தமிழ்த் திரை இசை: சுவையடர்ந்த பெருங்காடு

எஸ் வி வேணுகோபாலன்.

Sound Record

திரைப்படப் பாடலிலேயே முழு கதையைச் சொல்வது இங்கே தான் இருக்கிறது…என்று ஒரு முறை கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அவர் உலகப் படங்களோடு தமிழ்ப் படங்களை மட்டும் ஒப்பிட்டாரா, பொதுவாக இந்திய மொழிப் படங்களைப் பற்றிய கருத்தா அது என்று தெரியவில்லை. அடுத்தது, திரைப்படங்களில் பாடலுக்கு என்ன தேவை என்பது. அப்படியானால் பாடல் என்ற ஒன்று எப்படி உள்ளே புகுந்தது என்பது மூன்றாவது கேள்வி. திரைப்படப் பாடலைச் சுற்றி இன்னும் இப்படி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது எப்படி என்பது நான்காவது அம்சம்.

பாடல்கள் நமது பிறப்பிலிருந்து நம்மைத் தொடர்கின்றன. சொல்லப் போனால் தாயின் கருவறையில் இருக்கும்போதிலிருந்தே! பிறகு அவை இறுதி வரை தொடர்கின்றன என்பது முக்கியமானது. களிப்புற்று வாழும் ஒரு மன நிலை பாடல்களில் சிறக்கிறது. இந்தக் களிப்பு ஆனந்தக் களிப்பாகவும் இருக்கலாம். துயரத்தின் பெருக்காகவும் இருக்கலாம். இன்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, துன்பத்தின் பிரதிபலிப்பாகவும் கூட இசை மனிதர்களது உள்ளத்திலிருந்து புறப்படுகிறது. இது பண்பாட்டின் அசைவன்றி வேறென்ன ?

மன்னன் பரிசு கொடுப்பான் என்றெண்ணி அவனை இந்திரன், சந்திரன் என்று பாடுகிற புலவர்கள், அந்த மடையன் யாதொன்றும் வழங்காது வேறு பக்கம் திரும்பிக் கொள்ளும் போது அவனை வசைபாடியும் கவிதை பாடிவிட்டுத் தான் அடுத்த வேலைக்குப் போயிருக்கின்றனர்.

‘அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும், ஆழ்ந்த துயிலினிலே அமைதியைக் காணட்டும்,’ என்பது கவியரசு கண்ணதாசனின் மிகவும் பிரபலமான கவிதை….உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து அவர் எழுதியது அது. பெரிய மனிதனாக வளர்ந்து அடையப் போகும் துன்பங்கள் இன்னதின்னதென்று வரிசையாகச் சொல்லிச் சென்று, அதனால் அவன் இப்போதாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என்று முடித்திருந்தார் அவர். ஆனால் சில நாட்கள் கழித்து ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தை மரித்துப் போனபோது அவர் மிகவும் அதிர்ந்து போய்விட்டார்…..’அறம் பாடி விட்டேனோ, அறியேன் யான், சிறுகுருவி, திறம் பாட மாட்டாமல் செத்த கதை பாடுகிறேன்’ என்று மீண்டும் ஒரு கவிதை எழுதினார்.

கவிதையும், பாடலும், பழமொழிகளும் இசையோடு இசைந்த – இயைந்த வாழ்க்கையாக நமது பண்பாட்டுக் கூறுகள் அமைந்திருக்கின்றன. அவற்றின் பிரதிபலிப்புகள் திரைப்படங்களிலும் வெளிப்படுவதில் எந்த வியப்பும் இருக்க முடியாது. பேசும் படம் வரத் தொடங்கிய காலத்தில் பாடல்களும் சேர்ந்தே வரத் தொடங்கிவிட்டன. பாடல்களுக்கிடையில் கொஞ்சம் வசனம் என்று சொல்லும் அளவுக்கு மிக அதிகமாகப் பாடல்கள் இடம் பெற்ற படங்களும், பாடலே இல்லாத படம் என்ற அறிவிப்போடு வந்த மிகச் சில படங்களுமாக திரைப்பட வரலாறு இருக்கிறது. இன்னார் பாடல் எழுதியது, இவர் இசையமைத்தது, இவர்கள் பாடியது என்று சொல்லத் தக்க அளவில் விளம்பரப் படுத்தப் பட்டு வெற்றியடைந்த படங்கள் பலவுண்டு. பாடல்கள் திரைபப்டத்தின் முக்கிய அங்கமாகி நிலைத்துவிட்டன என்று தான் தோன்றுகிறது.

ஒரு படத்திற்கான திரைக்கதை எழுதி முடிக்கப்பட்டு, யார் யார் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என்ற தேர்வும் முடிவானபிறகு பெரும்பாலும் முதல் கட்ட வேலையாக நடைபெறுவது பாடல் பதிவு தான். கடந்த பல ஆண்டுகளாக, இசை வெளியீடு என்பது தான் ஒரு திரைப்படம் குறித்த முதல் பேச்சாக ரசிகர் மத்தியில் வந்து இறங்குகிறது. அதற்குமுன்பாகவே, பாடல் ஒலிப்பதிவுடன் தொடக்கம் என்ற விளம்பரம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு படத்தின் பாடல்கள் ‘ஹிட்’ ஆவது திரைப்பட வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகப் பார்க்கப் படுகிறது. படம் வெளியாகும்போது திருட்டு சி டி வெளியாவது எத்தனை வேதனையோடு பார்க்கப் படுகிறதோ, அதே போல் பாடல் வெளியீடு நடக்குமுன், இணையதளத்தில் பாடல்கள் வெளியாவதும் அதிர்ச்சி அளித்துவிடுகிறது. மிக அண்மையில் கூட இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பாடல்கள் வகிக்கும் இடம் மிக மிக நுட்பமானதாகிறது.

tmsஒரு படத்திற்கு மொத்தம் எத்தனை பாடல்கள் தேவைப்படுகின்றன என்பதை இயக்குனர் கலந்தாலோசித்து பாடல்களுக்கான ‘சிச்சுவேஷன்’ எத்தனை என்று முடிவெடுக்கிறார். பிறகு மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ இசை அமைப்பாளரின் பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. (நீங்கள் மெட்டுக்குப் பாட்டு எழுதுகிறீர்களா, பாட்டுக்கு மெட்டா என்ற கேள்வி கேட்டபோது, கவிஞர் வாலி சொன்னார், நான் துட்டுக்குத் தான் பாட்டு எழுதுகிறேன் !). இயக்குனர் கூறும் சிச்சுவேஷனை மனத்தில் நிறுத்தி இசையமைப்பாளர் தத்தகாரத்தில் (தான தன தந்தன தானா தானே தானா…என்பது மாதிரி) ஒவ்வொரு பாடலுக்கும் மெட்டு போட்டு முடித்ததும், கவிஞர் நுழைகிறார்.

கால ஓட்டத்தின் வேகத்தோடு ஒத்திசைவான சொற்களும், கற்பனையும், இசை இன்பமும் சேரும் போது அந்தப் பாடல் புகழ் பெறுகிறது. நிலைத்து விடுகிறது. இதற்கான உழைப்பு, நேரம், அர்ப்பணிப்பு, அனுபவம், ஆற்றல், வாய்ப்புகள் இவை எல்லாம் சிறப்பாக அமையும்போது பிறக்கும் பாடல்கள் என்றென்றும் பேசப்படுகின்றன…பாடப் படுகின்றன.

டைட்டில் போடும்போதே இசை துள்ளும் பாடல் ஒன்று சுழலத் தொடங்குவதிலிருந்து ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் ஒவ்வொரு தேவையின் அடிப்படையில் இடம் பெறுகின்றன. கோப்பையில் ஊற்றும் தண்ணீர் வழிந்து ஓடுவது போல, தேவைக்கு அதிகமாகவும் சில நேரம் ததும்புகின்றன. உணர்ச்சிப் பாடல்கள், காதல் கீதங்கள், உருக்கமான வரிகள், சிந்தனை தூண்டும் உருவகங்கள் என பாடல்கள் பலவிதமாகப் புனையப்படுகின்றன.

தொடக்க காலத்தில் மரபு இலக்கணத்திற்குட்பட்ட செய்யுளாக, கவிதைகளாக இசைக்கப்பட்ட பாடல்கள் காலப் போக்கில் வெவ்வேறு திசைவழி புறப்பட்டுப் பாய்ந்து செல்லத் தொடங்கிவிட்டன. பல்லவி, சரணங்கள் என்று படியமைக்கப்படும் இந்தப் பாடல்கள் சுத்த கர்நாடக ராக வடிவில் இசைப்பதும் உண்டு, அல்லது மெல்லிசை என்று சொல்லப்படும் வகையில் சற்றே தளர்த்திய இலக்கணங்களோடு பாடல்கள் தயாராவதுமுண்டு. வெவ்வேறு வகைப் பண்களின் வடிவிலும் திரை இசைப் பாடல்கள் எழுதி இசையமைக்கப் பட்டிருக்கின்றன.

எத்தனை ஆயிரம் பாடல்கள்…எத்தனை எத்தனை இனிய குரல்கள்…என்னென்ன புதுப்புது சங்கதிகள்…..எவ்வளவு விதவிதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள்….தமிழ்த் திரைப் பட வரலாற்றில் பாடல்களுக்கு மிக முக்கிய இடம் உண்டு.

அழகியல் பாடல்கள்:
இயற்கை வருணனை, அழகின் ஆராதனை மட்டுமல்ல, பக்தி வெளிப்பாட்டிலும், உறவுகள் ரசனையிலும் கூட அருமையான அழகியல் கவிதைகள் மின்னுவதைப் பல பாடல்களில் பார்க்க முடியும். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (முள்ளும் மலரும் ), இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்), கல்லிலே கலை வண்ணம் கண்டான் (குமுதம்), மதுரையில் பறந்த மீன் கொடியை (பூவா தலையா), அன்பு நடமாடும் கலைக்கூடமே (அவன் தான் மனிதன்), உலகம் பிறந்தது எனக்காக (பாசம்)….என்று போகிறது இந்தப் பட்டியல்.

காதல் பாடல்களில் அழகின் ரசனையை வெளிப்படுத்தும் அருமையான வரிகளை பல கவிஞர்கள் படைத்திருக்கின்றனர். நீ என்னென்ன சொன்னாலும் கவிதை (நேற்று இன்று நாளை- புலமைப் பித்தன் ) என்ற பாடலில், சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து என்று தொடங்கும் முதல் சரணத்திலிருந்து, வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து என்று வரும் கடைசி சரணம் வரை சிறப்பான வருணனைகள். இந்திரா படத்தில் இடம் பெற்ற நிலா காய்கிறது, நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே என்ற பாடல் (வைரமுத்து) உள்பட வித்தியாசமான வகையில் எழுதப் பட்ட பல பாடல்கள் உண்டு.

தத்துவப் பாடல்கள்:
வாழ்வே மாயம் என்று எழுதினால் தான் தத்துவப் பாடல் என்ற சாதாரண புரிதல் பெரும்பான்மை ரசிகர்களிடம் நிலவுகிறது. வாழ்வியலைக் குறித்த பல்வேறு பார்வைகள் உண்டு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவம் என்பது புரியாதவர்கள், எதுவும் நிலைக்காது என்று எழுதிவிட்டால் அதுதான் தத்துவம் என்றும் அதுவே உலக வாழ்வின் ரகசியம் என்றும் எடுத்துக் கொள்கின்றனர். கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் என்றால், கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் (வானம்பாடி), ஆட்டுவித்தால் யாரொருவர் (அவன் தான் மனிதன்), ஆறு மனமே ஆறு (ஆண்டவன் கட்டளை), இரண்டு மனம் வேண்டும் (வசந்த மாளிகை), இது மாலை நேரத்து மயக்கம் (தரிசனம்), நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் (நெஞ்சில் ஓர் ஆலயம்)….என்று ஒரு நீள் வரிசை உண்டு. இப்படியே வாலி (கரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி, உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா – சிம்லா ஸ்பெஷல், ஒன்ன நெனச்சு பாட்டு படிச்சேன் – அபூர்வ சகோதரர்கள்), புலமைப்பித்தன் (நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில்), என பலரது பாடல்களைக் கூற முடியும்.

வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும் பாடல்கள், மாற்றத்தைச் சொல்லும் பாடல்கள் ஆகியவை வந்தாலும் அவற்றை தத்துவப் பாடல்களாகக் கருதாத போக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பல பிரபல பாடல்கள் தத்துவப் பாடல்கள் தானே….சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா, திருடாதே பாப்பா திருடாதே போன்றவை இதில் அடங்கும். மகாகவியின் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே கவிதை, பாரதி திரைப்படத்தில் ஹரீஷ் ராகவேந்தர் குரலில் மிகவும் அருமையாக ஒலிக்கிறது. மாயாவாத சிந்தனைக்கு எதிரான கவிதை அது.

உருக்கமான பாடல்கள்:
காலம் கடந்து நிற்கும் பல திரைப்பாடல்கள் இந்தப் பட்டியலில் தான் அதிகம் உண்டு. காதல் தோல்வி, நண்பனின் துரோகம், பிரிவாற்றாமை, ஏமாற்றம் போன்ற பல நிலைமைக்கு ஏற்றபடி எழுதப்படும் பாடல்கள் கேட்பவரை உருக வைக்கின்றன. இசையின் நெகிழ்ச்சியான தன்மையும், பாடல் வரிகளின் பொருத்தமான வரிகளும் உள்ளத்தை உருக வைத்துவிடுகின்றன.

ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள் ) பாடல் டி எம் சவுந்திரராஜன் குரலின் வசீகர உருக்கத்தோடு, அதன் தொடக்க ராக ஆலாபனையிலிருந்து படிப்படியாக உருக்கத்தின் உயர் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட்டு நிறைவடைகிறது. பால் போலவே, வான் மீதிலே என்ற தொகையறாவில் தொடங்கும் (உயர்ந்த மனிதன் – வாலி) எழுதியிருக்கும் நாளை இந்த வேளை பார்த்து…என்ற பாடல் பி சுசீலா குரலில் கேட்பவரை உலுக்கி எடுக்கும். கண்ணதாசனின் கடைசி திரைப்பாடல் என்று சொல்லப்படும் கண்ணே கலைமானே (மூன்றாம் பிறை), நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு), வாடாத ரோசாப்பு (கிராமத்து அத்தியாயம்), உனக்கென இருப்பேன்…(காதல்), உருகுதே மருகுதே (வெயில்) (பாடல்கள் இரண்டுமே நா முத்துக்குமார் ), போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா -வைரமுத்து), என அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை உணர்வுகளின் உருக்கத்தைக் கொட்டி கொடுக்கும் பாடல்கள் பலவும் உண்டு.

டி எம் சவுந்திரராஜன் (கற்பனைக்கு மேனி தந்து, ஏட்டில் எழுதி வைத்தேன்), பி பி ஸ்ரீநிவாஸ் (மௌனமே பார்வையால், மயக்கமா கலக்கமா, யார் சிரித்தால் என்ன…), எஸ் பி பாலசுப்பிரமணியம் (மஞ்சம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா, உச்சி வகிந்தெடுத்து, காதல் ரோஜாவே ), வாணி ஜெயராம் (மணமகளே உன் மணவறை கோலம்), சித்ரா (நானொரு சிந்து, கண்ணாளனே), ஹரிஹரன் (விடுகதையா, உயிரே, கல்லை மட்டும் கண்டால்), ஷங்கர மகாதேவன் (சந்தன தென்றலை ), சொர்ணலதா (போறாளே பொன்னுத்தாயி, நீ எங்கே )….என அந்த நாளைய பாடகர்களிலிருந்து இந்த காலத்தின் பாடகர்கள் வரை நெகிழ்ச்சியுறும் பாடல்களை இசைக்கவே செய்திருக்கின்றனர்.

உனது மலர் கொடியிலே, எனது மலர் மடியிலே (பாத காணிக்கை) என்று, பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி இருவரின் குரல்கள் பெண் மனத்தின் பாடுகளை எடுத்து வைக்கும் பாடல் ஒலித்தால் யார்தான் உருக மாட்டார்! காதோடு தான் நான் பாடுவேன் என்ற (வெள்ளிவிழா) பாடல் எல் ஆர் ஈஸ்வரியின் முத்திரை பாடல் அல்லவா…

வஞ்சிக்கோட்டை வாலிபன்ஆட வைக்கிற பாடல்கள்:
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் (கண்ணன் என் காதலன்) பாடல்களுக்கு தமிழில் பஞ்சமில்லை. தாளக்கட்டு தொடங்கும்போதே தலையை ஆட்டவும், மடியில் உள்ளங்கையைப் புரட்டிப் போடவும், உடலே குலுங்கிக் குலுங்கி எழுந்து நின்று ஆடவும் வைக்கும் பாடல்கள் எண்ணிக்கைக்குள் அடங்குமா!

இன்று வந்த இந்த மயக்கம் (காசேதான் கடவுளடா) பாடலின் இசை தொடங்கும்போதே அது நடனப் பாட்டு என்று தெரிந்துவிடாதா…யாரடி நீ மோகினி (உத்தம புத்திரன்), கண்ணும் கண்ணும் கலந்து (வஞ்சிக்கோட்டை வாலிபன்), ஆடாத மனமும் உண்டோ (மன்னாதி மன்னன்), ஓம் நமசிவாயா (சலங்கை ஒலி ), வெள்ளிச் சலங்கைகள் (காதல் ஓவியம்), மனம் விரும்புதே உன்னை (நேருக்கு நேர்), கண்ணாளனே (பம்பாய்)… என்று எத்தனை எத்தனை கவிஞர்களின் படைப்பில், இசை அமைப்பாளர்களின் உழைப்பில், பாடகர்களின் குரல் நர்த்தனத்தில் எத்தனை எத்தனை அற்புதப் பாடல்கள்.

நகைச்சுவை பாடல்கள்:
நையாண்டி, கேலி, எள்ளல், நகைச்சுவைக்கும் தமிழ்த் திரை கொண்டாட்டமான பாடல்களை வழங்கியிருக்கிறது. கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு அள்ள அள்ளக் குறையாத இன்பங்களை விளைவிக்கும் நகைச்சுவை ரசனைப் பாடல்களை நமக்குத் தந்து சென்றிருக்கின்றனர்.

காதல்வயப் பட்ட பெண்ணைப் பார்த்த மோகத்தில் அவளைக் கண்ணே, தங்கமே, தேனே ….என்றெல்லாம் வருணித்து அவள் அதைக் கண்டுகொண்டும் அறியாதவள் மாதிரி வம்புக்கிழுக்கவும் சமாளிப்பது மாதிரி பாடிச் செல்லும் ‘கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா (அம்பிகாபதி) பாடல், ஆஹா ஆஹா இன்றும் என்றும் என்றென்றும் துள்ளாட்டம் போட்டுக் கேட்க வைப்பது ஆயிற்றே. ஒவ்வொன்றாய்த் தப்பி வரும் என் எஸ் கே, கடைசியில் டி ஏ மதுரத்திடம் சிக்கிக் கொள்ளும் இடம் சிருங்கார நகைச்சுவை:

மொகரையைப் பாரு
ஐயய்யோ மொகரையைப் பாரா? மொகரையைப் பாரு, ஆஹா மொகரையைப் பாரு, ஓஹோ மொகரையைப் பாரு, மொக மொகமொ மொகரைய சரி போ சரி
இந்தாங்கையா, இனிமே ஒண்ணும் மாத்த முடியாது. சத்தியமா சொல்லுங்க, இப்போ தேனேன்னு என்னத் தானே சொன்னீங்க?
ஹங் ஹஹ ஒன்ன இல்லம்மா, எனக்கு ஒடம்பு சரியில்லே, வைத்தியர் ஒரு பஸ்பம் கொடுத்திருக்காரு, அதைக் கொழச்சு சாப்பிடருதுக்குத் தேன் வேணும்
அது சரி, எதிரிலிருந்தும் தொடப் பயந்தேனேன்னு சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தமாம்?
எதிரிலே இருக்கு தொட முடியல்லே.
என்னது?
இங்கே இல்லே, தோட்டத்துலே ஒரு மரத்திலே, உச்சியிலே இருக்கு தேன் கூடு , அது தொடப்போனா அடிக்குமோ, இல்லே கொட்டுமோ அப்படீன்னு பயமாயிருக்கு.
ஹஹங் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா என்னா மூளை என்னா மூளை

சந்திரபாபு பட்டியலில், பொறந்தாலும் ஆம்பளையா தொடங்கி எத்தனை எத்தனை பாடல்கள்! நாகேஷ் குரலுக்கான நகைச்சுவை பாடல் பட்டியலும் குபு குபு நான் எஞ்சின் (மோட்டார் சுந்தரம் பிள்ளை) என்று விரிவது. விஸ்வநாதன் வேலை வேண்டும் (காதலிக்க நேரமில்லை), அடுத்தாத்து அம்புஜத்த (எதிர் நீச்சல்), என்று எப்போதும் கேட்டு ரசிக்க பாடல்கள் உண்டு.

சகோதரத்துவ பாடல்கள்:
எந்த மதம் சார்ந்த அன்பருக்கும் எந்த மதம் என்ற பாகுபாடு தோன்றாத வண்ணம் எத்தனை எத்தனை மதுர கீதங்களைத் தமிழ் திரை இசை அளித்திருக்கிறது! எல்லோரும் கொண்டாடுவோம் (பாவ மன்னிப்பு), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே (மூன்று தெய்வங்கள்) என விரிகிற வானவில் அது. கடவுளைக் கேள்வி கேட்கும் பாடல்கள் அதிகம் தோன்றவில்லை என்றாலும், இயற்கையைப் பாடும் பல பாடல்களின் எதிரொலியில் சில அறிவார்ந்த கேள்விகளை எழுப்பவே செய்திருக்கின்றன.

musicசமூகத் திருவிழாக்கள் ஒவ்வொன்றுக்கும் பாடல் உண்டு. தை பொங்கலு பொங்கலு (மகாநதி), உன்னைக் கண்டு நான் ஆட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி (கல்யாணப் பரிசு) என்கிற வரிசையிலும் ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினத்துக்கும் ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல் என்றொரு சாதி என்ற பாடல் உண்டு. லாட்டரி பற்றியும் விட்டு வைக்காத தமிழ்த் திரைப் பாடல்கள், சைக்கிள் ஓட்டவும், கார் கற்கவும், ஓட்டப் பந்தயத்துக்கும், கபடி கபடி விளையாட்டுக்கும்…. எல்லாவற்றுக்கும் பாடல்களைத் தந்திருக்கிறது.
எந்த மன நிலையிலும் கேட்க:
கதையோட்டத்தினோடு எழுதப்படும் பாடல்கள் அந்தந்தச் சூழலில் இசைக்கும் ராகம், எந்த மன நிலையிலும் கேட்கவும் அல்லது அந்தந்த மன நிலைக்கு ஏற்பவும் அமைகின்றன. இப்படியோர் தாலாட்டு பாடவா (அவர்கள்) என்று கேட்கும் தமிழ்த் திரைப்பாடல் உலகம், மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும் (கண் சிவந்தால் மண் சிவக்கும்) என்று புரட்சி பேசவும் செய்கிறது. கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் (சுப்பிரமணியபுரம்) என மென்காதலை இயம்புகிறது. சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா (டவுன்பஸ்) என்று தாபத்தோடு கேட்கிறது. கண்ணிலே இருப்பதென்ன (அம்பிகாபதி) என வித்தியாசமான குரலில் கொஞ்சிப் பேசுகிறது. இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஓடோடி வரும் யாரையும் ஏமாற்றாத ரசனைகளின் காட்டாறு அது. சிலிர்க்க வைக்கும் மலையருவி அது. கலைகளின் விரிந்த வானம் அது. சுவையடர்ந்த பெருங்காடு அது.

நன்றி:தீக்கதிர் தீபாவளி மலர்: 2014

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.