இந்தப் பூமி முழுவதும் விடியும் வரை………………..!

நவம்பர்7: புரட்சியின் நூற்றாண்டு

எஸ் வி வேணுகோபாலன்

இருபத்தைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும்…முதன்முதல் அந்த வித்தியாசமான பல்லவியை ஓர் அற்புத இசைப் பாடகன் குரலில் கேட்டு! ‘எங்களைத் தெரியலையா, இந்த இசையைப் புரியலையா?’ என்று கேள்விகளைத் தொடுத்துத் தொடங்கும் அந்த உயிர்த்துடிப்பான பாடலைப் பின்னர் நமது பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி எப்போது எங்கு பாடும்போதும் அதே சிலிர்ப்போடு கேட்டுக் கொண்டிருக்கிறேன்…

பரிணாமன் எழுதிய அந்தப் பாடலின் பயணம், பிறகு, ‘திங்கள் ஒளியினில் துயில்வோரே – தினம் சூரியத் தீயினில் உழைப்போரே ….’ என்று மேலெழுந்து வருமிடம் உள்ளத்தைத் தீண்டுகையில் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும். பாட்டாளி வர்க்கத்திற்கான அச்சு அசலான குரலாக எழும் அந்தப் பாடல், சுரண்டலற்ற சமூகத்தைச் சமைப்பதற்கான தாகத்தை, சோசலிச உலகம் படைக்கப்பட்டதன் கொண்டாட்டத்தின் பின்னணியில் உரத்துப் பேசிச்செல்லும்.

ak

ஜார் எனும் அரக்கனை வேரறுத்த சம்மட்டி அரிவாள்கள், சரித்திர நரம்பு மண்டல மையத்தின் தத்துவ மருத்துவர்கள், ஃபாசிச இட்லரின் கூலிப்படைகளைப் பனி மலைமீதினில் வென்றவர்கள், பாட்டாளி ஆட்சியை முதன்முதல் மண்ணில் படைத்திட்ட புரட்சியியல் விஞ்ஞானிகள்….என்ற வரிகளில் எத்தனை எத்தனை ஆண்டு வரலாறும், போராட்டங்களும், மனிதகுல விடுதலைக்கான தியாகங்களும், தீரமிக்க புரட்சியின் வெற்றிக்களிப்பும் தெறிப்பதை மீண்டும் மனத்திரைக்குள் காண முடியும்.

ak11917ம் ஆண்டு, உலகுக்கு முதன்முறை வேறுவகையில் உதயமானது. முதலாம் உலகப்போரின் ஆதாயங்களை ஏகாதிபத்திய உலகம் வெறிபிடித்த மிருகம் போல் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, போரின் காயங்களும், சேதங்களும், வாழ்வாதாரம் மேலும் மோசமாகிப்போன கோலங்களுமாக உலகெங்கும் உழைப்பாளி மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி இருந்த நேரமது. தாங்களே பகடைக்காய்கள். தங்களது நலனே பணயம் வைத்து ஆட்டம் நடத்தப்படுகிறது. எல்லா இழப்பின் வலியும் வேதனையும் தங்கள்மீதே சுமத்தப்படுகிறது என்ற கசப்பும், வெறுப்பும் தீயாகக் கனன்றெழுந்த இடங்களில், கொடியவன் ஜார் ஆண்ட ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கம் கூடுதல் தெளிவோடும், தீர்மானமான சிந்தையோடும் அறிவுற்றுத் தீவிழித்து எல்லாத் தடைகளையும் உதறித்தள்ளி முழங்கிப் புரட்சி என்ற பெருமுழக்கத்தோடு புறப்பட்டது. புரட்சியின் பிரசவத்தைப் பக்கத்திருந்து பார்த்துக்கொண்ட செவிலித்தாய் என்று வருணிக்கப்பட்டார் மாமேதை லெனின்.

முதலாளித்துவச் சுரண்டல் உலகின் பல இடங்களிலும் வலுத்திருக்க, ரஷ்யாவில் எப்படி முதலில் வெடித்தது புரட்சி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஏகாதிபத்தியத்தின் சங்கிலித் தொடரில் எந்த இடத்தில் கண்ணி வலுவற்றிருந்ததோ அங்கே தொடுக்கப்பட்ட சம்மட்டி அடி, விடுதலையைப் பெற்றுத் தந்தது என்று பதில் அளித்தார் லெனின்.

வீழ்த்தப்பட்ட இறுதி ஜார் மன்னன், ரஷ்யப் பேரரசின் வளமை மிக்க பூமிப்பகுதியின் 80 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். அதுபோக, சுமார் 28 ஆயிரம் பெரும் பண்ணையார்கள் வசம், ஒன்றரை கோடி ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்தது. நிலச்சுவான்தாரர்கள் ஆதிக்கம் கொடிகட்டி இருந்த ரஷ்யாவில் ஏகபோகங்களின் கையிருப்பில் இருந்த சுரங்கத் தொழில்களிலும், இதர ஆலைகளிலும் முதலாளித்துவம் நிலைபெறத் தொடங்கி இருந்தாலும் அய்ரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியே இருந்தது. எனவேதான், இறுதி அடியை உறுதியாக அடித்து வெற்றி பெற முடிந்தது என்றனர் பாட்டாளி வர்க்க தத்துவ மேதைகள்.

ak2

முதலாவதாக நடைபெற்ற முதலாளித்துவ புரட்சி, பிப்ரவரி 1917ல் வெற்றி பெற்று அமையப்பெற்ற அரசின் தன்மை, பாட்டாளிவர்க்கத்தின் கோபத்தை மேலும் விசிறி விட்டது. எனவே அது வேகமாக முன்னேறி, கிராமங்களில் வேளாண் உழைப்பில் ஈடுபட்டிருந்தோரையும் விழிப்புணர்வும், ஆவேசமும் கொள்ளவைத்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருந்த ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்று, விவசாயி வர்க்கத்தையும் இணைத்துக்கொண்டு நடத்திய போல்ஷெவிக் புரட்சி, இந்த மண்ணில் மானுட நேயம், மனிதம் இவற்றின் பொருளை உலகுக்கே படிப்பினை ஆக்கிக் கொடுத்தது.

போல்ஷெவிக் கட்சி பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப்பட்டது. எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்ற பிரகடனத்தை போல்ஷெவிக்குகள் அறிவித்தனர். அந்நாளைய ரஷ்ய காலண்டர் படி, அக்டோபர் 25 (இப்போதைய கணக்குப்படி நவம்பர் 7) அன்று புரட்சிகர சக்திகள் ஜார் பேரரசனின் மொத்தப் பகுதிகளிலும் செஞ்சேனையின் கட்டுக்குள் கொணர்ந்து, ஆட்சிப்பொறுப்பை ஏற்றன. மக்கள் பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் கமிசார்கள் அவையின் தலைமையில் அரசு அமைந்தது.

நிலம், சமாதானம், ரொட்டி என்ற முழக்கத்தின்கீழ் மக்களைத் திரட்டிய போல்ஷெவிக் புரட்சியில் அமையப்பெற்ற அரசு, முதல் கடமையாக, நிலக்குவியலை மக்கள் உடமை ஆக்கி, உள்ளூர் குழுக்கள், விவசாய சோவியத் குழுக்கள் வசம் ஒப்படைத்தது. பின்னர் கூட்டுப்பண்ணை வேளாண்மை நடைபெற கால்கோள் இடப்பட்டது.

எல்லோருக்குமான கட்டாய இலவசக் கல்வி, உயர் கல்வி, வேலை வாய்ப்பு, இலவச மருத்துவ சுகாதார பாதுகாப்பு அனைத்தையும் யு எஸ் எஸ் ஆர் என்று அமைக்கப்பட்ட ஐக்கிய சோவியத் சோசலிசக் குடியரசு நடைமுறைப்படுத்தியது. தேசிய இனங்களின் சிறைச்சாலை என்று வருணிக்கப்பட்ட ஜாரின் ரஷ்யா இருந்த இடத்தில், மக்கள் உற்சாகக் கொண்டாட்டத்தோடு அன்பு கலந்த ஒன்றியத்தைப் படைத்தனர் புரட்சியியல் விஞ்ஞானிகள். பெண்களுக்கான வாக்குரிமையை சோவியத் ஒன்றியம் கொணர்ந்த பல்லாண்டுகளுக்குப் பிறகே அய்ரோப்பிய நாடுகள் அனுமதித்தன. (பிரிட்டனில் கூட 1928ல் தான் பெண்களுக்கான வாக்குரிமை சாத்தியமானது).

மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் என்ற முழக்கத்தை நடைமுறைப்படுத்தியது புரட்சிகர சோவியத் அரசு. ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ, மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ’ என்ற மகாகவியின் கேள்விகளுக்கு செயல்விளக்கமான பதிலைக் கொடுத்தது சோவியத் ஒன்றியம். அதனால் தான், ‘மாகாளி பராசக்தி உருசிய நாட்டிடையினில் கண் வைத்தாள், ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று எழுதினார் பாரதி. குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு என்ற அவரது கீதத்தின் மெய்ப்பாடு சோவியத் ரஷ்யா. தேசிய கவி ரவீந்திர நாத் தாகூர் நேரில் சென்று பார்த்து புளகாங்கிதம் அடைந்தார். இருளிலிருந்து ஒளிவெள்ளத்திற்கு லட்சக்கணக்கான மக்களை வழி நடத்திட முடியும் என்பதை என் கண்களால் நம்பமுடியாமல் கண்டு பெருமிதம் கொண்டேன் என்றார். கவி நஜ்ருல் இஸ்லாம் உள்ளிட்ட பலரும் பரவசமடைந்தனர். தந்தை பெரியாரும் சோவியத் உலகை நேரில் சென்று பொதுவுடைமையின் வெற்றியைக் கண்ணாரக் கண்டு திரும்பினார். கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதல் எம் ஆர் ராதா வரை நமது தமிழகக் கலையுலகின் அரிய படைப்பாளிகள் ஈர்க்கப்பட்டனர்.

ஆனால், இத்தனையும் அத்தனை இலகுவாக நடந்துவிட வில்லை. புரட்சியின் வெற்றியை அடுத்து, ஏகாதிபத்திய சக்திகள் வெளியிலிருந்து தூண்டிட உருவான உள்ளூர் கலகங்கள் பெரிய சவாலாக இருக்க, நான்கு ஆண்டுகளில் எதிர்ப்புரட்சி சக்திகள் ஒடுக்கி வீழ்த்தப்பட்டன. இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஃபாசிச முசோலினியையும், நாசிச இட்லரையும் வீழ்த்தியதில் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய செஞ்சேனையின் துணிவுமிக்க போரும், அளவிட முடியாத எண்ணிக்கையிலான மக்களின் தியாகமும் ஆற்றிய பங்களிப்பு விவரிக்க முடியாதது.

சோவியத் புரட்சி அய்ரோப்பிய நாடுகளிலும் விடுதலையை சாத்தியமாக்கியது. சீனப்புரட்சிக்கு ஆதர்சமானது. இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிப்போடு போராடிக்கொண்டிருந்த போராளிகளுக்கு நம்பிக்கை தீபமாக விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோசலிஸ்டுகள் உருவாகிப் பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கம் மேலும் ஆழமாக வேர்விடவும், இரண்டாம் உலகப்போர் முடிவில் கிடைத்த எழுச்சியின் தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களைத் திரட்டி பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை முடிவிற்குக் கொண்டுவரவும் சோவியத் ஒன்றியத்தின் துடிப்புமிக்க இயக்கம் பேரெழுச்சியாக அமைந்தது.

கல்வியறிவு, பண்பாட்டு வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, விண்வெளி சாதனைகள், வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியில் அசாத்திய இலக்குகளை எட்டியது என சோவியத் ஒன்றியம் சாதித்தவை முதலாளித்துவ வல்லுனர்களாலும் புறந்தள்ள முடியாதவை.

ஆனாலும், எண்பதுகளின் இறுதியில் மிகயீல் கோர்பச்சேவ் ஆட்சிப்பொறுப்பில் இருந்த காலத்தில் வேகமாக நடைபெற்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியில், சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. சோசலிசம் நழுவவிடப்பட்டது. பொதுவுடைமை தத்துவ நடைமுறைப்படுத்தலில் நீண்ட கால இடைவெளியில் ஏற்பட்ட தவறுகள், பிறழ்வுகள், பலவீனங்கள் இவற்றின் விளைவாக, ஏகாதிபத்திய சக்திகளின் பண்பாட்டு ஊடுருவலும், அரசியல் சதிகளும், இராணுவப் பொருளாதாரத்திற்கு பெரும்பான்மை நிதியைச் செலவிடத் தூண்டவுமாக வசதியாக அமைந்துபோனது. வாராது போல வந்த மாமணியை மனிதகுலம் தோற்றது இப்படித்தான் நடந்தது.

ak3

முதலாளித்துவ இதழான டைம் ஏட்டில் அண்மையில் வெளியாகி இருக்கும் கட்டுரை, சோவியத் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், முதலாளித்துவ நாடுகள் தங்களால் முடியாதனவற்றை ஒரு சோசலிச அரசு சாதித்துக் கொண்டிருந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வகுத்த திட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. சோவியத் சாதனைகளை நேரடியான முறையில் போற்றுகிறது.

இன்று ஏகாதிபத்திய அமெரிக்காவில், 99 சதவீத மக்கள், ஒரு சதவீத பெருஞ்செல்வந்தர்கள் நலனுக்காகச் சுரண்டப்படுவதா என்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சந்தைப் பொருளாதாரத்தின் சாபத்தில் சிக்கிய பல நாடுகள் மாற்றுப் பொருளாதாரத்தை சிந்திக்கின்றன. நமது நாட்டிலும், தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பட்டு வருகின்றன. வறுமையில் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்ட விவசாய மக்களுக்கு மாற்று உலகு குறித்த நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய நேரத்தில் சோவியத் புரட்சியின் நூற்றாண்டு விடிகிறது.

மக்ஸீம் கார்க்கி, ஆண்டன் செகாவ், டால்ஸ்டாய், சிங்கிஸ் ஐத்மாத்தவ் ….என அற்புதமான இலக்கிய படைப்பாளிகள் மூட்டிய கனல் அது. எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை என்ற தத்துவ தரிசனம் அது. நவம்பர் புரட்சி, ஒரு நாட்டின் வெளிச்சமல்ல. புதிய உலகின் ஒட்டுமொத்த விடியலுக்கான கீதம் அது.

‘இந்த பூமி முழுவதும் விடியும் வரை….’என்றுதான், பரிணாமனின் அந்தப் பாடல் நிறைவு பெறுகிறது.

******************

நன்றி: உழவன் உரிமை (நவம்பர் 2016 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *