அழகி
-வி.த.தமிழினி
முகமறியா ஊரில்…சேர்ந்த புதிய வேலையில் ஏற்படும் தனிமையில் தான் அவள் எனக்குப் பழக்கமானாள். பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் அழகு கிடையாது அவளுக்கு. ஆனால் அப்பழுக்கற்றவள்…அவளுக்கும் எனக்குமான உறவு பலரின் சுயநலத்துக்குள்ளாகி விரோதத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். எத்தனை எத்தனை முகங்களை நாங்கள் கடந்திருக்க வேண்டும். அவளுக்கு நான் போட்டியாய்…எனக்கு அவளைப் போட்டியாய் மாற்ற வைக்க எத்தனை முகங்களை மாற்றியிருப்பார்கள் அந்த நிறுவனத்தில்… அத்தனைக்கும் காரணமாய் அந்த டார்கெட் மட்டுமே இருந்திருக்க வேண்டும். அத்தனை முகங்களைத் தாண்டியும் என்னைச் சகோதரியாய் ஏற்றுக் கொள்ள எப்படி முடிந்தது அவளால்? ஆம். பெண்களின் மனதை மனிதத்தை நிறுவனங்கள் எப்படிப் பயன்படுத்தும் என்பதில் அனுபவம் இல்லாதவள் நான்.
ஏதோ ஓர் நாள் பிறந்த நாளென அவள் நீட்டிய மிட்டாயை வாங்கிக் கொண்டு ஒப்புக்குச் சப்பாய் நானும் வாழ்த்தியது இன்னும் நினைவிலிருக்கத்தான் செய்கிறது. மாத இறுதி சமயமானதால் அவளுக்கு விடுப்புக் கிடைக்கவில்லை. அவளும் ஏனோ கேட்கவில்லை. கிளம்பும் சமயம் “அக்கா…உங்க போன் நம்பர் கிடைக்குமா…?” எனக் கண்களில் கண்ணீரோடு அவள் கேட்டபோது சற்றே மிரண்டுதான் போயிருந்தேன். என்னால் அவளுக்கு எந்தச் சிக்கலும் எழுந்திருக்க வாய்ப்பில்லைதான். இருப்பினும் ஏதோ இனம்புரியாத பதட்டத்தோடு என் எண்ணைக் கொடுத்து பார்த்துப்போ என அனுப்பியபோதும் ஏதோ குழப்பம்தான் நீண்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடத்திலேயே அவள் அழைப்பாளென நான் எதிர்பார்க்கவில்லைதான்.
அழைப்பை எடுத்தவுடனேயே அக்கா…என்றாள். நான் அக்காவா…? திருமாணவனவள் என்பதால் அவளே முடிவெடுத்துவிட்டாள் போல… சொல்லும்மா…என்ற என் பதிலுக்குப்பின் அவள் அழுகையைக் கட்டுப்படுத்த எனக்கு 2, 3 நிமிடங்கள் ஆகிப்போனது. “போன வருஷம் என் பர்த்டேக்கு எங்க அப்பா என்கூட இருந்தாரு…நாங்க ஒன்னா செலிபரேட் பண்ணோம்… இப்ப அவர் இல்ல…வீட்ல இருக்கப் பிடிக்கல…அதான் லீவ் போடல…இப்போ வீட்டுக்குப் போகப்பிடிக்கல…” அழுதுகொண்டே இருந்தாள். எத்தனை அன்பானவள் இவள்? அத்தனை முகமூடிகளையும் தாண்டி என்னை அவள் ஏற்றுக்கொள்ளக் காரணம் என்ன? அத்தனை பேரைத் தாண்டி என்னை அவள் சகோதரியாய் ஏற்றுக்கொண்டு என்னிடம் மட்டும் பகிர வேண்டிய காரணம் என்ன? என் மனக்கேள்விகள் அத்தனையும் உடைத்தெறிந்து நான் இருக்கேன்மா… கவலைப்படாத… என்ற பதிலிலிருந்துதான் புரிந்தது நானும் அவளை என் தோழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
வீட்டுச் சூழ்நிலைகளை எவ்வளவு அழகாய்த் தன் உழைப்பால் அவள் நிறைவேற்றுகிறாள். அவள் அம்மாவை எவ்வளவு தோழமையுடன் அணுகுகிறாள் அவள். என் பிறந்த தினத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு என் வீட்டிலிருந்து வாழ்த்துச் சொல்ல எவ்வளவு தைரியம் அவளுக்கு…? முதலில் சொன்னது உண்மை இல்லை…அவள் மிக அழகானவள்!
காதல் தோல்வியால் அவள் மறுத்துக் கொண்டே வந்த திருமணத்தை சம்மதிக்க வைத்து எவ்வளவு பெரிய தவறை நாங்கள் செய்தோம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அவன் தவறானவனாம்… திருமணத்திற்குப் பின் காவல்துறை மூலம்தான் தெரிந்தது அனைவருக்கும். அத்தனைக்குப் பின்னும் அவனை வெளிவிடுங்கள்…என்று கதறியல்லவா இருக்க வேண்டும் அவள்? அதுதானே பெண்மைக்கான நியதி… எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அவன் சிறையிலேயே இருக்கட்டும், என் வாழ்வை நான் பார்த்துக் கொள்கிறேனென அவள் நின்றபோது அத்தனை பேருக்கும் அவள் பிரமிப்பாய்த்தான் தெரிந்தாள். என்ன எப்படியோ அவள் அன்பால், உழைப்பால், மனத்திடத்தால் மெருகேறிக் கொண்டேதான் இருக்கிறாள் தினம்!