Tag: எஸ்.வி. வேணுகோபாலன்

  • குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

    எஸ் வி வேணுகோபாலன்

    கிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள இனி ஒருபோதும் புன்னகை பூத்த அந்த முகம் கிட்டப்போவதில்லை. மறைந்தே போய்விட்டார் கிரேசி மோகன்.

    திரையில் ஒலிக்கும் அதே குரல், கொஞ்சம் வெற்றிலை சீவல் குழைவோடு மேலும் கனிந்து எத்தனையோ நாட்கள், இரவுகள் தனிப்பட எனக்காக என் காதில் ஒலிக்கக் கேட்ட அந்தக் குரல் காற்றில் கலந்துவிட்டது. ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம், மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி’ என்று வரும் நந்திக் கலம்பகம்போல், ‘காற்று வெளியை நிறைத்ததுன் சிரிப்பு, கனிவகை புகுந்ததுன் நேயம்’ என்றுதான் எழுத வேண்டும். அவரை அறியாத தமிழ்த்திரை ரசிகர்களோ, சாதாரண மனிதர்களோ தமிழகத்தில் இருக்க இயலாதென்றே திடமாக நம்புகிறேன்.

    செம்மலர் இதழில் வெளியாகி இருந்த ‘மரணத்தை முன் வைத்து..’ என்ற எனது கட்டுரை ஒன்றைத் தற்செயலாக மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அதை உடனே வாசித்துவிட்டு, பாராட்டுதலோடு சுருக்கமான ஒரு பதிலை அனுப்பி இருந்தார்:

    பிரமாதம் சார் கட்டுரை….

    ”மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
    வரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்
    அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
    சிவனருளுன் சீமந்தச் சேய்”..

    அதனோடு நிறைவு பெறாத மனத்தோடு, இரவு அலைபேசியில் அழைக்கவும் செய்தார். அவரோடான முதல் உரையாடல் அது. மரணத்தை முன்வைத்து எப்படி அத்தனை நகைச்சுவையாக எழுத முடிந்தது என்ற அவரது பாராட்டுக் குறிப்போடு முகிழ்த்தது நான்காண்டுகளுக்குமுன் அவரோடு வாய்த்த நட்பு.

    கவிதை பிரியர், வெண்பா சித்தர் என்பதை அப்போதே உணர்ந்த என்னை, இடையறாது திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வேகத்திற்கேற்ப பதில் அனுப்புவது சவாலான வேலை. ஏனெனில், வெண்பாவுக்கு பதில் வெண்பா எழுதி அனுப்புவதை மிகவும் சிலாகித்து வாசித்து ரசிக்கவும் செய்தது அவரது குழந்தைமை பொங்கிய குதூகல உள்ளம். எண்ணற்ற வெண்பாக்கள்….ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு என்ன மொழியிலும் சொற்களை முந்திரி பருப்பு போல மேலே தூவி கமகமக்க சூடான வெண்பா(யசத்தை) மின்னஞ்சல் வழி ஊற்றி அனுப்பிக் கொண்டே இருப்பார்.

    சிறந்த ஓவியரும், தி இந்து கார்ட்டூனிஸ்டுமான திரு கேஷவ் அவர்கள், மோகனுக்கு விருப்பமான வேலையை அன்றாடம் வழங்கி மகிழ்ந்திருப்பார். கிருஷ்ணரைத் தமது கற்பனையில் இழைத்த தூரிகையைக் கொண்டு அவர் வரையும் அற்புதமான ஓவியங்களை முன்வைத்து, புராண இதிகாச கதைகள், உபநிடத உட்பொருள்களை உள்ளடக்கிய செய்திகளை நான்கே அடிகளாலான வெண்பாக்களில் அசாத்தியமாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்த கிரேசி மோகனே ஓர் ஓவியர்தான்! இராமாயண ஓவியங்கள் உள்ளிட்டு ரவிவர்மா ஓவியங்களையும், மிக ஈர்ப்பாக ரமணரையும் மிக அழகாக வரைந்திருப்பார் மோகன்.

    நான் ஒரு நாத்திகன், உங்களைப்போல் அல்ல என்று ஒருமுறை அவருக்கு எழுதிய அஞ்சலுக்கு, அவர் இப்படி பதில் எழுதி இருந்தார், நீங்கள் நாத்திகன் அல்ல, naughtyகன் (குறும்பர்) என்று. பிறகு அலைபேசி உரையாடலில், இறை நம்பிக்கை இல்லாதவர் என்பதால் உங்களை வெறுக்க மாட்டேன், அது அவரவர் விருப்பம். அடுத்தவருக்காக சிந்திப்பது, உழைப்பது இதைத்தான் ஆன்மிகம் என்று நான் கருதுவேன். உங்களோடு பேச இந்த விஷயம் ஒரு தடையே அல்ல என்றார்.

    வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமான கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று. அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ‘உங்க வயசு என்ன 55ஆ’ என்று நாகேஷ் கேட்கும்போது, எதிரே இருப்பவர் ‘இன்னொரு 5 சேர்த்துக்குங்க’ என்றால், ‘555ஆ?’ என்று நாகேஷ் வியப்போடு கேட்கும் வசனத்தைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன், அதெல்லாம் வீட்டுல பாலாஜியோடு பேசினது, எங்கப்பா சொன்னது எல்லாம் தான் இப்படி வசனங்களுக்கு காரணம் என்றார். அடுத்தவர்களைப் பாராட்டும் மனம் அவருடையது.

    திரையில், அவரது ஹாஸ்யத்தை மிக நுட்பமாக கவனிக்கத் தவறினால், அடுத்தடுத்த வசனங்கள் போய்க்கொண்டே இருக்கும். அவரது வசனத்திற்காகப் புகழ் ஈட்டிய படங்கள் நிறைய உண்டு. ஆனால், அவரது பேச்சில், எழுத்தில் கொஞ்சமும் கர்வம் தலைதூக்கிப் பார்த்ததில்லை. இதைப் பலமுறை அவரிடமே கேட்டிருக்கிறேன். மிகப் பெரிய மனிதர்கள் பலரது பெயர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு, நாம எங்கோ கீழே சாதாரண மட்டத்தில் இருக்கோம் சார், இதில் பெரிய ஆட்டம் எதுக்குப் போடணும் என்று தன்னடக்கத்தோடு பதில் வரும்.

    அவரது நகைச்சுவை வசனங்களில் ரசித்த ரசிப்பை விடவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஆழமான ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை விதைக்கும் வசனம் ஒன்றை அவர் வழங்கி இருந்ததைக் கொண்டாட வேண்டும். நாசர், தம்மை அய்யர் என்று பொய் சொல்லிவிட்ட ஒரு முகம்மதியர் என்றறிய வந்ததும் கோபப்படும் ஜெமினி கணேசனை, மாமி வேடத்தில் இருக்கும் கமல் ஹாசன் ஆற்றுப்படுத்தும் காட்சி அது. ‘மாட்டுக்கறி சாப்பிடறவா’ என்று சொல்லும் ஜெமினியிடம், கமல் இப்படி சொல்வார்: :நீங்க பண்றது லெதர் பிசினஸ், அவாளுக்காக வெட்டப்படற மாடுகளை விட, உங்களுக்காக வெட்டப்படறது அதிகம்”. சாதி மதங்களைக் கடந்த பேதமற்ற உள்ளம் கொண்ட ஒருவரால் அன்றி வேறு யாரால் இப்படி எழுத முடியும்?

    ஓயாது எழுதிக் கொண்டிருந்தார் மோகன். நேர்காணல் எந்த இதழில் வந்தாலும், ஒரு குழந்தைமை உள்ளத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார். ரமணரை நோக்கிய தேடல் அவரது அண்மைக்கால தனிப்பட்ட எழுத்தில் அதிகம் மேலோங்கி இருந்தது. இரவு உறங்கப்போகுமுன் என்று அவர் எழுதியதிலும், காலை விழித்தவுடன் என்று எழுதி அனுப்பியதிலும் இந்த ‘பற்றறுத்தல்’ ஒலித்துக் கொண்டே இருந்தது.

    “சார், இந்த வெண்பாவில் தளை தட்டி இருக்கிறது என்றால், தலை தட்டாமல் இருந்தால் சரி என்று பதில் போடுவார்…வெண்பாவை உடனே திருத்தி அனுப்பி வைப்பார். பதில் வெண்பாவை அத்தனை ரசித்து அதற்கும் மெயில் போடுவார். பத்து பதினைந்து நாட்கள் அவரது வெண்பாவிற்கு பதில் போடாமலோ, கருத்து தெரிவிக்காமலோ இருந்தால், அவ்வளவுதான், அழைத்தும் பேசிவிடுவார்.

    எத்தனை எத்தனை ஆயிரம் பேரிடம் இப்படி, இதேபோல் உயிரான கேண்மை பாராட்டி இருந்தார் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அவரது தந்தை திரு ரங்காச்சாரி அவர்கள் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக, இயக்குநர் குழுவின் செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி ஓய்வு பெற்றவர். முதல் உரையாடலிலேயே அதைக் குறிப்பிட்டவுடன், வாஞ்சையோடு அப்படியானா அவரைப் பார்க்கவாவது ‘ஆத்துக்கு வாங்கோளேன் ‘ என்று அவரது பேச்சுத் தமிழில் அழைத்தார். அப்பாவுடன் பேசுவதற்கு தொடர்பு எண்ணையும் எனக்குத் தந்தார். மறுநாளே அவரோடு பேசிய இனிமையான நேரத்தையும் மறக்க முடியாது.

    ஆனால், நேரில் சென்று பார்க்காது நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்துவிட்டேன், மன்னிக்க முடியாத பாவி! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா ?” என்று கண்ணீர் மல்க அவரோடு பேசினேன்.

    “அதெல்லாம் மன்னிப்பார், கவலையே படாதீங்கோ. தூக்கத்திலேயே அமைதியாய் பிரிந்துவிட்டது அவர் உயிர்” என்றார்.

    நீண்ட ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், திரு சாரி குறித்து! அதை வாசித்துவிட்டுப் பேசுகையில், மிகவும் ஆறுதலாக இருந்ததென்றார் மோகன். இப்போது அவரையும் இழந்துவிட்டோம். யார் தர முடியும், ஆறுதலை?

    Share
  • எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

    எஸ் வி வேணுகோபாலன்

     

    குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள்! குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க அனுமதிக்கப்படுவதே சாதனை. அதன்பிறகும் தொடரும் கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
    பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
    கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி ….

    என்று ‘துலாபாரம்’ எனும் திரைப்படத்திற்கான பாடல் ஒன்றில் எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள், பிறந்த 28 நாட்களுக்குள் கண்ணை மூடிவிடுகின்றன என்கிறது யூனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. தப்பி வளரும் குழந்தைகளில் உடல் வலுவோடு இருப்போர் எண்ணிக்கையும் சுவாரசியம் அற்றது. 20 சதவீத குழந்தைகள் மிக மிக உடல்வலு குறைவான – ஊட்டச்சத்து போதாத எண்ணிக்கையில் இருக்கின்றனர். நாம்தான் உலக பட்டினி நாடுகள் வரிசையில் 103வது இடத்தில் இருப்பவர்கள் ஆயிற்றே!

    51 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும், கர்ப்பிணிப் பெண்களில் 65 முதல் 80 சதவீதம் வரை இந்த பிரச்சனையால் பாதிப்புற்று இருப்பவர்கள். இவர்கள் சுமக்கும் பிள்ளைகள் எப்படி வலுவாகப் பிறந்து உடல் நலத்தோடு வளர முடியும்? பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறி வாழும் மனிதருக்கெல்லாம்.. முதலில் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்.

     

    குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் எனில், அவர்களது இளமைக்காலம் துடிப்புடன் இருக்க வேண்டும். கல்வி பெறும் வயதில் பாடசாலை போகவேண்டும் பாப்பா எழுந்திரு என்று பாட்டுப்பாடி அனுப்ப வேண்டும். ‘தலைவாரி பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…’ என்று பாவேந்தர் இனிமையாகச் சொல்வதுபோல் ஆசை தீர அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன?

    கிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசல் மிதிப்பதில்லை. மகிழ்ச்சிக்கான குறியீட்டு வரிசையில் நமது எண் 133. ‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்த மானிடர்கள்’ நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தேசம் இந்தியா. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2009 -17 ஆண்டுகளில் மூன்று பங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொடுமைகள், வன்முறைகள், கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், அராஜக தாக்குதல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.காஷ்மீர் மாநிலத்தில் கதுவா சிறுமி, எட்டு வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிக் கொடுமையை நினைத்துப் பார்த்தால், குழந்தைகள் தினத்தை நினைவூட்டும் தகுதி கூட நமக்கு உண்டா என்று கலங்குகிறது நெஞ்சம். குழந்தை திருமணங்கள் இன்னும் நிற்காத நாடு.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் எங்கோ உறங்கிக்கொண்டிருக்க, நாடு முழுவதும் சிறுவர், சிறுமியர் கணக்கற்றோர் அன்றாடம் சுரண்டப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அலைமோதுவதை எழுத்தாளர் சுஜாதா தமது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்:

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் ……..***

    (முழு கவிதை கீழே தரப்பட்டுள்ளது)

    என்று நீளும் அந்தக் கவிதை, சம காலத்திலும் தொடரும் குழந்தைத் தொழிலாளர் அவலத்தை எண்ணி சமூகத்தை வெட்கமுறச் செய்யும்.

    Ural Rahul, 15, works on a car at a repair garage in Dimapur, India’s northeastern state of Nagaland, on June 12, 2013, the World Day Against Child Labour. The day, first observed in 2002 and sanctioned by the International Labour Organization (ILO), aims to highlight the plight of children engaged in work that deprives them of adequate education, health, leisure and basic freedoms, violating their rights. AFP PHOTO/CAISII MAO (Photo credit should read Caisii Mao/AFP/Getty Images)

    இப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தைகள் தினத்தை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தினம் என்பது, ஆரோக்கியமான தலைமுறையை அன்போடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி குழந்தைகளை சமமாக பாவிக்க வற்புறுத்துகிறது. வீட்டு வேலைகள் செய்யப்பழக்குவதிலிருந்து விரும்பிய கல்வி பெறச் செய்வது உள்ளிட்டு இரு பாலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.

    பாலியல் சீண்டல், பாலியல் வக்கிரம் மற்றும் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு சிறார்கள் அதிகம் உள்ளாகும் செய்திகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. பிள்ளைகளுக்கு இவை குறித்து எளிய முறையில் அறிவுறுத்தி, எக்குத்தப்பாக யாரும் நடந்து கொள்வதை சகிக்காத துணிவும், அப்படி நடக்க எத்தனிப்போர் குறித்து உடனே தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியும் பழக்க வேண்டியது நம் கடமை.

    கற்பனையும், கைவண்ணமும், கனவுகளும் சிறகடிக்கும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகள் உலகம் குதூகலமிக்கது. குழந்தைகள் உள்ளம் பரந்துவிரிந்தது. குழந்தைகள் எளிதில் கோபமுறவும், மிக எளிதில் குளிர்ந்து புன்னகைக்கவும் வரம் பெற்றவர்கள். பாட புத்தகங்களுக்கு வெளியே உற்சாகமான வாசிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் குழந்தைகள் கைபடக் காத்திருக்கின்றன. கண்களை அகலமாக விரித்து அவர்கள் மேற்கொள்ளும் வாசிப்பு அனுபவம் கவித்துவமானது. முன்னேற்றமான மாற்றங்களுக்கான நம்பிக்கையின் வேரில் குழந்தைகள் மிக அழகாகத் தண்ணீர் ஊற்ற முடியும். குழந்தைகள் தினம் அதைத்தான் கோருகிறது.

    குழந்தைகள் தினம், வளர்ந்த மனிதருக்குள்ளும் குழந்தைத் தன்மை மலர்வதை .வண்ணமுறக் கொண்டாடி வருகிறது. எல்லோருக்குமான உலகத்தை சமைக்கும் பாதையில் குழந்தைகள் தினம் கூடுதல் மகிழ்ச்சியை வீடெங்கும் நிரப்பிக் கொடுக்க வருகிறது. குழந்தைகள் தினம் வாழ்க!.

    நன்றி: மகளிர் சிந்தனை (நவம்பர் 2018)

    சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி சுஜாதா எழுதிய கவிதையை அப்போதே குமுதம் இதழில் வாசித்திருக்கிறேன்… பெரும்பாலான வரிகள் நினைவில் உண்டு. இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. எழுத்துப் பிழையோடும் சில தளங்களில் கண்டேன்… குமுதம் கவிதையைக் கண்ணில் பாராமல் இதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இல்லை. எனினும் கிடைத்தை நீங்களும் வாசிக்கலாம்: (இன்னின்ன வேலைகளையெல்லாம் செய்வாய் என்று குழந்தையிடம் மனம் வெதும்பி உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையின் கடைசி வரி, அவன் பிச்சையும் எடுக்க வைக்கப்படுகிறான் என்பதைக் கண்ணில் நீர் வரச் சொல்லி முடிகிறது)

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்

    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்

    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்

    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்

    சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்

    காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்

    கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

    மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்

    மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்

    கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்

    கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

    ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்

    ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்

    திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

    தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி

    வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து

    வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

    குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு

    கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்

    சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

    சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

    *****************************

    Share
  • காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….

    உலக மகளிர் தின வாழ்த்துக்களுடன்…

    எஸ் வி வி

    மார்ச் 8: உலக பெண்கள் தினம்

    காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….
    எஸ் வி வேணுகோபாலன்

    தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா
    வாங்க இயலாது மரித்துப்போன
    ஓய்வூதியத்தைப்
    போராடி வென்றெடுத்த பாட்டியின் நினைவில்
    பகிர்கின்றோம் மகளிர் தின வாழ்த்துக்களை!

    படிப்பில், விளையாட்டில், வேலையிடத்தில்
    அசாத்திய சாதனைகளை
    ஓசையின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும்
    பெண்களது பங்களிப்பின்
    பெருமிதம் பொங்க உரைக்கிறோம்
    மகளிர் தின வாழ்த்துக்களை!

    சவால்கள் சூழ்ந்த களத்தில்
    மிரட்சியின்றி வெளிப்பட்டு
    மிக சாதாரணமாகக் கடந்துபோகும்
    வீராங்கனைகளின் பெயரில் எதிரொலிக்கிறோம்
    மகளிர் தின வாழ்த்துக்களை!

    காத்திருக்கிறோம் –
    குற்ற உணர்ச்சிகள் தவிர்த்த
    கொண்டாட்ட பெருமிதமிக்க
    பாலின சமத்துவம் நிலவும்
    ஒரு காலத்திற்கு –
    கம்பீரத்தோடு மகளிர் தின வாழ்த்துக்களை
    கையளிப்பதற்கு!

    **********
    நன்றி: தீக்கதிர் (மார்ச் 8, 2018)

    Share
  • மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்

    ab

    அன்பானவர்களுக்கு

    நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ
    மாநகரின் மாறன் மறைவாழ – ஞானியர்கள்
    சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே
    இன்னுமொரு நூற்றண்டிரும்

    என்றும்

    அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
    சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல்சூழ்ந்த
    மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
    இன்னுமொரு நூற்றாண்டிரும்

    என்றும்

    ஆன்மிகத் தொண்டாற்றிய பெரியோரை “இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று வாழ்த்துவது ஒரு மரபு. உழைப்பின் சுரண்டல் குறித்த தத்துவத்தை உலகுக்கு வழங்கிய மனிதரது சிந்தனைகளுக்கு அழிவில்லை.

    மனிதகுல விடுதலைக்காக சிந்தித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களது இருநூறாவது ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது… (மே 5, 1818: அவரது பிறந்த நாள்). அவரது பங்களிப்பை அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் சில அரிய முயற்சிகளில் பாரதி புத்தகாலயம் ஈடுபட்டு வருகிறது. மெயிலை இணைத்துள்ளேன்…

    சென்னையில் இருப்போர், விருப்பமுள்ளோர் நாளை காலை ஒன்பது மணிக்கு இந்த விழாவில் வந்து பங்கேற்க வேண்டுகிறேன்.

    எஸ் வி வேணுகோபாலன்

    ———- Forwarded message ———-
    From: Thamizh Books <thamizhbooks@gmail.com>
    Date: 2017-05-04 19:22 GMT+05:30
    Subject: மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினம்
    To:

    அழைப்பிதழ்
    மாமேதை காரல் மார்க்சின் 200ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு மார்க்ஸ்,எங்கெல்ஸ் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் 12 தொகுதிகளை பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ளது. இதற்கான முன்வெளியீட்டுத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர் ஆர்.சம்பகலஷ்மி, பேரா.வெ.பா.ஆத்ரேயா, ஆய்வாளர் வ.கீதா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். தங்கள் வரவை எதிர் நோக்குகிறோம்

    Share
  • 2009ல் புத்தகங்களோடே கடந்த ஒரு நாள்

    எஸ் வி வேணுகோபாலன்

    மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில் சாத்தூர். அப்புறம் கோவில்பட்டி வரவும் அங்கே இறங்கினால், தமுஎகச பொதுச் செயலாளர் தோழர் ச தமிழ்ச்செல்வன் அவர்களது மகன் திருமணத்திற்கு வந்த வேறு சில தோழர்களும் கண்ணில் தட்டுப்பட வெளியில் வந்ததும் வழக்கம் போல் முதல் வேலையாக நாளேடுகள் வாங்கியாயிற்று. தங்குமிடம் சேர்ந்தபிறகு அருகிருந்த தேநீர்க் கடை அருகே சென்றபோது இரட்டிப்பு உற்சாகம்….கடையை ஒட்டிய திண்ணையில் காத்திருந்த அன்றைய நாளேடுகளின் இடையே தீக்கதிருமிருந்தது. ஞாயிற்றுக்கிழமையின் சிறப்புப் பக்கங்களில் கபீர்தாசர் பற்றிய காத்திரமான சித்திரம் நெஞ்சை நிறைக்க இளஞ்சூட்டில் தேநீரும் சேர்ந்து உள்ளே இறங்கியது.

    திருமண மண்டபத்தை எட்டிய மாத்திரத்தில் முதலில் சந்திக்கக் கிடைத்தவர் கையில் ஒரு புத்தகத்தை வழங்கி இதை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார் – நூல், குறுந்தொகை அறிமுக அகல்விளக்கு, கொடுத்தவர் நூலாசிரியர் மயிலை பாலு. மிகச் சரியான இந்தத் தொடக்கம் அந்த நாள் முழுக்க எழுத்துக்கள், எழுத்தின் காதலர்கள் மற்றும் நூல்களோடே கலந்து ரசிக்க வைத்துவிட்டது.

    திருமண நிகழ்வை, தமிழ்ச்செல்வன் குடும்பத்தார் கலை, இலக்கிய கூட்டுக் களியாட்டமாக அமைத்திருந்தனர். மேடையில் பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பெரிய மேளம் முழங்க இருந்த இடைவெளியில் அதற்குள் கையிலிருந்த ஃபிரண்ட்லைன் பத்திரிகையின் அதிர்ச்சிக் கட்டுரை ஒன்றையும், அற்புதப் படைப்பு ஒன்றையும் வாசித்து முடிக்க முடிந்தது. முன்னது, உலக பொருளாதார நெருக்கடியின் ஒரு பிரதிபலிப்பாக, ஜப்பான் நாடு பிரேசில் நாட்டிலிருந்து தங்கள் தேசத்தில் வந்து நிறைந்திருக்கும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பயணச் செலவு மற்றும் கூடுதல் பணம் கொடுத்து வணக்கம் சொல்லி , உங்களூருக்குப் போய்விடுங்கள், இனி இந்த மண்ணை மிதிக்காதீர்கள் என்று சொல்லிவருவதைக் குறித்த வேதனை சித்திரம். அதிர்ந்து போய்க் கதறி அழும் பிரேசில் பெண்மணியின் முகம் எப்போதும் மறக்காது. அடுத்தது, ஈக்குவடாரில் சோசலிஸ்டுகளின் வெற்றி. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராஃபேல் கொரியா, ஆண்டு பட்ஜெட்டில் கல்வி, பொது சுகாதாரம் உள்ளிட்ட சமூகச் செலவினங்களுக்கு சரிபாதி ஒதுக்க இருக்கிறார். 1972க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் அதிபர்.

    பாப்பம்பாடி ஜமாவின் அட்டகாச முழக்கங்களை அடுத்து, மணமக்கள் சித்தார்த், பிரதீபா அழைக்கப்பட்டது திருமணம் செய்துகொள்ள அல்ல, அதற்குமுன் சில புத்தக வெளியீடுகளைச் செய்து முடிக்க. இல்லறத்தில் இணைந்து அவர்கள் ஆற்றும் முதல் பணி புத்தகங்களோடு தொடர்புடையதாக இருக்கட்டும் என்றார் தமிழ். கொள்ளுத் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களது நாட்குறிப்புகளை ச முருகபூபதி தொகுப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருந்த அந்த நூலைத் தொடர்ந்து, கோணங்கியின் சிறுகதைத் தொகுப்பு, முருகபூபதியின் நாடகக் குறிப்புகள் மற்றும் தமிழ்ச்செல்வனின் பெண்மை என்றொரு கற்பிதம் ஆகிய நூல்களையும் மணமக்கள் வெளியிட்டனர். மதுரகவியின் நூல் பிரதிகளை, அவரது பெண்மக்கள் (தமிழ்ச்செல்வனின் சித்திமார்கள்) பெற்றுக் கொண்டது அருமையான விஷயம். அடுத்து தேவராட்டத்தின் இழைவும், குழைவுமான அடவுகளும், அசைவுகளும், உர்ர்ரூ…ம் என்ற அந்த ஈர்க்கும் இசையும் நிறைவடைந்தபின், ஒருவழியாக, திருமணம் நடத்தப்படும் என்று அவையோருக்கு நம்பிக்கை பிறக்க, மாலை மாற்றிக் கொண்டவர்கள், கார்ல் மார்க்ஸ், பெரியார் வாழ்க்கை வரலாற்று நூல்களை மாற்றிக் கொண்டதோடு வேறு சில நூல்களையும் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பங்கேற்றோர்க்கு, பெண்மை என்றொரு கற்பிதம் நூல் தாம்பூலத்திற்கு மாற்றாக அங்கேயே வைத்து வழங்கப் பட்டது. இதே நேரத்தில் வெளியே பாரதி புத்தகாலய பந்தலில் ஐம்பதாயிரம் ரூபாய் போல நூல் விற்பனை நடந்தேறியது பின்னர் அறிந்து மகிழ்ந்த விஷயம்.

    மண்டபத்தில் ஜா.மாதவராஜ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக திலீப்.நாராயணன் அவர்களின் நேரடி அறிமுகம் வாய்த்த கணத்தை மறக்க முடியாது. அவரை, பேராசிரியர் ச மாடசாமியின், வகுப்பறைக்குள் எனக்குரிய இடம் எங்கே என்ற நூலின்வழி மட்டுமே அறிந்திருந்தேன். அந்த நூலில், உழைப்பாளி மாணவர்கள் பற்றிய கண்கள் பனிக்கும் ஒரு கட்டுரையில் நாராயணன் அவர்களது கடிதத்தை பிரசுரித்திருந்தார் பேராசிரியர். குஜராத் மாநிலத்தில், பி எஸ் என் எல் நிறுவனத்தில் கணக்கீட்டு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தான், பள்ளி நாள்களில் தகப்பனோடு சென்று செத்த மாட்டைத் தூக்கியதையும், மாடறுக்கவும் செருப்பு தைக்கவும் பழகியதையும், இழவு செய்தி சொல்லச் சென்றது, தேர் சிங்காரிக்கக் கற்றது, தந்தையுடன் இருந்து பிணம் எரித்தது, படையல் வைத்த சோற்றில் கறி தேடி எடுத்துத் தின்று பசியாறிப் பள்ளி சென்றதையும் ……என தனது இளமைக்காலத்தின் வேதனை முட்களைக் கடித்ததில் பதிவு செய்திருந்த நாராயணன் இப்போது விருதுநகரில் பணியாற்றுகிறார். அந்தக் கடிதத்தைப் பின்னர் Bank Workers Unity பத்திரிகை ஜூன் 2008 இதழில் மறு பிரசுரம் செய்திருந்ததை அவரிடம் பகிர்ந்து கொண்டபோதும், அந்தப் பதிவுகள் நெருடிக் கொண்டே இருந்தன.

    கோவில்பட்டியிலிருந்து புறப்பாடு அடுத்து நெல்லையை நோக்கியதாக அமைத்துக் கொண்டிருந்தேன். ஓமியோபதி மருத்துவர் பி வி வெங்கட்ராமன் அறிமுகப்படுத்தியிருந்த அற்புதமான நூலான “தூங்காமல் தூங்கி” (சந்தியா பதிப்பகம் வெளியிட்டது, புத்தகம் பேசுது இதழில் பி வி வி எழுதிய நூல் அறிமுகமும் தூண்ட, சென்னை புத்தகத் திருவிழாவில் பிரதிகள் முழுமையாக விற்றுத் தீர்ந்த நூல் ! ) எழுதிய மருத்துவர் மாணிக்கவாசகம் அவர்களைச் சந்திக்காமல் சென்னை திரும்புவதில்லை என்று தீர்மானம். ஓய்வு பெற்ற மயக்க இயல் மருத்துவரான அவர், நோயாளிகளின் வலி, வேதனை, நிவாரணம் குறித்த கவலை, உளச் சோர்வு இவற்றோடு தம்மையும் பிணைத்துக் கொண்டு அவர்களுக்கு எந்த அளவிற்கு ஆறுதலும், உற்சாகமும், நிம்மதியும் நல்க முடியுமோ அதனைச் செய்வதான தமது தொழில்சார்ந்த போராட்டத்தை உயர்ந்த மனிதநேயத்தோடும், உள்ளார்ந்த கரிசனத்தோடும் வளமான இலக்கிய மொழிநடையில் பகிர்ந்து கொண்டுள்ள நூல் அது.

    அவரது வீட்டில் அவர் முதலி உள்ளே அழைத்துச் சென்று காட்டியது அவரது புத்தக அலமாரியைத் தான். கண்ணை ஈர்க்கும் வண்ண வடிவமைப்பிலான சில ஆங்கில நூல்களை வெளியே எடுத்துக் காட்டினார். ஒன்று, லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலின் ஒரு பாகம். அடுத்தது அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்திவைத்திருந்தோரின் மனசாட்சியை உலுக்கியெடுத்த, ஹெச் பி ஸ்டோவே அவர்களின் அங்கிள் டாம்’ஸ் காபின் என்ற நூல். எல்லாம் மகன்களைக் காணச் சென்றபோது அமெரிக்காவில் மலிவாக வாங்கிய தரமான பதிப்புகள் என்ற மாணிக்கவாசகம், அங்கு நூல்களை சமூகத்திற்குப் பரவலாக எடுத்துச் செல்லும் முனைப்பு உள்ளதையும், பேரம் பேசி நூல்களைக் குறைந்த விலைக்கு வாங்கவுள்ள ஏற்பாடுகளையும் உவகையுறச் சொன்னார்.

    நேரம் ஆகிறது, ரயில்வே நிலையத்திற்குப் புறப்படலாம் என்று தமது வண்டியில் என்னை அழைத்துச் செல்ல முன்வந்தவரிடம், மெதுவாக இன்னொரு ஆசையைத் தெரிவித்தேன். போகிற வழியில் இலக்கிய திறனாய்வாளர் தோழர் தி.க.சி.யைப் பார்த்து விட்டுப் போய்விட முடியுமா என்றதும், அதற்கென்ன பார்த்துவிடலாம் என்று காரை எடுத்தார். செல்கிறபோது வழியில் வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தி பாளையங்கோட்டையின் நீண்ட சாலையின் வலதுபுறம் இருந்த ஒரு கட்டிடத்தைப் பார்க்கச் சொன்னார். புனித சவேரியார் பள்ளி வளாகம் அது. தான் படித்த பள்ளி என்ற அவர், அந்நாளைய ருசிகர செய்தியொன்றையும் சொன்னார். பள்ளியிறுதி வகுப்பின் போது ஆசிரியர் ஒருவர், ‘ஒழுங்காப் படித்து தேர்ச்சி பெற்றால், சாலையைக் கடந்து எதிர்ப்புறம் போய் சவேரியார் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடரலாம், இல்லையென்றால், பள்ளியை அடுத்த மைக்கேல் மைதானத்தில் எருமைகள் தயாராகக் காத்திருக்கும், சாலையைக் கடக்க வேண்டிய சிரமம் இல்லாமல் வேலையில் சேர்ந்துவிடலாம்’ என்பாராம்.

    உலகறிந்த சுடலை மாடன் தெருவில் நுழைந்து தி.க.சி., அவர்களின் வீட்டை நோக்கி நடந்த போது, மருத்துவர் மாணிக்கவாசகம் பழைய நிகழ்வின் தாக்கம் நெஞ்சை அடைக்கப் பெருமூச்செறிந்தவாறு நடந்தார். தி.க.சி.,யின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன் மரணப்படுக்கையில் இருந்தபோது இறுதி நேரத்தில் மாணிக்கவாசகம் அங்கே சென்றிருக்கிறார். ஏதும் செய்ய இயலாத கட்டம் அது. ஆனால், ஏதாவது ஊசி போடக் கூடாதா, ஒரு வாய்ப்பு இருக்காதா என்று அரற்றியிருக்கிறார் தி.க.சி., அவருடைய மகன் வண்ணதாசனைத் தனியே அழைத்த மாணிக்கவாசகம், அவரது மன நிறைவிற்காக ஒரு மருந்தைச் செலுத்திப் பார்க்கலாம், பயனிருக்காது என்றாலும் என்று சொல்லிவிட்டு, தி.க.சி.,யிடம், “என்ன மாமா, எல்லாம் தெரிந்தவராயிற்றே, நீங்களே இப்படி குமுறலாமா?” என்று கேட்டிருக்கிறார். தி.க.சி. சொன்னாராம்: “நானும் மனுசன் தானய்யா, மனுசன் தானே”. வேறு முயற்சிக்குக் கூட சிரமம் தராது அவரது மனைவியின் உயிர் பிரிந்த அந்த சங்கடமான நேரத்தை நினைவுகூர்ந்து கொண்டே வந்தார் மருத்துவர்.

    தி.க.சி. அவர்களின் அறைகள் பூட்டியிருக்க ஓர் ஏமாற்றம் வந்து கப்பியது. தொலைபேசியில் அழைத்துக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே அருகிருந்த வீட்டில் கேட்டபோது, ஒரு இளைஞர், இப்ப செய்தித்தாள் வாங்கிக்கிட்டு டீ குடிச்சுட்டு வர்ற நேரம், சுடலைமாடன் கோவில் பக்கம் போனா பிடிச்சுரலாம் என்றார். தெருமுனையை எட்டவும், தி.க.சி. அவர்கள் நேரே நிற்கவுமாக ஒன்றுபோல நேர்ந்தது. அதே நேரத்தில், சோலை.சுந்தர பெருமாள், மன்னார்குடி தாமோதரன் இருவரும் கூட கோவில்பட்டி திருமணம் முடிந்து இவரைப் பார்க்கவே அங்கு வந்து சேர்ந்திருந்தனர். தெருமுனை இலக்கிய சந்திப்பில், அறிமுகம் முடிந்து, தி.க.சி., சொன்னது, புத்தகம் பேசுது இதழை மிகவும் பாராட்டிய சொற்களைத்தான். ஏப்ரல் இதழில் வந்த பொருளாதார வல்லுநர் ஆத்ரேயா நேர்காணலை மிகவும் சிலாகித்துச் சொல்லி அவர் எங்கே பணியாற்றுகிறார் என்றும் கேட்டுக் கொண்டார். புத்தகங்கள் நிறைய வரணும், நிறைய எழுதுங்கள் என்று பொதுவாகக் கேட்டுக் கொள்ளவும் செய்தார். பண்பாட்டுத் தளத்தில்தான் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது, தமுஎகச அதற்கு முழுமையாகப் பணியாற்றும் என்றும் நம்பிக்கையோடு சொன்னார்.

    புத்தகங்களோடான சிந்தனையோடே ரயில்வே நிலையத்திற்கு வந்தடைந்து, மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ரயிலில் ஏறி அமரவும் குறுந்தொகை அறிமுக நூல் வாசிக்க இடமும், சூழலும், மனமும் தோதாக இருந்தது. அது முடியவும், செம்மலரில் தொடராக வந்தபோது வாசித்திருந்தாலும் நூலாக வாசிக்க வேண்டிக் கையில் அடுத்து எடுத்த பெண்மை என்றொரு கற்பிதம் (ச தமிழ்ச்செல்வன் – பாரதி புத்தகாலயம்), முடிக்க வண்டி விருதுநகரைத் தாண்டியிருந்தது. கீழ்ப்படுக்கையில் படுக்க வேண்டிய நலிந்த உடலினராக இருந்த முதியவர் ஒருவர், வார இதழ் ஒன்றில் மும்முரமாக இருந்தார். அய்யா, எப்ப படுக்க விரும்புறியளோ சொல்லுங்க என்றேன். தலையாட்டினார்.

    ஃபிரண்ட்லைன் இதழில் மேலும் வேறு பல கட்டுரைகளையும் வாசிக்கவும், இப்போது மதுரை வந்துவிட்டிருந்தது. முதியவரை வற்புறுத்திப் படுக்கச் சொன்னபோது, ஒரு உதவி செய்யணுமே என்றார். தாராளமாக என்றதும், கைப்பையிலிருந்து தேடி எடுத்த காகித உறையிலிருந்த ஒரு மாத்திரை அட்டையை எடுத்துக் காண்பித்தார். இரவு எப்போதாவது தேவையென்றால் உங்களை எழுப்புவேன், இதிலிருந்து ஒன்றை எடுத்து எனது நாக்கின் கீழ் வைக்க வேண்டுமென்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.

    அதிர்ந்து போனது எனக்கு. நெஞ்சு வலிக்கு உயிர்காக்கும் மருந்து அது. “பயப்பட வேண்டாம். அப்படி எதுவும் நேராது. வலி ஏற்பட்டால் தயங்காம என்னை எழுப்புங்க. அசந்து தூங்கற மாதிரி தெரிஞ்சா, கன்னத்தில் அறைந்து கூட என்னை எழுப்பலாம், உதவி செய்வேன் என்று சொல்லியபடி அவரைத் தூங்கச் சொன்னேன். வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மீண்டும் எடுத்துப் பார்த்து உள்ளே பையில் வைத்துக் கொண்டு உறங்கத் தொடங்கிய அந்தப் பெரியவரையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டி சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

    காலையில் அவரை எழுப்பி, “நான் இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு, வரட்டுமா” என்ற போது, நிம்மதிப் புன்னகை அவரது முகத்தில். புத்தகங்களின் சுமை தெரிந்தாலும் வலி தெரியாத பை எனது தோள்களில்.

    ********

    Share
  • சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

    எஸ் வி வேணுகோபாலன்

    சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி. உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அன்றாட வாழ்க்கையின் வேகமான தாளகதி ஓட்டத்தில் சிக்கித் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். இறுக்கமான முகங்களும், எப்போதும் பதட்டமான வேலைமுறையும்,எதிலும் பொருந்தாத ஓட்டமுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதுகளில் அவர்களைச் சற்றே தளர்த்திக் கொடுத்துத் தரையில் கால் ஊன்ற வைத்துக் கொஞ்சம் சிரிக்கவும் வைக்காவிட்டால் என்ன ஆகும் நிலைமை என்பதை சமூகம் சற்று சிந்திக்க வேண்டிய காலமிது.

    நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னாராம். எத்தனை பளு தோள்களை அழுத்திக் கொண்டிருந்தாலும், அலட்டிக்கொள்ளாமல் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.

    நண்பர்சீ னிவாச நாராயணன், ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. அண்மையில் பார்க்க வந்த இடத்தில், “எனக்கு ரொம்ப நாளாக இருதய ஆபரேஷன் பண்ணனும்னு ஆசை….ஆனால் முடியலியே” என்றார். உடனே அருகில் இருந்த இன்னொரு நண்பர், அடடா, இதெல்லாம் தாமதம் செய்யக் கூடாதே என்றார். அவரோ அலட்டிக்கொள்ளாமல், “நான் ஆபரேஷன் செய்யத் தயாராத்தான் இருக்கேன், ஆனால் யாரும் என்கிட்டே செஞ்சுக்கத் தயாரா இல்லையே” என்றார். எத்தனை அசலான நகைச்சுவை…

    மன நல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது ஹாஸ்யமான ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சில ஆண்டுகளுக்குமுன் தி இந்து நாளேட்டின் திறந்த பக்கத்தில் வாசித்த அந்தக் கணத்திலேயே அவரோடு நட்பு உருவாக்கிக் கொண்டேன். சில மாதங்களுக்குப் பிறகு சென்னை வந்தவர், ஒரு நாள் காலையில் அலைபேசியில் அழைத்து உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது என்று கேட்டார். அவரது உறவினர் வீட்டிலிருந்து மிக அருகில்தான் எங்கள் வீடு என்பதால் விலாவாரியாக வழியைச் சொல்லி முடித்ததும், ராமானுஜம் இப்படி சொன்னார்:”….அதெல்லாம் சரி, நான் உங்கள் வீட்டு வாசலுக்கு எப்போதோ வந்து சேர்ந்துவிட்டேன், வீட்டுக்குள் எப்படி வருவது என்றுதான் கேட்டேன்…” என்றார். அத்தனை அசத்தல் குறும்பு நிறைந்த மனிதர்.

    கல்லூரியில் எனக்கு வாய்த்த நண்பர்கள் பலர் அராஜகத்திற்கு நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாக இருந்தனர். ஒருமுறை அதில் ஒருவன் சொன்னான், “சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருக்கு…எப்படி செலவு செய்யறதுன்னு தெரியல”. உடனே அடுத்தவன் சொன்னான், என் கையில் கொடு, உடனே செலவழித்துக் காட்டுகிறேன் என்று. முதலாமவன் பதில் இதுதான்:”நான் குறிப்பிட்டதே உன் சட்டைப்பையில் உள்ள பணத்தைத் தான், எங்கே சீக்கிரம் அதைச் செலவழிக்கும் வழியைப் பார்”

    புகழ் பெற்ற இருதய மருத்துவர் பி எம் ஹெக்டே தமது கட்டுரை ஒன்றில், மனம் விட்டுச் சிரிக்கும்போது உடலின் நன்மைக்கு வழி வகுக்கும் என்டார்பின்கள் மூளையில் அதிகம் சுரக்கின்றன என்ற ஆய்வு பற்றிக் குறிப்பிட்டு, நகைச்சுவை உணர்வின் தேவையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார் (“உள்ளங்கையில் உடல் நலம்” – விகடன் பிரசுரம்). அவர் மேற்கோள் காட்டி இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்: அமெரிக்காவில் அறுபதுகளில் வாழ்ந்த பிரபல பத்திரிகையாளர் நார்மன் கசின்ஸ், சிக்கலான தண்டுவட நோய் ஒன்று முற்றி இருந்த காரணத்தால் சுண்டுவிரலைக் கூட அசைக்க இயலாது மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவரது ஆயுள் எப்போதும் முடிந்துவிடக் கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், நண்பர்கள் பலர் அவரை வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்ட பழைய துணுக்கு ஒன்றைச் சொல்லி சிரித்தபோது, நார்மன் விரல்களை அசைத்தது கவனிக்கப்பட்டது. உடனே, மிகவும் நகைச்சுவை நிரம்பிய காணொளி நாடாக்கள் தருவிக்கப்பட்டு அவருக்குப் போட்டுக் காட்டப்பட்டதில், நான்கே வாரங்களில் உடல்நலம் தேறி அந்த மனிதர் வீடு திரும்பிய அசாத்திய நிகழ்வு பற்றி ஹெக்டேவின் கட்டுரை பேசுகிறது.

    “வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு” என்று சிரிப்பை மேன்மைப்படுத்தினார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். ஆனால், நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் சிரிப்பு உணர்ச்சி உண்டு, ஆனால் அவற்றின் நீண்ட முகவாகு காரணமாக அவை சிரிப்பது தெரிவதில்லை என்று சில ஆய்வாளர்கள் கருதுவதாக அதே கட்டுரையில் ஹெக்டே சுட்டிக்காட்டுகிறார். மனிதர்களாகிய நமக்கு சிரிக்கத் தயக்கம் என்ன….

    எழுத்தாளர் சுஜாதா அநியாயத்திற்கு ஹாஸ்ய உணர்ச்சி கொண்டிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். அவர் வார இதழொன்றில் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் “எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள்?” என குதர்க்கமாக வந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “பெரும்பாலும் இரவு பத்தரை மணி. அதற்குமேல் விழித்திருந்து எழுத முடிவதில்லை”.

    வாசகரோ, பத்திரிகையாளரோ யாரும் எளிதில் சந்தித்து நேர்காணல் செய்துவிட முடியாது என்று சொல்லப்பட்ட புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஆர் கே நாராயண் பெங்களூருவில் வசித்துவந்தபோது, சுஜாதா அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். பல தடைகளை எதிர்கொண்டு முன்னேறி அவரோடு இரண்டு மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேசியுமிருக்கிறார். ஒரு கட்டத்தில், “ரொம்ப சந்தோஷம் …அப்ப, உத்தரவு வாங்கி கொள்கிறேன்” என்று எழுந்தாராம் சுஜாதா. அலட்டிக் கொள்ளாமல் காதுகளில் இருந்து பஞ்சை எடுத்து வெளியே போட்டுவிட்டு, “போய்வாருங்கள்” என்றாராம் ஆர் கே நாராயண்!

    அப்புசாமி-சீதாப்பாட்டி (சீதே கெயவி !) பாத்திரங்களை பாக்கியம் ராமசாமி (ஜரா சுந்தரேசன்) படைக்கவும், அதற்கு உயிர்கொடுத்த ஓவியர் ஜெயராஜ் தமது லெட்டர் பேடில் அந்த இருவர் ஓவியத்தையே பதிந்து கொண்டார் என்று சொல்லப்பட்டதுண்டு. பாரதியார் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கதையில், மகாகவி வாழ்ந்த வீட்டைக் காட்சிப்பொருளாக்கிக் காசு பண்ணத்துடிக்கும் அப்புசாமி அண்ட் கம்பெனி (ரசகுண்டு, பீமாராவ்) எங்கிருந்தோ யாரோ பயன்படுத்திய பழம்பொருள்கள் பலவற்றை மூர்மார்கெட் உள்பட தேடிச்சென்று வாங்கி வந்து நிரப்பி தடாலடி அடித்து, “இது பாரதி உட்கார்ந்த நாற்காலி, இது பாரதி பயன்படுத்திய மேசை…” என்றெல்லாம் அட்டைகள் எழுதி வைத்து முடித்திருக்கும். முதல்நாள் இரவு அங்கே நுழையும் சீதாப்பாட்டி, அப்புசாமியின் தொண்டுப்பணியைத் தனது ஒயிலான ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டுச் செல்வார். மறுநாள் காலை அமைச்சர் திறந்துவைத்துப் பார்த்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் வைக்கப்பட்ட பொருளைப் பார்த்ததும் பதறிப்போய் கோபத்தோடு என்ன இதெல்லாம் என்று கத்துவார். அவர் கை காட்டும் இடத்தில் ஒரு கலர் டிவி பெட்டியை வைத்து, பாரதியார் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டி என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். வேறு யார், சீதே கெயவியின் வேலைதான்…மாட்டிக் கொள்பவரோ அப்புசாமி!

    வால்ட் டிஸ்னியின் டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களைப் பிடிக்காத மனிதர் யார் இருப்பார் ! அந்த எலிக்குட்டியின் அட்டகாசத்தால் ஒவ்வொருமுறையும் தலையில் கையை வைத்துக்கொண்டு ஏமாந்து நிற்கும் டாம் எத்தனை பெரிய குறியீட்டுப் பாத்திரம்! ஒரு எபிசோடில், ஜெர்ரிக்கு அஞ்சலில் வந்துசேரும் புத்தகத்தை எடுத்து வைத்துப் படிக்கத் தொடங்கும் டாம் பெரிய எரிச்சல் அடையும். தான் வெவ்வேறு முறையில் ஜெர்ரியுடன் மோதி ஏமாந்த கதைகள் பலவற்றை எழுதி ஒரு புத்தகம் ஆக்கிவிட்டிருக்கும் ஜெர்ரி. கோபத்தோடு அதை அடிக்கலாம் என்று டாம் எழுந்திருக்கையில், தனக்கு வந்திருக்கும் ஒரு காசோலையுடன் ஜெர்ரி, டாம் எதிரே வந்து நிற்கும். இணைப்புக் கடிதத்தில் புத்தகத்திற்கான ராயல்டியில் ஒரு பகுதி டாமுக்குச் சேரும் என்று எழுதப்பட்டிருக்கும். அப்புறமென்ன, காசுதான் வருகிறதல்லவா, எந்தப்புத்தகத்தைப் பார்த்து வெகுண்டதோ, அதே புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு யாரைப் பற்றியோ படிக்கிறதுமாதிரி விழுந்து விழுந்து சிரித்தபடி படித்துக் கொண்டிருக்கும் டாம்!

    பொருளில்லாமல் சிரிக்க வேண்டாம். சிரிக்காமல் இருப்பதிலும் பொருளில்லை. உன்னால் சிரிக்க முடியாவிட்டால் என்ன, உலகம் உன்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடும் என்றார் அறிஞர் ஒருவர். புகைப்படக் கலைஞர்கள் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று கெஞ்சிக் கேட்கும் நிலையில்தான் சமூகம் தீவிரமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. உற்சாகமிக்க மனமிருந்தால் நோய்கள் விரைந்து குணமாகும் என்று மறைந்த மருத்துவர் குமாரசாமி, பிரபல மருத்துவர் கே வி திருவேங்கடம் அவர்களோடு இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கண்ணீர் ததும்பும் வாழ்க்கையைக் கூட கண்ணில் நீர் வர சிரித்து மாற்றிக் கொள்வோம்.

    நகைச்சுவை நிறைக்கட்டும் நம் வாழ்க்கைத் தடங்களை..

    ***********

    நன்றி: வண்ணக்கதிர் (பிப்ரவரி 26, 2017 ஞாயிறு தீக்கதிர் நாளிதழ் இணைப்பு)

    Share
  • இசைந்திடும் இரவும் உறங்கா இசையும்

    எஸ்.வி. வேணுகோபாலன்

    av
    எழுபதுகளின் இரவுகள் சங்கீதப் பிசாசுகளுக்கானவை. புதன் கிழமை இரவு பத்து மணி சென்னை வானொலியிலிருந்து ஒலிபரப்பாகும் பழைய பாடல்களுக்காக விழித்திருக்கும் இதயங்களுக்கானது. பகலில் ஒலிக்கும் ஒரு பாடல், இரவில் ஒலிக்கையில் புது மெருகோடு காதில் இறங்குவதன் ரசம் அதைக் கேட்டுக் கிறங்கியவர்களுக்குத்தான் பிடிபடும். யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கட்டும். யாரும் யாரோடும் கட்டிப்புரண்டு சண்டை போடட்டும். யாரை நினைத்தும் யாரும் உருகித் திணறித் திண்டாடட்டும். ஆனால் அதை தயவு கூர்ந்து பாடலாக்கி இசையூட்டி எங்கள் உள்ளத் திருவோட்டில் போடுங்களய்யா, நாங்கள் வாழ்ந்துகொள்கிறோம் என்று ஏங்கியிருந்த காலங்கள் அவை.

    நேர்கோட்டில் பாடிவிட்டுப் போகும் பாடல்கள் ஒரு பக்கம்.குரலின் வழி கொஞ்சம் போதையூட்டும் குழைவுகளும், மாற்றங்களும், சாகச விளையாட்டுகளும் கொண்ட பாடல்கள், அடடா..அடடா…. உயிரை உறிஞ்சி எடுக்க வருபவை அல்லவா…பென்சிலால் போடும் மெல்லிய கோட்டின் மீது அழுத்தமாகப் பேனாவால் வரையும் ஓவியம்போல, “பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..”என்று படிக்கும் இளசான குரலின்மீது வெற்றிலை, புகையிலை, பாக்கு போட்டுக் குதப்பியவாறு பாடுவது போல் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று ஒரு வித்தியாசமான காரக் குரல் அதே வரிகளை வசீகரமாகத் தொடுத்துச் செல்லும்! ஆலாபனை அழகுக்கும், தமிழ் உச்சரிப்புக்கும், கம்பீர ராக நிரவலுக்குமாகக் கொடிகட்டிப் பறந்த சி.எஸ். ஜெயராமன் என்ற அற்புதக் கலைஞனை ரசிகர் கூட்டம் கொண்டாட வைத்த பாடல் அது. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே….” மட்டுமென்ன இலேசான இன்பமா! அப்புறம், மெல்ல மெல்லப் பரவி வந்து உடல் தழுவும் தென்றல் போன்ற, “அன்பாலே தேடிய என் அழகுச் செல்வம்“ பாடல் ஓர் அமுத ஊற்றாயிற்றே! “வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற அற்புதமான ‘சம்பூர்ண இராமாயணம்’ படப் பாடலில் சி.எஸ்.ஜே. “சங்கீத சௌபாக்யமே” என்று நுழையும் இடம் எத்தனை அலாதி! காலையில் பாடும் ராகம், உச்சி வேளையில், வெண்பாவுக்கு உகந்தது, அகவல் பாவிற்கு…என ராகங்களை விவரித்துச் செல்கையில், இராவணனை அவரது அன்பு மனையாள் மண்டோதரி “சுவாமி, தாங்கள் கயிலைநாதனை கானத்தால் கவர்ந்த பாடல்?” என்று கேட்க, அவர் “கா…..” என இழைத்து இழுத்து காம்போதி ராக ஆலாபனையில் உயர்த்திப் பிடிக்கும் இடம்… அடடா…அடடா! “குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” இல்லாமல் ‘இரத்தக் கண்ணீர்’ கிடையாது. ஆயிரம் காதுகள் போதாது வண்ணக்கிளியே!

    குழந்தைக் குரலின் கொஞ்சுமொழி என்றால் எம்.எஸ். ராஜேஸ்வரி! “குவா குவா பாப்பா, இவ குளிக்க காசு கேப்பா,” “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே,” … ஆஹா…என்ன ரம்மியமான பட்டியல்! “கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே” பாட்டைக் கேட்டுக் கண் கலங்காதவர் உண்டா! “மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி” பாடாத அந்நாளைய மனிதர் உண்டா! காலத்தைப் பின்னோக்கித் தள்ளும் உத்தியில் மணிரத்தினம் இயக்கத்தில் வந்த ‘நாயகன்’ படத்தின் “நான் சிரித்தால் தீபாவளி” பாடலில் சேர்ந்து ஒலிக்கும் ராஜேஸ்வரி-ஜமுனாராணி குரல்கள் எத்தனை நர்த்தனம் பயின்றவை!

    “ஒரே பாடல்” (எங்கிருந்தோ வந்தாள் ), “இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்” என்ற வரிகளையும் உள்ளடக்கிய “நான் கவிஞனும் இல்லை” (படித்தால் மட்டும் போதுமா), “கற்பனைக்கு மேனி தந்து” (பாட்டும் பரதமும்) என டி.எம். சவுந்திரராஜன் பாடல்களில் இரவுக்கு தோதானவை என்றே தனி பட்டியல் இருக்கும்.

    கொஞ்சுமொழி பாடல்களில் முத்திரைப் பாடகி (நடிகர், இயக்குநர், எழுத்தாளருமான) பி. பானுமதி! “கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே” என்ற தாளகதி மிக்க பாடல் (அதில் “பானு மதி மாறிவரும்” என்று அவர் பெயரைத் தாங்கிவரும் சொற்களை அவரே பாடுவது சுவையான இடம்!), “பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று” என்ற உருக்கமான கீதம், “மாசிலா நிலவே” (அம்பிகாபதி) பாடலின் காதல் மணம், “அன்னை என்பவள் நீ தானா,” “அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்” ….பட்டியல் முடியக் கூடியதா! ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்’ வசீகரக் குரல் அல்லவா அது!

    புல்லாங்குழலின் மெல்லிய தொடுப்பில் புறப்பட்டு வேகம் கொள்ளும் “காலங்களில் அவள் வசந்தம்” (பாவ மன்னிப்பு), “நிலவே என்னிடம் நெருங்காதே” (ராமு), “மௌனமே பார்வையால்” (கொடிமலர்) என்ற மனத்துக்கு நெருக்கமான வரிசையில் எத்தனை பாடல்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ் அளித்தார், இரவுகளுக்காகவே!குழந்தைக் குரலில் எஸ். ஜானகி பாடியிருக்கும் பாடல்கள் தனிச் சுவை மிக்கவை. “கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே,” “டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா,” “டாடி டாடி ஓ மை டாடி” …..ரீங்கரிக்கும் வித்தியாசமான குரல் அனுபவம் அது.

    எம்.எஸ். விஸ்வநாதனின் அசாத்திய இசையில் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தின் “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” என அபாரமான தாளக்கட்டில் ஜானகி கெஞ்சியும் கொஞ்சியும் விஞ்சியும் வெளிப்படுத்தும் காதல் ஏக்கக் குரல், இரவில் கேட்கையில், உணர்வு கூடுதலாய்த் ததும்பி கரை தொட்டு மீளுமே!பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், இளையராஜா இசையில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடலுக்கு மலேசியா வாசுதேவன் வாய்த்தார். பின்னாளில், ‘கல்யாணராமன்’ படத்தில், “ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று பட்டையைக் கிளப்பினார்! நெகிழ்ச்சியுறவும், ஆவேசம் கொள்ளவும், மென்மையாகக் காதல் பேசவும் என அவரது பாடல்கள் ஒலித்தன.

    “சதன், ஷோபா இவர்களுடன் டி.எம். சவுந்திரராஜன் பாடிய பாடலின் படம் இரு மலர்கள்” என்று வானொலியில் அறிவிப்பு கேட்டதும், பக்கத்தில் ஓடி வந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்ட “மகராஜா ஒரு மகராணி, இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி” என்ற கொஞ்சும் பாடலை அன்றைய ரசிகர்கள் யார் மறந்திருக்க முடியும்? “யாரது இங்கே மந்திரி, குட்டி ராணி வந்தாளே எந்திரி” என்று குழந்தைக்குரல் ஆணையிடுவதும், “வணக்கம் வணக்கம் சின்ன ராணி” என டி.எம்.எஸ். கம்பீரக் குரல் வளைவதும் …

    எப்படிச் சொல்வது!சதன், சாய்பாபா என்ற பெயர்களைக் கேட்டவுடன் மனம் துள்ளாட்டம் போடும். பாட்டில் வரும் சிறப்பு சப்தங்கள்.. சேட்டை ஒலிகள்… “அந்தப் பக்கம் வாழ்வது ரோமியோ” என்ற பாடலில் சாய்பாபா பண்ணும் அமர்க்களம்! அதில், “ஊர்வசி வந்தும் மயங்கிடார்… உன் மேல் ஆணை மை கிடார்” என்று கிடார் மீட்டும் ஒரு ரகமான பாடல் அது.வி. குமார் இசையில், ‘வெள்ளி விழா’ பாடல்களில் எதை இழக்க முடியும்? ஆர்ப்பாட்டக் குரல்காரரான எல்.ஆர். ஈஸ்வரியை, “காதோடுதான் நான் பாடுவேன்” என்று அதிராமல் பாட வைத்த அந்தப் பாடல் இரவில் கேட்டு விம்மி விடுதலை தேடித் திணறவென்றே உருவாக்கப்பட்டது. (“நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்” என்று பி. சுசீலாவை அதே படத்தில் குமார் பாடவைத்திருந்தார்!)

    எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னுமொரு மென்குரல் அசுரன், வீட்டுத் திண்ணைகளில், வயல்களில், தெருவோரக் கடையில் டிரான்சிஸ்டரும் கையுமாகத் துண்டு விரித்துத் தலை சாய்த்தவர்களை வாட்டி எடுத்துக் கொண்டாட வைத்தார்.“ஆயிரம் நிலவே வா” பாடல் (அடிமைப்பெண்) கே.வி. மகாதேவன் இசையில் ஒரு இரவுக் கொடை! “அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன்), “சம்சாரம் என்பது வீணை” (மயங்குகிறாள் ஒரு மாது)…. நிறைவுறாத பட்டியல் அது. ‘பட்டின பிரவேசம்’ படத்தில் எம்.எஸ்.வி. யாத்தளித்த வயலின் இசையோடு, உள்ளத்தை மென் காதலுணர்வால் சீண்டிய “வான் நிலா நிலா அல்ல, வாலிபம் நிலா” பாட்டுக்காக எத்தனை இரவுகளையும் பரிசளிக்கலாம்.

    ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலால் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான வாணி ஜெயராமின் தனித்துவக் குரலை எப்படி விட? “அன்பு மேகமே இங்கு ஓடி வா” (எங்கம்மா சபதம்), “மல்லிகை முல்லை பூப்பந்தல்” (அன்பே ஆருயிரே), ‘சங்கராபரணம்’ படத்தின் முடிவற்ற இசைக்கலவையில் எஸ்.பி.பி., வாணி ஜெயராம் இருவரும் கலக்கியெடுத்த பாடல்கள் (ப்ரோ சேவா…., ஓம்கார நாதானு )…பி. சுசீலா குரலின் தேர்ச்சியான சில பழைய பாடல்களை (“இரவுக்கு ஆயிரம் கண்கள்,” “பகலிலே சந்திரனைக் காணப் போனேன்,” “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ,” “காதல் சிறகைக் காற்றினில் விரித்து,” “உன்னைத்தான் நான் அறிவேன்” …) இரவில் கேட்டுப் பாருங்கள், பிறகு பகலில் கேட்க நேர்ந்தாலும் உங்கள் எண்ணங்களில் ஒரு ரகசிய இரவு சூழ்வதை உணர்வீர்கள்.

    பார்த்திராத இசை அமைப்பாளர்களை, சந்தித்திராத பாடகர்களை, கண்டிராத படத்தின் காட்சிகளை திரைக் கலைஞர்களுக்கான மானசீகமான மதிப்போடும், அவர்தம் கலைக்கான வணக்கங்களோடும் இழைந்து உருகிக் கொண்டாடிப் பாடல்களைக் கேட்கத்தக்க இரவு நேரங்கள் மனித உள்ளத்தின் பண்பாக்கத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்திக் கொடுக்க அரவணைக்கின்றன. அசாதாரணக் குரல்களில் ஒலிக்கும் பாடல்கள் உள்ளத்தை வருடிக் கொடுக்கின்றன.

    அன்றாடத்தின் பாடுகளை, உழைப்பின் வலியை, உறவுகளுக்கிடையே வாழ்க்கை ஏற்படுத்தும் அலைக்கழிப்புகளை எல்லாம் மறந்து உடலையும் உள்ளத்தையும் இலகுவாக்கி மிதக்க வைக்கின்றன. நெகிழ்ச்சியுற அலைமோத விடுகின்றன. மழை நேரத்தில் கைகளுக்கு வந்து சேரும் சூடான, இதமான தேநீராய் உடல் முழுக்கப் பரவி மனம் முழுக்கக் கோலோச்சுகின்றன. திக்குமுக்காட வைக்கும் சமகால வாழ்க்கையில் மனித இயல்புகளை இழந்துவிடாமலும், நேய உணர்வுகளை மறுத்துவிடாமலும், இளைப்பாறி உணர்வுகளை மீட்டெடுத்துக் கொள்ளும் வழியில் வாழப் பழகிக் கொள்ளவும் இசை நமக்கு இயற்கை அளித்த இன்னொரு வரம். இரவு அந்தத் (தா)வரத்திற்கு ஓர் உரம்.

    நன்றி  தீக்கதிர்

    Share
  • சிறு நெருப்பின் பெருந்துளி !

    ஃபிடல் காஸ்ட்ரோ

    unnamed
    எஸ் வி வேணுகோபாலன்

    கொடுங்கோலன் பாடிஸ்டாவை
    உறக்கம் தொலைக்கச்செய்து
    இறுதி மோதலில் வீழ்த்தவும் செய்தவனே

    மனிதகுல விடுதலைக்கான வேலைகள்
    கூடிக் கொண்டிருக்கவே செய்தது உனக்கு

    உலகளாவிய புரட்சிகர இதயங்களுக்கு
    நம்பிக்கைக் குருதி பாய்ச்சிக் கொண்டிருந்தாய்

    ஏகாதிபத்தியத்தின் கனவுகளில் ஊடுருவிக்
    கலகம் விளைவித்துக் கொண்டிருந்தாய்

    உன் அடிச்சுவடுகளை அந்நாளில்
    தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்கள்
    புரட்சி வேட்கை கொண்டோர் மட்டுமன்று
    தீர்த்துக் கட்டத் துடித்த சதிகார சக்திகளும்தான் !

    இளமையில் புகட்டப்பட்டிருந்த
    விவிலியம்* விரவிய இலக்கிய மொழியில் (*விவிலியம் = பைபிள்)
    மதங்களுக்கு அப்பாற்பட்ட தத்துவம் விரிந்தது

    ஆயுதங்களற்ற வேளைகளிலும்
    பேச்சுகளின் வீச்சில்
    நடுங்கி ஓடின எதிர்ப்புரட்சிக் கும்பல்கள்

    பொதுவுடைமையின் சாத்திய சாட்சியமாகிய
    கியூப மண்ணில்
    அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகள் கைகளிலும்
    புரட்சியின் பூங்கொத்துகள்

    சந்தைப் பொருளாதாரத்தின்
    சத்தங்களுக்கு இடையே
    நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித உணர்வுகளை
    அன்பின் பேரூற்றால் தளிர்க்கச் செய்யும்
    எதிர்கால நம்பிக்கைக்கு
    எக்காலத்திற்குமான
    சிறு நெருப்பின் பெருந்துளி நீ!

    நவம்பர் புரட்சியின் நூற்றாண்டில்
    அமைதி பெறுகிறது
    ஒட்டுமொத்த உயிர்களுக்காகவும் துடித்த
    உன் உன்னத இதயம் !
    உற்ற தோழன் சே குவேராவை
    மீண்டும் நினைவிலேந்தி வழியனுப்புகிறது
    உலகம் இருவரையும்!

    உலகம் யாவிலும் உன் பெயரால்
    சுடர்ந்தெரியும் மெழுகு தீபங்களிலிருந்து
    பரவும் வெளிச்சம்
    சுரண்டல் இருளை ஒருநாள்
    முற்றாகத் துடைத்தெறியும்.

    Share
  • எந்தக் கண்ணன் அழைத்தானோ….

    அஞ்சலி: டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா

    எஸ் வி வேணுகோபாலன்

    bala

    எட்டு வயதில் விஜயவாடாவில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்திய சிறுவன் முரளி கிருஷ்ணாவின் அசாத்திய இசை நுட்பத்தில் திளைத்த ஹரிகதா பாகவதர் எம் சூரியநாராயண மூர்த்தி அவர்கள், அவரை பாலமுரளி கிருஷ்ணா ஆக்கினார். அதன் பிறகு தொடர்ந்து தமது திறமையை வளர்த்தெடுத்து வந்த அற்புத இசை மேதை டாக்டர் எம் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு, கர்நாடக இசை உலக வரலாற்றின் முக்கிய பாகம் ஒன்றின் நிறைவைக் குறிப்பதாகும்.

    முதுமையிலும் கூட ஒரு குழந்தையின் புன்னகை வற்றாதிருக்கும் முகம். செக்கச் சிவந்த உதடுகள். குரலோ, மிகவும் தனித்துவமிக்க நாண்களிலிருந்து புறப்பட்டு வந்தது போன்ற சிறப்பொலியைப் பெற்றிருந்தது. உடல்மொழியில் தமது திறமையின் ஒளிக்கமாட்டாத கம்பீரமும், இசை ஞானத்தின் ஒளியழகும், கற்பனையின் சாரலும், சவாலுக்கு அழைக்கும் பார்வைப் பொறிகளும் மின்னிக்கொண்டிருக்கும் எப்போதும்.

    balamவாய்ப்பாட்டு மட்டுமின்றி இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக் கொண்ட அவரது தேடல் சில புதிய ராகங்களையும், தாள லயங்களையும் உருவாக்கிப் பெருமை சூட வைத்தது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் எழுப்பியது. வீணை எஸ் பாலசந்தர், எஸ் ராமனாதன் போன்ற கலைஞர்கள் புதிதாக எதையும் உருவாக்கவில்லை, ஏற்கெனவே இருந்த ராகங்களே அவை என்று வாதிட்டனர். பாலசந்தருக்கும், பாலமுரளிக்கும் இடையிலான மோதலை ஒரு தொடராகவே மாற்றி .வெளியிட்டு வந்தது ஒரு வார இதழ். ஆயினும், சமகால இசை விற்பன்னர்கள் நடுவே அவரது இடம் முக்கியமானதாயிருந்தது. கச்சேரிக்கு நடுவே சிறிய இடைவேளை விடுவதென்ற அவரது செயல்பாடு அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டதாம்.

    தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளாகட்டும், என்றும் வாடாத புகழ்மிக்க நகுமோமு ஆகட்டும் பாலமுரளி அவர்களது குரலினிமை கொடி கட்டிப் பறக்கும்.

    திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு பால முரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பம்சங்களாகத் திகழும் ஒரு நாள் போதுமா பாடலுக்கு நிகர் எது? கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே வி மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக் கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங்களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து உடனிருத்தி ரசிகரையும் குழைந்து, அதிர்ந்து, மிதந்து, முழங்கி நிமிர வைக்கும் குரல் அது. எந்தெந்த ராகங்களின் பெயர் இடம்பெறுகிறதோ அந்த இடங்கள் அதே ராகத்திலேயே அமைக்கப்பட்ட இசையில், கானடா என்று பாலமுரளி உருக்கி உருக்கி வார்க்கும் வீச்சு அநாயசமாக வெளிப்படும். என் பாட்டு தேனடா என்று அனுபவித்து நகரும் அடுத்த வரியின் எல்லையில், இசைத் தெய்வம் நானடா என்ற அசத்தல் இடத்தில் அந்தப் பாட்டுத் தேர் நிலைக்கு வந்து நிற்பது கண்ணீர் சொரியவைப்பது.

    பி சுசீலாவுடன் அவர் பாடிய ‘தங்க ரதம் வந்தது'(கலைக்கோயில்) பாடல், சிருங்கார ரசனையில் தொடுக்கப்பட்டிருந்த மதுவின் கோப்பை. நூல் வேலி படத்தின் சிக்கலான மனநிலையின் எதிரொலியாக இடம்பெற்ற கண்ணதாசனின் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே ‘, எஸ் எஸ் வியின் நளினமிக்க மெல்லிசையில் இரவு நேரத்தில் கேட்கக் கேட்க வேறெங்கோ அழைத்துச் செல்லும். பாலமுரளி கிருஷ்ணாவின் நுட்பமிக்க குழைவுகளும், அழகியல் கற்பனையும் மெருகூட்டிக் கொடுக்க, நமக்கு மிகவும் நெருக்கமான மனிதர் ஒருவர் இதமாக நம்மை அரவணைத்து அறிவுறுத்தும் பதத்தில் அமைந்திருக்கும்.

    கவிக்குயில் படத்திற்கான அவரது, “சின்னக் கண்ணன் அழைக்கிறான்..”, காற்றுடன் அவர் நடந்த வேக நடையின் உரையாடல் பரிமாற்றம். அதில் சரணத்தில், கண்கள் சொல்கின்ற கவிதை இளவயதில் எத்தனை கோடி என்ற இடம் கொண்டாட்டக் களம். அதே பாடலைத் தாமும் தனியே பாடி இருந்த எஸ் ஜானகி, பாலமுரளி பாடியிருந்தது தெரிந்திருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன் என்று சொன்னாராம். இளையராஜாவின் மறக்க முடியாத வரிசையில் முக்கிய இடமொன்றில் இருப்பது இந்தப் பாடல்.

    தி இந்து ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழுவில் இருக்கும் கரிமெல்லா சுப்பிரமணியம் அவர்கள், பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவர்களில் ஒருவர். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக கரிமெல்லா அவர்களை நேர்காணல் செய்கையில், தமது குருநாதரைப் பற்றிய பெருமை அந்தப் பார்வையற்றவரின் விழிகளில் சுடர்ந்ததை விவரிக்க முடியாது. சொந்த சாகித்தியங்கள் பல இயற்றி இருந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஒருமுறை சோவியத் ரஷ்யாவுக்குப் பயணம் சென்றுவிட்டு வந்ததும், கன்னுல பண்டுல ரஷ்யா என்று தொடங்கும் தெலுங்குப் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். விசால பாவாலு, சுவிசால பவந்துலு என்று செல்லும் அந்தப் பாடல், விசாலப் பார்வையால் மக்களை ஆட்கொண்டு முன்னெழுந்த சோவியத் உலகின் உன்னத நாகரிகத்தை வியந்து எழுதப் பட்டிருந்தது என்றார் கரிமெல்லா.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளிலும் திரை இசையில் பாடிய பாலமுரளி அவர்கள் தாமே இசை அமைக்கவும் செய்தவர். ஏ பி நாகராஜன் இயக்கிய நவரத்தினம் படத்தில், எம் ஜி ஆருக்கும் குரல் கொடுத்தவர் (குருவிக்காரன் பொஞ்சாதி மட்டுமல்ல ஆங்கில இசைப்பாடல் ஒன்றைப் பாடி அதற்கு ஏற்ற கீர்த்தனை ஒன்றையும் பாடி இருப்பார் ஒரு காட்சிக்காக).

    புதிய கலைஞர்களைப் பாராட்டுவதில், பொது மேடையில் நிகழ்வுகளில் பங்கேற்பதில் முதுமையிலும் அவருக்கிருந்த ஆர்வத்தை, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இசைக்கலைஞர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் சில ஆண்டுகளுக்குமுன் பார்க்க முடிந்தது. திறமையின் மேலாதிக்க உணர்வு அவருக்கு நிரம்பி வழிவதாக விமர்சகர்கள் சிலர் கசப்போடு எழுதி இருந்தாலும், கூடவே அவரது அபார இசையை ரசனை சொட்டச் சொட்ட எழுதியவர்கள்.

    ஒரு நாள் போதுமா பாடல் காட்சியில் நடிக்குமுன், நடிகர் பாலையா அந்தப் பாடல் ஒலிப்பதிவையும், பொதுவாக பாலமுரளி கிருஷ்ணா பாடும் விதத்தையும் கவனித்து விட்டு வந்ததாகச் சொல்வார்கள். திரை நிரம்பிய ஒரு பேரவை. இரண்டு பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகள் அணிந்தபடி விதவிதமான வாத்தியக்காரர்கள். பின்னே விசிறிக் கொண்டிருந்தபடி முக அசைவில் அசத்திக் கொண்டிருக்கும் உசிலைமணி முதலானவர்களுக்கு நடுவே நாயகமாகக் கம்பீர வடிவில் மீசையை அடிக்கடி நீவி விட்டுக்கொண்டே ஒரு நாள் போதுமா என்று பாடுவதாக நடித்தது பாலையா தான் என்றாலும், இசைத் தெய்வம் நானடா என்ற இடத்தில் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணா அங்கே தோன்றிவிடுவதாகப் படும்.

    அந்தத் தன்னுணர்வும், துணிவுமிக்க ஞானச் செருக்கும் பெருகி வெளிப்படும் ஒரு காந்தாரக் குரலை ஒரு குழந்தையின் புன்னகை நழுவியோட இசைத்துக் கொண்டே இருந்த மகத்தான மனிதரே இப்போது மறைந்துவிட்டிருக்கிறார், தமது இசை மேதைமைக்கு சாகா வரமளித்துவிட்டு!

    &&&&&&&&&&&&&&&&&&&
    ஓவியம்: ஓவியர் தேவநாதன் (தேவா)
    devan srinivas <deva_1202@yahoo.co.in

    https://youtu.be/D0wLIArAayY

     

    https://youtu.be/J_5kf_9O9Ik

    Share
  • இந்தப் பூமி முழுவதும் விடியும் வரை………………..!

    நவம்பர்7: புரட்சியின் நூற்றாண்டு

    எஸ் வி வேணுகோபாலன்

    இருபத்தைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும்…முதன்முதல் அந்த வித்தியாசமான பல்லவியை ஓர் அற்புத இசைப் பாடகன் குரலில் கேட்டு! ‘எங்களைத் தெரியலையா, இந்த இசையைப் புரியலையா?’ என்று கேள்விகளைத் தொடுத்துத் தொடங்கும் அந்த உயிர்த்துடிப்பான பாடலைப் பின்னர் நமது பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எப்போது எங்கு பாடும்போதும் அதே சிலிர்ப்போடு கேட்டுக் கொண்டிருக்கிறேன்…

    பரிணாமன் எழுதிய அந்தப் பாடலின் பயணம், பிறகு, ‘திங்கள் ஒளியினில் துயில்வோரே – தினம் சூரியத் தீயினில் உழைப்போரே ….’ என்று மேலெழுந்து வருமிடம் உள்ளத்தைத் தீண்டுகையில் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும். பாட்டாளி வர்க்கத்திற்கான அச்சு அசலான குரலாக எழும் அந்தப் பாடல், சுரண்டலற்ற சமூகத்தைச் சமைப்பதற்கான தாகத்தை, சோசலிச உலகம் படைக்கப்பட்டதன் கொண்டாட்டத்தின் பின்னணியில் உரத்துப் பேசிச்செல்லும்.

    ak

    ஜார் எனும் அரக்கனை வேரறுத்த சம்மட்டி அரிவாள்கள், சரித்திர நரம்பு மண்டல மையத்தின் தத்துவ மருத்துவர்கள், ஃபாசிச இட்லரின் கூலிப்படைகளைப் பனி மலைமீதினில் வென்றவர்கள், பாட்டாளி ஆட்சியை முதன்முதல் மண்ணில் படைத்திட்ட புரட்சியியல் விஞ்ஞானிகள்….என்ற வரிகளில் எத்தனை எத்தனை ஆண்டு வரலாறும், போராட்டங்களும், மனிதகுல விடுதலைக்கான தியாகங்களும், தீரமிக்க புரட்சியின் வெற்றிக்களிப்பும் தெறிப்பதை மீண்டும் மனத்திரைக்குள் காண முடியும்.

    ak11917ம் ஆண்டு, உலகுக்கு முதன்முறை வேறுவகையில் உதயமானது. முதலாம் உலகப்போரின் ஆதாயங்களை ஏகாதிபத்திய உலகம் வெறிபிடித்த மிருகம் போல் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, போரின் காயங்களும், சேதங்களும், வாழ்வாதாரம் மேலும் மோசமாகிப்போன கோலங்களுமாக உலகெங்கும் உழைப்பாளி மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி இருந்த நேரமது. தாங்களே பகடைக்காய்கள். தங்களது நலனே பணயம் வைத்து ஆட்டம் நடத்தப்படுகிறது. எல்லா இழப்பின் வலியும் வேதனையும் தங்கள்மீதே சுமத்தப்படுகிறது என்ற கசப்பும், வெறுப்பும் தீயாகக் கனன்றெழுந்த இடங்களில், கொடியவன் ஜார் ஆண்ட ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் கூடுதல் தெளிவோடும், தீர்மானமான சிந்தையோடும் அறிவுற்றுத் தீவிழித்து எல்லாத் தடைகளையும் உதறித்தள்ளி முழங்கிப் புரட்சி என்ற பெருமுழக்கத்தோடு புறப்பட்டது. புரட்சியின் பிரசவத்தைப் பக்கத்திருந்து பார்த்துக்கொண்ட செவிலித்தாய் என்று வருணிக்கப்பட்டார் மாமேதை லெனின்.

    முதலாளித்துவச் சுரண்டல் உலகின் பல இடங்களிலும் வலுத்திருக்க, ரஷ்யாவில் எப்படி முதலில் வெடித்தது புரட்சி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் எந்த இடத்தில் கண்ணி வலுவற்றிருந்ததோ அங்கே தொடுக்கப்பட்ட சம்மட்டி அடி, விடுதலையைப் பெற்றுத் தந்தது என்று பதில் அளித்தார் லெனின்.

    வீழ்த்தப்பட்ட இறுதி ஜார் மன்னன், ரஷ்யப் பேரரசின் வளமை மிக்க பூமிப்பகுதியின் 80 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். அதுபோக, சுமார் 28 ஆயிரம் பெரும் பண்ணையார்கள் வசம், ஒன்றரை கோடி ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்தது. நிலச்சுவான்தாரர்கள் ஆதிக்கம் கொடிகட்டி இருந்த ரஷ்யாவில் ஏகபோகங்களின் கையிருப்பில் இருந்த சுரங்கத் தொழில்களிலும், இதர ஆலைகளிலும் முதலாளித்துவம் நிலைபெறத் தொடங்கி இருந்தாலும் அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியே இருந்தது. எனவேதான், இறுதி அடியை உறுதியாக அடித்து வெற்றி பெற முடிந்தது என்றனர் பாட்டாளி வர்க்க தத்துவ மேதைகள்.

    ak2

    முதலாவதாக நடைபெற்ற முதலாளித்துவ புரட்சி, பிப்ரவரி 1917ல் வெற்றி பெற்று அமையப்பெற்ற அரசின் தன்மை, பாட்டாளிவர்க்கத்தின் கோபத்தை மேலும் விசிறி விட்டது. எனவே அது வேகமாக முன்னேறி, கிராமங்களில் வேளாண் உழைப்பில் ஈடுபட்டிருந்தோரையும் விழிப்புணர்வும், ஆவேசமும் கொள்ளவைத்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்த ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று, விவசாயி வர்க்கத்தையும் இணைத்துக்கொண்டு நடத்திய போல்ஷெவிக் புரட்சி, இந்த மண்ணில் மானுட நேயம், மனிதம் இவற்றின் பொருளை உலகுக்கே படிப்பினை ஆக்கிக் கொடுத்தது.

    போல்ஷெவிக் கட்சி பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்டது. எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்ற பிரகடனத்தை போல்ஷெவிக்குகள் அறிவித்தனர். அந்நாளைய ரஷ்ய காலண்டர் படி, அக்டோபர் 25 (இப்போதைய கணக்குப்படி நவம்பர் 7) அன்று புரட்சிகர சக்திகள் ஜார் பேரரசனின் மொத்தப் பகுதிகளிலும் செஞ்சேனையின் கட்டுக்குள் கொணர்ந்து, ஆட்சிப்பொறுப்பை ஏற்றன. மக்கள் பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் கமிசார்கள் அவையின் தலைமையில் அரசு அமைந்தது.

    நிலம், சமாதானம், ரொட்டி என்ற முழக்கத்தின்கீழ் மக்களைத் திரட்டிய போல்ஷெவிக் புரட்சியில் அமையப்பெற்ற அரசு, முதல் கடமையாக, நிலக்குவியலை மக்கள் உடமை ஆக்கி, உள்ளூர் குழுக்கள், விவசாய சோவியத் குழுக்கள் வசம் ஒப்படைத்தது. பின்னர் கூட்டுப்பண்ணை வேளாண்மை நடைபெற கால்கோள் இடப்பட்டது.

    எல்லோருக்குமான கட்டாய இலவசக் கல்வி, உயர் கல்வி, வேலை வாய்ப்பு, இலவச மருத்துவ சுகாதார பாதுகாப்பு அனைத்தையும் யு எஸ் எஸ் ஆர் என்று அமைக்கப்பட்ட ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு நடைமுறைப்படுத்தியது. தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று வருணிக்கப்பட்ட ஜாரின் ரஷ்யா இருந்த இடத்தில், மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தோடு அன்பு கலந்த ஒன்றியத்தைப் படைத்தனர் புரட்சியியல் விஞ்ஞானிகள். பெண்களுக்கான வாக்குரிமையை சோவியத் ஒன்றியம் கொணர்ந்த பல்லாண்டுகளுக்குப் பிறகே அய்ரோப்பிய நாடுகள் அனுமதித்தன. (பிரிட்டனில் கூட 1928ல் தான் பெண்களுக்கான வாக்குரிமை சாத்தியமானது).

    மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்தியது புரட்சிகர சோவியத் அரசு. ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ’ என்ற மகாகவியின் கேள்விகளுக்கு செயல்விளக்கமான பதிலைக் கொடுத்தது சோவியத் ஒன்றியம். அதனால் தான், ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டிடையினில் கண் வைத்தாள், ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று எழுதினார் பாரதி. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்ற அவரது கீதத்தின் மெய்ப்பாடு சோவியத் ரஷ்யா. தேசிய கவி ரவீந்திர நாத் தாகூர் நேரில் சென்று பார்த்து புளகாங்கிதம் அடைந்தார். இருளிலிருந்து ஒளிவெள்ளத்திற்கு லட்சக்கணக்கான மக்களை வழி நடத்திட முடியும் என்பதை என் கண்களால் நம்பமுடியாமல் கண்டு பெருமிதம் கொண்டேன் என்றார். கவி நஜ்ருல் இஸ்லாம் உள்ளிட்ட பலரும் பரவசமடைந்தனர். தந்தை பெரியாரும் சோவியத் உலகை நேரில் சென்று பொதுவுடைமையின் வெற்றியைக் கண்ணாரக் கண்டு திரும்பினார். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதல் எம் ஆர் ராதா வரை நமது தமிழகக் கலையுலகின் அரிய படைப்பாளிகள் ஈர்க்கப்பட்டனர்.

    ஆனால், இத்தனையும் அத்தனை இலகுவாக நடந்துவிட வில்லை. புரட்சியின் வெற்றியை அடுத்து, ஏகாதிபத்திய சக்திகள் வெளியிலிருந்து தூண்டிட உருவான உள்ளூர் கலகங்கள் பெரிய சவாலாக இருக்க, நான்கு ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி சக்திகள் ஒடுக்கி வீழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஃபாசிச முசோலினியையும், நாசிச இட்லரையும் வீழ்த்தியதில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய செஞ்சேனையின் துணிவுமிக்க போரும், அளவிட முடியாத எண்ணிக்கையிலான மக்களின் தியாகமும் ஆற்றிய பங்களிப்பு விவரிக்க முடியாதது.

    சோவியத் புரட்சி அய்ரோப்பிய நாடுகளிலும் விடுதலையை சாத்தியமாக்கியது. சீனப்புரட்சிக்கு ஆதர்சமானது. இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிப்போடு போராடிக்கொண்டிருந்த போராளிகளுக்கு நம்பிக்கை தீபமாக விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோசலிஸ்டுகள் உருவாகிப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் மேலும் ஆழமாக வேர்விடவும், இரண்டாம் உலகப்போர் முடிவில் கிடைத்த எழுச்சியின் தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களைத் திரட்டி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவரவும் சோவியத் ஒன்றியத்தின் துடிப்புமிக்க இயக்கம் பேரெழுச்சியாக அமைந்தது.

    கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, விண்வெளி சாதனைகள், வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியில் அசாத்திய இலக்குகளை எட்டியது என சோவியத் ஒன்றியம் சாதித்தவை முதலாளித்துவ வல்லுனர்களாலும் புறந்தள்ள முடியாதவை.

    ஆனாலும், எண்பதுகளின் இறுதியில் மிகயீல் கோர்பச்சேவ் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்தில் வேகமாக நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில், சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. சோசலிசம் நழுவவிடப்பட்டது. பொதுவுடைமை தத்துவ நடைமுறைப்படுத்தலில் நீண்ட கால இடைவெளியில் ஏற்பட்ட தவறுகள், பிறழ்வுகள், பலவீனங்கள் இவற்றின் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகளின் பண்பாட்டு ஊடுருவலும், அரசியல் சதிகளும், இராணுவப் பொருளாதாரத்திற்கு பெரும்பான்மை நிதியைச் செலவிடத் தூண்டவுமாக வசதியாக அமைந்துபோனது. வாராது போல வந்த மாமணியை மனிதகுலம் தோற்றது இப்படித்தான் நடந்தது.

    ak3

    முதலாளித்துவ இதழான டைம் ஏட்டில் அண்மையில் வெளியாகி இருக்கும் கட்டுரை, சோவியத் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், முதலாளித்துவ நாடுகள் தங்களால் முடியாதனவற்றை ஒரு சோசலிச அரசு சாதித்துக் கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வகுத்த திட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. சோவியத் சாதனைகளை நேரடியான முறையில் போற்றுகிறது.

    இன்று ஏகாதிபத்திய அமெரிக்காவில், 99 சதவீத மக்கள், ஒரு சதவீத பெருஞ்செல்வந்தர்கள் நலனுக்காகச் சுரண்டப்படுவதா என்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் சாபத்தில் சிக்கிய பல நாடுகள் மாற்றுப் பொருளாதாரத்தை சிந்திக்கின்றன. நமது நாட்டிலும், தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பட்டு வருகின்றன. வறுமையில் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்ட விவசாய மக்களுக்கு மாற்று உலகு குறித்த நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு விடிகிறது.

    மக்ஸீம் கார்க்கி, ஆண்டன் செகாவ், டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ் ….என அற்புதமான இலக்கிய படைப்பாளிகள் மூட்டிய கனல் அது. எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை என்ற தத்துவ தரிசனம் அது. நவம்பர் புரட்சி, ஒரு நாட்டின் வெளிச்சமல்ல. புதிய உலகின் ஒட்டுமொத்த விடியலுக்கான கீதம் அது.

    ‘இந்த பூமி முழுவதும் விடியும் வரை….’என்றுதான், பரிணாமனின் அந்தப் பாடல் நிறைவு பெறுகிறது.

    ******************

    நன்றி: உழவன் உரிமை (நவம்பர் 2016 )

    Share
  • எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்!

    செப் 5: ஆசிரியர் தினம்

    Teachers-Day1

    எஸ் வி வேணுகோபாலன்

    ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் நாள், முதலாம் வகுப்பில் உள்ளே போய் நுழைந்த நேரம் நடுங்க ஆரம்பித்த காலும் கையும் நிற்கவில்லை. படபடப்பு மிகுந்து கொட்டிய வியர்வை கொட்டியபடியே. எத்தனை எத்தனை ஒத்திகை, எத்தனை முறை படித்துப் படித்து மனப்பாடம் ஆகியிருந்த சைக்காலஜி பாடம் ஒற்றைச் சொல் ஒழுங்காக வாயில் வரவேண்டுமே…ஹுஹும்…எதிரே தன்னைவிட வயது அதிகமான மாணவர்கள் (அதாவது ஆசிரியர்களாகப் போகிறவர்கள்!)….எப்படித்தான் நாற்பது நிமிடங்கள் ஓடி முடிந்ததோ தெரியாது, மணியடிக்கக் காத்திருந்தது மாதிரி அந்த ஆசிரியர் நேரே ஓட்டமும் நடையுமாக கல்லூரி முதல்வர் முன்பாகச் சென்று, தான் இந்த வேலைக்கு லாயக்கில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று தட்டுத் தடுமாறிச் சொல்லியும் விடுகிறார். அந்த முதல்வரோ கனிவான புன்னகை பூத்து, இதற்கெல்லாம்போய் யாராவது வேலையை விடுவார்களா….உங்கள் நடுக்கத்தை நீங்கள் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்…

    பயத்தைப் போய் எப்படி துணிச்சலாக வெளிப்படுத்துவது? முதல்வர் விளக்குகிறார்: “நடுக்கத்தை மறைக்க மறைக்க இன்னும் பதட்டம் கூடுமே தவிரக் குறையாது…உங்களுக்கு இருக்கும் பதட்டத்தை சாதாரணமாக வெளிப்படுத்தியபடி உங்கள் வேலையைத் தொடருங்கள், தன்னைப்போல உங்கள் வேலையில் சிறப்பாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்…

    மைசூர் பல்கலையின் புகழ்மிக்க பேராசிரியராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றபின்னும் 85 வயதிலும் நகைச்சுவை உணர்வு குன்றாமல் எழுதவும், வழிகாட்டியாக இருக்கவும் செயகிற பேராசிரியர் தண்டபாணி அவர்களது புத்தகம் ஒன்றில்தான் இந்த சுயவிமர்சனக் குறிப்பு பதிவாகி இருக்கிறது.

    பழைய துணுக்கு ஒன்று உண்டு! முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால், பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் நோயாளியைப் பார்த்து, நர்ஸ் சொல்வார்: டாக்டருக்குக் கூட இதுதான் அவர் செய்யப் போற முதல் ஆபரேஷன், அவர் பயப்படுறாரா பார்த்தீங்களா ?”

    ஆசிரியரும், மாணவரும் முதன்முறை சந்திக்கும் புள்ளிகள் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டிருப்பவை. பல ஆசிரியர்களை எதிர்கொண்ட மாணவர்முன் பழுத்த அனுபவம் கொண்டிருக்கும் ஆசிரியர் நிற்பதன் அனுபவங்களும் வித்தியாசமானவை.

    நடுக்கங்களோடு பழகும் கால்களுக்கு வகுப்பறை ஒரு புதிர் நிறைந்த புல்வெளி போன்றது. அடர்ந்த காடாகவும் கூட உருப்பெறுகிறது சமயங்களில்! வகுப்பறையில் – உலகில் இன்னும் பிறக்காத விலங்குகளின் குரல்களைக் கூட ஒலிக்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் மாணவர்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் மாணவர் இதயங்களைக் கவ்விப் பிடிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் மனத்தில் இடம்பிடித்துவிடும் மாணவர்கள் சமூகத்தின் வெளிச்சத்தைக் கூட்டுகின்றனர்.

    பேரா. ச மாடசாமி அவர்களது “போயிட்டு வாங்க சார்” (குட் பை மிஸ்டர் சிப்ஸ் ஆங்கில நூலின் நுணுக்கமான தமிழ் வடிவம்) நூலின் நாயகரான ஆசிரியர் சிப்ஸ், முதுமையிலும் தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் எதிரே இருக்கும் வீட்டில் குடியிருந்தபடி அடுத்தடுத்த இளம்பிராய மாணவர்களோடு நட்பு பூண்டு அன்பு கொண்டாடி நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைகிறார். அவர் மிகத் திறமையான ஆசிரியரோ, சாகசம் நிறைந்தவரோ அல்ல, மாணவரை நேசித்த இதயம் அவருடையது என்று வருணிப்பார் பேரா மாடசாமி!

    தேவகோட்டையில் அரசு உதவி பெறும் ஓர் எளிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஓயாமல் மாணவ, மாணவியரது திறமைகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெளிப்படவைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களை மின்னவைத்து சாதாரண வீட்டுப் பிள்ளைகளின் இல்லங்களில் பேரானந்தக் களிப்பை சாத்தியமாக்கி வருகிறார்.

    சென்னையில் கடந்த ஆண்டின் பெருமழை வெள்ளத்தில் தங்களது பாடப்புத்தகங்களோடு எதிர்காலக் கனவுகளையும் தொலைத்துவிட்டதாகக் குமுறிய மாணவர் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்து புத்தகங்களும் கொடுத்து, சிறந்த மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2வில் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியைகளை மாநகராட்சி மாணவியர் மறவாமல் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டனர்.

    டாஸ்மாக் கடைகளில் சீருடையோடு போய் நிற்கும் மாணவர் புகைப்படங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. ஆனால்,எண்ணற்ற ஆசிரியர்கள், இப்படிப் பல தவறான வழிகளில் நடக்கும் தங்கள் மாணவரோடு மல்லுக்கட்டிப் போராடி அவர்களை அன்பால் வென்றெடுத்து நல்வழிப்படுத்தும் பலநூறு நிகழ்வுகள் ஊடகங்களில் பேசப்படுவதில்லை.

    கேலிச்சித்திரங்களின் கருப்பொருளாகவும், வேடிக்கை காட்சிப் பொருளாகவும் ஆசிரியர்களைப் படைக்கும் “ரசனை” மிகுந்த திரைப்படங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் பாதிப்பும், பிரதிபலிப்பும் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் இருக்கத்தானே செய்யும்! ஆனால், ஆசிரியரைக் கொண்டாடும் சமூகத்தில் ஆசிரியர்கள் மேலும் உன்னதமாகவே நிலவுவார்கள்.

    ஆசிரியர் தினம், உள்ளபடியே மாணவர்களைக் கொண்டாடும் நாள்தான்! மாணவர்களற்ற உலகில் ஆசிரியரை யார் கொண்டாட முடியும்? அதேபோல், பெற்றோர்க்கும் கூட, ஆசிரியர் தினம் அவர்களது வாழ்க்கையின் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும்-ஏன் எதிர்காலத்தையும் இன்பமாகக் காணும் ஓர் அனுபவத்தை ஊற்றெடுக்க வைக்கும் நாள்! எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்தான் ஆசிரியர் தினம்.

    அண்மையில் தமது எண்பத்தைந்து வயதில் ஒரு சிறிய எலும்புமுறிவு ஏற்பட்ட விஷயத்தை நகைச்சுவை ததும்ப ஒரு கட்டுரையாக ஆங்கில இந்து நாளிதழில் எழுதி இருந்தார் பேரா தண்டபாணி. அதை வாசித்துவிட்டு அவரோடு ஏற்படுத்திக் கொண்ட நட்பில் அவர் அனுப்பிக் கொடுத்த அவரது புத்தகத்தில், தம்மோடு வம்புக்கு இறங்கிய – சமாளிக்க முடியாமல் திண்டாட வைத்த மாணவர்களுக்குத் தான் நன்றி சொல்லி இருக்கிறார். அவர்கள்தான் தமக்கு வகுப்பறை பட்டறையில் முதல் பயிற்சி அளித்தவர்கள் என்ற அழகான குறிப்போடு!

    அதனால் தான் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

    ***************

    Share
  • ஆனந்த யாழை மீட்டிய தோழனே…!

    -எஸ் வி வேணுகோபாலன்

     

    muthukumar1

     

    கஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ்,  தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, அடுத்து என்ன நடக்குமென்று…!

    சுஜாதா வாசிக்க வாசிக்க அரங்கு முழுவதும் கைதட்டி ஆரவாரித்த “தூர்” எனும் கவிதை அந்த மாணவர் எழுதியது. முன் வரிசையில் இருந்த பிரமுகர் ஒருவர் மேடைக்கு வந்து அந்தக் கவிதைக்குத் தாம் ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவிக்கிறார். கவிதையை எழுதியவர் நிகழ்வுக்கு வந்திருக்கிறாரா, மேடைக்கு வரவும் என்று அறிவிக்கப்படும்போது, ஜிவ்வென்று ஒரு வெப்பம் பரவுகிறது அந்த இளைஞர் உடல் முழுக்க…ஒரு மனம் சொல்கிறது, உன்னைக் காட்டிக்கொள்ளாதே உட்கார் என்று…இன்னொரு குரல் சொல்கிறது, மறுக்காதே, போ மேடைக்குப் போ என்று!

    காஞ்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் நா முத்துக்குமார் அறிமுக நிலையிலேயே அமர்க்களமாகக் கொண்டாடப்பட்ட நாள் அது!  தமக்கு வழங்கப்பட்ட பரிசுப்பணத்தை, கணையாழி வளர்ச்சிக்கு அளிப்பதாக அறிவித்துவிட்டு இறங்கி வந்துவிட்டார் முத்துக்குமார்.

    கவிதையில் மட்டுமல்ல, காட்சிக்கும், மெட்டுக்கும் உட்பட்ட சொற்களால் புனையவேண்டிய திரைப்படப் பாடல்களை இயற்றுவதில் அபார ஆற்றல் கொண்டவர் நா முத்துக்குமார் என்பதைத் தமிழ்த்திரை ரசிகர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர்.  மிகக் குறுகிய காலத்தில் அசாத்தியத் திறனை அவர் வெளிப்படுத்தியது, இத்தனை விரைவில் விடைபெற்றுச் சென்றுவிடவா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது தமிழ்த் திரைப்படப் பாடல் ரசனையின் பெரும்பரப்பு! எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை பெருமிதம் பொங்கும் பாடல்கள், எத்தனை எத்தனை தனித்துவமிக்க சாதனைகள்…மன்னிக்க முடியாத மரணம் உங்களது, எங்கள் முத்துக்குமார்!

    சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அவர் பிறந்தவுடன், ஏராளமான மனிதர்கள் தடதட என்று அந்தக் கட்டிடம் நோக்கி விரைந்து வந்தார்களாம். தான் பிறந்ததை அறிந்து கொண்டாட அல்ல, அப்போது அண்ணா சாலையில் இருந்த 14 மாடி எல் ஐ சி கட்டிடம் திடீரென்று தீப்பற்றி எரிவதாகக் கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் அருகே இருக்கும் மாடிக்கட்டிடத்தில் ஏறிப்பார்க்கவே அப்படி வந்தனர் என்று தனது கட்டுரைத் தொடரில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்துவிட்டதாகப் பள்ளி ஆசிரியரான அவர் அப்பா தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்தாராம். பிறகு தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது விருப்பங்களை நிறைவேற்றித் தரவும், ஆர்வத்தின் குறுக்கே அணைபோடாதிருக்கவுமாக இருந்ததை முத்துக்குமார் தான் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறந்த பரவசமாக எழுதிய தொடர் அது. இல்லாவிடில், எம் ஏ தமிழ் படிக்கவோ, படித்தபின் அதிக ஊதியத்தில் கிடைத்த அமெரிக்க வேலையை விட்டுவிட்டுத் திரை உலகிற்குள் நுழையவோ முடிந்திராது அவரால்!  ஆனால் இப்படி வெளியேற எப்படி மனம் வந்ததோ முத்துக்குமார்?

    இயக்குநராக விரும்பியே கனவுத் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்து வைத்த அவரது தமிழ், பின்னர் தற்செயலான முதல் வாய்ப்பால் “வீர நடை” (சீமான் இயக்கியது) போட்டும், காதல் கிறுகிறுத்தும், இயற்கை ஈர்ப்பில் சொக்கியும், உறவுகள் குறித்த நெகிழ்விலும், உணர்வுகளின் படப்பிடிப்பில் படபடத்தும் பரந்து விரிந்து கொண்டிருந்தது. கொஞ்சியும், கெஞ்சியும், விளையாடியும், களமாடியும், பரபரப்பாகவும், கலகலப்பாகவும்…இன்னும் என்னென்னவோ செய்யும் பாடல் தமிழ் அவரது எழுதுகோலில் எல்லையற்றுக் குடியிருந்தது. இப்போது முற்றிலும் பற்றி எரிந்துபோன பசுங்காடாகக் கிடக்கிறது பாடல்களின் இதயம்!

    சாதிய அடுக்குகளின் கீழ்த்தளத்திலிருந்து தன்னுயிரை இழைத்து, மேல்சாதிக் காதலியோடு இப்படி உரையாடல் நடத்துகிறான் “காதல்” படத்தின் காதலன், உனக்கென இருப்பேன்…என்ற புகழ்பெற்ற அந்தப் பாடலின் வரிகளில், “….கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று வண்ணத்துப் பூச்சிதான் பார்த்திடுமா… மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடுகட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்…” என்று போகும் உணர்வுகளின் வேகத்தில், “…கனவுக்குள் காவல் இருப்பேன்” என்று உறுதி அளிக்கிறான். கனவாகவே கருகிப் போகிறது அந்தக் காதல். வெயில் படத்தின், வெயிலோடு விளையாடி என்ற பாடல் உழைப்பாளி மக்களது வாழ்க்கைத் தடத்தைப் பதிவு செய்ததெனில், உருகுதே மருகுதே பாடல், “கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைத் சுமக்கவா…” என்ற இடத்தில் எத்தனை காதல் நெருக்கத்தைப் பேசியது.

    எங்கேயும் எப்போதும் திரைப்படம் சாலை விதிகள் மீறலின் விபரீத விளைவுகள் குறித்த அதன் அதிர்ச்சி செய்தியைச் சுமந்து வந்ததில், உன் பெயரே தெரியாது, மாசமா ஆறு மாசமா நான் காதலிச்சேன் போன்ற பாடல்களால் என்றும் பேசப்படுவதாயிற்று. கடந்த சில பத்தாண்டுகளில் வெளிவந்த முக்கிய படங்கள் பலவற்றிலும் நா முத்துக்குமாரின் பாடல்களின் பங்களிப்பு இருந்து வந்திருப்பது குறிப்பிட வேண்டியது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…’ (அங்காடித் தெரு), ‘நிலா நிலா போகுதே’ (அரவான்), ஏயா என் கோட்டிக்காரா (பாபநாசம்), உயிரே உயிரே பிரியாதே (சந்தோஷ் சுப்பிரமணியம்) என அவரது பாடல்களின் பட்டியலை எழுதத் தொடங்கினால் இடம் காணாது. இன்னும் என்னென்னவோ எழுத இடம் எவ்வளவோ காத்திருக்க, எங்கே இத்தனை அவசரமாகப் பிரிந்து செல்கிறாய், எங்கள் முத்துக்குமார்?

    பட்டாம்பூச்சி விற்பவன், அணிலாடும் முன்றில் உள்படக்  கவிதைகளும், கட்டுரைகளுமாக அவரது எழுத்துலகம் வசீகர வாசிப்புக்குரியது. வாடகை வீட்டில் வீட்டுக்காரப் பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தைக் கூட (சத்தம் போடாத மிக்சி எங்கே சார் கிடைக்கும்?) நகைச்சுவையாகச் சொல்லும் அவரது ரசனை, பின்னர் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வாடகைக்குச் செல்கையில், லிப்டில் தனது ஓட்டுநர் மூலம் தன்னை அறிந்து கொண்ட பெருமையில் பேசத்தொடங்கிய கனவான் ஒருவர், ”ஓ நீங்கள் வாடகைக்கு இருப்பவரா’ என்று வேறுபக்கம் திரும்பிக் கொள்வதுமான அபத்த உலகத்தை ஒரு கரப்பான் பூச்சியை வைத்து தனது மகனுக்கே சொல்லவைப்பதாக விரியும்…..ஒன்பது வயதில் இப்போது அந்த மகன், எட்டு மாதங்களே நிறைவு பெற்றிருக்கும் ஒரு பெண் குழந்தை, இவர்களுக்கு இனி அந்தக் கதைகளைச் சொல்லாமலே விடைபெற்றதேன் முத்துக்குமார்?

    சைவம் படத்தில் உங்களது அழகே அழகு என்ற இனிமையான பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது இரண்டாவது முறை. முதன்முறை அது தங்க மீன்கள் படத்தின் “ஆனந்த யாழிசை மீட்டுகிறாயடி” என்ற அற்புதக் கவிதை மொழிக்கு வழங்கப்பட்டது. அப்போது அதை உளமாரக் கொண்டாடி உங்களுக்கு எழுதியிருந்த என் மின்னஞ்சலுக்கு, உங்களிடமிருந்து இப்படி சுருக்கமான மறுமொழி வந்தது இப்போதும் என் மின்னஞ்சலில் இருக்கிறது: “இந்தக் கடிதம் எனக்கு இன்னொரு தேசிய விருது!”. இன்னும் எத்தனையோ விருதுகளும், வாழ்த்துக்களும் காத்திருக்க எப்படி வழியனுப்புவது உங்களை,  எங்கள் நா முத்துக்குமார்?

    சுஜாதா பெரிதும் பாராட்டித் தேர்வுசெய்த கவிதை, கிணற்றைத் தூர் செய்ய வரும் ஆட்கள் அடுத்தடுத்து எடுத்துத் தரும் பொருள்களைப் பேசிக் கொண்டே செல்லும். பாதாளக் கொலுசுக்குத் தப்பிய பொருள்களில், வேலைக்காரி திருடியதாகச் சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்ற வரி நெஞ்சில் முள்ளாய்க் குத்தும். ஆனால் கவிதையின் இதயம் அடுத்து அது முற்றுப்பெறும் இடத்தில் இப்படி வந்துக் காட்சி அளிக்கும்:

    இன்றுவரை அம்மா
    கதவுகளின் பின்னிருந்துதான்
    அப்பாவோடு பேசுகிறாள்
    கடைசிவரை அப்பாவும்
    மறந்தே போனார்
    மனசுக்குள் தூரெடுக்க!

    என்றென்றும் தமிழ்க் கவிதை, திரையிசை மற்றும் வாசக ரசனை உலகத்தில் மேலாகவே மிதந்தும், எடுக்கச் செல்கையில் ஆழத்தில் அமிழ்ந்து, தேடத்தேடத் தொடர்ந்து தட்டுப்பட்டும் கொட்டிக் கிடக்கும் வித்தியாசமான படைப்பாளியாகவே நினைக்கப்படுவீர்கள் முத்துக்குமார்!

     

    Share
  • தாத்தாவின் டைரி குறிப்புகள்

    எஸ். வி. வேணுகோபாலன்

    2011 தீக்கதிர் புத்தக மேசை பகுதியில் வெளிவந்த நூல் ரசனை கட்டுரை இது… மதுரை சுப்பாராவ் அவர்களது அருமையான சிறுகதை தொகுப்பின் மீதான இந்த எழுத்துக்களை, அதன் தொடக்கத்தில் எழுதி இருந்த மேற்கோள் கவிதையை திண்டுக்கல் தோழர் ஆர் எஸ் மணி நினைவூட்டிக் கேட்கவும் மீண்டும் அசைபோட நேர்ந்தது… உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்….

    தாத்தாவின் டைரி குறிப்புகள்

    ரசனையைத் தூண்டி சிந்தனையில் ஆழ்த்தும்
    வாசிப்புப் பயணம்

    என்றோ வசித்த
    ஒரு தெருவைக்
    கடப்பது
    அத்தனை எளிதல்ல.
    ஒரு தெருவைக்
    கடப்பது
    சமயங்களில்
    ஒரு வாழ்வைக்
    கடப்பது போல.
    -சுந்தர்ஜி (நன்றி:sundargprakashblogspot.com )

    நேற்று முன்தினம் தற்செயலாக வாசிக்கக் கிடைத்த மேலே உள்ள கவிதை, திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் அடிநாதமாக இருப்பதை உணர்ந்து லயித்துப் போனேன்.

    வசித்த தெரு மட்டிலுமல்ல, நாளிதழின் ஒற்றை வரி செய்தி கூட ஒரு பெரிய வாழ்வனுபவத்தைத் தன்னுள் சுமந்திருப்பது தொடர்புள்ளவர்களுக்குப் புலப்படும். எப்போதோ கேட்ட பழைய பாடல் ஒன்றை நீண்ட நாள் கழித்து நீங்கள் கேட்க நேரும் போது, அது உங்களுக்குள் எழுப்பும் சங்கிலித் தொடரான நினைவுகள் சமயத்தில் பாடலைக் கூட நழுவ வைத்துவிட்டுப் பிறகு ஒரு பெருமூச்சோடு அடுத்த வேலைக்கு நகர்த்தும். மரக் கிளையிலிருந்து கண்ணுக்குச் சட்டென்று தெரியாத வெள்ளிக் கம்பியாகத் தொங்கும் இழையில் ஒரு புழு சர்க்கஸ் வேலை செய்து தப்பிக்கத் துடிப்பதை சிறுவர்கள் சட்டென்று கண்டுபிடித்துத் துருவ ஆரம்பித்துவிடுவார்கள். தாத்தா பாட்டி சொன்ன புராணக் கதையோ, சரித்திர சங்கதியோ கூட திரும்ப அசை போடுகிற போது, மேகத் திரளை உற்றுப் பார்த்தால் அது பஞ்சுப் பொதியாய்ச் சிதறிப் பிரிந்து இணைந்து வேறு வேறு சித்திரங்களை அடையாளப் படுத்துவது போல புதிய தேடல்களை உருவாக்கக் கூடும்.

    சாதாரண, அசாதாரண என்றெல்லாம் பிரிப்பானேன் வாழ்க்கையை, அவரவர் அனுபவங்கள் அவரவர்க்கு மகத்தானவை. அதை உங்கள் உள்ளங்கையில் ஏந்திப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்க்கவேண்டும். அவ்வளவு தான். அந்த வேலையை எழுத்தின் சித்தர்கள் சிலர் பளீரென்று வடித்து உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைக்கும்போது அடடா..அதற்கு மேல் என்ன வேண்டும் ரசனையோடு அலையும் பிறவிகளுக்கு?

    “தாத்தாவின் டைரி குறிப்புகள்” வாசிப்பு ஒரு வித்தியாசமான நடைப் பயணம். புராண, வரலாற்று மறு வாசிப்புக் கதைகளை அதிகம் உள்ளடக்கிய 16 கதைகளை அறிமுகப்படுத்துவது வாசகருக்கு நேரடியான வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தில் குறுக்கீடு செய்துவிடலாம் என்ற தவிப்பிருந்தும், வாசிப்பின் நுகர்வைப் பகிரும் இன்பத்தின் முனையிலிருந்து இதை அணுகலாம்.

    தலைப்புச் சிறுகதை கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுக்கு அறிவிக்கப்பட்டபோது அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்த உற்சாகத்தோடு அலைபேசியில் அழைத்து அந்தக் கதையை உடனே வாசித்தாக வேண்டுமே என்றேன். கையெழுத்து பிரதியை எனக்காக நகல் எடுத்து அடுத்த அஞ்சலில் அனுப்பி வைத்தார் ச சுப்பாராவ். மதுரை மாநகரின் வைதிக பெரியவர் ஒருவரது டைரியில் பிரிட்டிஷ் காலத்துப் பதிப்பகங்களின் பெயர்களும், மாநகரின் முக்கிய இடங்களும், கடைகளின் பெயர்களும், கட்சி பிரமுகர்கள் அடையாளங்களுமாய் அசாத்திய விவரங்களின் தொகுப்பை விரிகிற அந்தக் கதையின் இறுதியில் தான் ஷாக் வைத்திருப்பார் சுப்பாராவ். தந்தையை இழந்த தன்னையும், தனது தாயையும் வருஷித்துக் காத்து வளர்த்த தாத்தாவின் ஞாபகமாய் இருக்கும் அந்த டைரிகளை எடுத்தாலே ஏன் அம்மா சலித்துக் கொள்கிறார் என்பதன் விடை, இளவயது கைம்பெண் ஒருத்தி நெறியோடு இருந்தாளா என்பதை அவளது தவறாத மாதவிலக்கைப் பதிவு செய்து வந்த நற்சான்றுக் கையேடுதான் அது என்று தெரியவருகிற இடம் சனாதன பெண்ணடிமைப் பார்வையை நெருப்பாய் எரிக்கும் இடம். “ஞானிகளும் சமயத்துல மனுஷாளா இருப்பா, சில சமயம் அதுக்குக் கீழயும் இறங்கிடுவா.. . ” என்று அம்மா சொல்லும் இடம் அது.

    “செல்வம் மாஸ்டர்” , அசாத்திய திறமை இருந்தும் வாழ்க்கையின் புதிர்கள் பிடிபடாத ஒரு கலைஞனின் வீழ்ந்த வாழ்க்கையின் மீது கண்ணீர் சிந்த வைக்கும் கதை. பொருளாதார தட்டுப்பாடு மனிதர்களைக் கொண்டு தள்ளும் நரகம் சமூகத்தின் மீதான மெலிய விமர்சனமாகவும் படர்கிறது. “சியர் கேர்ல்ஸ்” கதை, சொர்க்கம் நரகம் பற்றிய வருணிப்புகளின் பின்புலத்தில் அருவருப்பாகக் காட்சி தரும் அக்காலத்திய புனைவுகளைப் பகடி செய்கிறது. பிரிஜ்லால் சுப்ரமண்யம் சிறுகதை, நமது முக்கிய கைப்பொருளை அற்பத் தேவைக்காகக் கைமாற்றிக் கொண்டு காணாமல் போகும் பழைய நண்பனின் மீட்சியையும், மீள மறுக்கும் நட்பையும் அழகாகப் பேசுகிறது. “வெள்ளைக் கமலாவும், நாய்க்கண்ணனும்” கதை காதலைக் காட்டிக் கொடுத்துப் பறித்தவனின் காலம் கடந்த மன்னிப்பு கோரல், அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அன்றைய மேம்பட்ட வாழ்க்கையின் படிக்கட்டு எதிலும் பொருந்தாது திரும்ப அவனிடமே வந்து சேர்வது மனதை என்னவோ செய்கிறது. “செம்மண்”, நகர வாழ்க்கை பறிகொடுக்கும் பாரம்பரிய விஷயங்களைக் குறியீடாக உணர்த்துவது.

    “அக்பர் என்ற அப்பா”, “ஜெபான்னிசா” கதைகள் முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர்கள் அக்பர், அவுரங்கசீப் இருவரின் காணாத பக்கங்களை எடுத்து வைக்கும் அற்புதச் சிற்பங்கள். தனக்குச் சொல்ல வேண்டிய செய்தியை சுப்பாராவ் பதட்டமாகச் சொல்லத் தலைப்படுவதே இல்லை. கதையின் வாழிடத்தில் வாசகரையும் ஓர் அங்கமாக்கி அவர்கள் அருகேயே அந்தக் கதையை நிகழ்த்துக் கலையாக்கிவிடுபவர். ஆர் எஸ் மனோகர் நாடகங்களில் ஒரே ஒரு வரி வசனம் வருவதாயிருந்தாலும் மேடையில் மிகுந்த பாடெடுத்து அந்தக் காட்சிக்கான ஜோடனை அமைக்கப் பட்டிருப்பதைப் போல, மியூசியத்தின் கலைப் பொருள்களை உயிர்ப்பித்தும், புதையுண்ட மனிதர்களை மீண்டும் எழுப்பியும் வாழ்ந்து காட்ட வைக்கும் வல்லமையை எழுத்தில் வருவிக்கிறார் சுப்பாராவ். சோக சித்திரங்கள் எப்போதும் உள்ளத்தைத் தழுவுதல் இக்கதைகள் விஷயத்திலும் நடக்கிறது.

    காமச் சாமியார்களின் ஆதிகால வடிவமான ரைக்வரின் அடாவடி குறித்த கதைக்கு “நித்யானந்தம்” என்பதைத் தவிர பொருத்தமான தலைப்பு வேறு என்ன இருக்க முடியும் ? ஆனால், லோப முத்ரா வேறு தளத்தில் இயங்கும் கதை. ஜப தபங்களில் நாட்களைக் கடத்தும் தவ சிரேஷ்டர்களுக்கு இல்லற தருமத்தை பத்தினிகள் நினைவுபடுத்தவேண்டி வருவது குறித்த கவித்துவ மோகம் அது. ஏனோ அது, இக்காலத்தில் ஐ டி துறை இளம் தம்பதியினர் தமக்கான நெருக்கமான நேரங்களுக்குக் கூட யோசித்து யோசித்து அட்டவணை போடுவது குறித்து அண்மையில் வாசித்த வேதனை செய்தியை நினைவுபடுத்தியது.

    “கடைசிக் கேள்வி”, பாண்டவர்களின் மூத்தவன் உண்மையில் தருமத்தை அனுசரித்த தருமனா என்ற சவுக்கடிக் கேள்வியை வைக்கும் புராண மறுவாசிப்பு. “சுட்ட பழம்” கதையில் வரும் அவ்வை, பாட்டியாய் அறிமுகமாவதில்லை எனபது இன்ப அதிர்ச்சி. கேள்வி கேட்ட சேரிச் சிறுவனைப் போக வேண்டிய உலகுக்கு அனுப்பிவிட்டு அவனிடத்தில் முருகன் தான் சுட்ட பழம் வேண்டுமா என்று கேட்டவன் என்று வரலாறு புரட்டும் மன்னவன் பற்றிய இந்த மறுவாசிப்பில், அவ்வையும், அதியமானும் ருசித்து உண்ணும் உணவு வகைகளை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று சுப்பாராவிடமே கேட்டேன். கே கே பிள்ளை அவர்களின் தமிழர் வாழ்வும், பண்பாடும் என்ற அற்புத நூலில் இருந்து எடுத்த தரவுகள் என்றார். இந்த நுட்பமான தகவல் சேகரிப்பு அவரது சின்னச் சின்னக் கதைகளிலும் சுடர் விடுகிறது. தீர்மானமான நாத்திகப் பார்வையை, சாதியத்திற்கு எதிரான குரலை அப்பட்டமான பக்தி மார்க்கத்தில் விரியும் நிகழ்வுகளின் பின்புலத்தில் நின்று விரித்து வைக்கும் “கடவுளின் மறுமொழி” கதையிலும் விவரக் குறிப்புகள் ரசத்தைச் சேர்க்கின்றன. மகாகவி பாரதியின் பத்திரிகைத் துறை நுழைவாசலைத் திறக்கும் “விட்டுவிடுதலையாகி ” என்ற எளிய கதையிலும் இதை ருசிக்க முடியும்.

    “இந்த மரம் தான்…”கதை, சுதந்திரப் போரில் மங்கள் பாண்டே தியாகத்தை ஒரு மரத்தின் குரலில் பேசுவது. நெட்டை மரங்களென நின்ற மனிதர்களைக் கேள்விக்குள்ளாக்குவது.

    தொகுப்பின் சாட்டையடிக் கதையாக நிற்பது, “சில கேள்விகளும், ஆயிரம் பசுக்களும்”. வேதாந்த தத்துவார்த்தத்தின் மணிமுடியைத் தரித்து அத்தனை எதிர்வாதங்களையும் தவிடுபொடியாக்கி விடைபெறும் யாக்ஞவல்கியனை, எல்லாம் மாயை என்றானபின்னால் இத்தனைப் பரிசுப் பொருள்களும், பசுக்களும் எதற்கு என்று மன்னன் ஜனகன் தயங்கித் தயங்கித் தனியே போய்க் கேட்கவும், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவன், என்னை நம்பியிருக்கும் பெரிய கூட்டத்தின் வயிறுகளை பிரம்மஞானம் நிரப்பாது, அனைத்திற்கும் ஆதாரம் ஆத்மா அன்று, பொருள் தான் என்று பதில் அளிக்கும் இடம் அற்புதக் கடல். இன்னமும் மாயை குறித்த மாயையில் இருக்கும் மக்களுக்குத் தெளிவைக் காட்டும் இக்கதை, தவிர்க்க முடியாதபடிக்கு ராகுல் சாங்கிருத்தியாயனின் வால்கா முதல் கங்கை வரை என்ற அசாத்திய நூலின் நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது. அகங்கார மத பீடங்களை ஞானத்தின் வடிவமாக தரிசிக்கும் இக்காலத்தில் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய அதன் தேவையை இக்கதை உணர்த்துவதாகப் பட்டது.

    சுப்பாராவ் தேர்ச்சியான கதைக்கருவை எடுப்பதோடு கூடவே அது இயங்க வேண்டிய களத்திற்கான தயாரிப்புகளையும் நவராத்திரி கொலுவில் பூங்கா, நீரருவி, மலைக்கோட்டை, நெடும்பாதை அமைக்க சில வீடுகளில் குழந்தைகளும், பெரியவர்களும் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளைப் போல மேற்கொள்கிறார். அதற்கான மொழி அவரது சொந்த ரசிப்பின் திளைப்பிலிருந்து இலகுவாக வழிந்து எழுதுகோலை நிரப்புகிறது. அதன் கொண்டாட்டத்தில் தொடரும் வாசிப்பின் இடையேயும், இறுதியிலும் அவர் பொறி வைத்துக் கொடுக்கும் அதிர்ச்சி வாசகரை மீண்டும் மீண்டும் அதே வழியில் அதே பயணத்தை மேற்கொள்ளத் தூண்டுகிறது. இன்னும் மேம்பட்ட அனுபவங்களை நமது உள்ளங்கையில் எடுத்துக் கொடுக்க அவரை வேண்டுகிறது வாசக உள்ளம்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் இவ்வாண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவுப் பரிசை இந்தத் தொகுப்பு பெற்றதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பாரதி புத்தகாலயம் நியாயமான பெருமிதம் கொள்ள முடியும். உறுத்தும் மிகச் சில பிழைகளைத் திருத்திய அடுத்தடுத்த பதிப்புகளைத் தமிழ் வாசிப்பு உலகம் கோரிப் பெற்று இன்புற வேண்டும்.

    தாத்தாவின் டைரி குறிப்புகள் – சிறுகதைத் தொகுப்பு
    ச சுப்பாராவ்
    பாரதி புத்தகாலயம்
    விலை ரூ.60/-. பக்கங்கள்:96

    Share
  • ஒழிக்காமல் விடுவதில்லை………

    எஸ் வி வேணுகோபாலன்

    மிக அண்மையில் செல்ல மகனுடன் மெரீனா கடற்கரைக்குச் சென்றிருந்தேன்… மணலில் கால் வைத்துக் கடலை நோக்கி முதலடி எடுத்து வைக்கையில் நந்தா கேட்டான், “உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை இது தெரியுமா?’ என்று. அப்படியா, ஆசியாவில்….என்று இழுத்தேன். இல்லை, உலகிலேயே இரண்டாவது என்று மீண்டும் அழுத்திச் சொன்னவன், அதை நான் எப்போது ஒப்புக் கொண்டேன் என்பதுதான் முக்கியம் என்று தொடர்ந்தான். சில மாதங்களுக்குமுன் ஒரு தொண்டு நிறுவனத்தின்சார்பில் சென்னை கடற்கரையைத் தூய்மை செய்வோம் என்று நடந்த இயக்கத்தில் தான் பங்கேற்றதை எனக்கு நினைவூட்டிய நந்தா, “நானும் சிபியும் திரும்பத் திரும்ப சுத்தம் செய்து சுத்தம் செய்து திரும்புவோம், மீண்டும் மீண்டும் குப்பையாக வந்து விழுந்திருக்கும்……வருடம் முழுக்க நிற்கிற இடத்திலேயே நின்று சுத்தம் செய்தாலும் இது முடியும் வேலை இல்லை என்று அப்போதுதான் தெரிந்து வெறுத்துப் போனோம்….” என்றான். பிறகு நல்லவேளையாக நாங்கள் குப்பையையும், தூய்மையும் மறந்து பேச்சை மாற்றிக் கொண்டு கடலை ரசித்துவிட்டுத் திரும்பினோம்.

    ஆனால், அன்றிரவு என் தூக்கத்திற்குள் மெரீனா கடற்கரை உலகின் முதல் கடற்கரையாக விரிந்தது. மணமக்கள் மேலே அட்சதை தூவுவது போன்ற அக்கறை உணர்வோடு ஒவ்வொரு மனிதராக வந்து குப்பை போட்டுக் கொண்டு செல்வது போன்ற அடுத்த காட்சியால் நான் திடுக்கிட்டுப் போனேன். டிசம்பர் 26, 2004 அன்று திடீர் என்று கடல் பொங்கி சுனாமி என்ற பெயரில் மிகக் கோபமும் கொந்தளிப்புமாகப் புறப்பட்டு வந்து காவு வாங்கிக் கொண்டு சென்றதற்கு இந்தக் குப்பை விஷயம் ஒரு காரணமாக இருக்கக் கூடுமோ என்று தோன்றத் தொடங்கிய நேரத்தில் கனவு வேறொரு சானலுக்கு மாறி இருந்தது. வழக்கம்போல் காலை எல்லாம் மறந்து நாகரீக உலகின் தவப்புதல்வனாக மாறி இருக்க அன்றாடத்திற்குள் வேகமாக நுழைந்திருந்தேன்.

    ஆனால், ஏதோ ஒரு முக்கியமான காகிதத்தைத் தேடுகையில், என் அலமாரியில் எது எங்கே என்று தெரியாத அளவுக்கு எல்லா வரிசைகளும் என் அன்பாலும், ஆர்வத்தாலும், ஆசையாலும் சேர்த்திருந்த புத்தகங்களோடு அராஜகத்தாலும், அநியாயத்தாலும், அடாவடியாலும் குவிந்திருந்த குப்பையாலும் ததும்பிக் கொண்டிருந்ததைப் பார்க்க, மெரீனா கடற்கரை அதன் இன்னொரு வடிவில் வீட்டுக்குள் சுருண்டிருந்தது மாதிரி தெரிந்தது. எந்த வரிசையில் எந்தப் பகுதியை இழுத்துத் தேடத் தொடங்கினாலும் குறைந்தது பத்து நாள் விடுப்பு எடுக்காமல் மீண்டும் கதவை அடைக்க முடியாது என்பது துலக்கமாகத் தெரிகையில் கண்கள் கலங்கத் தொடங்கின. இந்த மாதிரி நேரத்தில் கடவுள் நம்பிக்கை அற்றவனாகப் போனோமே என்று வருத்தம் சேர்ப்பது மாதிரி, ‘ஆண்டவன்’ புண்ணியத்தில் தேடப் போன ஆவணம் ஒன்று பளிச்சென்று குறிப்பிட்ட வரிசையில் புத்தக அடுக்கின் வலப்பக்கம் மூலையில் பரிச்சயமான மேலுறையோடு தட்டுப்பட்டது. மெரீனாவை வேறு யாரும் பார்க்குமுன் பத்திரமாக உள்ளடக்கிக் கதவுகளை கவனத்தோடு அடைத்துவிட்டு கம்பீரத்தோடு வெளியே புறப்பட்டுப் போனேன்.

    எப்போதிலிருந்து நீங்கள் குப்பை சேர்க்கத் தொடங்கினீர்கள் என்று எந்த நேர்காணலிலும் யாரும் யாரையும் கேட்டமாதிரி நினைவில் இல்லை. “நான் இளமைக் காலத்தில் இருந்தே குப்பைகளோடு கலந்து வாழ்வதில் விருப்பம் கொண்டிருந்தேன், குப்பைகளின் காதலன் என்ற புனைபெயரில் அப்போதே கவிதைகள் எழுதி இருக்கிறேன், என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் …குப்பைகள் இல்லாத ஓர் உலகை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடிந்ததில்லை” என்று பிரபல எழுத்தாளர்கள் யாராவது சொல்லி இருப்பார்கள் என்றுதான் என் மனசாட்சி சொல்கிறது.

    இப்போது நாங்கள் இருப்பது, எங்கள் திருமண வாழ்க்கையில் நாங்கள் மாறி இருக்கும் எட்டாவது வீடு. அதற்குமுந்தைய கணக்கைச் சேர்த்தால் (அதாவது இருவரும் அவரவர் குடும்பத்தில் இளமைக் காலத்திலிருந்து மாறி இருக்கும் குடியிருப்புகளைச் சேர்த்தால்), இந்த எண்ணிக்கை இருபத்தைந்தைத் தொடும் என்ற அதிர்ச்சிப் புள்ளி விவரம் இருக்கிறது. புகைப்படங்கள், கடிதங்கள், துண்டுச் சீட்டுகள், பிடித்த காலண்டர் பக்கம், ரசித்த இயற்கைக் காட்சி ஓவியம், பிறகு முழுமைப்படுத்தலாம் என்று வைத்திருந்த கவிதைக் கிறுக்கல் (கிறுக்கல் கவிதை என்று உங்களுக்குப் புரிந்திருந்தால் கம்பெனி ஜவாப்தாரி அல்ல), யாரிடமோ சேர்த்துவிடுவதாக உறுதி அளித்து வாங்கி வைத்திருந்த ஸ்தல வரலாறு, உடனே படிக்க வேண்டும் என்று பத்திரப்படுத்தி இருந்த ஒரு நூற்று நாற்பத்து மூன்று (ஆண்டாள் வாழி திருநாமத்தில் வருவது மாதிரி) சிறு, குறு, பெரிய புத்தகங்கள், இவை அன்றி நாள் கணக்கில் வாரக் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் உண்டியலில் பக்திபூர்வமாகப் போட்டு வரும் காசு மாதிரி சேர்த்துக் கொண்டே வந்திருக்கும் …… நீள்வரிசை.

    ஒருமுறை வீடு மாற்றுகையில் உடனிருந்த மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி, அவர் பங்குக்குக் கொஞ்சம் கழித்துக் கட்டினார். நான் பதறிப் போய், அந்த மூட்டைகளில் இருப்பது எல்லாம் மிகவும் முக்கியமானவை என்று கத்தினேன். பதறாமல் அவர் சொன்னது:”முக்கியம், மிக முக்கியம், மிகவும் முக்கியம் என்று நீங்கள் பிரித்து வைத்திருந்த எந்த பிளாஸ்டிக் கவர்களையும் இரண்டு ஆண்டுகளில் முந்தைய வீட்டில் இருக்கும்போதே எடுத்துப் பிரித்ததாகத் தெரியவில்லை. எந்தக் காலத்தில் அதை நீங்கள் மீண்டும் எடுத்துப் பார்க்கப் போகிறீர்கள்?”

    எனக்கு பகீர் என்றது. அந்த மூட்டைகளில் சேகரித்து வைத்திருந்த காகிதங்களில் யாருக்கோ கொடுத்த வாக்குறுதி, நம்பிக்கை, ஒப்புதல் வாக்குமூலம் உறைந்திருப்பதாகவும், அத்தனை பேரும் ஒரே நாளில் சேர்ந்து என் எதிரே வந்து நின்றால் அத்தனை பேருக்கும் தேநீர் கொடுத்து முடிக்கவே அரை நாள் ஆகும் எனவும் அயர்ச்சி ஏற்பட்டது. அவர்களது கேள்விக்கோ, எதிர்பார்ப்புக்கோ உரிய நடவடிக்கை அல்லது பதில் என்னவாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கவேண்டும், அடுத்த முறை வீடு மாற்றும் வரை இந்தச் சொத்து என்னோடு இருக்கட்டும் என்று அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அடுத்த முறை மேற்படி கடமையை அவர் எனக்குத் தெரியாமல் என் வாழ்க்கை இணை அறிவுறுத்தியபடி ஆற்றி இருந்ததை அதற்கும் அடுத்த வீடு மாற்றும்போதே நான் கண்டுபிடித்தேன். ஆனால் அந்த இடைக்காலத்தில் சம அளவிலான வேறு மூட்டைகளை நான் ஈட்டி இருந்தேன்.

    உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்குப் போனாலும் எங்கும் பொருள்கள் இறைந்து கிடைக்காமல், நாளிதழ்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு, தொலைக்காட்சிப் பெட்டி மீது பூங்கொத்து கவிழ்த்து வைக்கப்பட்டு (வர்றதுக்கு முன்னே சொல்லிட்டு வாங்க என்கிறார்களே, இந்தத் தில்லாலங்கடி வேலைக்குத் தானோ), பளீர் என்ற வரவேற்பறை, குழப்பம் அற்ற சமையலறை, அமைதி குடிகொண்டிருக்கும் மற்ற இடங்கள் என்று இருப்பதைப் பார்த்ததும் உள்ளுக்குள் எனது மெரீனா கடற்கரை விரிந்து வாரிச் சுருட்டிக் கொள்ளும். தீர்மானமான முடிவுகள் உள்ளுக்குள் ஓடும். அடுத்த விடுமுறை நாட்கள் வீட்டை சுத்தம் செய்வதற்குத் தான் என்ற குரல்கள் காதுகளில் விழுகையில் விடுமுறைகளை எல்லாம் முதலில் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எனக்குள் வேறொரு அன்பான முரட்டுக் குரல் கேட்கும்.

    பழைய மேடை நாடகம் ஒன்றில் (ஊர் வம்பு என்று நினைவு…அதுவும் மெரீனா எழுதியது!) தனது அலமாரியை யார் சுத்தம் செய்தது என்று கூத்தபிரான் கத்துவார். எனக்கு எல்லாம் கலைத்துப் போட்டிருந்தால்தான் எது எது எங்கே இருக்கிறது என்று தெரியும் என்று சொல்வார். இப்போ என்ன காணாமப் போச்சு என்று பூர்ணம் விஸ்வநாதன் கேட்பார். அனுமார் ஃபோட்டோ ஒன்று ஆசையா வச்சிருந்தேன்…எங்கே போச்சு தெரியல என்பார் கூத்தபிரான். ஏண்டா அபிஷ்டு, அனுமாரை நீ போய்ப் பார்த்து ஃபோட்டோ எடுத்துண்டு வந்தியோ, அனுமார் படம்னு சொல்லுடா பரதேசி என்பார் பூர்ணம். கைத்தட்டல் அமர்க்களமாகக் கேட்கும் அரங்கில்.

    கலைத்துப் போட்டு வைத்திருந்தால் சட்டென்று எடுக்க முடியும் என்பது ஒரு கலை மனத்தின் அடையாளம் என்பது இந்த உலகுக்கு என் பிடிபடுவதில்லை என்ற கேள்வி நீண்ட நாளாக இருக்கிறது. வாராது கலைத்துப் போட்ட தலைமுடி, இஸ்திரி போடாத சட்டை, தோய்க்காத ஜோல்னாப் பை எல்லாமாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் உலகின் அறிவுஜீவித் தோற்றம் என்பதற்கு யாராவது காப்புரிமை பெற்றிருப்பார்கள் என்று கூடத் தோன்றியது. இதெல்லாம் சாதாரண மனிதர்களுக்கு விளங்குவதில்லை என்பது இந்த உலகின் சாபம் என்பதும் வருத்தம் மேலிட வைத்தது.

    ஆனால் யாருமற்ற பொழுதுகளில் ஒற்றை ஆளாக வீட்டில் இருந்துகொண்டு குப்பைகளை ஒழித்துக் கட்டி, எல்லோரும் வீடு திரும்புகையில் பார்த்து அசந்து நிற்பதுபோல் ஒரு மாயத்தைச் செய்தாக வேண்டும் என முட்டாள்தனமான சிந்தனைகள் அவ்வப்போது தோன்றத் தான் செய்யும். ஆனால் உன் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு உன் சுயத்தைப் பலியிட்டு விடாதே என்ற எச்சரிக்கைக் குரல்தான் என்னைப் போல் பலரையும் தடம் மாறாமல் வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை இங்கே பெருமிதம் பொங்கக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

    பாபு திரைப்படத்தில் ஏழை சிவாஜியின் குடிசைக்குள் இருக்கும் ஒரே நாற்காலி மீது வைத்திருக்கும் ரிக்ஷா விளக்குகளை மேஜர் சுந்தரராஜன் உட்காருவதற்காக எடுக்கும் சிவகுமார் வேறு எங்கும் வைக்க இடம் இல்லாமல் கைகளிலேயே வைத்துக்கொண்டு முழிப்பதை என் அண்ணன் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருப்பார். பலரது இல்லங்களிலும் இப்படி நாற்காலி, மேசை எல்லாவற்றின் மீதும் ஏதேனும் பொருள்கள் தேவை இன்றியோ, தேவை இல்லாமலோ கொலுவிருப்பதைப் பார்க்க முடியும். வீடு நிறைந்திருந்தது என்று கதைகளில் எழுதும்போது சிலிர்ப்பதில்லையா…அப்படி எடுத்துக் கொண்டு போக வேண்டியது தானே.. எதற்கு ஒழித்துக் கொண்டிருப்பது.

    கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி பெய்த மழையும், பெருகிய வெள்ளமும் யார் யாருக்கு எந்தப் பாடங்களைக் கொடுத்ததோ தெரியாது. அவசர அவசரமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பாதுகாப்பைத் தேடிச் சென்ற நாங்கள், இரண்டு நாள் கழித்து ஒரு பரிசலில் ஏறி புலியூருக்கு (கோடம்பாக்கத்தின் முந்தைய பெயர்தான் அது) மீண்டபோது, மெரீனா கடல் வீட்டுக்குள் நுழைந்து மீண்டதைப் போன்ற காட்சியை நானும் என் வாழ்க்கை இணையும் கண்டு அதிர்ந்து போனோம். வழுக்கிக் கொண்டிருந்த தரையில் மெழுகுச் சுடரை ஏற்றி வைத்துக் கொண்டு ஒவ்வோர் அறையாகச் சென்று பார்க்கையில் நெஞ்சு வெடிக்கத் தக்க சேதங்கள் தெரிந்தது. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் வெளியேறினோம் பரிசலில்.

    வெள்ளம் வடிந்த எட்டாம் நாள் திரும்ப நாங்கள் இருவர் மட்டும் வீடு திரும்புகையில் அடுத்த இரண்டு மூன்று நாட்கள் இரவும் பகலுமாகச் சுத்தம் செய்யச் செய்ய மெரினா கடற்கரை போல விரிந்து கொண்டே இருந்தது கழிவுகளால் நிரம்பி இருந்த வீடு. ஓய்வின்றி சளைக்காமல் வீட்டைப் பழைய நிலைக்கு அத்தனை விரைவாக மீட்டெடுத்த கூட்டு உழைப்பில் யாருடைய பங்கு மிக மிக அதிகம் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. குற்ற உணர்வுகளால் மட்டுமே ஒரு வீட்டைச் சுத்தம் செய்துவிட முடியாது, அதற்கு மேலதிக உழைப்பு தேவை என்பதைக் கற்றுக் கொடுத்திருந்தது வெள்ளம்.

    நானும் நந்தாவும் கடற்கரையிலிருந்து உற்சாகமாக வெளியேறும்போது மேலும் அதிகக் குப்பைகளைக் கடந்து வந்தோம். காடுகளைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் மனிதக் கூட்டம் பொறுப்பின்றி வீசி எறிந்துவிட்டு வரும் உணவுப் பொருள்கள், காகிதக் குப்பைகள், பாட்டில்கள் விலங்கினங்களுக்கு எத்தனை இடர்பாடுகளை, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது என்பதைப் பேசிக் கொண்டே வந்தோம். குப்பைகளைச் சுத்தம் செய்வதை விட எளிதான விஷயம் அவற்றைச் சேர்க்காமல் இருப்பதுதான் என்பதை கடற்கரை பாடமாக நடத்திக் கொண்டிருந்தது.

    பேருந்தில் நெரிசலில் ஏறி இடம் பிடித்து அமர்ந்தபோது நாங்கள் வேறு உலகில் இருந்தோம். கடற்கரை காற்றை மீறிய புழுக்கம் சூழ்ந்திருந்தது அந்த உலகில். ஆனால் பேருந்து புறப்படத் தொடங்கும்போது நம்பிக்கைக் காற்று சன்னல் வழியாக ஊடுருவி வீசத் தொடங்கியது.

    *******************

    நன்றி  :  தீக்கதிர் இணைப்பு வண்ணக்கதிர்

    Share
  • வெயிலின் ஜனநாயகம்

     

     

    எஸ் வி வேணுகோபாலன்

    4db55585-58f7-4be0-943e-c1e7e8d2b75a
    வெயிலால் வெயிலுக்காக
    வெயிலே நடத்துகிறது
    கோடையின் ஆட்சியை

    எந்த உடை அணிந்தாலும்
    வெயில் போர்த்தி
    வழியனுப்பி வைக்கிறது வீடு

    எந்தப் பொருள் வாங்கப் போனாலும்
    மறவாது
    வெயில் வாங்கித் திரும்புகிறாள் இல்லத்தரசி

    எங்கிருந்து புறப்பட்டு எங்கெங்கோ அலைந்து
    எங்காவது நிறைவு செய்யப்படும்
    எல்லாப் பயணங்களுக்கும்
    இலவச பாதுகாப்பு அளிக்கிறது வெயில்

    தனக்கு எதிராக
    விரியும் குடைகளிடம்
    மான அவமானம் எல்லாம் பாராது
    வாய்க்கிற பகுதிக்கெல்லாம்
    சூடு போட்டுக் கடமை ஆற்றுகிறது வெயில்

    ஓட்டமாய்ப் பறக்கும் குழந்தையோடு
    ஓடோடிச் சென்று
    நழுவாது உடலைப் பற்றிக் கொள்ளும் வெயில்
    விழுந்தாலும் ஏந்தி
    விரைந்து நிமிர்த்தியும் கொடுக்கிறது

    தகதகக்கும் சாலையில்
    சேலைத் தலைப்பால் குழந்தைகளைத்
    தற்காத்துக் கொண்டே தவித்தபடி செல்லும்
    தாயின் பாதங்களை
    முத்தமிட்டுக் கொண்டே போகிறது வெயில்

    வறண்டு போகும் நாவிலும்
    இடுங்கும் கண்களிலும்
    பதுங்க இடம் கிடைக்காது
    நடுங்கி நகரும் உடல்களிலும்
    நனைந்து ஒட்டிக் கொள்ளும் மேலுடையிலும்
    வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்கிறது வெயில்

    செடி கொடிகளைக் களைந்து
    மரங்களை அழித்து
    நிழல்களைத் தொலைத்து
    எழுப்பிய வளர்ச்சி மாநகரங்களை
    உளமார வாழ்த்தி அருள்கிறது வெயில்

    பெருமழை நாளில்
    நனைந்தும் மிதந்தும் மூழ்கியும் போன நகரத்தைப்
    பிழிந்து உலர்த்திக்
    காயப் போட்டுக் கொண்டிருக்கிறது வெயில்

    வெயிலை வரவேற்று
    வெயிலின் முன்னிலையில்
    வெயிலைக் கொண்டாடும்
    வாய்ப்புக்கு நன்றி பாராட்டி
    விடை பெறவைக்கிறது வெயில்

    *****************

     

    நன்றி : தீக்கதிர்

    Share