Tag: இன்னம்பூரான்

  • கனம் கோர்ட்டார் அவர்களே: 22

    இன்னம்பூரான்

    innam

    சட்டம், சட்டம் போடப்பட்ட நிலைக்கண்ணாடி அல்ல. இயற்றப்பட்ட சட்டபுத்தகம் அடித்தளம். உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்வுகளுடன் அதை இணைத்து, சட்டம் வகுக்கப்படுகிறது. காலகட்டத்துக்கேற்ப, அடித்தளமும் அசைக்கப்படலாம். இன்று அசைக்கப்பட்டு, தளர்க்கப்பட்டது.

    என்ன தான் பெண்ணியம் வாதாடினாலும் ஆணாதிக்கத்தின் பிடி தளர்ந்து போவதில்லை. பெண்ணியம் பாய்க்கு அடியில் புகுந்தால், ஆணாதிக்கம் கோலத்துக்கு அடியில், மயில் ராவணன் போல் புகுந்து, தர்பார் நடத்துவது கண்கூடு. கீதா ஹரிஹரன் என்ற பிரபல எழுத்தாளர் 1999ல் தன்னுடைய மைந்தனின் பெயரில் சேமிப்பு ஒன்றை செய்து, தான் கார்டியன் என பதிவு செய்யப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இது பற்றி 1890 ல் இயற்றப்பட்ட சட்டத்தின் 11வது ஷரத்துப்படி காப்பாளர் பொறுப்புக்கு அப்பனுக்கு முதல் உரிமை; ஆத்தாள் அடுத்த படி தான். நூறு வருடங்களுக்கு பின்னர் அதே தடியடி நடத்துவது கனம் கோர்ட்டாருக்கே சரியாக படவில்லை. ‘கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கீதா ஹரிஹரன் தான் உண்மையில் அந்த சிறுவனின் பாதுகாப்பாளர். கோர்ட்டார் அப்பனும் ஆத்தாளும் சரி சமமே’ என்று அன்று சொல்லியிருந்தாலும், இந்தியாவில் நடைமுறையில் அது கண்டு கொள்ளப்படுவதில்லை. அதனால் தான் என் ஆத்திரத்தை வெளிப்படுத்த வட்டாரச்சொற்களை பிரயோகிக்கிறேன். எங்கு போனாலும் தந்தையின் சம்மதம் கேட்கிறார்கள். இது பொருட்டு இரு அனுபவங்கள்:

    1996ம் வருடம் எங்கள் வீட்டில் ஊழியம் செய்யும் பெண்ணின் பையனை, அவளுடைய விருப்பப்படி ஒரு பிரபல பணக்கார பள்ளியில் சேர்த்தேன். நான் பணம் கட்டும் போதும், மற்றபடியும் மிகவும் மரியாதையாக பழகிய பிரின்சிபால், ‘பையனின் தந்தையில் கையொப்பம், அவன் குடி போதையில் இருப்பதால், வாங்க இயலாது. அன்னையின் கைநாட்டுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’ என்றவுடன் கொதித்தெழுந்தார். குடிகாரன் மகனுக்கு தான் இடம் தரமுடியாது என்றார். என் தரப்பு நியாயங்களை குப்பையில் கொட்டினார். நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொன்னபின் தான் அடங்கினார். ஆனாலும் மற்ற கழுதைகள் (சக மாணவர்கள்) செய்த களேபரம் பொறுக்கமாட்டாமல், அவனை நானே வெளி கொணர்ந்து, அரசு பள்ளியில் சேர்த்தேன். இன்று பெரிய வேலையில் இருக்கிறான்.

    இங்கிலாந்தில் தனித்து வாழும் அன்னைகளுக்கு அரசு உதவி செய்கிறது. ஒரு 18 வயது பெண், தாங்கொண்ணா கடன் பொருட்டு, ஆலோசனைக்கு வந்திருந்தாள், மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு. நிறை பிள்ளைத்தாய்ச்சி. 1890ம் ஆண்டு ஆணாதிக்கச்சட்டம் அருளிய வெள்ளைக்காரன் நாட்டில் அந்த பெண்ணுக்கு அரசு எல்லாம் செய்து கொடுக்கிறது. கருவின் தந்தை பற்றி கேட்டேன். ஏனென்றால், அவனிடமிருந்து நாங்களே வசூல் செய்து, செலவுக்கு பணம் கொடுக்கலாம். தெரியாது என்ற சொன்ன அந்த பெண், அரசு எனக்கு தனித்து வாழ இடம் கொடுக்கும் உரிமையை பெறவே, கர்ப்பம் தரித்தேன் என்று ஒரு போடு போட்டாள்.
    இது நிற்க.

    சமீபத்தில், நன்கு கல்வி கற்று நல்ல வேலையில் இருக்கும் ஒரு மாது தன்னுடைய ஐந்து வயது குழந்தை பெயரில் சேமிப்பு வைத்து, தன்னை கார்டியனாக நியமிக்க வேண்டி கீழ் கோர்ட்டில் விண்ணப்பம் செய்த போது, அப்பனை பற்றி 1890 சட்டப்படி இணைக்க வேண்டும் என்றார்கள். அப்பனின் பணிகளை பொதுப்படையாக சிலாகித்து, உயர் நீதி மன்றமும் ஒத்துப்பாடியது. இன்றைய ஹிந்து இதழ் தகவல் படி, உச்ச நீதிமன்றம், அவளுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஒரு புரட்சியையே உருவாக்கி விட்டது.

    அதன் பலன்கள் இவ்வாறு அமையலாம்.

    தனித்து வாழும் தாய்மார்களுக்கு சட்டபூர்வமான அங்கீஹாரம்;
    மற்ற நாடுகளை போல் தாயும், தந்தையும் சரி சமானம்;
    விவாகத்துக்கு அப்பாற்பட்டு பிறக்கும் குழவிகளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு;
    விலை மாதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். எப்படியோ பிறந்துவிடும் குழந்தைகள் தள்ளுபடி ஆகமாட்டார்கள்;
    தனித்து வாழ விரும்பும் பெண்கள் துணிவுடன் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாம்.
    தனித்து வாழும் தாய்மார்களுக்கு அபவாதம் குறையும்.

    பாரதமாதாவே! உன்னுடைய பெண் சிசுக்களுக்கும் நீ தானே மாதா. அவர்களை பேணி வளர்ப்பாயாக.
    -#-
    உசாத்துணை: இன்றைய ஹிந்து அப்டேட்.
    சித்திரத்துக்கு நன்றி:https://milehighcritics.files.wordpress.com/2012/05/love-child.png?w=300&h=199

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 2

    இன்னம்பூரான்

    innam

    திடீரென்று காரைக்குடி போக வேண்டியிருந்ததால், புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு ஓடினேன். அடுத்த பஸ் கிளம்ப ஒரு மணி நேரம் ஆகும் என்று சொன்னார்கள். அந்தக்காலத்தில் டாக்சி, ஆட்டோ அதெல்லாம் கிடையாது. அடுத்த ரயில் ராத்திரி பெருத்த சங்கூதலுடன் நுழையும் போட் மெயில் தான். நிற்கக்கூட இடம் கிடைக்காது. அவசரம் தான். கு.ரங்காச்சாரியார் போய்ட்டார். அவருடைய அருமை மைந்தன் சாரங்கபாணி சிவகங்கையிலிருந்து வரணும். அதனாலே பாடியை வச்சிருப்பா என்று ஒரு எண்ணம். ஆனால் தந்தியில் வந்த சமாச்சாரம் சுருக்கமாக இருந்ததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லாத்துக்கும் மேலே, தான்தோன்றி சுயம்பு ஆலோசகர்கள் பங்கஜம் மாமியை துளைத்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். என் பேச்சு கொஞ்சம் எடுபடும். அதான் அவசரப்படறேன். திடீரென்று ஆபத்பாந்தவனாக வக்கீல் ஜம்புநாதன் மாமா காரை நிறுத்தி விசாரித்தார்; ஒரு கேசுக்காக தேவகோட்டைக்கு போய் கொண்டிருப்பதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் சொன்னவர், திரும்பிக்கொண்டு வருவது உத்தரவாதமில்லை என்ற நிபந்தனையும் விதித்தார். அவர் அப்படித்தான் ஜபர்தஸ்து ஆசாமி.

    வழி நெடுக ஓயாமல் பேசினார். கு.ரங்காச்சிரியார் மாமாவை அவருக்குத் தெரியாது என்றாலும் அவருடைய குணாதிசயங்களை பற்றி, மெய்யும், பொய்யுமாக, விமரிசித்தார். திருமயத்தில் காஃபி குடித்தோம். பார்சல் நிறைய வாங்கிக்கொண்டார். ஆபத்து சம்பத்துக்குப் பரவாயில்லை, காஃபி குடிக்கலாம் என்று சாத்திரம் படைத்தார், பில்லை என் பக்கம் தள்ளி விட்டார். இதெல்லாம் விடுங்கோ, சார். அந்த வக்கீல் மாமா ஒரு மாதிரி. கறக்கறதெல்லாம் கறந்துடுவார், கட்சிக்காரன் கதற, கதற. ‘எச்சில் கையால் ஈ விரட்டமாட்டார்.’ என்று ஊர்ஜனங்கள், அவர் இல்லாத போது, அக்கம்பக்கம் பார்த்து, சொல்லிக்கொள்வார்கள்.

    ஒரு நாள் இப்படித்தான் கையேந்தி பவன் சங்கர ஐயர் ஜம்புநாதன் மாமாவிடம் இசைகேடாக மாட்டிக்கொண்டார். பேரென்னமோ ‘மங்களவிலாஸ் பிராமணாள் ஹோட்டல்’. (தப்பா நினைக்காதீர்கள். அந்த காலத்தில் இப்படித்தான் போடுவார்கள்.) அறுசுவை நாயகன் பாலு நாயர் கூட தன் ஹோட்டலுக்கு அப்படித்தான் பெயர் வைத்தார். கல்லாவில் அவர் தானே உட்கார்ந்திருப்பார். எல்லாம் ஒரு ஷோ தான், ஜம்புநாதன் மாமா சொல்றமாதிரி.

    சங்கர ஐயருக்கு ஒரு வில்லங்கம். ஹாஜி மொய்தீன் சாயபு கடையில் தான் மளிகை வாங்குவார். நாலு நாள் முன்னால் வாங்கிய துவரம்பருப்பில் கல்லு ஜாஸ்தி இருந்தது. சாயபு கிட்ட இதமா சொல்லியிருந்தால், எல்லாமே மிதமாக முடிஞ்சிருக்கும். போறாத வேளை. சாயங்காலம் அன்யோன்யங்களை ஜமா சேர்த்து அதையும் இதையும் அருந்துவதற்கு ஸ்பென்சர் சோடா வாங்க வந்த ஜரிகைத்தலைப்பா இன்ஸ்பெக்டர் வரதாச்சாரியிடம் துவரம்பருப்பை காண்பித்து, அங்கலாய்த்துக்கொண்டார், சங்கர ஐயர். வரதாச்சாரிக்கு ஏற்கனவே ஹாஜி மீது காட்டம். எஃப்.ஐ.ஆர் போடறேன் பேர்வழி என்று வெத்துப்பேப்பர்லெ சங்கர ஐயர் கையொப்பம் வாங்கிக்கொண்டு போய் விட்டார்.

    அலறினார், சங்கர ஐயர். அவர் கொடுத்தது என்ற சொல்லப்படும் பிராது ஹாஜியை உசுப்பி விட்டதாம். இருக்காதா பின்ன? நூடில்ஸ் தோத்தது போங்கோ. அரிசியில் கிராம ஃபோன் ஊசி, மண்டை வெல்லத்தில் கருப்பட்டி, கொட்டை எடுத்த புளியில் வீசைக்கணக்கில் கொட்டைகள், நல்லெண்ணெயில் நாற்றம், இத்யாதி கம்ப்ளைண்டை கண்ட ஹாஜி, ஆவேசமாக மங்களவிலாசில் புகுந்து, காச்சு மூச்சு என்று கத்த, சங்கர ஐயருக்கு எக்கச்சக்க நடுக்கம். அவருக்குத்தான் தெரியுமே, இதெல்லாம் பொய் என்று. அவசரமாக எடுபிடி கோபுவை போலீஸ் தாணாவுக்கு அனுப்பினால், அவன் ஓடோடி வந்து, வரதாச்சாரி திருச்சி போய்விட்டார் என்றான்.

    சமய சஞ்சீவியாக அங்கு திடீர் பிரசன்னம் ஆன வக்கீல் மாமா, சாவகாசமாக ஹாஜியை கூப்பிட்டு, ‘நான் தான் ஹோட்டலுக்கு வக்கீல். உம்மீது மானநஷ்ட வழக்குப் போடுவேன். உமது வக்கீல் ஜலாலுதீன் அப்பாவி. நான் உம்மை தீர்த்துக்கட்டுவேன், ஓய்.’ என்றார்.

    நீங்கள் இதையும் தெரிஞ்சுக்கணும். ஆதனக்கோட்டை முந்திருப்பருப்பு ரொம்ப ஃபேமஸ். ஏகபோகம், முத்தையா செட்டியாருக்கு. ஏதோ ஒரு சிக்கல். எனக்கு நினைவில் இல்லை. அவர் நம்ம வக்கீல் கிட்ட மாட்டிக்கொண்டார். அவர் செலவில் மசால் தோசை, ஃப்ரூட் சாலெட் சாப்பிட ஆசை கொண்டு, கையேந்தி பவனில் அவர் நுழைந்த மாத்திரம், சினிமா மாதிரி இது எல்லாம் நடந்து விட்டது. செட்டியாருக்கே என்னாடாது இது, பிள்ளையார் பிடிக்க அது சிவனாரின் நாடி பிடிக்குதே என்று தனக்குள் சூள் கொட்டிக்கொண்டார்.

    புதுக்கோட்டை கீழ மூணாம் வீதி புகழ் வக்கீல் ஜம்புநாதன் மாமா ஒரு அலாதி பிறவி. தூண்டில் போட்டு கட்சிக்காரனை இழுப்பார். அவருடைய குமாஸ்தா ராமராவ் நாமமும், விபூதியும், கரும்சாந்துப்பொட்டும், இடம், பொருள், ஏவல் கருதி மாற்றி மாற்றி அணியும் ஜகஜ்ஜால கில்லாடி என்றாலும், வக்கீல் மாமா வக்கீல் மாமா தான்.

    இரண்டு பக்கத்து கட்சிக்காரர்களிடமும் இணக்கமாக பேசுவார். எல்லா வக்கீல்களோடும் விரோதம் பாராட்டுவார். அவன் மண்ணாங்கட்டி, இவன் பூஜ்யம், அது, இது என்று ஏசுவார். கூச்சமே இல்லாமல், பொய்யும் புனைசுருட்டுமாக, கட்சிக்காரர்களிடம் தற்பெருமை சாற்றுவார். ஏதாவது கேட்டால், பிரிவி கெளன்சிலில் தான் வாதாடும்போது லார்ட் தாமஸ் ஹோர் பாராட்டினார் என்பார். கதை அளப்பதில் மன்னர். அவர் ஹாஜியின் புறப்பாட்டுக்கு பிறகு சங்கர ஐயரிடம் சொன்னதே ஒரு சான்று.

    ஐயர்வாள்! பஜ்ஜி போட்டா போறாது. சொஜ்ஜி, கொஞ்சமாவது இனாம தொட்டுக்குக் கொடுக்கவேண்டும்.
    யாராவது துவரம்பருப்பில் கல்லு என்றால் கோர்ட்டார் கேட்பார்களா? வழித்துக்கொண்டு சிரிப்பார்கள். நாம தான் தூபம் போடணும்.
    அதனால் தான் அந்த கடங்காரன் வரதாச்சாரி வெத்துக்கடுதாசிலெ உம்ம கை நாட்டு வாங்கினான்.

    நல்ல வேளை! நான் வந்து சேர்ந்தேன். போலீஸ் கேசை ஜலாலுதீனே தோக்க அடிச்சுடுவான். நீர் விஷ்கிக்கப்பம் கட்டாட்டா, ஜரிகை உன்னை முழுங்கி ஏப்பம் விட்டுடும்!

    போடும் மான நஷ்ட வழக்கு, லக்ஷ ரூபாய்க்கு. எனக்கு ஃபீஸ் வேண்டாம். நம்ம ஃப்ரெண்டாச்சே! ஃப்ரீ. வந்ததிலே பாதி கொடுத்தா போதும். உமக்கு என்ன கசக்குது,ஓய்?

    வக்கீல் ஜம்புநாத ஐயர் ஒரு பிருகிருதி: இல்லாட்டா, தன்னுடைய அம்மா கிட்டவே எக்கச்சக்க ஃபீஸ் வாங்கிண்டு, ராமராவை விட்டு பொய் சாட்சிகளை தயார் செய்வாரா? எனக்கு அவருடைய சித்தி புத்திகள், வித்தைகள் எல்லாம் தெரியும். எதிர் வாடையில் நாலாவது வீடு தானே.
    -#-
    சித்திரத்திற்கு நன்றி: http://ecx.images-amazon.com/images/I/51px9X4yqeL._SY344_BO1,204,203,200_.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 5

    இன்னம்பூரான்.

     

    வாலு போச்சு! கத்தி வந்தது !

     

    neyyiபாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.

    அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    conviction-news3இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.

    என்னத்தைச் சொல்ல !
    வாலு போச்சு!
    கத்தி வந்தது !

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு
    http://foodsafetynews.files.wordpress.com/2012/06/conviction-news3.jpg

    நெய் !!

    Share
  • தொபக்கட்டீர் ! 2

    – இன்னம்பூரான். 
    தொபக்கட்டீர்‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள், கூண்டோடு கூண்டாக, திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குகூட தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். தருமமிகு சென்னை வீட்டு சொந்தக்காரர்களும், அரசு ஊழியர்களும், காலங்காலமாக, அரசை வஞ்சித்து,கையூட்டு மரபை பேணி வளர்க்கவே, வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது. அப்பன் சேத்த சொத்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காமல் போகலாம். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த தருமமிகு சென்னைவாழ் இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.

    சீனாவின் மாபெரும் எயில் (சுவர்) உலகப் பிரசித்தி. அதற்குப் போட்டியாக தருமமிகு சென்னையில், நவம்பர் 8, 2014 அன்று ஒரு மாபெரும் வேலியின் திருவுருவம் அவதாரமாகி இருக்கிறது. அதைச் சற்றே அவதானிப்போம். சவுகார்பேட்டையின் நாரயணமுதலி தெருவில், ஜூன் 23, 2014 அன்று ஒரு கட்டிடம் தீயில் உருக, ஒரு உயிர் கருகியது. நமது மதிப்புக்குரிய, உள்ளூர் சுப்ரமண்யம் சுவாமியாகிய ‘ட்ராஃபிக் ராமசாமி அவர்கள், தகுந்த சான்றுகளுடன், சட்டவிரோதமான கட்டிட ஊழல்களை பற்றி ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். திடுக்கிட்டுப் போன உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7க்குள் உண்மை நிலவரம் தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு சென்னை கார்ப்பரேஷனுக்கும், CMDAக்கும் ஆணையிட்டது. குட்டும் வெளிப்பட்டது. கார்ப்பரேஷனின் ஆய்வுப்படி, ஜியார்ஜ் டவுனில் அதற்குட்படுத்தப்பட்ட 11,304 கட்டிடங்களில் 72 தான் முறைப்படி கட்டப்பட்டனவாம். அதாவது ஒன்பது மீட்டருக்கு குறைவான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை 0.00063% ! ஒன்பது மீட்டருக்கு அதிகமான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை: 66/3146[0.02%]! இது CMDA தகவல். இது ஒரு புறமிருக்க, புரசைவாக்கம் மில்லர் தெருவில், அக்டோபர் 27.2014 அன்று ஒரு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது. மவுளிப்பாக்கத்து கவுளியின் பிலாக்கண ஓலம் முடிந்தபாடில்லை.

    சட்டமீறலை ஒத்துக்கொண்ட அரசு வழக்கறிஞர் குறித்த கெடுவுக்குள் இடிப்பதும் இன்னல், வீட்டு சொந்தக்காரர்களை தண்டிப்பதும் கடினம் என்றதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒரு திட்டம் போட்டுக்கொண்டு வரச்சொல்லி, வழக்கை டிசம்பர் 18க்கு ஒத்தி வைத்தது. டவுன் ப்ளானிங் சட்டப்படி, இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஜார்ஜ் டவுனில் டாம் டாம் அடிச்சு, டுமீல் வெடி வச்சு இடிச்சாக்கூட மனை மீதி. விலை கூடிப்போகும். லக்ஷம் மாடி வீடு கட்டும் கோடீஸ்வர்கள் வருவார்கள். நூறு வருடத்துக்கு அப்றம், அதையும் இடிச்சு கோடி மாடி வீடு கட்டினாலும் கட்டுவார்கள். மனித ஜன்மம் அப்டி. ரொம்ப விரட்டினா, 1078ம் மாடியில் திடீர் பிள்ளையார் கோயில் கட்டி விடுவார்கள்.

    சில வினாக்கள் எழுகின்றன:
    அரசு அதிகாரிகள்/அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்கள், பொது ஜனம் இழைத்த இந்த ஊழலுக்கு யாரை குற்றம் சாற்றுவார்கள்? தன் தலையிலேயே சகதி வாரி போட்டுப்பார்களா?
    கூண்டோடு கைலாசம் என்று ஒரு சொலவடை உண்டு. இங்கே கூண்டோடு கையூட்டா? உடலையே ஊட்டு வைப்பார்களோ?
    எப்படியும் கார்ப்பரேஷன் ஊழியர்களும் CMDA ஊழியர்களும், பெரும்பான்மை மக்களும் செய்த இந்த கூட்டுக்களவாணித்தனத்துக்கு பரிகாரம் என்ன?
    லஞ்சம் ஒழிக்க வந்த முதல் சட்டத்திலேயே, சந்தானம் கமிட்டி பரிந்துரை படி, லஞ்சம் கொடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும். சொத்து குவித்தவர்கள் மீது வழக்குத் தொடர்வது போல், லஞ்சம் கொடுத்ததற்கு ஆவணமில்லை என்றாலும், உண்மை நிலையை ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டுமோ?
    ‘டிசம்பர் 18 வரை காத்திருப்போமா, வவுத்துலெ நெருப்பைக்கட்டிக்கொண்டு? கைது செய்! கைது செய்!’ என்று குரல் கொடுத்து, குரல்வவளையை நெறிக்கும் மகாஜனத்தை என்ன செய்யலாம்?!

    ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
    எந்த புற்றில் எந்த பாம்போ?!
    யாரு கண்டா?

    -#-
    சித்திரத்துக்கு நன்றி: http://cdn.toonvectors.com/images/35/69723/toonvectors-69723-940.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • தொபக்கட்டீர் ! 1

    — இன்னம்பூரான். 

    stickman-falling-md‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள் திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குக்கூடத் தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.

    இனி, நவம்பர் 7, 2014 தகவலையும் அதன் பின்னணியையும் பார்ப்போம். ஆவணங்களும், சான்றுகளும் இல்லாத சேதி ஒன்றும் எழுதப்படமாட்டாது. நம் நாட்டின் முதல் பிரதமரும், தேசாபிமானியுமான பண்டித ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேத்தி பிரியாங்காவின் கணவர் ராபர்ட் வடேரா தன் சொத்துப்பத்துக்களை காபந்து பண்ணுவதாக செய்தி. எப்படி? அவர் தலைமையில் இயங்கும் 1. Lifeline Agrotech, 2. Greenwave Agro, 3.Rightline Agriculture, 4.Future Infra Agro, 5. Best Seasons Agro and 6.Primetime Agro என்ற கம்பெனிகளில் நான்கை கலைத்து விட்டார்; இரண்டை கலைத்துக் கொண்டிருக்கிறார். இது கம்பெனி இலாக்காவினால் நேற்று அறிவிக்கப்பட்ட செய்தி. இத்தனைக்கும் இந்த பட்டியலில் இல்லாத ஸ்கைலைட் என்ற கம்பெனி போன வருடத்துக்கு முந்திய வருடம் ஈட்டிய லாபம் ரூபாய் 33 கோடி. முப்பத்துமூன்று கோடி தேவர்கள் கூட இப்படி செல்வம் ஈட்ட முடியாது. ஏன் கலைத்தார்? யார் யாராருக்கு நஷ்டம்? இந்த கூடாநட்பின் மற்ற பிரகிருதிகள் யார் யார்? அவர்கள் வாளாவிருந்தனரா? போன வருடம் எப்படி இந்த லாபத்திற்கு பதில் ரூபாய். 2.3. கோடி நஷ்டம்? இவருடைய தொழிலே வேளாண்மையை ஒழித்துக்கட்டி, வீட்டுமனை போட்டு,எக்கச்சக்கமான லாபம் அடைவதே. எதற்காக இந்த வேளாண்மை அடைமொழி? இதற்கெல்லாம் விடை காண இயலவில்லை. அவரை கேட்க இயலாது. தக்கதொரு காரணமில்லாமல் வீ.வீ.ஐ.பி. யாக திகழ்ந்த இந்த மனிதர், குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என்று வினவிய ஊடகத்தானை இம்மாதம் முதல் தேதியன்று, ஒலிப்பெருக்கியை பிடுங்கி, கன்னா பின்னா என்று வைது ஒரு வழி செய்துவிட்டார். அதன் எதிரொலியாகவா அவருடைய மாமியார் ஸோனியா காந்தி மாப்பிள்ளையின் வீட்டுக்கு சென்றார்? யாமறியோம். ஆனால், கம்பெனிகள் கலைகின்றன!

    சரி, சரி, இதற்கெல்லாம் அடிப்பாரமான, ஆடிட்டர் ஜெனெரல் அலுவலகம் சொல்வது என்ன? ஊடகச்செய்தி படி முதல் நிலை ஆய்வு ஆவணம் (முதல் நிலை ஆவணங்கள் திருத்தப்படலாம்; அவை ஊடகத்திடையே உலவுவதே வியப்புக்குறிய சமாச்சாரம்.) கூறுவதாக சொல்லப்படுவது:
    ‘வெறுங்கையை வைத்து முழம் போடுவது போல்’ திரு. வடேரா ஒரு லக்ஷம் ரூபாய் முதல் போட்டு, அரசியல் ஆதரவின் பயனாக, தம்மாதூண்டு பணம் போட்டு (7.5 கோடி ரூபாய்) வாங்கிய நிலத்தை டி.எல்.எஃப் கம்பெனிக்கு ரூ. 58 கோடிக்கு விற்று ரூ.43.66 கோடி லாபம் ஈட்டினார். ஹரியானா அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கைப் படி கட்ட வேண்டிய ரூ.41.5 கோடியை கபளீகரம் செய்து விட்டார். இதற்கு ஹரியானா காங்கிரஸ் அரசு உறுதுணை. திரு. வடேரா முதலில் போட்ட முதல் ஆகிய ரூ.7.5. கோடி கூட அவருடைய பணமில்லை என்கிறார், அந்த அரசினால் துன்புறுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கேம்கா.

    ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
    எந்த புற்றில் எந்த பாம்போ?!
    யாரு கண்டா?

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.clker.com/cliparts/0/4/T/8/n/6/stickman-falling-md.png
    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 3, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ‘திரு. இன்னம்பூரான்’ அவர்கள்

    innamburan

     

    சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, கடந்த மாதம் அக்டோபர் 2014 இல், சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கிய, ‘திரு. இன்னம்பூரான்‘ என்று அன்புடன் அழைக்கப்பெறும் மூத்த இளைஞரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் எழுதி வருபவர். இவர் வல்லமை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. வல்லமை இதழின் நலம் விரும்பியாக, வல்லமை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராகப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். வல்லமையாளர் விருது தேர்வுகள் செய்து வந்த திரு. திவாகர் அப்பணியில் இருந்து விடுப்பு பெற்ற காலங்களில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்று விருது வழங்குதலை தொய்வின்றி நடத்திச் சென்று, வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சற்றொப்ப 150 பதிவுகளை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ அளித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும்.

    பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கபூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    வல்லமையில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் திரு. இன்னம்பூரான்.

    innamburan3

    தமிழின் மீது தணியாத  ஆர்வம் கொண்டவர். இவரது தமிழார்வத்தின் காரணமாகதமிழிற்கான  மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுற சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். வல்லமையில் மாணவர் தளம்: தமிழார்வம் என்றும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

    innamburan2ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் எனப் மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராக பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்கு பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு.

    எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம்காரணமாக  திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலை பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா ” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்களை வல்லமையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்துப் பராட்டுவதன் மூலம் வல்லமை விருதும், வல்லமை இதழும் பெருமை அடைகிறது.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 4

    இன்னம்பூரான்.

     

     

    dog_tribute_frame

    டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.

    ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:

    • உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
    • அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
    • நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
    • மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
    • அப்படியானால் என்ன முடிவு?
    • இல்லையென்றால், ஏன்?
    • நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
    • ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
    • இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?

    என்னத்தைச் சொல்ல?

     

    -#-

    இன்னம்பூரான்
    10 09  2014

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.mtn-edge.com/images/dog_tribute_frame.gif

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 3

    இன்னம்பூரான்.

     

    பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம்.

    சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது.

    இன்னம்பூரான்செய்தித்துகள் கூட்டம்:
    ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்… சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது…கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது… தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது, மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன… பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

    எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.

    இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்?

    இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?

    இன்னம்பூரான்
    06 09  2014

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 2

    இன்னம்பூரான்

    images (2)
    இன்றைய செய்தி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறி 108 கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆடிட்டர் ஜெனரல் குறை கண்ட அறிக்கை ஆகஸ்ட் 12, 2014 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை பற்றி. ‘ஸ்டடி செண்டர்’ என்ற அமைப்புகளை பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை என்று அங்கு தகவல். மேதகு துணைவேந்தர் திரு.ஜான் பிச்சை அவர்களோ எழுத்து மூலம் அறிக்கை வரட்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார் என்றும் இதழ்களில் செய்தி. இது விந்தையிலும் விந்தை அல்லவோ! 150 வருடங்களுக்கு மேலாக ஆடிட் நடைமுறை ஒரே மாதிரி தான். முதலில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வினா எழுப்பி விடை நாடுவார்கள். அவற்றை எல்லாம் சீர்தூக்கி அலசியபிறகு ஆடிட் அறிக்கையின் தீர்வுகளை துணைவேந்தரிடம் சமர்ப்பிவித்து, பேச்சு நடத்தியபின் தான், அது எடிட் செய்யப்படும். பதில்களும், விளக்கங்களும் அதில் அடக்கம். ஏற்புடையவைகளை ஒத்துக்கொள்வார்கள். சம்மதமில்லையெனில் காரணம் கூறுவார்கள். இது இப்படியிருக்க, அறிக்கை தாக்கல் செய்தபின் மேதகு துணைவேந்தர் எதை எதிர்பார்க்கிறார்? நடந்த விதிமீறல்களை அவர் அறியாதது உண்டோ?

    இதில் என்ன விந்தை என்றா கேட்கிறீர்கள்? ஒரு உதாரணம். மன்னன் அமைச்சரிடம் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று வினவ அமைச்சரும் ‘ஆமாஞ்சாமி’ என்று சத்தியபிரமாணம் செய்தாராம். மன்னனுக்குப் பாவம் அந்தப்புரத்திலிருந்து வானம் தென்படவில்லை போல் இருக்கிறது, துணை வேந்தர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்டு கொள்ளாமல், வரப்போகாத எழுத்து ஆவணம் கேட்பது. ஆகமொத்தம் ;‘என்னத்தை சொல்ல?’

    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcT6T2IeJUQdoeUvaaqChH1jqEoNZgJ8yOHtHOJWxnj6eLUfeqSI

    Share
  • என்னத்தைச் சொல்ல! – 1

    இன்னம்பூரான்

     innam

    ‘The Devil quoting the Bible’ என்ற ஆங்கில சொலவடை இப்போது நினைவில் வருகிறது. என்னத்தைச் சொல்ல! பங்கு சந்தையில் புகுந்து கன்னா பின்னா அழுகுணி ஆட்டம் ஆடி ரூ.5600 கோடியை ஸ்வாஹா செய்த வினை NSEL & MCX-SX என்ற அபூர்வ சகோதர கில்லாடிகளை சார்ந்தது. அவற்றின் பிதாமஹராகிய ஜிக்னேஷ் ஷா சிறையில் அடைக்கப்பட்டார். நடந்ததை மறந்து எங்களுக்கு புதிய அவதாரத்துக்கு நாமகரணம் செய்ய வேண்டும் என்று அனுமதி வேறு கேட்டிருக்கிறது, MCX-SX. ‘அதெல்லாம் சும்மா உளவாங்காட்டிக்கு. ஆனாலும், அவர்களுக்கு தனியார் துறை ஆடிட்டர் கொடுத்த சான்றிதழ் மீது ஆனானப்பட்ட ஆடிட்டர் ஜெனெரல் கமெண்ட் அடிக்கவில்லை; எனவே நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது உறுதியாச்சு என்று தம்பட்டம் அடித்து ஒரு செய்தி! அரசு முதலீடு பொருட்டு, ஆடிட்டர் ஜெனெரல் செய்யும் இந்த அடுத்தக்கட்ட ஆடிட், அந்த தனியார் துறை ஆடிட்டர், சட்டரீதியான ஆடிட் செய்துள்ளனர் என்று தான் எதிர்வினை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதைப் போய் எங்கள் பரிசுத்தத்துக்கு அதுவே சான்று என்பது, ‘The Devil quoting the Bible’. அதாவது, ‘வசிஷ்டர் வாயாலெ பிரம்மரிஷி’ என்பதாகும். இதெல்லாம் ‘இடம்’ தகர்த்து, ‘பொருள்’ பேதம் செய்து, ‘ஏவலை’ திசை திருப்பும் சால்ஜாப்பே.

    ‘வல்லமையில்’ தணிக்கைத்துறை பற்றி எழுதிய கட்டுரைகளை, கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைத்து, அரசியல் விழிப்புணர்ச்சி பொருட்டு ஒரு தொடராக எழுதலாமா/வேண்டாமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இல்லை, இம்மாதிரியான ‘நறுக்’ போதுமா?

    Share
  • “நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா? … 2

    –இன்னம்பூரான்.

     

    300px-Social_Psychology_Definition_3

    இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும். பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை ‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

    அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம் கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார்.

    பெரியவிஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒருப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடியவண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான் ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன். உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின் தலையாய கடமையாகி விடுகிறது.

    அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர் நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய் படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரைகண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை கூறுவதுஎல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோமுறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.

    அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும், பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும் அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு தான் இது என்பதில் ஐயமில்லை.

    மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி, நீங்களே சொல்லுங்களேன்!

    இன்னம்பூரான்
    04 08 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg

    Share
  • சொட்டு மருந்து … 2

    –இன்னம்பூரான்.

    விநாசகாலே விபரீத புத்தி

     

    110401_193350கலயம் நிரம்பி வழிகிறது. அமுத கலயம். அக்ஷயபாத்திரம். வாழ்வாதாரம் அதுவே. சொட்டு மருந்து போல் பருகவேண்டும். எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமல்லவா! ஒரு அதமன் சொட்டு  ஆலகால விஷம் கலக்கிறார். அனைவரும் பரலோக யாத்திரை. தேர்தலில் தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஒரு சுயபரிசோதனை கூட்டம் நடத்துகிறது. அதில் தன்னுடைய அருள்வாக்கு அளித்த கட்சியின் காரியதரிசியான திக்விஜய சிங்  ஆடிட்டர் ஜெனெரல் மீது, “ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்” என்று சொன்னது போல ஒரு போலி குற்றச்சாட்டை சாற்றினார். ‘பா.ஜ.க. தான் ஆடிட்டர் ஜெனெரலின் எஜமானன். அடிமை CAGயை அந்த கட்சி ஆட்டுவிக்கிறது. 2ஜி வழக்கில் இது கண்கூடு’ என்பது தான் அந்த அருள்வாக்கு! எங்கே சொன்னார்? போயும் போயும் கர்நாடகாவில். அங்கு முன் ஆட்சி நடத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டிய ஆடிட் ரிப்போர்ட்களையும், 150 வருடங்களாக, அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்கிய தணிக்கைத்துறை மீது, ஆதாரமே இல்லாமல் அவர் அள்ளி வீசிய சேறு, காங்கிரஸ் கட்சி முகத்தில். உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் கூறியதை துச்சம் என்று கடாசிவிட்டார்.

    சமயத்தில், அவர் உண்மை விளம்பி: ராகுல் காந்தி ஆளும் திறனற்றவர் என்று சொன்ன மஹானுபாவன், அவர். தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஜட்டிபனியனையும் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறார், இந்த பெரிய மனிதர். அவர் இயக்கிய பெண்பாவம் பற்றி நான் பேசபோவதில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கிறார், திரு மல்லிகார்ஜுன கார்கே. அவரை எதிர்க்கட்சி தலைவராக, அரசியல் சாஸனத்தை மீறி, அமர்த்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஹீனக்குரலில் கொக்கரிக்கறது. திரு. திக்குவிஜய் சிங்கை பொது கணக்கு மன்றத்தில் தலைவராக போட, இது ஒரு வழி. அப்போது, அவர் கட்சிபற்று அற்ற ஆடிட் ரிப்போர்ட்டுகளை எப்படி கையாளுவார்? சாக்கோ என்ற அவருடைய சகாவே தேவலை என்று ஆகிவிடும். விநாசகாலே விபரீத புத்தி!

    2. துர்ச்சம்பவம்.

    சென்னை மெளலிவாக்கத்தில் ஜூன் 28 அன்று கனத்த மழை பெய்தது. ஒரு 11 மாடி கட்டிடம் வீழ்ந்தது. இன்று காலை வரை 13 சடலங்கள் கிட்டின. அருகிலிருந்த வீடுகள் சுக்குநூறாயின. பாவம் கணேசன் என்ற அண்டை வீட்டுக்காரர் பலியானார். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையே. எல்லாரும் ஏழைகள். ஒரு தொல்லைக்காட்சியில், இடி விழுந்ததே அதற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தது, கல்யாணக்கூடத்தில் சீப்பை ஒளித்து வைப்பது போன்ற, எதையோ மறைக்கும் செய்தியாகத்தான் தோன்றியது. பிறகு பல தரப்புகளிலிருந்து வந்த செய்திகளை அலசிப்பார்த்தால், பல ஏமாற்று சித்து வேலைகள் தென்படுகின்றன. சில துண்டுச்செய்திகள்:

    ➢ கனத்த மழையால் சில இயந்திரங்களை இயக்க முடியவில்லை. ராப்பகலாக் மீட்பு பணி நடக்கிறது. தொடங்கியதும், அதீத துரித கதி.

    ➢ அடித்தளம் முதல் கட்டுமானத்தில் அசட்டை தென்படுகிறது. ஒருவருக்கொருவர் இணைந்து செய்யாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதாகத் தோற்றம்.

    ➢ முதல் நம்பர் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். அவருக்குக் கோடிக்கணக்காக செல்வம் வந்தது எப்படி என்ற கேள்வி ஒரு புதிர். அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் வாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். பினாமிப்பணமா????????

    ➢ இடி மின்னல் ஒன்றுமில்லை. அத்து மீறி கட்டியது தான் குற்றம் என்றாராம் ஒரு ஊழியர். முதல்வரும் அத்தகைய பொருள்பட கூறியதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

    ➢ “எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம்.”மீட்பு பணி ஊழியர்களுக்கு வந்த குடிநீர் அபேஸ்!

    ➢ தினகரன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி 108க்கு ஃபோன் செய்து நிவாரணத்தை துவக்கி வைத்தார், ஒரு நிமிட தாமதம் இல்லாமல். அவருக்கு ஒரு அரசு சாதனையாளர் விருது தகும்.

    இன்னும் பல சிக்கல்களை பற்றி எழுதவேண்டும், விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்ப. உதாரணமாக ‘டார்ட்’ சட்டம். முழுவிவரங்கள் கிடைத்த பின் தான் அவற்றை பற்றி எழுதலாம். உடனே துரிதமான நடவடிக்கைகள் எடுத்த அரக்கோணம் அமைப்பு முதல், தீயணைப்பு படை, காவல் துறை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாருக்கும் நாம் நன்றி நவிலவேண்டும். முதல்வரும் துரித நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார் என்று பறை சாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை விட அவருடைய பொறுமையை போற்றவேண்டும். துர்ச்சம்பவம் நடந்தால், அங்கு அரசியல்வாதிகள் வீடீயோக்காரர்களுடன் படையெடுத்து, மீட்புப்படையின் உயிரை வாங்குவார்கள். நம் முதல்வர் தாமதித்து உரிய காலத்தில் மட்டும் சென்றார்.

    இன்னும் பல மருந்துகள்/மாயம்/ வேஷம்/ நஞ்சு செய்திகள் வந்த வண்ணம். பார்க்கலாம்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    -#-

    சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2011/04/banana-8.jpg

    Share
  • “நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா?

    இன்னம்பூரான்.

    psychologyஇந்த மனசு ஆகப்பட்டது லோகசஞ்சாரம் செய்தபடியே இருக்கிறது, நாரத முனி போல. பிரபஞ்சம் முழுதும் இந்த சஞ்சாரம். நாரதரின் பூமாலைகளைப் போல சிந்தனை சூழல் அதற்கு அலங்காரம். சிந்தனையை ‘நல்லதொரு வீணையில்’ எஸ். பாலசந்தர் போல் ரீங்காரித்தால், அந்த ஒலியும் இசையும்  தத்துவம் பேசும் என்பதால், நாரத வீணை பொருத்தமான உவமை. தனம்மாள், ஏமனி, சிட்டிபாபு, காயத்ரி ஆகியோரை விட்டு விட்டு எஸ். பாலசந்தரை உவமை செய்வானேன் என்பர், சிலர். அவர் ‘நான் ஒரு விளையாட்டுப்பிள்ளையாக…’ தனக்குத்தானே குருவாக இருந்து, வீணை கற்றுக்கொண்டவர் என்பதால், அவரொரு உவமையானார். நாரதரின் இசைக்கருவியை ‘ஏக்தாரா’ எனப்படும் தம்புரு என்பர், சிலர். அதனால் காரியம் கெட்டுப்போகவில்லை. அதனுடைய கருமமே தப்புத்தாளத்தைத் தவிர்ப்பதே. மனது விகாரம் (தப்புத்தாளம்) அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். அது நீக்கப்படவேண்டும். உவமை இங்கும் பொருத்தமாக அமைகிறது.

    இந்தத் தொடரை வல்லமை இதழில் எழுதத் தூண்டியது ஒரு நூல்: Dainton,B (2014) Self: London: Penguin.

    அது பிரசுரம் ஆனதே ஏப்ரல் 24, 2014. ‘Self’ என்ற சொல்லை, இப்போதைக்கு ‘விளையாட்டுப்பிள்ளையாகிய நான்’ என்று மொழியாக்கம் செய்கிறேன். பிறகு நீயோ, நானோ அதை மாற்றிக்கொள்ளலாம். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் டைய்ண்டன் உம்முடைய ‘நான்’ என்பது என்ன, அதனுடைய போக்குவரத்தை கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கிவிட்டு, அது உமது உடலுக்கு வெளியே இயங்கக்கூடும் என்று குண்டு போட்டதல்லாமல், அப்பவும் அதை கண்காணிக்கமுடியும் என்கிறார். (புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் என்னுடைய ‘நான்’ அவசரப்படுகிறது!). உள்ளுறை மனதை (“core self”) பற்றி அவர் அலசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ‘உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான’ (தொல்காப்பியம் 1241) என்று உள்ளுறை உவமத்தை குறிப்பிட்டு, அதை உய்த்துணரவேண்டும் என்று தொல்காப்பியர் கூறியது நோக்கற்பாலது. உய்த்துணர மனம் வேண்டுமே. இங்கு இரு பொருள்: 1. விருப்பமிருந்தால் தான் உய்த்துணர முயல்வோம். 2. உய்த்துணரும் ஆற்றல் அந்த உள்ளுறை மனதுக்குத்தான் (“core self”) உண்டு. இந்த ‘இருபொருள்’ வியாக்யானமே ஒரு சிக்கல். ஆற்றலிருந்தால், விருப்பம் தானே கைகட்டி வரும்; ஆற்றல் இல்லையேல் விருப்பம் கை கூடி வராது. அதற்கு பிறகு வருவோம். அலசும் நூல்களுக்கு பஞ்சமில்லை.

    தீடீரென்று  உழலும் இந்த மனதை நாடியதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மில் எவருக்கும் எல்லா காலகட்டங்களிலும் மனது ‘ஸ்திதபிரதிஞ்னனாக’ மாறாமல் இருந்தது இல்லை. போதாக்குறைக்கு, எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற வகையில் எல்லோரும் மனோநல நிபுணர்கள்! (‘உளவியல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை. மற்ற துறைகளைப்போல அதிலும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அது மட்டுமல்ல. குறைந்தது மூன்று வகை நிபுணர்கள் – மனோநல ஆலோசகர் [Psychologist], மனோநல வைத்தியர் [Psychiatrist], மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist]. இந்த நுட்பங்களை அறியாமல் உளவியல் களவியல் நடைபெறுவது மனத்தை வருத்தும் பாதகமான நிகழ்வுகள்.

    தத்துவம் போல் ‘நான்’ எனப்படுவோர்க்கு உதவுவது எதுவும் இல்லை, அது பித்து போல் மாயத்தோற்றம் அளித்தாலும்.

    ‘நான்’ என்பது முழுபரிமாணத்தில் இயங்குவதை ‘அவனே’ அறிவான். அஃறிணையான மரத்தில் பட்டைச்சத்து மட்டும் உள்ளது. விலங்கினத்துக்கு பிரஞ்ஞை என்ற நினவாற்றல் உண்டு. ‘நான்’ என்பது மனிதனுக்கு மேலும் விளங்கும்; ஏனெனில் அவனுக்கு புத்திக்கூர்மை உண்டு. அவன் நாளையைப் பற்றி அறிவான். உலகை அறிவான்; எது உலகில்லை என்றும் புரிந்து கொள்வான். நிலையாமையிலிருந்து அவன் இறவா வரம் தேடுவான்.. விலங்கினத்துக்கு பசியும் தாகமும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனோ ஆழ்கடல். உலகுக்கு அவனே எஜமானன். அவன் தான் எதை அடைந்தாலும் அத்துடன் நிற்காமல், அதன் எல்லையைக் கடக்க விரும்புவான்.

    சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை ஆங்கிலமாக்கி, அதை எளிய தமிழாக்கம் செய்யும் போது, நுட்பங்கள் மறைந்து போய்விடலாம். இப்போதைக்கு, நூலில் உள்ள ஆங்கில மொழியாக்கம் இங்கே: எல்லாரும் சேர்ந்து நுட்பங்களைத் தேடுவோமே.

    He who knows more and more clearly the self obtains fuller being. In plants and trees sap only is seen, in animals conciousness. The self is more and more clear in man for he is most endowed with intelligence. He knows tomorrow, he knows the world and what is not the world.  By the mortal, he desires the immortal, being thus endowed.  As for animals , hunger and thirst comprise their knowledge. But  this man is the sea, he is above all the world. Whatever he reaches, he desires to go beyond it. ‘Aitareya Aranyaka II.1.3
    Radhakrishnan.S. (1953) The Principal Upanishads: London: George  Allen & Unwin P.91

    இன்னம்பூரான்
    27 06 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி: http://thumb10.shutterstock.com/display_pic_with_logo/536893/125305433/stock-photo-concept-psychology-color-doodle-icons-and-symbols-125305433.jpg

    Share
  • சொட்டு மருந்து … 1

    –இன்னம்பூரான்.

    Evening-Tamil-News-Paper_96997797490

    சிறு துளி பெருவெள்ளம். இதுவும் அதுவுமாக சட்டம், தணிக்கை, விழுப்புணர்ச்சி, ஆலோசனை நேரம் போன்ற தகவல்களை தொகுத்தும், அவிழ்த்தும், சங்கிலித்தொடராகவும், தனிமொழியாகவும், அவ்வப்பொழுது சிறு துளிகள், உஜாலா சொட்டு நீலம் போல் இங்கே காட்சி தருகின்றன. அவற்றால் ஏற்படும் பிரகாசமோ, பெருவெள்ளமோ, உமது பாடு.

    உலகமெங்கும் வினாடி தோறும் பற்பல நிகழ்வுகள்.

    சில வியக்க வைக்கின்றன; மீனா ஐஏஎஸ் பாஸ் செய்து விட்டார். இத்தனைக்கும் அவர் தன் கையால் பரிக்ஷை எழுதவில்லை. ஆள் வைத்து எழுதினார். படித்தது மற்றவர்கள். அதை உள்வாங்கியது, அவர். செவிவாய் செய்திகளை அவர் ஜீரணம் செய்த விந்தை சாகசம் பற்றி கேட்கும்போது, நமது மனம் பாகாய் உருகி விடுகிறது. சர்வ வல்லமை புகழ் ஆண்டவனே! உனக்கு கண் இல்லையா? உங்களுக்கு ஹெலென் கெல்லரை பற்றியும், வேத் மேஹ்த்தா பற்றியும் தெரியுமோ?  ஆம். மீனாவும், அந்த சாதனையாளர்களைப்போல, கண்பார்வை இழந்தவர். நேர் காணலில் அவரளித்த பதில்கள் பொன் வாக்கு.  வாருங்கள். அவரை வாழ்த்துவோம்.

    “பெண்புத்தி பின்புத்தி”,”ஏழை சொல் அம்பலம் ஏறாது.” “இஸ்லாமில் பெண்களுக்கு மதிப்பில்லை.” இது போன்ற குப்பைகளை அகற்றுங்கள் என்கிறார், சுல்தானா பேகம். ஷிமோகா-வாழ் பெண்ணரசியான இவர், சிசேரியன் அறுவை சிகிச்சையில் திருமகனை பெற்றவர். மயக்கம் தெளிந்தவுடனேயே, ஆசிரியர் தகுதி தேர்வு எழுத போய்விட்டார். இடது கையில் ஐ வி.திரவம், ஊசி மூலம். வலது கை பிடித்தது, பேனாவை. உறுதுணை: வாடகை வண்டி ஓட்டுனராகிய கணவர், அஹ்மத். மகவை பார்த்துக்கொண்டது அம்மாவும், மாமியாரும். வசதி செய்து கொடுத்தவர்கள், தேர்வு மைய அதிகாரிகள். என் மகன் கூட ஆஸ்பத்திரியிலிருந்து போய் தான், முதல் வருட டாக்டர் பரிக்ஷை எழுதினான். மூன்றாவது மாடியில் பரிக்ஷை. இவனுக்கு தனி அறை, கீழே. எழுதும் விரல் ஒரு விபத்தில் நசுங்கியும் ஐ.ஏ.எஸ். எழுதிய எனக்கு ஒரு உதவியும் கிட்டவில்லை. எழுத்து கோணா மாணா என்று மார்க் குறைத்திருப்பார்கள்!அது அந்த காலம்.

    ஒரு மடலாடலில் படைப்பாற்றல் பேசப்பட்டது. ஒரு எட்டு வயது சிறுவனின் அபாரமான படைப்பு. ஆம். சிந்தனை ஒரு கொடுப்பினை. அதை விட பெரியது கற்பனை. கற்பனை இல்லையேல், இலக்கியம், கலை, அழகு, சுவை, மொழி எல்லாமே சூன்யம். முருகன் என்ற பெரிய கயிறை பற்றியும், வள்ளி என்ற சிறிய கயிறை பற்றியும் எழுதிய மகா கவி பாரதியார், வாயு தேவனையும், தன்னையும் முன்னிறுத்தி, ஒரு காதல் அமர காவியம் படைத்து விட்டார். கற்பனை வளத்தைப் பேணாத கல்வி, ஏட்டுச்சுரைக்காய்.

    ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயிலாண்டி. நுகர்வோர்கள் அந்த ரகம். அவர்களை துரும்பாக மதிப்பவர்கள் பெரிய மைனரும், சின்ன மைனரும். ஆனால், இந்த நுகர்வோர் நீதி மன்றங்கள் மடியில் கை வைத்து நாடி பார்க்கிறார்கள்; நாட் அல்வேஸ் என்றாலும். ‘force majeure’ என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள்: கடவுள் துணை? இல்லை. கடவுள் துணை இல்லை. கடவுள் செய்த தீவினை -உதாரணம்: சுனாமி.

    வேளாண்மை செய்ய சென்ற ‘ரூம் பாட்ச்சா’ அறுந்து கிடந்த மின்கயிறு தாக்கி மரணம்: செப்டம்பர் 4 , 2009. அவரது மனைவியும், மகன்களும், விபத்தின் காரணம் மின்வாரியத்தின் பரிமாரிப்பு கடமை தவறுதல் என்று குற்றம் சாட்டி, ரூ.6 லக்ஷம் நஷ்டஈடு கேட்டார்கள். ‘சே! சே! அதெல்லாம் ஆண்டவன் தீவினை என்று சொல்லி, ‘போடா பொக்கை’ என்று உதறி விட்டனர், மின் வாரியம். ‘டெக்னிகல்’ என்று சொல்லப்பட்ட மண்ணாங்கட்டி வாதங்களை தீர விசாரணைக்குப் பின் நிராகரித்த சென்னை உச்ச நீதி மன்றம் சொன்னது:

    ‘அறுந்த மின்கயிறு அடித்த ஷாக் என்பதை மின் வாரியம் ஒத்துக்கொண்டதும், பின்னர் செய்த சீரமைப்பும் ஆவணங்களில் உள்ளன. ஒம்மாச்சியை குற்றம் சொல்லாதே. ரூ 5 லக்ஷம் நஷ்ட ஈடு.’

    தர்மமிகு சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் மின்கயிறுகள் தாறுமாறாக  தொங்கலாட்டம் போடுகின்றன. மாநிலம்/ தேசம் முச்சூடும் அதே. யாராவது சாகுவதற்கு முன், விழிப்புணர்ச்சி இயக்கம் நடத்துங்கள்.

    மற்றொரு இளிச்சவாயன். திரு. எஸ். நாகராஜன்,”மேக் மை ட்ரிப்” என்ற சுற்றுலா கம்பெனியிடம் ரூ.90.000/- கட்டி, குடும்ப சுற்றுலாவுக்கு பதிவு செய்தார். சிலருக்கு வீஸா கிடைக்காததால், ரத்து செய்ய கோரினார். ஒரு மாதமே இருக்கும் காலகட்டத்தில் ரத்து செய்தால், ஒரு காசு கூடக்கிடைக்காது என்று போட்ட கண்டிஷனை காட்டி, ‘போடா பொக்கை’ என்று விட்டார்கள். அந்த கண்டிஷனே தப்பு என்று அந்த தன்னிச்சை கண்டிஷனையே நிராகரித்து, ரூ. 90,000/- + நஷ்ட ஈடு ரூ.7,000/- திரு.நாகராஜனிடம் கொடுக்கும்படி ஆணையிட்டது. You must always read the fine print.

    வீராதி வீரன்! சூராதி சூரன்! யாரு? ஆர்.கே.சத்பதி, ராணுவ மைய விஞ்ஞானி (DRDO). அய்யா ஹைதராபாத் போன இடத்திலெ, ஒரு கலாட்டா.  போறாத காலம். போறப்போக்கில், ஓடிப்போன இளைஞன், இவரை கத்தியால் குத்தி விட்டான்.  ரத்த மயம். வலி பொறுக்காவிடினும், மனம் தளராமல், தானே நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னால், ‘மஞ்சள் பத்திரிகை’ புகழ் லக்ஷ்மீகாந்தன் மாம்பலம் சாரங்கபாணி தெருவில் ரிக்க்ஷாவில் வரும் போது, ஒருவன் வயிற்றில் குத்த, ஒரு கையால் குடலை அமுக்கிக்கொண்டு, ஒரு கையால் குத்தியவனை பிடித்துக்கொண்டு, போலீஸிடம் போனதாக, படித்த ஞாபகம். பாடபேதம் இருக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilmurasu.co.in/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_96997797490.jpg

    Share
  • இனி ஆவன செய்வோம்

     

    — இன்னம்பூரான்

     

    இனி ஆவன செய்வோம்

     

    tamizhan endru solada

    தேசீய தேர்தல் 2014 இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை என்பதை விட திருகிய முனை என்று சொல்வது சாலத்தகும். 81.4 கோடி வாக்காளர்களில் 55.1 கோடி வாக்காளர்கள். 66.38 விழுக்காடு வாக்களித்தனர்.. கடந்த தேர்தலை விட 13.4 விழுக்காடு அதிகமான வாக்காளர்களில், இளைய சமுதாயம் கணிசமாக உளர். தேர்தல் கமிஷன் திறம்பட நிர்வகித்தது பற்றி உலகம் பாராட்டுகிறது. செம்மையான நிர்வாகத்தலைமை இருந்தால், அரசு ஊழியர்கள் உருப்படும் வகையில் இயங்குவர் என்பதை, அரசியலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது நெறியில் தவறியவர்கள் என கருதப்படும் அதே ஊழியர்கள் நிரூபித்துவிட்டனர் என்பது ஒரு பாடம்.

    எல்லா கட்சியினரும் விதிமுறைகளை மீறுவதில், துட்டு கொடுப்பதில், வசை பாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்றால் மிகையாகாது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்றும் கானல் நீர் தான். கதவோரம் ஒளிந்திருந்த கருத்துக் கணிப்பாளர்கள், ஒருமுகமாக, திருகிய முனை பாட்டுப்பாடுகிறார்கள். தற்காலம், வருங்கால பிரதமராக பெரிதும் பேசப்படும் திரு. நரேந்திர மோடி,

    ‘நான் அரசு இயந்திரத்தை நல்லதொரு நிர்வாகியாக இயக்குவேன்; நாடு சுயநம்பிக்கையை தொலைத்து விட்டது; தேக்கத்தில் அமுங்கி விட்டது; உந்துதல் சக்தியுடன் அதை உசுப்பி விட்டால், நடக்கவேண்டியவை தானே நடக்கும்.’

    … என்கிறார். இத்தருணம், போனமாதம் அமெரிக்க நாடாளுமன்றம், ‘திரு. நரேந்திர மோடி பிரதமரானல், அவருக்கு A-1 (diplomatic) visa தனக்குத்தானே வந்து சேரும்’ என்று வருமுன் காப்போனாக உரைத்ததையும், அமெரிக்க அதிபரின் சம்பிரதாயம் கலந்த வரவேற்பையும் நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். மற்ற நாடுகள் அதே வழியில் தான் பயணிப்பார்கள். நான் எதிர்பார்த்தபடியே, ‘ஊடலும் கூடலுமாக’ இயங்கும் பங்குச்சந்தை அண்ணாந்து பார்க்கிறது. வருங்காலத்தில் அதற்கு மராமத்து தேவை. அது கபளீகரர் உலகம். முற்றுகை போதும். இனி ஆவன செய்வோம்.

    அதற்கு ஏதுவாக, தலைமை தேர்தல் கமிஷனர் திரு.வி.எஸ்.சம்பத்
    அளித்த ஒரு பேட்டியின் சாராம்சம்.

    “வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், செல்வத்திமிர் (மணி பவர்), நிழல் செல்வம், பணப்புழக்கம், எல்லாமே களத்தில் இறங்கி விடுகின்றன. அதை தடுக்க, கமிஷன் மட்டும் போதாது. தவிர, சட்டப்படி, விதி மீறி கெலித்த பிரதிநிதிகளை வீட்டுக்கனுப்ப எம்மிடம் ஆளுமை கொடுக்கப்படவில்லை. (பேட்டி கண்டவர் 2009 தேர்தலில் விதி மீறி ஆறு வருடங்கள் பதவியிலிருந்த் திரு.அஷோக் சாவன் பற்றி வினவினார். அது ஒரு டெஸ்ட் கேஸ் என்பதால் வருங்காலத்தில் நல்லது நடக்கலாம் என்றார், திரு.சம்பத்.)

    ஆக மொத்தம் இன்றைய நிலை:
    முறைகேடுகளும் தேர்தல் உத்திகளாக தொடரக்கூடுபவை. சாளரத்தை திறந்தோம். இனி ஆவன செய்வோம்.

    1. மக்கள் சக்தி மங்கக்கூடாது. அது வெளிச்சத்தில் இயங்கவேண்டும், வன்முறையை அறவே தவிர்த்து.
    2. பேட்டை தோறும், மக்கள் நலத்தை வெளிப்படையாக நாடும் தன்னார்வ குழுக்கள் அமைத்து, பிரதிநிதிகளை கண்காணித்து, பொறுப்புடன் தட்டிக்கேட்கும் பண்பை உருவாக்குங்கள். தரம் கெட்டவர்கள் உட்புகுந்து ஆதாயம் தேடுவார்கள். விழிப்புடன் அவர்களை வெளியேற்றுங்கள். இன்னல்கள் உண்டு. அண்ணல் காந்தி சமாளிக்காததா?
    3. கைகளை கூப்பி, காலை பிடித்து, சமயத்தில் காசை வீசி, கெலித்த பிரதிநிதிகள், உமது ஊழியர்கள். அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி வைத்து அவர்களின் மண்டை கனத்தை ஏற்றாதீர்கள்.
    4. இனபேதங்கள், ஏற்ற தாழ்வுகள், ஆணவம், பெண்ணிய எதிர்ப்பு போன்றவற்றை பேணாதீர்கள்.
    5. மக்கள் நலம் தெளிவு: தேச பாதுகாப்பு, யோக்கியமான நிதி நிர்வாகம், சட்டம் தவறாமை வகையறா: மத்திய அரசு நிலைப்பாடு
    6. இணக்கமான மாநில நிர்வாகம், அணுக்கத்தொண்டு, அடுத்த நிலைப்பாடு.
    7. தொகுதி நலம் முக்கியம். அவரவர் தொகுதியை, பிரதிநிதியும், மக்கள் குழுவும், கவனித்துக்கொள்ள வேண்டும். – சுற்றுச்சூழல், மின்சாரம், தண்ணீர் வகையறா.
    8. மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து, கல்வி, மருத்துவம், முன்னேற்றம் ஆகியவை பற்றி, அரசுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.
    9. மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.
    10. மேற்படி இயங்க, நாம் வாய்மையை கடைபிடித்து, லஞ்சம் கொடுக்காமல், தன்னலம் மாடும் நாடாமால், கறாராக இருக்க வேண்டும்.

    இதெல்லாம் வேலைக்காவாது என்பர் பலர். அப்படியே இருந்து விட்டோமானால், மோடி ஆண்டாலும், ராகுல் ஆண்டாலும், அரவிந்த் ஆண்டாலும், ‘மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.’ என்பது நடை முறையில் வந்து விடும்.

     

    இன்னம்பூரான்
    13 05 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://3.bp.blogspot.com/-dVSaHvVmvhc/U0vGkt31XLI/AAAAAAAABRY/tKDOt8EG5w8/s1600/mb.jpg

    Share