செப் 5: ஆசிரியர் தினம்

Teachers-Day1

எஸ் வி வேணுகோபாலன்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல் நாள், முதலாம் வகுப்பில் உள்ளே போய் நுழைந்த நேரம் நடுங்க ஆரம்பித்த காலும் கையும் நிற்கவில்லை. படபடப்பு மிகுந்து கொட்டிய வியர்வை கொட்டியபடியே. எத்தனை எத்தனை ஒத்திகை, எத்தனை முறை படித்துப் படித்து மனப்பாடம் ஆகியிருந்த சைக்காலஜி பாடம் ஒற்றைச் சொல் ஒழுங்காக வாயில் வரவேண்டுமே…ஹுஹும்…எதிரே தன்னைவிட வயது அதிகமான மாணவர்கள் (அதாவது ஆசிரியர்களாகப் போகிறவர்கள்!)….எப்படித்தான் நாற்பது நிமிடங்கள் ஓடி முடிந்ததோ தெரியாது, மணியடிக்கக் காத்திருந்தது மாதிரி அந்த ஆசிரியர் நேரே ஓட்டமும் நடையுமாக கல்லூரி முதல்வர் முன்பாகச் சென்று, தான் இந்த வேலைக்கு லாயக்கில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று தட்டுத் தடுமாறிச் சொல்லியும் விடுகிறார். அந்த முதல்வரோ கனிவான புன்னகை பூத்து, இதற்கெல்லாம்போய் யாராவது வேலையை விடுவார்களா….உங்கள் நடுக்கத்தை நீங்கள் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்…

பயத்தைப் போய் எப்படி துணிச்சலாக வெளிப்படுத்துவது? முதல்வர் விளக்குகிறார்: “நடுக்கத்தை மறைக்க மறைக்க இன்னும் பதட்டம் கூடுமே தவிரக் குறையாது…உங்களுக்கு இருக்கும் பதட்டத்தை சாதாரணமாக வெளிப்படுத்தியபடி உங்கள் வேலையைத் தொடருங்கள், தன்னைப்போல உங்கள் வேலையில் சிறப்பாக இயங்க ஆரம்பித்து விடுவீர்கள்…

மைசூர் பல்கலையின் புகழ்மிக்க பேராசிரியராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றபின்னும் 85 வயதிலும் நகைச்சுவை உணர்வு குன்றாமல் எழுதவும், வழிகாட்டியாக இருக்கவும் செயகிற பேராசிரியர் தண்டபாணி அவர்களது புத்தகம் ஒன்றில்தான் இந்த சுயவிமர்சனக் குறிப்பு பதிவாகி இருக்கிறது.

பழைய துணுக்கு ஒன்று உண்டு! முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால், பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் நோயாளியைப் பார்த்து, நர்ஸ் சொல்வார்: டாக்டருக்குக் கூட இதுதான் அவர் செய்யப் போற முதல் ஆபரேஷன், அவர் பயப்படுறாரா பார்த்தீங்களா ?”

ஆசிரியரும், மாணவரும் முதன்முறை சந்திக்கும் புள்ளிகள் வெவ்வேறு அனுபவங்களைக் கொண்டிருப்பவை. பல ஆசிரியர்களை எதிர்கொண்ட மாணவர்முன் பழுத்த அனுபவம் கொண்டிருக்கும் ஆசிரியர் நிற்பதன் அனுபவங்களும் வித்தியாசமானவை.

நடுக்கங்களோடு பழகும் கால்களுக்கு வகுப்பறை ஒரு புதிர் நிறைந்த புல்வெளி போன்றது. அடர்ந்த காடாகவும் கூட உருப்பெறுகிறது சமயங்களில்! வகுப்பறையில் – உலகில் இன்னும் பிறக்காத விலங்குகளின் குரல்களைக் கூட ஒலிக்கச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கும் மாணவர்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் மாணவர் இதயங்களைக் கவ்விப் பிடிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் மனத்தில் இடம்பிடித்துவிடும் மாணவர்கள் சமூகத்தின் வெளிச்சத்தைக் கூட்டுகின்றனர்.

பேரா. ச மாடசாமி அவர்களது “போயிட்டு வாங்க சார்” (குட் பை மிஸ்டர் சிப்ஸ் ஆங்கில நூலின் நுணுக்கமான தமிழ் வடிவம்) நூலின் நாயகரான ஆசிரியர் சிப்ஸ், முதுமையிலும் தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் எதிரே இருக்கும் வீட்டில் குடியிருந்தபடி அடுத்தடுத்த இளம்பிராய மாணவர்களோடு நட்பு பூண்டு அன்பு கொண்டாடி நிறைவாழ்க்கை வாழ்ந்து மறைகிறார். அவர் மிகத் திறமையான ஆசிரியரோ, சாகசம் நிறைந்தவரோ அல்ல, மாணவரை நேசித்த இதயம் அவருடையது என்று வருணிப்பார் பேரா மாடசாமி!

தேவகோட்டையில் அரசு உதவி பெறும் ஓர் எளிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஓயாமல் மாணவ, மாணவியரது திறமைகளை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெளிப்படவைத்து ஊடகங்களிலும் புகைப்படங்களை மின்னவைத்து சாதாரண வீட்டுப் பிள்ளைகளின் இல்லங்களில் பேரானந்தக் களிப்பை சாத்தியமாக்கி வருகிறார்.

சென்னையில் கடந்த ஆண்டின் பெருமழை வெள்ளத்தில் தங்களது பாடப்புத்தகங்களோடு எதிர்காலக் கனவுகளையும் தொலைத்துவிட்டதாகக் குமுறிய மாணவர் உள்ளங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்து புத்தகங்களும் கொடுத்து, சிறந்த மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2வில் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியைகளை மாநகராட்சி மாணவியர் மறவாமல் குறிப்பிட்டுப் பெருமிதம் கொண்டனர்.

டாஸ்மாக் கடைகளில் சீருடையோடு போய் நிற்கும் மாணவர் புகைப்படங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. ஆனால்,எண்ணற்ற ஆசிரியர்கள், இப்படிப் பல தவறான வழிகளில் நடக்கும் தங்கள் மாணவரோடு மல்லுக்கட்டிப் போராடி அவர்களை அன்பால் வென்றெடுத்து நல்வழிப்படுத்தும் பலநூறு நிகழ்வுகள் ஊடகங்களில் பேசப்படுவதில்லை.

கேலிச்சித்திரங்களின் கருப்பொருளாகவும், வேடிக்கை காட்சிப் பொருளாகவும் ஆசிரியர்களைப் படைக்கும் “ரசனை” மிகுந்த திரைப்படங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தின் பாதிப்பும், பிரதிபலிப்பும் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் இருக்கத்தானே செய்யும்! ஆனால், ஆசிரியரைக் கொண்டாடும் சமூகத்தில் ஆசிரியர்கள் மேலும் உன்னதமாகவே நிலவுவார்கள்.

ஆசிரியர் தினம், உள்ளபடியே மாணவர்களைக் கொண்டாடும் நாள்தான்! மாணவர்களற்ற உலகில் ஆசிரியரை யார் கொண்டாட முடியும்? அதேபோல், பெற்றோர்க்கும் கூட, ஆசிரியர் தினம் அவர்களது வாழ்க்கையின் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும்-ஏன் எதிர்காலத்தையும் இன்பமாகக் காணும் ஓர் அனுபவத்தை ஊற்றெடுக்க வைக்கும் நாள்! எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்தான் ஆசிரியர் தினம்.

அண்மையில் தமது எண்பத்தைந்து வயதில் ஒரு சிறிய எலும்புமுறிவு ஏற்பட்ட விஷயத்தை நகைச்சுவை ததும்ப ஒரு கட்டுரையாக ஆங்கில இந்து நாளிதழில் எழுதி இருந்தார் பேரா தண்டபாணி. அதை வாசித்துவிட்டு அவரோடு ஏற்படுத்திக் கொண்ட நட்பில் அவர் அனுப்பிக் கொடுத்த அவரது புத்தகத்தில், தம்மோடு வம்புக்கு இறங்கிய – சமாளிக்க முடியாமல் திண்டாட வைத்த மாணவர்களுக்குத் தான் நன்றி சொல்லி இருக்கிறார். அவர்கள்தான் தமக்கு வகுப்பறை பட்டறையில் முதல் பயிற்சி அளித்தவர்கள் என்ற அழகான குறிப்போடு!

அதனால் தான் ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்!

***************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எல்லோருக்குமான கொண்டாட்ட தினம்!

  1. பேராசிரியர் தண்டபாணி அவர்கள் மைசூரில் பேராசிரியராக இருந்த பொழுது அவரிடம் பி,எட் படிப்பில் (Summer Course ) மாணவனாக இருக்க 1977ம் ஆண்டு வாய்ப்புக் கிடைத்தது. சிறந்த கல்வியாளர்,, அன்பும் கருணையும் உடையவர்.. ஆனால் மிகக் கண்டிப்பானவர்.. எனக்கு மே மாதம் ஞாயிறு அன்று திருமணம் நிச்சயமாகி இருந்த பொழுது அவரிடம் திருமணத்திற்காக விடுமுறை கேட்கச் சென்றேன். “குறுகிய காலப் படிப்பிற்கு வரும் பொழுது எப்படி நீங்கள் திருமணம் வைத்துக் கொள்ளலாம்? “எனக் கேட்டு மிகக் கெஞ்சிய பின் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் விடுமுறை கொடுத்து செவ்வாய் நீங்கள் வரவில்லை என்றால் இந்த படிப்பிலிருந்து நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று சொல்லி அனுப்பித்தார். பேராசிரியர் தண்டபாணி, பேராசிரியை லக்ஷ்மி (சேலம்) போன்ற மிகச் சிறந்த ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *