இந்த வார வல்லமையாளர்!

ஜூன் 30, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்கள்

L.Kanaga Subramani
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் நடத்துனராகப் பணிபுரியும் திரு. எல். கனக சுப்பிரமணி அவர்கள்.   கனக சுப்பிரமணியின் தமிழ்ப் பற்று பற்றியும், சமுதாதய அக்கறை பற்றியும் பேஸ்புக் உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவலைப் படித்து வியந்து இவரை வல்லமையாளர் விருதிற்குப்  பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் அண்ணாகண்ணன். அவரது பரிந்துரையை வழிமொழிந்தவர் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான திரு. சொ.வினைதீர்த்தான் அவர்கள்.   

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு திருக்குறளுக்கு பொருள்விளக்கம் படித்த பின்னரே தனது நாளைத் துவக்குபவர் கனக சுப்பிரமணி.  மேட்டுப்பாளையம்  உதகை வழித்தடத்தில் பேருந்து நடத்துனராக பணிக்குச் செல்லும்பொழுது தன்னுடன் சில தமிழ் நூல்களையும் கொண்டு செல்கிறார்.  வழியில் கல்லாரில் காலை 7:15க்கு பேருந்து நிற்கும்பொழுது, பயணிகளின் கவனத்தை ஓர் இரு நிமிடங்களுக்கு தனக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து போக்குவரத்து பாதுகாப்பைக் கடைபிடிக்கவும், சுற்றுப்புறச் சூழிலின் தூய்மை அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறார்.  “ஓடும் பேருந்தில் ஏறாதீர்கள், மரங்களை நட முடியாவிட்டாலும் சரி, அவற்றை அழிக்காதீர்கள், குப்பை போடாதீர்கள், குருதிக் கொடை அளியுங்கள்” போன்ற அறிவுரைகளைக் கூறுகிறார்.

அத்துடன் தினம் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் விளக்கமும் அளிக்கிறார்.  அன்று பயணிகளில் யாருக்காவது பிறந்தநாளாகவோ, திருமணநாளாகவோ இருந்தால் வாழ்த்துகளுடன் தன்னுடன் எடுத்துச் சென்ற திருக்குறள் நூல்களை பரிசாக அளிக்கிறார்.  யாருக்கும் அன்றைய நாள் அவ்வாறான  சிறப்பு நாள்களில் ஒன்றாக அமையாவிட்டால், அந்த நூல்களை பயணிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், காவல்துறையினர்  யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அளிக்கிறார். பயணிகள் யாரேனும் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அவர்களைப் பாராட்டி வாழ்த்தவும் செய்கிறார். பேருந்தில் எழுதியிருக்கும் குறளை சுட்டிக் காட்டிய பயணி ஒருவர், இக்குறளின் பொருள் என்னவென்று நடத்துனருக்கோ ஓட்டுனருக்கோ தெரியுமா என்று ஒருமுறை கேட்ட பொழுது தினம் ஒரு குறள் என்ற கொள்கையைத் துவக்கி இருக்கிறார் இவர்.

தினசரி வாழ்க்கையில் பலவித மக்களை எதிர்கொண்டு சேவை செய்யும் முன்னணி பணியாளர்களுக்கு அது மிகவும் மனஅழுத்தம் தரும் பணியாகவே இருக்கும்.  நடத்துனர் பணியிலும்  அவ்வாறே பலவித உணர்வுகள்  கொண்ட மக்களை எதிர் கொள்ளும்பொழுது இன்முகத்துடன் பணியாற்றுவது என்பது  ஒரு சவாலாக அமைந்துவிடும்.  இந்தச் சூழ்நிலையிலும்  சமுதாயப்பணிக்கும், தமிழ்ப் பணிக்கும் ஓர் இரண்டு நிமிட நேரத்தை ஒதுக்கி பயணிகள் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறார் கனக சுப்பிரமணி. இதனை தினமும் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் செய்து வருகிறார் எனபது மிகவும் வியப்பளிக்கும் செய்தி. கனக சுப்பிரமணியைப் பொறுத்தவரை பேருந்துப் பயணமாக இருந்தாலும் அதன் வழியே பயணிகள் கல்வி, தகவல் ஆகியவற்றைப் பெற்று அவர்களுக்கு அது  வசதியான பயணமாக அமைய வேண்டும். கனக சுப்பிரமணிக்கு  அவரது பயணிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் போல.

கோவை மத்தியச் சிறைச்சாலை கைதிகளுக்காக “செந்தமிழ் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி ஓய்வு நேரங்களில் கைதிகளின் மறுவாழ்விற்கு உதவும் வகையில் அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான  வழிகளில் பணியாற்றுகிறார்.  இசை வகுப்புகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி பரிசு வழங்குதலை  தனது அறக்கட்டளை வழியாகச் செய்கிறார். இதுபோன்ற சமுதாயச் சேவைகள் செய்வதற்கு தனது ஆசிரியர் அற்புதராஜும், மக்கள் திலகமும் முன்னோடிகள் என இவர் கூறுகிறார்.   இளமைக்காலத்தில், சிரமமான காலங்களில் இவரது  ஆசிரியர் அற்புதராஜ்  அவர்கள் இவருக்கு  உணவும் உடையும் அளித்து  பராமரித்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.   உற்சாகமூட்டும் உரைகள் வழங்குவதையும் ஊக்கமூட்டும் செயல்கள் செய்வதையும் தனது கடமையாகக் கருதி வரும் கனக சுப்பிரமணி எம்.ஜி.ஆர் அவர்களை தனது சிறந்த வழிகாட்டியாகக் கருதுகிறார். மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இவருக்குப் பிடித்த பாட்டு “தாயில்லாமல் நானில்லை”. இதனைக் கைதிகளுக்காக இவர் பாடுவதும் உண்டு.   எம்.ஜி.ஆர்  பாடல்களில் ஒன்றினை எப்பொழுதும் தனது உரைகளில் ஒரு பகுதியாக்கிக் கொள்கிறார்.

தனது தமிழார்வத்தையும், சமுதாய அக்கறையையும் இணைத்து தனது தினசரி வாழ்வில் ஒரு சிலர் வாழ்விலாவது மாற்றம் கொண்டுவர விரும்பி தொடர்ந்து ஆர்வமுடன் செயலாற்றும்  கனக சுப்பிரமணி  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
(இவரைப் பாராட்ட விரும்புவோர் கவனத்திற்கு,  இவரது தொலைபேசி எண்:  96009-87811)

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

 

 

படம்  மற்றும்  தகவல்கள் இந்து நாளிதழில் இருந்து பெறப்பட்டது. நன்றி இந்து.
http://www.thehindu.com/features/metroplus/from-tickets-to-the-thirukkural/article2896247.ece

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. வல்லமைமிகு  திரு. எல். கனக சுப்பிரமணி  அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர் ஒரு கர்மவீரர் என்பது தெளிவு.

  அவர் நீடுழி வாழ்ந்து பணியை தொடரவேண்டும், வருங்கால தலை முறைகளுக்கு.

 2. வித்தியாசமாக செய்து சக மனிதர்களிடம் பெயரெடுக்கும் குணம் இந்த பஸ் கன்டக்டரிடமும் இருப்பதால் இவரும் சூப்பர் ஸ்டார் தான்.

  அவரின் இந்த பண்புக்கு மனதார பாராட்டுகிறேன்.

 3. “எண்ணித் துணிக, கருமம்”

  எண்ணியது, சீர்மை!
  துணிவோ, வியப்புடைத்து!
  கருமம் போற்றற்கரியது!!

  இவர் பேருந்தின் நடத்துனர் அல்ல, உந்துதலுருவாக்கி நற்கருமம் புரிய, நம் மனத்தை நடத்துனர்….!

  இம்மேன்மையாளருக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.