எஸ்.வி. வேணுகோபாலன்

av
எழுபதுகளின் இரவுகள் சங்கீதப் பிசாசுகளுக்கானவை. புதன் கிழமை இரவு பத்து மணி சென்னை வானொலியிலிருந்து ஒலிபரப்பாகும் பழைய பாடல்களுக்காக விழித்திருக்கும் இதயங்களுக்கானது. பகலில் ஒலிக்கும் ஒரு பாடல், இரவில் ஒலிக்கையில் புது மெருகோடு காதில் இறங்குவதன் ரசம் அதைக் கேட்டுக் கிறங்கியவர்களுக்குத்தான் பிடிபடும். யார் வேண்டுமானாலும் யாரையும் காதலிக்கட்டும். யாரும் யாரோடும் கட்டிப்புரண்டு சண்டை போடட்டும். யாரை நினைத்தும் யாரும் உருகித் திணறித் திண்டாடட்டும். ஆனால் அதை தயவு கூர்ந்து பாடலாக்கி இசையூட்டி எங்கள் உள்ளத் திருவோட்டில் போடுங்களய்யா, நாங்கள் வாழ்ந்துகொள்கிறோம் என்று ஏங்கியிருந்த காலங்கள் அவை.

நேர்கோட்டில் பாடிவிட்டுப் போகும் பாடல்கள் ஒரு பக்கம்.குரலின் வழி கொஞ்சம் போதையூட்டும் குழைவுகளும், மாற்றங்களும், சாகச விளையாட்டுகளும் கொண்ட பாடல்கள், அடடா..அடடா…. உயிரை உறிஞ்சி எடுக்க வருபவை அல்லவா…பென்சிலால் போடும் மெல்லிய கோட்டின் மீது அழுத்தமாகப் பேனாவால் வரையும் ஓவியம்போல, “பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்..”என்று படிக்கும் இளசான குரலின்மீது வெற்றிலை, புகையிலை, பாக்கு போட்டுக் குதப்பியவாறு பாடுவது போல் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று ஒரு வித்தியாசமான காரக் குரல் அதே வரிகளை வசீகரமாகத் தொடுத்துச் செல்லும்! ஆலாபனை அழகுக்கும், தமிழ் உச்சரிப்புக்கும், கம்பீர ராக நிரவலுக்குமாகக் கொடிகட்டிப் பறந்த சி.எஸ். ஜெயராமன் என்ற அற்புதக் கலைஞனை ரசிகர் கூட்டம் கொண்டாட வைத்த பாடல் அது. “விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே….” மட்டுமென்ன இலேசான இன்பமா! அப்புறம், மெல்ல மெல்லப் பரவி வந்து உடல் தழுவும் தென்றல் போன்ற, “அன்பாலே தேடிய என் அழகுச் செல்வம்“ பாடல் ஓர் அமுத ஊற்றாயிற்றே! “வீணைக் கொடியுடைய வேந்தனே” என்ற அற்புதமான ‘சம்பூர்ண இராமாயணம்’ படப் பாடலில் சி.எஸ்.ஜே. “சங்கீத சௌபாக்யமே” என்று நுழையும் இடம் எத்தனை அலாதி! காலையில் பாடும் ராகம், உச்சி வேளையில், வெண்பாவுக்கு உகந்தது, அகவல் பாவிற்கு…என ராகங்களை விவரித்துச் செல்கையில், இராவணனை அவரது அன்பு மனையாள் மண்டோதரி “சுவாமி, தாங்கள் கயிலைநாதனை கானத்தால் கவர்ந்த பாடல்?” என்று கேட்க, அவர் “கா…..” என இழைத்து இழுத்து காம்போதி ராக ஆலாபனையில் உயர்த்திப் பிடிக்கும் இடம்… அடடா…அடடா! “குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது” இல்லாமல் ‘இரத்தக் கண்ணீர்’ கிடையாது. ஆயிரம் காதுகள் போதாது வண்ணக்கிளியே!

குழந்தைக் குரலின் கொஞ்சுமொழி என்றால் எம்.எஸ். ராஜேஸ்வரி! “குவா குவா பாப்பா, இவ குளிக்க காசு கேப்பா,” “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே,” … ஆஹா…என்ன ரம்மியமான பட்டியல்! “கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே” பாட்டைக் கேட்டுக் கண் கலங்காதவர் உண்டா! “மியாவ் மியாவ் பூனைக்குட்டி, வீட்டைச் சுத்தும் பூனைக்குட்டி” பாடாத அந்நாளைய மனிதர் உண்டா! காலத்தைப் பின்னோக்கித் தள்ளும் உத்தியில் மணிரத்தினம் இயக்கத்தில் வந்த ‘நாயகன்’ படத்தின் “நான் சிரித்தால் தீபாவளி” பாடலில் சேர்ந்து ஒலிக்கும் ராஜேஸ்வரி-ஜமுனாராணி குரல்கள் எத்தனை நர்த்தனம் பயின்றவை!

“ஒரே பாடல்” (எங்கிருந்தோ வந்தாள் ), “இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும்” என்ற வரிகளையும் உள்ளடக்கிய “நான் கவிஞனும் இல்லை” (படித்தால் மட்டும் போதுமா), “கற்பனைக்கு மேனி தந்து” (பாட்டும் பரதமும்) என டி.எம். சவுந்திரராஜன் பாடல்களில் இரவுக்கு தோதானவை என்றே தனி பட்டியல் இருக்கும்.

கொஞ்சுமொழி பாடல்களில் முத்திரைப் பாடகி (நடிகர், இயக்குநர், எழுத்தாளருமான) பி. பானுமதி! “கண்ணிலே இருப்பதென்ன கன்னியிள மானே” என்ற தாளகதி மிக்க பாடல் (அதில் “பானு மதி மாறிவரும்” என்று அவர் பெயரைத் தாங்கிவரும் சொற்களை அவரே பாடுவது சுவையான இடம்!), “பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று” என்ற உருக்கமான கீதம், “மாசிலா நிலவே” (அம்பிகாபதி) பாடலின் காதல் மணம், “அன்னை என்பவள் நீ தானா,” “அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்” ….பட்டியல் முடியக் கூடியதா! ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்’ வசீகரக் குரல் அல்லவா அது!

புல்லாங்குழலின் மெல்லிய தொடுப்பில் புறப்பட்டு வேகம் கொள்ளும் “காலங்களில் அவள் வசந்தம்” (பாவ மன்னிப்பு), “நிலவே என்னிடம் நெருங்காதே” (ராமு), “மௌனமே பார்வையால்” (கொடிமலர்) என்ற மனத்துக்கு நெருக்கமான வரிசையில் எத்தனை பாடல்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ் அளித்தார், இரவுகளுக்காகவே!குழந்தைக் குரலில் எஸ். ஜானகி பாடியிருக்கும் பாடல்கள் தனிச் சுவை மிக்கவை. “கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே,” “டூத் பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா,” “டாடி டாடி ஓ மை டாடி” …..ரீங்கரிக்கும் வித்தியாசமான குரல் அனுபவம் அது.

எம்.எஸ். விஸ்வநாதனின் அசாத்திய இசையில் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ படத்தின் “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” என அபாரமான தாளக்கட்டில் ஜானகி கெஞ்சியும் கொஞ்சியும் விஞ்சியும் வெளிப்படுத்தும் காதல் ஏக்கக் குரல், இரவில் கேட்கையில், உணர்வு கூடுதலாய்த் ததும்பி கரை தொட்டு மீளுமே!பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ படத்தில், இளையராஜா இசையில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” பாடலுக்கு மலேசியா வாசுதேவன் வாய்த்தார். பின்னாளில், ‘கல்யாணராமன்’ படத்தில், “ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று பட்டையைக் கிளப்பினார்! நெகிழ்ச்சியுறவும், ஆவேசம் கொள்ளவும், மென்மையாகக் காதல் பேசவும் என அவரது பாடல்கள் ஒலித்தன.

“சதன், ஷோபா இவர்களுடன் டி.எம். சவுந்திரராஜன் பாடிய பாடலின் படம் இரு மலர்கள்” என்று வானொலியில் அறிவிப்பு கேட்டதும், பக்கத்தில் ஓடி வந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்ட “மகராஜா ஒரு மகராணி, இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி” என்ற கொஞ்சும் பாடலை அன்றைய ரசிகர்கள் யார் மறந்திருக்க முடியும்? “யாரது இங்கே மந்திரி, குட்டி ராணி வந்தாளே எந்திரி” என்று குழந்தைக்குரல் ஆணையிடுவதும், “வணக்கம் வணக்கம் சின்ன ராணி” என டி.எம்.எஸ். கம்பீரக் குரல் வளைவதும் …

எப்படிச் சொல்வது!சதன், சாய்பாபா என்ற பெயர்களைக் கேட்டவுடன் மனம் துள்ளாட்டம் போடும். பாட்டில் வரும் சிறப்பு சப்தங்கள்.. சேட்டை ஒலிகள்… “அந்தப் பக்கம் வாழ்வது ரோமியோ” என்ற பாடலில் சாய்பாபா பண்ணும் அமர்க்களம்! அதில், “ஊர்வசி வந்தும் மயங்கிடார்… உன் மேல் ஆணை மை கிடார்” என்று கிடார் மீட்டும் ஒரு ரகமான பாடல் அது.வி. குமார் இசையில், ‘வெள்ளி விழா’ பாடல்களில் எதை இழக்க முடியும்? ஆர்ப்பாட்டக் குரல்காரரான எல்.ஆர். ஈஸ்வரியை, “காதோடுதான் நான் பாடுவேன்” என்று அதிராமல் பாட வைத்த அந்தப் பாடல் இரவில் கேட்டு விம்மி விடுதலை தேடித் திணறவென்றே உருவாக்கப்பட்டது. (“நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்” என்று பி. சுசீலாவை அதே படத்தில் குமார் பாடவைத்திருந்தார்!)

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்னுமொரு மென்குரல் அசுரன், வீட்டுத் திண்ணைகளில், வயல்களில், தெருவோரக் கடையில் டிரான்சிஸ்டரும் கையுமாகத் துண்டு விரித்துத் தலை சாய்த்தவர்களை வாட்டி எடுத்துக் கொண்டாட வைத்தார்.“ஆயிரம் நிலவே வா” பாடல் (அடிமைப்பெண்) கே.வி. மகாதேவன் இசையில் ஒரு இரவுக் கொடை! “அவள் ஒரு நவரச நாடகம்” (உலகம் சுற்றும் வாலிபன்), “சம்சாரம் என்பது வீணை” (மயங்குகிறாள் ஒரு மாது)…. நிறைவுறாத பட்டியல் அது. ‘பட்டின பிரவேசம்’ படத்தில் எம்.எஸ்.வி. யாத்தளித்த வயலின் இசையோடு, உள்ளத்தை மென் காதலுணர்வால் சீண்டிய “வான் நிலா நிலா அல்ல, வாலிபம் நிலா” பாட்டுக்காக எத்தனை இரவுகளையும் பரிசளிக்கலாம்.

‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடலால் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான வாணி ஜெயராமின் தனித்துவக் குரலை எப்படி விட? “அன்பு மேகமே இங்கு ஓடி வா” (எங்கம்மா சபதம்), “மல்லிகை முல்லை பூப்பந்தல்” (அன்பே ஆருயிரே), ‘சங்கராபரணம்’ படத்தின் முடிவற்ற இசைக்கலவையில் எஸ்.பி.பி., வாணி ஜெயராம் இருவரும் கலக்கியெடுத்த பாடல்கள் (ப்ரோ சேவா…., ஓம்கார நாதானு )…பி. சுசீலா குரலின் தேர்ச்சியான சில பழைய பாடல்களை (“இரவுக்கு ஆயிரம் கண்கள்,” “பகலிலே சந்திரனைக் காணப் போனேன்,” “கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ,” “காதல் சிறகைக் காற்றினில் விரித்து,” “உன்னைத்தான் நான் அறிவேன்” …) இரவில் கேட்டுப் பாருங்கள், பிறகு பகலில் கேட்க நேர்ந்தாலும் உங்கள் எண்ணங்களில் ஒரு ரகசிய இரவு சூழ்வதை உணர்வீர்கள்.

பார்த்திராத இசை அமைப்பாளர்களை, சந்தித்திராத பாடகர்களை, கண்டிராத படத்தின் காட்சிகளை திரைக் கலைஞர்களுக்கான மானசீகமான மதிப்போடும், அவர்தம் கலைக்கான வணக்கங்களோடும் இழைந்து உருகிக் கொண்டாடிப் பாடல்களைக் கேட்கத்தக்க இரவு நேரங்கள் மனித உள்ளத்தின் பண்பாக்கத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்திக் கொடுக்க அரவணைக்கின்றன. அசாதாரணக் குரல்களில் ஒலிக்கும் பாடல்கள் உள்ளத்தை வருடிக் கொடுக்கின்றன.

அன்றாடத்தின் பாடுகளை, உழைப்பின் வலியை, உறவுகளுக்கிடையே வாழ்க்கை ஏற்படுத்தும் அலைக்கழிப்புகளை எல்லாம் மறந்து உடலையும் உள்ளத்தையும் இலகுவாக்கி மிதக்க வைக்கின்றன. நெகிழ்ச்சியுற அலைமோத விடுகின்றன. மழை நேரத்தில் கைகளுக்கு வந்து சேரும் சூடான, இதமான தேநீராய் உடல் முழுக்கப் பரவி மனம் முழுக்கக் கோலோச்சுகின்றன. திக்குமுக்காட வைக்கும் சமகால வாழ்க்கையில் மனித இயல்புகளை இழந்துவிடாமலும், நேய உணர்வுகளை மறுத்துவிடாமலும், இளைப்பாறி உணர்வுகளை மீட்டெடுத்துக் கொள்ளும் வழியில் வாழப் பழகிக் கொள்ளவும் இசை நமக்கு இயற்கை அளித்த இன்னொரு வரம். இரவு அந்தத் (தா)வரத்திற்கு ஓர் உரம்.

நன்றி  தீக்கதிர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *