கே.ரவி

கவிஞருடன் மூன்றாவது சந்திப்பு நிகழ்ந்தது 1972 இறுதியிலோ, 1973 தொடக்கத்திலோ என்று நினைக்கிறேன்.

நான் பிறந்ததிலிருந்தே என்னையும், என் மூத்த சகோதரி நந்தினியையும் என் அத்தையின் கணவர் ஆர்.கல்யாணராமனும், அவருடைய இரு மனைவியரும் வளர்த்து வந்தனர். கல்யாணராமன் திரைபடத் தயாரிப்பாளர். சகோதரி பத்மா சுப்ரமணியம் அவர்களின் தந்தையார் கே.சுப்ரமணிய அய்யருடைய குருகுல வாசத்தில் பயின்ற திரைப்படத் தயாரிப்பாளர் அவர்.

1940-களில் திரைப்படத் துறையின் முன்னணி விநியோகஸ்தராகத் திருச்சியில் கல்யாணராமன் தம்மை நிறுவிக் கொண்டார். பிறகு, 1953-ல் நான் பிறந்த பிறகு தம் குடும்பத்தோடு சென்னைக்குக் குடிபெயர்ந்து வந்து மொழிமாற்றுத் துறையில், அதாவது வேறு மொழிப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வெற்றி கண்டார். முதன்முதலாக, பம்பாய் (அதன் பூர்வாஸ்ரமப் பெயர்) ஹோமி வாடியாவின் ஹிந்திப் படமான, மாயா ஜாலங்கள் நிறைந்த ஹாதிம்தாய் என்ற படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு நல்ல பணம் சம்பாதித்தார். அதற்கு முன் தமிழில் ஏதாவது மொழிமாற்றுப் படங்கள் வந்திருந்தனவா என்று ராண்டார்கையிடம் தான் கேட்க வேண்டும். அடுத்து ஒரு கன்னடப் படம். சரோஜாதேவி அம்மையார், ஹொன்னப்ப பாகவதர் நடித்த ‘மஹாகவி காளிதாஸ்’. அதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். தெலுங்கில் என்.டி.ராமராவ், அஞ்சலிதேவி நடித்த வெற்றிப் படமான ரேசுகாவை மொழிமாற்றம் செய்து, “நாட்டியதாரா” என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த பெரிய படங்கள் வெளியான அதே நாளில் திரையிட்டார். அதன் வசனம் முழுப்பொறுப்பையும் திரு.ஆரூர்தாஸ் தான் எங்கள் அலுவலகத்திலேயே தங்கியிருந்து செய்து கொடுத்தார். பலத்த போட்டிகளுக்கு நடுவே அந்தப் படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

ravi1

k.rஇந்தச் சமயத்தில் கல்யாணராமன், அவரை மாமா என்றுதான் நான் அழைப்பேன், மாமா அன்றைய பிரபல திரைப்படப் பாடலாசிரியர் தஞ்சை ராமையா தாஸ் அவர்களோடு நெருங்கிப் பழகி வந்தார். மாமாவுக்குத் தமிழில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் எப்படியோ கவிஞர்களிடம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால்தான் நான் சென்னை கோஷா ஆஸ்பத்திரியில் 13-01-1953-ல் பிறந்த செய்தி திருச்சியிலிருந்த அவருக்கு மறுநாள் கிடைத்ததும், அன்று சூரிய வழிபாட்டு நாள் என்பதால் எனக்கு ‘ரவி’ என்று அவர்தான் பெயர் சூட்டினார். (மஹாகவி காளிதாஸ் டப்பிங் படம் வெளியிட்ட போது பிறந்த என் தம்பிக்குக் காளிதாஸ் என்று பெயர் சூட்டியவரும் அவரே). எனக்கு ரவி என்று அவர் பெயர் சூட்டிவிட்டுச் சொன்னாராம்: “பையன் ரவீந்திரநாத் தாகூரைப் போல் பெரிய கவியாக வருவான்”. இந்தக் கதையை எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அத்தைகள் ஸ்வர்ணாம்பாளும், அலங்காரவல்லி என்ற சரஸ்வதியும் சொல்லிச் சொல்லி என்னை வளர்த்த காரணத்தினாலோ என்னவோ நான் கவிதைப் பைத்தியமாக வளர்ந்தேன். மேலும், 2000-ஆம் ஆண்டில் என் முதல் கவிதை நூல், “உன்னோடு நான்” முழுக்கப் படித்துவிட்டு, இன்று நம்மிடையே வாழும் ரசிகமணியாக இருக்கும் பாரதி சுராஜ் அவர்கள் அந்தக் கவிதை நூலை “இன்னொரு கீதாஞ்சலி” என்று எழுதிப் பாராட்டிய பேறு பெற்றேன். யார் கண்டார்கள், கவிதைக்கான நொபெல் பரிசு காத்திருக்கிறதோ என்னவோ! வரட்டுமே!

கவிஞரை மூன்றாவது முறை சந்தித்த கதைக்கு வாப்பா என்று நீங்கள் எல்லாரும் ஒருமனதாக என் மனத்துக்குள் முணுமுணுக்கும் பேரிரைச்சல் கேட்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்.

திருச்சியில் என் சகோதரி பெயரில் ‘நந்தினி பிக்சர்ஸ்’, நான் பிறந்த பிறகு ‘ரவி பிலிம்ஸ்’ ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை நிறுவிப் பெரும் வெற்றியடைந்த மாமா, நான் பிறந்த மூன்றாண்டுகளில் சென்னைக்குக் குடியேறி டப்பிங் படங்கள் எடுத்து வெற்றி கண்ட செய்தியைச் சொல்லி விட்டேன். சொந்தமாகப் படம் தயாரிக்க நினைத்தார் மாமா. தம் நண்பர் தஞ்சை என்.ராமையாதாஸ் பெயரின் முதலெழுத்துகளைக் கொண்டே ‘டி.என்.ஆர் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தொடங்கி, முதல் படமாக ‘லலிதாங்கி’ என்ற திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். அவருடைய நெருங்கிய நண்பர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் ராஜசுலோசனா அம்மையார் நடிக்கப் படம் வேகமாக வளரத் தொடங்கியது. பாதிப் படம் தயாரித்து முடிந்து விட்டிருந்த கட்டத்தில், அரசனான கதாநாயகன், துறவறம் பூண்டு மெய்ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகக் கதை அமைந்திருந்ததால், நடராஜர் சிலைக்கு முன் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பாட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போது கடவுள் மறுப்பு இயக்கத்தில் தீவிரமாக, அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர் ஈடுபட்டிருந்தார். அவருக்காகவே ராமையாதாஸ் அருமையான பல்லவி எழுதியிருந்தார்.

“ஆண்டவனே இல்லையே!”

இந்தப் பல்லவிக்குத் தம்பிகள் எப்படி விசில் அடிப்பார்கள்! ஆனால், விசில் அடிக்கப் போகும் தம்பிகளுக்குத் தலையில் அடிப்பது போல் அடுத்த அடி எழுதியிருந்தார்.

ஆண்டவனே இல்லையே – தில்லைத்
தாண்டவனே உன்போல் தாரணி மீதினிலே
ஆண்டவனே இல்லையே”

எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். தம் அரசியல் வாழ்க்கைக்கு இந்தக் காட்சி குறுக்கீடாக அமையும் என்று அவர் கருதினார். பெரும் பொருட்செலவில் செட் போடப்பட்டு சில நாட்கள் ஆகியும் எம்.ஜி.ஆர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘தில்லைத் தாண்டவனே’ என்பதற்கு பதில் ‘உதய சூரியனே’ என்று பாடலாமே என்று சமரசம் பேசினாராம் எம்.ஜி.ஆர். மாமா தீவிர பக்தர். சமரசத்தை நிராகரித்தார். கவியின் வார்த்தைகளை மாற்ற நமக்கு உரிமையில்லை என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி விட்டு அடுத்த நாளே நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கி முதலில் இருந்து எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் சிவாஜியை வைத்து ‘ராணி லலிதாங்கி’ என்று மாற்றிப் படாமாக்கி வெளியிட்டார். அவர் துணிச்சலைப் பின்னாளில் எம்.ஜி.ஆரே பாராட்டினார் என்பது வேறு கதை.

கொள்கைக்காக மாமா பலத்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டார். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர்-பானுமதி என்றே படங்கள் வந்து கொண்டிருந்த நிலையிலும், துணிந்து சிவாஜியுடன் நடித்துக் கொடுத்ததால், பானுமதி அம்மையாருக்கு நாடோடி மன்னன் படத்தில் இருந்து பாதியில் வெளியேற வேண்டியதாயிற்று. மாமாவால் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, மாமாவின் ஆதரவிலேயே வசித்து வந்து, அவர் மூலம் கே.சுப்பிரமணியம் தயாரித்து வந்த ‘கச்ச தேவயானை’ படத்தில் நடித்து வந்த சரோஜாதேவி அம்மையாருக்கு நாடோடி மன்னனில் நுழைய வாய்ப்புக் கிட்டியது.

6b71a6a4-fc34-4b3d-9fe6-50ced8973dd9_S_secvpf (1)

ராணி லலிதாங்கி நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட மாமா, ரஞ்சனையும், இன்னொரு பிரபல நடிகையையும் வைத்து ‘மின்னல் வீரன்’ என்ற படம் எடுத்தார். தலைப்புச் செய்தி, நான் அதில் குட்டி ரஞ்சனாக நடித்தேன். அதுவும் வியாபார ரீதியில் நஷ்டம் ஏற்படுத்தியது. இந்த நஷ்டங்களுக்கெல்லாம் பிறகு, 1970-ஆம் ஆண்டு, மாமா மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். டி.எம்.செளந்திரராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடிக்க அவர் ‘கவிராஜ காளமேகம்’ படம் எடுத்த போதுதான் கவிஞரோடு என் மூன்றாவது சந்திப்பு நேர்ந்தது.

மந்தைவெளி, மேற்கு சர்குலர் சாலையில் இருந்த அலுவலகத்தில் ஒருநாள், கவிராஜ காளமேகம் படத்துக்கான அடுத்த பாடல் காட்சி பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. திருவரங்கம் பெருமாள் கோவிலில் வைணவ பட்டராக உக்ராண அறையில் பணிசெய்து கொண்டிருந்தவனுக்கு அம்பிகை அருள் செய்ய, உடனே இம்மென்றால் எழுநூறும் அம்மென்றால் ஆயிரமும் பாடல் பொழியும் ஆசுகவி காளமேகமாக மாறிய புலவனிடம், திருவானைக்கா தாசி மோகனாங்கி காதல் வயப்பட்டது பற்றி ஊரெல்லாம் வம்பு தும்பு பேசக் கேட்டு, ( “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு”, புரிகிறதா?), அதனால் அவளை வீட்டுக் காவலிலேயே வைத்து விடுகிறாள் அவள் அன்னை. அந்தச் சூழ்நிலையில், திருவானைக்கா கோவிலில் மோகனாங்கி நடனம் ஆட வேண்டிய நாள் வருகிறது. அந்த நடனத்துக்கான பாடலைக் கவிஞரிடமிருந்து எதிர்பார்த்தபடி நாங்கள் அலுவலகத்தில் காத்திருக்கிறோம். நாங்கள் என்றால், தயாரிப்பாளரான என் வளர்ப்புத் தந்தை, பட இயக்குநர் ஜி.ஆர்.நாதன், சிங்கப் பிடறி போல் நீண்ட, ஆனால், தும்பைப்பூப் போல் வெளுத்த தலைமுடியோடு அமர்ந்திருக்கும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஆகியோர். வசனகர்த்தாவின் உதவியாளர் கவிஞரிடமிருந்து பாடல் பெற்று அலுவலகம் வந்து கொண்டிருந்ததாகச் செய்தி வந்திருக்கிறது. எல்லாரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

பாடலுடன் உதவியாளர் வருகிறார். பாடலை வாங்கி, ஏ.எல்.நாராயணன் உரக்கப் படிக்கிறார்.

கேளுங்கள் பெரியோர்களே – மனது
கீழ்க்குல மாயில்லை மேற்குல மாஎன்று
கேளுங்கள் பெரியோர்களே.”

ravi2அதற்கு மேல் அவர் படிப்பது என் செவியில் ஏறவில்லை. அவரும், இயக்குநரும் பாடலைப் புகழ்ந்துவிட்டு மேற்கொண்டு விவாதத்தைத் தொடர, நான் மெளனமாக அமர்ந்திருக்கிறேன். திடீரென்று, விவாதமும் நிற்கிறது. ஏ.எல்.நாராயணன் என்னைப் பார்த்துக் கேட்கிறார், “என்ன ரவி, ஒண்ணும் சொல்லலே. பாட்டு நல்லா இல்லியா?” கவிஞர் பாட்டு நன்றாக இல்லை என்று சொல்ல நான் யார்? மெதுவாகச் சொல்கிறேன், “நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ‘கேளுங்கள் பெரியோர்களே’ என்ற பல்லவி ஏதோ ஓட்டுக் கேட்பது போல் இருக்கிறது.” இப்படி நான் சொல்லி முடிக்கும் முன் எம்.ஜி.எம். சிங்கம் போல் கர்ஜனை ஒலியோடு, பிடறி சிலிர்த்துக் கொண்டு எழுகிறார் நாராயணன். என் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சென்று காரில் ஏறச் சொல்கிறார். ‘கவிதா ஹோட்டலுக்கு விடு’ என்று ஓட்டுநரை விரட்டுகிறார்.

கவிதா ஹோட்டல், அந்த அறையில் நுழைகிறோம். கட்டிலின் மேல் மதுசூதனனாக, மப்பும் மந்தாரமுமாய்க் கவிஞர் அமர்ந்திருக்கிறார். “என்ன ஆலநா?” என்று கவிஞர் கேட்கிறார். ஏ.எல்.நாராயணனைக் கவிஞர் அப்படித்தான் அழைப்பாராம். “வெட்கம் கவிஞரே. உங்க பாட்டை இந்தச் சின்னப் பையன் ஓட்டுக் கேக்கற மாதிரி இருக்குன்னு சொல்லிட்டானே!” என்று சொல்லி விட்டுப் பாட்டுத் தாளைக் கவிஞரிடம் நீட்டுகிறார். வாங்கிப் படித்துவிட்டுக் கவிஞர், “இப்ப என்ன வேணும்? ஆலநா, நீயே ஒரு பல்லவி சொல்லு” என்றதும், அந்தச் சிங்கப் பிடறி சிலிர்த்துக் கொள்கிறது. சிங்கம் சொல்கிறது: “யாராக இருந்தால் என்ன?” உடனே கவிஞர் பதிலுக்குச் சொல்ல உதவியாளர் எழுதுகிறார்: ” இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன யாராக இருந்தால் என்ன”. மடமடவென்று அடுத்த வரிகளை ஆலநாவும், கவிஞரும் மாற்றி மாற்றிச் சொல்லப் பாடல் வளர்கிறது:

“யாராக இருந்தால் என்ன
இதில் அரசனெனெ இல்லை ஆண்டியென்ன
யாராக இருந்தால் என்ன

சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா – அவன்
மகனுக்குத் தெய்வானை மாமன் மகளா
இறைவனின் வீட்டினிலும் ஜாதியில்லையே – இதை
எம்மிடம் கேட்க ஒரு நீதியில்லையே”.

நான் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருக்கிறேன். அந்தப் பாடல் பெற்ற ஸ்தலம், அதாவது கவிதா ஹோட்டல் அறை, இன்னும் என் மனத்திரையில் காட்சியாகப் பதிந்திருக்கிறது. ஆலநாவையும், கவிஞரையும் கவிதை சொல்ல வைத்த மூல நாவான கலைமகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அந்தப் பாடலை அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இனிய இசையில், கல்யாணி ராகத்தில் பி.சுசீலா அம்மாவின் தேன் குரலில் கேட்கவும், அதற்கு வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடனக் காட்சியைப் பார்க்கவும் யூ ட்யூபில் அந்தப் பாடல் பதிவு மட்டும் கிடைக்கவில்லை. படத்தின் மற்ற பாடல்கள் உள்ளன.

சிறுகூடற்பட்டி முத்தையாவுடன் (அதாங்க, கவிஞர்) மூன்று சந்திப்புகள் என்ற கதை முற்றுப் பெறுகிறது. வாலிபக் கவிஞர் வாலியை விட்டுவிட முடியுமா? அவரோடு என் சந்திப்புகளை அப்புறம் சொல்கிறேனே!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காற்று வாங்கப் போனேன் – பகுதி 14

  1. புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களுடன் இருப்பவர் ராஜசுலோசனா. அவரும் அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் முதலில் இருந்தே கதாநாயகி பானுமதி அம்மையார்தான். கே.ரவி.

  2. ravi this is pre school period.have no idea reg. this .nice to know these interactions.

  3. அருமையானபதிவு..  நெஞ்சைவிட்டுஅகலாதநினைவு..

    பெருமைக்குரிய  விஷயங்கள்..   பாராட்டுக்கள்…

    காவிரிமைந்தன்
    00971 50 2519693 – துபாய்
    (தங்கள் மின்னஞ்சல் தாருங்களேன்)

  4. நன்றி, காவிரிமைந்தன். உங்கள் ரசனை மிக்க பதிவுகளை நான் ஊன்றிப் படித்து வருகிறேன். கே.ரவி, 9840049060.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *