காலங்களைக் கடந்து ஒலிக்கும் குரல்………….

1

எஸ் வி வேணுகோபாலன்

bhara

‘எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி…’ என்று கரிசல் குயில் கிருஷ்ணசாமி அவர்களது குரலில் ஓர் அழகு இசைப் பாடலை எண்பதுகளில்தான் முதன்முதல் கேட்டு கிறுகிறுத்துப் போனேன். பாரதி குறித்து யார் எழுதினாலும், பேசினாலும், பகிர்ந்து கொண்டாலும் எப்போதும் மெய் சிலிர்க்கும்வண்ணம் அவரில் தோய்ந்து இன்புறும் கணக்கற்ற இதயங்களில் இதை வாசிக்கும் உங்களுடையதும் ஒன்றாக இருக்கக் கூடும்.

தேடல் மிகுந்த இளமையின் வேகம், சமூகத்தில் ஏதோ ஒழுங்கு தவறி இருக்கிறது என்பதான அவஸ்தை, எதையும் அர்ப்பணித்தாவது சக மனிதர்களது விடுதலைக்கு உழைக்கத் தயாரான நெஞ்சுரம், அறிவுக்கும் அனுபவத்துக்கும் எளிமைக்குமன்றி அதிகாரத்திற்குத் தலை வணங்காத தீச்சுடர் துணிச்சல்….இந்த வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினால் நமக்கு கிடைக்கும் ஓவியத்தில் பாரதியை தரிசிக்க முடியும். இல்லை, இல்லை, இவற்றுக்கும் அப்பால் விரிந்த சித்திரம் அவரது.

அடிமை தேசத்தில், பெரிய தொழில் நுட்பம் வளர்ந்திராத ஒரு காலத்தில், இந்து சனாதன பிராம்மண குடும்பத்தில் பிறந்த ஒருவர் சீர்திருத்தவாதியாக மலர்வதும், போராளியாக உருவெடுப்பதும், மறுமலர்ச்சிக் கவியாகத் திகழ்வதும் காலத்தின் கொடை ! சிந்தனை வீச்சும், சொல்லின் தேர்ச்சியும், மொழி வளமும் கால காலத்திற்குமான அமுதமாகச் சுவைக்கும்வண்ணம் அவரது படைப்பாற்றல் மிளிர்ந்தது. ஏழ்மையின் மடியில் விளைந்த கனிகள் அவரது கவிதைகள். ஆனால் கம்பீரம் குலையாத முகம் இருக்கிறது அவற்றுக்கு. காலனிய அரசின் ஏவல் படைகளால் துரத்தப்பட்ட வாழ்க்கை அவரது. ஆனால் தீர்மானமான குரல் ஒலித்தது அவரது எழுத்துக்களில்.

அழகியலை விட்டுவிடாத அரசியலை முழங்கின அவரது தேசிய கவிதைகள். பிற்போக்குத் தனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத ஜய பேரிகை கொட்டியது அவரது சமூகப் பார்வை. அனுபவத்தின் வடுவும், அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டத்தின் தீக்காயமும் மட்டுமல்ல, குழந்தைகளைக் கொண்டாடும் துள்ளாட்டமும், இயற்கையைக் காதலிக்கும் கொண்டாட்டமும் கொஞ்சுகின்றன அவரது கவிதையுலகில்! பாரதி மிக மிக அரிய – வித்தியாசமான – காலத்தே வந்து வாய்த்த வரவு தமிழ் இலக்கியத்திற்கு.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல்…’ என்று ஓர் அட்டவணை இருந்தது பாரதியின் அன்றாட வாழ்வுக்கு. இதில், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பது இன்றைக்கும் பொருந்தத் தக்க பிரகடனம். அதுவும் இளைஞர்களுக்கு !

நம்பிக்கை அற்ற பெருவெளியில் மனிதர்கள் சோர்வுறுகின்றனர். தாக்குதல் அதிகரிக்கும்போது நம்பிக்கையைக் கை நழுவ விடுகின்றனர் மக்கள். எதிர்ப்புணர்ச்சி குறைவான உயிர்கள் எளிதில் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன அல்லது ஆதிக்கத்தின் வன்மைத்தின்முன் சரண் அடைந்து தவிக்கின்றன. இந்திய இராணுவத்தில் இருந்தாலும், மக்களுக்கான அரசியலைக் கை விட முடியாது என்று குரல் கொடுத்த மேஜர் ஜெய்பால் சிங் “நாடு அழைத்தது” என்று பின்னர் தமது சுய சரிதைக்குத் தலைப்பிட்டார்.

நாடு அழைக்கும் இப்படியான குரலைக் கேட்கும் தகுதியும், உள்ளுணர்வும், ஆர்வமும் மிக்கவர்கள் அந்தக் குரலின்வழி அடியெடுத்து வைக்கின்றனர். தங்களது அனைத்தையும் அந்தக் குரலுக்கு ஒப்புக் கொடுக்கின்றனர். அந்தச் செம்மாந்த உணர்வில் அடுத்தடுத்து கடமைகளை முன்னெடுப்பதில் நம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றனர். மகாகவி பாரதியின் செயல்பாடு, படைப்பூக்கம், சமூக வெளிப்பாடு இவற்றின் பின்புலத்தில் அவருக்கும் அப்படியான குரலுக்குச் செவிமடுக்கும் தன்மை இருந்ததை உணரமுடியும்.

பாரதியின் அரசியல் குரல், தேசத்தின் விடுதலைக்கானது. சமூகக் குரல், பெண்ணடிமை-தீண்டாமை-தனியுடைமைக்கு எதிரானது. எல்லா அறங்களையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் அவரது கவிதைகள் அவரது தொலைநோக்குப் பார்வையை உணர்த்துகின்றன. அவரது கட்டுரைகள், கேலி சித்திரங்கள் அனைத்திலும் அவரது நோக்கம் வெளிப்படையாக இருந்தது. தேர்ச்சியான பத்திரிகையாளர் அவர். பள்ளி ஆசிரியராகவும் சில காலம் மதுரையில் பணியாற்றியவர்!

நமது இன்றைய சமூகம் தாராளமய தத்துவத்தின் ஆட்சிக்குள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மாற்றத்திற்கான சாத்தியங்களை அவரது படைப்புலகம் அள்ளி அள்ளி வழங்கிச் சென்றிருக்கிறது. மக்களுக்கு எதிரான விஷயங்களின்மீது ஆவேசமும், கோபமும் எழும் கவியாக மட்டும் பாடிவிட்டுச் சென்றுவிடவில்லை பாரதி. அதிலிருந்து மீளும் திசை வழி குறித்தும். அவரது தீப்பொறிகள் பறக்கவே செய்கின்றன அவரது தொகுப்பு நெடுக பார்த்துச் செல்ல முடியும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது என்றும், அவரை மோதி மிதிக்கவும், முகத்தில் உமிழ்ந்துவிடவும் குழந்தைகளுக்குக் கற்பித்த முதல் ஆசான் பாரதி. ஒடுங்கிப் போகாது எதிர்த்து நிற்கவேண்டும் எனும் வாழ்க்கைப் பாடம் அது. அச்சம் தவிர் என்பது அவரது முதலாவது ஆத்திச் சூடி.

விளையாட்டுக்கள் மறுக்கப்படும், மறக்கப்படும் இளமைப் பருவமாக இன்று சமூகம் குழந்தைமையைத் தொலைக்கச் சொல்கிறது. படிப்பு போட்டிப் பந்தயமாக மாற்றப் பட்டிருக்கிறது. பணத்தின்வழி சிந்தனை செலுத்தப் படுகிறது. அது எல்லா அன்பையும், அறத்தையும், உறவுகளையும் அறுத்துப் போடுகிறது. ஆனால், குழந்தைகளுக்கான பாரதியின் கவிதை மொழி இன்றைக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டியது. அதுதான் அவர்களுக்கு அவர்களது குழந்தைப் பருவ இன்பங்களை மீட்டுத் தரவல்லது.

சின்னஞ்சிறு குருவி போலே – நீ
திரிந்து பறந்து வா பாப்பா
வன்னப் பறவைகளைக் கண்டு – நீ
மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

என்பது இயற்கையை நேசிக்கவும், இயற்கையோடு இயைந்து வாழவும் போதிக்கிறது அல்லவா! காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்பதை வழக்கப் படுத்தப் போராட வேண்டாமா நாம்?

தாய்மொழி வழிக் கல்வி அறவே கீழ்மைப் படுத்தப்படும் இந்த நேரத்தில், வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்ற அவரது அசாத்திய கோபம் நமது கடமையை எத்தனை நேர்த்தியாக நினைவூட்டுகிறது !

சாதியத்திற்கு எதிரான போர்க்குரலை அவர் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். ‘எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ, இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றம் என்றும் கொள்ளலாமோ, சாதிப் பிரிவினைகள் வேண்டாம் அன்பு தன்னில் தழைக்கும் இவ்வையம்’ என்பது எத்தனை அழுத்தம் திருத்தமான பிரகடனம்! மத வேறுபாடுகளை மீறிய நல்லிணக்க சமுதாயம் அவரது வேட்கை. அவரது வாழ்க்கை நடைமுறையாகவும் இருந்தது.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை, குழந்தைகளைக் கூட பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தும் வக்கிரங்கள் கவலை தரத் தக்க அளவில் அதிகரித்துவரும் இந்த நேரத்தில், ‘பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா’ என்ற அவரது குரலை, அவர் வாழ்ந்த நூற்றாண்டின் சமூக தளத்தில் வைத்துக் கேட்கும்போது சமூகம் கற்க வேண்டிய பாடங்கள் எத்தனை எத்தனை! ஆணும் பெண்ணும் சமமெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற அவரது தெளிவு, இன்றைக்கும் ஏற்க மறுக்கும் ஆணாதிக்க உள்ளங்களுக்கு எதிரான சவுக்கு சொடுக்குதல் என்றே பார்க்கவேண்டும். பலியாகும் பக்கமே பழியும் போடத் துடிக்கும் பொது புத்திக்கு எதிரான கலகக் குரல்களை பாரதியின் சமூக விமர்சனத்தில் கேட்க முடியும்.

தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாள் முழுக்க உட்கார்ந்து காதலைப் பார்க்கும் கூட்டம் இன்னொரு புறம், தங்கள் பகுதியில் காதல் என்றால், கௌரவக் கொலை செய்யவும் துணிகிறது.

நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டி னர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே

என்ற அவரது வெஞ்சினச் சொற்களில் இந்த அவலங்களுக்கு பதிலும் கிடைக்கும். அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் தூண்டுதலையும் பெற முடியும்.

‘மண்ணில் இன்பங்களைப் பெற வேண்டி சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ’ என்ற ஒற்றை வரி, நிதி மூலதனத்தின்முன் தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கத் தயாராகும் ஆட்சியாளர்கள் குறித்த கேள்விகளை நமக்குள் எழுப்புகிறதுதானே ? ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போவதோ நாங்கள் சாவதோ’ என்ற சாட்டை வரி இன்று எழுதப்பட்டது போல ஒலிக்கவில்லையா? ‘நல்ல விலை கொண்டு நாயை விற்போர் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ’ என்ற அவரது கனல் வாக்கியம் நாட்டு நடப்பின் கார விமர்சனம் அல்லவா?

மாயா வாதம், அத்வைதம் என்று மனித வாழ்க்கையில் படும் இன்னல்களையும், சுரண்டலையும் நியாயப்படுத்திய தத்துவக் கூட்டிலிருந்து பிறந்து வந்து அதற்கு எதிராக சிந்தித்த மகாகவி அவர். இயற்கையை ஒவ்வொன்றாய்த் துணைக்கு அழைத்து, ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ, கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ’ என்று அவர் எழுப்பிய கேள்வி பிரபஞ்சம் குறித்த விழிப்புணர்வோடு எழுதப் பட்டது.

குயில் பாட்டு உழைப்பின் மேன்மையை, இயற்கையின் அழகியலை, வாழ்க்கையின் உன்னதங்களைக் கொண்டாடும் படைப்பு. அவரது சுயசரிதை ஒரு நீள்கவிதை – ஏராளமான செய்திகளையும், விவாதங்களையும் கொண்டிருப்பது. கண்ணன் பாட்டு கவிதை இன்பம் ஊட்டுவது.

பாரதியின் படைப்புலகம் ஒரு பல்கலைக் கழகம் போன்றது. அதன் துறைகள் பரந்து விரிந்தவை. நிகழ்த்துக் கலை போல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன அவரது ஆழ்ந்த பொருளடக்கம் கொண்டிருக்கும் சமூக சிந்தனைகள்.

அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் தூண்டுவது. நம்பிக்கைச் சுடரை அடைகாத்து வைத்திருப்பது.

பாரதி டிசம்பர் 11, 1882ல் பிறந்தார் என்றோ, செப்டம்பர் 11, 1921ல் மறைந்தார் என்றோ குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வது வரலாற்றுச் செய்திக்கு மட்டுமே. அவர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர். என்றென்றும் வழங்கிக் கொண்டிருப்பவர். எங்கெங்கும் கொண்டாடப்படுபவர். எல்லோருக்கும் சொந்தமாகிவிட்டவர்.

**********

நன்றி : இளைஞர் முழக்கம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காலங்களைக் கடந்து ஒலிக்கும் குரல்………….

  1. அருமையான சொல்லோவியம் தீட்டியிருக்கிறீர்கள் வேணுகோபால். உணர்ச்சி மயமான வெளிப்பாடு. சத்தியம் தொனிக்கிறது; புதிய சக்தி ஜனிக்கிறது! 
    “தேடல் மிகுந்த இளமையின் வேகம், சமூகத்தில் ஏதோ ஒழுங்கு தவறி இருக்கிறது என்பதான அவஸ்தை, எதையும் அர்ப்பணித்தாவது சக மனிதர்களது விடுதலைக்கு உழைக்கத் தயாரான நெஞ்சுரம், அறிவுக்கும் அனுபவத்துக்கும் எளிமைக்குமன்றி அதிகாரத்திற்குத் தலை வணங்காத தீச்சுடர் துணிச்சல்….இந்த வண்ணங்களைக் குழைத்துத் தீட்டினால் நமக்கு கிடைக்கும் ஓவியத்தில் பாரதியை தரிசிக்க முடியும். இல்லை, இல்லை, இவற்றுக்கும் அப்பால் விரிந்த சித்திரம் அவரது.” 
    அடாடா, நினைந்து, நினைந்து போற்றத் தக்க வரிகள். 
    மாடத்தி பாட்டின் ஒலிவடிவம் கேட்க ஆசைப்படுகிறேன். சாத்தியமா? நிங்கள் இசைக்கவி ரமணனின் “எட்டையபுரத்துச் சுப்பையா இங்க வளந்தானா” என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? அதை ரமணன் பாடி, வல்லமையில் பதிவு செய்ய இதுவே உகந்த தருணம் என்று நினைக்கிறேன்.
    முண்டாசுக் கவிஞனிடம் உங்களுக்குள்ள மெய்யான ஈடுபாட்டுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கே.ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *