-எஸ் வி வேணுகோபாலன்

 

muthukumar1

 

கஸ்ட் 1995ல் கணையாழி இலக்கிய இதழ்,  தமன் அறக்கட்டளையின் அரவணைப்பில் தனது பயணத்தைத் தொடரத் தொடங்கிய நிகழ்விற்குக் கல்லூரி மாணவர் ஒருவரும் அழைப்பிதழோடு வந்து கூட்டத்தின் பகுதியாக அமர்ந்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா பேசுகையில், மாதா மாதம் கவிதைகளைத் தேர்வுசெய்து தரும் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அன்று வெளியாகும் இதழில் தாம் தேர்வுசெய்து பிரசுரமாகி இருக்கும் தமக்கு மிகவும் பிடித்த கவிதையை வாசிக்கப் போவதாகவும் குறிப்பிடும்போதுகூட அந்த மாணவர் அறிந்திருக்கவில்லை, அடுத்து என்ன நடக்குமென்று…!

சுஜாதா வாசிக்க வாசிக்க அரங்கு முழுவதும் கைதட்டி ஆரவாரித்த “தூர்” எனும் கவிதை அந்த மாணவர் எழுதியது. முன் வரிசையில் இருந்த பிரமுகர் ஒருவர் மேடைக்கு வந்து அந்தக் கவிதைக்குத் தாம் ஆயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாக அறிவிக்கிறார். கவிதையை எழுதியவர் நிகழ்வுக்கு வந்திருக்கிறாரா, மேடைக்கு வரவும் என்று அறிவிக்கப்படும்போது, ஜிவ்வென்று ஒரு வெப்பம் பரவுகிறது அந்த இளைஞர் உடல் முழுக்க…ஒரு மனம் சொல்கிறது, உன்னைக் காட்டிக்கொள்ளாதே உட்கார் என்று…இன்னொரு குரல் சொல்கிறது, மறுக்காதே, போ மேடைக்குப் போ என்று!

காஞ்சி பச்சையப்பன் கல்லூரி மாணவர் நா முத்துக்குமார் அறிமுக நிலையிலேயே அமர்க்களமாகக் கொண்டாடப்பட்ட நாள் அது!  தமக்கு வழங்கப்பட்ட பரிசுப்பணத்தை, கணையாழி வளர்ச்சிக்கு அளிப்பதாக அறிவித்துவிட்டு இறங்கி வந்துவிட்டார் முத்துக்குமார்.

கவிதையில் மட்டுமல்ல, காட்சிக்கும், மெட்டுக்கும் உட்பட்ட சொற்களால் புனையவேண்டிய திரைப்படப் பாடல்களை இயற்றுவதில் அபார ஆற்றல் கொண்டவர் நா முத்துக்குமார் என்பதைத் தமிழ்த்திரை ரசிகர்கள் யாவரும் ஒப்புக்கொள்வர்.  மிகக் குறுகிய காலத்தில் அசாத்தியத் திறனை அவர் வெளிப்படுத்தியது, இத்தனை விரைவில் விடைபெற்றுச் சென்றுவிடவா என்ற அதிர்ச்சியில் இருக்கிறது தமிழ்த் திரைப்படப் பாடல் ரசனையின் பெரும்பரப்பு! எத்தனை எத்தனை விருதுகள், எத்தனை எத்தனை பெருமிதம் பொங்கும் பாடல்கள், எத்தனை எத்தனை தனித்துவமிக்க சாதனைகள்…மன்னிக்க முடியாத மரணம் உங்களது, எங்கள் முத்துக்குமார்!

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அவர் பிறந்தவுடன், ஏராளமான மனிதர்கள் தடதட என்று அந்தக் கட்டிடம் நோக்கி விரைந்து வந்தார்களாம். தான் பிறந்ததை அறிந்து கொண்டாட அல்ல, அப்போது அண்ணா சாலையில் இருந்த 14 மாடி எல் ஐ சி கட்டிடம் திடீரென்று தீப்பற்றி எரிவதாகக் கேள்விப்பட்ட அந்தப்பகுதி மக்கள் அருகே இருக்கும் மாடிக்கட்டிடத்தில் ஏறிப்பார்க்கவே அப்படி வந்தனர் என்று தனது கட்டுரைத் தொடரில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்துவிட்டதாகப் பள்ளி ஆசிரியரான அவர் அப்பா தனது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்தாராம். பிறகு தனது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது விருப்பங்களை நிறைவேற்றித் தரவும், ஆர்வத்தின் குறுக்கே அணைபோடாதிருக்கவுமாக இருந்ததை முத்துக்குமார் தான் ஒவ்வொரு முறையும் புதிதாய்ப் பிறந்த பரவசமாக எழுதிய தொடர் அது. இல்லாவிடில், எம் ஏ தமிழ் படிக்கவோ, படித்தபின் அதிக ஊதியத்தில் கிடைத்த அமெரிக்க வேலையை விட்டுவிட்டுத் திரை உலகிற்குள் நுழையவோ முடிந்திராது அவரால்!  ஆனால் இப்படி வெளியேற எப்படி மனம் வந்ததோ முத்துக்குமார்?

இயக்குநராக விரும்பியே கனவுத் தொழிற்சாலைக்குள் காலடி எடுத்து வைத்த அவரது தமிழ், பின்னர் தற்செயலான முதல் வாய்ப்பால் “வீர நடை” (சீமான் இயக்கியது) போட்டும், காதல் கிறுகிறுத்தும், இயற்கை ஈர்ப்பில் சொக்கியும், உறவுகள் குறித்த நெகிழ்விலும், உணர்வுகளின் படப்பிடிப்பில் படபடத்தும் பரந்து விரிந்து கொண்டிருந்தது. கொஞ்சியும், கெஞ்சியும், விளையாடியும், களமாடியும், பரபரப்பாகவும், கலகலப்பாகவும்…இன்னும் என்னென்னவோ செய்யும் பாடல் தமிழ் அவரது எழுதுகோலில் எல்லையற்றுக் குடியிருந்தது. இப்போது முற்றிலும் பற்றி எரிந்துபோன பசுங்காடாகக் கிடக்கிறது பாடல்களின் இதயம்!

சாதிய அடுக்குகளின் கீழ்த்தளத்திலிருந்து தன்னுயிரை இழைத்து, மேல்சாதிக் காதலியோடு இப்படி உரையாடல் நடத்துகிறான் “காதல்” படத்தின் காதலன், உனக்கென இருப்பேன்…என்ற புகழ்பெற்ற அந்தப் பாடலின் வரிகளில், “….கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று வண்ணத்துப் பூச்சிதான் பார்த்திடுமா… மின்சாரக் கம்பிகள் மீதும் மைனாக்கள் கூடுகட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்…” என்று போகும் உணர்வுகளின் வேகத்தில், “…கனவுக்குள் காவல் இருப்பேன்” என்று உறுதி அளிக்கிறான். கனவாகவே கருகிப் போகிறது அந்தக் காதல். வெயில் படத்தின், வெயிலோடு விளையாடி என்ற பாடல் உழைப்பாளி மக்களது வாழ்க்கைத் தடத்தைப் பதிவு செய்ததெனில், உருகுதே மருகுதே பாடல், “கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னைத் சுமக்கவா…” என்ற இடத்தில் எத்தனை காதல் நெருக்கத்தைப் பேசியது.

எங்கேயும் எப்போதும் திரைப்படம் சாலை விதிகள் மீறலின் விபரீத விளைவுகள் குறித்த அதன் அதிர்ச்சி செய்தியைச் சுமந்து வந்ததில், உன் பெயரே தெரியாது, மாசமா ஆறு மாசமா நான் காதலிச்சேன் போன்ற பாடல்களால் என்றும் பேசப்படுவதாயிற்று. கடந்த சில பத்தாண்டுகளில் வெளிவந்த முக்கிய படங்கள் பலவற்றிலும் நா முத்துக்குமாரின் பாடல்களின் பங்களிப்பு இருந்து வந்திருப்பது குறிப்பிட வேண்டியது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…’ (அங்காடித் தெரு), ‘நிலா நிலா போகுதே’ (அரவான்), ஏயா என் கோட்டிக்காரா (பாபநாசம்), உயிரே உயிரே பிரியாதே (சந்தோஷ் சுப்பிரமணியம்) என அவரது பாடல்களின் பட்டியலை எழுதத் தொடங்கினால் இடம் காணாது. இன்னும் என்னென்னவோ எழுத இடம் எவ்வளவோ காத்திருக்க, எங்கே இத்தனை அவசரமாகப் பிரிந்து செல்கிறாய், எங்கள் முத்துக்குமார்?

பட்டாம்பூச்சி விற்பவன், அணிலாடும் முன்றில் உள்படக்  கவிதைகளும், கட்டுரைகளுமாக அவரது எழுத்துலகம் வசீகர வாசிப்புக்குரியது. வாடகை வீட்டில் வீட்டுக்காரப் பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தைக் கூட (சத்தம் போடாத மிக்சி எங்கே சார் கிடைக்கும்?) நகைச்சுவையாகச் சொல்லும் அவரது ரசனை, பின்னர் அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வாடகைக்குச் செல்கையில், லிப்டில் தனது ஓட்டுநர் மூலம் தன்னை அறிந்து கொண்ட பெருமையில் பேசத்தொடங்கிய கனவான் ஒருவர், ”ஓ நீங்கள் வாடகைக்கு இருப்பவரா’ என்று வேறுபக்கம் திரும்பிக் கொள்வதுமான அபத்த உலகத்தை ஒரு கரப்பான் பூச்சியை வைத்து தனது மகனுக்கே சொல்லவைப்பதாக விரியும்…..ஒன்பது வயதில் இப்போது அந்த மகன், எட்டு மாதங்களே நிறைவு பெற்றிருக்கும் ஒரு பெண் குழந்தை, இவர்களுக்கு இனி அந்தக் கதைகளைச் சொல்லாமலே விடைபெற்றதேன் முத்துக்குமார்?

சைவம் படத்தில் உங்களது அழகே அழகு என்ற இனிமையான பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது இரண்டாவது முறை. முதன்முறை அது தங்க மீன்கள் படத்தின் “ஆனந்த யாழிசை மீட்டுகிறாயடி” என்ற அற்புதக் கவிதை மொழிக்கு வழங்கப்பட்டது. அப்போது அதை உளமாரக் கொண்டாடி உங்களுக்கு எழுதியிருந்த என் மின்னஞ்சலுக்கு, உங்களிடமிருந்து இப்படி சுருக்கமான மறுமொழி வந்தது இப்போதும் என் மின்னஞ்சலில் இருக்கிறது: “இந்தக் கடிதம் எனக்கு இன்னொரு தேசிய விருது!”. இன்னும் எத்தனையோ விருதுகளும், வாழ்த்துக்களும் காத்திருக்க எப்படி வழியனுப்புவது உங்களை,  எங்கள் நா முத்துக்குமார்?

சுஜாதா பெரிதும் பாராட்டித் தேர்வுசெய்த கவிதை, கிணற்றைத் தூர் செய்ய வரும் ஆட்கள் அடுத்தடுத்து எடுத்துத் தரும் பொருள்களைப் பேசிக் கொண்டே செல்லும். பாதாளக் கொலுசுக்குத் தப்பிய பொருள்களில், வேலைக்காரி திருடியதாகச் சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்ற வரி நெஞ்சில் முள்ளாய்க் குத்தும். ஆனால் கவிதையின் இதயம் அடுத்து அது முற்றுப்பெறும் இடத்தில் இப்படி வந்துக் காட்சி அளிக்கும்:

இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க!

என்றென்றும் தமிழ்க் கவிதை, திரையிசை மற்றும் வாசக ரசனை உலகத்தில் மேலாகவே மிதந்தும், எடுக்கச் செல்கையில் ஆழத்தில் அமிழ்ந்து, தேடத்தேடத் தொடர்ந்து தட்டுப்பட்டும் கொட்டிக் கிடக்கும் வித்தியாசமான படைப்பாளியாகவே நினைக்கப்படுவீர்கள் முத்துக்குமார்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *