Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

இதோ இன்னொரு கண்ணப்பன்!

-மேகலா இராமமூர்த்தி

பெரிய புராணம் விவரிக்கும் திருத்தொண்டர் வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று கண்ணப்ப நாயனார் வரலாறு. இறைவனை முறையாக வழிபடுவதற்குரிய நியமங்களோ ஆகமமுறைகளோ அறியாத பாமரவேடன் கண்ணப்பன். காளத்தி மலையில் எழுந்தருளியிருந்த குடுமித்தேவரைக் (சிவபெருமான்) கண்ட நொடியிலேயே ’love at the first sight’ என்று சொல்வதற்கேற்ப அவர்மீது மாளாத காதலுற்றான். ஐயனை அரைநொடியும் ’அகலகில்லேன்’ என்று எண்ணியவனாய், ’வங்கினைப் பற்றிப்போகா வல்லுடும்பை’ப்போல் அவரைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டான்.

”நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லேன்” என்று பட்டினத்தாராலும், ”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்…” என்று மணிவாசகப் பெருந்தகையாலும் நெகிழ்ச்சியோடு பாராட்டப்பட்டவன் இந்தக் காளத்தி வேடன். கண்ணப்பனை ஒத்த ஒருவன் இப்புவியில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று நாமும் எண்ணியிருக்கும் வேளையில் அவனையொத்த வேறோர் இறையன்பனைக் காண நேர்ந்தால் வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைவோம் அல்லவா?

அத்தகைய உத்தமத் தொண்டன் ஒருவனை நமக்கு அடையாளம் காட்டுகின்றது பதினெண் புராணங்களில் ஒன்றான ’பிரம்ம புராணம்.’ கண்ணப்பன் கதையைப் பெரிதும் ஒத்திருக்கும் அத்தொண்டனின் கதை இது!

முன்னொரு காலத்தில் ’வேதா’ எனும் பெயருடைய முனிவர் ஒருவர் வாழ்ந்துவந்தார். காலை தொடங்கி கடும்பகல் வரைத் தாம் வசித்துவந்த பகுதிக்கு அருகிலிருந்த காட்டில் குடிகொண்டிருந்த சிவலிங்கத்தை வழிபடுவதைத் தன் வழக்கமாகக் கொண்டவர் அவர். மாலையில் ஊருக்குள்சென்று பிச்சையெடுத்து அவ்வுணவைச் சிவனாருக்குப் படைத்துவிட்டே புசிப்பார்.

அதே காட்டில் ‘பில்லா’ எனும் பெயருடைய வேடன் ஒருவனும் வசித்துவந்தான். தினமும் விலங்குகளை வேட்டையாடி அதன் ஊனைச் சிவனுக்குப் படைத்துவிட்டு எஞ்சியிருப்பதைத் தன்னுடைய ஊணாகக் கொள்வான் அவன்.

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கண்டதில்லை. வேதா, சிவலிங்கத்தைத் தினமும் வழிபடவரும் வேளையில், இலிங்கத் திருமேனிக்கு அருகில் இறைச்சித்துண்டுகள் கிடப்பதைக் கண்டார். முதலில் அவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் அவ்விடத்தை உற்றுநோக்கியதில் அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. தான் படைத்த நிவேதனப் பொருட்கள் சிதறிக்கிடப்பதையும், அந்த இறைச்சித்தொண்டுகள் மட்டும் புசிக்கப்பட்டதற்கு அடையாளமாய் அவற்றின் எலும்புகள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு குழப்பத்தில் ஆழ்ந்தார் முனிவர். இறைவனுக்கு இவ்வாறு தினமும் இறைச்சித்துண்டுகளைப் படைக்கும் அந்த மனிதன் யார் என்பதை அறியும் ஆவல் அவருக்குப் பெருக்கெடுத்தது. அதனை அறியும்பொருட்டு மறுநாள் தன்னுடைய ஆராதனைகளை முடித்துவிட்டு ஒரு மரத்திற்குப் பின்னே மறைந்திருந்து நடப்பதை கவனித்துக்கொண்டிருந்தார்.

நீண்ட நேரத்திற்குப்பின் களைத்த முகத்தோடும், கையில் ஊனோடும் வந்தான் ஒரு வேடன். அவன் இலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்ததும், இறைவர் அதிலிருந்து வெளிப்பட்டு, “பில்லா! இன்று ஏன் இவ்வளவு தாமதம்? உனக்காக நான் எவ்வளவு நேரம் பசியோடு காத்திருக்கிறேன் தெரியுமா?” என்று அன்போடு கடிந்துகொண்டதைக் கண்டார்; வியப்பின் எல்லைக்குச் சென்றார்!

படையலை முடித்துவிட்டுச் சிறிதுநேரத்தில் பில்லா அங்கிருந்து அகன்றதும், விரைந்து அங்குவந்த முனிவர், “இறைவா! உன்னை நான் தினமும் நியமம் தவறாது பூசித்து நிவேதனமும் செய்கின்றேன். ஆனால் இதுவரை ஒருமுறைகூட எனக்குக் காட்சிதராத நீ, உயிர்க்கொலை புரிந்து அதன் ஊனை உனக்கு ஊட்டும் அந்த வேடனுக்குக் காட்சிதருகிறாய்? உன் பாரபட்சமான செயலை என்னால் பொறுக்கமுடியவில்லை. இப்போதே உன் இலிங்கத் திருமேனியை உடைத்து நொறுக்குகிறேன் பார்!” என்று கடுஞ்சினத்தோடு கூறினார். அதைக்கேட்ட சிவபிரான், “வேதா! நீ பில்லா என்மீது கொண்டிருக்கும் கழிபேரன்பைச் சற்றும் உணர்ந்தாயில்லை; நாளை வந்துபார்! உண்மை விளங்கும்” என்று விளம்பி மறைந்தார்.

மறுநாள் சிவலிங்கத்திற்குப் பூசைசெய்ய அங்குவந்த வேதா, அதன் உச்சியிலிருந்து குருதி வடிவதைக் கண்டார். அதனைத் துடைத்துவிட்டு, வழக்கமான தன் பணிகளைச் செய்துவிட்டு மரத்தின்பின்னே மறைந்துநின்றார் வேடனின் வரவுக்காக!

சிறிதுநேரத்தில் இறைவனைக்காண இறைச்சியோடு விரைந்துவந்தான் பில்லா. இலிங்கத் திருமேனியிலிருந்து குருதி வடிவதைக் கண்டு கலங்கிப்போனான். “ஐயோ என்ன இது? நான் ஏதோ பெரும்பிழை செய்துவிட்டேன் போலிருக்கிறதே! அதனால்தான் என் ஐயனின் அழகுத்திருமேனியிருந்து குருதி கொப்பளிக்கின்றது” என்றெண்ணி மறுகியவனாய்க் கையிலிருந்த அம்பால் தன் உடலெங்கும் குத்திக்கொண்டு குருதிவழிய நின்றான். அதனைக் கண்ட முனிவர் வேதா செயலற்று உறைந்துபோனார். அந்த வேடனின் முரட்டு இறைக்காதல் அவரை மருட்டியது!

சிவபிரான் இலிங்கத் திருமேனியிருந்து தோன்றி, “வேதா! நீ என்மீது அன்புகொண்டு நிவேதனங்களை மட்டுமே படைத்தாய்; ஆனால் இவ்வேடனோ தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் எனக்காகப் படைத்துவிடத் துடிப்பதைப் பார்த்தாயா?” என்று கேட்கவும், வேதா வெட்கித் தலைகுனிந்தார்.

பில்லா இறைவனைப் பூசித்த இடம் ‘பில்ல தீர்த்தம்’ என்ற பெயரோடு திகழ்ந்துவருகின்றது என்கிறது பிரம்ம புராணம். பில்லாவின் கதை நம் கண்ணப்ப நாயனாரின் கதைபோலவே இருக்கிறது இல்லையா?

இவ்வரலாறுகளைப் படிக்கும்போது, இருவேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இருவேறு சிவனடியார்களின் வரலாறு எப்படி ஒன்றுபோலவே இருக்கிறது எனும் ஐயம் நம்முள் எட்டிப்பார்க்கின்றது!

இதற்கான விடைகளை இவ்வாறு ஊகிக்கலாம்…

ஒன்று, இறைவன்மீது அளவற்ற காதல் கொண்ட இரு அடியார்கள் தங்கள் முரட்டுத்தனமான அன்பை ஒத்த செயல்களால் வெளிப்படுத்தியிருக்கலாம். அல்லது இவற்றில் ஒரு வரலாறு மற்றொன்றின் தாக்கத்தால் எழுதப்பட்டதாகவும் இருக்கக்கூடும்.

எது எப்படியோ…இவ்வரலாறுகள் நமக்கு உணர்த்தும் நீதி இதுதான்!

மந்திரங்கள் முணுமுணுத்து, கணகணவென மணியொலித்துச் செய்யும் நியமமான பூசையைக் காட்டிலும், சித்தத்தைச் சிவன்பால் வைத்துக் காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கிச் செய்யும் உண்மை வழிபாடே அவனுக்கு உகந்தது; உயர்ந்தது!

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க