என்னத்தைச் சொல்ல! – 5
–இன்னம்பூரான்.
வாலு போச்சு! கத்தி வந்தது !
பாலில் தண்ணீர் கலந்தார்கள். அதை மாதக்கணக்காகக் கச்சிதமாகவே செய்தார்கள். மனசாக்ஷியை அடகு வைத்தார்கள். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை லஞ்சாபரணங்கள்.
அதற்கு முன்னால், செங்குன்றத்திலியோ, கருங்குளத்திலியோ, குதிரை சாணம் கலந்த தேயிலை சக்கைப் போடு போட்டது. சாயா குடிக்க எனக்கு பயம். அதற்கு முன்னாலே, அரிசியில் கல் கலந்தார்கள். இந்த மாபாவிகள் சுண்டைக்காயை கல்யாணபரங்கி என்று கூட விற்றுவிடுவார்கள். அல்லது, சில வருடம் முன் சொல்லப்பட்டப்படி கலப்பட மருந்துகளையும் காலாவதி மருந்துகளையும் விற்று கொலை செய்தார்கள். மஞ்சள்பொடி தான் க்ளோரோமைசிட்டீன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இன்றைய கலப்படம்: நெய்க்கு வந்த சோதனை. இரண்டு வருஷம் முன்னால் திருநெல்வேலியில் நடந்தது. இப்போது அதருமமிகு சென்னையின் சந்தைக்கடை தி.நகரில் கண்ணம்மா பேட்டை. அங்கு சுடுகாடுகள் இரண்டு உள்ளன. ஒன்றில் இறந்தவர்களுக்குக் கொள்ளி வைப்பார்கள். மற்றொன்று முத்துரங்கன் தெருவில் இருப்பதாக ஹிந்து இதழில் இன்று செய்தி. ஊரை சொன்னவங்க பேரை சொல்லாமல் விட்டுட்டாங்க. அந்த தெரு கடைக்காரன் நம்மை எல்லாம் உயிரோடு கொளுத்தும் இனம். அவனிடமிருந்து பிடித்த ஏழு டன் நெய்யில், நிறம் மாற்றிகள், டால்டா, பாம் ஆயில் போன்றவை 90%. மேலே தடவிய நெய் 10%. இதில் தான் நான் வாங்கி சாப்பிட்ட தீபாவளி மருந்து கூட. இப்ப புரியுது, ஏன் என் வயிறு கொதித்தது என்று. இந்த அழகில் கறுப்புப் பணாதிபதிகளைப் போல பினாமி விலாசங்கள். எல்லாம் பொய். வியாபாரம் அண்ணா நகரில் கொடி கட்டிப் பறந்தது. ஒரு சமாச்சாரம் புரிந்து கொள்ள வேண்டும். வியாபாரி அயோக்யன் என்றாலும், கலந்தது, பொய் சீட்டு டப்பாவில் ஒட்டியது, சில்லறை வியாபாரம் எல்லாரும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே. அவர்களால் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதும் நடுத்தர மக்களே/ஏழை மக்களே.
என்னத்தைச் சொல்ல !
வாலு போச்சு!
கத்தி வந்தது !
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
-#-
சித்திரத்துக்கு நன்றி: மாலைமுரசு
http://foodsafetynews.files.wordpress.com/2012/06/conviction-news3.jpg
மனசாட்சி, நீதி, நேர்மை என்னும் சொற்களுக்கு தமிழ் அகராதியிலாவது இனிவரும் காலங்களில் இடமிருக்குமா என்று எண்ணும் நிலைமையில் நாம் உள்ளோம்.