் மீது தானே கேள்விகளையும் உள்ளாக எழுப்புவதைப் படம் நுட்பமாக முன்வைக்கிறது.

    தன்னைக் கொண்டாடும் தாயின் பாசமே தனது சொந்த வாழ்க்கையின் பன்முக அம்சங்களை அனுபவிக்கத் தடையாகவும் இருக்கிறது என்பதை ராமானுஜன் அறிந்திருப்பது கடைசி காட்சிகளில் உணர்த்தப் படுவது திரைக் கதையின் முக்கியமான இடம். தடைக் கற்களைக் கடக்க அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. அதற்கு பல காரணங்களில் முக்கியமானது உளவியல் போராட்டம். இளவயதில் திருமணம். (உள்ளபடியே அப்போது அவருடைய மனைவி ஜானகிக்கு வயது பத்து). ஆனால் காதல் மனைவியோடான அந்தரங்கப் பரிமாற்றங்களை அனுமதிக்காத அவரது வாழ்க்கை 32 வயதில் முடிந்துவிடுகிறது. அப்போது அந்த அப்பாவிப் பெண்ணுக்கு வயது 21 !

    ராமானுஜனின் அவஸ்தைகளுக்கு இன்னொரு காரணம், போஷாக்கற்ற உணவு, வறுமை, உடற்பயிற்சி தேவையற்றது என்ற தவறான புரிதல். பள்ளிக் கூடத்தில் பி டி மாஸ்டர், ராமானுஜா நீயும் வந்து தேகாப்பியாசம் பண்ணு என்று சொல்கிறபோது, நான் கணக்கு அப்பியாசம் செய்கிறேனே அதுவே போதும் என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் சிறுவன் ராமானுஜன். மூளை உழைப்பாளிகளுக்கு உடல் வலு தேவையில்லை என்கிற கோளாறான புரிதல் இன்றும் சமூகத்தில் நிலவுகிறது.

    கோயிலில் பாடும் தனது தாய் கோமளத்தம்மாவுடன் தானும் சேர்ந்து பாடும் சிறுவன் ராமானுஜன், பிரசாதம் கொடுக்கும் இடத்தில் குத்து மதிப்பாக விநியோகம் செய்யப்படும் கொழுக்கட்டைகளும், சுண்டலும் காத்திருக்கும் எல்லா பக்தர்களுக்கும் கிடைக்காது என்று கணக்கு போட்டுச் சொல்லி அசத்துவது, கல்லூரி வகுப்பு கணக்குப் புத்தகத்தை ஓர் இரவில் வாங்கி முழுவதும் படித்துத் தேர்ந்திருப்பது, எப்போதும் தன்னை விட மேல் வகுப்புகளில் படிக்கும் யாருக்கும் இலகுவாக கணக்குப் பாடம் கற்பிப்பது…இந்தக் காட்சிகள் இந்தத் தலைமுறை மாணவர்களை நிச்சயம் கொண்டாடிப் பார்க்கவைக்கும். கணிதம் ஒரு சவாலாக முன்வைக்கப்படும் நமது பாட திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகளிலிருந்து மாணவர்களுக்குத் தென்றல் வீச கணிதம் கற்கும் ஆர்வத்தைத் தூண்ட இந்தப் படம் முக்கிய பங்களிப்பு செய்யும். நமது ஆசிரியர்கள் அவசியம் பார்ப்பது நல்லது.

    ஏதாவது ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி மற்றதில் தேறாத மாணவரை விட எல்லாவற்றிலும் சராசரி வாங்கித் தேர்ச்சி பெரும் மாணவர்களே எனக்கு தேவை என்று சொல்லும் ராமானுஜன் காலத்துக் கல்லூரி முதல்வர், எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் மாணவர்களை உற்பத்தி செய்யும் கல்வித் தலங்கள் இன்று தமிழகத்தில் சக்கை போடு போடுவது குறித்தும் கேள்விகள் எழுப்புகிறார். கல்வி என்றால் என்ன என்பதை இன்னும் இரண்டு தலைமுறைகளைக் கடந்தாவது சமூகம் கற்றுக் கொள்ளுமா தெரியவில்லை. நாகரிக உலகின் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கிய மேதைகளும், கவின் கலைகள் படைத்த படைப்பாளிகளும் தாங்கள் மிகக் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துதான் இவற்றை வழங்கிச் சென்றிருக்கின்றனர் என்பதை இளமைக் காலத்திலேயே குழந்தைகளுக்கு நெஞ்சில் நிற்கும்படி சொல்லித் தந்தால்தானே உழைப்பின் மேன்மை அவர்களுக்குப் பாடம் ஆகும்! ராமானுஜன் படம் இந்த வகையிலும் ஒரு மிகச் செம்மாந்த பங்களிப்பைச் செய்கிறது.

    பண்பாட்டு முரண்பாடுகள், உணவு முறையைச் சார்ந்த அவமதிப்பு, இறையுணர்வு குறித்த விவாதங்கள் இவற்றையும் படம் மென்மையாகப் பேசுகிறது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கணிதத் துறையினர் பெரும்பாலும் நாத்திகர்களாயிருக்க, ராமானுஜனின் ஆளுமையை உலகறியச் செய்வதே தனது வாழ்நாள் கடமையாக எடுத்துச் செயல்படும் ஹார்டியை மாணவர்கள் இதுபற்றிக் கேட்கின்றனர். அவரோ, ராமானுஜனின் மத நம்பிக்கைகளைத் தம்மால் மிக எளிதாகத் தகர்த்துவிட முடியும், ஆனால் அவரது கணக்கு உலகைக் காப்பாற்றுவதே தனக்கு முக்கியம் என்று பதில் அளிக்கிறார். படத்தின் பல முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. ராமானுஜனிடத்தும் இந்த பாதிப்புகள் தோன்றுவதை, சீக்காளியாக சொந்த நாடு திரும்பும் ராமானுஜன் தனக்குப் பணிவிடை செய்யவிடாது மனைவியைத் தடுக்கும் தனது தாயை எதிர்த்துப் பேசும் இடம் வெளிப்படுத்துகிறது.

    படத்தில் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. தொடக்கக் காட்சியில் வகுப்பறையிலிருந்து காமிரா நேரே கோயிலுக்குள் நுழைகிறது. பாடலைப் பாடும் சுஹாசினி (கோமளத்தம்மாள்) காட்டும் முகபாவங்கள், மகன் இடையே வந்து கலந்துகொள்ளும்போது அவரும், அவருக்கருகே இருப்போரும் காட்டிக் கொள்ளும் கண் ஜாடை, லண்டனில் தற்கொலை முயற்சியை அடுத்து காவல் நிலையத்தில் சிறை வைக்கப்படும் ராமானுஜனைக் காப்பாற்ற ஹார்டி மேற்கொள்ளும் தடாலடி ஜாலங்கள் அருமை.

    ஜெமினி கணேசன் பேரனான அபிநய், ராமானுஜனின் பரிதவிப்பு, மனைவியைப் பிரிந்து படும் பாடு, கணித மேதையாக உருமாற, பட்டாம்பூச்சி உருவாக்கத்தில் படும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருவது உள்ளிட்ட காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். மருமகளை வாட்டி எடுக்கும் மாமியார் பாத்திரம் சுஹாசினி இதுவரை நடிக்காதது. தொடக்கப் பாடல் காட்சியில் அவரது கண்கள் அத்தனை பேசுகின்றன. அடித்து நிமிர்த்தியிருக்கிறார். ராமானுஜனின் இளம் மனைவி ஜானகியாக வரும் பாமா, அந்நாளைய ஆச்சார குடும்பத்தின் மருமகளாக அசாத்திய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நீங்களும் அசடு, நானும் அசடு அதுதான் நாம ஜோடி சேர்ந்திருக்கிறோம் என்று கணவரிடம் அவர் பேசும் இடம் கவிதை. நிழல்கள் ரவி, ராமானுஜனின் தந்தையாக நினைவில் நிற்கிறார்.

    டெல்லி கணேஷ், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரா, சரத் பாபு, கிட்டி உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் மிகச் சிறு அளவிலேயே தோற்றம் என்றெல்லாம் பார்க்காது, தங்களது பாத்திரத்தின் தன்மையை முழுமையாக பிரதிபலித்துள்ளனர். கணிதத்தோடு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் திகழும் ஹார்டி பாத்திரத்தை ஏற்றிருக்கும் கெவின் சிறப்பாக நடித்திருக்கிறார். வெளி நாட்டவர்களை பயிற்சி கொடுத்து அவர்களையும் தமிழில் பேச வைத்திருப்பது அட்டகாசமான முயற்சி.

    மன நிலை பிறழ்ந்து வீதியில் அலையும் பி டி மாஸ்டர், பின்னர் ராமானுஜன் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது மேலும் மோசமான கதியில் வீதியில் தென்படுகிறார். ராமானுஜனோ, நல்லவேளை நான் அப்படி ஆகிவிடவில்லை என்கிற இடம் அபாரமானது. தனக்கு சென்னை பல்கலை கொடுத்தனுப்பும் பணத்தில் பாதியை ஏழை மாணவர்களுக்கு தந்து உதவுங்கள் என்று அவர் திருப்பித் தந்து விடுவது மகத்தானது.

    இன்று ஏடிஎம் பயன்பாட்டுக்கு பாஸ்வர்ட் அமைப்பது ராமானுஜன் கோட்பாடுகளை வைத்துத் தான்! பல அறியல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் பயன்படுத்த அவரது சூத்திரங்களே இன்றும் உதவியாக இருக்கின்றது என்ற வாசகங்கள் நிரம்பிய அட்டையோடு படம் முடிகிறது. ஆனால் அவரது ஆகச் சிறந்த அறிவைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    ராமானுஜன் மரணத் தறுவாயில் துடிக்கையில், அவரது இறுதி காரியங்களில் கலந்து கொண்டால், அவர் சமுத்திரத்தைக் கடந்து சென்றுவந்ததற்குப் பரிகாரம் செய்யாத பாவம் தங்களையும் பற்றிக் கொள்ளும் என்று சொல்லியவாறு ஆச்சார பிராம்மணர்கள் அவரது வீட்டை வீட்டை விட்டுக் கூண்டோடு காணாமல் போகிற இடமும் கதையில் முக்கியமானது. மறைந்த அவரது உடலுக்கு எரியூட்டுகையில் பாரதிக்கு நேர இருந்ததே (பாரதி மறைவு 1921; ராமானுஜன் – 1920) முன்னதாக அவருக்கும் நேர்வது கவனிக்கத் தக்க இடம். புறக்கணிப்பின் நிழல் இறுதிவரை அவரைத் தொடர்கிறது.

    ஆனால் காலம் கடந்தாவது அவரது கணக்குகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோல், ராமானுஜன் வாழ்க்கைக்கும் அங்கீகாரத்தை காலம் வழங்குகிறது. ஞான ராஜசேகரன் அவர்களது அசாத்திய முயற்சி அதைத் திரையில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. ராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு என்பது பலருக்கும் தெரியாதது. படத்திலும் சொல்லப்படுவதில்லை. ஏழ்மையை விளக்காத சூழல், நிகழ்வுகள் வேகமாகத் தாவிச் செல்வது போன்ற சில குறைகள் உண்டுதான். ஆனாலும், ராமானுஜன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே பார்வையாளர்களை ஈர்க்கும்வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி, அந்த உழைப்பைப் பாராட்ட வைக்கிறது.

    *************

    Share
  • நிரந்தரமானவன் அழிவதில்லை !

    — எஸ் வி வேணுகோபாலன்.

    கண்ணதாசன்

    நிரந்தரமானவன் அழிவதில்லை !

     

    0 R‘முத்து என இட்டபெயர் முத்தாகவிலை என்று முறையீடு செய்யவிலையோ…’ என்ற கவியரசு வரிகளை ஆனைக்கட்டி ரவிதான் எனக்குச் சொன்னது.  முத்தையா என்பதுதான் கண்ணதாசனின் இயற்பெயர். வாலியைப் போலவே கண்ணதாசன் குறித்த சிலாகிப்பும் என் அண்ணனது கல்லூரித் தோழன் ரவி மூலம் தான் தொற்றிக் கொண்டது. பாடலைச் சும்மா கேட்டுக் கொண்டிருந்த காலம்போய் அதன் நுட்பத்தில் உள்ளத்தைப் பறிகொடுக்கத் தொடங்கிய காலம் பள்ளிக்கூடப் படிப்பு நேரம்.  எத்தனை கொடுத்து வைத்த இளமைப் பருவம்! தொலைக்காட்சிக் கருவிகளைக் காலம் கடந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை நிதானமாகத் தமிழகத்திற்குக் கொண்டு சேர்த்தவர்கள் யாவரும் நீடூழி வாழட்டும். வானொலியில் பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருப்போர் என்றென்றும் அமரத்துவம் எய்தட்டும்.

    கண்ணதாசனைக் கேட்கவும், படிக்கவும் ஒரே நேரத்தில் சாத்தியமாயிற்று. ஒன்று நூலகத்தில் சிக்கிய அவரது கவிதைத் தொகுப்புகள். மற்றொன்று அப்போது வாராவாரம் குமுதம் இதழில் வந்து கொண்டிருந்த அவரது கவிதைகள்.

    ‘பூவினைக் காடுகள் புன்னகைக் கோடுகள் பொன்னிறப் புள்ளிமான் கூட்டம், காவியப் பேடுகள் கண்மயர்க் கூடுகள் காதலே என்மனத் தோட்டம், நாவினால் மென்மொழி நாட்டுவாள் பைங்கிளி நாடுவேன் நாடுவேன் நானே, பாவியேன் நெஞ்சினைப் பற்றுமோர் பெண்மையைப் பார்க்கிலேன் கண்ணபிரானே’ என்ற அவரது வரிகளில் துள்ளிய ஆசிரிய விருத்தம் எல்லா வருத்தங்களையும் தீர்க்கும் ரசமாக என்னுள் இறங்கிய வேட்கைப் பருவமது.

    கண்ணதாசன் கவிதைத் தொகுதிகளை நான் பள்ளிக்கூடப் படிப்பு மேற்கொண்டிருந்த காஞ்சிபுரத்திலும், எனது பெற்றோர் இருந்த வேலூரிலும் நூலகங்களில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருப்பேன்.  அவரது அரசியல் உணர்விலும், இறை நம்பிக்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பிரதிபலிப்புகள் அவரது தொகுதிகளில் பயணம் செய்பவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்துவிடும்.

    கம்பனில் ஆழ்ந்த ரசனையை அவர் வளர்த்துக் கொண்டதை, அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தலைப்பில் அவர் பேசி வந்த சொற்பொழிவுகளில் நேரே கேட்கும்போது கிறங்கிப் போகிற அளவு அந்த சந்தங்களை சொல்லிக் காட்டுவார். தனது எந்தப் பாடலை எந்தத் தனிப் பாடலின் தாக்கத்தில், எந்தக் கம்பன் கவியின் வேகத்தில் எழுதினேன் என்று விவித்பாரதி அலைவரிசையில் சிறப்பு தேன்கிண்ணம் பகுதியில் அவரே எடுத்துச் சொல்வதை எழுபதுகளின் பிற்பகுதியில் வானொலி நேயர்களாக இருந்தோர் அறிந்திருப்பர்.

    அகலிகை சாப விமோசனம் நிகழ்ந்த பரவசத்தில், விசுவாமித்திரர் ராமனைப் புகழ்ந்து, தாடகையை எதிர்த்த போரில் உன் கை வண்ணம் கண்டேன், இங்கே கல்லை மிதித்து அதைப் பெண்ணாக மாற்றியதில் உன் கால் வண்ணம் கண்டேன் என்று சொல்வார். ‘பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்’ என்பது கண்ணதாசன் எழுதிய (பாசம்) திரைப்படப் பாடல் வரிகள்!

    சூர்ப்பணகை வருகையைக் கொஞ்சிக் கொஞ்சி கம்பன் வருணித்த, ‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்’ என்ற அருமையான செய்யுள், ‘வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்’ என்று முடிவதைத் தான், ‘வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..’ என்ற கண்ணதாசனின் அற்புதப் பாடலாக சி எஸ் ஜெயராமன் அவர்களது தனித்துவக் குரலில் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருப்பது.

    ‘கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல, மண் வழி வரலாம் பெற்ற மகன் வழி வரலாம் சேர்ந்த பெண் வழி வரலாம் செய்த பிழை வழி வரலாம் ஆனால் நண்பர்கள் வழியிலேதான் நான் கண்ட கண்ணீர் உப்பு’ என்பது அவரது கவிதை! இதே கருத்து, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்ற அவரது திரைப் பாடலிலும் வரும் (அவன்தான் மனிதன்).

    உருக்கமான கவிதைக்கு அவரிடம் குறைவு இருக்க இயலுமா, என்ன! உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து அவர் எழுதிய ஒரு கவிதை மிகவும் பரவலாக அறியப்பட்டது: ‘ அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும் ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்’ என்று தொடங்கும் அந்தக் கவிதையை அவர் எழுதிய பிறகு, காய்ச்சல் கண்டிருந்த அவரது உறவுக்காரர் ஒருவரின் அந்தக் குழந்தை மரித்துவிட்டது. அதிர்ந்து போனார் கவிஞர். பின்னர், ‘அறம்பாடி விட்டேனோ அறியேன் யான் சிறுகுருவி திறம் பாடமாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று எழுதினார்.

    திருமகள் என்ற இதழில்  வெளியான ‘ காலை குளித்தெழுந்து கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு’ என்று தொடங்கும் கவிதைதான் கவியரசரின் பிரசுரமான முதல் கவிதை. இந்த சொல்லாட்சி, வேகம், எளிமை அவரது திரைப்படங்களில் ஆட்சி செய்து அசத்தியது.

    ‘நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’ என்று சவாலே சமாளி படத்தில் வரும் பாடலின் கடைசி சரணம் அதிகம் வானொலியில் ஒலிபரப்பு ஆகாதது: ‘ தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா, தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா…’ என்று போகும் அந்த ஆவேச வரிகள், ‘ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை, நீ அந்தக் கூட்டமே இதில் அதிசயமில்லை’ என்று சிகரத்தை எட்டும்.

    கதையின் சுருக்கத்தை மிகத் திறம்பட தனது பாடல் வரிகளில் சொற்செட்டாக வடித்துக் கொடுக்கும் பேராற்றல் அவருக்கிருந்தது. அவர்கள் படத்தில் வரும் ‘இப்படியோர் தாலாட்டு பாடவா’ என்ற பாடலின் சரணம்  ‘அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள் ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்’ என்று சொல்லிச் செல்லும் கதாநாயகி, ‘அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள் நான் அப்படியே என் கதையை உன்னிடம் சொன்னேன்’ என்று தனது கதையை அங்கே இணைத்துவிடும் அழகை எப்படி விவரிக்க!

    ராஜபார்ட் ரங்கதுரை படத்தில், ‘அம்மம்மா தம்பி என்று நம்பி’ என்ற பாடலை வேறு யார் எழுதி இருக்க முடியும்? ரோஜாவின் ராஜா படத்தின், ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்ற பாடலில் பி சுசீலாவின் அற்புதக் குரலில், ‘நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை, அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை’ என கசியும் தவிப்பு வரிகளை வேறு யார் தொடுத்திருக்கக் கூடும்?

    காவியத் தலைவி படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்’ என்ற பாடல் யாரைத் தான் உருக வைக்காது! அதுதான் மேதைமை.  காதல் (நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான் – பூவும் போட்டும்), பாசம் (மலர்ந்தும் மலராத – பாச மலர்), சோகம் (கண்கள்   இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ – மன்னாதி மன்னன்), வேதனை (கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – வானம்பாடி), கழிவிரக்கம்  (உள்ளத்தில் நல்ல உள்ளம் – கர்ணன்), சுய பரிதாபம் (பாலூட்டி வளர்த்த கிளி – கௌரவம், மனிதன் நினைப்பதுண்டு – அவன் தான் மனிதன்), தாபம் (நாலு பக்கம் வேடருண்டு – அண்ணன் ஒரு கோவில்)….எந்த உணர்வைக் கேட்டாலும் அந்த வகைப்பட்ட பாடலை அவரது பேனா எழுதி இருக்கவே செய்யும்.

    தனக்கான இரங்கல் கவிதையைத் தானே யாத்துக் கொண்ட ரசனை மிக்க கவி அவர். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை (கருப்பு பணம்) என்றெழுதிய அவரது படைப்பில், கவிதைகளாக மலர்ந்த பலவும் அதிகம் பேசப்படாதிருப்பது. சொல்லப் போனால் இணையத்தில் அவரது தனிக் கவிதைகள் ஏற்றப்படாதிருப்பது வியப்புக்குரியது.

    குமுதம் இதழில் வந்த அவரது சிறப்பான கவிதை ஒன்று இப்படி தொடங்குகிறது:

    சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
           தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
    வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
          வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
    ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
          உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
    காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
          கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன…..

    இந்தப் பொது சிந்தனை, உதவும் உள்ளம், பரந்த பார்வைதான் கண்ணதாசனை இறவாக் கவியாக உயர்த்தியிருப்பது. மறைந்த பிறகும் பிறந்தநாளைக் கொண்டாட வைத்திருப்பது!

    (ஜூன் 24 அன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது)

    ************
    நன்றி:வண்ணக்கதிர்: ஜூலை 6. 2014

    Share
  • பொன்னியின் செல்வன்

     — எஸ் வி வேணுகோபாலன்.

    பொன்னியின் செல்வன்

    மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நாவல் போலவே மீண்டும் பார்க்கத் தூண்டும் மேடையேற்றம்

     

    poniyin selvan

     

    “ஆதி அந்தமில்லாத கற்பனை ஓடத்தில் ஏறி, நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து, இன்றைக்கு தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு முன் செல்வோமாக”
    – கல்கி (பொன்னியின் செல்வன் தொடரின் தொடக்க வாசகங்கள்- 1950)

    ஒரு வரலாற்றுப் புதினத்தை எத்தனை பேர் ஆர்வத்தோடு தொடர்ந்து படிப்பார்கள் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன் என்று தொடர் முடிவில் சொன்னாலும், எழுத்தாளர் கல்கி தனது நாவல் மிகப் பெரிய சலனத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்கிய அற்புத நாவல் அது. அதனை நாடக வடிவில் பார்க்க கிடைத்த வாய்ப்பு உண்மையில் பரவசமூட்டியது. பழத்தை உண்பது ஒன்று. அதன் ரசத்தை அருந்துவது வேறு. கைகளால் விதைப்பதைக் கண்களால் அறுவடை செய்கிறோம் – அது என்ன என்ற விடுகதை, எழுத்தின் மேன்மை பற்றிப் பேசுகிறது. நாவலாக வாசிப்பதை நாடகமாகக் கண்டு களிப்பது உண்மையில் வெவ்வேறான அனுபவம்தான். நாவல் நமக்கும் பிரதிக்குமான நேரடி தொடர்பு உணர்வு. கற்பனைகளின் பிணைப்புத் தன்மை தனித்துவமானது. கூட்டாகக் காண்கிற உணர்வு முற்றிலும் வேறான புறத் தன்மை கொண்டது. அதன் உந்துதல் கூட்டான அனுபவத்தின்முன் பிரத்தியேகத் தன்மையை ஆட்படுத்துவது.

    ஒரு கதைப் புத்தகத்தைத் திறக்கும்போதே அதன் கதை மாந்தர்கள் உயிர் பெற்று எழுந்து அவரவர் பாத்திரத்தின் இயல்பில் இயங்கத் தொடங்குகின்றனர். நாடகத்தில் அது உண்மையிலேயே நிகழ்கிறது. அதுவும் வரலாற்றுப் புதினம் என்கிறபோது அந்த உலகம் எந்தக் காலத்திலும் பார்வையாளர்களைத் தம்மோடு ஈர்த்துக் கரைக்க வல்லதாகிறது. அதன் சாத்தியங்கள் கதை, நாடக ஆக்கம், நடிப்பு, உத்திகள்…இன்னபிற அம்சங்களைச் சார்ந்தது என்றாலும், நாடகம் பார்த்தல் என்பது நமது பண்பாட்டு அசைவுகளில் நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதால் எப்போதுமே தனி கவன ஈர்ப்பு கொண்டதாகிறது.

    சோழர் காலம் என்பது பள்ளிக்கூடப் படிப்பில் மிகச் சில பக்கங்கள் பாடமாகவும், இரண்டு மூன்று கேள்விகளுக்குள் (அதையும் கட்டாயம் எழுத வேண்டுமென்பதில்லை. வேறு கேள்வியைத் தேர்வு செய்தால் தவிர்க்கவும் முடியும்) அடங்குவதாகவும் உள்ள விஷயம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் முக்கிய கட்டத்தினுள் இறங்கி வரலாற்றுத் தரவுகளை சேகரித்துக் கொண்டு கற்பனையின் விரிப்பில் அந்தக் கதையை நேர்த்தியாகப் பின்னிக் கொடுப்பது மிகுந்த சவாலான வேலை. சுவாரசியம் ஏற ஏற உண்மை சில தப்படிகள் பின்னே போய் நின்றுகொள்ளும். வெறும் தகவல்களின் கைப்பிடித்துச் சொல்லத் தொடங்கும் கதை எந்த ஈர்ப்பும் தரத் தவறி மூலையில் போய்க் கிடந்தது கதறி அழும். பொன்னியின் செல்வன், கல்கியை மிகவும் பெருமைக்குள்ளாக்கிய – அவரது மாஸ்டர் பீஸ் என்று பெயர் பெற்றுவிட்ட – வரலாற்று நாவல். அதன் நுட்பங்களை, அழகியலை, அது பேசும் அரசியலை, ஆட்சி பீடத்திற்கான போராட்டங்களை, வசீகரமான இழையோட்டம் கொள்ளும் காதலை, வஞ்சகத்தை, சூழ்ச்சியை, தியாகத்தை, அதன் இலக்கிய ரசனையை, இசை இன்பத்தை, உரையாடல் செழிப்பை உள்வாங்கி குறுகத் தறித்த குறளாக ஒரு படைப்பை வழங்குவது என்பது அசாதாரண வேலை. ஆனால் அதன் தரிசனம் உண்மையில் உற்சாகம் கொள்ள வைத்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

    ஆணும் பெண்ணுமான ஓர் ஆட்டக்காரக் கதை சொல்லி ஜோடியின் துணையோடு கதையை வேகமாக நகர்த்தும் உத்தி, நூற்றாண்டுகளுக்குமுன் பயணம் செய்து போகிற பார்வையாளர்களை சில பத்தாண்டுகளை மிகவும் வேகமாகக் கடக்கவும் பழக்கி விடுகிறது. ஆடிப் பெருக்கு அன்று பூம்புனல் பெருகி ஓடும் நாளில் தஞ்சை மண்ணில் கால் பதிக்கக் காஞ்சியிலிருந்து வருகை தரும் வந்தியத்தேவன் அறிமுகத்தோடுதான் நாவல் தொடங்கும். அவ்வண்ணமே தொடங்கும் நாடகம், எத்தனை எத்தனை திருப்பங்கள் நிறைந்த கதையை அனாயாசமாக முன்னோக்கிக் கொண்டு செல்கிறது!

    ஆட்டமும், பாட்டமுமாக மக்கள்திரள் கொண்டாடித் துள்ளும் சாலையில் அடுத்த அறிமுகம் வேறு யாராக இருக்க முடியும், ஆழ்வார்க்கடியான் திருமலை நம்பியைத் தவிர! முன் குடுமியும், வைஷ்ணவத்தை நிந்திப்பவர்களை ‘திருச்சாத்து’ சாத்தி அடித்து வெளுப்பதற்கான கைத்தடியுமாக அவர் எழுந்தருளும்போது பார்வையாளர் ஆரவாரம் அமோகமாகிறது. சைவரோடும், சமணரோடும் அவர் நடத்தும் வாதங்களினூடாக வல்லரையன் வந்தியத்தேவன் உள்ளே புகுவது படு ஜோரான நையாண்டி. வைகுண்டத்திற்கே தான் நேரேபோய்ப் பார்க்கையில் சிவனும், திருமாலும் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், கையால் முழம்போட்டுப் பார்த்தாலும் ஒரே உயரமே இருந்ததாகவும், அதற்கும் மேலே நம்பாது இருவரில் யார் உயர்ந்தவர்கள் என்று கேட்டபோது, அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு என்று இருவருமாகச் சொன்னதுமாகத் தெரிவித்து மண்ணை வெட்டி அடிப்பது கல்கியின் நகைச்சுவைப் பொறி !

    சோழ சாம்ராஜ்யத்தில் எல்லா ஆளுமையோடு திகழும் – சொந்தக் கொடியாகப் பனைமரக் கொடி வைத்துக் கொண்டிருக்கும் பழுவேட்டரையர் குலத்தின் பெரிய பழுவேட்டரையர் வந்திறங்குவது அடுத்த முக்கிய காட்சி. மூடு பல்லக்கில் அவர் செல்லும் இடமெல்லாம் செல்லும் அவரது இளம் மனைவி நந்தினி – யார் என்று அறியாத வழிப் பெண்ணாக அவளைப் பார்த்து வயதான காலத்திலும் அவர் மோகித்து ஊரறிய மணந்துகொண்ட பெண்! அவரது குழாம் அப்படியே கடம்பூர் மாளிகை செல்கிறது. அவரது ஆகப் பெரும் இலட்சியம், ஆட்சியில் இருக்கும் வயது மூத்த, உடல் நலம் நலிந்து மரணப் படுக்கையில் கிடக்கும் சுந்தரச் சோழனை தமது ஆளுமையைச் செலுத்திச் சம்மதிக்க வைத்து தமது பேச்சைக் கேட்கும் மதுராந்தகனை சக்ரவர்த்தி ஆக்குவது. அதற்கு சிற்றரசர்கள் பலரது ஆதரவை முன்னதாகத் திரட்டி வைத்துக் கொள்ள ரகசிய ஆலோசனைக்கு அவர் செல்வதிலிருந்து கதை விருவிருப்பு கொள்கிறது.

    ஆனால் நந்தினிக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. அவரது இலட்சியம் சோழ வம்சத்தையே அழிப்பது. அதற்கு ரவிதாசன் என்னும் மந்திரவாதியின் துணை, அவனது அடியாட்கள் பலம் அவளது தேர்வாக இருக்கிறது. அநாதை என்று கருதப்படும் நந்தினியின் பிறப்பில் உள்ள புதிர், கதையின் முக்கிய வேர்களில் ஒன்று. இதனிடையே இலங்கைப் போரை அடுத்து, அங்கே எல்லாம் இழந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான கட்டமைப்பில் இருக்கிறார் சுந்தர சோழரின் இளைய மகன் அருள் மொழி வர்மன். இளவரசர் ஆதித்திய கரிகாலன் உயிருக்கு ஆபத்து பல முனைகளில்! அவரது உயிர் நண்பன்தான் வந்தியத் தேவன்.

    அசாத்திய சாகசக்காரன், சமத்காரப் பேச்சுக்குச் சொந்தக்காரன், அழகிய காதலன் என்று உருவாக்கப்பட்டிருக்கும் வந்தியத்தேவன் பாத்திரம் மேடையைக் கட்டி ஆள்கிறது. துள்ளலும் ஓட்டமுமான நடை, துணிச்சலான நறுக் பேச்சு, வேகமான கத்தி வீச்சு, பகைவனுக்கு எதிராகவும் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரம், மதில்களுக்கிடையே தாவுவதும், பதுங்கிக் கேட்பதும், சிறையில் தப்புவதுமாக சிறப்பான உடல் மொழியில் நாடகம் நெடுக மிளிர்கிற பாத்திரம்! எனக்கு முகஸ்துதி பிடிக்காது என்னும் நந்தினியிடம், வேண்டுமானால் முதுகு பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும், ஆனால் நான் பெண்களிடத்தும் போர்க்களத்திலும் முதுகு காட்டப் பிடிக்காதவன், ஆகவே தாராளமாக என்னை முகஸ்துதி செய்யலாம் என்று சொல்லும் மறுமொழியும் கைத்தட்டல் பெறுகின்றன. ‘காளிதாசனும், முத்தொள்ளாயிரம் பாடிய கவியும் வருணிக்க மாட்டாத’ காதலைப் பரிமாறிக் கொள்ளும் கண்களோடு வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும் சந்திக்கும் கவித்துவ மிக்க காதல் காட்சியும் அற்புதமான நிகழ்த்துதல் ஆகிறது.

    கம்பீரம் குலையாத பாத்திரங்களாக குந்தவை ஒரு புறம், நந்தினி மறுபுறம். சிலிர்க்கவைக்கும் முக்கிய பெண் பாத்திரமாக பூங்குழலி என்னும் சமுத்திர குமாரி. துடுக்குப் பேச்சும், துடுப்பின் பேச்சுமாக கைக்குப் பிடிபடாது வந்தியத் தேவனோடு வம்பு செய்யும் அறிமுகக் காட்சியில் வாலைக் குமரியடி என்ற மாதிரி என்ன ஒயில், என்ன வேகம், என்ன தாவுதல், என்ன அசாதாரண குறும்பு….சாதாரண மனிதர்களே அரசாட்சிக்கு விசுவாசமிக்க பணியாளர்களாக அமைவதும், ஆட்சிக்கு அலைவோர் எப்போதும் சூழ்ச்சிக்கு திட்டமிடுவோராக இருப்பதும் நாடகத்தில் சிறப்பிடம் பெறுகிறது.

    பழுவேட்டரையரே ஒரு கட்டத்தில் அதிர்ந்துபோகும்படி நந்தினியின் சூழ்ச்சிகள் வேறு திசையில் வளர்கையில், நந்தினி தனது தந்தை சில காலம் சேர்ந்து வாழ்ந்த ஊமைப் பெண் மந்தாகினியின் பெண் என்ற புரிதலோடு குந்தவை அவள்பால் பரிவோடு அணுக நினைப்பதும், உண்மை வேறொன்றாக இருக்க, ஆதித்திய கரிகாலனைக் கொல்ல திட்டமிடும் நந்தினி அவனை உள்ளபடி நேசித்தவளாக இருக்க அதன் முரண்பாடுகள் விரியும் இடம் நாடகத்தின் முக்கிய பகுதியாகிறது. அந்தக் காட்சியின் இறுதி, கரிகாலனின் மரணத்தில் முடிவது அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற புதிரை எழுப்புகிறது.

    தனது நேசத்திற்குரியவன் தனது அண்ணனைக் கொன்ற பழியொடு எதிரே நிற்க குந்தவை படும் பாடு அடுத்த கட்டம். தனது பாவமே தனது மகனைக் கொன்றது என்று புலம்புகிறது சுந்தரச் சோழனின் முதிய உள்ளம். நடந்தவற்றின் விளக்கங்கள் அடுத்தடுத்து உரையாடலின் வழி வெளிச்சத்திற்கு வர, பழுவேட்டரையர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வந்தியத்தேவன் நிரபராதி என்று சொல்லிப் பிரிகிறார். இளைய மகன் அருள் மொழி வர்மன் (எதிர்காலத்தில் ராஜ ராஜன் என்று வழங்கப்பட இருப்பவன்) பட்டம் ஏற்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அவனோ சேந்தன் அமுதனுக்கு முடி சூட்டி அழகு பார்க்கும் இடத்தில் நிறைவு பெறுகிறது நாடகம்.

    பெரிய பிராட்டியின் பாத்திரம் நுட்பமானது. மதுராந்தகனின் தாய் என்று அறியப்பட்டிருப்பவரின் தீர்மானமான குரல், சக்கரவர்த்தியாக ஆவதைத் தடுக்க அவனுக்கும், அவருக்குமான வாத பிரதிவாதங்கள் மேடையில் முக்கியத்துவம் பெறுகின்றன. மூடு பல்லக்கின் திரை விலகுவதுபோல விரியும் நந்தினியின் பாத்திரமும் சிறப்புக் கவனத்தோடு நாடகத்தில் உருவாக்கம் கொள்கிறது. இலங்கையில் புத்த பிக்குகள் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தனக்கு சொல்லப்படும் யோசனையை நிராகரிக்கும் அருள் மொழி வர்மன், மதமும், ஆட்சியையும் கலக்கக் கூடாது என்று சொல்லுமிடம் கவனத்தைப் பெறுகிறது.

    மதில் அடுக்குகள், பட்டத்து யானை, படகோட்டம், அரச கட்டில் என சிறப்பான கலை அம்சங்களை அமைத்துக் கொடுத்திருப்பவர் தோட்டா தரணி. காட்சிப் பொருள்களின் நாடக மாந்தர்களைக் கொண்டே பின்புலத்தை சற்றே மாற்றி அமைத்தபடி, அடுத்தடுத்த காட்சிக்குத் திரையைப் பயன்படுத்தாது வேகமாக நகர்கிறது நாடகம். குரவைப் பாட்டும், கும்மாள ஆட்டமும், குறைவில்லாத நகைச்சுவையும், தொய்வற்ற கதைப் போக்கும், பிரமிக்க வைக்கும் வாள்சண்டையும், யானையின் பிரவேசமும், தெறிப்பான வசனங்களுமாக எந்தத் தலைமுறையினரையும் ஈர்க்க வல்லதாக நாடகம் வெளிப்படுகிறது.

    முந்தைய மேடையேற்றத்தின்போது தாம் ஏற்ற அதே பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் தோன்றும் பேராசிரியர் மு இராமசாமி தமது முக பாவங்களாலும், உடல் மொழியாலும் அற்புத நடிப்பை வழங்கியுள்ளார். அவரோடு நேருக்கு நேர் மோதும் ஆதித்திய கரிகாலன் வேடத்தை ஏற்றிருக்கும் நடிகர் பசுபதி சிறப்பாகச் செய்திருக்கிறார். வந்தியத்தேவன் (தயாள்), குந்தவை (பிரீதி), பூங்குழலி (காயத்ரி), அருள்மொழி வர்மன், அவன் காதலி வானதி,ஆழ்வார்க்கடியான், நந்தினி….என அனைத்துப் பாத்திரங்களைச் செய்தவர்களும் தங்களது அருமையான திறனைச் செலுத்தி நெஞ்சில் நிற்கின்றனர். சோழனாகிவிட்ட எனது அருமைத் தோழன் ரமேஷ், சுந்தரச் சோழன் வேடத்தில் மூப்பின் அவஸ்தைகளையும், ஆட்சி பாரத்தின் வேதனையையும், சூழ்நிலைக் கைதியாகித் துடிக்கும் வலியையும் சிறப்புறக் கொணர்ந்திருப்பவர். பால் ஜேக்கப் இசை, கதையின் பின்மொழியாக ஒலிக்கிறது.

    தமது தொடரை முடித்த பிறகு அதிகம் கேள்விக் கணைகளை எதிர்கொண்டதாக நாவலின் பின்னுரையில் எழுதுகிறார் கல்கி. எல்லாவற்றையும் எப்படி சொல்லிவிட முடியும் என்பதாகவும், வரலாற்று நாவலை ஒரு கட்டத்தில் முடிக்கத் தானே வேண்டும் என்றும் சொல்கிற அவரது குரல், மிகக் குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய நாவலை நாடகமாக நிகழ்த்துபவர்களும் ஒரு கட்டத்தில் அதை முடிக்கத் தானே வேண்டியிருக்கிறது என்ற குரலாக இப்போது கேட்கிறது. தொடர்ந்து படிக்க வைக்கும் நாவலைப் போலவே, மீண்டும் பார்க்கத் தூண்டுவதாகவே நாடகம் நிறைவடையவும் செய்கிறது. ஈடுபாட்டோடு உழைத்திருக்கும் அனைத்துக் கலைஞர்களுமே வாழ்த்துக்குரியவர்கள்.

     

    தமிழ் வாசக பரப்பில் இன்றும் உயிர்ப்போடு பேசப்படும் புதினங்களில் முக்கியமானதாக விளங்குவது கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன். மூன்றரை ஆண்டுக் காலம் கல்கி இதழில் வாராவாரம் தொடராக வந்து கொண்டிருந்தபோதே ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த வரலாற்றுக் காவியம் அது. 1950ல் தொடங்கப்பட்ட இந்த தொடர், 1954ல் முடிந்ததன் அறுபதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக பொன்னியின் செல்வன் மீண்டும் நாடக வடிவில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 1999ல் மேஜிக் லாண்டர்ன் குழுவினரின் படைப்பாக அரங்கேறிய இந்த நாடகம், மீண்டும் அவர்களது குழுவின் ஆதார வலுவோடு புதிய கலைஞர்களையும் உட்கொண்டு எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாக சென்னை மியூசிக் அகாதமியில் ஜூன் 8ம் தேதி முதல் 14 தேதி வரை மாலைக் காட்சியாக நிகழ்த்தப் படுகிறது.

    நாவல் நிறைவு பெற்ற அதே 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி எழுத்தாளர் கல்கி இயற்கை எய்தினார். இந்த ஆண்டு, அவரது மறைவின் அறுபதாண்டு நிறைவும் கூட! இந்த நாவல் வெளிவந்தபோது கல்கி இதழின் விற்பனை 75,000 பிரதிகள் கூடியதாம். அதனால், தேச அளவில் இரண்டாவது அதிக விற்பனை ஆகும் இதழாக கல்கி வளர்ந்தது. கல்கி மறைவுக்குப் பின்னரும் தொடர் மறுபிரசுரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அப்படியான ஒவ்வொரு தருணத்திலும் கல்கி இதழ் 20,000 பிரதிகள் அதிக விற்பனை ஆனதாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்குத் தொடர்ந்து வாசகர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாவல், பொன்னியின் செல்வன்.

    அந்த நாவல்தான் இப்போது மீண்டும் நாடக வடிவில் பார்வையாளரை ஈர்க்க வருகிறது. மூன்றரை ஆண்டுக் காலம் தொடராக வந்த நாவல், மூன்றரை மணி நேரம் காட்சிப் படுத்தப் படுவது ஓர் அசாத்திய முயற்சி. நாடக ஆக்கத்தை குமரவேல் சாதித்திருக்கிறார். இயக்குனர் பிரவீன் சிறப்பான நெறியாள்கை செய்திருக்கிறார். பல முறை நாவலை வாசித்துத் திளைத்த நினைவுகளோடு வருபவர்களையும், நாவல் வாசிக்காத புதிய தலைமுறையினரையும் ஒரு சேர நிறைவான உள்ளத்தோடு திரும்புமாறு ஓர் அனுபவத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார் எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வரவேற்கும் இளங்கோ குமணன். அது நிறைவேறும் என்றே தோன்றுகிறது.

    நன்றி: தீக்கதிர்

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&page=4

    Share
  • பெற்றோர் கற்க வேண்டியது

    எஸ் வி வேணுகோபாலன்

    ameமொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை தி இந்து நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக்கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது என்று சிந்தித்தார்…கடுமையாகப் போராடி முதல் வகுப்பில் சேர்த்துவிடப்பட்ட மொகலம்மா பிறகு திரும்பிப் பார்க்க நேரவே இல்லை…கல்லூரிப் படிப்பையே அழகாக முடித்துக் காட்டினார். அசையவும், நகரவும் இயலாத ஒரு பெண் பிறகு எத்தனை பேரை அசைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.

    ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மொகலம்மாவின் தாய் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் மொகலம்மா தனது தாய் முடியாது என்று நினைத்த படிக்கட்டுகளிலும் ஏறத் தொடங்கியது முக்கியமானது. தனது சிற்றூரின் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது முதல், எத்தனையோ விதங்களில் தனது படிப்பின் பயனை வழங்கிக் கொண்டிருக்கிறார் மொகலம்மா.

    பெற்றோரின் பங்கு

    தமது குழந்தைகளுக்கான கல்விக்குப் பாடு எடுப்பதில் பெற்றோர் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி பெறுதல் சவால் மிகுந்ததாக மாற்றப்பட்டிருக்கிற இன்றைய சூழலில் பெற்றோர் செய்யும் தேர்வு, பெற்றோர் மேற்கொள்ளும் அணுகுமுறை, பெற்றோர் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை.

    குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு, குழந்தைகளது எதிர்காலம் குறித்த கலக்கம் போன்றவை பெற்றோர் உள்ளத்தில் ஆதிக்கம் கொள்கின்றன. இதன் பிரதிபலிப்பாக, குழந்தைகள் அவர்களாக என்ன விரும்புகின்றனர், என்ன தேவையில்லை என்று கருதுகின்றனர் போன்றவை குறித்தெல்லாம் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. உளவியல் ரீதியாக இரண்டு பக்கங்களிலும் இதனால் நேரும் அதிர்ச்சியும், அதன் தொடர் நிகழ்வுகளும் அதிகம் பேசப்படாது போகின்றன.

    பெற்றோர் பொறுப்பில் நுட்பமான மாற்றங்கள்

    பெற்றோர் பொறுப்பு என்ற அம்சத்தில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள் ஒரு தனி ஆய்வுக்கு உரியவை. புதிய தாராளமய காலத்தின் தாக்கம் இதிலும் இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா? அது மட்டுமின்றி, ஐம்பதுகள், அறுபதுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறை பெற்றோர் அவர்களும் கல்வி பெற்று முன்னேறியவர்களாக மாறுகையில் தங்களுடைய குழந்தைகளது கல்வி விஷயத்தில் அவர்களது ஈடுபாடு என்பதன் தன்மை முந்தைய தலைமுறை பெற்றோர் கொண்டிருந்த ஈடுபாட்டின் தன்மையிலிருந்து மாறுபட்டு வந்திருப்பதில் வியப்பில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது, அந்த ஈடுபாடு என்பது வழிகாட்டுதல்-ஒத்துழைப்பு-பேருதவி என்ற வகையிலிருந்து குறுக்கீடு-தலையீடு-முட்டுக்கட்டை என்கிற இன்னோர் எல்லை வரை பயணம் செய்வது பற்றியதுதான்.

    இன்னும்கூட சிற்றூர்களிலிருந்து முதல் தலைமுறை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்கல்விக்கும் இன்றும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சமூகத்தின் தட்டுக்களில் அடுத்த முனையில் உயர் கல்வி பயின்ற மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்துவிட்ட குடும்பங்களையும் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டின் எதிரொலியும் இப்போதைய பெற்றோர் நடவடிக்கைகளில் தென்படுவதைப் பார்க்க முடியும்.

    கல்வி எதற்காக?

    கல்வி என்பது சமூக மதிப்பீடு என்ற காலம் ஒன்று இருந்தது. அது தேவையில்லை, வாழத் தெரிந்தால் போதும், சொத்து இருந்தால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்ச சிந்தனைகளோடு முட்டி மோதி கல்வியின் வளர்ச்சி ஏற்படவே செய்தது. கல்வி நாகரிகத்தின் அடையாளம் என்ற வரையறையை முன்வைத்தாலும், சமூக பாகுபாடுகளின் தாக்கத்தின்முன் கல்வி பெற்றவர்களும் தங்களை ஒப்புக் கொடுத்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. படிப்பு என்பது வேறு, கால காலமான சமூக வழக்கம் என்பது வேறு. அந்த சமூக வழக்கத்தில் ஊறிய சிந்தனைகளைத்தான் நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டும் என்ற தேர்வு தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால் கல்வி இதற்கான ஒரு வேகத் தடையை நிச்சயம் ஏற்படுத்தவே செய்கிறது. அது விரிந்த விவாதத்திற்கு உட்பட்ட பொருள்.

    இந்தப் பின்புலத்தில் பெற்றோரின் இயங்குதல் வெவ்வேறு முறைகளில் அமைகிறது.

    எந்த மாதிரியான ஊடாட்டம் ஆரோக்கியமானது?

    குழந்தைகள் வளர்ச்சியில் பெற்றோர் என்ன மாதிரியான முறையில் ஊடாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் ஏராளம் சொல்லியிருக்கின்றனர். மருத்துவ உலகம்-குறிப்பாக உளவியல் மருத்துவம் அருமையான அம்சங்களை சமூக போக்கிலிருந்தும், தனித் தனி அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்தும் படிப்பினைகளாகவும் கூட வழங்கிக் கொண்டே இருக்கிறது.

    அதற்கெல்லாம் வெகுமுன்பே கலீல் கிப்ரான், அதிரடியாகச் சொன்ன கவிதை மொழியை உலகம் இன்னும் கற்க மறுக்கிறது.

    உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் புதல்வர்களும் புதல்வியரும் ஆவர். அவர்கள் உங்கள் மூலம் வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து தோன்றியவர்கள் அல்ல.
    உங்களோடு இருப்பதனானேலேயே அவர்கள் உங்களுக்கானவர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
    உங்கள் அன்பைச் செலுத்தலாம் நீங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல.
    ஏனெனில் அவர்களுக்கே உரித்தான எண்ணங்கள் அவர்களுக்கு உண்டு….

    என்று விரியும் அந்தக் கவிதை குழந்தைகளின் தனித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத உதவிகளையே பெற்றோர் செய்யக் கேட்டுக் கொள்கிறது.

    நடைமுறையில் ‘சொன்னா சொன்ன பேச்சைக் கேட்கணும் இல்லையென்றால் எக்கேடும் கெட்டுப் போகட்டும்’ என்பதான அணுகுமுறை பெற்றோரிடம் ஆதிக்கம் செய்கிறது. நொடிக்கு நொடி தலையீடு செய்வதும் சரி, கண்டு கொள்ளாமலே விட்டு விடுவதும் சரி ஒரு புள்ளியில் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    கல்வியைக் குறித்த மட்டில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் இங்கே சற்று காண்போம். இப்போதைய கல்வி முறையின் வேகத் தன்மை, போட்டி உலகம், சம வயதில் உள்ள குழந்தைகளை ஒப்புநோக்கும் பிரச்சனை இவையே அதிகம் கவனிக்கத் தக்க விஷயங்களாக உருப்பெற்று வருகின்றன.

    சலவை எந்திர உளவியல் போக்கு

    பள்ளியில் தொடக்கநிலை வகுப்பில் சேர்த்ததும், இனி அடுத்தடுத்த வளர்ச்சியை இந்த நிறுவன ஏற்பாடே கவனித்துக் கொள்ளும் என்று கருதுகிற தன்மை அதிகமாகி வருகிறது. அவ்வப் பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதனைச் செலுத்தி வருவது; நன்கொடையோ, புத்தகங்களோ, இதுவோ, அதுவோ என்ன கேட்டாலும் கொட்டிக் கொட்டிச் செய்துவிட்டு பள்ளி இறுதி வகுப்பு, பிளஸ் 2, பின்னர் உயர் கல்விக்குத் தகுதியாக வெளியேறி விட்டால் போதும் என்கிற மனப்பான்மை அது! அங்கே என்ன நடக்கிறது; என்னவிதமான கல்வி கிடைக்கிறது; குழந்தையின் பன்முகத் தேடலுக்கு ஊக்கம் பிறக்கிறதா, முடங்கிப் போகிறதா என்ற எதையும் பெற்றோர் அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை.

    மேற்கண்ட அணுகுமுறையை ‘சலவை எந்திர உளவியல்‘ (WASHING MACHINE PSYCHOLOGY) என்ற பெயரால் அடையாளப்படுத்தலாம். துணிமணிகளை தனித்தனியாக எடுத்து, தண்ணீரில் அழுக்கு போக அலசி, சலவைக் கட்டியைப் பயன்படுத்தித் துவைத்து, வெளுத்து, அலசிப் பிழிந்து உலர்த்திய காலம் இப்போது மாறிவிட்டது; பொறுப்பை ஓர் எந்திரத்திடம் ஒப்படைத்து தண்ணீர், சலவைப் பொருள், வெப்ப அளவு, துவைக்க வேண்டிய துணிக்கேற்ற வேக அளவு இவற்றை மட்டும் சரி பார்த்து விசையை அழுத்திவிட்டு நாம் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடலாம். எந்திரம் அதன் வேலையை முடித்தபின் துணியை எடுத்து உலர்த்தினால் போதும். அதிநவீன எந்திரம் கிடைத்தால் அதுவே துணிகளை உலர்த்தியும் கொடுத்துவிடும்.

    இப்படி பட்டும் படாத தன்மை குழந்தைகளை ஆரம்ப நிலையில் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு உயர் கல்விக்குப் போகும் நேரத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான பழியை அவர்கள் மீதே சுமத்துவதில் முடிகிறது. காசு கொடுத்தால் போதும்; அதோடு என் கடமை முடிகிறது என்ற போக்கு. குழந்தைகளது நலனில் உண்மையான பாத்திரம் வகிக்க விடுவதில்லை. மாணவர்களிடம் தோன்றும் முரட்டுத் தனம், தகாத சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்கள், எந்தத் தீய செயலுக்கும் ஆட்பட்டுவிடும் அபாயம் இவற்றுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் காரணமாகிறது. அருமையான குழந்தைகள் முடங்கிப் போவதும் நேர்கிறது.

    அர்ச்சனா எத்தனை மதிப்பெண் வாங்கினால் எனக்கென்ன?

    இன்னொருபுறம் ஓயாத தலையீடு, ஒப்பு நோக்கல் பிரச்சனை. மதுரை எஸ் பி ஓ ஏ மாணவர் கார்நியோ நிமலன் (தி இந்து: திறந்த பக்கம்:மார்ச் 11, 2012) எழுதியிருந்த கட்டுரையில், “தேர்வுகளில் எனது மதிப்பெண் பற்றிப் பேசுங்கள் என் தந்தையே, அர்ச்சனா எவ்வளவு வாங்கி இருக்கிறாள் என்று எதற்குக் கேட்கிறீர்கள்?” என்று பொரிந்து தள்ளி இருந்தார். போட்டி எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருப்பதில் தவறில்லை. என் பெற்றோருக்கும் அவள் பெற்றோர்க்கும் எதற்கு போட்டி என்று மேலும் எழுதுகிறார் அந்த மாணவர்.

    மதிப்பெண் பட்டியல் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர், 99 மதிப்பெண்கள் வாங்கினாலும் தனது மகள் ஏன் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று வாதம் செய்கின்றனர். இது ஏதோ பத்தாம் வகுப்பு காலத்தில் அல்ல, ஏழாம் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே இந்த சோதனை. கொண்டாட வேண்டிய குழந்தைகளை ஓயாது துரத்தித் துரத்தி வெறுப்படைய வைப்பது மோசமான உளவியல் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.

    மைதானமே இல்லாத பள்ளிக்கூடங்கள்

    குழந்தைகளுக்கு பாடத்தின் மீது மட்டுமே கவனம் வேண்டும் என்ற வகையில், விளையாட்டு நேரத்தை அவர்களுக்கு மறுப்பது அவர்களை வேறு வகையில் தங்களது கேளிக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளத் தூண்டுகிறது. வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்படும் பிள்ளைகள் கடைசியில் அலைபேசி, கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்களில் மூழ்கி தங்களது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நல்ல மதிப்பெண்களுக்காக விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில் சேர்க்கக் கூட தயங்குவதில்லை பெற்றோர்.

    மதிப்பெண்கள் குறித்த பெற்றோரது பதட்டத்தின் மிகப் பெரிய சோக வெளிப்பாடுதான் பெருகிவரும் ‘போர்டிங்’ பள்ளிகள். பல மைல் தொலைவுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர் மாணவர்கள். குழந்தைகளை ஜெயிலில் போட்டு, பின்னர் பெயிலில் எடுத்துப் பார்த்துவரும் பெற்றோர் என்று இதைத் தான் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா சோகமாக வருணிக்கிறார்.

    கல்வி என்பது மூளைக்கான விஷயம் என்ற பெற்றோரின் தவறான புரிதலால் குழந்தைகளுக்கான கல்வி பலவித வாழ்க்கை அம்சங்களையும் உள்ளடக்கியது என்பது பிடிபடாமலே போகிறது. துள்ளாட்டமான கல்விப் பயணம் வாடி வதங்கிய களைப்பான நகர்த்தலாக மாறிவிடுவதில் பெற்றோரின் வருந்தத் தக்க பங்களிப்பு சேர்ந்திருக்கிறது. அவர்களது போதாமை அல்லது அவர்களது பிடிவாதம் அல்லது அவர்களது பரிதாபத்திற்குரிய குழப்பம் இதற்கு காரணமாகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி இவை ஏற்படுத்தும் சிக்கல்கள் தனியே விவாதிக்க வேண்டியவை.

    கசங்கிப் போகும் மலரின் இதழ்களாய்

    unnamedதங்களைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோராக எல்லோரும் இருக்க விரும்புகிறோம். சங்கடமான எந்த இடைச் செருகலையும் நாம் கடந்து போகத் துடிக்கிறோம். பதட்டமான அன்றாட வாழ்க்கை குழந்தைகளின் மீதான சந்தேகமாக வெளிப்படுகிறது. பிள்ளைகள் எந்த விஷயத்தைப் பேச வரும்போதும், நாம் குறுக்கிட்டுக் கேட்கும் அவர்களது தேர்வுகள், மதிப்பெண்கள் குறித்த கேள்விகள் அவர்களது முகத்தில் படரும் வெளிச்சத்தை ஊதி அனைத்துவிடுகிறது. மற்ற குழந்தைகளின் குறும்புகள், வகுப்பறையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு, சேட்டைகள் பற்றியெல்லாம் காதுகொடுத்து கேட்பதற்கு அனுமதிக்காத வேகமான வாழ்க்கைமுறை ரசனை மிக்க பருவத்தின் அத்தனை இதழ்களையும் ஈவிரக்கமின்றிக் கசக்கிப் போடுவதாகிறது.

    கண்கள் விரிய விரிய அவர்கள் புதிதாகக் கற்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளவரும்போது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற பதிலடி அவர்களது உளவியலைச் சிதைக்கிறது. இதன் பிரதிபலிப்பு அவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் அல்லது உயர் கல்விக்கான தயாரிப்பில் இருக்கையில் பெற்றோர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் எரிந்து விழுவதில் காணப்படுகிறது.

    வேற்று உலக ஜீவராசிகளா?

    பத்தாம் வகுப்பு எட்டுகிற குழந்தையின் பெற்றோர் அந்த நாளிலிருந்து பதட்டமான உடைகளை அணிந்து, வேகமான உணவுவகைகளை ருசித்து, தடுமாற்றமான சாலைகளில், நெரிசல் மிக்க நேரங்களில் நடையாய் நடந்து, குழப்பமான கனவுகளுக்குப் பயந்து தூங்காமலே விழித்திருந்து வேறு ஓர் உலகத்தின் ஜீவராசிகள் மாதிரி நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.

    பள்ளிகளும், நண்பர்களும்,உறவினர்களும் இந்தப் பெற்றோரை வாட்டி எடுப்பது சொல்லி மாளாது. ஹால் டிக்கெட்டை கோவிலுக்குச் சென்று வைத்து அருச்சனை செய்வதிலிருந்து, பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தேர்வு நாளன்று பள்ளி வாசலில் கும்பலாகத் திரண்டு சென்று வாழ்த்தோ வாழ்த்தென்று சொல்லி உருட்டி மிரட்டி அனுப்புவது என நடப்பு காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுக் காலங்களில் பெற்றோர் படும் பாடும், அவர்கள் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கும் பாடும் சித்திரவதை.

    ஒரு காலகட்டம் வரை பட்டப் படிப்புதான் முன்னுரிமை பட்டியலில் இருந்தது. எல்லாரும் பி ஏ, பி எஸ் சி என்று அலைந்தனர். தொண்ணூறுகளின் இறுதியில் எல்லா பெற்றோர்க்கும் பொறியியல் தேவதை கனவில் வரத் தொடங்கினாள். மருத்துவ அம்மன் ஆட்டிப் படைத்தாள். இலக்கியம், சமூக அறிவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடப் பொருள்கள் எதற்கும் விளங்காது போனவர்களுக்கு என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.

    தனி அனுபவங்களும் பொதுவான படிப்பினைகளும்

    இதன் அவஸ்தைகளும் பெற்றோர்-குழந்தைகள் விவாதத்தில் பெருத்த பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நிறைய பிள்ளைகள் பாதியில் கல்லூரிப் படிப்பிலிருந்து நின்றுவிடுவது, திணறுவது, தோல்வியடைந்து நொறுங்கிப் போவது என்ற பல பாதிப்புகளை பொது விவாதங்களில் நாம் பேசுவது கிடையாது. அது தனித் தனி நபரது அனுபவம் போலவும், அவரவர் விதி என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.

    கல்வி குறித்த புரிதலில் ஏற்படும் அடிப்படை குழப்பங்களே இத்தனை பிரச்சனைகளுக்கும் தோற்றுவாய். சமூக மனிதர்கள் நாம் என்பதும், கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றப் படி என்பதும், சொந்தத் திறன்-தேடல்-பேரார்வம் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதும், யாரும் யாரோடும் ஒப்பிடத் தக்கவர் இல்லை என்பதும் நமக்குப் பிடிபட்டு விடுமானால் சமூகத்தின் தோற்றம் அதிசயிக்கத் தக்க விதத்தில் உருமாறும்.

    மொகலம்மா அவரது தாய்க்கு ஒற்றைக் குழந்தை அல்ல. ஆனால், படிப்பு வாசனை அற்ற அந்தத் தாய், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், உடல் ஊனமுற்றிருக்கும் மொகலம்மாவுக்குத் தான் கல்வி முக்கியம் என்று கண்டறிந்தார். இன்று அந்தக் குடும்பத்தை மொகலம்மா தனது ஊதியத்தைக் கொண்டு பொறுப்பேற்று நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார். கல்வியற்ற தாய்க்கு அவரது அடிப்படை மனித இயல்பு உரமூட்டியது. புறக்கணிப்பு, விதி, சாபம் என்ற எல்லா ஊழையும் உப்பக்கம் கண்டு உழைவின்றித் தாழாது முயற்சி மேற்கொண்டு முன்னேறும் துணிவை மொகலம்மாவுக்கு அவரது கல்வி புகட்டியது. இதுவே வாழ்க்கையின் வலிமிகுந்த ஆனால் சுவாரசியமிக்க நம்பிக்கை வழிப் பயணம்.

    *************
    நன்றி: செம்மலர் ஜூன் 2014 இதழ்

    Share
  • சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    — எஸ் வி வேணுகோபாலன்

    வாழ்க்கை அனுபவம்: சென்ற இடமெல்லாம் (தொலையும்) செருப்பு

    Kolhapuri-chappalsமந்தைவெளி அம்மனுக்கும் எனக்கும் இருந்த உடன்படிக்கை யாருக்கும் தெரியாது. எத்தனை நாள் செருப்பை கோவில் வாசலிலேயே மறந்து போட்டுவிட்டு அருகே இருக்கும் மாநகராட்சி பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது நான் மூன்றாவது வகுப்புதான். எனது கால் அளவும், செருப்பளவும் சிறியது தான். இருக்கட்டுமே, ஒரு நாள், இல்லை ஒரே ஒரு நாள் திருடு போனதுண்டா… மாலையில் வீடு திரும்புகையில்,  இந்தாடா எடுத்துப் போட்டுட்டுப் போடா என் ராசா என்று சொல்வது மாதிரி அம்மனே காப்பாற்றி வைத்திருப்பாள் ஜோடி செருப்பை.

    ஆனால் செருப்பை கவன பிசகாக எங்காவது விட்டுவிட்டுத் தேடுவது, அல்லது தொலைப்பது என்பது எனது மரபணுவில் உள்ள பிரச்சனை என்பது உலகோருக்குத் தெரிய மறுக்கிறது. மாணவப் பருவத்தில் காசி விஜயம் மேற்கொண்ட போது, காசி விசுவநாதர் கோவில் வாசலில் எத்தனையோ முறை விட்டது ஒருபோதும் தொலையக் கிடையாது. தமிழர்கள் தங்குவதற்காக நம்மவர்கள் அங்கே சென்று கட்டி வைத்திருக்கும் சத்திர வாசலில் ஒரே ஒரு முறை கழற்றி வைத்தது, அடுத்த நொடியே காணமல் போய்விட்டது. வெளியே சொல்ல முடியுமா?

    ஆனால் செருப்பு தொலைத்த விதங்களில் இரண்டு மிகவும் ருசியானவை. இரண்டும் இரண்டு கவிதைகள். நாங்கள் அப்போதுதான் சென்னை ரங்கராஜபுரம் பகுதியில் ஓர் அவுட் ஹவுஸ் பகுதியாக இருந்த மிகச் சிறு வீட்டைச் சொந்தமாக்கிக் கொண்டு குடியேறி இருந்தோம். அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி அந்த வீட்டை வாங்கியதில். மாமரங்கள். தென்னை மரங்கள். சுற்றிலும் சின்னஞ்சிறு செடிகள் போட இடம். அந்தக் குறுந்தோட்டப் பகுதியில் அழகான கிணறு. என்று அம்மாவுக்கும் அந்த வீடு கொள்ளையாகப் பிடித்தமாகிவிட்டது.

    அந்தத் தோட்டத்தில் கிணற்றடியில் அரை வட்ட சிமிண்டுப் பூச்சின் மீது ஒரு துணி தோய்க்கும் கல். எனது காலை நேரம் அங்கே நின்று பல் துலக்குவதும், பின்னர் குளிக்கப் போகுமுன் துணி தோய்க்க அங்கே போய் நின்று கொண்டு திரைப்பாடல்களை சத்தமாகப் பாடியபடி துணிகளை வெளுத்தெடுப்பதுமாகக் கழிந்து கொண்டிருந்தது.

    ஒரு ஞாயிற்றுக் கிழமை நண்பகலைத் தொடும் நேரத்தில் நான் பி பி ஸ்ரீநிவாசாக மாறிக் கொண்டிருந்தது தெரியாமல் எனக்குப் பின்புறம் சுவர் தாண்டி ஏதோ வந்து விழுந்த பெருஞ்சத்தம். திரும்பிப் பார்த்தால் பதினான்கு வயது கூட சொல்ல முடியாத ஒரு சிறுவன். காலில் ஒரே இரத்தம். என்னை அச்சத்தோடு பார்த்தபடி, தத்தித் தத்தி நடந்து வந்தான். “என்னப்பா, யாரு நீ, எங்கிருந்து ஓடி வர்ற…எதுக்கு சுவர் எகிறி குதிச்ச?” என்று கேட்டேன்.

    “சார், எங்க மாமா என்ன அடி அடின்னு அடிச்சுத் துவைச்சிட்டாரு சார்…தப்பி ஓடி வர்றேன்…குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்க சார்” என்றான். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பி பி எஸ் பாட்டைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சமையல் அறைக்கு ஓடினேன். என்ன ஏது என்று கேட்டுக் கொண்டே வந்த  அம்மாவிடம்,”பாவம் சின்ன பையன்…மாமா அடிச்சாருன்னு ஓடி வந்து குதிச்சிருக்கான் நம்ம வீட்டுக்குள்ள…தண்ணி தாகம் பாவம்” என்றபடி தோட்டத்திற்குப் போனேன். ஆனால் …பையனைக் காணோம்.

    எங்கே போயிருப்பான் என்று உள்ளே போய் தண்ணீர்ச் செம்பை வைத்துவிட்டுப் பார்த்தபோது, வாசல் வழியாக மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்கள் கழித்து மூன்று நான்கு பேர் ஓடி வந்தனர். “சார் சார், ஒரு பொடிப் பையன் உங்க காம்பவுண்ட் வழியாத் தானே குதிச்சான், எங்கே அவன்?” என்றனர். ” நீங்கதான் அவன் மாமாவா…பாவம், ஏன் போட்டு அடிக்கிறீங்க..ரத்தம் சொட்டச் சொட்ட வந்தானே.. “என்றேன்.

    “மண்ணாங்கட்டி, யாருய்யா சொன்னது நான் அவனுக்கு மாமான்னு. திருட்டுப் பய சார். எதையோ திருட எங்க வீட்டுக்குள்ள புகுந்தான். பார்த்துக் குரல்  கொடுத்ததும்,அப்படியே உங்க காம்பவுண்ட் சுவத்துல ஏறி குதிச்சிருக்கான். அங்கே பொத்தி வச்சிருக்கிற கண்ணாடிச் சில்லு குத்திக் கிழிச்ச காலில் இருந்து வந்த ரத்தமாயிருக்கும் சார் அது” என்றார் வந்தவரில் ஒருவர். போகட்டும் போ என்று அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்து பார்த்தால், வீட்டு முகப்பில் விட்டு வைத்திருந்த செருப்பைக் காணவில்லை.. சரிதான் பொடிப் பையன் அன்போடு அந்தச் செருப்பையும் நகர்த்திக் கொண்டு போய்விட்டான் என்று தெரிந்தது. அப்போதும், பாவம் தண்ணீர் குடிக்காமல் போய்விட்டானே என்ற வருத்தமே அதிகம் இருந்தது.

    அதைவிட அருமையான செருப்புத் திருட்டுக்கு ஏமாற நான் திருவான்மியூர் சென்று குடியேற வேண்டியிருந்தது. அந்த வீட்டுக்கு இரண்டு பக்கம் வாசல்படி. முதல் நாள் இரவுதான் புது ஜோடி செருப்பை வாங்கி வந்திருந்தேன். முன்பக்க அறையின் ஓரம் இருந்தது அது. மறுநாள் அதிகாலை வழக்கம்போல், தண்ணீர்க் குழாயில் நீர் பிடித்துக் குடங்களைக் கொண்டு தரும் வேலைக்காரப் பெண்ணுக்காக ஒரு பக்க வாசல் கதவைத் திறந்து வைத்தேன். அப்படியே தரையில் கீழே உட்கார்ந்தவன் சொக்கித் தூங்கிவிட்டேன். விழித்தெழுந்து பார்த்தபோது இரண்டு குடம் தண்ணீர் பத்திரமாயிருந்தது. புது ஜோடி செருப்பு போயே போய்விட்டது.

    அது பிரச்சனை இல்லை. எனது மாமனாருக்கு நான் செருப்பை ஏமாந்து திருட்டுக் கொடுத்தது பற்றி விளக்கக் கடமைப் பட்டிருந்தேன். “தெரியல சார்…யாரோ வந்து எடுத்துப் போய்விட்டான்” என்றேன். அவருக்கு அடாத கோபம். உடனே எனது நாத்திகம் தான் அவருக்குத் துணைக்கு நின்றது – என்னைக் கடிந்து கொள்வதற்கு. வீட்டுக்கு நடுவே நின்றுகொண்டு , “ஒரு பயலும் இங்கே சாமி கும்பிடறதில்ல…ஒரு பூஜை, புனஸ்காரம் எதுவும் இங்கே நடப்பதில்ல…அதான் செருப்பு போச்சு. கொஞ்சமாவது பயபக்தி இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா” என்றார் உரத்த குரலில்.

    “நானாவது கோயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுட்டு வர்றேன்..இன்னும் என்ன எல்லாம் நடக்குமோ?” என்றபடி இன்னொரு வாசல் பக்கம் சென்றார். தனது செருப்பை எடுத்துப் போட்டுக் கொள்ளச் சென்றவர் நெருப்பை மிதித்தவர் மாதிரி துடித்தார். அவரது ஜோடி செருப்புக்களும் சேர்ந்தே காணாமல் போயிருந்தன.

     
     
     
     
    நன்றி: தமிழ் இந்து
    sv.venu@gmail.com
     
     
     
     

    படம் உதவி:  http://blog.zodomo.com/7-kinds-of-shoes-every-woman-must-own/mojris-and-kolhapuri-chappals-2/, http://blog.zodomo.com/wp-content/uploads/2012/03/Mojris-and-Kolhapuri-chappals-2.jpg

    http://kids.baps.org/storytime/bharatthegemofloyality.htm, http://kids.baps.org/storytime/photo/bharatthegemofloyality.jpg

    Share