இலக்கியம் எழுதாத நட்பு (ஏழாம் பகுதி )
க. பாலசுப்பிரமணியன்
நண்பா..!
கொடுத்துச் சிவந்த கைகள்
உனக்கு…!
வாங்கிச் சிவந்த கைகள்
எனக்கு….!!
கருவிலே அசைவையும் ..
உருவிலே வடிவையும் …..
கண்ணிலே ஒளியையும் .
கருத்திலே அறிவையும்
கருணையாய்த் தந்தாய் !
உதட்டிலே சிரிப்பையும்
உள்ளத்தில் உவகையும்
உதிரத்தில் துடிப்பையும்
உறவினில் அன்பையும் ..
அளவின்றிக் கொடுத்தாய் !
வாங்கியே வளர்ந்தவன்
வாழ்வினில் கொடுத்தேனோ ?
எனதென்று எனதென்று ..
நானுரைக்க..
நாற்புறமும் கதவொன்று
திறந்திருக்க..
வந்ததும் நிற்கவில்லை..
வருவதும் நிற்பதில்லை..!!
வருவதும் கொடுக்கத்தான்..
வாழ்வதும் கொடுக்கத்தான்
வாழ்க்கையே செலவுதான் ..
வாழ்பவன் கணக்குத்தான் !
வருவதும் பாதையில்
போவதும் பாதையில்
வழங்கியே சென்றால்
வாழ்த்துக்கள் குறைவில்லை !
வருவதைக் கொடுத்தால்
வள்ளலாய் மாறலாம் !
வறுமையை அழித்திட்ட
வேந்தனாய் வாழலாம் !
ஆண்டவன் வடிவினில்
அவனியில் வந்தவன் ..
அளவின்றிக் கொடுப்பவன்
அகமெல்லாம் அழகுதான் !
கொடுப்பவன் கர்ணன்தான்
குபேரனும் பின்னர்தான் !
குசேலனுக்குக் கொடுத்ததால்
கண்ணனும் உயர்ந்திட்டான் !
கதிரவன் கொடுத்திட ..
கார்மேகம் கொடுத்திட …
காற்று கொடுத்திட…..…
கருமண்ணும் கொடுத்திட …..
நண்பா !
மனிதன் மட்டும்
ஏன் …….
மயங்குகின்றான் ?
தோள்தட்டி ..
மார்தட்டி ..
மரணம் வரை ..
பதுக்குகின்றான்?
கொடுத்தல் …
மனிதனை..
மரணத்திற்கு அப்பால்
வாழவைக்கும்
சக்தியன்றோ ?
மனிதனையும்
மகேசனாக்கும்
மந்திரமன்றோ ?
கொடுக்கும் பொழுது ..
கண்ணீர் கார்மேகமாகி ..
இதயத்தில் பொழிகின்ற
இதம் ..
யாருக்குப் புரியும் ?
வந்தவன்உள்ளத்தில்
தந்தவன் உருவம்
இறைவனாய் மாறும்
விந்தை எப்படி?
செத்தும் கொடுத்ததால்
உயர்ந்தவன் சீதக்காதி !
சாவின் மடியிலும்
சேர்ப்பவன்..
எந்த சாதி?
கொடுப்பது ….
இறைவன் கருணையை ..
இனிதே வளர்ப்பது !
கொடுப்பது ..
குறையில்லா மனத்தைக்
கோவிலாய் படைப்பது!
கொடுக்கும் நேரத்தில் ..
கூடிடும் கூட்டத்தில்…
கும்பிட்டு வருவான் ..
குவலயம் படைத்தவன் !
படைத்த மனிதனின்
பண்பினில் மயங்கி
பாருக்குச் சொல்வான்
படைப்பின் பெருமையை !
நண்பா !
மரணத்தின் வாயிலில்
மார்தட்டும் மனிதனின்
சொத்துக்குச் ..
சுதந்திரம் எப்போது?
மண்ணோடு வந்தது
மண்ணோடு போகும்
மாயத்தை அறியாத ..
மனிதனை ஏன் படைத்தாய்?
தங்கமும் வைரமும்
தங்கிடும் காலம் ..
தந்தவன் பெற்றவன்
தங்குவானோ தரணியில் ?
பூவுடன் வாசத்தை ..
பரிசாய் பெற்றாலும்
பொழுதினில் விலகிடும்
பொலிவெல்லாம் மறைந்திடும் !
நண்பனே !
நட்புக்குத் தன்னையே
தந்தவனே!
உனக்கு நான்
என்ன கொடுப்பது?
என் உள்ளமும் ..
உதிரமும் ..
உழைப்பும் தவிர ?
ஓடி வா !
அருகில் வா !
உன்னிலே என்னை வைத்து ..
உலகெல்லாம் பார்த்திட..
பாயும் நதியிலும் ..
பனித்துளி நுனியிலும் ..
பாமரன் நெஞ்சிலும் ..
படைப்பவன் வியர்வையிலும்
பகலவன் ஒளியிலும்
பசுமையின் நடையிலும்
மழலையின் சிரிப்பிலும்..
முதுமையின் சிறப்பிலும்..
முடிவில்லா நட்பிலும் !
நமது அமைதியான பயணம்..
தொடரட்டும் !
ஆண்டுகள்..
யுகங்கள் ..
கடந்திட..
கேள்விகளின்றி ..
பதில்களின்றி ..
கைகோர்த்து..
நட்புக்கு இலக்கணமாய் ..
இலக்கியம் எழுதாத நட்பாய் !
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
