Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்திரை

காலம் கடந்த அங்கீகாரம் பெற்ற மேதையின் நெகிழ்வூட்டும் கதை

ராமானுஜன் திரைப்படம்

எஸ் வி வேணுகோபாலன்

 Ramanujam-Movie-Stills-4

குடும்பத்துடன் ‘கோயிலுக்குக்’ கிளம்பினோம்
மகள் ‘ராமானுஜன்’ பார்க்கவேண்டும்
என்று சொன்னாள்
அறிவே தெய்வம்
– நெல்லை ஓவியர் வள்ளிநாயகம்
அவர்களது குறுஞ்செய்தி

மனப்பாடமாகச் சில செய்திகளைப் பட்டியல்போட்டு வாசித்து உருவேற்றி வைத்துக் கொண்டு கேட்கிற இடங்களில் அதை அப்படியே ஒப்பித்துக் காட்டி அதையே பொது அறிவு என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது, ராமானுஜன் திரைப்படம். ஒரு மாமேதையைக் குறித்து நான்கு வரிகளுக்கு மிகாமல் தெரிந்து வைத்துக் கொண்டு, அவரது புகைப்படத்தைக் கடந்து வேறொன்றும் பேச முடியாது இருப்பதை உணர்த்திய ஞான ராஜசேகரனுக்கு நன்றி.

download

அறிவுப் பசியோடு அலையும் மாணவர்களை ஒரு சமூகம் எப்படி அலைக்கழித்து, புறக்கணித்து, கொண்டாட்டங்களின்போது மட்டும் தேடித் திண்டாடுகிறது என்பதை மற்றுமொருமுறை எண்ணிப் பார்க்கவைத்து விட்டார் கணித மேதை ராமானுஜன். ஒரு கையடக்க பிரதியாக அவரது வாழ்க்கையை ஒரு மூன்று மணி நேர திரைப்படமாக நமக்கு வழங்கி இருக்கும் இயக்குனர் ஞான ராஜசேகரன் மற்றும் இந்தத் திரைப்படத்தில் அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்து நெகிழ்த்தியிருக்கும் ஒட்டு மொத்த நடிகர்கள், திரைக்குப் பின்னால் உழைத்திருக்கும் அசாத்திய கலைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

இந்து சனாதன ஏழை பிராம்மண குடும்பத்தில் பிறந்த ராமானுஜன் கணித உலகத்தில் மட்டுமே வாழத் தகுதியுள்ளவராகவும், சராசரி மனித வாழ்வுக்குள் பொருந்த இயலாது தவிப்பவராகவும் வாழ்ந்து மறைந்த கதை மட்டுமல்ல ராமானுஜன் வரலாறு. வேறு எத்தனையோ முக்கியமான விவாத உட்பொருள்களும் உள்ளடக்கிய சரிதை அது. காட்சி மொழிக்குள் அதனை தனக்கு சாத்தியமான வகையில் பரந்த பார்வைக்கு எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர்.

தொடக்கக் காட்சியிலேயே பூஜ்யத்திற்கு மதிப்பில்லை என்று எப்படி சொல்லலாம் என்று கணக்கு வாத்தியாரை வகுப்பறையில் மடக்கிக் கேட்கிறான் சிறுவன் ராமானுஜன். அறிவின் துணிவு அங்கே அடையாளப் படுத்தப் படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குலைக்கும் புறச் சூழல் அமைந்துவிட, ஏக்கங்களோடு ஒரு வெளிச்சமற்ற பாதையில் திணறி நடக்கும் ஒரு மேதையை மீதிப் படம் காட்சிப் படுத்துகிறது.

கட்டுக் குடுமி, நெற்றியில் நாமம், மேலை நாட்டிலும் நழுவிவிடாத பூஜை புனஸ்காரம், நாமகிரி தாயார் கனவில் எழுந்தருளி புதிரான கணக்குகளுக்கு விடையளிக்கிறாள் என்ற பரவசம், சாஸ்திர ஜோதிட கணிப்புகளில் ஆழும் மனம்…..என்ற வம்சாவழி நம்பிக்கைகளின் தொகுப்பாகத் தென்படும் ராமானுஜன் தனது கணித மேதைமையின் வெளிப்பாடுகளுக்காக இந்த ஆச்சார அணுகுமுறைகளின் மீது தானே கேள்விகளையும் உள்ளாக எழுப்புவதைப் படம் நுட்பமாக முன்வைக்கிறது.

தன்னைக் கொண்டாடும் தாயின் பாசமே தனது சொந்த வாழ்க்கையின் பன்முக அம்சங்களை அனுபவிக்கத் தடையாகவும் இருக்கிறது என்பதை ராமானுஜன் அறிந்திருப்பது கடைசி காட்சிகளில் உணர்த்தப் படுவது திரைக் கதையின் முக்கியமான இடம். தடைக் கற்களைக் கடக்க அவரது உடல் ஒத்துழைப்பதில்லை. அதற்கு பல காரணங்களில் முக்கியமானது உளவியல் போராட்டம். இளவயதில் திருமணம். (உள்ளபடியே அப்போது அவருடைய மனைவி ஜானகிக்கு வயது பத்து). ஆனால் காதல் மனைவியோடான அந்தரங்கப் பரிமாற்றங்களை அனுமதிக்காத அவரது வாழ்க்கை 32 வயதில் முடிந்துவிடுகிறது. அப்போது அந்த அப்பாவிப் பெண்ணுக்கு வயது 21 !

ராமானுஜனின் அவஸ்தைகளுக்கு இன்னொரு காரணம், போஷாக்கற்ற உணவு, வறுமை, உடற்பயிற்சி தேவையற்றது என்ற தவறான புரிதல். பள்ளிக் கூடத்தில் பி டி மாஸ்டர், ராமானுஜா நீயும் வந்து தேகாப்பியாசம் பண்ணு என்று சொல்கிறபோது, நான் கணக்கு அப்பியாசம் செய்கிறேனே அதுவே போதும் என்று சிலேடையாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறான் சிறுவன் ராமானுஜன். மூளை உழைப்பாளிகளுக்கு உடல் வலு தேவையில்லை என்கிற கோளாறான புரிதல் இன்றும் சமூகத்தில் நிலவுகிறது.

கோயிலில் பாடும் தனது தாய் கோமளத்தம்மாவுடன் தானும் சேர்ந்து பாடும் சிறுவன் ராமானுஜன், பிரசாதம் கொடுக்கும் இடத்தில் குத்து மதிப்பாக விநியோகம் செய்யப்படும் கொழுக்கட்டைகளும், சுண்டலும் காத்திருக்கும் எல்லா பக்தர்களுக்கும் கிடைக்காது என்று கணக்கு போட்டுச் சொல்லி அசத்துவது, கல்லூரி வகுப்பு கணக்குப் புத்தகத்தை ஓர் இரவில் வாங்கி முழுவதும் படித்துத் தேர்ந்திருப்பது, எப்போதும் தன்னை விட மேல் வகுப்புகளில் படிக்கும் யாருக்கும் இலகுவாக கணக்குப் பாடம் கற்பிப்பது…இந்தக் காட்சிகள் இந்தத் தலைமுறை மாணவர்களை நிச்சயம் கொண்டாடிப் பார்க்கவைக்கும். கணிதம் ஒரு சவாலாக முன்வைக்கப்படும் நமது பாட திட்டம் மற்றும் கற்பிக்கும் முறைகளிலிருந்து மாணவர்களுக்குத் தென்றல் வீச கணிதம் கற்கும் ஆர்வத்தைத் தூண்ட இந்தப் படம் முக்கிய பங்களிப்பு செய்யும். நமது ஆசிரியர்கள் அவசியம் பார்ப்பது நல்லது.

ஏதாவது ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கி மற்றதில் தேறாத மாணவரை விட எல்லாவற்றிலும் சராசரி வாங்கித் தேர்ச்சி பெரும் மாணவர்களே எனக்கு தேவை என்று சொல்லும் ராமானுஜன் காலத்துக் கல்லூரி முதல்வர், எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு எடுக்கும் மாணவர்களை உற்பத்தி செய்யும் கல்வித் தலங்கள் இன்று தமிழகத்தில் சக்கை போடு போடுவது குறித்தும் கேள்விகள் எழுப்புகிறார். கல்வி என்றால் என்ன என்பதை இன்னும் இரண்டு தலைமுறைகளைக் கடந்தாவது சமூகம் கற்றுக் கொள்ளுமா தெரியவில்லை. நாகரிக உலகின் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கிய மேதைகளும், கவின் கலைகள் படைத்த படைப்பாளிகளும் தாங்கள் மிகக் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துதான் இவற்றை வழங்கிச் சென்றிருக்கின்றனர் என்பதை இளமைக் காலத்திலேயே குழந்தைகளுக்கு நெஞ்சில் நிற்கும்படி சொல்லித் தந்தால்தானே உழைப்பின் மேன்மை அவர்களுக்குப் பாடம் ஆகும்! ராமானுஜன் படம் இந்த வகையிலும் ஒரு மிகச் செம்மாந்த பங்களிப்பைச் செய்கிறது.

பண்பாட்டு முரண்பாடுகள், உணவு முறையைச் சார்ந்த அவமதிப்பு, இறையுணர்வு குறித்த விவாதங்கள் இவற்றையும் படம் மென்மையாகப் பேசுகிறது. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கணிதத் துறையினர் பெரும்பாலும் நாத்திகர்களாயிருக்க, ராமானுஜனின் ஆளுமையை உலகறியச் செய்வதே தனது வாழ்நாள் கடமையாக எடுத்துச் செயல்படும் ஹார்டியை மாணவர்கள் இதுபற்றிக் கேட்கின்றனர். அவரோ, ராமானுஜனின் மத நம்பிக்கைகளைத் தம்மால் மிக எளிதாகத் தகர்த்துவிட முடியும், ஆனால் அவரது கணக்கு உலகைக் காப்பாற்றுவதே தனக்கு முக்கியம் என்று பதில் அளிக்கிறார். படத்தின் பல முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. ராமானுஜனிடத்தும் இந்த பாதிப்புகள் தோன்றுவதை, சீக்காளியாக சொந்த நாடு திரும்பும் ராமானுஜன் தனக்குப் பணிவிடை செய்யவிடாது மனைவியைத் தடுக்கும் தனது தாயை எதிர்த்துப் பேசும் இடம் வெளிப்படுத்துகிறது.

படத்தில் ரசனைமிக்க காட்சிகள் நிறைய உண்டு. தொடக்கக் காட்சியில் வகுப்பறையிலிருந்து காமிரா நேரே கோயிலுக்குள் நுழைகிறது. பாடலைப் பாடும் சுஹாசினி (கோமளத்தம்மாள்) காட்டும் முகபாவங்கள், மகன் இடையே வந்து கலந்துகொள்ளும்போது அவரும், அவருக்கருகே இருப்போரும் காட்டிக் கொள்ளும் கண் ஜாடை, லண்டனில் தற்கொலை முயற்சியை அடுத்து காவல் நிலையத்தில் சிறை வைக்கப்படும் ராமானுஜனைக் காப்பாற்ற ஹார்டி மேற்கொள்ளும் தடாலடி ஜாலங்கள் அருமை.

ஜெமினி கணேசன் பேரனான அபிநய், ராமானுஜனின் பரிதவிப்பு, மனைவியைப் பிரிந்து படும் பாடு, கணித மேதையாக உருமாற, பட்டாம்பூச்சி உருவாக்கத்தில் படும் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வருவது உள்ளிட்ட காட்சிகளில் தனித்துத் தெரிகிறார். மருமகளை வாட்டி எடுக்கும் மாமியார் பாத்திரம் சுஹாசினி இதுவரை நடிக்காதது. தொடக்கப் பாடல் காட்சியில் அவரது கண்கள் அத்தனை பேசுகின்றன. அடித்து நிமிர்த்தியிருக்கிறார். ராமானுஜனின் இளம் மனைவி ஜானகியாக வரும் பாமா, அந்நாளைய ஆச்சார குடும்பத்தின் மருமகளாக அசாத்திய நடிப்பைக் காட்டியிருக்கிறார். நீங்களும் அசடு, நானும் அசடு அதுதான் நாம ஜோடி சேர்ந்திருக்கிறோம் என்று கணவரிடம் அவர் பேசும் இடம் கவிதை. நிழல்கள் ரவி, ராமானுஜனின் தந்தையாக நினைவில் நிற்கிறார்.

டெல்லி கணேஷ், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரா, சரத் பாபு, கிட்டி உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் மிகச் சிறு அளவிலேயே தோற்றம் என்றெல்லாம் பார்க்காது, தங்களது பாத்திரத்தின் தன்மையை முழுமையாக பிரதிபலித்துள்ளனர். கணிதத்தோடு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் திகழும் ஹார்டி பாத்திரத்தை ஏற்றிருக்கும் கெவின் சிறப்பாக நடித்திருக்கிறார். வெளி நாட்டவர்களை பயிற்சி கொடுத்து அவர்களையும் தமிழில் பேச வைத்திருப்பது அட்டகாசமான முயற்சி.

மன நிலை பிறழ்ந்து வீதியில் அலையும் பி டி மாஸ்டர், பின்னர் ராமானுஜன் வெளிநாட்டிலிருந்து திரும்பும்போது மேலும் மோசமான கதியில் வீதியில் தென்படுகிறார். ராமானுஜனோ, நல்லவேளை நான் அப்படி ஆகிவிடவில்லை என்கிற இடம் அபாரமானது. தனக்கு சென்னை பல்கலை கொடுத்தனுப்பும் பணத்தில் பாதியை ஏழை மாணவர்களுக்கு தந்து உதவுங்கள் என்று அவர் திருப்பித் தந்து விடுவது மகத்தானது.

இன்று ஏடிஎம் பயன்பாட்டுக்கு பாஸ்வர்ட் அமைப்பது ராமானுஜன் கோட்பாடுகளை வைத்துத் தான்! பல அறியல் தொழில்நுட்ப சாதனங்களை நாம் பயன்படுத்த அவரது சூத்திரங்களே இன்றும் உதவியாக இருக்கின்றது என்ற வாசகங்கள் நிரம்பிய அட்டையோடு படம் முடிகிறது. ஆனால் அவரது ஆகச் சிறந்த அறிவைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

ராமானுஜன் மரணத் தறுவாயில் துடிக்கையில், அவரது இறுதி காரியங்களில் கலந்து கொண்டால், அவர் சமுத்திரத்தைக் கடந்து சென்றுவந்ததற்குப் பரிகாரம் செய்யாத பாவம் தங்களையும் பற்றிக் கொள்ளும் என்று சொல்லியவாறு ஆச்சார பிராம்மணர்கள் அவரது வீட்டை வீட்டை விட்டுக் கூண்டோடு காணாமல் போகிற இடமும் கதையில் முக்கியமானது. மறைந்த அவரது உடலுக்கு எரியூட்டுகையில் பாரதிக்கு நேர இருந்ததே (பாரதி மறைவு 1921; ராமானுஜன் – 1920) முன்னதாக அவருக்கும் நேர்வது கவனிக்கத் தக்க இடம். புறக்கணிப்பின் நிழல் இறுதிவரை அவரைத் தொடர்கிறது.

ஆனால் காலம் கடந்தாவது அவரது கணக்குகளுக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோல், ராமானுஜன் வாழ்க்கைக்கும் அங்கீகாரத்தை காலம் வழங்குகிறது. ஞான ராஜசேகரன் அவர்களது அசாத்திய முயற்சி அதைத் திரையில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. ராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு என்பது பலருக்கும் தெரியாதது. படத்திலும் சொல்லப்படுவதில்லை. ஏழ்மையை விளக்காத சூழல், நிகழ்வுகள் வேகமாகத் தாவிச் செல்வது போன்ற சில குறைகள் உண்டுதான். ஆனாலும், ராமானுஜன் வாழ்ந்த அந்தக் காலத்திற்கே பார்வையாளர்களை ஈர்க்கும்வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி, அந்த உழைப்பைப் பாராட்ட வைக்கிறது.

*************

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

  1. Avatar

    அருமையான படத்திற்கு அருமையான விமர்சனம். நல்ல வற்றைத் தேடிப்பிடித்து பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது குடும்பத்தோடு என்னை திரையில் சந்தித்ததாக எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன் வாழ்த்துக்கள்.

  2. Avatar

    இதுவரை படம் பார்க்காதவர்களையும் பார்க்கத் தூண்டும் வகையில் மிகவும் நேர்த்தியான சிறப்பான விமர்சனம். நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க