“நான்” ஒரு விளையாட்டுப்பிள்ளையா?

0

இன்னம்பூரான்.

psychologyஇந்த மனசு ஆகப்பட்டது லோகசஞ்சாரம் செய்தபடியே இருக்கிறது, நாரத முனி போல. பிரபஞ்சம் முழுதும் இந்த சஞ்சாரம். நாரதரின் பூமாலைகளைப் போல சிந்தனை சூழல் அதற்கு அலங்காரம். சிந்தனையை ‘நல்லதொரு வீணையில்’ எஸ். பாலசந்தர் போல் ரீங்காரித்தால், அந்த ஒலியும் இசையும்  தத்துவம் பேசும் என்பதால், நாரத வீணை பொருத்தமான உவமை. தனம்மாள், ஏமனி, சிட்டிபாபு, காயத்ரி ஆகியோரை விட்டு விட்டு எஸ். பாலசந்தரை உவமை செய்வானேன் என்பர், சிலர். அவர் ‘நான் ஒரு விளையாட்டுப்பிள்ளையாக…’ தனக்குத்தானே குருவாக இருந்து, வீணை கற்றுக்கொண்டவர் என்பதால், அவரொரு உவமையானார். நாரதரின் இசைக்கருவியை ‘ஏக்தாரா’ எனப்படும் தம்புரு என்பர், சிலர். அதனால் காரியம் கெட்டுப்போகவில்லை. அதனுடைய கருமமே தப்புத்தாளத்தைத் தவிர்ப்பதே. மனது விகாரம் (தப்புத்தாளம்) அடைவதை நாம் அன்றாடம் காண்கிறோம். அது நீக்கப்படவேண்டும். உவமை இங்கும் பொருத்தமாக அமைகிறது.

இந்தத் தொடரை வல்லமை இதழில் எழுதத் தூண்டியது ஒரு நூல்: Dainton,B (2014) Self: London: Penguin.

அது பிரசுரம் ஆனதே ஏப்ரல் 24, 2014. ‘Self’ என்ற சொல்லை, இப்போதைக்கு ‘விளையாட்டுப்பிள்ளையாகிய நான்’ என்று மொழியாக்கம் செய்கிறேன். பிறகு நீயோ, நானோ அதை மாற்றிக்கொள்ளலாம். லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக இருக்கும் டைய்ண்டன் உம்முடைய ‘நான்’ என்பது என்ன, அதனுடைய போக்குவரத்தை கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கிவிட்டு, அது உமது உடலுக்கு வெளியே இயங்கக்கூடும் என்று குண்டு போட்டதல்லாமல், அப்பவும் அதை கண்காணிக்கமுடியும் என்கிறார். (புத்தகம் இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் என்னுடைய ‘நான்’ அவசரப்படுகிறது!). உள்ளுறை மனதை (“core self”) பற்றி அவர் அலசுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே ‘உவமப் பொருளின் உற்றது உணரும் தெளிமருங்கு உளவே திறத்து இயலான’ (தொல்காப்பியம் 1241) என்று உள்ளுறை உவமத்தை குறிப்பிட்டு, அதை உய்த்துணரவேண்டும் என்று தொல்காப்பியர் கூறியது நோக்கற்பாலது. உய்த்துணர மனம் வேண்டுமே. இங்கு இரு பொருள்: 1. விருப்பமிருந்தால் தான் உய்த்துணர முயல்வோம். 2. உய்த்துணரும் ஆற்றல் அந்த உள்ளுறை மனதுக்குத்தான் (“core self”) உண்டு. இந்த ‘இருபொருள்’ வியாக்யானமே ஒரு சிக்கல். ஆற்றலிருந்தால், விருப்பம் தானே கைகட்டி வரும்; ஆற்றல் இல்லையேல் விருப்பம் கை கூடி வராது. அதற்கு பிறகு வருவோம். அலசும் நூல்களுக்கு பஞ்சமில்லை.

தீடீரென்று  உழலும் இந்த மனதை நாடியதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மில் எவருக்கும் எல்லா காலகட்டங்களிலும் மனது ‘ஸ்திதபிரதிஞ்னனாக’ மாறாமல் இருந்தது இல்லை. போதாக்குறைக்கு, எல்லாரும் இன்னாட்டு மன்னர் என்ற வகையில் எல்லோரும் மனோநல நிபுணர்கள்! (‘உளவியல்’ என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை.) தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை. மற்ற துறைகளைப்போல அதிலும் வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. அது மட்டுமல்ல. குறைந்தது மூன்று வகை நிபுணர்கள் – மனோநல ஆலோசகர் [Psychologist], மனோநல வைத்தியர் [Psychiatrist], மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist]. இந்த நுட்பங்களை அறியாமல் உளவியல் களவியல் நடைபெறுவது மனத்தை வருத்தும் பாதகமான நிகழ்வுகள்.

தத்துவம் போல் ‘நான்’ எனப்படுவோர்க்கு உதவுவது எதுவும் இல்லை, அது பித்து போல் மாயத்தோற்றம் அளித்தாலும்.

‘நான்’ என்பது முழுபரிமாணத்தில் இயங்குவதை ‘அவனே’ அறிவான். அஃறிணையான மரத்தில் பட்டைச்சத்து மட்டும் உள்ளது. விலங்கினத்துக்கு பிரஞ்ஞை என்ற நினவாற்றல் உண்டு. ‘நான்’ என்பது மனிதனுக்கு மேலும் விளங்கும்; ஏனெனில் அவனுக்கு புத்திக்கூர்மை உண்டு. அவன் நாளையைப் பற்றி அறிவான். உலகை அறிவான்; எது உலகில்லை என்றும் புரிந்து கொள்வான். நிலையாமையிலிருந்து அவன் இறவா வரம் தேடுவான்.. விலங்கினத்துக்கு பசியும் தாகமும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனோ ஆழ்கடல். உலகுக்கு அவனே எஜமானன். அவன் தான் எதை அடைந்தாலும் அத்துடன் நிற்காமல், அதன் எல்லையைக் கடக்க விரும்புவான்.

சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டதை ஆங்கிலமாக்கி, அதை எளிய தமிழாக்கம் செய்யும் போது, நுட்பங்கள் மறைந்து போய்விடலாம். இப்போதைக்கு, நூலில் உள்ள ஆங்கில மொழியாக்கம் இங்கே: எல்லாரும் சேர்ந்து நுட்பங்களைத் தேடுவோமே.

He who knows more and more clearly the self obtains fuller being. In plants and trees sap only is seen, in animals conciousness. The self is more and more clear in man for he is most endowed with intelligence. He knows tomorrow, he knows the world and what is not the world.  By the mortal, he desires the immortal, being thus endowed.  As for animals , hunger and thirst comprise their knowledge. But  this man is the sea, he is above all the world. Whatever he reaches, he desires to go beyond it. ‘Aitareya Aranyaka II.1.3
Radhakrishnan.S. (1953) The Principal Upanishads: London: George  Allen & Unwin P.91

இன்னம்பூரான்
27 06 2014

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி: http://thumb10.shutterstock.com/display_pic_with_logo/536893/125305433/stock-photo-concept-psychology-color-doodle-icons-and-symbols-125305433.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *