— எஸ் வி வேணுகோபாலன்.

பொன்னியின் செல்வன்

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் நாவல் போலவே மீண்டும் பார்க்கத் தூண்டும் மேடையேற்றம்

 

poniyin selvan

 

“ஆதி அந்தமில்லாத கற்பனை ஓடத்தில் ஏறி, நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து, இன்றைக்கு தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்கு முன் செல்வோமாக”
– கல்கி (பொன்னியின் செல்வன் தொடரின் தொடக்க வாசகங்கள்- 1950)

ஒரு வரலாற்றுப் புதினத்தை எத்தனை பேர் ஆர்வத்தோடு தொடர்ந்து படிப்பார்கள் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன் என்று தொடர் முடிவில் சொன்னாலும், எழுத்தாளர் கல்கி தனது நாவல் மிகப் பெரிய சலனத்தை வாசகர் மத்தியில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்கிய அற்புத நாவல் அது. அதனை நாடக வடிவில் பார்க்க கிடைத்த வாய்ப்பு உண்மையில் பரவசமூட்டியது. பழத்தை உண்பது ஒன்று. அதன் ரசத்தை அருந்துவது வேறு. கைகளால் விதைப்பதைக் கண்களால் அறுவடை செய்கிறோம் – அது என்ன என்ற விடுகதை, எழுத்தின் மேன்மை பற்றிப் பேசுகிறது. நாவலாக வாசிப்பதை நாடகமாகக் கண்டு களிப்பது உண்மையில் வெவ்வேறான அனுபவம்தான். நாவல் நமக்கும் பிரதிக்குமான நேரடி தொடர்பு உணர்வு. கற்பனைகளின் பிணைப்புத் தன்மை தனித்துவமானது. கூட்டாகக் காண்கிற உணர்வு முற்றிலும் வேறான புறத் தன்மை கொண்டது. அதன் உந்துதல் கூட்டான அனுபவத்தின்முன் பிரத்தியேகத் தன்மையை ஆட்படுத்துவது.

ஒரு கதைப் புத்தகத்தைத் திறக்கும்போதே அதன் கதை மாந்தர்கள் உயிர் பெற்று எழுந்து அவரவர் பாத்திரத்தின் இயல்பில் இயங்கத் தொடங்குகின்றனர். நாடகத்தில் அது உண்மையிலேயே நிகழ்கிறது. அதுவும் வரலாற்றுப் புதினம் என்கிறபோது அந்த உலகம் எந்தக் காலத்திலும் பார்வையாளர்களைத் தம்மோடு ஈர்த்துக் கரைக்க வல்லதாகிறது. அதன் சாத்தியங்கள் கதை, நாடக ஆக்கம், நடிப்பு, உத்திகள்…இன்னபிற அம்சங்களைச் சார்ந்தது என்றாலும், நாடகம் பார்த்தல் என்பது நமது பண்பாட்டு அசைவுகளில் நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதால் எப்போதுமே தனி கவன ஈர்ப்பு கொண்டதாகிறது.

சோழர் காலம் என்பது பள்ளிக்கூடப் படிப்பில் மிகச் சில பக்கங்கள் பாடமாகவும், இரண்டு மூன்று கேள்விகளுக்குள் (அதையும் கட்டாயம் எழுத வேண்டுமென்பதில்லை. வேறு கேள்வியைத் தேர்வு செய்தால் தவிர்க்கவும் முடியும்) அடங்குவதாகவும் உள்ள விஷயம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் முக்கிய கட்டத்தினுள் இறங்கி வரலாற்றுத் தரவுகளை சேகரித்துக் கொண்டு கற்பனையின் விரிப்பில் அந்தக் கதையை நேர்த்தியாகப் பின்னிக் கொடுப்பது மிகுந்த சவாலான வேலை. சுவாரசியம் ஏற ஏற உண்மை சில தப்படிகள் பின்னே போய் நின்றுகொள்ளும். வெறும் தகவல்களின் கைப்பிடித்துச் சொல்லத் தொடங்கும் கதை எந்த ஈர்ப்பும் தரத் தவறி மூலையில் போய்க் கிடந்தது கதறி அழும். பொன்னியின் செல்வன், கல்கியை மிகவும் பெருமைக்குள்ளாக்கிய – அவரது மாஸ்டர் பீஸ் என்று பெயர் பெற்றுவிட்ட – வரலாற்று நாவல். அதன் நுட்பங்களை, அழகியலை, அது பேசும் அரசியலை, ஆட்சி பீடத்திற்கான போராட்டங்களை, வசீகரமான இழையோட்டம் கொள்ளும் காதலை, வஞ்சகத்தை, சூழ்ச்சியை, தியாகத்தை, அதன் இலக்கிய ரசனையை, இசை இன்பத்தை, உரையாடல் செழிப்பை உள்வாங்கி குறுகத் தறித்த குறளாக ஒரு படைப்பை வழங்குவது என்பது அசாதாரண வேலை. ஆனால் அதன் தரிசனம் உண்மையில் உற்சாகம் கொள்ள வைத்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆணும் பெண்ணுமான ஓர் ஆட்டக்காரக் கதை சொல்லி ஜோடியின் துணையோடு கதையை வேகமாக நகர்த்தும் உத்தி, நூற்றாண்டுகளுக்குமுன் பயணம் செய்து போகிற பார்வையாளர்களை சில பத்தாண்டுகளை மிகவும் வேகமாகக் கடக்கவும் பழக்கி விடுகிறது. ஆடிப் பெருக்கு அன்று பூம்புனல் பெருகி ஓடும் நாளில் தஞ்சை மண்ணில் கால் பதிக்கக் காஞ்சியிலிருந்து வருகை தரும் வந்தியத்தேவன் அறிமுகத்தோடுதான் நாவல் தொடங்கும். அவ்வண்ணமே தொடங்கும் நாடகம், எத்தனை எத்தனை திருப்பங்கள் நிறைந்த கதையை அனாயாசமாக முன்னோக்கிக் கொண்டு செல்கிறது!

ஆட்டமும், பாட்டமுமாக மக்கள்திரள் கொண்டாடித் துள்ளும் சாலையில் அடுத்த அறிமுகம் வேறு யாராக இருக்க முடியும், ஆழ்வார்க்கடியான் திருமலை நம்பியைத் தவிர! முன் குடுமியும், வைஷ்ணவத்தை நிந்திப்பவர்களை ‘திருச்சாத்து’ சாத்தி அடித்து வெளுப்பதற்கான கைத்தடியுமாக அவர் எழுந்தருளும்போது பார்வையாளர் ஆரவாரம் அமோகமாகிறது. சைவரோடும், சமணரோடும் அவர் நடத்தும் வாதங்களினூடாக வல்லரையன் வந்தியத்தேவன் உள்ளே புகுவது படு ஜோரான நையாண்டி. வைகுண்டத்திற்கே தான் நேரேபோய்ப் பார்க்கையில் சிவனும், திருமாலும் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகவும், கையால் முழம்போட்டுப் பார்த்தாலும் ஒரே உயரமே இருந்ததாகவும், அதற்கும் மேலே நம்பாது இருவரில் யார் உயர்ந்தவர்கள் என்று கேட்டபோது, அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு என்று இருவருமாகச் சொன்னதுமாகத் தெரிவித்து மண்ணை வெட்டி அடிப்பது கல்கியின் நகைச்சுவைப் பொறி !

சோழ சாம்ராஜ்யத்தில் எல்லா ஆளுமையோடு திகழும் – சொந்தக் கொடியாகப் பனைமரக் கொடி வைத்துக் கொண்டிருக்கும் பழுவேட்டரையர் குலத்தின் பெரிய பழுவேட்டரையர் வந்திறங்குவது அடுத்த முக்கிய காட்சி. மூடு பல்லக்கில் அவர் செல்லும் இடமெல்லாம் செல்லும் அவரது இளம் மனைவி நந்தினி – யார் என்று அறியாத வழிப் பெண்ணாக அவளைப் பார்த்து வயதான காலத்திலும் அவர் மோகித்து ஊரறிய மணந்துகொண்ட பெண்! அவரது குழாம் அப்படியே கடம்பூர் மாளிகை செல்கிறது. அவரது ஆகப் பெரும் இலட்சியம், ஆட்சியில் இருக்கும் வயது மூத்த, உடல் நலம் நலிந்து மரணப் படுக்கையில் கிடக்கும் சுந்தரச் சோழனை தமது ஆளுமையைச் செலுத்திச் சம்மதிக்க வைத்து தமது பேச்சைக் கேட்கும் மதுராந்தகனை சக்ரவர்த்தி ஆக்குவது. அதற்கு சிற்றரசர்கள் பலரது ஆதரவை முன்னதாகத் திரட்டி வைத்துக் கொள்ள ரகசிய ஆலோசனைக்கு அவர் செல்வதிலிருந்து கதை விருவிருப்பு கொள்கிறது.

ஆனால் நந்தினிக்கு வேறு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. அவரது இலட்சியம் சோழ வம்சத்தையே அழிப்பது. அதற்கு ரவிதாசன் என்னும் மந்திரவாதியின் துணை, அவனது அடியாட்கள் பலம் அவளது தேர்வாக இருக்கிறது. அநாதை என்று கருதப்படும் நந்தினியின் பிறப்பில் உள்ள புதிர், கதையின் முக்கிய வேர்களில் ஒன்று. இதனிடையே இலங்கைப் போரை அடுத்து, அங்கே எல்லாம் இழந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான கட்டமைப்பில் இருக்கிறார் சுந்தர சோழரின் இளைய மகன் அருள் மொழி வர்மன். இளவரசர் ஆதித்திய கரிகாலன் உயிருக்கு ஆபத்து பல முனைகளில்! அவரது உயிர் நண்பன்தான் வந்தியத் தேவன்.

அசாத்திய சாகசக்காரன், சமத்காரப் பேச்சுக்குச் சொந்தக்காரன், அழகிய காதலன் என்று உருவாக்கப்பட்டிருக்கும் வந்தியத்தேவன் பாத்திரம் மேடையைக் கட்டி ஆள்கிறது. துள்ளலும் ஓட்டமுமான நடை, துணிச்சலான நறுக் பேச்சு, வேகமான கத்தி வீச்சு, பகைவனுக்கு எதிராகவும் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரம், மதில்களுக்கிடையே தாவுவதும், பதுங்கிக் கேட்பதும், சிறையில் தப்புவதுமாக சிறப்பான உடல் மொழியில் நாடகம் நெடுக மிளிர்கிற பாத்திரம்! எனக்கு முகஸ்துதி பிடிக்காது என்னும் நந்தினியிடம், வேண்டுமானால் முதுகு பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள் என்று சொல்வதும், ஆனால் நான் பெண்களிடத்தும் போர்க்களத்திலும் முதுகு காட்டப் பிடிக்காதவன், ஆகவே தாராளமாக என்னை முகஸ்துதி செய்யலாம் என்று சொல்லும் மறுமொழியும் கைத்தட்டல் பெறுகின்றன. ‘காளிதாசனும், முத்தொள்ளாயிரம் பாடிய கவியும் வருணிக்க மாட்டாத’ காதலைப் பரிமாறிக் கொள்ளும் கண்களோடு வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும் சந்திக்கும் கவித்துவ மிக்க காதல் காட்சியும் அற்புதமான நிகழ்த்துதல் ஆகிறது.

கம்பீரம் குலையாத பாத்திரங்களாக குந்தவை ஒரு புறம், நந்தினி மறுபுறம். சிலிர்க்கவைக்கும் முக்கிய பெண் பாத்திரமாக பூங்குழலி என்னும் சமுத்திர குமாரி. துடுக்குப் பேச்சும், துடுப்பின் பேச்சுமாக கைக்குப் பிடிபடாது வந்தியத் தேவனோடு வம்பு செய்யும் அறிமுகக் காட்சியில் வாலைக் குமரியடி என்ற மாதிரி என்ன ஒயில், என்ன வேகம், என்ன தாவுதல், என்ன அசாதாரண குறும்பு….சாதாரண மனிதர்களே அரசாட்சிக்கு விசுவாசமிக்க பணியாளர்களாக அமைவதும், ஆட்சிக்கு அலைவோர் எப்போதும் சூழ்ச்சிக்கு திட்டமிடுவோராக இருப்பதும் நாடகத்தில் சிறப்பிடம் பெறுகிறது.

பழுவேட்டரையரே ஒரு கட்டத்தில் அதிர்ந்துபோகும்படி நந்தினியின் சூழ்ச்சிகள் வேறு திசையில் வளர்கையில், நந்தினி தனது தந்தை சில காலம் சேர்ந்து வாழ்ந்த ஊமைப் பெண் மந்தாகினியின் பெண் என்ற புரிதலோடு குந்தவை அவள்பால் பரிவோடு அணுக நினைப்பதும், உண்மை வேறொன்றாக இருக்க, ஆதித்திய கரிகாலனைக் கொல்ல திட்டமிடும் நந்தினி அவனை உள்ளபடி நேசித்தவளாக இருக்க அதன் முரண்பாடுகள் விரியும் இடம் நாடகத்தின் முக்கிய பகுதியாகிறது. அந்தக் காட்சியின் இறுதி, கரிகாலனின் மரணத்தில் முடிவது அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற புதிரை எழுப்புகிறது.

தனது நேசத்திற்குரியவன் தனது அண்ணனைக் கொன்ற பழியொடு எதிரே நிற்க குந்தவை படும் பாடு அடுத்த கட்டம். தனது பாவமே தனது மகனைக் கொன்றது என்று புலம்புகிறது சுந்தரச் சோழனின் முதிய உள்ளம். நடந்தவற்றின் விளக்கங்கள் அடுத்தடுத்து உரையாடலின் வழி வெளிச்சத்திற்கு வர, பழுவேட்டரையர் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வந்தியத்தேவன் நிரபராதி என்று சொல்லிப் பிரிகிறார். இளைய மகன் அருள் மொழி வர்மன் (எதிர்காலத்தில் ராஜ ராஜன் என்று வழங்கப்பட இருப்பவன்) பட்டம் ஏற்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அவனோ சேந்தன் அமுதனுக்கு முடி சூட்டி அழகு பார்க்கும் இடத்தில் நிறைவு பெறுகிறது நாடகம்.

பெரிய பிராட்டியின் பாத்திரம் நுட்பமானது. மதுராந்தகனின் தாய் என்று அறியப்பட்டிருப்பவரின் தீர்மானமான குரல், சக்கரவர்த்தியாக ஆவதைத் தடுக்க அவனுக்கும், அவருக்குமான வாத பிரதிவாதங்கள் மேடையில் முக்கியத்துவம் பெறுகின்றன. மூடு பல்லக்கின் திரை விலகுவதுபோல விரியும் நந்தினியின் பாத்திரமும் சிறப்புக் கவனத்தோடு நாடகத்தில் உருவாக்கம் கொள்கிறது. இலங்கையில் புத்த பிக்குகள் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று தனக்கு சொல்லப்படும் யோசனையை நிராகரிக்கும் அருள் மொழி வர்மன், மதமும், ஆட்சியையும் கலக்கக் கூடாது என்று சொல்லுமிடம் கவனத்தைப் பெறுகிறது.

மதில் அடுக்குகள், பட்டத்து யானை, படகோட்டம், அரச கட்டில் என சிறப்பான கலை அம்சங்களை அமைத்துக் கொடுத்திருப்பவர் தோட்டா தரணி. காட்சிப் பொருள்களின் நாடக மாந்தர்களைக் கொண்டே பின்புலத்தை சற்றே மாற்றி அமைத்தபடி, அடுத்தடுத்த காட்சிக்குத் திரையைப் பயன்படுத்தாது வேகமாக நகர்கிறது நாடகம். குரவைப் பாட்டும், கும்மாள ஆட்டமும், குறைவில்லாத நகைச்சுவையும், தொய்வற்ற கதைப் போக்கும், பிரமிக்க வைக்கும் வாள்சண்டையும், யானையின் பிரவேசமும், தெறிப்பான வசனங்களுமாக எந்தத் தலைமுறையினரையும் ஈர்க்க வல்லதாக நாடகம் வெளிப்படுகிறது.

முந்தைய மேடையேற்றத்தின்போது தாம் ஏற்ற அதே பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் தோன்றும் பேராசிரியர் மு இராமசாமி தமது முக பாவங்களாலும், உடல் மொழியாலும் அற்புத நடிப்பை வழங்கியுள்ளார். அவரோடு நேருக்கு நேர் மோதும் ஆதித்திய கரிகாலன் வேடத்தை ஏற்றிருக்கும் நடிகர் பசுபதி சிறப்பாகச் செய்திருக்கிறார். வந்தியத்தேவன் (தயாள்), குந்தவை (பிரீதி), பூங்குழலி (காயத்ரி), அருள்மொழி வர்மன், அவன் காதலி வானதி,ஆழ்வார்க்கடியான், நந்தினி….என அனைத்துப் பாத்திரங்களைச் செய்தவர்களும் தங்களது அருமையான திறனைச் செலுத்தி நெஞ்சில் நிற்கின்றனர். சோழனாகிவிட்ட எனது அருமைத் தோழன் ரமேஷ், சுந்தரச் சோழன் வேடத்தில் மூப்பின் அவஸ்தைகளையும், ஆட்சி பாரத்தின் வேதனையையும், சூழ்நிலைக் கைதியாகித் துடிக்கும் வலியையும் சிறப்புறக் கொணர்ந்திருப்பவர். பால் ஜேக்கப் இசை, கதையின் பின்மொழியாக ஒலிக்கிறது.

தமது தொடரை முடித்த பிறகு அதிகம் கேள்விக் கணைகளை எதிர்கொண்டதாக நாவலின் பின்னுரையில் எழுதுகிறார் கல்கி. எல்லாவற்றையும் எப்படி சொல்லிவிட முடியும் என்பதாகவும், வரலாற்று நாவலை ஒரு கட்டத்தில் முடிக்கத் தானே வேண்டும் என்றும் சொல்கிற அவரது குரல், மிகக் குறைந்த நேரத்தில் இத்தனை பெரிய நாவலை நாடகமாக நிகழ்த்துபவர்களும் ஒரு கட்டத்தில் அதை முடிக்கத் தானே வேண்டியிருக்கிறது என்ற குரலாக இப்போது கேட்கிறது. தொடர்ந்து படிக்க வைக்கும் நாவலைப் போலவே, மீண்டும் பார்க்கத் தூண்டுவதாகவே நாடகம் நிறைவடையவும் செய்கிறது. ஈடுபாட்டோடு உழைத்திருக்கும் அனைத்துக் கலைஞர்களுமே வாழ்த்துக்குரியவர்கள்.

 

தமிழ் வாசக பரப்பில் இன்றும் உயிர்ப்போடு பேசப்படும் புதினங்களில் முக்கியமானதாக விளங்குவது கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன். மூன்றரை ஆண்டுக் காலம் கல்கி இதழில் வாராவாரம் தொடராக வந்து கொண்டிருந்தபோதே ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்த வரலாற்றுக் காவியம் அது. 1950ல் தொடங்கப்பட்ட இந்த தொடர், 1954ல் முடிந்ததன் அறுபதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக பொன்னியின் செல்வன் மீண்டும் நாடக வடிவில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 1999ல் மேஜிக் லாண்டர்ன் குழுவினரின் படைப்பாக அரங்கேறிய இந்த நாடகம், மீண்டும் அவர்களது குழுவின் ஆதார வலுவோடு புதிய கலைஞர்களையும் உட்கொண்டு எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாக சென்னை மியூசிக் அகாதமியில் ஜூன் 8ம் தேதி முதல் 14 தேதி வரை மாலைக் காட்சியாக நிகழ்த்தப் படுகிறது.

நாவல் நிறைவு பெற்ற அதே 1954ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி எழுத்தாளர் கல்கி இயற்கை எய்தினார். இந்த ஆண்டு, அவரது மறைவின் அறுபதாண்டு நிறைவும் கூட! இந்த நாவல் வெளிவந்தபோது கல்கி இதழின் விற்பனை 75,000 பிரதிகள் கூடியதாம். அதனால், தேச அளவில் இரண்டாவது அதிக விற்பனை ஆகும் இதழாக கல்கி வளர்ந்தது. கல்கி மறைவுக்குப் பின்னரும் தொடர் மறுபிரசுரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அப்படியான ஒவ்வொரு தருணத்திலும் கல்கி இதழ் 20,000 பிரதிகள் அதிக விற்பனை ஆனதாகச் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்குத் தொடர்ந்து வாசகர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாவல், பொன்னியின் செல்வன்.

அந்த நாவல்தான் இப்போது மீண்டும் நாடக வடிவில் பார்வையாளரை ஈர்க்க வருகிறது. மூன்றரை ஆண்டுக் காலம் தொடராக வந்த நாவல், மூன்றரை மணி நேரம் காட்சிப் படுத்தப் படுவது ஓர் அசாத்திய முயற்சி. நாடக ஆக்கத்தை குமரவேல் சாதித்திருக்கிறார். இயக்குனர் பிரவீன் சிறப்பான நெறியாள்கை செய்திருக்கிறார். பல முறை நாவலை வாசித்துத் திளைத்த நினைவுகளோடு வருபவர்களையும், நாவல் வாசிக்காத புதிய தலைமுறையினரையும் ஒரு சேர நிறைவான உள்ளத்தோடு திரும்புமாறு ஓர் அனுபவத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார் எஸ் எஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் வரவேற்கும் இளங்கோ குமணன். அது நிறைவேறும் என்றே தோன்றுகிறது.

நன்றி: தீக்கதிர்

 

 

 

 

 

 

படம் உதவி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&page=4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.