-மலர் சபா

மதுரைக் காண்டம் – 11: காடுகாண் காதை

தெய்வம் மந்திர வலிமைக்கு ஆற்றாது, உண்மை உரைத்து நீங்குதல்

பாய்ந்து செல்லும் கலைமானை
ஊர்தியாக உடைய கொற்றவை மந்திரத்தைத்           kotravai
தன் வாயால் ஓதினான் கோவலன்.

அதைக் கண்டு அஞ்சிய அம்மாயத்தெய்வம்,
“நான் இவ்வனத்தில் திரியும் வனதேவதை;
உம்மீது மோகமுற்று உமை மயக்க எண்ணினேன்.
என் பிழை பொறுத்திடுக.
கானமயில் போன்ற மென்மையான உன் மனைவியிடத்தும்
புண்ணியம் செய்திட்ட தவத்திரு கவந்தியடிகளிடத்தும்
நான் செய்த இப்பிழை பற்றிக் கூறாது பொறுத்தருள்க!”
என்று வேண்டிக் கொண்டு மறைந்து விட்டது.

கோவலன் தாமரை இலையில் தண்ணீர் கொணர்ந்து, கண்ணகியின் தாகத்தைத் தீர்த்தல்

தன் தாகம் தணித்த கோவலன்,
பசிய தாமரை இலையில்
தண்ணீர் கொண்டு வந்து
களைப்புற்றிருந்த கவுந்தியடிகளுக்கும்
கண்ணகிக்கும் தந்து
அவர்தம் துயர் நீக்கினான்.

வெயிலின் வெம்மை மிகுதலால் கானத்தில் செல்லுதல் அரிது என்று அண்மையிலுள்ள ஐயை கோட்டத்தை மூவரும் அடைதல்

வானின் மீது செல்லும் ஞாயிறு
தன் வெம்மையினைப் பரவச் செய்ததால்
தீமைகள் மிக நிரம்பிய
இக்காட்டு வழியில் செல்லுதல் கடினம் என்று கருதி,
கோவலன் கவுந்தியடிகளுடனும்,
வளைந்த காதணிகளை அணிந்த கண்ணகியுடனும்,
மயக்கத்தைத் தரக்கூடிய
கொடிய வழிகளையுடைய
அப்பாலை நிலத்தின்கண்
குரா வெண்கடம்பு கோங்கை வேம்பு மரங்களைக்
கொண்ட பூஞ்சோலை ஒன்றினுள் புகுந்தனன்.

மழைதரும் வளத்தைப் பெற்றிடாத
அவ்விடத்தில் வாழ்ந்திருந்த மறவர்
வழிப்போக்கரை வில்லைக் கொண்டு
அச்சுறுத்திக் கவர்ந்த
பொருட்களின் வளமே வாய்க்கப் பெற்றிருந்தனர்.

கூற்றுவனை ஒத்த வலிமையுடைய அம்மறவர்கள்
தம் கையில் வளைந்த வில்லேந்தி,
பகைவர்களை வென்றிட விரும்பி
அங்கே எழுந்தருளியுள்ள கொற்றவையை
வணங்கிச் செல்வர்.
வென்றதும், அதற்கு விலையாகத்
தங்களது தலைகளையே அறுத்து
அத்தெய்வத்துக்குப் பலியிட்டு
நேர்த்திக் கடன் செலுத்துவர்.

அப்பலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
கொற்றவை, நெற்றியில் கண்ணுடைய குமரி;
தேவர்களே போற்றிடும் பாவை;
குற்றமற்ற சிறப்புடைய விண்ணுலகை ஆள்பவள்.
அத்தகைய கொற்றவையின் கோயிலை
மூவரும் அடைந்தனர்.

(காடு காண் காதை முற்றியது; அடுத்து வருவது வேட்டுவ வரி)

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  196 –  216
*http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
<http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html>

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *